விழிகள் 26

eiA5H7210511-bf3aa59a

அலீஷாவின் வீடு திறந்திருக்கவும், வேகமாக வீட்டிற்குள் நுழைந்த அகஸ்டின், விழிகளை சுழலவிட்டு தன்னவளைத் தேட, அங்கு அதே வெள்ளைநிறச் சுடிதாரில் நெற்றியில் விபூதியுடன் கண்களை மூடி, கைக்கூப்பி சுவற்றில் மாற்றப்பட்டிருந்த மாதவியின் புகைப்படத்தின் முன் நின்றிருந்தாள் அலீஷா.

தன்னவளைப் பார்த்ததும் இத்தனைநாள் தன் தேடல் கிடைத்துவிட்ட சந்தோஷம். கூடவே, கோபமும்.

முகத்தில் அணிந்திருந்த தொப்பியையும் கண்ணாடியையும் கழற்றி தூக்கிப்போட்டவன், வேகமாகச் சென்று அலீஷாவை கோபத்தில் அறைந்திருக்க, பட்டென்று விழிகளை திறந்து கன்னத்தைப் பொத்திக்கொண்டவளுக்கு அதிர்ச்சி!

தன்னெதிரே நின்றிருந்தவனை அவள் அதிர்ந்து நோக்க, அவளின் தோள்களைப் பற்றி குலுக்கிய அகஸ்டின், “எங்கடி போய் தொலைஞ்ச? சொல்லுடி, கேக்குறேன்ல! சொல்லுடி.” அவளை அதட்ட, அலீஷாவிற்கு வாயில் வார்த்தைகள் வந்தால்தானே!

“அது… அது நான்… நான் காசிக்கு போனேன்.” வார்த்தைகளை கோர்த்து பதட்டமாக அலீஷா சொல்ல, ஒருகணம் செயலை நிறுத்திவிட்டு புருவத்தைச் சுருக்கி அவளை புரியாது நோக்கிய அகஸ்டினுக்கு அன்று அவன் சொன்ன ‘மொதல்ல பண்ண பாவத்துக்கு பிரயாச்சித்தமா காசி, ராமேஷ்வரம்னு போய் பாவத்தை கரைச்சிட்டு வா!’ என்ற தன் வார்த்தைகள்தான் நியாபகத்திற்கு வந்தது.

அந்த நினைவில் சிரிப்போடு அவளை அவன் இழுத்து அணைத்துக்கொள்ள, அலீஷாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், அது சற்றுநேரம்தான். அவனுடைய அணைப்புக்குள் அடங்கியவாறு மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றவள், அடுத்து அகஸ்டின் பேசிய வார்த்தைகளில் பொங்கிவிட்டாள்.

“ஏன்டி என்னை விட்டு போன? உன்னை தொலைச்சிட்டேன்னு துடிச்சி போயிட்டேன்டி. நீ இல்லை அப்படிங்குறதை என்னால ஏத்துக்க முடியல. எல்லாமே இருந்தும் சந்தோஷம் இல்லை. ஏய் எலி, இனி உன்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். உன்னை போகவும் விடமாட்டேன். லவ் யூ…” அகஸ்டின் பேசிக்கொண்டேப் போக, இங்கு அலீஷாவுக்கோ அதிர்ச்சி மறைந்து கோபம் உச்சத்தைத் தொட்டது.

அடுத்தநிமிடம், “அடிங்க…” என்றவாறு வீட்டிற்கு வெளியே அகஸ்டினை தள்ளிவிட்டவள், அவன் அணிந்திருந்த தொப்பியையும் கண்ணாடியையும் அவன் மேல் தூக்கி வீச, தரையில் விழுந்திருந்தவனுக்கு ஒருநிமிடம் அசைவே இல்லை. சுற்றியிருந்தவர்களும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்க, சட்டென சுதாகரித்து தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்துக்கொண்டான் அவன்.

