விழிகள் 24

eiUGUJ784257-5b0ae21c

மஹி தயாராகி ஹோலுக்கு வர, சரியாக பெண் வீட்டாற்களும் பெரியவர்களின் வரவேற்போடு வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு மணப்பெண்ணாக வந்த நடாஷாவைப் பார்த்து அவனுக்கு அதிர்ச்சி என்றால், நடாஷாவின் அப்பாவென மனோகரனை அறிமுகப்படுத்தவும் அடுத்த அதிர்ச்சி.

பெக்க பெக்கவென விழித்துக்கொண்டு மஹி நிற்க, அவனெதிரே வந்த மனோகரன், “ஹெலோ மிஸ்டர்.மஹேந்திரன். நைஸ் டூ மீட் யூ.” புன்னகையுடன் சொல்ல, பதிலளிக்கக் கூட மறந்து நடாஷாவையும் அவரையும் மாறி மாறிப் பார்த்திருந்தான் அவன்.

அதில் வாய்விட்டுச் சிரித்து, “நடாஷாவ உங்களுக்கு நல்லாவே தெரியும். பட், என் பொண்ணு நடாஷான்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.” என்றவர், “ஐ அம் சோரிப்பா, அன்னைக்கு பிஸ்னஸ்காக உங்க வீட்டுப்பொண்ண கடத்தி தப்பு பண்ணிட்டேன். அந்த பொண்ணுக்கிட்ட கூட நான் மன்னிப்பு கேட்டுட்டேன்னா பாருங்க. அப்படிதானேம்மா?” மஹியிடம் சொன்னவாறு ஆத்வியிடம் அவர் கேட்க, “ஹிஹிஹி… ஆமா அங்கிள்.” உள்ளுக்குள் பொறுமிக்கொண்டாலும் வெளியில் அசடுவழிந்தாள் ஆத்விகா.

மஹியும் அதிர்ந்து பெரியவர்களை நோக்க, அவர்களும் புன்னகையுடன்தான் நின்றிருந்தனர். தன் மகளின் விருப்பம் தெரிந்த அடுத்த நிமிடமே பெரியவர்களிடம் மன்னிப்பு கேட்டு மகளின் ஆசையை கேட்டுவிட்டார் மனோகரன்.

மனோகரன் நகர, மஹியின் எதிரே வந்த நடாஷா, “ஹாய் மஹேந்திரன். முன்னாடியே உங்ககிட்ட சொல்லியிருக்கணும். ஐ அம் சோரி. என்ட், ஐ க்னோ. உங்க பேரன்ட்ஸ் விருப்பம்தான் உங்க விருப்பம்னு.” என்றுவிட்டு தன் தந்தையுடன் சென்று அமர்ந்துக்கொள்ள, ‘அவன் சொன்னானாடி உன்கிட்ட?’ உள்ளுக்குள் ஆத்வி கொதிக்க, மஹியோ ஆத்வியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு நடாஷாவினெதிரே சென்றமர்ந்தான்.

பெரியவர்களுக்கிடையில் வியாபார பேச்சு வார்த்தைகளே ஆரம்பத்தில் நடக்க, முதலில் திருமணப்பேச்சை ஆரம்பித்தது என்னவோ ரோஹன்தான்.

“மிஸ்டர்.மனோகரன், நீங்க உங்க பொண்ணு விருப்பத்தை சொல்லிடீங்க. பட், மஹி அவனோட விருப்பத்தை இன்னும் சொல்லவேயில்லை.” என்றவர், “மஹி, உனக்கு நடாஷாவ பத்தி நல்லாவே தெரியும். சோ, உன்னோட விருப்பத்தையும் சொல்லிட்டேன்னா…” என்று இழுக்க, மஹியின் பார்வையோ சட்டென ஆத்வியின் மீது படிந்தது.

