விழிகள் 20

eiSNX4J55155-0fa459f3

“மஹி, அவ்வளவுதான். முடிய போகுது. இதை கரெக்டா ஜொய்ன்ட் பண்ணிரு! தட்ஸ் ஆல்.” தனக்குத்தானே பேசி மெதுவாக கடைசியா இணைக்க வேண்டிய பகுதியை இணைத்தவன், ஆழ்ந்த பெருமூச்செடுத்து இரண்டடி பின்னால் நகர்ந்து தான் செய்து முடித்ததை முழுமையாகப் பார்த்தான்.

‘ஆல்மோஸ்ட் கம்ப்ளீட் பண்ணியாச்சு. இந்த ஷோவுல நமக்கு வாய்ப்பு கிடைக்குதோ, இல்லையோ? இங்கிருந்து போனதுமே அம்மாகிட்ட நம்ம மனசுலயிருக்குறதை சொல்லணும்.’ மானசீகமாக தனக்குள்ளேயே பேசியவாறு நின்றிருந்த மஹி, “வாவ்!” என்ற ஆத்வியின் குரலில் சட்டென திரும்பிப் பார்த்தான்.

விழிகளை பெரிதாக விரித்து மஹி செய்திருந்ததையே அசந்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தவள், “நீ பண்ணதுலயே பெஸ்ட் பீஸ் இதுதான் தீரா. அவ்வளவு அழகா இருக்கு.” மனதால் உணர்ந்துச் சொல்ல, “நிஜமாவா?” புன்னகையோடு கேட்டான் மஹி.

“ஆஃப்கோர்ஸ்.” துள்ளிக் குதிக்காத குறையாக சொன்ன ஆத்வி, “தேங்க்ஸ் ஆதி, என்ட் இதை கவனமா பார்த்துக்க. நான் குளிச்சிட்டு ரெடியாகிட்டு வர்றேன்.” என்ற மஹியின் வார்த்தைகளில் புரியாமல் விழித்து, “எங்க கிளம்புற?” என்றொரு கேள்வியை கேட்டு வைத்தாள்.

“மறந்துட்டியா? நடாஷா இஸ் ஆன் த வேய். இன்னைக்கு அவங்க கூட நைட்அவுட்.” உற்சாகமாக சொன்னவாறு தன் உடைப்பெட்டியை எடுத்தவன், “வரும் போது ஒரு வாரத்துக்கு தேவையான ட்ரெஸ்தான் கொண்டு வந்தேன். அதையும் அலீ எடுத்து போட்டுக்குறா. பொண்ணுங்க ட்ரெஸ்ஸே போட மாட்டாளா அவ? சரியான வாலு!” என்று பேசிக்கொண்டே ஆடையையும் துவாலையையும் எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.

ஆனால், இங்கு ஆத்விக்குதான் தூக்கி வாரிப்போட்டது. ‘இவன் ஏதோ பேச்சுக்கு அன்னைக்கு சொன்னான்னு நினைச்சிட்டு நாம நம்ம பாட்டுக்கு இருந்துட்டோம். ஆனா இப்போ…’ உள்ளுக்குள் அரண்டவளுக்கு கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எவ்வளவுநேரம் அப்படியே யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்தாளோ? சரியாக மஹியின் அலைப்பேசி ஒலிக்க, வேகமாகச் சென்று ஆத்வி அலைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்க போக, அதற்குள் “ஐ அம் கம்மிங்… கம்மிங்…” என்று கத்திக்கொண்டே சட்டை பட்டன்களை போட்டவாறு ஓடி வந்தவன், அவளிடமிருந்து பிடுங்கி அழைப்பை ஏற்று, “ஹாய் நடாஷா… ஓ வந்துட்டீங்களா? இதோ வர்றேன்.” படபடவென பேசிவிட்டு ஆத்வியை திரும்பியும் பார்க்காது அங்கிருந்து வெளியேறினான்.