அலீஷாவோ அவனை முறைக்க, எழுந்து நின்று பதிலுக்கு அவளை முறைத்தவன், சுற்றியிருந்தவர்களை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, “என்ன பண்ற அலீஷா? என்ன, என்னை பழிவாங்குறியா?” அடக்கப்பட்ட கோபத்தோடுக் கேட்டான். ஆனால்,  அவளுடைய பார்வை அவன்மேல் அலட்சியமாக படிந்தது.

“நீங்கெல்லாம் எவ்வளவு பெரிய ஆளுங்க. உங்களைப்போய் நான் பழிவாங்குறேன்னு கிளம்ப முடியுமா?” கேலியாக கேட்டவள், “இங்கயிருந்து போயிரு. இப்போதான் திருந்தி நல்லாயிருக்கேன். மறுபடியும் காதல் கத்திரிக்காய்னு என்னை கொலைக்காரி ஆக்கிராத! அதுக்கெல்லாம் எனக்கு தகுதியே இல்லை.” கோபத்தோடுச் சோன்னாலும் மனவலியோடுச் சோன்னாள் அழுத்தமாக.

ஆழ்ந்த பெருமூச்செடுத்தவன், மெல்ல அவளை நோக்கி நடந்தவாறு “அலீ, நான் உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன். ஐ க்னோ, ஐ அம் சோரிடி. பழசையெல்லாம் மறந்துரு. நம்ம வாழ்க்கைய புதுசா ஆரம்பிப்போம். நீ என்னை அடி, திட்டு ஆனா, என் கூடவே இரு! என்ட், நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு…” மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே அவளை நெருங்க, கதவுக்குப் பின்னாலிருந்த விளக்குமாற்றை கையிலெடுத்தவள், அவனை முறைத்துப் பார்த்தாள்.

அதில் கால் சட்டென்று நடையை நிறுத்த, சுற்றிமுற்றிப் பார்த்தவனுக்கு பொறுமை காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக பறக்க ஆரம்பித்தது.

அவவை அனல் தெறிக்க நோக்கியவன், “என்னை பத்தி உனக்கு நல்லாவே தெரியும் அலீஷா.” அழுத்தமாகச் சொல்ல, “ம்ம்… நல்லாவே தெரியும்.  ஐரா கம்பனீஸ்ஸோட சிஈஓவ தெரியாம இருக்குமா என்ன? ஆனா, சாரு ரொம்ப கௌரவம் பார்க்குற ஆளாச்சே! உங்க தகுதிக்கு என் வீட்டு வாசல மிதிக்கலாமா? போங்க சார், போய் ஏசி காத்துல நல்லா ரெஸ்ட் எடுங்க. எது என்னோட தகுதின்னு நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன். இனி எலித்தொல்லை இருக்காது.” வலியில் தொண்டை அடைக்க, விரக்திச் சிரிப்போடு சொன்னவளைப் பார்த்தவனுக்கு அவளுடைய மனநிலை நன்றாகவே புரிந்தது.

இப்போது அவளிடம் சொல்லிப் புரிய வைப்பது வீணென்றும் புரிந்தது. நெற்றியை நீவி விட்டுக்கொண்டவன், “உன்னை எப்படி என்கிட்ட வர வைக்கணும்னு எனக்கு தெரியும்.” அழுத்தமாகச் சொல்லிவிட்டு கூட்டம் கூடி தன்னை அடையாளம் காண்பதற்கு முன் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

விழியோரத்தில் கசிந்த விழிநீரை அழுந்தத் துடைத்தெறிந்தவள், ‘நான் உனக்கு பொருத்தமானவ இல்லை தினு.’ உள்ளுக்குள் நினைத்தவாறு போகும் தன்னவனையே வலியோடு நோக்க, காருக்குள் ஏறி ஸ்டீயரிங்கை ஓங்கிக் குத்தியவன், ‘உனக்காகதான் அப்போ உன்னை ஏத்துக்கல. ஆனா, அதே தப்பை மறுபடியும் பண்ண மாட்டேன்.’ உறுதியாக நினைத்துக்கொண்டான்.