விழிகள் கலங்கிப்போய் ‘வேணாம்னு சொல்லு தீரா!’ கண்களாலே கெஞ்சுபவளைப் பார்க்க அவனுக்கே பாவமாகத்தான் இருந்தது. ஆனால், மீண்டும் காதல் வலியை தாங்கிக்கொள்ள விரும்பவில்லை அவன். அகியை காதலிப்பதாக சொன்னது, பப்பில் பார்த்ததை வைத்து தவறாக பேசியது என்பன அவள்மேல் ஒருபக்கம் கோபத்தை உண்டாக்கியிருந்ததென்றால், மறுபக்கம் அவள் காதலிப்பதாக சொன்னதிலிருந்து பரிதாபப்பட்டு உண்டான காதலோ என்ற கேள்வியும் அவனுக்குள் இருக்கிறது.

அவளையே பார்த்திருந்தவன், “எனக்கு சம்மதம்ப்பா.” என்றுவிட்டு பார்வையை திருப்பிக்கொள்ள, சுற்றியிருந்த எல்லோருக்கும் அத்தனை சந்தோஷம். அதுவும், நடாஷாவின் மனநிலையை சொல்லவா வேண்டும்? வெட்கப்பட்டுச் சிரித்துக்கொள்ள, ஆத்வியோ கீழுதட்டை கடித்து அழுகையை அடக்கிக்கொண்டாள்.

“அப்போ சீக்கிரம் கல்யாணத்தை வச்சிடலாம். தள்ளி போட வேணாம். அதுவும், எங்க ஃபேமிலியில முதல் கல்யாணம் ரொம்ப க்ரேன்டா பண்ணணும். ஒரு மாசத்துக்குள்ள ஏதாச்சும் நல்ல நாள் இருக்கான்னு நீங்களே பார்த்து சொல்லிருங்க.” கீர்த்தி சொல்ல, சரியாக மாயாவின் எண்ணிற்கு அழைப்பு வந்தது.

திரையைப் பார்த்தவர், கொடுப்புக்குள் சிரித்தவாறு “அகி.” என்றுச் சொல்ல, “ஓ மிஸ்டர்.அகஸ்டினா? சார் எப்படி இருக்காரு?” பணிவாக மனோகரன் கேட்ட விதத்தை பார்த்து முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கி அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹெலோ…” என்றார்.

மறுமுனையில் நம் நாயகன் ஒரு நிமிடம் கூட பேசியிருக்க மாட்டான். பட்டென்று அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்க, திரையைப் புரியாது பார்த்த மாயா, “அகி இந்தியா வர்றான்.” என்றுவிட்டு ரோஹனை பார்க்க, விழி விரித்துவிட்டனர் மொத்தப்பேரும்.

“நிஜமாவா மாம்?” மஹி அத்தனை உற்சாகத்தோடுக் கேட்க, “அவன ரொம்பவே மிஸ் பண்றேன். பட் வன் டவுட், முன்னாடியெல்லாம் சும்மா கூப்பிட்டாலே சார் வர மாட்டாரு. இப்போ என்ன, அவனாவே வர்றேன்னு சொல்றான்?” கழுகுப்பார்வையோடு கேட்டார் அலைஸ்.

“தேவை இங்கயிருக்கும் போது அதை விட்டு தள்ளியிருந்து என்ன பயன்?” ரோஹன் அடக்கப்பட்டச் சிரிப்போடு சொன்னவாறு தன்னவளை நோக்க, அவரும் வாய்விட்டுச் சிரித்தார் என்றால், நடப்பது புரியாது ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் மற்றவர்கள்.

அடுத்து மூன்று நாட்கள் கழித்து,

மஹேஷ்வரி குடும்பத்திற்கு சொந்தமான விமானத்தில் இந்தியாவில் தரையிறங்கினான் அகஸ்டின். முன்னிருந்த குறும்புக்கண்கள் இப்போது ஒரு அழுத்தத்தை கொண்டிருக்க, முகமோ இறுகிப்போயிருந்தது.

