விழிகள் 30

eiOEIV514836-2516a93f

விழிகள் 30

போர்டிகாவில் கார் தயாராக நிற்க, ஹோலில் விழிகள் கலங்கிப்போய் சோகமே உருவமாய் நின்றிருந்தனர் அத்தனை பேரும். காரணம், மாயாவும் ரோஹனும் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. இன்னும் சற்றுநேரம்தான்.

“அத்தை, உங்களுக்குன்னு சொந்தமான ஃப்ளைட் இருந்தும் அது வேணாம்னு சொல்லிட்டீங்க. சரி, ஏயார்போர்ட் வரைக்குமாச்சும் நாங்க வர்றோம்னு சொன்னதுக்கு அதையும் வேணாம்னு சொல்லிட்டீங்க. ஏன் அத்தை இப்படி?” ஆத்வி கண்ணீரை துடைத்துவிட்டவாறுக் கேட்க, “சில பழைய நினைவுகள மீட்டலாம்னு ஆசைப்படுறோம்டா. சில இடங்களுக்கு போக வேண்டியிருக்கு. நாங்களே ஏயார்போர்ட்டுக்கு போயிருவோம். என்ட்…” என்றிழுத்த மாயா மெல்ல அவள் காதருகில் குனிந்து, “மாமியார் தொல்லை இல்லைன்னு சந்தோஷப்படாத! ஐ அம் வோட்சிங் யூ.” கேலியாகச் சொன்னார்.

“அத்தை…” ஆத்வி சிணுங்க, பாவமாக உதட்டைப் பிதுக்கிக்கொண்டு நின்றிருந்த தன் மகனைப் பார்த்த ரோஹன், “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன். அவன் கண்ணுல ஆனந்த கண்ணீரைதான் நான் பார்க்கணும்.” வராத கண்ணீரை வரவழைத்துச் சொல்ல, “ப்பா…” கடிந்தவாறு தன் தந்தையையும் தாயையும் ஒருசேர அணைத்துக்கொண்டான் மஹி.

“என் கூடவே இருக்கலாம்ல?” மஹி தேய்ந்த குரலில் கேட்க, “இருக்கலாம்டா. ஆனா, நாங்க போகணும். பட் வன் திங், ஐ லவ் யூ  டூ த கோர் கண்ணா.” மாயா அத்தனை பாசத்தோடு சொல்ல, தன் மகனின் நெற்றியில் முத்தமிட்ட ரோஹன், “உன்னை நினைச்சி ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்ணா. நீ நினைச்சிருந்தா இருக்குற சொத்தை அனுபவிச்சி வாழ்ந்துருக்கலாம். ஆனா, உனக்கு பிடிச்ச பாதைய தேர்ந்தெடுத்த. கண்டிப்பா உன் துறையில உனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்குவ.” நம்பிக்கையோடுச் சொன்னார்.

அவர்களின் வார்த்தைகளில் மஹிக்கு அழுகையே வந்துவிட்டது. அவனை சமாதானப்படுத்திவிட்டு அகஸ்டினின் எதிரே சென்ற மாயா, அவனை முறைத்துப் பார்க்க, “என்ன, இன்னும் கிளம்பலையா? சீக்கிரம், இடத்தை காலி பண்ணுங்க. காத்து வரட்டும்.” வேண்டுமென்றே அகஸ்டின் எங்கோ பார்த்துக்கொண்டு அலட்சியமாக சொல்வது போல் பாவனை செய்ய, அவன் கன்னத்தில் அறைந்தவர், “போடா! உனக்கு எல்லாமே விளையாட்டுல்ல? நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்டா.” அழுதவாறு அவனை அணைத்துக்கொண்டார் அவர்.

