விழிகள் 22

eiGJ81L16854-c0aced06

அடுத்தநாள் மங்ளூர் நோக்கிச் செல்லும் ரோஹனின் காரில் நான்கு விதமான மனநிலையில் அமர்ந்திருந்தனர் நால்வரும்.

இவர்கள் ஹோட்டலிலிருந்து வெளியேறியதுமே ரோஹனின் கட்டளைப்படி பாதுகாப்பிற்கென ஏற்பாடு செய்திருந்த காவலர்கள், விடாப்பிடியாக மஹி, அகி மற்றும் ஆத்வியை காரில் ஏறச் சொல்லியிருக்க, வேறுவழியின்றி மூவருமே ஏறியிருந்தனர், அலீஷாவைத் தவிர. 

செல்லும் வழியில், ‘அம்மாக்கிட்ட நம்ம விருப்பத்தை வெளிப்படையா சொல்லிறணும். சொல்லாம வந்ததுல கோபமா இருப்பாங்கதான். ஆனா, கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க.’ மஹி மானசீகமாக யோசித்தவாறு வர, தன் முன் அமர்ந்திருந்த தன்னவனையே புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தாள் ஆத்விகா.

அவளுக்குள் இரண்டு விதமான மனநிலை. ஒருபக்கம் தன் காதலை உணர்ந்ததிலிருந்தும் மஹியின் காதல் தானென்று தெரிந்ததிலிருந்தும் அத்தனை சந்தோஷம். கூடவே, இன்னொரு புறம் மஹியின் ஒதுக்கத்தில் உண்டான ஏக்கம். காரணம், அன்று தன் காதலை வெளிப்படையாக சொன்னதிலிருந்து மஹி, ஆத்வியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இவர்கள் இருவரும் இவ்வாறு இருக்க, ஓட்டுனர் பக்கத்திலமர்ந்திருந்த அகஸ்டினோ இறுகிய முகமாக வெளியே வெறித்தவாறு அமர்ந்திருந்தான். அதேநேரம் ரயிலில் சென்றுக்கொண்டிருந்த அலீஷாவின் முகத்திலும் அத்தனை இறுக்கம்.

ஹோட்டலிலிருந்து வெளியேறியதும் காவலர்கள் சொன்னபடி மூவரும் காரில் ஏற, அதை மறுத்த அலீஷாவோ, எதுவும் பேசாது அங்கு வந்த ஆட்டோவைப் பிடித்து ரயில்நிலையத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள். அலீஷா செல்வதை அகஸ்டினை தவிர மஹியும் ஆத்வியும் புரியாது நோக்கினர்.

விழிகள் கலங்கியிருக்க, ரயிலின் ஜன்னல் வழியே வெளியே வெறித்துக்கொண்டிருந்த அலீஷாவிற்கு உள்ளுக்குள் அத்தனை ஆதங்கம். ‘நான் அந்தளவுக்கு கேவலமா போயிட்டேனா தினு?’ மானசீகமாக தன்னவனிடம் முறையிட்டவளின் நினைவுகளோ காலையில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தது.

நிகழ்ச்சி முடிந்த அடுத்தநாளே அங்கிருந்து மங்ளூருக்கு செல்வதற்காக நால்வரும் தயாராக, தன் பொருட்களை பையில் அடுக்கிக்கொண்டிருந்த அலீஷா, “அலீ…” என்ற மஹியின் குரலில் கேள்வியாகத் திரும்பிப் பார்த்தாள்.

அவனோ விறுவிறுவென அவளருகில் வந்து, “அலீ, இதை அம்மாவோட ட்ரீட்மென்ட் செலவுக்கு வச்சிக்க!” என்றுவிட்டு அவள் கையில் ஒரு காசோலையை திணிக்க, அவளுக்கோ அதிர்ச்சி! அந்த காசோலை நேற்று நிகழ்ச்சியில் சிறந்த கலைக்காக மஹிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை.

