வெண்பனி 11

IMG-20220405-WA0023-4aa2029a

பனி 11

உன் மூச்சி காற்றுப்படும்

தூரத்திலிருந்தால் 

நான் காற்றில்லா

மண்டலத்திலும் 

உயிர் வாழ்வேன்!

வானிலிருந்து, வெண்பனி மேகங்களை உருக்கி ஊற்றுவது போல், ‘சோ’ என்று நீர் அந்த மலையின் உச்சியிலிருந்து கொட்டியது. காண காண தெவிட்டாத காட்சி. பார்ப்பவர் மனதை பரவசம் கொள்ள வைக்கும். அதில் நனைந்து ஒரு ஆட்டம் ஆடி விட வேண்டுமென மனதை ஏங்க வைக்கும். 

அது குற்றாலம். தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு சுற்றுலா தளம். மழைக்காலத்தில், இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காக, பல பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. அந்த கோயில் இருப்பது குற்றாலத்தின் மெயின் அருவியில். 

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் எனவும் கூறப்படுகிறது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

நண்பர்கள் நால்வரும், அந்த அருவியில் ஒரு ஆட்டம் போட்டுவிட்டு, இப்போது திருக்குற்றாலம் குற்றாலநாதர் சந்நிதியில் கைகூப்பி நின்றனர். அவர்கள் மனதில்,’என்ன விதமான பிரார்த்தனை இருக்கும்?’ என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. ஏற்கனவே நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

அருவியல் ஆட்டம் போட்டது பசியை தூண்டிவிட்டது. உணவு நேரத்துக்கு இன்னும் நேரம் இருந்தது. அங்குள்ள கடைகளில் சூடான பஜ்ஜியை, வாங்கி தங்கள் வயிற்றை சமாதானப்படுத்தினார்கள். குளிருக்கு இதமாக அங்கு கிடைத்த சூடான பாதாம் பாலையும் உள்ளே இறக்கினர். விதவிதமான செல்ஃபி போட்டோக்களை எடுத்து தள்ளினர். அதனால் வர போகும் வினையை தெரியாமல்.

அடுத்து? என்ற கேள்விக்கு, பனிமலரின் பதில் ஐந்தருவி என்றிருக்க, தனலட்சுமி போட்டிங் என்றாள். ஆளுக்கு ஒரு இடத்தை சொல்ல, எங்கு செல்வது என்ற குழப்பம்? 

இப்போதும் தன் மலரின் ஆசையை முன்னிருத்தி, ஐந்தருவிக்கு செல்லலாம் என அன்பரசன் கூறினான். அதில் தனலட்சுமியின் முகம் கூம்பிப் போனது.

அவளது முக மாற்றத்தை கவனித்த பனிமலர், அவளின் ஆசையை முன் நிறுத்தி, அவர்களுக்கு தனிமை அளிக்க,”ஒரு ஐடியா! அன்பும், தனாவும் போட்டிங் போங்க. நானும் கௌவும் ஐந்தருவி போறோம்.” என வழி கூறினாள்.

அவள் கூறியதை கேட்டு, திடுக்கிட்ட அன்பரசன், வேகமாக, “வேண்டாம், வேண்டாம் எல்லாரும் ஒரே இடத்துக்கு போலாம்.” என மறுத்துக் கூறினான். அதில் தனலட்சுமியின் முகம் மேலும் சோர்ந்தது.

‘இவன…’ நல்ல வார்த்தைகளால் மனதில் அர்ச்சித்து, அவனை தனியே இழுத்துச் சென்ற பனிமலர்,”உனக்கு அறிவுன்னு ஒன்னு இருக்கா அரசு? நீங்க ரெண்டு பேரும் விரும்புறீங்க. கொஞ்சமாவது அவ கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்றியா? அவளுக்கும் ஆசை இருக்குமில்ல? எப்ப பாரு என் பின்னாடியே வால் பிடிச்சு சுத்திக்கிட்டிருக்க.” எனப் பொரிந்து தள்ளினாள்.

அவள் சொன்னதில் உள்ள உண்மையை உணர்ந்தவன், முகம் வாடினான். “நீ சொல்றது புரியுது மலர். ஆனால், உன்னை தனியா அவன் கூட அனுப்ப, என்னால் முடியாது” என மறுத்தான்.

