விழிகள் 27

ei4010O10985-c6260b50

அகஸ்டினுடைய அறையிலிருந்து வெளியே வந்த அலைஸ் மற்றும் மாயாவை பார்த்து அதிர்ந்துப்போய் நின்றிருந்தாள் அலீஷா.

‘ஆத்தீ! சிக்கிட்டோம்.’ எச்சிலை விழுங்கியவாறு திருதிருவென விழித்துக்கொண்டு அவள் நிற்க, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட மாயாவினதும் அலைஸ்ஸினதும் முகத்தில் எந்தவிதமான அதிர்ச்சிக்கான சாயலும் இல்லை.

அலீஷாவையும் அவள் கையிலிருந்த குளிர்பானத்தையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு சாதரணமாக அவளை அவர்கள் கடந்துச் செல்ல, இவளுக்கோ எதுவும் புரியவில்லை. ‘என்னடா ஆச்சு? ஒருவேள, தலையில டப்பா கிப்பா விழுந்து பழசை மறந்துட்டாங்களோ…’ உள்ளுக்குள் நினைத்தவாறு போகும் அவர்களைப் புரியாதுப் பார்த்தவள், மீண்டும் பார்வையை அறையின் புறம் திருப்ப, அவளை நெருங்கி நின்றிருந்தான் அகஸ்டின்.

அவனைப் பார்த்ததும் சட்டென இரண்டடி பின்னால் நகர்ந்தவள், முறைத்தவாறு அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு கையிலிருந்த குளிர்பானத்தைப் பார்க்க, குறும்புச் சிரிப்போடு நகர்ந்து நின்றவன், அறையிலிருந்த டீபாயை விழிகளால் காட்டினான்.

அதில் உள்ளுக்குள் கடுகடுத்தவாறு அறைக்குள் சென்றவள், டீபாயில் வைத்துவிட்டு திரும்ப, அறைக்கதவைத் தாளிட்டு கதவில் சாய்ந்து நின்றிருந்தான் அகஸ்டின். அதைப் பார்த்ததும் அலீஷாவுக்கு தூக்கி வாரிப்போட, வேகமாக அவனை நெருங்கியவள், அவனைத் தள்ளிவிட்டு கதவை திறக்க முயற்சிக்க, அவனோ விடாப்பிடியாக அவளை கைகளில் ஏந்திக்கொண்டான்.

“என்னை விடுடா, டேய்!” அவள் கைகால்களை உதற, “கத்தி எனெர்ஜிய வேஸ்ட் பண்ணாத! வெளியில எதுவும் கேக்காது.” நிதானமாகச் சொல்லிக்கொண்டு அவளை கட்டிலில் சரித்து அவனும் அவளை அணைத்தவாறு படுத்துக்கொள்ள, இவளுக்குதான் ‘அய்யோ!’ என்றிருந்தது.

“நீ ரொம்ப ஓவரா பண்ற. எனக்கு கராத்தே, குங்ஃபூ கூட தெரியும். ஏதோ பாவம்னு சும்மா இருக்கேன். இல்லைன்னா…” அலீஷா அவனின் அணைப்பிலிருந்து விலக முயற்சிக்க, அவளின் நெற்றியோடு தன் நெற்றியை வைத்துக்கொண்ட அகஸ்டின் அவளுடைய விழிகளை ஆழ்ந்து நோக்கியவாறு, “யூ க்னோ வாட்? நான் என்னோட எலிய ரொம்ப மிஸ் பண்றேன். எப்போவும் குறும்பு பண்ணிக்கிட்டு, வாழ்க்கைய விளையாட்டா பார்த்துக்கிட்டு, என் பின்னாடி காதல் வசனம் பேசிக்கிட்டு வால் மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருப்பா. நீ அவள் கிடையாது.” என்றான் தேய்ந்த குரலில்.

அவனுடைய வார்த்தைகள் அவளுடைய மனதை பிசைய, இருந்தும் உணர்வுகளை அடக்கிக்கொண்டவள், “அதேதான் நானும் சொல்றேன். உன் பின்னாடி திரிஞ்சிக்கிட்டு நடக்காத ஒரு விஷயத்தை நினைச்சி கனவு கண்டுக்கிட்டு இருந்த உன் முட்டாள் எலி இல்லை நான். நிதர்சனம் புரிஞ்சி விலகியிருக்குற அலீஷா வீரா.” அழுத்தமாகச் சொன்னாள்.