அவனுக்கென சில காவலர்கள் பாதுகாப்பிற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அந்த காவலர்கள் சூழ காரை நோக்கி விறுவிறுவெனச் சென்றவன், தனக்கே உரித்தான காரில் ஏறாது காவலர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த காரில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டான்.

காவலர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. “சார் ப்ளீஸ், நான் ட்ரைவ் பண்றேன். நீங்க வசதியா பின்னாடி இருங்க.” அந்த காரின் ஓட்டுனர் திக்கித்திணறிச் சொல்ல, விழிகளை மட்டும் உயர்த்தி ஒரு பார்வைப் பார்த்தவன், கார் கண்ணாடியை முகத்திற்கு அறைந்தது போல் மூடியவாறு தனியாக வண்டியை செலுத்திக்கொண்டுச் சென்றான்.

வெளியிலிருப்பவர்களுக்கு உள்ளிருப்பவர்களைப் பார்க்க முடியாதவாறு கார் கண்ணாடி வடிவமைக்கப்பட்டிருக்க, அது என்னவோ அகஸ்டினுக்கு வசதியாகித்தான் போனது. ஆனாலும், மூன்று மாதங்களுக்கு முன் புல்லட்டில் காலைத் தென்றலை சுவாசித்துக்கொண்டு நிம்மதியாக சென்ற தருணத்தை அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்த சில நிமிடங்களில், அவனுடைய கார் நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டிருக்கும் அந்த தெருவின் முன் நிற்க, கார் கண்ணாடி வழியாக சிறிதுநேரம் இருக்கையில் தலை சாய்த்து அந்த இடத்தையே பார்த்திருந்தான் அகஸ்டின். அவனுடைய விழிகளில் அத்தனை ஏக்கம்.

அவனுடைய விழிகள் எதையோ தீவிரமாக தேட அமர்ந்திருந்தவன், தேடிய பொருள் கிடைக்காது ஒருகட்டத்தில் பொறுமையை இழந்துவிட்டான். அகஸ்டினின் இயல்பு குணமே அதுதானே!

தான் கையோடு கொண்டு வந்திருந்த பெரிய தொப்பியையும் முகத்தை மறைக்குமளவிற்கான பெரிய கண்ணாடியையும் அணிந்துக்கொண்டவன், காரிலிருந்து மெதுவாக இறங்கி அந்தத் தெருவுக்குள் செல்ல, அவனை கண்டுக்கொள்ளாது சிலர் அவனை கடந்துச் செல்லவும் யாருக்கும் தன்னை அடையாளம் தெரியவில்லையென்பதை உணர்ந்துக்கொண்டான் அவன்.

வேகவேகமாக ஒரு சின்ன வீட்டின் முன் அவன் சென்று நிற்க, அதுவோ பூட்டியிருந்தது. புருவத்தைச் சுருக்கியவன், அடுத்து என்ன செய்வதென்று கூட அறியாது அப்படியே நிற்க, அவன் நிற்பதையே சிறிதுநேரம் உற்று உற்று பார்த்திருந்த அந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டிலிருக்கும் சாந்தி, “ஏம்ப்பா, யாரு நீ? அலீஷாவ தேடி வந்திருக்கியா? உன்கிட்ட ஏதாச்சும் திருடிட்டாளா என்ன?” நீட்டி முழக்கிக் கேட்டார்.

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்து, அவர் கேட்டதில் எங்கோ வெறித்துக்கொண்டு ‘ஆம்’ எனும் விதமாக தலையசைத்து, “வெளியில எங்கேயாச்சும் போயிருக்காளா?” தேய்ந்த குரலில் கேட்டவனுக்கு, “வெளியிலயா? அவ எங்க போனா, என்ன ஆனான்னு ஒன்னுமே தெரியலப்பா. ஒரு மாசமா வீடு பூட்டிதான் இருக்கு.” சாந்தி சொல்லவும், தூக்கி வாரிப்போட்டது.

