விழிகள் 29

eiEEGXC85131-f3fe4bc6

எப்படியோ நடாஷாவுக்கும் மஹிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த மேடையில் மஹிக்கு பக்கத்தில் ஆத்வி அமர்ந்திருக்க, நேற்று நிச்சயதார்த்தம் வந்து இன்று திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அத்தனை அதிர்ச்சி.

‘நிச்சயதார்த்தத்துல பார்த்த பொண்ணா இது?’ என்ற ரீதியில் ஆத்வியையே அவர்கள் குறுகுறுவென பார்க்க, இதில் பத்திரிகையாளர்களை சொல்லவா வேண்டும்? மணப்பெண் மாறியதில் ஒன்றை எதுவோ ஒன்றுக்கு சம்மந்தப்படுத்தி தங்களின் இஷ்டத்திற்கு நிகழ்ச்சிகளில் பேசி வைத்தனர்.

ஆனால், குடும்பத்தினரோ மற்றவர்களின் பார்வைகளையும் பத்திரிகையாளர்களின் வதந்திகளையும் கொஞ்சமும் கண்டுக்கொள்ளவில்லை. தங்கள் வாரிசுகளின் திருமண சந்தோஷத்தில் மிதந்துக்கொண்டிருந்தனர்.

இதில் கீர்த்திக்கு அத்தனை ஆனந்தம். ஏற்கனவே, தன் மகளுக்கு மஹியை திருமணம் செய்து வைக்க வேண்டுமென்பது அவரின் ஆழ்மனது ஆசை. அதை அலைஸ்ஸிடம் கூட அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால், அதன்பிறகான சம்பவங்களில் அதை முற்றாக அவர் மறந்திருக்க, இன்று அவர் நினைத்தது போல அவரின் மகள் அவர் ஆசைப்பட்ட பையனுக்கே மனைவியாகப் போகிறாள்.

விழிகள் கலங்க, மாயாவை புன்னகையோடு கீர்த்தி நோக்க, அவரை அணைத்துக்கொண்டவர், “நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் போன்டா. நீ எனக்கு சம்மந்தி ஆகுவேன்னு நான் நினைச்சும் பார்க்கல.” இளம்வயதில் தன் தோழியை அழைக்கும் செல்லப்பெயர் கொண்டு அழைத்து உற்சாகச் சொல்ல, பதிலுக்கு மாயாவை அணைத்து, “நானும் எதிர்ப்பார்க்கல ஜிலேபி. காலம் ரொம்ப வேகமா போயிருச்சு. ஏதோ இப்போதான் உன்னை கொலேஜ் ஹோஸ்டல்ல பார்த்த மாதிரி இருக்கு.” பழைய நினைவில் சிரிப்போடுச் சொன்னார் கீர்த்தி.

மாயாவும் சிரித்துக்கொண்டு மணமேடையில் அமர்ந்திருக்கும் தன் மகன், மருமகளை நோக்க, அங்கு சுற்றியிருப்பவர்களின் மனநிலைக்கு மாறாக தன் பக்கத்திலமர்ந்திருப்பவனை முறைத்துக்கொண்டிருந்தாள் ஆத்வி. ஆனால், மஹியோ ஓரக்கண்ணால் தன்னவளையே ரசித்துக்கொண்டிருந்தான்.

அவனுக்கோ நடப்பது கனவோ? எனத் தோன்றியது. ஆரம்பத்தில் அவளை ஒருதலையாகக் காதலித்தவன் அவன். அவளுடைய காதல் வேறொருவன் மீதிருப்பதை அறிந்து துடித்துப் போனான். அவன் மீது அவனவளுக்கு காதல் வந்த சமயம் அதை ஏற்காது தவறான புரிதலில் இருந்தான்.

இப்போது இத்தனை தடைகளைத் தாண்டி அவனவள் மணமேடையில் அவன் பக்கத்தில். அவனால் நடப்பதை நம்பவே முடியவில்லை. ஓரக்கண்ணால் அவளை ரசித்துக்கொண்டிருந்தவன், அவள் முறைப்பதை உணர்ந்து சட்டென்று முகத்தைத் திருப்பி திருதிருவென விழித்தான். இதில் அவனுக்கு சிரிப்பு வேறு முட்டிக்கொண்டு வந்தது.