அவளை வலி நிறைந்த புன்னகையோடு பார்த்தவன், “இந்த எலிய எப்படி முழுசா சொந்தமாக்குறதுன்னு இந்த பூனைக்கு தெரியும்.” என்றுவிட்டு அவளிதழை மெல்ல நெருங்க, முகத்தை திருப்பிக்கொண்டவள், “ஆமா… எனக்கு ஒரு டவுட்டு. சார் இந்த வீட்டு பிள்ளையா இருக்கும் போதே ரொம்ப தகுதி தராதரம்னு பேசுவீங்க. இப்போ ஐரா கம்பனீஸ்ஸே உங்க கையில. ஆனா, இந்த அலீஷா அப்போவும் இப்போவும் அதே மிடில் க்ளாஸ் பொண்ணுதான். இப்போ மட்டும் உங்க கௌரவம் என்னாச்சு மிஸ்டர்? உங்களுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒருத்திய கட்டிபிடிச்சிட்டு இருக்கீங்க. உங்க தகுதி என்னாகுறது அகஸ்டின் சார்?” விஷம சிரிப்போடுக் கேட்டாள்.

ஒருகணம் அகஸ்டினுக்கு அவளின் வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை. சிறிதுநேரம் புருவத்தைச் சுருக்கி அவளை நோக்கியவனுக்கு பின்னரே அவளுடைய மனநிலை புரிந்தது.

ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவன், மேலும் தன்னவளை தன்னோடு நெருக்கி, “முன்னாடியெல்லாம் பணம்தான் நம்மளோட தகுதிய டிஸைட் பண்ணுதுன்னு முட்டாள்தனமா நினைச்சிக்கிட்டு என்னோட எலிய ரொம்ப காயப்படுத்திட்டேன். அப்றம் அவ புரிய வைச்சா, பணம் கிடையாது நம்மளோட மனசுதான் எந்தவொரு அன்புக்கும் நாம தகுதியானவங்களான்னு டிஸைட் பண்ணும்னு. கண்டிப்பா அவளோட அன்புக்கு நான் தகுதியானவன் கிடையாது. அவள மாதிரி யாராலேயும் காத்திருக்க முடியாது. காதலிக்கவும் முடியாது.” என்றுவிட்டு அவளின் சட்டையின் முதலிரண்டு பட்டன்களை திறந்து, அவனுடைய செயினை கையிலெடுத்தான்.

அதை மெதுவாக வருடியவன், புன்னகையோடு அதில் அழுந்த முத்தமிட்டு, “ஒருதடவை உன்னை தொலைச்சிட்டேன்னு நினைச்சி துடிச்சி போயிட்டேன். இப்போ என் கைக்குள்ள இருக்க. என்னை நம்பு, உன்னை நல்லா பார்த்துப்பேன். அவ்வளவு லவ் பண்றேன்டி எலி.” விழிகளில் காதலோடு சொல்லி, அவளிதழில் அழுந்த முத்தமிட்டான்.

அலீஷாவோ சிலையாக சமைந்திருந்தாள். விழிகள் அவனுடைய வார்த்தைகளில் கலங்கிப்போயிருந்தன. அவன் மேல் அத்தனை காதல் கொண்டவள் அவள்! தாழ்வு மனப்பாண்மையில் காதலை புதைத்திருந்தவளின் காதல் மீண்டும் முளைக்கத் தொடங்க, ஆனால் மனதுக்குள் ஒரு சந்தேகம்.

“எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லு! மூனு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் வராத காதல் இப்போ மட்டும் வந்திருக்கு. என்னால நம்ப முடியல.” அவனை கூர்ந்து நோக்கியவாறு அவள் கேட்க, “நான் உன்னை காதலிக்கலயா? ஹாஹாஹா… காதலை மனசுக்குள்ள வச்சிக்கிட்டு ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பார்க்கும் போது நான் தவிக்குற தவிப்பு எனக்குதான் தெரியும்.” சிரிப்போடு சொன்னான் அகஸ்டின்.

அலீஷாவுக்கு ஆச்சரியம்!

“அப்..அப்போ ஏன் தினு?” அவள் திக்கித்திணறிக் கேட்க, ‘இல்லை’ எனும் விதமாக தலையாட்டி, “ஏன்னு என்னால சொல்ல முடியாது. சொன்னாலும் உனக்கு புரியாது எலி. பட், ட்ரஸ்ட் மீ, ஐ லவ் யூ.” அகஸ்டின் விழிகள் கலங்கச் சொல்ல, கோபமாக அவனை தள்ளிவிட்ட அலீஷா அங்கிருந்து வெளியேறியிருக்க, போகும் அவளையே வெறித்துப் பார்த்தான் அவன்.