போகும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு கிட்டதட்ட அழுகையே வந்துவிட்டது. ‘ஹவ் டேர் இஸ் ஹீ? எந்த தைரியத்துல அவ கூட போறான்? அய்யோ, எனக்கு வர்ற கோபத்துக்கு அவன…’ என்று பல்லைக்கடித்தவளுக்கு, ‘அவன் யார் கூட போனா உனக்கென்ன?’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

‘அப்படியெல்லாம் எனக்கென்னன்னு விட முடியாது.  அவன் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னானே! இது அவளுக்கு பண்ற துரோகம் இல்லையா?’ மனசாட்சியை சமாதானப்படுத்துவது போல் பதிலடி கொடுத்தவள், ‘இவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டே ஆகணும். என்ன பண்ணலாம்? என்ன பண்ணலாம்?’ குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு தீவிரமாக யோசித்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் அவளுடைய மூளையில் மின்னல் வெட்ட, “அலீ…” என்று கத்திக்கொண்டு அலீஷாவைத் தேடிச் சென்றாள் ஆத்வி.

அதேநேரம், “அவ்வளவுதான். முடிஞ்சது.” என்றுவிட்டு தான் வரைந்திருந்த ஓவியத்தை விழிகளைச் சுருக்கி நோக்கியவளுக்கு தான் வரைந்ததை நினைத்தே அத்தனை ஆச்சரியம்!

‘பார்ராஹ்! ரவிவர்மனுக்கே டஃப் கொடுப்ப போல! நாளைக்கே இதை கொண்டு போய் ஃப்ரேம் பண்ண கொடுத்துறணும். நாளைக்கு மறுநாள் ஷோ நடக்க போற இடத்துக்கு வெளிய இதை வச்சு நல்ல விலைக்கு விக்கணும்.’ தன்னைத் தானே பெருமையாக பேசி தோளை தட்டிக்கொடுத்தவள், “அலீ…” என்று அழைப்போடு ஆத்வி கதவை தட்டவும் திடுக்கிட்டுப் போனாள்.

உடனே தன்னை சுதாகரித்து வேகவேகமாக பெரிய துணியொன்றால் தான் செய்ததை மூடிய அலீஷா, ஓடிச் சென்று கதவைத் திறந்ததும்தான் தாமதம், “அலீ, வா போகலாம்.” அவளுடைய கையை இறுகப் பிடித்து இழுத்துக்கொண்டுச் சென்றாள் ஆத்வி. இவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

கால்களை தரையில் ஊன்றி பிடிவாதமாக நின்றவள், “இருங்க அக்கா, என்னை எதுக்கு இழுத்துட்டு போறீங்க? ஆமா… எங்க போறோம்?” என்று கேட்டு கேள்வியாக நோக்க, “பப்புக்கு.” பட்டென்று சொன்ன ஆத்விக்கு, “எதே, பப்புக்கா? எதுக்கு போறோம்? எல்லாரும் போறோமா என்ன?” படபடவென அலீஷா கேள்விக்கனைகளை தொடுக்கவும், ‘அய்யோ!’ என்றிருந்தது.

“அது… அது வந்து…” தடுமாறிய ஆத்வி, “என்ன வேவு பார்க்க போறியா?” பின்னாலிருந்து கேட்ட அகஸ்டினின் குரலில் முதலில் அதிர்ந்து, பின் திருதிருவென விழித்தவாறு “நா..நான் எதுக்கு வேவு பார்க்கணும். ஐ டோன்ட் மைன்ட் எனிதிங்.” வீராப்பாக சமாளிக்க, ஒற்றை புருவத்தை உயர்த்தி சந்தேகப் பார்வையோடு அகஸ்டின் முறைக்கவும், “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தாள்.

அதில் சந்தேகமாக அவளை நோக்கியவன், “உன் போக்கே சரியில்லை. இருக்கட்டும் கவனிச்சிக்கிறேன். இப்போ வாங்க, போகலாம்.” என்றுவிட்டு முன்னேச் செல்ல, “நீ எதுக்கு?” பதறியபடி கேட்டாள் ஆத்வி.