“கௌதம் முன்ன மாதிரி இல்ல, இப்ப மாறிட்டான். அது ஒரு பொது இடம். சுத்தியும் ஆள் இருப்பாங்க. நீங்களும் ஒரு மணி நேரத்துல வந்துடுவீங்க. அப்புறம் என்ன பயம்?” என அவனை சமாதானப்படுத்தி இழுத்துச் சென்றாள்.

அவளின் திட்டத்தின்படியே அவர்களை ஐந்தருவியின் அருகே இறக்கிவிட்டு, இவர்கள் போட் ஹவுஸை நோக்கி காரை திருப்பினார்கள். 

கௌதம் கிருஷ்ணாவிற்கு அளவற்ற மகிழ்ச்சி. ‘தன்னவள் தன்னுடன் தனிமையில்’ நினைவே இனித்தது. இந்தத் தனிமையை பயன்படுத்தி அவளது மனதை கவர்ந்து விட வேண்டும் என எண்ணினான். 

அன்பரசன் மனமே இல்லாமல் தனலட்சுமியுடன் பயணித்தான்.

†††††

புதிய பைனாப்பிளை (ஒரு மாற்றத்திற்கு. எவ்வளவு நாள் மாங்காயே வாங்குறது) வெட்டி, அதில் உப்பு, மிளகாய் தூள் போட்டு வாங்கி, அருவியை நோக்கி நடந்தனர். பைனாப்பிளை ஒரு கடி கடித்த பனிமலர், அதிலிருந்த புளிப்பு, உப்பு, கார சுவையை, கண் மூடி, முகம் சுருக்கி அதன் ருசியை அனுபவித்தாள். அவள் கனியின் ருசியை சுவைக்க, அவன் பெண்கனியின் முக அழகை ரசித்தான்.

பைனாப்பிள் வாங்கும் போது பேசியதோடு சரி, அதுக்கப்புறம் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மௌனமாக அருவியை நோக்கி நடந்தனர். அந்த மௌனமான நேரத்தை கௌதம் கிருஷ்ணா மிகவும் ரசித்தான். 

எத்தனையோ பெண்களுடன் எல்லை மீறி பழகி இருக்கான். அவர்களிடம் தோன்றாத ஏதோ இனம் புரியாத உணர்வு, பனிமலரிடம் தோன்றி அவனை வதைத்தது. அந்த இன்ப உணர்வை மிகவும் ரசித்தான், அதை ஒவ்வொரு நிமிடமும் ருசிக்கவும் விரும்பினான்.

‘அவள் தனக்கு வேண்டும்’ அது தற்காலிக தேவையென அவன் எண்ணியிருக்க, அது அப்படியல்ல, அவள் நிரந்தரமாக தனக்கு வேண்டுமென உணரும் காலம் இதோ வந்துவிட்டது.

ஆம்! அவர்கள் மௌனமாக நடந்து கொண்டிருக்க, அவர்கள் முன் புயலென வந்து நின்றான் கதிர் அரசன். அவன் பார்வை பெண்ணை ஈட்டியால் குத்தியது.

பெண், தன் முன் நின்ற கதிரை சத்தியமாக அங்கு எதிர்பார்க்கவில்லை. திகைத்துப்போய், திறுதிறுவென முழித்தாள். 

‘இவன் எங்க இங்க? சரியான நேரத்திற்கு வந்து காரியத்தை கெடுத்துடான்’ என கௌதம், கதிரை மனதில் வறுத்தெடுத்தான். கதிரின் பார்வை பனிமலரை தாண்டி முறைத்தது.

‘இவன் யாரை இப்படி பாசமா பார்க்கிறான்?’ என பெண் திரும்பினாள். அங்கு மூச்சு வாங்க நின்ற அன்பரசனை காணவும், அவள் முகத்தில் ஒரு நிம்மதி. ஓடி சென்று அவனுடன் நின்றாள். கதிரின் எரிச்சல் கூடியது. கதிரின் பைக்கை காணவும் காரை திருப்பி இருந்தான்.

“டேய் அரசு! இவன் எப்படி இங்கே வந்தான்?” அவளது உதடுகள் முணுமுணுத்தது.

“வாய வச்சிட்டு சும்மா இருடி. அவனே கடுப்புல வந்து இருப்பான் போலிருக்கு. நீ தேவையில்லாமல் பேசி, அதை அதிகப்படுத்திடாத” என்றான் அதே ரகசிய குரலில்.

“அங்க என்ன குசுகுசுன்னு பேச்சு? அன்பு நீங்க கிளம்புங்க. வீட்ல வந்து உன் கூட பேசுறேன்.” என்றான் கதிர் அழுத்தமாக. 