அதேநேரம், சுவற்றில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூக்களிலான அலங்காரங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஆத்விக்கு நடப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்போதும் மனதிற்கு இதத்தை கொடுக்கும் பூக்கள் இப்போது அவளுக்கு அத்தனை எரிச்சலை உண்டாக்கியது.

அதை வெறுப்போடு பார்த்துவிட்டு எதேர்ச்சையாக திரும்பியவளின் பார்வைக்குள் சிக்கினான் அவளவன்.

சாதாரணமாக அலைப்பேசியை நோண்டியவாறு மஹி சோஃபாவில் அமர்ந்திருக்க, அவனையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அழுகைதான் வந்தது.

சோஃபாவில் அமர்ந்திருந்தவனுக்கும் மனதில் ஏதோ ஒரு உந்துதல். சட்டென நிமிர்ந்து மாடியை அவன் நோக்க, அவன் பார்ப்பதை உணர்ந்ததுமே ஆத்விக்கு இதுவரை விழியில் அடக்கி வைத்திருந்த விழிநீர் கன்னத்தின் வழியே உருண்டோடியது. ‘என் காதலை புரிந்துக்கொள்ள மாட்டாயா?’ என்ற ஏக்கம் வேறு அவளுடைய விழிகளில்.

அதை உணர்ந்தவன், அதற்கு மேல் அங்கு நிற்காது விறுவிறுவென வெளியேறியிருக்க, கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கி விழிநீரை துடைத்துவிட்டு திரும்பிய ஆத்வியையே பார்த்திருந்தார் மாயா.

அவரைப் பார்த்ததும் வராத புன்னகையை வரவழைத்து அவள் சிரிக்க, அவளருகே வந்தவர், “என்னாச்சுடா, ஏன் ஒரு மாதிரி இருக்க?” அவளுடைய தலையை வருடியபடி வாஞ்சையோடு கேட்க, “ஒன்னுஇல்லை அத்தை. கொஞ்சம் உடம்புக்கு முடியல அதான்.” சமாளிக்க முயன்றாள்.

இருந்தும் அவளை சந்தேகமாக நோக்கியவர், “நீ இப்படியில்லை ஆத்விம்மா. சாதாரணமா மஹிக்கு ஏதாச்சும் ஒரு நல்லது நடந்தாலே அவ்வளவு சந்தோஷப்படுவ. துள்ளிக் குதிச்சி ஆர்ப்பாட்டமே பண்ணிடுவ. பட், இப்போ உன் மஹிக்கு கல்யாணமே ஆக போகுது. ஆனா, எதுலேயும் கலந்துக்காம ரூமுக்குள்ளேயே அடைஞ்சிருக்க. நீ மனசார சிரிச்சி ரொம்ப நாள் ஆகுது.” அவளுடைய மனதை சரியாகக் கணித்துச் சொல்ல, அதிர்ந்து விழித்தாள் அவள்.

“அப்..அப்படியெல்லாம் இல்லை அத்தை. நான் ஹேப்பியாதான் இருக்கேன். நீங்க ஏன் அப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. தீராவுக்கு ஒரு நல்லது நடக்குதுன்னா எனக்கு சந்தோஷம் இல்லாம இருக்குமா? நீங்க வேணா பாருங்க, ரிசெப்ஷன்ல நான் ஆடுற டான்ஸ்ஸ பார்த்து அசந்து போக போறீங்க.” தட்டுத்தடுமாறி அவருடைய விழிகளை நேருக்கு நேர் பார்க்காது பேசி முடித்தவள், மேலும் பேசினால் மனதை கண்டுபிடித்துவிடுவாரோ என்ற பயத்தில் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

ஆனால், போகும் அவளை புரியாது நோக்கியவருக்கு, ஏற்கனவே இருந்த சந்தேகம் அதிகமாகித்தான் போனது.

இவ்வாறு நாட்கள் நகர்ந்து இன்று மாலை நிச்சயதார்த்தம் நாளை திருமணம் என்ற நிலையில், ஆத்வியோ கண்ணீரால் கரைந்துக்கொண்டிருந்தாள்.