“நான் இல்லாம எப்படி? இரண்டு பொண்ணுங்கள பப்புக்கு தனியா அனுப்பிட்டு வயித்துல நெருப்ப கட்டிட்டு என்னால வீட்டுல இருக்க முடியாது. நான்தான் உங்களை பத்திரமா தாங்கிக்கணும். சீக்கிரம் வாங்க, அப்போதான் அவன் நடவடிக்கைய கவனிக்க முடியும்.” அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டு முன்னேச் செல்ல, தன்னவனுடன் செல்வது அலீஷாவுக்கு கசக்குமா என்ன? குடுகுடுவென அவன் பின்னால் அலீஷா ஓட, ஆத்விக்கு தலையே சுற்றிவிட்டது.

‘அய்யோ! இவன் கூட பப்புக்கு போனா கடைசியில நாங்கதானே இவன தாங்கிக்கணும். சோதிக்காதீங்கடா என்னை!’ உள்ளுக்குள் பொறுமிக்கொண்டு வேறுவழியின்றி அவனுக்கு பின்னால் ஆத்வி செல்ல, அடுத்த பத்து நிமிடத்தில் மஹி சென்றிருந்த பப்பின் முன் நின்றிருந்தனர் மூவரும்.

உள்ளே நுழைந்ததுமே அகஸ்டின் அவன் பாட்டிற்கு வேறு திசைக்கு சென்றுவிட, அலீஷாவுடன் நின்றிருந்த ஆத்வியோ விழிகளை அங்மிங்கும் சுழலவிட்டு தன்னவனைதான் தேடினாள். சரியாக, இவர்களை விட்டு சற்று தொலைவில் கையில் மதுக்குவளையுடன் நடாஷாவுடன் பேசியவாறு மஹி அமர்ந்திருக்க, அதைப் பார்த்ததும் அவளுக்கு வயிறெரிய ஆரம்பித்துவிட்டது.

அலீஷாவுடன் மஹியின் பார்வைக்கு மறைவாக ஓரிடத்தில் அமர்ந்துக்கொண்டவள், அங்கிருந்து அவனை நோட்டமிட, மஹியோ இது எதையும் உணராது தன்னெதிரே அமர்ந்திருந்தவளிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

‘அப்படி அவ என்ன காமெடி பண்றான்னு இவன் இப்படி சிரிக்கிறான்? ச்சே!’ காதிலிருந்து புகை கிளம்ப ஆத்வி மஹியை பார்த்துக்கொண்டிருந்தாள் என்றால், இங்கு அலீஷாவுக்கு ஏதோ ஒரு அசௌகரியம்.

இதுவரை இது போன்ற வசதி படைத்த இடங்களுக்கு வந்ததில்லை. கூடவே, ‘நானே படாத பாடுபட்டு குடிப்பழக்கத்தை விட்டேன். ஒருத்தன் திருந்த நினைச்சாலும் சமூகம் விடாதுன்னு சொல்றது உண்மைதான் போல! சரக்க தவிர உலகத்துல எதுவுமே இல்லாத மாதிரி சுத்தி ஃபாரின் சரக்கா வச்சிருக்கானுங்க. நமக்கு வேற கைகால் உதற ஆரம்பிக்குதே…’ தனக்குள்ளேயே புலம்பியவாறு இருந்தாள்.

எதேர்ச்சையாக அவளுடைய பார்வை நடனமாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள் புறம் திரும்ப, இப்போது காதில் புகை விடுவது அலீஷாவின் முறையானது.

அங்கு அகஸ்டினோ கூட்டத்தோடு கூட்டமாக நின்று பெண்களோடு உரசிக்கொண்டு நடனமாட, ‘ஏன்தான் என் ஆளு இப்படி பொம்பள பொறுக்கியா இருக்கானோ? என் கிரகம்! இவனை போய் லவ் பண்ணிட்டேன். ச்சே!’ கோபமாக பற்களைக் கடித்துக்கொண்டு தன்னவனை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.