அன்று மாலை,

“அலீ, யாரந்த பையன்? காலையில உன்கிட்ட பிரச்சினை பண்ணான்னு அந்த கமலா சொன்னா. நானும் கொஞ்சநாளா பார்த்துக்கிட்டுதான் இருந்தேன். தினமும் வீட்டு முன்னாடி வந்து நிக்கிறான். ஏதாச்சும் காசு விஷயமா இருக்கும்னு நினைச்சிருந்தேன். ஆனா, விஷயம் வேற மாதிரி இருக்கே…” சாந்தி சந்தேகமாக இழுக்க,

“அதெல்லாம் ஒன்னுஇல்லைக்கா, நான் பார்த்துக்குறேன். ஏதாச்சும் வீட்டு வேலை கேட்டிருந்தேனே, என்னாச்சு?” ஆர்வமாக கேட்டாள் அலீஷா.

“அட! உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். ஒருவேலை வந்திருக்கு. அதான் நம்ம கனேசு இருக்காருல்ல, அவரோட பையன் விக்னேசு ஏதோ பெரிய சமையல் படிப்பெல்லாம் படிச்சானே, அவன்தான் இதை பத்தி சொன்னான். ரொம்ப வசதியான குடும்பமாம், ஏதோ விசேஷம் போல! கூடமான ஒத்தாசைக்கு வேலைக்கு கூப்பிடுறான். இப்போதைக்கு இந்த வேலைதான் இருக்கு. என்ன சொல்ற?” அவர் கேட்க,

விரக்தியாக சிரித்தவாறு, “என்ன சொல்ல இருக்குக்கா? கையில காசில்லை. என்ன பண்றதுன்னு தெரியல. இப்போ இருக்குற நிலைமையில எனக்கெல்லாம் ஆப்ஷனே இல்லை. நான் வரேன். ஆமா… வேலை எங்க?” என்றுவிட்டு அலீஷா கேள்வியாக நோக்கினாள்.

“எனக்கும் தெரியல. நாளைக்கு காலையில ரெடியா இரு! அவங்க வண்டி அனுப்புவாங்களாம்.” என்றுவிட்டு சாந்தி, கையோடு கொண்டு வந்திருந்த உணவுப்பொட்டலத்தை அவளிடம் திணித்துவிட்டு நகர, பசியில் அதை வேகமாக பிரித்துச் சாப்பிட்டவளுக்கு விழிகள் கலங்கிப் போயிருந்தன.

அன்றையநாள் முடிந்து அடுத்தநாள் விடிய, மஹியின் அறைக்கதவை திறந்துக்கொண்டு உள்ளேச் சென்ற அகஸ்டின், “என்ன மாப்பு, கல்யாணத்தை நினைச்சு ஒரே குஷிதான் போல!” கட்டிலில் அமர்ந்திருப்பவனைப் பார்த்து கேலியாகக் கேட்டான்.

அதில் விழிகளை மட்டும் உயர்த்தி அவனை முறைத்துப் பார்த்தவன், “ஆமா, அதுக்கென்ன?” என்றுவிட்டு கையில் வைத்திருந்த காகிதத்தில் பேனையை வைத்து எதையோ எழுதிக்கொண்டிருக்க, மெல்ல அவனருகில் சென்று காகிதத்தை எட்டிப் பார்த்தான் அகஸ்டின்.

அதில் மஹி கிறுக்கி வைத்திருந்த கிறுக்கல்களை பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது. “சின்னதா ஒரு பேப்பர கொடுத்தாலே அதை வச்சு  ஏதாச்சும் பண்ணி உன்னோட கலெக்ஷன்ல வச்சிப்ப. பட், இப்போ…” கேலியாக பேசிக்கொண்டேச் சென்ற அகஸ்டின், “ரொம்ப குழப்பத்துல இருக்கன்னு மட்டும் புரியுது.”  என்றான் சிரிப்போடு.