அதிர்ந்து நின்றவள், “அண்ணா, என..எனக்கு இது வேணாம். உங்களுக்கு எப்படி…” திக்கித்திணறி கேட்க, “அன்னைக்கு உன் அம்மா கூட நீ பேசிக்கிட்டு இருக்கும் போது நான் பின்னாடிதான் இருந்தேன். என்னால ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க முடியுது. வேணாம்னு சொல்லாத அலீ, ப்ளீஸ்.” புன்னகையுடன் சொன்னவன், “சீக்கிரம் ரெடி ஆகு, ஆல்ரெடி லேட்.” படபடவென சொல்லிவிட்டு வெளியேறினான்.

ஆனால், அலீஷாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கையிலிருந்த காசோலையை வெறித்துப் பார்த்தவாறு எவ்வளவுநேரம் நின்றாளோ?

‘இல்லை. இந்த காசு வேணாம். என் அம்மாவுக்கான செலவை நானே பார்த்துக்குறேன். முதல்ல இதை அண்ணாக்கிட்ட கொடுத்துறணும்.’ சட்டென தனக்குள்ளேயே முடிவெடுத்து விறுவிறுவென மஹியை தேடிச் சென்றவள், அழைக்க வந்து மஹியினதும் அகஸ்டினதும் பேச்சு வார்த்தையைக் கேட்டு அந்த இடத்திலேயே சிலை போல் சமைந்தாள்.

“உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? அந்த பணத்தை அவக்கிட்ட எதுக்குடா கொடுத்த? போயும் போயும் அவ சொல்றதை நீ நம்புறியா என்ன? ஆள பத்தி தெரியாம ரொம்பதான் க்ளோஸா பழகுற.” அகஸ்டின் கத்த, “ஷட் அப் அகி! மனுஷனாடா நீ? அலீஷாவ சார் லவ் பண்றீங்கன்னு எனக்கு ஆதி சொன்னா. அப்போவே எனக்கு நம்பிக்கையில்லை. இப்போ நடக்குறதை பார்த்தும் உன் வாழ்க்கை உன் விருப்பம்னுதான் நான் இருக்கேன். பட், இது டூ மச்.” பதிலுக்கு கத்தினான் மஹி.

“ச்சே! உனக்கு புரியுதில்லை சைத்து. அவ ஒரு திருடிடா. சரியான ஃப்ராடு. அவள பத்தி முன்னாடியே சொல்லியிருக்கணும். தெரிஞ்சிருந்தா கஷ்டப்பட்டு உழைச்ச காசை அந்த மாதிரி ஒருத்திக்கிட்ட கொடுத்துட்டு வந்திருக்க மாட்ட.” அகஸ்டின் அலீஷாவை பற்றி சொல்லிவிட, மஹிக்கோ உச்சகட்ட அதிர்ச்சி!

“வாட்!” அதிர்ந்துப்போய் அவன் கேட்க, அலீஷாவைப் பற்றி சொன்ன அகஸ்டின், “இப்போ புரியுதா, நான் ஏன் அவ கூட பழகினேன்னு? யூ க்னோ மீ வெல். நான் போய் அவள மாதிரி ஒருத்திய லவ் பண்ணுவேனா? நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. நமக்கு ஸ்டேட்டஸ்ல ஈக்குவலா இருக்காளா? இல்லைன்னா பொண்ணு மாதிரியாச்சும் நடந்துக்குறாளா? எதுவும் இல்லை. அம்மாவுக்கு ட்ரீட்மென்ட், உடம்பு சரியில்லை, இது கூட நாடகமா இருக்கலாம். இந்த மாதிரி பொண்ணுங்க பணத்துக்காகதான் பின்னாடியே வர்றாளுங்க.” கோபமாக பேசிக்கொண்டேச் சென்றான்.

