வெண்பனி 10

IMG-20220405-WA0023-5cfcc5cb

பனி 10

தோற்றாலும் நம்பிக்கையோடு இரு

ஆனால்?

 யாரை நம்பியும் தோற்று விடாதே

அதன் வலி மரணத்தை விட கொடுமையானது.

பனிமலர், கௌதமின் நட்பை மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டாள். அவனை பார்த்தால் இதமான சிரிப்புடன், இரண்டு வார்த்தைகள் பேசி விலகி செல்வாள். 

கௌதம் தானாகவே சென்று மூவர் கூட்டணியில் இணைந்து கொள்வான். அப்போது எல்லாம் ஒரு தவறான பார்வையோ வார்த்தையோ இருக்காது. அவன் பனி மலரை தவிர வேறு எந்த பெண்ணுடனும் நட்பு பாராட்டுவதில்லை. அவனின் மாற்றம் அவனது நண்பர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. நம்மவர்கள், அவனை கொஞ்சமே கொஞ்சம் நம்பினார்கள். 

கௌதம் கிருஷ்ணா, பனிமலரின் உறவில் எந்தவித மாற்றமும் இன்றி நாட்கள் கடந்தது. அன்பரசன், தனலட்சுமியின் காதல் செல்ல தீண்டல்கள், சீண்டல்கள் எதுவுமின்றி, அதே பார்வை பரிமாற்றங்களுடன் மட்டும் வளர்ந்தது. இவ்வளவு  ஏன் தனிமையில் கூட சந்தித்ததில்லை. தனிமை கிடைக்கவில்லை என சொல்வதை விட, அந்தத் தனிமையை ஏற்படுத்திக் கொள்ள, அன்பரசன் தயாராக இல்லை என்று சொன்னால் மிகையாகாது. 

எப்போது கௌதம், பனிமலருடன் நட்பு பாராட்டினானோ, அன்று முதல் அவளை மேலும் பாதுகாக்க தொடங்கினான். அதற்கு கதிர் அரசனும் ஒரு காரணம். 

ஏற்கனவே பனிமலர், கௌவுதமுடன் நட்பு கொண்டதை, கேட்டு பயந்திருந்த அன்பரசனை அழைத்த கதிர்,’உன்னை என்ன சொன்னேன்? ஆனால் நீ என்ன பண்ணி வச்சிருக்க? நீ யாரைவேனா காதலி வேண்டாம்னு சொல்லல, ஆனா அதே நேரம் நம்ம வீட்டு பொண்ணையும் பாதுகாக்கணும்.

உன்னுடைய சில நிமிட கவன சிதறல், அவனுக்கு பனிமலரை நெருங்க பாதை அமைச்சு கொடுத்திருக்கு. அவன் பனியின் மேல், பார்வையை வச்சுட்டான். அவளை அடைய, அவன் எந்த எல்லைக்கும் போவான். கொஞ்சம் அன்பா பேசினா இவளும் உருகிடுவா’ என பல்லை கடித்தவன், ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தான் ‘இனி ஒரு நிமிஷம் கூட, அவள் உன் பார்வையை விட்டு விலக கூடாது. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இல்ல உன்னை தொலைச்சிடுவேன்.’ என மிரட்டி இருந்தான். அதன் பிறகு பனிமலரின் பாதுகாப்பில், கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டான் அன்பரசன்.

இப்போதெல்லாம் கௌதமும் அடிக்கடி இவர்களுடன் இணைந்து கொள்கிறான். அன்பரசன் வேண்டா வெறுப்பாக அவனை சகித்துக் கொள்வான் தன் மலருக்காக. தனலட்சுமி அவனை அண்ணா என்று அழைக்க பழகி இருந்தாள். இப்போது கௌதமின் எண்ணம் முழுவதும் பனிமலரின் மீது இருப்பதால் தனலட்சுமியின் அழைப்பை கண்டு கொள்ளவில்லை. இல்லை திருந்தி விட்டானா? அவன் மட்டுமே அரிந்த உண்மை.

பெண், சாதாரணமாக கௌதமிடம் பழகினாலும், அவனின் விரல் தீண்டலை கூட அனுமதித்ததில்லை. நெருப்பாக பனிமலரும், அதை அணைக்க ஆவலாக கௌதமும் என நாட்கள் கடந்தது. அவளை சுற்றி இருக்கும் அக்னி வலையை கடந்து அவளை அடைய வேண்டும்.

†††††

பனிமலரும் அன்பரசனும் கல்லூரி சேர்ந்து, மாதங்களை கடந்து வருடத்தை நெருங்கி இருந்தது. இன்னும் சில நாட்களில் ஸ்டடி ஹாலிடேஸ், அதைத் தொடர்ந்து பரிட்சை.