அதேநேரம் மஹியும் நடாஷாவும்  பப்பிற்கு பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் தடாகம் பக்கம் செல்ல, ‘ அலெர்ட் ஆகிக்கடா ஆறுமுகம்!’ சொல்லிக்கொண்டு அவர்களின் பின்னால் குடுகுடுவென ஓடிய ஆத்வி, பக்கத்திலிருந்த அலீஷாவை கவனிக்க மறந்துதான் போனாள்.

மஹியும் நடாஷாவும் நீச்சல் தடாகத்திற்கு பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருக்க, மறைந்திருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவர்கள் பேசுவது கேட்காதது அத்தனை எரிச்சலாக இருந்தது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவத்தில் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

விழிகள் கலங்க, உள்ளுக்குள் எதுவோ உடைவது போன்ற உணர்வு!

அதற்கு மேல் அங்கு நிற்காது அவள் நகர, இங்கு அலீஷாவோ ஆத்வி சென்ற அடுத்தகணமே ஒரு பெரிய குவளை நிறைந்த மதுவை முழுதாகக் குடித்து குவளையை பெரிய சத்தத்தோடு, “வன் மோர்.” என்றவாறு மேசையில் வைத்தாள். ஏற்கனவே இருந்த பழக்கம், இப்போது அகஸ்டின் செய்யும் காரியம் எல்லாம் சேர்ந்து அவளை மீண்டும் மதுவை நாட வைத்தது.

போதை தலைக்கேற, எழுந்து தள்ளாடியபடி அகஸ்டினை நோக்கிச் சென்றவள், பெண்களுக்கு மத்தியில் மதுக்குவளையை கையில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தவனின் சட்டையைப் பிடித்திழுத்து, “என் கூட டான்ஸ் பண்ணு தினு, ஏன் உனக்கு என்னை மட்டும் பிடிக்க மாட்டேங்குது?” குளறியபடி கேட்டவாறு அவனை குலுக்க, அகஸ்டினுக்கு அத்தனை அதிர்ச்சி!

“ஏய் எலி! குடிச்சிருக்கியாடி?” அவளின் கன்னத்தை தட்டி அகஸ்டின் கத்த, “ஆமா, குடிச்சிருக்கேன். அதுக்கென்ன? நீ வா! நாம டான்ஸ் பண்ணலாம். லலலலலலா…” ஏதேதோ பேசி பைத்தியம் போல் பாடியவாறு அவனைப் பிடித்து ஆடுகிறேன் பேர்வழியென்று அலீஷா தடுமாறி விழப்போக, சுற்றியிருந்தவர்களின் பார்வையை உணர்ந்து கூனிக் குறுகிப் போய்விட்டான் அவன்.

கோபம் உச்சத்தை தொட, அவளின் முழங்கையை இறுகப்பிடித்து அங்கிருந்து அவன் நகர முயற்சிக்க, அவள் விட்டால்தானே!

“தினு… மை ரசகுல்லா… சொல்லுடா! ஏன்டா என்னை பிடிக்கல? எப்போவாச்சும் என்னை பார்த்து சிரிச்சிருக்கியா? எப்போ பாரு திட்டிக்கிட்டு… முறைச்சிக்கிட்டு… சொல்லுடா டேய்!” போதையில் சுற்றியிருப்பவர்களை தள்ளிவிட்டுக்கொண்டு அலீஷா அடம்பிடிக்க, “இப்போ வர போறியா, இல்லையா?” அடக்கப்பட்ட கோபத்தோடு வந்தன அகஸ்டினின் வார்த்தைகள்.

ஆனால், போதையிலிருந்தவளுக்கு அதெல்லாம் புலப்படவில்லை.

“முடியாது. முடியாது. முடியாது.”  பதிலுக்கு அவள் கத்த, அதில் கோபம் தாறுமாறாக எகிறவும் அவளை அறைந்தேவிட்டிருந்தான் அகஸ்டின். ஆனால், அப்போதும் அவளுக்கு போதை தெளிந்தால்தானே!