அதிர்ந்து விழித்தவன், “அலீ…அலீஷா எங்க?” திக்கித்திணறிக் கேட்க, “இரண்டு மாசத்துக்கு முன்னாடிதான் அவ அம்மா இறந்துப் போனாங்க. பாவம் புள்ள தனியாகிருச்சு. துணைக்கும் யாருமில்லை. தினமும் அழுகைதான். அப்றம் ஒருநாள் ராத்திரியோட ராத்திரியா பொட்டி படுக்கைய கட்டிட்டு எங்கேயோ போய்ட்டா. எங்க போனா என்ன? பாதுகாப்பா நல்லா இருந்தாலே போதும்.” அவர் சொல்லி முடிக்க, சிலையாக சமைந்துவிட்டான் அவன்.

எங்கேயாவது வெளியே சென்றிருப்பதாக சாதாரணமாக நினைத்திருந்தவனுக்கு, இப்போது சாந்தி சொன்னதை ஜீரணிக்கவே சற்றுநேரம் எடுத்தது. “ஷீட்! எங்கதான்டி போய் தொலைஞ்ச?” வாய்விட்டுக் கத்தியவாறு நெற்றியை அவன் நீவி விட்டுக்கொள்ள, சாந்தியோ தன் தோழிகளுடன் ஊர்க்கதைப் பேச அகஸ்டினை வைத்து ஒரு தலைப்புச்செய்தியையே தீவிரமாக தயார் செய்துக்கொண்டிருந்தார்.

வேகமாக வந்து காரில் ஏறிக்கொண்டவனுக்கு கோபம் பன்மடங்காக பெருகியது. ஸ்டீயரிங்கை ஓங்கி குத்தியவன், அடுத்து மின்னல் வேகத்தில் வண்டியை எடுத்துக்கொண்டுச் சென்றான்.

ஏனோ அவன் மனம் வேகமாக அடித்துக்கொண்டது. ‘எங்கதான்டி போய் தொலைஞ்ச? சிவனேன்னு இருந்தேன். என் வாழ்க்கையில வந்து உன்னை நினைக்க வச்சு… ச்சே! அன்னைக்கு மாயா அத்தை மாமாவ விட்டுப்போன மாதிரி நீயும் விட்டுப் போயிட்டல்ல?’ தன்னவளிடம் முறையிட்டுக்கொண்டிருந்தவனின் விழிகள் கலங்கிப்போய் இருக்க, நினைவுகள் இறுதியாக ரோஹன் அவனுடன் பேசிய தருணத்தை நினைத்துப் பார்த்தது.

இத்தாலியில் நிர்வாக பொறுப்பை அகஸ்டின் எடுத்ததுமே அவனுக்கான பயிற்சியை மாயாவே வழங்க, எந்த பதிலும் பேசாது சொல்வதைக் கேட்டுக்கொண்டவன், ஏனோ தன் இயல்பையே தொலைத்திருந்தான். எதையோ இழந்தது போல் இறுகிய முகமாக, உயிர்ப்பில்லாத சிரிப்புடன் அவன் உலாவுவதை இருவரும் கவனித்துக்கொண்டுதான் இருந்தனர்.

ஆரம்பத்தில் இது போன்ற வாழ்க்கையில் பிடித்தம் இல்லாததாலேயே அகஸ்டின் இவ்வாறு இருப்பதாக நினைத்துக்கொண்ட ரோஹானுக்கும் மாயாவுக்கும் அகஸ்டினின் விழிகளிலிருக்கும் ஏக்கம் வேறொன்றை உணர்த்தியது.

இவ்வாறு சில நாட்கள் நகர்ந்திருக்க, அன்று…

பயிற்சி முடிந்து தாமதமாக வந்தவன், அறைக்கு கூட செல்லாது வண்டியிலிருந்து இறங்கியதுமே தோட்டத்தில் அலங்காரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும் செயற்கை நீர்வீழ்ச்சியை வெறித்தவாறு அதனெதிரே இருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டான். மனதில் அத்தனை வெறுமை!