அகஸ்டினுக்கும் ஏனோ விழிகள் கலங்கிவிட்டது. இருந்தாலும் மறைத்துக்கொண்டு, “உனக்கு பிடிச்ச இடத்துக்கு போ அம்மு. உன் புருஷன் கூட ஹேப்பியா இரு! ஆனா ஒன்னு, இருக்குற காலத்துல எப்படிதான் இந்த ஹிட்லர் கூட குப்பை கொட்ட போறியோ? சரியான டென்ஷன் பார்ட்டி.” கேலியாகச் சொல்ல, “அடிங்க…” என்றவாறு அவனின் வயிற்றில் குத்தினார் ரோஹன்.

அவனோ, “சும்மா லுல்லுயாக்கு…” என்றுவிட்டுச் சிரித்தவாறு அவரை அணைத்துக்கொள்ள, “நிஜமாவே உன்னை நினைச்சி ரொம்ப பெருமையா இருக்குடா. நமக்கு பிடிக்காத ஒன்ன நமக்கு பிடிச்சவங்களுக்காக அக்செப்ட் பண்றது ரொம்ப பெரிய விஷயம். ஆரம்பத்துல உன் விஷயத்துல ரொம்ப பயந்தேன். உனக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கைய ஃபோர்ஸ் பண்ணி உனக்கு தந்துட்டோமோன்னு குற்றவுணர்ச்சியா கூட இருந்துச்சு. ஆனா இப்போ… ஐ ஹோப், ஐரா கம்பனீஸ்ஸோட பெயர நீ காப்பாத்துவ. என்ட்… ” என்றிழுத்த ரோஹன், “உனக்கானவளையும் நல்லா பார்த்துக்குவ. ஐ க்னோ.” சிரிப்போடுச் சொன்னார்.

ஆனால், தன்னவளின் நினைவில் அகஸ்டினின் முகமோ சட்டென  சுருங்கியது.

அதன்பின், எல்லாரினதும் கெஞ்சல்கள், கொஞ்சல்களுக்கு பிறகு அங்கிருந்து வெளியேறிய ரோஹனும் மாயாவும் முதலில் சென்று நின்றது என்னவோ தம் நினைவுகளில் ஒன்றான தாங்கள் படித்த கல்லூரிக்குதான். அங்கிருந்து பழைய நினைவுகளை மீட்டியவர்கள், ரோஹனின் நடன பயிற்சிநிலையம், ரோஹனின் அலுவலகம் மற்றும் திருமணமானதும் வாழ்ந்த வீடு என பல இடங்களுக்கு சென்று பார்த்த பிறகே விமானநிலையத்திற்கு சென்றனர்.

இருவரும் மீண்டும் இத்தாலிக்கே சென்றுவிட, அடுத்து இரண்டு நாட்கள் வீடே மயான அமைதிதான். திருமணம் நடந்த வீடென்று அடித்து சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.

ஆனால், அந்த அமைதியை கலைத்து அடுத்த நடவடிக்கையை எடுத்தது என்னவோ கீர்த்திதான். புரோகிதரை வரவழைத்து சாந்தி முகூர்த்தத்திற்கான நாளை குறிக்கச் சொல்ல, அவரும் அன்றே சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகளை செய்யும்படி சொல்லிவிட்டுச் சென்றார்.

அன்றிரவு அலைஸ், ஆத்வியை தயார் செய்துக்கொண்டிருக்க, அவளுக்கோ அத்தனை எரிச்சல்!

“அத்தை, இப்போ இது ரொம்ப முக்கியமா?” எரிச்சலாக அவள் கேட்க, வாய்விட்டு சிரித்தவர், “இதுவே ரொம்ப லேட். உன் அத்தையும் மாமாவும் போன கவலையில நாங்களும் கண்டுக்காம இருந்துட்டோம். கல்யாணமாகி இரண்டுநாளா நீ உன் அம்மா ரூம்ல தூங்குறதும் மஹி என்னடான்னா அகி கூட தூங்குறதும்… இது மட்டும் வெளியில தெரிஞ்சது நீங்கதான்டா ஃப்ளேஷ் நியூஸ்ஸே!” என்றுச் சொல்ல, உதட்டை சுழித்துக்கொண்டாள் அவள்.