‘இன்னொருத்திக்கு தாலி கட்டினதும் தீரா அவளுக்கு சொந்தமாகிடுவானா? நாம அவனை இழந்துருவோமா?’ உள்ளுக்குள் வேதனையோடு நினைத்தவாறு காலையிலிருந்து அறையிலேயே ஆத்வி அடைந்துக் கிடக்க, அதேசமயம் அந்த இன்னொருத்தியும் அடுத்து என்ன செய்வதென்ற குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள். அது வேறுயாருமல்ல சாட்சாத் நடாஷாவேதான்.

தனக்கு வந்த மின்னஞ்சலை விழிகள் விரிய பார்த்த நடாஷா, தொப்பென்று கட்டிலில் அமர்ந்து எச்சிலை விழுங்கிக்கொண்டாள். அவளுடைய பார்வையோ கட்டிலின் ஓரமாக வேலைப்பாடுகள் தெரிய விரிக்கப்பட்டு, நிச்சயதார்த்தத்திற்காக அவளுக்கென தயார் செய்யப்பட்ட லெஹெங்காவில் குழப்பத்தோடு படிந்தது.

இரு பெண்கள் இரு வேறுவிதமான மனநிலையில் தத்தளிக்க, மஹிக்கு எந்த கவலையும் இல்லை போலும்! அவன் பாட்டிற்கு காகிதங்களில் விதவிதமான உருவங்களை செய்கிறேன் பேர்வழியென்று முழு அறையையும் குப்பையாக்கியிருக்க, “மஹி…” தன் மகனை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்த மாயா நெற்றியில்  கை வைத்துவிட்டார்.

“என்னடா பண்ணி வச்சிருக்க? முருகா! போ, போய் அகி கூட இரு! சீக்கிரம் ரூம்ம க்ளீன் பண்ணிட்டு உன்னை கூப்பிடுறேன்.” மாயா அவனை அறையிலிருந்து விரட்ட, அவனோ அவரை விடாப்பிடியாகக் கட்டிலில் அமர வைத்து அவரின் மடியில் தலை சாய்த்துக்கொண்டான்.

“மஹி, எழுந்துரு! ஏகப்பட்ட வேலை இருக்கு. நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாடெல்லாம் சரியா நடக்குதான்னு பார்க்கணும்.” மாயா அவனை தள்ள, நிமிர்ந்து தன் தாயை முறைத்துப் பார்த்தவன், “ஒவ்வொரு வேலையையும் பர்ஃபெக்ட்டா செய்ய ஆளுங்கள அஸ்ஸைன் பண்ணியிருக்கீங்க. அப்றம், என்ன? ஒருவேள…” நாடியை தடவியவாறு ஒன்றை மனதில் வைத்து சந்கேகமாக இழுத்தான் மஹி.

அதில், “ஹிஹிஹி…” என அசடுவழிந்தவர், “நாளைக்கு மறுநாள் இத்தாலிக்கு கிளம்புறோம். எத்தனை வருஷ கனவு தெரியுமா? நானும் ரூஹியும் மட்டும். பிஸ்னஸ் டென்ஷன் இல்லாம எதைப் பத்தியும் யோசிக்காம நிம்மதியான ஒரு வாழ்க்கை.” மனதால் உணர்ந்து பேசிக்கொண்டேப் போக, சட்டென எழுந்தமர்ந்தவன், “மாம், நிஜமாவே போறீங்களா?” அதிர்ச்சியாகக் கேட்டான்.

“பின்ன? நான் வாழணும்னு ஆசைப்பட்ட வாழ்க்கை அது. மிச்ச மீதியிருக்குற வாழ்க்கைய என் ரூஹி கூட நிம்மதியா வாழ ஆசைப்படுறேன், இந்த பணம், ஆடம்பரம் எதுவும் இல்லாம. என்ட், இனி ஐரா கம்பனீஸ்ஸ அகி பார்த்துப்பான். ஐ க்னோ, அவனால முடியும். கண்டிப்பா பெரிய ஆளா வர போறான்.” புன்னகையோடு சொன்னவரின் விழிகள் எல்லோரையும் விட்டுச் செல்வதை நினைக்கையில் சற்று கலங்கித்தான் போக, அதைக் கவனித்தவன், அவரின் மனநிலையை மாற்ற எணணி, “அப்போ, எங்க எல்லாரையும் விட்டுட்டு ஜோலியா போய் லவ்ஸ்ஸு பண்ண போறீங்க.” என்றான் கேலியாக.

