விழிகள் 28

eiDTDHW48177-e4dd6dac

விழிகள் 28

நிச்சயதார்த்தம் முடிந்து மோதிரம் மாற்றிக்கொள்ளும் சடங்கும் இருவரின் இருவேறுவிதமான மனநிலையில் எப்படியோ நடந்து முடிய, அடுத்து தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேளிக்கை விருந்தில் கலந்துக்கொண்டனர் மொத்தப்பேரும்.

தொழில்துறை நண்பர்கள், சொந்தங்கள் என கேளிக்கை விருந்து ஆட்டம், பாட்டத்தில் கலைக்கட்ட, ரோஹனும் மாயாவும் கூட இசைக்கேற்ப  நடனமாடி தம் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ஆனால், இதற்கெல்லாம் நேரடியாக சம்மந்தப்பட்ட இருவரோ தமக்கும் நடப்பதற்கும் சம்மந்தமேயில்லை என்பது போல் நின்றிருந்தனர்.

ஆனால், சுற்றியிருப்பவர்கள் விட்டுவிடுவார்களா என்ன?

மஹியையும் நடாஷாவையும் வற்புறுத்தி மேடைக்கு அனுப்ப, ‘இருக்குற டென்ஷன்ல இவனுங்க வேற!’ என்று நடாஷாவுக்கு இருந்ததென்றால், மஹிக்கோ ‘ரொம்ப அதிகமா போறோமோ?’ என்றிருந்தது, ஆத்வியின் முறைப்பை பார்க்கும் போது.

ஏதேதோ யோசித்தவாறு நடாஷா தயக்கமாக தன் தந்தையைப் பார்க்க, மனோகரோ விழிகளாலே முறைத்துக்கொண்டிருந்தார். அடுத்து என்ன செய்வது, ஏது செய்வதென்று தெரியாது பெக்க பெக்கவென விழித்துக்கொண்டு அவள் நிற்க, மற்றவர்களின் சந்தேகப்பார்வைக்கு உள்ளாகும் முன் மஹியே நடாஷாவின் மெல்லிடையை பிடித்து நடனமாட ஆரம்பித்தான்.

எல்லோரும் கரகோஷம் எழுப்ப, ஒருத்தி மட்டும் காதில் புகை வராத குறையாக இருவரையும் உக்கிரமாக முறைத்தவாறு அமர்ந்திருந்தாள். விட்டால் விழிகளாலேயே நடாஷாவை எரித்துவிடுவாள் போலும்!

ஆத்வியின் முகபாவனைகளை பக்கத்திலிருந்து அடக்கப்பட்ட சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்த அகஸ்டின், மெல்ல அவள் காதருகில் குனிந்து “இந்த மாதிரி பசங்களே இப்படிதான் ஆத்விம்மா. பாரேன், அவ இடுப்ப பிடிச்சிக்கிட்டு என்னாம்மா ஆடுறான்! அம்புட்டு குஷி மாப்பிள்ளைக்கு. ஆனா, உன்னை நினைச்சாதான் பாவமா இருக்கு. ஐ அன்டர்ஸ்டேன்ட் யூவர் வயித்தெரிச்சல். ஒருவேள, நான் மட்டும் உன் இடத்துல இருந்திருந்தா…” எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாகப் பேச, சட்டென அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் அவள்.

அதில் உள்ளுக்குள் சிரித்தவன், “நான் மட்டும் உன் இடத்துல இருந்திருந்தா எனக்கு பிடிச்ச வாழ்க்கைய யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அவனுக்கு பிடிக்குதோ, இல்லையோ? என் கூடதான் குடும்பம் நடத்தணும்.” அழுத்தமாகச் சொல்ல, அதில் புருவத்தை சுருக்கி சற்றுநேரம் யோசித்தவள், பின் சடாரென எழுந்து மஹியை நோக்கிச் சென்றாள்.

அதேநேரம், அகஸ்டினுக்கு ஒரு குறுஞ்செய்தி வர, அதைப் பார்த்தவன் சிரிப்போடு, “பர்ஃபெக்ட் கபிலா!” தன் வேலையாளை பாராட்டியவாறு எழுந்து தன்னவளைத் தேடி வீட்டிற்குள் நுழைந்தான்.