அப்போது சரியாக கீர்த்தியும் வர, தன் மகளின் அலங்காரத்தைப் பார்த்து பூரித்துப் போனவர், அவளுக்கு நெட்டி முறித்து மஹியின் அறைக்குள் சென்றுவிட, உள்ளே சென்றவளுக்கு கட்டிலில் அலைப்பேசியை நோண்டியவாறு அமர்ந்திருந்த தன்னவனைப் பார்த்ததும் கோபம் தாறுமாறாக எகிறியது.

அவனும் அரவம் உணர்ந்து அவளை விழிகளை உயர்த்திப் பார்த்தவன், அலைப்பேசியை ஓரமாக வைத்துவிட்டு தன்னவளை மேலிருந்து கீழ் அளவிட்டான். ஒருபக்கம் சேலையில் தேவதைப் போல் இருந்தவளிடமிருந்து விழிகளை அசைக்க முடியவில்லையென்றால், இன்னொருபுறம் அவளின் சிவந்த மூக்கைப் பார்த்து சிரிப்புதான் வந்தது.

முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அமைதியாக மஹி இருக்க, அது ஆத்விக்கு விளங்கிவிட்டது போலும்!

கையில் கொடுத்திருந்த பால் டம்ளரை டீபாயில் வைத்துவிட்டு விறுவிறுவென அவனெதிரே வந்தவள், “மொதல்ல எழுந்துரு நீ!” மிரட்டலாகச் சொல்ல, ‘பார்ராஹ்!’ உள்ளுக்குள் நினைத்தவாறு எழுந்து தன்னவளை கேள்வியாக நோக்கினான் அவன்.

“என்னையே தவிக்க விட்டல்ல, என்னோட காதல் உனக்கு ஏதோ விளையாட்டாதான் தோனிச்சுல்ல தீரா? என்னோட அழுகை உன் கண்ணுக்கெல்லாம் தெரியவே இல்லை. ஒருவேள, அவளா ஓடிப் போகலன்னா நீ அவளை கல்யாணம் பண்ணியிருப்ப, அப்படிதானே!” ஆதங்கத்தோடு அவளின் வார்த்தைகள் வர, “அது ஆதிம்மா…” அவளை சமாதானப்படுத்த முயன்றான் மஹி.

ஆனால், அவள் பேச விட்டால்தானே!

“ஷட் அப்!” என்ற அவளின் கத்தலுக்கு இவனின் மனசாட்சியோ, ‘என்னடா அநியாயமா இருக்கு. பேசாதீங்க சொல்லுங்கன்னு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கா. கடவுளே! இவள எப்படி சமாளிக்கப் போறேனோ?’ மானசீகமாக நினைக்க, ஆத்விக்கோ அவனின் அமைதி மேலும் கோபத்தைதான் தூண்டியது.

அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி தூரமாக வீசிவிட்டு சட்டென மஹியை கட்டிலில் தள்ளியவள், அவன் மேல் படர்ந்து அவன் வயிற்றில் அமர்ந்து மெல்ல அவனுடைய இதழ்களை நெருங்க, முதலில் அதிர்ந்தவனுக்கு, பின் தன்னவளின் அருகாமையிலும் வாசனையிலும் உணர்ச்சிகள் மேலெழ, விழிகளை மூடிக்கொண்டான்.

அவனுடைய பார்வை மாற்றத்தையும் உணர்ச்சியின் தாக்கத்தையும் உணர்ந்தவள், அவன் விழிகளை மூடியதுமே வேகமாக எழுந்துக்கொள்ள, தன் மேல் பாரம் குறைந்ததில் விழிகளை பட்டென்று திறந்தவன், எதிரே விஷம சிரிப்போடு நின்றிருந்தவளை உதட்டைப் பிதுக்கிப் பார்த்தான்.