இதைக் கேட்டு அலீஷா மனதளவில் சுக்கு நூறாக உடைந்து நிற்க, “அகஸ்த்து…” அடக்கப்பட்ட கோபத்தோடு கத்திய மஹி, “என்னை பொருத்தவரைக்கும் அலீஷா திருட்டுத்தொழிலே பண்ணாலும் மனசளவுல யாரையும் காயப்படுத்தக் கூடாதுன்னு நினைக்குற ஒரு பொண்ணு. எனக்கு ஒரு வாரமாதான் அவள தெரியும். என்னாலேயே அவளோட குணத்தை புரிஞ்சிக்க முடியுதுன்னா, உன்னால ஏன்டா முடியல. நாய்குட்டி மாதிரி உன் பின்னாடியே இருக்குறதால அருமை தெரியுதில்லையோ? வாட்எவர்! எனக்கு அலீ தங்கச்சி மாதிரி. நான் அவள புரிஞ்சிக்கிறேன்.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அத்தனையும் கேட்டுவிட்டு அறைக்குள் வந்த அலீஷாவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. கையிலிருந்த காசோலையை கசக்கி அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போட்டவள், ஓவென்று தன்னை மீறி அழ ஆரம்பித்துவிட்டாள்.

இது அத்தனையும் நினைத்துப் பார்த்தவளின் விழிநீர் தரையைத் தொட, யாரும் பார்க்காது கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள் அவள். ஏதோ உணர்வுகளை தொலைத்தது போல் முகம் இறுகிப்போயிருந்தது. ஆனால், அத்தனையும் இவளுக்கு கேட்க வேண்டுமென்றே பேசிவிட்டு உள்ளுக்குள் வேதனையில் குமுறிக்கொண்டிருக்கும் ஆடவனின் நிலையை இவள் அறியாமல் போய்விட்டாள்.

விதியும் தன் விளையாட்டை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டிருந்தது.

ரயிலிலிருந்து இறங்கி வீட்டை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த அலீஷா, மும்பையில் வாங்கிய பொருட்கள் அடங்கிய பையைத் திறக்க, அதிலோ ஒரு டோரா பொம்மை. அதைப் பார்த்தவளுக்கு எதுவும் புரியவில்லை.

கையில் வைத்து கேள்வியாக பொம்மையை அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவர்களுடைய வீடு இருக்கும் பகுதியில் ஆட்டோ நிறுத்தப்பட, இதுவரை நடந்த மொத்தத்தையும் மறந்துவிட்டு அம்மாவை பார்க்கப் போகும் ஆர்வத்தில் பொம்மையை கையில் ஏந்திய வண்ணமே வேகமாக அவள் வீட்டை நோக்கி ஓட, அங்கே காத்திருந்தது அவளுக்கு அதிர்ச்சி!

அவளுடைய வீட்டு வாசலில் பெரிய கூட்டம். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. ‘என்னாச்சு இங்க?’ தன்னைத்தானே கேட்டவாறு கூட்டத்தை நகர்த்திக்கொண்டு, மற்றவர்களின் பார்வையிலிருக்கும் தன்னை நோக்கிய பரிதாபத்தில் ஒருவித படபடப்போடு உள்ளே செல்ல, அடுத்தகணம் உலகமே தலை கீழாக சுற்றிவிட்டது.

வெள்ளை துணியால் மூடப்பட்டு சுற்றி பெண்களுக்கு நடுவில் சடலமாக மாதவி இருக்க, அதைப் பார்த்ததுமே அலீஷாவின் விழிகள் விரிய, கையிலிருந்த பொம்மை நழுவி கீழே விழுந்தது. ‘இது கனவுதானே! கனவுதான். எனக்கு தெரியும். எழுந்திரு அலீஷா. இந்த கனவு வேணாம். எழுந்திரு! இது கனவுதான்.’ அவளுடைய மனம் உள்ளுக்குள் கதற ஆரம்பித்தது.

அவளைப் பிடித்து உலுக்கிய சாந்தி, “நேத்து காலையிலிருந்து உன்னை பார்க்கணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாடி. நேத்து ராத்திரி மூச்சு பேச்சில்லாம விழுந்தப்போ, உன்னை சீக்கிரம் வர சொல்லலாமேன்னு கூப்பிட்டா, உன் மொபைல் ஸ்விட்ச்ஆஃப்னு வருது. என்னைத்தான்டி பண்ணிக்கிட்டு இருந்த திருட்டுநாயே! கடைசி நிமிஷம் உன்கூட இருக்க முடியாம போயிருச்சே… ஒருநாள் பாடிய வச்சி பார்த்துட்டு அப்போவும் நீ வரலன்னா கொண்டு போயிடலாம்னுதான் இருந்தோம். போ, போடி! அம்மாவ பாருடி!” அழுதவாறு பேசி, அலீஷாவை  ஆவேசமாக தள்ளிவிட்டார்.