அதில் உதட்டைச் சுழித்து “அதான், நாளைக்கு கல்யாணம் ஆகுதுல்ல, நீ உன் பாட்டுக்கு உன் பொண்டாட்டி கூட போயிருவ. அப்றம் அவன் என்னடான்னா, மருமகள வீட்டுலயே கொண்டு வந்து சமையல் வேலைக்கு வச்சிருக்கான். கண்டிப்பா ஒருநாள் அவக்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க போறான். ஹாஹாஹா…” என்றுவிட்டு சிரித்த மாயா, பின் ஏதோ யோசித்து “பட், ஆத்வியோட வருங்கால துணையும் யாருன்னு தெரிஞ்சா ரொம்ப ஹேப்பியா இருக்கும். உன் கல்யாணத்தோட அவ கல்யாணத்தையும் பண்ணியிருக்கலாம். தருண், சஞ்சய் அண்ணா கல்யாணம் ஒரே மேடையில நடந்த மாதிரி.” என்றார் யோசனையோடு.

ஆனால், மஹியின் முகமோ சட்டென மாறிவிட்டது. எதுவும் பேசாது எங்கோ வெறித்தபடி இறுகிய முகமாக அமர்ந்திருந்தான்.

அவனை கவனித்தவர், “கண்ணா, உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்தானே?” கூர்மையான பார்வையோடுக் கேட்க, தன் தாயின் முகமாற்றத்தை உணர்ந்து தன் முகபாவனையை உடனே மாற்றியவன், “ஐ அம் ஹேப்பிம்மா.” என்று சிரிப்போடுச் சொல்ல, அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அறையிலிருந்து வெளியேறினார் மாயா.

ஆனால், தன் மகனின் மனநிலையை உணராதவரா அவர்! எதுவோ ஒன்று தவறாகத் தோன்ற, யோசனையில் புருவத்தை நெறித்துக்கொண்டார்.

நேரமும் காலில் சக்கரத்தை கட்டியது போல் ஓடி அந்தி மாலையையும் நெருங்கிவிட, நிச்சயதார்த்தத்திற்காக ஹோலை பூக்களால் அலங்கரித்து நிச்சயதார்த்தம் முடிந்ததும் நடக்கவிருக்கும் கேளிக்கை விருந்துக்காக வீட்டை சுற்றியுள்ள வளாகத்தை பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரித்திருந்தனர்.

உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகள் என ஃபுவே முறையில் வெளியில் உணவுகள் வைக்கப்பட்டிருக்க, இங்கு ஒவ்வொருவரும் நிச்சயதார்த்திற்காக தயாராகி அங்குமிங்கும் பம்பரம் போல் சுழன்றுக்கொண்டிருந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் இரு வீட்டாற்களும் எதிரெதிரே அமர்ந்திருக்க, புரோகிதர் நிச்சயதார்த்தப் பத்திரிகை வாசிக்க, நிச்சயதார்த்தம் இனிதே நிறைவு பெற்றது. ஆனால், அடுத்தநொடி தன் கையில் ரோஹன் கொடுத்த மோதிரத்தை இறுகிய முகமாக பார்த்தவாறு நின்றிருந்தான் மஹி.

அவனுடைய பார்வையோ அங்கு ஓரமாக அமர்ந்திருந்த ஆத்வியின் மீது படிந்தது. அவளுக்கும் அழுகை தொண்டையை அடைக்க, கீழுதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கிக்கொண்டவள், நடப்பதை பார்க்க விரும்பாது விழிகளை இறுக மூடி குனிந்துக்கொண்டாள்.

அவளின் மனப்போராட்டங்களை மஹியால் பார்க்கவே முடியவில்லை. ‘அவசரப்பட்டுவிட்டோமோ?’ என்று கூட ஒருகணம் நினைத்துக்கொண்டான்.

பக்கத்திலிருந்து கீர்த்தியும், “மருமகனே! என்ன பார்த்துக்கிட்டு இருக்க, மோதிரத்தை போடு!” மஹியை தட்டிச் சொல்ல, விழிகளை மூடி ஆழ்ந்த பெருமூச்செடுத்தவன், நடாஷாவின் மோதிரவிரலில் மோதிரத்தை போட்டுவிட்டான்.

ஆனால், நடாஷாவின் மனநிலையோ பல உணர்ச்சிகளுக்கு மத்தியில் அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. வராத புன்னகையை வரவழைத்து கஷ்டப்பட்டு சிரித்துக்கொண்டிருந்தாள் அவள்.