“என்ன, புது மாப்பிள்ளைக்கு ரொம்பதான் ஆசை போல! இதெல்லாம் கனவுலதான் நடக்கும். என்னை வேணாம்னு சொல்லிட்டல்ல! இனி நாம வெளியில இருக்குறவங்களுக்குதான் புருஷன், பொண்டாட்டி. மத்தபடி நமக்குள்ள எதுவும் இல்லை.” ஆத்வி கறாராக சொல்லிவிட்டு படுக்கையில் ஒருபுறமாக சென்று படுத்துக்கொள்ள, “வாட்!” அதிர்ந்து விழித்தவன், “அது… அது எப்படி?” எப்படி கேட்பது, என்னவென்று கேட்பதென்று தெரியாது திகைத்துப்போய் திணறினான்.

ஆனால், அவனின் மனைவியோ அவனை சற்றும் கண்டுக்கொள்ளவில்லை.

“எப்படின்னா? என்னை வேணாம்னு சொன்னல்ல, அனுபவி!” என்றுவிட்டு அவள் விழிகளை மூடிக்கொள்ள, படுக்கையின் இன்னொரு புறம் படுத்துக்கொண்டவனுக்கு ‘அய்யோ!’ என்றிருந்தது. அதுவும், அவள் வேறு உணர்ச்சிகளை தூண்டிவிட்டதில் அவனுக்கு ஹார்மோன்கள் தாறுமாறாக சுரக்க, தன்னைத்தானே கட்டுப்படுத்தவே முடியவில்லை.

தன்னவளின் முதுகை உதட்டைப் பிதுக்கி பாவமாக மஹி நோக்க, விழிகளை மூடியவாறே தன்னவனின் தவிப்பை உணர்ந்து மெல்ல சிரித்துக்கொண்டாள் அவள்.

அடுத்தநாள்,

அன்றுதான் மங்ளூரிலிருக்கும் ஐரா நிறுவனத்தின் கிளையை மேற்பார்வையிட அகஸ்டின் அலுவலகத்திற்குச் செல்ல, புதிய நிர்வாகி வரும் செய்தியறிந்த வேலையாட்களும் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து அகஸ்டினுக்கு பலத்த வரவேற்பு கொடுத்தனர்.

ஏற்கனவே அங்கு வேலை செய்ததில் அங்கிருப்பவர்களுக்கு அகஸ்டினைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்க, சிலபேருக்கு கண்களில் திருப்தி இருந்ததென்றால், இன்னும் சிலபேரோ அவனுடைய அதிர்ஷ்டத்தை நினைத்து அதிருப்தி கலந்த பொறாமையுடன் விழிகளை உருட்டினர்.

ஆனால், அதையெல்லாம் அகஸ்டின் கொஞ்சமும் கண்டுக்கொள்ளவில்லை. உள்ளே நுழைந்தவனுக்கு கையில் பூங்கொத்துடன் நின்றிருந்த வெங்கட்டை பார்த்ததும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.

சிரித்தவாறு அவனெதிரே சென்று அகஸ்டின் நிற்க, வெங்கட்டுக்கு அத்தனை தயக்கம்!

நெற்றில் பூக்கும் வியர்வையை பதட்டமாக துடைத்துவிட்டவாறு, “ஹிஹிஹி… வெல்கம் சார்.” திக்கித்திணறி சொல்லி கையிலிருந்ததை வெங்கட் நீட்ட, அதை வாங்கியவாறு மெல்ல வெங்கட்டின் காதருகில் குனிந்தவன், “மச்சி, இப்போ நம்புறியா என்ன?” என்று கேட்டுவிட்டு கேலியாகச் சிரிக்க, ‘ஆங்…’ என்று வாயைப் பிளந்தவனுக்கு, அகஸ்டினின் சாதாரணப் பேச்சில்தான் மூச்சே வந்தது.