‘அப்பா! இப்ப தப்பிச்சுட்டோம்’ என பெருமூச்சுடன் திரும்பி நடக்க,”பனி நில்லு” என்ற அதே அழுத்த குரல், அவர்கள் நடையை தேக்கியது. அருகில் வந்தவன் பனிமலரின் வலது கரத்தை பற்றி கொண்டு,”நீங்க கிளம்புங்க. நான் இவளை கூட்டிட்டு வரேன்.” 

“அரசு அவள… நான.. கூப்…” அவனின் உஷ்ண பார்வையில், அதற்கு மேல் அன்பரசனுக்கு வார்த்தை வராமல் தடைபட்டது. 

இவ்வளவு நேரம் ‘அன்பரசன், ஏன் திரும்பினான்?’ என புரியாமல், அவன் மீது கோபத்திலிருந்த தனலட்சுமி,’அரசு’ என்ற அன்பரசனின் விழிப்பில் அவன் யாரென உணர்ந்து கொண்டாள். பெண்ணின் கண்கள் விரிந்து கொண்டது.

முதல் நாள் நடந்த ராகிங்கில் மேல் சட்டை இல்லாமல், அன்பரசன் கிரவுண்டை சுற்றியபோது, அவனின் கட்டுக்கோப்பான உடலை கண்டு, ரசித்த பல பெண்களில் தனலட்சுமியும் ஒருத்தி. அந்த நிமிடமே அவனிடம் மயங்கினாள். இவன் அன்பரசனை விட உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தான். அவள் மனம் உரைத்தது ‘ஆண்களே பொறாமை கொள்ளும் ஆணழகன். மாநிற கண்ணன்.’

மூவரும் இவளை திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே சென்றனர். கௌதமின் பார்வை கதிரை கொலை வெறியுடன் நோக்கியது. அவளோ பாவமாக செல்லும் அவர்களை பார்த்திருந்தாள். அவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை பொறுமை காத்த கதிர், பற்றிய கரத்தை விடாமல் அவளை இழுத்துச் சென்றான்.

அவனிருக்கும் கோபத்தில் இப்போது பேசினால் வார்த்தைகள் தடித்து விடும், என கோபம் குறையும் வரை ‘எங்கு செல்கிறோம்?’ என்று தெரியாமல், கால் போன போக்கில் அவளை இழுத்துச் சென்றான். அவளும் தவறு செய்த குழந்தையாக அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள். 

ஆம்! அவனின் கோபம் குறைவதற்காகவே காத்திருந்தான்.

காலையில் அவன் நண்பன் அழைத்து, இவர்கள் குற்றாலம் செல்வதாக தகவல் தந்ததிலிருந்து, இப்போது அவளை காணும் வரை அவன் உயிர் அவன் கையில் இல்லை. ‘கௌதமிடமிருந்து பனிமலரை காக்க வேண்டும்’ என்ற அலக்களிப்பு. ‘அவளுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது’ என்ற பயம். அது கோபமாக உருமாறி இருந்தது.

தகவல் கிடைத்தவுடன் தன் பைக்கை எடுத்துக்கொண்டு, குற்றாலத்தை நோக்கி பறந்தான். இவள் தனியே அந்த கௌதமுடன் இருந்ததை கண்டு கோபம். எங்கு வார்த்தையால் அவளை வதைத்து விடுவோம் என்று மௌனம் காத்தான்.

†††††

நீண்ட நேரம் நடந்தும் கதிரின் கோபம் குறையவில்லை. பெண்ணின் கால்கள் வலி எடுத்தது. அவளது நடை நின்றது. அவள் நிற்கவும் அவன் நடையிலும் ஒரு தேக்கம். 

“?” பார்வை மட்டும்.

“மனுசனா நீ? ஏன் இப்படி இழுத்துட்டு போற? என் கையை விடு ரொம்ப வலிக்குது?” அவன் கரத்திலிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொண்டாள்.

அவள் கேட்ட பிறகே சுற்றத்தை உணர்ந்து ஆராய்ந்தான். ஆள் அரவமற்று நடுவணத்தில் நின்றனர். தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். ‘அய்யோ கோபத்தில் என்ன காரியம் செய்து வச்சிருக்கேன்? இங்க இருந்து எப்படி போறது?’ என அவன் கண்கள் சுற்றி முற்றும் நோட்டமட்டது.