மணமேடையில் இருவருக்குமிடையில் நடக்கும் கூத்தை மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு வேஷ்டி சட்டையில் நெற்றியில் குங்குமத்துடன் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் அகஸ்டின். அவனுக்கு பக்கத்தில் தருண் வந்து நிற்க, அவரைப் பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவன், “வெல்டன் மாம்ஸ்.” என்றான் சிரிப்போடு.

அதில் புரியாது கேள்வியாக அவனை அவர் நோக்க, “ஆல் டீடெய்ல்ஸ் ஐ க்னோ. என்னெல்லாம் திருகுதாளம் பண்ணி மணப்பொண்ண மாத்திட்டீங்க.” குறும்புச் சிரிப்போடு அகஸ்டின் சொல்ல, முதலில் விழி விரித்து பின் கெத்தாக புன்னகைத்துக்கொண்டு, “பின்ன, என் பொண்ணு ஆசைப்பட்டா விட்டுடுவேனா?” என்ற தருணிற்கு அன்று தோட்டத்தில் வைத்து மஹியின் சட்டையைப் பிடித்து ஆத்வி தன் காதலை வெளிப்படுத்தி பேசிய வார்த்தைகள்தான் நியாபகத்திற்கு வந்தன.

“இதுல ப்ளேன்னர் நான்தான். பட், ப்ளேன் எக்ஸ்ஸிக்யூட்டர் என் பேபி மாயாதான். அந்த யூனிவர்சிட்டி செயார்மென்கிட்ட பேசி அந்த பொண்ணுக்கு சீட்டு எடுத்து கொடுத்திருக்கா. சோ, இப்போ அந்த பொண்ணு ஹேப்பி, மஹிய காதலிச்ச என் பொண்ணும் ஹேப்பி, ஆல் ஃபேலி ஹேப்பியோ ஹேப்பி.” தருண் சொல்லிச் சிரிக்க, அதில், “இந்த வயசுல இரண்டு பேரும் என்ன வேலையெல்லாம் பார்க்குறீங்க…” ஒற்றைப் புருவத்தைத் தூக்கி பொய்யாக முறைத்தான் அவன்.

ஆனால் அவரோ, “உன் வயசுல நாங்க பண்ணாத சேட்டையே இல்லை. நாங்கெல்லாம் யாரு?” கெத்தாக கோலரை தூக்கிவிட்டுக்கொண்டுச் செல்ல, அகஸ்டினோ வாயைப் பொத்திச் சிரித்துக்கொண்டான்.

அடுத்த சில நிமிடங்களில் முகூர்த்த நேரமும் வர, தாலியை கையிலெடுத்து மஹியிடம் நீட்டிய ஐயர், “கெட்டிமேளம் கெட்டிமேளம்…” என்று சொல்ல, தாலியை வாங்கியவன், தன்னவளை காதலாக நோக்கினான்.

எல்லோரும் அர்ச்சதை தூவ, தன்னவளின் கழுத்தில் மங்கள நாணை அணிவித்தவனுக்கு விழிகள் சற்று கலங்கியிருந்தது. முதல் தடவை “லவ் யூ ஆதி…” தன் காதலை மஹி வெளிப்படையாக தன்னவளிடம் சொல்ல, சட்டென விழிகளை உயர்த்தி தன்னவனை நோக்கியவள், பின் முறைத்து “ஓஹோ! சாருக்கு லவ்வு கேக்குதா? என்னை எப்படியெல்லாம் அழுக விட்டிருப்ப. இன்னைக்கு நைட் இருக்குடா உனக்கு.” பற்களைக் கடித்துக்கொண்டுச் சொன்னாள்.

அதில் அதிர்ந்து விழித்தவன், “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தவாறு விலகி அமர, அவனின் திருட்டுமுழியில் மேலும் கடுப்பாகி உக்கிரமாகப் பார்த்தாள் அவள்.