தோட்டத்தில் விருந்தென்பதால் வீடே வெறிச்சோடி போயிருக்க, சமையலறையில் மட்டும் அலீஷாவுடன் சிலபேர் நின்றிருந்தனர். அங்கு வேகமாக வந்த கபிலன், “என்ன பண்றீங்க? அங்க கெஸ்ட்டுக்கு தேவையானதை செர்வ் பண்ண ஆளுங்க கம்மியா இருக்காங்க. மொதல்ல மொத்தப்பேரும் பார்ட்டி நடக்குற இடத்துக்கு போங்க.” என்றுவிட்டு எல்லோருடன் வெளியேறப்போன அலீஷாவை அழைத்தான்.

அவளும் அவனை கேள்வியாக நோக்க, “நீ போயிட்டா யாரு இங்க இருக்குற பாத்திரங்கள கழுவுறது, நானா? போ, போய் ஒழுங்கா சுத்தமா பாத்திரங்கள தேய்ச்சு கழுவு!” மிரட்டலாக கபிலன் சொல்லிவிட்டு, ‘அப்பாடா!’ உள்ளுக்குள் நிம்மதியாக நினைத்தவாறு வெளியேற, அலீஷாவுக்கோ கபிலனின் மண்டையை பொழக்க வேண்டுமென்ற ஆத்திரம்.

‘ச்சே! ரொம்பதான் பண்றான். வெளியில என்கிட்ட சிக்காமலா போக போற? அப்போ இருக்குடா உனக்கு.’ உள்ளுக்குள் பொறுமியவாறு பற்களைக் கடித்துக்கொண்டவள், சில பாத்திரங்களை டிஷ்வோஷில் போட்டுவிட்டு தன்னிலையை நினைத்து ஓரிடத்தையே வெறித்தவாறு நின்றிருந்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் அவளுடைய இடையை வளைத்து அவள் கழுத்தில் அகஸ்டின் முகத்தை புதைக்க, முதலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், பின் யாரென உணர்ந்து பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தாள்.

அதேநேரம், மஹியை நோக்கிச் சென்ற ஆத்வி, ஆடிக்கொண்டிருந்த இருவருக்குமிடையில் புகுந்து “ஷெல் வீ டான்ஸ்?” தன்னவனைப் பார்த்துக் கேட்க, விட்டால் போதுமென்று நினைத்த நடாஷா உடனே, “யூ கேர்ரி ஆன்!” என்றுவிட்டு விலகி நிற்க, தன்னவளை ஆழ்ந்து நோக்கியவன், அவளின் விழிகளில் புதிதாகத் தெரிந்த தீவிரத்தை புருவத்தை நெறித்து யோசித்தவாறு, அவளிடையை அழுத்தமாகப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.

இசைக்கேற்ப இருவரும் நடனமாட, இருவரும் ஒருவரின் விழிகளை மற்றவர் பார்த்தவாறு ஆடத்தொடங்கினர்.

அவளை இறுகிய முகமாக நோக்கிய மஹி, “உனக்கு கொஞ்சம் கூட தப்பாவே தெரியல்லையா?” ஆடிக்கொண்டே கோபமாகக் கேட்க, “எது தப்பு?” பதிலுக்கு அலட்சியமாகக் கேட்டாள் ஆத்வி.

“ஆட வேண்டியவள நகர்த்திட்டு நீ ஆடிக்கிட்டு இருக்க? பொண்ணு வீட்டுக்காரங்க தப்பா நினைக்க மாட்டாங்களா, அறிவில்லையா உனக்கு?” சரமாரியாக திட்டிக்கொண்டே இசைக்கேற்ப அவளை சுழற்ற, ஒரு சுற்று சுற்றி அவனின் விழிகளை நேருக்கு நேராக பார்த்தவள், “யாரு என்ன நினைச்சா எனக்கென்ன? நான் எப்படி ஃபீல் பண்ணுவேன்னு நீ யோசிச்சியா, இல்லல்ல?” பதிலுக்கு கடிந்துக்கொண்டாள்.

அதில் “வாய் ரொம்ப நீளுது.” தன்னவளை முறைத்தவாறு அவன் சொல்ல, “என்னால உன்னை விட்டுக்கொடுக்க முடியாது தீரா, எனக்கு நீ வேணும். அது உனக்கு புரியுதில்லையா?” தழுதழுத்த குரலில் கேட்டாள் ஆத்வி.