அவன் பார்வையை கண்ட பனிமலர் திடுக்கிட்டாள்.”கதிர் நீ பார்க்கிறத பார்த்தா, இந்த இடம் உனக்கு முன்ன பின்ன தெரியாத மாதிரி இருக்கு?” என சந்தேகமாக வினவினாள். 

“ஏய் இம்ஸ! வாய மூடுறயா. எல்லாம் உன்னால வந்தது.”

“நான் என்ன பண்ணினேன்? நீதான் என் கைய புடிச்சு இழுத்துட்டு வந்த.” என சண்டைக்கு கிளம்பினாள். 

“ஆமா உனக்கு ஒண்ணுமே தெரியாது. ரொம்ப அப்பாவி. எதுக்குடி அந்த கௌதம் கூட குற்றாலம் வந்த?”

“அவன் என்னோட பிரெண்ட். நாங்க வந்தா உனக்கு என்ன வந்தது?”

“அவனே ஒரு பொறுக்கி. அவன் கூட வந்திருக்க. எப்படா சான்ஸ் கிடைக்கும், உன்னை அடையலாம்ன்னு காத்துகிட்டு இருக்கான். இதுல அவன் கூட தனியா இருக்க. உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா?”

“அவன் முன்ன மாதிரி இல்ல. இப்ப திருந்திட்டான். நல்ல பிரண்டா தான் பழகுறான்.” என அவனுக்காக வக்காலத்து வாங்கினாள்.

அவள் சொன்னதை கேட்டு பல்லை கடித்தவன்,”அவன் உன்னை நெருங்க பிரெண்டுங்கர வார்த்தையை யூஸ் பண்ணியிருக்கான். அது புரியாமல் நீ லூசு மாதிரி அவன் கூட பழகிட்டிருக்க.”

“லூசு கூசுன்னு சொன்ன எனக்கு கெட்ட கோவம் வந்துரும். என்னோட விஷயத்தில் நீ தலையிடாத.”

“தாயே பரதேவதையே! நம்ம சண்டைய அப்புறம் வச்சுக்கலாம். இப்ப இங்க இருந்து போறதுக்கான வழியை பார்ப்போம்.” 

அப்போதுதான் சுற்றம் உணர்ந்தது. நடுபகலிலும் அந்த அடர்ந்த வனத்தில் வெளிச்சம் கம்மியாகவே இருந்தது. ‘தாங்கள் எங்கே இருக்கிறோம் என்று தெரியவில்லை. எப்படி செல்வது?’ பயந்து போனாள். முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்புகள் பூத்தது. வியர்வையை துடைக்க கையை தூக்க, அவள் கையில், வாங்கிய அண்ணாச்சி பழம் அழகாக பிளாஸ்டிக் கவரில் வீற்றிருந்தது. 

மகிழ்ந்து போனவள் அதை ருசிக்க ஆரம்பித்தாள். 

அவளைக் கண்ட கதிருக்கு சிரிப்பு வந்தது. “எப்படி மாட்டிக்கிட்டாலும், உன்னோட வேலையில் கவனமா இரு” என நக்கல் அடித்தான்.

“கண்ணு வைக்காத கதிரு. வேணும்னா நீயும் எடுத்துக்கோ” என கவரை அவனிடம் நீட்டினாள். 

“அந்த கௌதம் வாங்குனது தானே? எனக்கு வேண்டும்.”

“ரொம்ப சந்தோஷம்” என்று முழுவதையும் உண்டு முடித்தாள். வந்த பாதையில் திரும்பி நடந்தனர்.

†††††

நீண்ட நேரம் நடந்தும், அவர்களால் சரியான பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை நேரம், இருந்த அரை வெளிச்சமும் குறையத் தொடங்கியது. இருவருக்கும் டென்ஷன் ஏறியது. இப்போதுதான் கையிலிருக்கும் மொபைலின் ஞாபகமே வந்தது. 

தலையில் தட்டிக் கொண்டவன், தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைபேசியை எடுத்து இயக்கினான். அந்தோ பரிதாபம் டவர் சுத்தமாக இல்லை. பனிமலரின் கைப்பேசிக்கும் இதே நிலை. 

“ச்ச இப்படி டவர் இல்லாம சதி பண்ணுதே” சலித்தாள்.

“ம்ம் உங்க அப்பா கிட்ட சொல்லி, காட்டுல இரண்டு டவர் வைக்க சொல்லாம்” என்றான் நக்கலாக.