மாயாவோ விழிகள் கலங்க அர்ச்சதைத் தூவி, “வாழ்நாள் பூரா ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்காம நிறைய காதலிக்கணும்.” ஆசிர்வதித்தவாறு தன்னவனின் தோளில் சாய்ந்துக்கொள்ள, அவரும் தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு, “நீ என்னை காதலிக்குற மாதிரி அம்மு.” காதலாகச் சொன்னார்.

அதில் வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டவரின் பார்வை எதிரேயிருந்த அகஸ்டினின்மேல் எதேர்ச்சையாக பதிய, மாயாவின் புருவங்களோ யோசனையில் சுருங்கியது.

அங்கு தன் நண்பர்களிருவருக்கும் புன்னகையோடு அர்ச்சதை தூவியனின் சிந்தனை முழுவதும் அலீஷாதான். அது அவனுடைய விழிகளில் ஏக்கமாக வெளிப்பட, அவனையே பார்த்துக்கொண்டிருந்த மாயாவிற்கு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பது நன்றாகவே புரிந்தது.

அடுத்து திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடக்க, மஹி உணர்வுபூர்வமாக ஒவ்வொன்றையும் செய்தான் என்றால், ஆத்விக்கோ ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், தன்னை தவிக்கவிட்ட தன்னவன் மேல் கோபம் மட்டும் குறையவில்லை. இங்கு, அவளின் கோபப்பார்வையை கண்டுக்கொள்ளாதது போலான பாவனையிலிருந்த மஹிக்கும் உள்ளுக்குள் அன்றைய இரவை நினைத்து பக்கென்றுதான் இருந்தது.

அடுத்தநாள் காலை மாயாவும் ரோஹனும் செல்லவிருக்க, அன்று மாலை நாளை செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்தார் மாயா. மற்றவர்களுக்கு அவர்கள் செல்வதில் உடன்பாடு இல்லையென்றாலும் ஏனோ மாயாவின் விருப்பதைத் தடுக்க முயலவில்லை. ஆனால், மஹிதான் ஆர்ப்பார்ட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

“மாம், நீங்க போயே ஆகணுமா? தனியா அங்க போய் இரண்டுபேரும் என்னதான் பண்ண போறீங்க? இங்க இருக்குற வசதி கூட அங்க கிடையாது. ப்ளீஸ் மாம், இன்னும் கொஞ்சநாளைக்கு என்கூட இருங்க. அப்றம்…” மஹி கெஞ்ச, அவனை இடுப்பில் கைக்குற்றி சலிப்பாகப் பார்த்தவாறு, “அதான் கல்யாணம் ஆகிருச்சுல்ல, பொண்டாட்டி முந்தானையை பிடிச்சி திரியாம ஏன்டா இப்படி அம்மா முந்தானையை பிடிச்சி திரிஞ்சிக்கிட்டு இருக்க?” கோபமாகக் கேட்டார்.

ஆத்வியோ முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை இதழைக் கடித்து அடக்க, கதவு நிலையில் சாய்ந்து நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான் அகஸ்டின்.

“நான் உங்களையும் அப்பாவையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.” மஹி தேய்ந்த குரலில் சொல்ல, “அப்படியாடா கண்ணா? உனக்கு எப்போ எங்க நியாபகம் வருதோ, உடனே…” என்று கலங்கிய குரலில் இழுத்தவர், “உடனே கிளம்பியெல்லாம் வந்துறாத! நான் என் புருஷன் கூட நிம்மதியா இருக்க போறேன். எங்களுக்கு எப்போ தோனுதோ அப்போ நான் உங்க எல்லாரையும் பார்க்க வர்றேன். இப்போ ஒரு முக்கியமான வேலையா வெளியில கிளம்புறேன். வந்து உன்னை டீல் பண்ணிக்கிறேன்.” என்றுவிட்டு நகர, தன் தாயை மூக்கு விடைக்க முறைத்தான் அவன்.

அதேநேரம், மாதவியின் புகைப்படத்தை வெறித்தவாறு சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்திருந்தாள் அலீஷா. அழுது முகம் வீங்கி சிவந்து போயிருந்தது. “நீ போகும் போது என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாமேம்மா! என்னால இந்த வலிய தாங்க முடியல.” மீண்டும் தன்னவனை நினைத்து தாயிடம் முறையிட்டவாறு அழுக ஆரம்பித்தவள், கதவு தட்டப்படும் சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

வேகமாகச் சென்று நீரினால் முகத்தை கழுவியவள், கதவை சென்றுத் திறக்க, அடுத்தகணம் அவளுடைய விழிகள் சாரசர் போல் விரிந்தன.