தன் மனவெறுமைக்கான காரணத்தை பாதி உணர்ந்தும் உணராததுமான ஒருவித குழப்பத்தில் அமர்ந்திருந்தவனின் சிந்தனையை கலைத்தது, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமல்.

திடுக்கிட்டுத் திரும்பியவன், தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ரோஹனை உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக்கொள்ள, “நீ எங்கேயாச்சும் அகஸ்டின பார்த்தியா?” கேலியாக கேட்டார் அவர். அவனுக்கோ அத்தனை கடுப்பு!

“எனக்கு இப்போ உங்க கூட விளையாடுற மூட் இல்லை. என்னை தனியா விடுங்க!” இறுகிய குரலில் அகஸ்டின் சொல்ல, “முன்னாடியெல்லாம் நாங்க காதை பொத்துற அளவுக்கு விடாம பேசுவ. பனிஷ்மென்ட்ட பத்தி கொஞ்சமும் கண்டுக்காம பிடிச்சதை பண்ணுவ. மஹி, ஆத்வி குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிட்டாங்கன்னா, நீ நீயா இருந்த. உன்னை திட்டுவேன். ஆனா, எப்போவுமே நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சிலநேரம் உன்னை பார்க்கும் போது மாயாவ பார்க்குற மாதிரி இருக்கும்.” ரோஹன் பேசிக்கொண்டே போக, அவனோ அவரை புரியாது நோக்கினான்.

“உன் பிரச்சினை என்னன்னு இப்போ நான் கேக்க போறதில்லை. என்னோட லைஃப்ல நான் கத்துக்கிட்டதை உன்கிட்ட சொல்லலாமேன்னு யோசிக்கிறேன். அட்வைஸ் கிடையாது. போரா இருக்காது. சும்மா கேளு!” சிரிப்புடன் சொன்னவருக்கு, அகஸ்டின் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி இருக்கையில் சாய்ந்து அமர்ந்ததும் புரிந்துப்போனது, அவன் செவிமடுப்பது.

“யூ க்னோ வாட் அகி? இப்போ உன்கிட்ட இருக்குற ஈகோ, அளவுகடந்த கோபம் உன் வயசுல உன்னை விட அதிகமாவே எனக்கு இருந்தது. அன்னைக்கு என் ஈகோவாலதான் என் அம்முவ அஞ்சு வருஷம் பிரிஞ்சேன்.” ரோஹன் சொல்ல, அகஸ்டினோ அவரை கேள்வியாக நோக்க, “என்னோட பேஷன மறக்க வச்சி அவள பத்தி மட்டுமே நினைக்க வச்சா. அவளால விட்ட கனவை அவளே மீட்டுக்கொடுத்தா என்னோட மாயா.” காதலோடு சொன்னார் அவர்.

அகஸ்டினுக்கே அவர்களின் காதலை நினைத்து உள்ளுக்குள் சற்று பொறாமையாக இருந்தது. மீண்டும் ரோஹனே தொடர்ந்தார்.

“என் அம்முவ இப்போ நான் எவ்வளவு சந்தோஷமா வச்சிருக்கேனோ அதே மாதிரி அப்போ அவள ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன். ஆனா, அவளோட காதலுக்கு ஈடா எதுவும் இல்லை அகி. என்னதான் திட்டினாலும் என் பின்னாடியே வருவா. அவ இல்லாத அந்த அஞ்சு வருஷத்தை மறக்கவே முடியாது. பிரிவுதான் ஒருத்தரோட மதிப்பை உணர்த்தும்னு அப்போ புரிஞ்சிக்கிட்டேன்.” அவரின் வார்த்தைகள் ஏனோ அகியின் மனதிலுள்ள குழப்பங்களை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவுப்படுத்திக்கொண்டிருந்தது.