அதில் அமைதியாக அவளை ஒரு பார்வைப் பார்த்தவன், பின்னாலிருந்து அணைத்தவாறு அவளுடன் ஆடிக்கொண்டே, “டாட் அவரோட இன்டஸ்ட்ரில நான் பெருசா சாதிக்கணும்னு நினைச்சாரு. மாம் நான் அவங்களோட பிஸ்னஸ்ஸ பொறுப்பெடுத்துக்கணும்னு ஆசைப்பட்டாங்க. பட், நான் இரண்டு துறைக்குமே போகல. எனக்கு பிடிச்சதை தேர்ந்தெடுத்தேன். இப்போவும் எனக்கு பிடிச்சதை தேர்ந்தெடுத்து அவங்கள அவமானப்படுத்த நான் விரும்பல.” தேய்ந்த குரலில் சொல்ல, விருட்டென அவனை வேதனையோடு நோக்கினாள் அவள்.

“அப்போ…அப்போ நான்? என்னை பத்தி யோசிக்கவே மாட்டியா? நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்டா.” விழிகள் கலங்க ஆத்வி சொல்ல, நடனத்தை நிறுத்தி “இட்ஸ் டூ லேட்.” என்ற மஹி, அதற்குமேல் அங்கு நிற்காது விறுவிறுவென செல்ல, கண்ணீரை வெளிவர விடாது இமைசிமிட்டி அடக்கிக்கொண்டவள், யாரையும் பார்க்காது அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

அதேசமயம், தன் இடையை வளைத்த கரத்தில் திடுக்கிட்ட அலீஷா, பின் பக்கவாட்டாகத் திரும்பிப் பார்க்க, அவளை தன் முகம் நோக்கித் திருப்பிய அகஸ்டின் இரண்டடி பின்னால் நகர்ந்து வெளியிலிருந்து கேட்ட இசைக்கேற்ப அவளின் இடையை வளைத்து மெல்ல உடலை அசைத்து நடனமாட ஆரம்பித்தான்.

அலீஷாவும் மறுக்கவில்லை. அவனின் அசைவுக்கேற்ப அமைதியாக அவளும் ஆட, தன்னவளின் நெற்றியோடு நெற்றி முட்டி, “எலி, என்கிட்ட உன் லவ்வ சொன்ன மூமென்ட் உனக்கு நியாபகம் இருக்கா?” குறும்புச் சிரிப்போடு அவன் கேட்க, அகஸ்டினின் நினைவுகளோடு சேர்த்து அலீஷாவின் நினைவுகளும் அந்த தருணத்தை நினைத்துப் பார்த்தது.

அன்று அலுவலக கேளிக்கை விருந்தின் போதுதான் அலீஷா அகஸ்டினுடனான நடனத்தில் தன் காதலை வெளிப்படுத்தியிருந்தாள். அதை நினைத்துப் பார்த்த இருவருக்கும் இதழில் மெல்லிய புன்னகை.

“எலி, யூ க்னோ வாட்? அப்போ நீ ரொம்ப அழகா இருந்த. மறுபடியும் அப்படி ஒரு கோஸ்டியூம்ல உன்னை பார்க்கணும்னு ஆசையா இருக்கு.” அகஸ்டின் விழிகளில் ஆர்வத்தோடுச் சொல்ல, எந்த பதிலும் பேசவில்லை அலீஷா. அமைதியாக தன்னவனையே பார்த்திருந்தாள்.

அவள் விழிகளில் தெரிந்த வெறுமையில் உதட்டைச் சுழித்தவன், “உன்னால என்னை எப்போவுமே வெறுக்க முடியாது. என்னை ரொம்ப காதலிக்குற, அப்படிதானே?” அவளை கைகளில் தாங்கி பதிலுக்காகக் காத்திருக்க, கீழே விழாதிருக்க அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டவள், “தெரியல தினு. அன்னைக்கு அம்மா சொன்னாங்க, இது பகல் கனவுன்னு. அப்போ புரியல. இப்போ புரியுது. உனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவ நான். என்னால உனக்குதான் அசிங்கம்.” தேய்ந்த குரலில் சொன்னாள்.