அத்தனை பேரின் வரவேற்பை புன்னகையுடன் ஏற்று தனக்கான அறைக்குள் நுழைந்தவன், மடிக்கணினியை உயர்ப்பித்து அலுவலக வேலைகளை பார்வையிட, அடுத்த சில நிமிடங்களிலேயே அலைஸ்ஸிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

திரையைப் பார்த்துவிட்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தவன், சுழலும் நாற்காலியில் சுழன்றவாறு மடிக்கணினி திரையை பார்த்துக்கொண்டே, “ஹெலோ மாம்.” என்க, மறுமுனையில் அலைஸ்ஸோ, “வேலையெல்லாம் எப்படி அகி?” அக்கறையோடுக் கேட்டார்.

“ஆல் குட்! பட், உள்ள நுழைஞ்சதிலிருந்து என்னோட டேபிள ரொம்ப மிஸ் பண்றேன்.” அகஸ்டின் மெல்லிய புன்னகையோடுச் சொல்ல, “ஆஹான்! உன்னோட டேபிள்ளா? இல்லைன்னா…” அவர் பொடி வைத்து பேசியவாறு குறும்பாக இழுக்கவும், அகஸ்டினுக்கு தன் தாய் உணர்த்த வருவது புரிந்துப் போனது.

அவனுடைய நினைவுகளோ அலுவலகத்தில் தன்னவளுடனான தருணங்களை மீட்டிப் பார்த்தது.

இதழை நாவால் ஈரமாக்கியவாறு விழிகளை உருட்டி தன்னவள் பார்க்கும் மிரட்சியான பார்வை, வெட்கப்பட்டு தெத்துப்பல் தெரிய அவள் சிரிக்கும் அழகு, முந்தானையை தோளோடு இழுத்து போட்டவாறு ஓரக்கண்ணால் அகஸ்டினை பார்க்கும் அவளின் ஆர்வம் என அவளின் பல பரிமாணங்களே அவனுடைய மனக்கண்ணில்.

அன்று மஹியின் நிச்சயதார்த்தத்தின் போது அவனுடன் சண்டையிட்டு சென்றவள்தான். அகஸ்டினும் அதன்பின் அவளை சந்திக்கச் செல்லவில்லை. ஆனால், அவளுடைய நினைவுகளிலிருந்து மட்டும் அவனால் மீள முடியவில்லை.

விழிகளை அழுந்த மூடித் திறந்து ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவன், “நத்திங் மாம், நான் அப்றம் பேசுறேன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்கப் போக, “வெயிட் அகி, ஒரு இம்போர்டன்ட் மேட்டர்.” வேகமாகச் சொன்னார் அலைஸ்.

அவன் கேள்வியாக புருவத்தைச் சுருக்க, “அகி, இன்னைக்கு ஒரு புது ஸ்டாஃப் வேலைக்கு வருவாங்க. மாயாவோட ரெகமென்டேஷன். பட், நீ எதுக்கும் இன்டர்வியூ பண்ணி வேலையில சேர்த்துக்க. ரொம்ப பயந்த சுபாவம். சோ, பார்த்து பக்குவமா எடுத்துச் சொல்லு!” அவர் பேசிக்கொண்டேச் செல்ல, “மாம்…” பற்களைக் கடித்தவன், “இதெல்லாம் ஹேன்டல் பண்ண ஆளுங்க இருக்காங்க. தென் வை ஷுட் ஐ? எனக்கு நிறைய வேலை இருக்கு.” கடுப்பாகச் சொன்னான்.

ஆனால், அலைஸ் விட்டபாடில்லை. “நோ அகி, இதுவரைக்கும் நீ இந்த டாஸ்க் பண்ணதில்லை. இதையும் நீ கத்துக்கணும்னு நான் சொல்லல்ல, உன் அத்தை சொல்ல சொன்னா. சோ, கவனமா ஹேன்டல் பண்ணு. நான் உன்கிட்ட அப்றமா பேசுறேன்.” படபடவெனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து, “அப்பாடா!” என்று அலைஸ் பெருமூச்சுவிட, இங்கு அகஸ்டினுக்கு அத்தனை எரிச்சல்!

