பனி 14
இனி என் உயிரே பிரிந்தாலும் சரி
என் காதலை
நீ ஏற்கும் வரை
உன்னை துரத்துவேன்
உன் சுகமான இம்சையாக
அறை எங்கும் மனதை மயக்கும் மலர்களின் மணம் சூழ, மேஜையில் பால், பழங்கள் காத்திருக்க, மலர்களால் அழகுற அலங்கரித்த மஞ்சத்தில், மஞ்சள் மணம் காயாத மாங்கல்யம் கழுத்தை அலங்கரிக்க, புது புடவை உடலை தழுவ, முகம் எங்கும் குழப்பம் சூழ அமர்ந்திருந்தாள் பனிமலர்.
தனது புத்தம் புது மனைவியை தழுவி, இந்த பொழுதை ரம்யமாக்கி, மங்கையவளின் மஞ்சத்தில் மட்டுமின்றி, நெஞ்சத்திலும் இடம் பிடிக்க வேண்டிய மணாளனோ, தனிமையை அவளுக்கு பரிசளித்து, அவனும் அதை துணையாக கொண்டு, பால்கனியில் நின்று வளர்பிறையை வெறித்திருந்தான்.
‘பனி விழும் இரவில், நனைந்தது பனியில்’ என்று இருக்க வேண்டிய நேரத்தில், அதில் நனையாமல் அந்த பிறையில் அப்படி என்னதான் இருக்கிறதோ? அதையே ஒரு மணி நேரமாக பார்ப்பதற்கு.
அவனுக்கு அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. ‘தான் எடுத்த முடிவு சரிதானா?’ என முதல்முறையாக சந்தேகம் வந்தது. ‘அவளால் தன்னை கணவனாக ஏற்றுக் கொள்ள முடியுமா?’ என்ற பெரிய கேள்வி, அவன் முன் பூதாகரமாக எழுந்து நின்றது.
நினைவுகளில் சஞ்சரித்தவனை, அங்கு வீசிய ஈர காற்றின் குளுமை சுயநினைவிற்கு கொண்டுவந்தது. ஒரு பெருமூச்சுடன், ‘இனி எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற முடிவுடன், கதவை அடைத்து தனதறையில் நுழைந்தான். அவளை கண்ட அவனது கால்களில் சில நொடி தேக்கம்.
அங்கு பெண்ணவளோ பனி சிற்பமாக, மடக்கிய முழங்காலில் தன் முகத்தை புதைத்து உறைந்து போயிருந்தாள். அவளின் இந்த நிலையை கண்ட ஆணின் மனதிலோ பெரும் பாரம். மெல்ல அவள் அருகில் மஞ்சத்தில் அமர்ந்தவன், தன் வலது கரத்தை அவளது தோளில் பதித்தான்.
அவனின் தொடுதலை உணர்ந்த பெண் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அலங்காரத்தில், வடித்து வைத்த சிற்பமாக ஒளிர்ந்த பெண்ணை கண்ட ஆண் மதி மயங்கினான். பெண்ணின் மீது பதித்த பார்வையை விலக்க முடியாமல் திண்டாடினான். அவனது விழியோடு அவளது விழி கவ்வி கொண்டது. அவனது விழிகளில் ரசனை, அவளது விழிகளிலோ பயம்.
பயமா?
ஆம்! பயமே தான். இந்த அறை அவளுக்கு புதியது இல்லை. பல இரவுகள் இங்கு துயில் கொண்டிருக்கிறாள். தன் எதிரே இருக்கும் ஆண்மகனும் புதியவன் அல்ல. ஆனால் தற்போது தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பந்தம் புதியது. மிக மிகப் புதியது. எதிர்பார்க்காததும். இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது கூட தெரியவில்லை?
அவளது விழிகளில் தோன்றிய பயத்தையும், முகத்தினில் இருந்த கலக்கத்தையும் காண முடியாதவன்,”என்னை மன்னிச்சிடு பனி”
அந்த மன்னிப்பு எதற்கென அவன் மட்டுமே அரிந்த உண்மை.