அவனுடைய வார்த்தைகளில் மஹிக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது. எழுந்து அவனெதிரே நின்றவன், “ஓஹோ! சார் எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ரொம்ப தெளிவாயிருக்கீங்களோ?” கேலித்தொனியில் கேட்க, “ஆரம்பத்துல முட்டாளா இருந்தவன், இப்போதான்டா தெளிஞ்சிருக்கேன்.” விரக்தியாக சொன்ன அகி, “நீ ஏதோ தப்பா புரிஞ்சிருக்கன்னு மட்டும் தெரியுது. முட்டாள்தனமா நடந்துக்கிட்டு பிடிச்ச வாழ்க்கைய தொலைச்சிராத!” அழுத்தமாகச் சொன்னான்.

“ஷட் அப் அகஸ்த்து! நான் முட்டாளாவே இருந்துட்டு போறேன். பட், இந்த பரிதாபக்காதல் மட்டும் எனக்கு வேணாம்.” மஹி கோபமாக பேசிக்கொண்டேச் செல்ல, சரியாக அகஸ்டினின் அலைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதைப் பார்த்தவனுக்கு இதழில் மெல்லிய புன்னகை.

‘அவ்வளவு சீக்கிரம் உனக்கு பிடிச்ச வாழ்க்கைய இழக்க நான் விட மாட்டேன் சைத்து.’ உள்ளுக்குள் நினைத்தவாறு மஹியை கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டுப் பார்த்தவன், எதுவும் பேசாது வெளியேறப் போக, அவனை சொடக்கிட்டு அழைத்த மஹி, “ஆமா… என்ன கேக்குறியே, அங்க மட்டும் என்ன வாழுதாக்கும்? கேள்விப்பட்டேன், ஐராவோட சிஈஓ ஒரு சாதாரண ஏரியாவுல சின்ன வீட்டு முன்னாடி ஈ ஓட்டிக்கிட்டு இருக்குறதை. வீட்டுல எல்லாருக்கும் தெரியும்.” என்றான் சிரிப்போடு.

அதில் தோளைக் குலுக்கி, “சோ வாட்?” அசால்ட்டாக கேட்ட அகஸ்டின்  “அப்போ உன் திருட்டெலிய கண்டுபிடிச்சாச்சா?” என்ற மஹியின் கேள்விக்கு, “ஷீ இஸ் ஆன் த வேய்.” என்றுவிட்டுச் சிரிக்க, பெரிய இரும்புக்கதவைத் தாண்டி உள்ளே நுழைந்த காரிலிருந்த அலீஷாவின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்திருந்தன.

“பகவானே! இது என்ன சோதனை? போச்சு போச்சு! எல்லாமே போச்சு! அவன் மிரட்டிட்டு போனப்போவே அலெர்ட்டா இருந்திருக்கணும். அந்த வெள்ளைக்காரனோட பிடிவாதத்தை பத்தி தெரிஞ்சும் அசால்ட்டா இருந்திட்டியே அலீ! இப்போ புலம்பி என்ன பயன்? அதான் வீட்டுக்குள்ள வர வைச்சிட்டானே, அவன…” அலீஷா அந்த பெரிய சமையலறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு வாய்விட்டு புலம்பித்தள்ள,

அதில் பதறிய சாந்தி, “ஏய் அலீஷா, ஏன்டி இப்படி புலம்புற, என்னாச்சு?” பதட்டத்தோடுக் கேட்க, சட்டென முகபாவனையை மாற்றிக்கொண்டவள், “ஒன்னுஇல்லைக்கா. ஒன்னுமேயில்லை.” பற்களைக் கடித்துக்கொண்டுச் சொல்லிவிட்டு குனிந்து தான் அணிந்திருந்த சீருடையைப் பார்த்தாள்.

அங்கு வேலைப்பார்ப்பவர்கள் கட்டாயம் அணிய வேண்டிய சீருடை அது. அதைப் பார்த்தவளுக்கு இப்போது கிடைத்த வேலையை விடுவது ஏனோ சரியாகத் தோன்றவில்லை. இன்று உழைப்பதுதான் நாளை வயிற்றுப்பசிக்கு உதவப் போகிறது என்பதை உணர்ந்துக்கொண்டவளுக்கு, தன்னுடைய நிலையை எண்ணி விரக்திச்சிரிப்பு இதழில் தோன்றியது.