சட்டென அவளை தூக்கி தன் முகத்தருகே அவள் முகத்தை கொண்டு வந்தவன், “அன்னைக்கே சொன்னேன், தகுதி பணத்துல இல்லைன்னு.” அழுத்தமாகச் சொல்ல, “வாயால சொல்லலாம். ஆனா, நடைமுறைக்கு சாத்தியமில்லை மிஸ்டர்.அகஸ்டின்.” கேலியாகச் சொன்னாள் அலீஷா.

அவளின் இடையை அழுத்தமாகப் பற்றி மேலும் தன்னோடு இறுக்கியவன், “நான்தான்டி எங்க நீ என்னை விட்டுட்டு போயிருவியோன்னு பயப்படணும். உனக்கு பொருத்தமே இல்லாதவன் நான்தான்.” அவள் நெற்றியோடு நெற்றி முட்டிச் சொல்ல, “இப்போவாச்சும் காரணத்தை சொல்லு தினு! ஏன் அப்போ காதலிச்சும் அதை சொல்லாம என்னை விட்டு விலகிப்போன?” என்றுகேட்டு அவனை கேள்வியாக நோக்கினாள்.

ஆனால், சிறிதுநேரம் அகஸ்டினிடத்தில் அமைதிதான்.

“ஆரம்பத்துல உன்னை பிடிக்கல. நீ காதலிக்கிறதா சொன்னதும் உன்னை  திட்டி சண்டை போடுவேன். ஆனா, உன்மேல ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மைதான். வெள்ளைசுடிதாருல அடிக்கடி உதட்டை ஈரமாக்கிக்கிட்டு, கையை பிசைஞ்சிக்கிட்டு, கருமணி அங்க இங்கன்னு தடுமாற தேவதை மாதிரி இருந்தவ மேல அப்போவே ஒரு ஈர்ப்பு. ஆனா, உன்னை எப்போ காதலிக்க ஆரம்பிச்சேன்னு தெரியல. அது தெரிஞ்சதும் எனக்குள்ள பயமும் ஆரம்பிச்சது.” அகஸ்டின் தழுதழுத்த குரலில் சொல்ல, “காரணத்தை சொல்லு!” அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டாள் அலீஷா.

ஆனால், அப்போதும் அவன் சொன்னபாடில்லை. “ஒருவேள, அதைப் பத்தி நான் சொன்னா நீ என்னை விட்டு போயிருவியோன்னு…” அகஸ்டின் இழுக்க, அதற்குமேல் அவனுடைய கைவளைவுக்குள் இருக்கவில்லை அவள்.

சடாரென விலகி நின்றவள், “போதும். எதுவும் பேசாத! என்ன, விளையாடிக்கிட்டு இருக்கியா? அம்புட்டு வசதியான பையன் ஒரு மிடில் க்ளாஸ் பொண்ணை… இல்லை இல்லை ஒரு திருடிய எப்படி காதலிப்பான்? அந்த காரணத்தை சொல்ல அசிங்கப்பட்டு சொல்லாம சமாளிச்சிக்கிட்டு இருக்க. இதுக்குமேல நடிக்காத அகஸ்டின்!” எதிரிலிருப்பவனின் மனநிலையை கொஞ்சமும் யோசிக்காது கத்திவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறியிருக்க,

அவளுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது, “ஷீட்!” கோபமாக தரையை காலால் உதைத்தான் அவன்.

இங்கு இவ்வாறு இருக்க, தலையைத் தாங்கியவாறு கட்டிலில் அமர்ந்திருந்தான் மஹி. சரியாக அவனுடைய அறைக்கதவு தட்டப்பட, ‘ச்சே!’ என்று சலித்தவாறு எழுந்துச் சென்று கதவைத் திறந்தவன், வெளியில் யாருமில்லாததைப் பார்த்து புருவத்தை சந்தேகமாக நெறித்தான்.

சிலநொடிகள் விழிகளை அங்குமிங்கும் சுழலவிட்டுத் தேடிய மஹி, யாரையும் காணாது உள்ளே செல்லப் போக, ஏதோ ஒரு மன உந்துதல். சட்டென அவனுடைய பார்வை தரையை நோக்க, அவனுடைய அறைக்கதவுக்கருகில் வர்ண காகிதங்கள் நிறைந்த கண்ணாடி ஜார்.

அதையெடுத்துப் பார்த்தவனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அதிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து யோசனையோடு அதில் எழுதப்பட்டிருந்ததை மஹி வாசிக்க, அடுத்தகணம் அவனுடைய விழிகள் சாரசர் போல் விரிந்தன.