‘ச்சே!’ சலித்தவாறு அலைப்பேசியை தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் மடிக்கணினி திரையில் அவன் கவனம் செலுத்த, அடுத்த ஒருமணி நேரத்தில் அலுவலக ரிசெப்ஷனிலிருந்து அழைப்பு வந்தது.  அதையேற்று பேசியவனுக்கு மறுமுனையில் சொன்ன செய்தியில் தன் அம்மா சொன்ன நபர் பற்றி நியாபகம் வர, “வர சொல்லுங்க!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்து கோப்புக்களில் பார்வையிட ஆரம்பித்தான்.

அவன் சொன்ன அடுத்த சில நிமிடங்களில் கதவு தட்டப்படும் சத்தம். “யெஸ் கம்மிங்.” என்றவன், விழிகளை மட்டும் உயர்த்தி எதிரே வந்தவளை நோக்க, அடுத்தநொடி அவனுடைய விழிகள் சாரசர் போல் விரிந்தன.

எச்சிலை விழுங்கிக்கொண்டவாறு, மேலிருந்து கீழ் எதிரிலிருந்தவளை அவன் நோக்க, வெள்ளை சுடிதாரில் ஆரம்பத்தில் அலுவலகத்தில் பார்த்தது போன்ற தோற்றத்தில் மென்புன்னகையுடன் நின்றிருந்தாள் அலீஷா.

“சார்…” என்றழைத்து அமருவதற்காக அவள் அனுமதி கேட்டதில், மலங்க மலங்க விழித்துக்கொண்டு பூம்பூம் மாடு போல் அகஸ்டின் தலையாட்டி வைக்கவும், அவளுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

அவனெதிரே அமர்ந்து கையிலிருந்த கோப்பை அவனெதிரே வைத்துவிட்டு அலீஷா குறும்பாக புருவங்களை ஏற்றியிருக்க, அதில் விழி விரித்தவன், பட்டென்று பார்வையை தாழ்த்தி அவள் கொடுத்த கோப்பையெடுத்து புரட்ட ஆரம்பித்தான்.

அதிலோ தன்னவனுக்குத் தெரியாது தன்னவனை வளைத்து வளைத்து அவள் எடுத்த புகைப்படங்கள் இருக்க, அதைப் பார்த்தவன் விழிகளை மட்டும் உயர்த்தி அவளை நோக்க, கழுத்திலிருந்த செயினை பற்களால் கடித்துக்கொண்டு கொடுப்புக்குள் சிரித்தவாறு நோக்கினாள் அலீஷா.

அகஸ்டினுக்கு அவளுடைய விளையாட்டு புரிந்துவிட்டது.

சிரிக்கத் துடிக்கும் இதழையும் அவளை அணைக்கத் துடிக்கும் கரங்களையும் அடக்கி கோப்பை அவள் முன் நீட்டியவன், “இங்க திறமைக்குதான் வேலையிருக்கு. பெரிய இடத்து ரெகமென்டேஷனுக்கு கிடையாது. சோ, ப்ளீஸ்…” பதிலுக்கு விளையாடியவாறு வாசலைக் காட்ட, “ஆஹான்!” நீட்டி முழக்கி கேலியாக இழுத்தவள், உதட்டை பாவமாக பிதுக்கி கோப்பை எடுத்துக்கொண்டு வெளியேறுவதற்காக வாசற்கதவிற்கருகில் சென்று கதவைத் திறக்க, அதுவோ மூடியிருந்தது.

மெல்ல சிரித்துக்கொண்டவள், அடுத்தநொடி காதருகில் உணர்ந்த சூடான மூச்சுக்காற்றில் வெட்கப்பட்டுச் சிரித்தவாறு தன்னவனை நோக்கித் திரும்ப, அடுத்தகணம் காற்று கூட புக முடியாதளவுக்கு தன்னவளை இறுக அணைத்திருந்தான் அவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!