அதேநேரம், இவர்களை மேற்பார்வையிட பொறுப்பாக நியமிக்கப்பட்ட கபிலன், அலீஷாவும் சாந்தியும் நின்றுக்கொண்டிருப்பதை கவனித்து “என்ன, சும்மா பேசிக்கிட்டே இருக்கீங்க? போங்க, போய் வேலைய பாருங்க!” என்று கத்திவிட்டு, அங்கு பாத்திரங்களை தூக்கிக்கொண்டு சென்ற பெண்களைக் காட்டி, “அதோ பாரு! எவ்வளவு நீட்டா டைனிங் டேபிளுக்கு எடுத்துட்டு போறாங்க. நீயும் அவங்க பின்னாடி போ! எதுவும் சிந்தக் கூடாது. ஏதாச்சும் தப்பு நடந்திச்சுன்னா பாதி சம்பளத்தை கட் பண்ணிருவேன்.” அலீஷாவிடம் கத்தினான்.

கீழுதட்டைக் கடித்து கோபத்தைக் கட்டுப்படுத்தியவள், வராத புன்னகையை வரவழைத்து உணவுத்தட்டுக்களை எடுத்துக்கொண்டு சாப்பாட்டறைக்குச் சென்றாள். அங்கு நுழைந்தவளுக்கு விழிகள் சாரசர் போல் விரிந்துக்கொண்டன.

‘என்னடா இது, சாப்பிடுறதுக்கு மட்டும் ஒரு தனி வீட்டையே கட்டியிருக்கானுங்க.’ ஆச்சரியமாக நினைத்துக்கொண்டு அத்தனை வேலைப்பாடுகளோடு இருந்த உணவு உண்ணும் மண்டபத்தை சுற்றிமுற்றிப் பார்த்தவாறு மற்ற பெண்களுக்கு பின்னால் சென்றுக்கொண்டிருந்தவளின் கரத்தை ஒரு வலிய கரம் பிடித்திழுத்து சுவற்றுக்கு பின்னால் மறைத்தது.

அதில் உண்டான பயத்தில் கத்தப்போனவள், எதிரே நின்றிருந்தவனைப் பார்த்து அதிர்ந்து வாயைப் பிளந்த வண்ணம் நிற்க, அவளின் இருபுறமும் கையை வைத்துக்கொண்ட அகஸ்டின்,  குறும்பாகச் சிரித்து கண்சிமிட்டினான்.

அதில் அதிர்ச்சி மறைந்து கோபம் எகிற, அவனை முறைத்தவாறு நகர போனவளை அவன் விட்டால்தானே!

“இந்த திருட்டெலிய இந்த பூனை எப்படி அதோட எலிப்பொறிக்குள்ள சிக்க வைச்சது, பார்த்தியா? தட் இஸ் அகஸ்டின்!” அகி தெனாவெட்டாகச் சொல்ல, “மெர்சலாயிட்டேன்ப்பா. ஆனா, இதெல்லாம் இந்த அலீஷாக்கிட்ட வர்க்அவுட் ஆகாது.” என்றவள், அவனின் மார்பில் கை வைத்து தள்ளப்போக, அவள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காது அவளின் கையைப் பிடித்து உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டான்.

“அய்ய…” முகத்தைச் சுழித்தவாறு கையை வெடக்கென்று இழுத்துக்கொண்டவள், “இந்த எச்சி பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத! ஏதோ வயித்துப்பொழப்புக்காக இங்க வேலைக்கு வந்துட்டேன். அதுக்காக நீ சொல்றதுக்கெல்லாம் மண்டைய மண்டைய ஆட்டுவேன்னு மட்டும் நினைச்சிராத!” அழுத்தமாகச் சொல்ல, அகஸ்டினுக்கு சிரிப்புதான் வந்தது.