அதேநேரம் மஹியும் முகம் இறுகிப்போய் அங்கிருந்து பப்பிற்குள் நுழைய, அவன் விழிகளுக்கு சரியாகச் சிக்கியது, அகஸ்டின் அலீஷாவை அறையும் காட்சிதான்.

“அகஸ்த்து…” அதிர்ந்துக் கத்தியவாறு சென்றவன், அகஸ்டினின் கன்னத்தில் கோபமாக அறைய, அப்போதுதான் மஹியை திடுக்கிட்டு நோக்கியவனுக்கு, ‘அய்யய்யோ மாட்டிக்கிட்டோமே!’ என்றிருந்தது.

அகஸ்டினை முறைத்துப் பார்த்த மஹி, “இப்போ எதுக்கு அலீய அடிச்சேன்னு கேக்க மாட்டேன். நீங்க இரண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க?” அடக்கப்பட்ட கோபத்தோடு அழுத்தமாகக் கேட்டான்.

“அது… அது வந்து…” என்று தடுமாறியவனுக்கு அப்போதுதான் ஆத்வியின் நியாபகம் வந்தது. “சைத்து ஆத்வி எங்க?” சட்டென அகஸ்டின் கேட்க, மஹிக்கு எதுவும் புரியவில்லை. “வாட், ஆதியா?” மஹி அதிர்ந்துக் கேட்க, “அய்யோ சைத்து! அவ உன் பின்னாடிதான் வந்தா.” பதறியபடி சொன்னவன், விழிகளை சுழலவிட்டு ஆத்வியை தேட, மஹிக்கு புரிந்துவிட்டது.

மின்னல் வேகத்தில் அவன் அங்கிருந்து வெளியேற, அதேநேரம் நடக்கும் களவரம் புரியாது, “தினு… என் கன்னத்தை ஏதோ பெரிய பூச்சு கடிச்சிருச்சு.” கன்னத்தைப் பிடித்து உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அலீஷா அழ ஆரம்பிக்க, நெற்றியை எரிச்சலாக நீவி விட்டுக்கொண்ட அகஸ்டின், அலீஷாவின் முழங்கையைப் பிடித்து நீச்சல் தடாகத்திற்கு பக்கத்தில் தரதரவென இழுத்துச் சென்றான்.

இங்கு ஹோட்டலுக்கு வந்துச் சேர்ந்த மஹி, வேகமாக அறைக்கதவை திறந்துக்கொண்டு, “ஆதி…” என்று கத்தியவாறு உள்ளே நுழைய, விழிகள் சிவந்து சோஃபாவில் ஒருவித இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள் அவள். அவளைப் பார்த்ததும்தான் அவனுக்கு அத்தனை நிம்மதி!

ஆனால், நடந்ததை அவள் பார்த்திருப்பாளோ என்ற பதட்டமும் அவனுக்குள் இருந்தது. அதை உள்ளுக்குள் மறைத்து, “ஆதி, இப்படிதான் சொல்லாம கொல்லாம வருவியா? ரொம்ப பதறிட்டேன். ஆமா… நீங்க மூனு பேரும் எனக்கு தெரியாம என் பின்னாடி எதுக்கு வந்தீங்க?” அவன் முறைத்தவாறுக் கேட்க, விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தவளின் விழிகளில் குற்றம் சாட்டும் பார்வை.

அதைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஒருமாதிரி இருந்தாலும், வெளியில் விறைப்பாகவே நின்றிருந்தான். ஆனால், அவனின் எதுவுமே நடவாதது போலான முகபானையில் ஆத்விக்குதான் கோபம் தாறுமாறாக எகிறியது. அவளுடைய மனக்கண்ணில் நடாஷா மஹியை இதழ் முத்தம் கொடுத்த காட்சிதான் மீண்டும் மீண்டும் தோன்றியது.