ஆனால், அலீஷாவின் பார்வையோ தன் அம்மாவின் முகத்திலே நிலைத்திருந்தது. “உன்னை நான் காப்பத்துவேன்னு சொன்னேனேம்மா, ஏன்ம்மா எனக்காக காத்திருக்கல?  ஏன் என்னை விட்டு போன?” வாய்விட்டே கதறியவளுக்கு ஒன்றுதான் தோன்றியது.

‘சிறுவயது ஆசைகளை இழந்து, காதலை இழந்து, தற்போது அம்மாவையும் இழந்து நிற்கும்  தன்னிலை தன் எதிரிக்கும் வரக்கூடாது.’

அதேநேரம்,

போர்டிகாவில் கார் நிற்க, உள்ளே நுழைந்த மூவரையும் ஏற்கனவே எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல் சோஃபாவில் அமர்ந்திருந்தனர் பெரியவர்கள்.

மஹியும் ஆத்வியும் ஒருவித தயக்கத்தோடும் அகஸ்டின் இறுகிய முகமாகவும் உள்ளே நுழைய, மாயாவையும் ரோஹனையும் தவிர மற்ற இருஜோடி பெரியவர்களும் அவர்களெதிரே வந்து நின்ற தத்தமது வாரிசுகளை முறைத்துப் பார்க்க, மாயாவோ அகஸ்டினையே பார்த்திருந்தார். அவனுடைய முகத்தில் பாறை போன்ற அத்தனை இறுக்கம்.

மஹியோ ஏதோ பேச முயல, அவனை காப்பாற்றுகிறேன் பேர்வழியென்று, “அத்தை… மாமா…” அழைத்தவாறு முன் வந்த ஆத்வி, “மஹிமேல எந்த தப்பும் இல்லை. யூ க்னோ வாட், அங்க என்னாச்சுன்னா…” நடந்ததை சொல்ல வந்தாள்.

ஆனால், அவளை கை நீட்டி தடுத்த மாயா, “ஐ க்னோ எவ்ரிதிங். பட், இப்போ மஹிதான் பேசணும். அவன் பேசியே ஆகணும்.” அழுத்தமாகச் சொல்ல, தைரியத்தை வரவழைத்து  “சோரிம்மா, நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும். எனக்கு பிஸ்னஸ்ல இன்ட்ரஸ்ட் இல்லை. ஒரு பெஸ்ட் மொபைல் ஆர்டிஸ்ட் ஆகணும்னுதான் என்னோட கனவே. ப்ளீஸ்ம்மா, என்னால பிஸ்னஸ்ஸ பொறுப்பெடுத்துக்க முடியாது.” படபடவென பேசிவிட்டு மஹி பாவமாக முகத்தை வைக்க, மாயாவோ தன்னவனைதான் நோக்கினார்.

ரோஹனின் இதழிலோ ரகசியப்புன்னகை! ‘நீ போட்ட திட்டம் எப்போவுமே தப்பாகாது அம்மு.’ உள்ளுக்குள் மெச்சுதலாக தன்னவளை பாராட்டியவரின் நினைவுகள் தன்னவளுடனான சம்பாஷனைகளை நினைத்துப் பார்த்தது.