கதிர் அரசனும் தன் இறுதி ஆண்டு படிப்பில் இருப்பதால், அவன் நாட்கள் ப்ராஜெக்ட்டில் கழிந்தது. அதனால் அவனது கவனம் பனிமலரிடமிருந்து சற்று விலகி இருந்தது.

“அரசு டேய் அரசு. என் செல்லமில்ல” என கொஞ்சினாள் பனிமலர்.

“இல்ல”

“நம்ம அப்படியா பழகியிருக்கோம்?”

“ஆமா”

“வேண்டாம்டா அரசு” 

“வேண்டாம்னு தான் சொல்லுறேன்.” 

“நான் பொல்லாதவளா மாறிடுவேன்.” என்றாள் அவனை முறைத்து.

“இப்ப மட்டும் ரொம்ப நல்லவளா இருக்கிறதா நினைப்பா?” என அவள் மூக்கை பிடித்தாட்டினான்.

“நான் கெட்டவளாவே இருந்துட்டு போறேன். கூட்டிட்டு போவியா மாட்டியா?” என்றாள் கராராக.

“மாட்டேன்” உறுதியாக மறுத்தான்.

“டேய் நம்ம காலேஜ் சேர்ந்ததிலிருந்து ஒரு நாள் கூட கட்டடிச்சதில்லை டா. ப்ளீஸ் ப்ளீஸ்.” என கெஞ்சலில் இறங்கினாள் பனிமலர்.

இவர்கள் கெஞ்சல் கொஞ்சல்களை காண சகிக்காமல், அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்தாள் தனலட்சுமி.

“அதுக்கு”

“ஒரே ஒரு தடவை”

“முடியாது”

“ஹே கைஸ்! இங்க என்ன ஆர்கியுமென்ட் நடக்குது?” என திடீரென அங்கு தோன்றினான் கௌதம் கிருஷ்ணா. 

கடந்த சில மாதங்களாக நண்பனாக பழகும் அவனை, நம்ப தொடங்கி இருந்தார்கள் நண்பர்கள். 

“பாரு கௌ, இவனை” என புகார் வாசிக்கத் தொடங்கினாள் பனிமலர்.

“பாத்துட்டேன். நல்லா தான் இருக்கான்.” 

அவனையும் முறைத்தவள்,”நீயும் இவன் கூட செய்து கெட்டுப் போயிட்ட.”

“ஐயோ பேபி! இப்படி வெளியில யார்கிட்டயும் சொல்லிடாத. அப்புறம் என்னையும் அவனையும் தப்பா நினைக்க போறாங்க.” 

முதலில் அவன் சொல்வது புரியாமல்,”இதுல தப்பா…” என ஆரம்பித்தவள், புரிந்ததும் தன்னிடமிருந்த நோட்டை வைத்து அவனை மொத்தி எடுத்தாள். சில அடிகளை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டவன்.

“போதும் புள்ள அடிச்சது. ரொம்ப வலிக்குது.” அவளிடம் இருந்த நோட்டை பிடிங்கியவன்,”இப்ப சொல்லு. இரண்டு பேருக்கும் என்ன பிரச்சினை?”

“இதுவரை ஒருநாள் கூட காலேஜ கட்டடிச்சதுல்ல.” 

அவள் சொல்வதைக் கேட்டு குதூகலமானவன்,”அதுக்கு?”

“நாளைக்கு காலேஜ் கட் அடிச்சிட்டு, குற்றாலம் போகலாம்ன்னு இவனை கூப்பிட்டா, கூட்டிட்டு போக மாட்டேங்கறான்.” 

‘ஏன்?’ என்ற பார்வை கெளதமிடம்.

“சொன்னா புரிஞ்சுக்கோ மலர். நம்ம காலேஜ கட் அடிச்சுட்டு, குற்றாலம் போறது அரசுக்கு தெரிஞ்சா, நம்மள உண்டு இல்லன்னு பண்ணிடுவான்.” என அன்பரசு சொல்லவும் பனிமலர் பொங்கிவிட்டாள்.

“அவன் என்ன சொல்றது? நம்ம என்ன கேட்கிறது? நாளைக்கு நம்ம போறோம்.”

கதிர் அரசன் பேரை கேட்கவும், ஏன் என்றே தெரியாமல் கௌதம் கிருஷ்ணாவிற்கு கோவம் வந்தது.

“அவன் கூட்டிட்டு போகலைனா என்ன புள்ள? நான் உன்னை கூட்டிட்டு போறேன்.” என்றான் கௌவுதம்.