அவளுக்கெதிரே “ஹாய் அலீஷா…” உற்சாகமாகச் சொன்ன மாயா, “சீக்கிரம் உள்ள போ! யாராச்சும் எங்கள பார்த்துட்டாங்கன்னா பிரச்சினை ஆகிரும்.” பதட்டப்பட்டவாறு அலீஷாவை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல, ரோஹனும் புன்னகையோடு உள்ளே வந்து கதவை தாளிட்டார்.

அலீஷாவுக்குதான் ஆச்சரியம். அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியாது மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றாள் அவள்.

“ஏம்மா பொண்ணே!” அலீஷாவை உலுக்கிய மாயா, அங்குமிங்கும் விழிகளை சுழற்றி கதிரைத் தேடி கிடைக்காது சகஜமாக தரையில் அமர, அப்போதுதான் நடப்புக்கு வந்தவள், வெறும் தரையில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.

“அய்யோ மேடம்! எழுந்துருங்க. நீங்க போய் தரையில உட்காரலாமா? என்ன சார், நீங்களுமா?” பதட்டமாக பேசியவாறு பீரோவுக்கு மேலிருந்த பாயை பாய்ந்தெடுத்து, தூசி தட்டி தரையில் விரித்த அலீஷா, “என்னை மன்னிச்சிருங்க, வீட்டுல அம்புட்டு வசதி கிடையாது. தப்பா எடுத்துக்காதீங்க.” தயக்கமாகச் சொல்ல, அவளை இழுத்து தன்னோடு பாயில் அமர வைத்தார் மாயா.

“அட என்னம்மா நீ, இந்த மாதிரி வாழ்க்கைக்கு நாங்க ஏங்கிட்டு இருக்கோம். நீ என்னடான்னா இதை சொல்ல தயக்கப்படுற. தரையில உட்காரும் போது கிடைக்குற வசதி சோஃபாவுல கிடைக்காதுடா.” சாதாரணமாக ரோஹன் சொல்ல, “எக்ஸ்ஸாக்ட்லி!” உற்சாகமாக சொன்ன மாயா, அலீஷாவை ஆழ்ந்து நோக்கினார்.

அலீஷாவுடைய சிவந்த விழிகள் அவள் அழுதிருப்பதை பறைசாட்ட, “மேடம் ரொம்ப அழுதிருக்கீங்க போல, ஒருவேள, உன் பாவாவ நினைச்சு அழுதியா?” கேலியாக அவர் கேட்க, முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டவள், “அப்படியெல்லாம் இல்லை. நீங்க எதுக்காக வந்தீங்க? ஏதாச்சும் முக்கியமான விஷயமா?” மனதை மறைத்து சாதாரணமாகப் பேசினாள்.

ரோஹனோ கொடுப்புக்குள் சிரிக்க, தன்னவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அலீஷாவை நோக்கியவர், “அகிய பத்தி நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சிக்கலாமா?” சிரிப்போடுக் கேட்க, முதலில் அந்த கேள்வியில் திடுக்கிட்டவள், பின் “ஓஹோ! மிஸ்டர்.அகஸ்டின கேக்குறீங்களா? உங்க ஐரா கம்பனீஸ்ஸோட சிஈஓ அவரு. அவரை பத்தி நான் என்ன நினைக்க மேடம்?” சாதாரணமாகப் பேசினாள்.

இல்லை, பேச முயற்சித்தாள்.

அவளின் பதிலில், “நான் இப்போ ஐரா கம்பனீஸ்ஸோட சிஈஓ பத்தி கேக்கல. உன்னோட ரசகுல்லாவ பத்தி கேக்குறேன்.”  சிரிப்போடு மாயா சொல்ல, அலீஷாவின் முகமோ இறுகிப்போனது.