“லுக் அகி, வாழ்க்கையில நிறைய போராட்டங்கள் இருக்கும். நமக்கு பிடிச்ச மாதிரி எல்லாமே அமைஞ்சிராது. வாழ்க்கைத்துணை கூட. பட், ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். இப்போ இந்த வாழ்க்கை உனக்கு பிடிக்காம இருக்கலாம். இதுக்கெல்லாம் மருந்தா உனக்காக ஒருத்தங்க வருவாங்க. அது யாரா வேணா இருக்கலாம். உன்மேல அளவுகடந்த அன்பு வச்சிருப்பாங்க. என்னைக்கும் அவங்கள விட்டுக்கொடுத்துறாத. ஒருவேள, நீ இழந்துட்டேன்னா உன்னை விட முட்டாள் யாரும் கிடையாது.”

ரோஹன் சொல்லி முடித்து எழுந்துச் செல்ல, அகியின் மனதில் அவரின் வார்த்தைகள் பசுமரத்து ஆணி போல் அப்படியே பதிந்து போகின.

ரோஹனின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தவனுக்கு, அன்று அவர் பேசிவிட்டு சென்றதுமே மனக்கண் முன் அலீஷாவின் விம்பம் தோன்றியது போலவே இன்றும் மனக்கண்ணில் அவளுடைய விம்பம்தான். அவனுக்குள் ‘அவளை இழந்துவிட்டோமோ?’ என்ற பயம் வேறு.

‘எலி, என்கிட்ட வந்துருடி. ரொம்ப ரொம்ப உன்னை லவ் பண்றேன்டி. ப்ளீஸ்டி.’ மனதால் தன்னவளிடம் இறைஞ்சியவன், ஆரம்பத்திலேயே அவளை காதலிக்க ஆரம்பித்திருந்தான். ஆனால், அவளுடைய வாழ்க்கைக்காக அவள்மேல் உண்டான காதலை மறைத்து, காதலையே வெறுத்தவன் அகஸ்டினாகத்தான் இருக்கும். அதை அவன் மட்டுமே அறிவான்!
 
வீட்டிலிருந்த மொத்தப்பேரும் அகஸ்டின் இந்தியா வந்ததை அறிந்து அவனுக்காக காத்திருக்க, அவனோ பணக்காரர்கள் மட்டுமே தங்கியிருக்கும் அத்தனை வசதி படைத்த ஹோட்டல் அறையில் மூக்கு முட்ட குடித்துக்கொண்டிருந்தான்.

.அடுத்து என்ன செய்வது, ஏது செய்வதென்று கூட அவனுக்குத் தெரியவில்லை.

சரியாக, ஹோட்டல் அறையிலிருந்த தொலைப்பேசிக்கு அழைப்பு வர, போதையில் அதையேற்று பேசியவன்,  மறுமுனையில் கேட்ட கேள்வி புரியாது “ஓகே ஓகே…” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்க, அடுத்த சிலநிமிடங்களில் அவனுடைய அறை அழைப்புமணி ஒலித்தது.

“ச்சே! எவன்டா அவன்?” எரிச்சலாக மூணுமுணுத்தவாறு போதையில் தள்ளாடியபடி எழுந்துச்சென்று கதவைத் திறந்த அகஸ்டின், எதிரே நின்றிருந்தவனைப் பார்த்ததும் வேகமாக கதவை மூடப் போனான். ஆனால், போதையிலிருந்தவனை விட தெளிவாக இருந்தவன் கொஞ்சம் வேகத்தோடே செயற்பட்டான்.

அகஸ்டின் மூடுவதற்கு முன் தடுத்து நிறுத்தி வேகமாக உள்ளே நுழைந்தவன், அடுத்து கொஞ்சமும் யோசிக்காது அவனின் முகத்திலேயே ஓங்கி குத்தியிருந்தான்.