அப்போதே தன் தவறு புரிந்தது அன்பரசனுக்கு. ‘கதிர் என்றாலே பனிமலருக்கு ஆகாது. அவன் சொல்வதற்கு எதிர்ப்பதமாகவே அனைத்தும் செய்வாள். இப்போ அவன் பேரை சொன்னதால், வீம்புக்கென்றே கௌவுதமுடன் செல்ல சம்மதித்தாலும் சம்மதித்து விடுவாள்’ என்பதை உணர்ந்தவன்,”சரி மொட்டு, நாளைக்கு நம்ம போகலாம்” என்ற அன்புவின் வார்த்தையில், அவனது மொட்டுவின் முகம் புன்னகையால் மலர்ந்தது.

தனாவின் முகம் சோர்ந்தது. அதை கவனித்த கௌவுதம்,”சரி அப்ப நாளைக்கு நான் காரை எடுத்துட்டு வரேன். நம்ம நாலு பேரும் குற்றாலம் போகலாம்.” என தனாவின் முகம் பார்த்து கூறினான். அவளது முகமும் மலர்ச்சியடைந்தது.

கௌதமின் பார்வையும், தனாவின் முக மலர்ச்சியும், பனிமலரின் பார்வையில் விழுந்தது. பனி மலருக்கு இப்போதுதான் உரைத்தது, ‘அன்பரசனும் தனாவும், தங்கள் காதலை பரிமாறிய பின் தனிமையில் நேரம் செலவழித்ததில்லை. நான் நந்தி மாதிரி அவர்களுக்கு இடையில் இருக்கிறேன்.’ என்பதை உணர்ந்து, மானசிகமாக தன் தலையில் கொட்டிக்கொண்டாள்.

மறுநாள் அவுட்டிங்கில்:

‘அவர்களுக்கு தனிமை அளிக்க வேண்டும்’ என பனிமலர்.

‘பனிமலரின் மனதை தன் வசம் திருப்ப வேண்டும்’ என கௌதம் கிருஷ்ணா.

‘கதிர் அரசனின் காதுகளுக்கு செல்லாமல், பனிமலரை பாதுகாப்பாக கூட்டி வந்துவிட வேண்டும்’ என அன்பரசன்.

‘அன்பரசனின் கவனம் தன் மீது மட்டும் இருக்க வேண்டும்’ என தனலட்சுமி.

விதவித எண்ணத்துடன் பயணிக்கும், இவர்களது குற்றால பயணம், யார் வாழ்க்கையில் எப்படி விளையாடப் போகிறது?

†††††

வீல் என்று, மீண்டும் கேட்ட குழந்தையின் அழுகுரல், தன் கடந்த காலத்தில் உலன்று கொண்டிருந்த ஜீவனையும் உருவத்தையும், நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

இருவர் மனதிலும்,’அன்று குற்றால பயணத்தை தவிர்த்து இருக்கலாம்’ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டு ‘அடுத்து என்ன?’ என சிந்திக்க தொடங்கினர்.

கண்மூடி திறப்பதற்குள் குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. இன்று தான் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

ஆம்! இவ்வளவு நாளும் மருத்துவமனையில் தான் குழந்தை இருந்தது. குழந்தைக்கு போதிய வளர்ச்சி இல்லாததால், மிகவும் போராடி தான் குழந்தையை மீட்டுள்ளனர்.

வீட்டில் உள்ளவர்கள் சோகத்தில் இருப்பதால், குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு செவிலியை ஏற்பாடு செய்தார்கள்.

இவர்களின் நல்ல நேரமோ? அல்லது குழந்தையின் அதிர்ஷ்டமோ? குழந்தை பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்ட, அதே செவிலி பெண் சித்ரா, ஒரு வேண்டுகோளுடன் வர சம்மதித்திருந்தார். தன்னுடன் தன் வயதான அன்னையையும் அழைத்துக் கொண்டு, அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு வீடு எடுத்து தங்கிக் கொள்வதாக கூறினார். அதில் தவறு ஒன்றும் இல்லை என, தங்கள் அவுட் ஹவுஸில் தங்க ஏற்பாடு செய்தார்கள் குழந்தையின் குடும்பத்தார்.

சித்ராவின் கரங்களைப் பற்றிக் கொண்ட அந்த ஜீவன்,”நான் இருக்கும் மனநிலையில், குழந்தையை எவ்வளவு தூரம் பார்த்துக்க முடியும் என்று தெரியல. உங்களை என் அக்கா ஸ்தானத்தில் வைச்சு கேட்டுகிறேன். என் குழந்தையை நல்லா பாத்துக்கோங்க” எனக் கூறியது. 

“குழந்தையை பார்த்துக்கிறது மட்டும் என்னோட வேலை இல்லை. அவளுக்கு அன்பை கொடுத்து வளர்க்கறது என்னோட கடமை.” என்றவரின் மனதில் சில காட்சிகள் படமாக ஓடியது.