“இஸ் இட்?” ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி சிரிப்போடுக் கேட்டவன், மின்னல் வேகத்தில் அவளின் கன்னத்தை தாங்கி இதழில் அழுந்த முத்தமிட்டு, அவளை அங்கிருந்து வெளியில் தள்ளியிருக்க, பெக்க பெக்கவென விழித்துக்கொண்டு நடு வழியில் நின்றுக்கொண்டிருந்தவளுக்கு ஒருநிமிடம் எதுவுமே புரியவில்லை.

பின், தன்னவன் செய்த காரியத்தை உணர்ந்து, “அடிங்க…” கோபமாகக் கத்தியவாறு அகஸ்டின் இருந்த திசைக்கு திரும்பியவள், அலைஸ்ஸின் பேச்சு சத்தத்தைக் கேட்டு, ‘ஆத்தீ! இவங்களா? நம்மள பார்த்தாங்கன்னா அவ்வளவுதான். அப்றம், சோத்துக்கு சிங்கிதான் அடிக்கணும். இங்க வேலைப் பார்க்குற கொஞ்சநாளைக்கு இதுங்களோட கண்ணுல சிக்காம தப்பிச்சிரு சின்ராசு!’ உள்ளுக்குள் மிரண்டுப்போய் சமையலறை பக்கம் ஓட்டம் பிடித்தாள்.

ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம், அடுத்தநாள் கல்யாணம் என இருக்க, மொத்த வீடும் திருமண ஏற்பாடுகளில் படு தீவிரமாக இருந்தனர், மூவரைத் தவிர. என்ன செய்வதென்று அறியாது ஆத்வி அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் என்றால், சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் குழப்பத்தோடே திரிந்துக்கொண்டிருந்தான் மஹி.

அகஸ்டினுடைய நிலையை சொல்லவா வேண்டும்? ஒருபக்கம் தன்னவளை தன்னருகே கொண்டு வந்த சந்தோஷம், இன்னொருபுறம் அவளிடம் தன் காதலை எப்படி புரிய வைப்பதென்று தெரியாத தவிப்பு என பல மனநிலையோடு அலீஷாவிடம் வம்பிழுத்துக்கொண்டிருந்தான் அவன்.

ஆனால், அவளோ மனதில் கடலளவு காதலிருந்தும் அதை மறைத்து பொய்யாக முறைத்துத் திரிந்தாள்.

அன்று, ஏதேதோ யோசனையோடு சமையலறையில் வேலை செய்துக்கொண்டிருந்த அலீஷாவை அழைத்த கபிலன், “செகன்ட் ஃப்ளோர்ல ரைட் சைட் இரண்டாவது ரூமுக்கு போய் இதை கொடுத்துட்டு வா!” என்றுவிட்டு கையில் குளிர்பானத்தைக் கொடுக்க, ‘நம்ம நிலைமை தெரியாம இவன் வேற…’ உள்ளுக்குள் முணங்கியவாறு அதையெடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள் அவள்.

‘தெரிந்த முகங்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ?’ என்ற பயம் வேறு அவளுக்கு. இருந்தும், அது அகஸ்டினுடைய அறையென்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தவள், தன்னவனுடைய அறையென்ற ஒரே காரணத்திற்காகதான் மறுக்காது எடுத்துச் சென்றிருந்தாள்.

அறை வாசலில் நின்றிருந்தவள், ‘இன்னைக்கு நான் பண்ற காரியத்துல என்கிட்ட வேலை வாங்கவே பயப்படணும் இவன்.’  உள்ளுக்குள் நினைத்தவாறு குவளையை சரித்துப் பிடித்துக்கொண்டு கதவைத் திறக்கக் காத்திருக்க, சரியாக கதவும் திறக்கப்பட்டது.

ஆனால், கதவைத் திறந்துக்கொண்டு  வெளியே வந்தவர்களைப் பார்த்ததும் ஆடிப்போய்விட்டாள் அலீஷா.