“இப்போ அந்த நினைப்பெல்லாம் எனக்குள்ள இல்லை மேடம். என்னோட தகுதிய பத்தி யோசிக்காம அளவுக்கு மீறி ஆசைப்பட்டு நான் கண்ட கனவுகள் போதும். இந்த வாழ்க்கையிலயே நான் நிம்மதியா இருக்கேன். இப்படியே இருந்துட்டு போறேன். மறுபடியும் பழைய விஷயத்தை பேசாதீங்க!” கறாராக சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“ஆஹான்! வாஸ்தவமான பதில்தான்.” கேலியாகச் சொன்ன ரோஹன், “ஆனா, எங்க மகன் அவன் வாழ்க்கையில நிம்மதியா இல்லையே…” ஒருமாதிரிக் குரலில் சொல்ல, “அலீஷா, உன்னோட மனநிலை எனக்கு புரியுது. ஆனா, அகி என்னடான்னா அவன் உனக்கு தகுதியில்லாதவன்னு நினைச்சிட்டு இருக்கானே…” என்றார் மாயா.

அதில் பற்களைக் கடித்தவள், “இதேதான் அவனும் சொன்னான். ஆனா, காரணம்தான் என்னன்னு சொல்லாம கடுப்பேத்துறான்.” அகியை நினைத்து கோபமாகச் சொல்ல, “அவன் எப்படி சொல்வான்? சாருக்கு அம்புட்டு பயம், நீ விட்டுட்டு போயிருவியோன்னு. எதுக்குமே பயப்படாத என்னோட அகி, அவனோட வாழ்க்கைக்குள்ள உன்னை கொண்டு வர பயப்படுறான், எங்க உன்னோட காதல் உன் சுதந்திரத்தை பறிச்சிடுமோன்னு…” தேய்ந்த குரலில் சொன்னார் அவர்.

அலீஷாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன…என்ன சொல்றீங்க? புரியல.” திக்கித்திணறி அவளுடைய வார்த்தைகள் வர, விரக்கியாகச் சிரித்தவர், அகஸ்டினின் நிலையை விளக்கத் தொடங்கினார்.

“அலீஷா, எத்தனையோ தலைமுறைங்க உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு எங்ககிட்ட பணம் இருந்தும், சுதந்திரம் கிடையாது. ஆத்வி, மஹி இதை பழகிட்டாங்க. ஆனா, அகியால இதை ஏத்துக்க முடியல. எப்போவுமே அவனுக்கு பிடிச்சதை வெளிப்படையா செய்யணும்னு ஆசைப்படுவான், என்னை மாதிரி. ஆனா, அதை செய்ய முடியாத அளவுக்கு குடும்ப கட்டுப்பாடுகள் அதிகம்.” மாயா சொல்ல, “எனக்கு தெரியும் மேடம்.” என்றாள் அலீஷா, அன்று மும்பையில் வைத்து அகி பேசியதை நினைத்து.

“ம்ம்… யூ க்னோ வெல். அதேதான் அகியும் உன் விஷயத்துல யோசிச்சிருக்கான். அவன் எப்போ உன் காதலிச்சான்னு எனக்கு தெரியல. ஆனா, ஐரா கம்பனீஸ்ஸோட பொறுப்பை அவன் ஏத்துக்கணும்னு நான் சொன்னதிலிருந்து கண்டிப்பா உன்னை பத்தி யோசிச்சிருப்பான். எப்போவும் பிடிச்சதை செய்யணும்னு நினைக்குற பொண்ணு நீ, ரைட்? அப்படி இருக்குறப்போ, மீடியாவுக்கு பயந்துக்கிட்டு வாழுற ஒரு வாழ்க்கைய உன்னால வாழ முடியாதுன்னு அவன் நினைச்சிருக்கான். என் அகிய பத்தி எனக்கு நல்லாவே தெரியும். ஏன்னா, அவனோட இடத்துல நான் இருந்திருந்தாலும் இதைதான் யோசிச்சிருப்பேன்.” மாயா புன்னகையோடுச் சொல்ல,

அவர் சொல்வதை அதிர்ந்து கேட்டுக்கொண்டிருந்தவள், பின் முறைப்பாக “ஓஹோ! அப்போ நீங்களும் இப்படிதான் காரணம் சொல்லாம உங்களுக்கு பிடிச்சவரை காயப்படுத்தி காதலை விட்டுக்கொடுத்திருப்பீங்களா?” அகியின் தவறைச் சுட்டிக்காட்டி குத்தலாகக் கேட்டாள்.