“இரண்டு மாசமா என்னை கண்டுக்கவே மாட்டேங்குற. எப்போதான் என் லவ்வ வெளிப்படையா உன்கிட்ட சொல்றுறது தீரா. மிஸ் யூ…”  அதில் எழுதப்பட்டிருந்த வசனத்தை வாசித்தவனுக்கு அப்போது புரிந்தது, இந்த ஜாருக்கு சொந்தமானவள் யாரென்பது.

அறைக்குள் எடுத்துச் சென்றவன், ஒவ்வொரு காகிதங்களா வாசிக்கத் தொடங்க, அவனுடைய விழிகள் விழிநீரில் மிதக்க ஆரம்பித்தன. அன்று தன்னவளிடத்தில் காதலை சொல்ல முடியாத சந்தர்ப்பத்தில் மனதில் தோன்றியதையெல்லாம் காகிதங்களில் மஹி எழுதி வைத்தது போன்று இன்று தன்னவனிடத்தில் சொல்ல நினைத்ததை காகிதங்களில் அவனைப் போன்று கொட்டி வைத்திருந்தாள் ஆத்வி.

ஒவ்வொன்றையும் வாசித்த மஹிக்கு ஒருகட்டத்தில் அழுகையை அடக்கவே முடியவில்லை. கூடவே, தன்னவளின் செயலையும் பேச்சையும் நினைத்து சிரிப்பு வேறு அவனிதழில்.

அன்றையநாள் பலபேரின் கண்ணீரில் கரைந்து அடுத்தநாளும் விடிய, இன்னும் முகூர்த்தத்திற்கு இரண்டுமணி நேரமே இருந்த தருணத்தில் மாயாவின் வீடே கலவரத்தில் இருந்தது.

“எங்க உங்க பொண்ணு?” தன்னெதிரே நின்றிருந்த மனோகரனைப் பார்த்து ரோஹன் அழுத்தமாககக் கேட்க, அவருக்கோ என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அதுவும் ரோஹனின் கோபப்பார்வையில் அவருக்கு வாயில் வார்த்தைகள் வந்தால்தானே!

“அந்த கிறுக்கிக்கு படிச்சி படிச்சி சொன்னேன். என் பேச்ச மதிக்காம நைட்டோட நைட்டா கிளம்பி போயிட்டா. நானும் அஜாக்கிரதையா இருந்துட்டேன். என்னை மன்னிச்சிருங்க மிஸ்டர்.ரோஹன்.” திக்கித்திணறி மன்னிப்பு கேட்ட மனோகரனுக்கு, வீட்டை விட்டு ஓடிய தன் மகளை நினைத்து ஆத்திரம் பொங்கியது.

“எவ்வளவு சுலபமா மன்னிப்பு கேக்குறீங்க. இப்போ மட்டும் கல்யாணம் நின்னுடுச்சுன்னு மீடியாவுக்கு தெரிஞ்சா, எங்க பையன்  வாழ்க்கை என்னாகுறது? என் பையனதான் மிஸ்டர் தப்பா பேசுவாங்க. எங்க சைதன்யா குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.” ரோஹன் கடுகடுக்க, “எங்க மஹேஷ்வரி குடும்பத்துக்கும்.” பதிலுக்கு குறுக்கிட்டுச் சொன்னார் மாயா.

அதில், “இப்போ இது ரொம்ப முக்கியம்!’ என்ற ரீதியில் தன் மனைவியை முறைத்தவர், மேலும் ஏதோ பேச வர, ரோஹனின் தோளில் கை வைத்த தருண், “போதும்டா, விடு! அந்த பொண்ணு என்ன எவனோ ஒருத்தன இழுத்துட்டா ஓடிச்சு? ஏதோ இத்தனைநாள் கிடைக்கணும்னு கனவு கண்டுக்கிட்டிருந்த யூனிவர்சிட்டில சீட் கிடைச்சிருக்கு, இப்போ கல்யாணம் பண்ணா எல்லாமே சொதப்பிரும்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு அந்த வாய்ப்பை மிஸ் பண்ண விரும்பாம போயிருக்கா. நம்ம பையனுக்கு பொண்ணா கிடைக்காது?” தன் நண்பனை சமாதானப்படுத்த முயன்றார்.