“ரூஹி, மஹியோட ஆசையில என்னைக்கும் நான் குறுக்க நிக்க மாட்டேன். என்னோட திட்டம் வேற. ஆனா, அவனோட பாதையில அவன் ரொம்ப ஸ்ட்ரோங்கா இருக்கணும். என்னை காயப்படுத்தக் கூடாதுன்னு மதில் மேல் பூனை மாதிரி அவன் ரொம்ப தவிக்கிறானோன்னு எனக்கு தோனுது.” மாயா தன்னவனின் தோளில் சாய்ந்தவாறுச் சொல்ல,

குனிந்து மாயாவின் முகத்தை ஆச்சரியமாகப் பார்த்த ரோஹன், “எக்ஸ்ஸாக்ட்லி அம்மு! உன் மேல ரொம்ப பாசம் அவனுக்கு. அவனோட பாதைய தேர்த்தெடுத்தா, பிஸ்னஸ்ஸ அவன் பொறுப்பெடுத்துக்கணுங்குற உன் ஆசை சிதைஞ்சிரும், அதனால நீ ரொம்ப வருத்தப்படுவன்னு ரொம்ப யோசிக்கிறான். பட், இதை இப்படியே விடக் கூடாது.” யோசனையோடு சொன்னார்.

“அதுக்குதான் என்கிட்ட ஒரு ப்ளான் இருக்கே…” சொன்னவாறு அவர் முன் அமர்ந்தவர், “இதுவரைக்கும் கம்பனிய பொறுப்பெடுத்துக்கன்னு அவன்கிட்ட நேரடியா சொன்னது கிடையாது. நாளைக்கு எல்லார் முன்னாடியும் சொல்ல போறேன். அவனோட பாதைய தெரிவு செய்ய வேண்டியது, அதுக்காக போராட வேண்டியது அவனோட பொறுப்பு. பட், ஐ ஹோப். மஹி என்னோட மகன். பிடிச்ச விஷயத்தை என்னைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டான்.” உறுதியாகச் சொல்ல, ரோஹனுக்கோ ஆச்சரியம்.

அதை நினைத்து ரோஹன் சிரிக்க, மாயாவோ அடக்கப்பட்டச் சிரிப்போடு மஹியையே சற்று நேரம் பார்த்திருந்தார்.

அவனோ மீண்டும், “அம்மா…” என்று ஏதோ பேச வர, அவனை இடைவெட்டி, “இப்போவாச்சும் சொன்னியே… கங்கிராட்ஸ் கண்ணா.” புன்னகையுடன் சொன்ன மாயா, சிரிப்போடு அகஸ்டினை நோக்க, தரையை வெறித்தவாறு நின்றிருந்தான் அவன்.

“அகி, நாம போயாகணும். நியாபகம் இருக்குல்ல, பீ ரெடி! நைட் இத்தாலிக்கு கிளம்புறோம்.” மாயா சட்டென்று சொல்ல, மஹிக்கும் ஆத்விக்கும் எதுவும் புரியவில்லை. ஆனால், பெரியவர்களின் முகத்தில் கொஞ்சமும் ஆச்சரியப்பாவனை இல்லை.

“மாம், இப்போதானே கங்கிராட்ஸ்ஸுன்னு சொன்னீங்க. இப்..இப்போ என்ன இத்தாலிக்கு? எதுக்கும்மா?” வெளியில் வாழ்த்தினாலும் இன்னமும் தன் அம்மா அந்த ஆசையில்தான் இருக்கிறாரோ என்ற பயத்தில் மஹியின் வார்த்தைகள் திக்கித்திணற, அவனை கொடுப்புக்குள் சிரித்தவாறுப் பார்த்து, “இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது அகியோட சம்மந்தப்பட்டது.” என்றார் ரோஹன்.

அகஸ்டினோ அப்போதும் உணர்ச்சிகள் துடைத்தெறியப்பட்ட முகத்துடன்  இறுகிப்போய் நின்றிருக்க, “மாயா, எனக்கென்னவோ இது சரியா தோனல. நீ தப்பான முடிவு எடுக்குறியோன்னு எனக்கு தோனுது. எதுக்கும் பொறுமையா…” அலைஸ் தயக்கமாக ஏதோ சொல்ல வர, அவரின் பேச்சை நிறுத்தி அலைஸ்ஸை முறைத்துப் பார்த்தார் மாயா.