‘அது என்னோட பொறுப்பு. நான் அவங்களை கைவிட மாட்டேன்.’ என ஒரு கரத்தை பிடித்து செய்து கொடுத்த சத்தியம், அவரது மனதை ரனமாக அறுத்தது. அந்த நினைவை உதறி தள்ளியவர் குழந்தையுடன் கிளம்பினார் பாரியூரை நோக்கி.

வீட்டிற்குள் வரும் முன், அந்த ஜீவனின் கரத்தில் குழந்தையை கொடுத்து ஆரத்தி எடுத்தனர். நடந்து முடிந்ததை மாற்ற முடியாது, என மனதை தேற்றிக்கொண்டாலும், மனக்கோலத்தில் ஜோடியாக இந்த வீட்டுக்குள் நுழைந்தவர்களின் பிம்பம், அவர்களுக்கு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இப்போது தனியாக நிற்கும் அந்த ஜீவனை நினைத்து ரத்தக்கண்ணீர் வடித்தனர். அந்த ஜீவனின் இந்த நிலைக்கு தாங்கள் அனைவரும் ஒரு காரணம் என கூனி குறுகி போனார்கள்.

†††††

குழந்தைக்கு இதழினி என பெயர் சூட்டினர். 

குழந்தை இதழியை சித்ரா அன்பாக பார்த்துக் கொண்டார். தன் வயிற்றில் பிறந்திருந்தால் ‘ஒரு குழந்தைக்கு எவ்வளவு பாசத்தை வழங்கி இருப்பாரோ?’ அதைவிட பத்து மடங்கு பாசத்தை இந்த குழந்தையிடம் பொழிந்தார். ‘தான் பிறப்பேடுத்ததே இந்த குழந்தைக்காக தான்’ என மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்.

இதழி தன் பொக்கை வாய் சிரிப்பால் அவரை மயக்கி வைத்திருந்தாள். அவளுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தார் சித்ரா.

அந்த ஜீவன் தன் இழப்பையும் கவலைகளையும் மறக்க வேலையில் தன்னை முழ்கடித்து கொண்டது. அதன் ஓய்வு பொழுதுகள் அனைத்தும் இதழியுடன் செலவழிந்தது. அப்போது சித்ரா ஒதுங்கிக் கொள்வார். இதழினியின் உறக்கத்திற்கு நிச்சயம் அந்த ஜீவன் வேண்டும். அந்த ஜீவனிற்கும் அப்படியே. இருவரும் அடுத்தவர் ஸ்பரிசத்தில், தாங்கள் இழந்த உறவை மறக்க முயல்கின்றனரோ?

குழந்தையை காண முடியாத உருவம், மிகவும் ஏங்கிப் போய் தவித்திருந்தது. ‘தன் மூச்சு காற்றாக மாறிப்போன ஜீவனை’ வெளியே காண்பதால், அதன் மீது உள்ள ஏக்கம் சற்று குறைவே.

‘நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு நிலை வந்தது? கடவுளுக்கு கருணையே இல்லையா?’ என புலம்ப மட்டுமே முடிந்தது.

அதன் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது. அந்த பொறுமை முற்றிலும் கரைந்து வெடிக்கும் போது, உலகத்தில் இல்லாத அதிசயம் அதன் வாழ்வில் உண்டகும்.

இப்படியே அந்த ஜீவன் மருகவும், இந்த உருவம் உருகவும் நாட்கள் கடந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது.

மனமெங்கும் சந்தோஷமும், கோபமும் நிரம்பி வழிய, புயலென வீட்டிற்குள் நுழைந்தது ஒரு ஜீவன்..

இரண்டு வருடங்களுக்கு பிறகு, தன் கூட்டிற்கு திரும்பியிருக்கும் அந்த ஜீவனுக்கு, காத்திருப்பதோ பேரிடி.

அங்கு கூடியிருந்த குடும்பத்தாரை கண்டு மகிழ்ச்சி அடைந்தாலும், அதன் விழிகள் தேடி அலைந்தது, அங்கு கண்ணில் படாத இரு ஜீவன்களை.

அப்போது ரிங்காரமாக, அந்த ஜீவனின் செவிகளை தீண்டியது,”ங்ங்ங” என்ற மழலை குரல். மகிழ்ச்சியோடு திரும்பிய அதன் பார்வை ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது. 

விழிகள் காண்பதை நம்ப முடியாமல், கண்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல், மூளை மறத்தது. ‘இந்த நிமிடமே தன் மூளை வெடித்து சிதறி விடாதா?’ என ஏங்கி தவித்தது.