“வேண்டாம் கதிரு, அவர பத்தி என்கிட்ட பேசாத. ஐ ஹேட் ஹிம்” ஆத்திரத்தில் முகம் சிவந்தவள் உடனே தனிந்து,”வேணா ஒண்ணு பண்ணலாம், என்னோட புருஷன் கிட்ட சொல்லி டவர் வைக்கலாம்.” அவனை விட நக்கலாக முடித்தாள்.

அவளை ஒரு தினுசாக பார்த்தவன்,”பாவம்! எந்த ஜீவன் உன்கிட்ட மாட்டிட்டு முழிக்க போகுதோ?”

“அது அந்த ஜீவனோட கவலை. முதல்ல என்னோட கவலையை தீர்த்துவை. இப்ப என்னோட வயிறு சத்தம் போடுது.”

“ஏய் இம்சை! எங்க மாட்டிகிட்டு இருக்கோம்? இப்ப பசிக்குதுன்னு சொல்ற.”

“போ கதிரு, நான் மத்தியானமும் சாப்பிடல.” என சிணுங்கினாள்.

அவளை பார்க்க பாவமாக இருந்தது, பசி தாங்க மாட்டாள். வேறு வழி இல்லையே? ஒரு பெருமூச்சுடன் பேச்சை மாற்றும் பொருட்டு,”நடு காட்டுல மாட்டி இருக்கோம். எப்படி வீட்டுக்கு போறதுன்னு உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா?”

“அதுதான் நீயும் துணைக்கு இருக்கயே, அப்பறம் என்ன பயம்? இப்ப எனக்கு பசிக்குது. அதுக்கு ஏதாவது வழி சொல்லு.”

எப்போதும் ஏட்டிக்கு போட்டியாகவே செய்து கொண்டிருப்பாள். அவளுக்கு தன்மீது நம்பிக்கையா? ஆச்சரியமாகத்தான் இருந்தது, ஆனாலும் இனித்தது.

“இப்போதைக்கு காட்டை விட்டு போக முடியும்னு நம்பிக்கை இல்லை. இப்பையே வெளிச்சம் கம்மியாயிடுச்சு. இருட்டிடுச்சுன்னா ரொம்ப கஷ்டம். அதுக்கு முன்னாடி பாதுகாப்பா ஒரு இடத்தை பாக்கணும். கொஞ்ச நேரம் அமைதியா வா” பொறுமையாக கூறினான். சூழ்நிலையை உணர்ந்தவள் அமைதியானாள்.

அவர்களது நல்ல நேரம், சிறிது நேரத்திலேயே ஒரு மர வீடு கண்ணில் பட்டது. அதில் தொங்கிய கயிற்றிலான ஏணியில், முதலில் ஏறிய கதிர் அந்த இடத்தை ஆராய்ந்தான்.

ஒருவர் தாராளமாக தங்கிக் கொள்ளும் இடம். பொருட்கள் எதுவும் இல்லை. யாரோ தனிமை விரும்பி கட்டி வைத்தது போலிருந்தது.

கீழே வந்தவன் அவளிடம்,”சின்ன இடமாதான் இருக்கு. ரெண்டு பேர் தங்கறது கஷ்டம். ஆனால் அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகணும். வேற வழி இல்ல.” 

சம்மதமாக தலையசைத்தாள்.”சரி வா சாப்பிடறதுக்கு ஏதாவது கிடைக்குதா பாக்கலாம். இங்க வீடு கட்டி இருக்காங்கனா, பக்கத்துல ஏதாவது ஓடை இருக்கணும்.” அவனின் கணிப்பு சரியானது.

சிறிது நேரத் தேடலின் பயனாக, சற்று தூரத்தில் ஒரு ஓடையும், அங்கு சில பழ மரங்களும் இருந்தது. கை கால்களை கழுவியவர்கள், அந்த பழங்களை பறித்து உண்டார்கள். எந்த ரசாயன பொருளும் கலக்காமல் வளர்ந்த காட்டு மரத்தின் கனி அமிர்தமாக இனித்தது. ஓடை நீர் தித்தித்தது.

அவர்கள் மீண்டும் மர வீட்டை அடையும் முன், நன்றாகவே இருட்டிவிட்டது. மொபைல் டார்ச்சின் வெளிச்சத்தில் மரவீட்டை அடைந்தனர். இடித்துக் கொண்டு அமர வேண்டிய சிறிதளவு வீடு. 

இளமை தனிமை இருட்டு மூன்றும் மிகவும் ஆபத்தான காம்பினேஷன். அப்போ அடுத்து?