“என்னோட முடிவு எப்போவும் தப்பாகாதுன்னு உனக்கு நல்லாவே தெரியும் அலைஸ். இதை அகிய தவிர வேற யாராலேயும் பண்ண முடியாது. அவன நான் நம்புறேன்.” அழுத்தமாகச் சொல்லிவிட்டு அகியை மாயா ஒரு பார்வைப் பார்க்க, சிவந்த விழிகளை மட்டும் உயர்த்தி அவரை நோக்கியவன் மட்டுமே அறிவான், தன் மனக்குமுறல்களை.

அதற்குமேல் அங்கு நிற்காது தனதறைக்கு அவன் விறுவிறுவென  சென்று கதவடைத்துக்கொள்ள, இளசுகளை தவிர பெரியவர்களோ ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ஆனால், மஹிக்கும் ஆத்விக்குக் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.

‘இங்க என்னதான்டா நடக்குது?’ என்ற ரீதியில் பெரியவர்களையும் அகஸ்டின் சென்ற திசையையும் இருவரும் மாறி மாறிப் பார்க்க, அடுத்தகணம் அவர்களெதிரே வந்து தருண் சொன்ன செய்தியில் மஹிக்கோ உலகத்தையே வென்ற சந்தோஷம் என்றால், ‘ஆத்தீ!’ நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சியில் இரண்டடி பின்னால் நகர்ந்த ஆத்வியின் மனமோ, ‘கிழிஞ்சது கிருஷ்ணகிரி!’ என்று சொல்லிக்கொண்டது.

அன்றிரவு, மஹேஷ்வரி குழுமத்தின் ப்ரைவேட் ஜெட்டில் ஜன்னல் இருக்கையில்  வெளியே வெறித்தவாறு அமர்ந்திருந்த அகஸ்டினின் மனம் முழுவதும் வெறுமைதான். இத்தாலிக்கு வருவதற்கு முன் எதைப் பற்றியும் கவலைப்படாது, தண்டனை ஒருபக்கம் வாழ்க்கையை முழுதாக அனுபவிக்கும் சுகம் ஒருபக்கம் என வாழ்ந்தவன் அவன்! ஆனால், இன்று…

இதுவரை பிடித்த எதையும் அவன் விட்டுக்கொடுத்தது இல்லை. ஆனால், இப்போது விட்டுக்கொடுத்துவிட்டு அவன் வாழ்வில் நினைத்தும் பார்க்காத ஒன்றை காணச் செல்கிறான். இதன்பிறகான அவன் வாழ்வின் திசை அவனுக்கு நன்றாகத் தெரியும்.

‘சோரி, எனக்கு வேற வழி தெரியல.’ மானசீகமாக வேதனையோடு நினைத்துக்கொண்டவன், கை முஷ்டியை இறுக்கி தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டான்.

பலமணி நேரங்கள் கழித்து மாயாவின் பங்களாவுக்கு மூவருமே வந்து சேர, உள்ளே நுழைந்ததுமே அறையை நோக்கி செல்லச் சென்றவனை தடுத்து, “அகி, நாளைக்கு தயாரா இரு! உன் வாழ்க்கையோட டர்னிங் பாய்ன்ட்ட பார்க்க போற.” மாயா சொல்ல, எதுவும் பேசாது அறைக்குள் அடைந்துக்கொண்டான்.

மும்பையிலிருந்து வந்ததிலிருந்து ரோஹனும் மாயாவும் அவனுடைய இறுக்கத்தை கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டவர்களுக்கு ‘அதுவா இருக்குமோ?’ என்ற கேள்வி தோன்றாமலில்லை.

இங்கு அகியோ அறைக்குள் புகுந்து, கோபத்தில் செய்வது அறியாது மொத்தப் பொருட்களையும் தூக்கிப்போட்டு உடைத்தான். ஆனாலும் அவனுடைய மன ஆதங்கத்தை அடக்க முடியவில்லை. அப்படியே முட்டிப்போட்டு தரையில் அவன் அமர்ந்துவிட, முதல்தடவை அவனுடைய விழிகளிலிருந்து விழிநீர் தரையை தொட்டது.