வேகமாக அவனெதிரே வந்து நின்றவள், “எதுவுமே நடக்காத மாதிரி எப்படி உன்னால இப்படி பேச முடியுது? என்னால இதை கொஞ்சமும் ஜீரணிக்க முடியல தீரா. ச்சீ… உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சேனே! உன்னை விட அந்த அகஸ்டினே மேல். பூனை மாதிரி இருந்துக்கிட்டு என்ன வேலையெல்லாம் பார்க்குற. யூ…” அவள் பேசி முடிக்கவில்லை, கையிலிருந்த அலைப்பேசியை சுவற்றில் விட்டெறிந்தவன், “ஷட் யூ ப்ளடி…” என்று கெட்ட வார்த்தையோடு கத்திவிட்டான்.

அவனின் ஆக்ரோஷத்தில் உள்ளுக்குள் அவள் அரண்டுவிட, அவளின் தோள்களை இறுகப்பற்றி சுவற்றில் சாய்த்து, “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின… கொன்னுடுவேன். உனக்கென்னடி தெரியும் என்னைப் பத்தி? யூ டோன்ட் ஹெவ் ரைட்ஸ் டூ ஜட்ஜ் மீ, கொட் இட்? ஆமா… நான் எவ கூட இருந்தா உனக்கென்ன? சொல்லுடி!” மஹி கத்த, முதல்தடவை அவனுடைய கோபத்தை பார்க்கிறாள் அவள்.

ஆனாலும் பயத்தை முகத்தில் காட்டாதவள், அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது, “அது… அது வந்து… ஒரு பொண்ண காதலிக்கிறேன்னு சொல்லிட்டு இன்னொரு பொண்ண கிஸ் பண்றது தப்பில்லையா? இது நீ அவளுக்கு பண்ற துரோகமில்லையா?” எப்படியோ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து சமாளிக்க, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி நிதானமாக அவளை ஏறிட்டான் அவன்.

“நான் தப்பு பண்ணியிருப்பேன்னு நினைக்கிறியா?” அழுத்தமாக அவனுடைய கேள்வி வர, “அதான் நான் பார்த்தே…” அவள் சொல்லி முடிக்கவில்லை, “மாயா மஹேஷ்வரியோட பையன் அவன் காதலிக்கிற பொண்ணுக்கு துரோகம் செய்வான்னு நினைக்கிறியா?” மீண்டும் வந்தது அவனுடைய கேள்வி.

“என்னை விட யாராலேயும் உன்னை புரிஞ்சி வச்சிருக்க முடியாது. ஐ க்னோ, பட்… கோபத்துல…” ஆத்வி பேசிய பேச்சின் தவறை உணர்ந்து தடுமாற, “கரெக்ட்! உன்னை விட யாராலேயும் என்னை புரிஞ்சிக்க முடியாது. சேம் டைம், என்னை ரொம்பவும் புரிஞ்சி வச்சிருக்க ஒரே பொண்ணு நான் காதலிக்கிற அந்த ஒருத்திதான்.” ஆழ்ந்த குரலில் மஹி சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான்.

“உன்னை நான்தானே புரிஞ்சி வச்சிருக்கேன். அப்போ அவ எப்படி…” மஹி சொன்னது முதலில் புரியாது ஏதோ சொல்ல வந்தவள், பிறகே அவனின் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து, “தீரா…” திகைத்துப் போய் அழைக்க, வேகமாகச் சென்று தன் கண்ணாடி ஜாரை எடுத்து வந்தவன், அவளுக்கருகில் வைத்துவிட்டு தன்னவளை திரும்பியும் பார்க்காது வெளியேறினான்.

போகும் அவனையே சிலையாக சமைந்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆத்வி.

அதேநேரம், “ச்சீயர்ஸ்…” என்று போதையில் ஒருசேர சொல்லி கையிலிருந்த மதுக்குவளையை ஒன்றோடொன்று அடித்துக்கொண்டனர் அகஸ்டினும் அலீஷாவும்.