“கண்டிப்பா இல்லை. யாருக்காகவும் என் காதலை விட்டுக்கொடுக்க மாட்டேன்.” தன்னவனை பார்த்துக்கொண்டே சொன்னவர், “அதான், ஆரம்பத்துல முட்டாள் மாதிரி நடந்துக்கிட்டாலும் மறுபடியும் உன்கிட்டயே வந்துட்டானே!” என்றார் கேலியாக.

ஆனால், அலீஷாவின் மனமோ சமாதானமடைய மறுத்தது.

“அவனோட  மனநிலை எனக்கு புரிஞ்சாலும், என்னால முழுசா ஏத்துக்க முடியல. உங்களுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒரு பொண்ணு நான். ஆரம்பத்துல நான் என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்னு உங்களுக்கு தெரிஞ்சா நீங்களே…” தயக்கமாக அலீஷா சொல்ல வர, “எங்க பையன் காதலிக்குற பொண்ண பத்தி விசாரிக்காம இருப்போமா என்ன?” சிரித்தவாறு சொன்ன ரோஹன், “கையோட உழைப்பு ரொம்ப அதிகம்ல அலீஷா?” என்று கேட்க, அதிர்ந்துவிட்டாள் அவள்.

“அப்போ…” அலீஷா அதிர்ச்சியாக இழுக்க, இருவருமே ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

“லுக் அலீ, நான் ஒன்னு மட்டும் சொல்றேன், நல்லா கேட்டுக்கோ! காதலுக்கு ஈடானது காதல் மட்டும்தான். ஒருத்தரோட காதலுக்கு நாம தகுதியானவங்களான்னு நாம பதிலுக்கு அவங்களுக்கு கொடுக்குற காதல்தான் நிர்ணயிக்குது. சோ, யாருக்காகவும் எதுக்காகவும் உன் காதலை விட்டுக்கொடுத்துறாத. விட்டுக்கொடுத்துறவே கூடாது.”  கடைசி வசனத்தை அழுத்தமாக மாயா சொல்லிவிட்டு தன்னவனை நோக்க, ரோஹனுக்கோ ஒருதலையாக தன்னவள் தன்னை காதலிக்கும் தருணங்கள்தான் நியாபகத்திற்கு வந்தன.

அலீஷா விழி விரித்து அவரையே பார்த்துக்கொண்டிருக்க, எழுந்து மாயாவுக்கு தொப்பியையும் கண்ணாடியையும் அணிவித்த ரோஹன், “அகி எப்போவுமே தன்னோட மனசுல உள்ளதை வெளிப்படுத்த மாட்டான். அழுத்தக்காரன். என்ட், முன்னாடியே சொன்ன மாதிரி அவன காதலிச்சா உன்னோட சந்தோஷம் பறிபோயிடுமேன்னுதான் உன்னை காதலிக்க பயந்து உன்னை காயப்படுத்தியிருப்பான். இனி உன் முடிவுலதான் இருக்கு.” புன்னகையோடு சொன்னார்.

மாயாவும் அலீஷாவின் கன்னத்தைக் கிள்ளி, “நாளைக்கு நாங்க கிளம்புறோம். அடுத்தமுறை இந்தியாவுக்கு வரும் போது உன்னை அவன் கூட பார்த்தா அதை விட சந்தோஷம் எங்களுக்கு எதுவுமில்லை.” சிரித்தவாறுச் சொல்ல, அவர்களைப் புரியாது நோக்கியவள், “எங்க போறீங்க?” என்றாள் கேள்வியாக.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, “நாங்க வாழணும்னு ஆசைப்பட்ட வாழ்க்கைக்கு.” என்ற மாயா தன்னவனுடன் அங்கிருந்து நகர்ந்திருக்க, போகும் அவர்களையே பார்த்திருந்த அலீஷா, சட்டைக்குள் மறைத்து அணிந்திருந்த தன்னவனின் செயினை கையிலெடுத்து புன்னகைத்துக்கொண்டாள்.