பின் மனோகரின் புறம் திரும்பியவர், “உங்க பொண்ணு ஒரு நல்ல வாய்ப்புக்காகதான் போயிருக்கா. அவ போன நேரம்தான் தப்பாயிருக்கே தவிர, அவ தேடிப்போன விஷயம் தப்பில்லை. சோ, கோபப்படாம உங்க பொண்ண கான்டேக்ட் பண்ணி பேசுங்க. இப்போ கூட உங்கள காயப்படுத்திட்டோம்னுதான் நினைச்சு ஃபீல் பண்ணிக்கிட்டு இருப்பா.”  புரியும்படிச் சொல்ல,

“அவ அன்னைக்கு இதைப்பத்தி சொல்லும் போது அவக்கிட்ட பொறுமையா எடுத்துச் சொல்லியிருக்கணும். நான்தான் எங்க உங்க சம்மதம் விட்டுப்போயிடுமோன்னு ரொம்ப கடுமையா நடந்துக்கிட்டேன். கண்டிப்பா உங்க பையனுக்கு என் பொண்ண விட நல்லா பொண்ணா கிடைப்பா. என்னை எல்லாரும் மன்னிச்சிருங்க!” தயக்கமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து அவர் வெளியேற, ரோஹனோ தன் மகனைதான் பரிதாபமாகப் பார்த்தார்.

மஹிக்கு என்ன உணர்வென்றே தெரியவில்லை. தன்னவளின் காதலின் ஆழத்தை முழுமையாக உணர்ந்தவனுக்கு இத்திருமணத்தை நிறுத்த வழிதான் தெரியவில்லை. விடிய விடிய தூங்காது யோசித்துக்கொண்டிருந்தவனின் காதில் தேனாக வந்து பாய்ந்தது, மணப்பெண் ஓடிப்போன செய்திதான்.

உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டாலும் வெளியில் சோகமாக மஹி தன் தந்தையைப் பார்க்க, அப்படியே தொப்பென்று சோஃபாவில் அமர்ந்தவரின் தோளில் ஆறுதலாக கை வைத்தார் சஞ்சய்.

“நம்ம பையன் ஆசையா ஒரு பொண்ண காதலிச்சான். அவ என்னடான்னா அவனோட அருமை தெரியாம விட்டுட்டு போயிட்டான்னா, இப்போ கல்யாணம் வரைக்கும் வந்து பொண்ணு ஓடிப்போயிருச்சு. கடவுளே!” கீர்த்தி புலம்ப, ஆத்வியோ அமைதியாகவே நின்றிருந்தாள்.

“இப்போ எதுக்கு ஒப்பாரி வைக்கிற? அந்த இரண்டு பொண்ணுங்களும் நம்ம மஹிக்கான துணை இல்லையோ, என்னவோ? ஒருவேள, நம்ம பொண்ணுதான் மஹிக்கு வாழ்க்கப்படணும்னு இருக்கோ, அந்த கடவுளுக்குதான் தெரியும். என் பொண்ண மஹிக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்குறதுல எனக்கு முழு சம்மதம்.” தருண் படபடவென பேச, “அய்யோ! தருண் நீதான் என் சம்மந்தின்னு தெரியாம இத்தனைநாள் ஊர் முழுக்க பொண்ணு தேடி அலைஞ்சிருக்கேனே…” பதிலுக்கு உற்சாகக்குரலில் சொன்னார் மாயா.

“அட ஆமா! மஹி அம்மா பேச்சை மீறாத அம்மாபுள்ள. எங்க முடிவுதான் அவன் முடிவும். அப்றம், ஆத்வி … அவ சின்னபொண்ணு. அவளுக்கென்ன தெரியும்.” சஞ்சய்யும் பதிலுக்கு ஏதேதோ பேச, ரோஹனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

மஹியும் ஆத்வியும் விழி விரித்து நடப்பதை நோக்க, கைக் கட்டி நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அகஸ்டின், அடக்கப்பட்டச் சிரிப்புடன் மாயாவைப் பார்த்து கண்சிமிட்டினான்.

மாயாவும் உள்ளுக்குள் சிரித்தவாறு  தருணையும் சஞ்சையையும் பார்த்து கண்சிமிட்ட, உள்ளுக்குள் வில்லத்தனமாக சிரித்துக்கொண்டனர் இருவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!