அவன் மன்னிப்பு கேட்டதும் அந்த விழிகளில் பயம் மறைந்து, கோபம் குடியேறியது.”ஏன்டா இப்படி பண்ணுன? என்னை கல்யாணம் பண்ண சொல்லி உன்னை கேட்டேனா? நீ ஆசைப்பட்டவளை விட்டுட்டு என்னை எதுக்கு கல்யாணம் பண்ணியிருக்க. இதனால உன்னோட லைஃப்பும் சேர்ந்து தான் பாதிக்கும்.” அவன் வாழ்வை நினைத்து மறுகியவளின் வார்த்தைகளில், மரியாதை சுத்தமாக காணாமல் போயிருந்தது.
இதை அவன் உணர்ந்தாலும் அவளிடம் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. அவன் எதிர்பார்ப்பது அவளின் காதலை. இப்போது அவளிருக்கும் சூழ்நிலையில் அது கிடைக்குமா என்பது சந்தேகமே?
“என்னோட வாழ்க்கையை எப்படி காப்பாத்திக்கனும்னு எனக்கு தெரியும். மனச போட்டு உலப்பிக் கொள்ளாமல் தூங்கு.” அவளது மனதை அமைதிபடுத்த முயன்றான்.
அவன் கூறியதை கேட்ட பெண்ணின் கோபம் குறைவதற்கு பதில் ஏறியது. அவனை விட்டு தள்ளி சென்றவள்,”அது என்ன உன்னோட வாழ்க்கை? இப்ப நீ செஞ்சு வச்சிருக்க காரியத்தால் என்னோட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கு.” அவள் தான் அவன் வாழ்க்கைக்காக கலங்கினால் என்பதை மறந்து போய் சீறினாள்.
“இனி உன்னோட வாழ்க்கை என் கூட தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.” உறுதியாக கூறினான்.
“எனக்கும் மனசு இருக்கு. அதில் ஆசைகளும் இருக்கு. எனக்கு உன்னை பிடிக்கலை. என்னால் உன் கூட வாழ முடியாது.”
“எது உன்னோட ஆசை? அந்த கௌவுதம் பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்கறதா?” என தன் மனைவியாகிவிட்டவளை பார்த்து தேவையில்லாத வார்த்தைகளை விட்டான்.
அவனின் சொற்கள் பெண்ணின் மனதை பாதித்தது. அடிபட்ட பார்வையோடு அவனைக் கண்டவள்,”அது உனக்குத் தேவையில்லாத விஷயம். எனக்கு டைவர்ஸ் குடு.”
அவளின் பார்வையை கண்டு இளகியவன், அடுத்து அவள் கேட்ட விவாகரத்தில் உடல் இறுகினான்.”டைவர்ஸ் எல்லாம் குடுக்க முடியாது. இந்த ஜென்மத்தில் உனக்கு நான், எனக்கு நீ. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.”
“உன் கூட என்னால் வாழ முடியாது. எனக்கு டைவர்ஸ் வேணும்” மீண்டும் அதையே கேட்டாள். ஆணின் கோபம் உச்சத்தை தொட்டது.
ஜன்னல் அருகே நின்றவளிடம் சென்று, உடல்கள் உரச நெருங்கி நின்றவன், அவளது தாடையை பற்றி தன் முகம் காண வைத்தான். அவனது மூச்சுக்காற்று பெண்ணின் முகத்தை தீண்டியது. அவளது விழிகளில், விடை பெற்றிருந்த பயம் மீண்டும் குடியேறியது. இப்போது அந்த பயத்தை உணர்ந்தாலும் உருகவில்லை.
“போனா போகுது சின்ன பொண்ணு, திடீர் கல்யாணத்தில் பயந்து போயிருக்கன்னு விட்டா, ரொம்ப பேசிக்கிட்டே போற? இனி நீ சாகும் வரை என்னோட பொண்டாட்டியா மட்டுமே இருப்ப. எனக்கும் அதுவே. என் உயிர் மூச்சு உள்ளவரை நீ மட்டுமே என் மனைவி. உனக்கு என்னோட வாழ்றதுக்கு டைம் கொடுக்கலாம்னு நினைச்சேன். இப்ப நீ பேசுறதை பார்த்தால் அது தப்போன்னு தோணுது?” என்று அவளது விழிகளை உற்று நோக்கினான்.
அதுவோ சாசர் போல் விரிந்து கொண்டது. அதில் மூழ்கத் துடித்த மனதை அடக்கியவன்,”இப்படி லூசு மாதிரி பினாத்திக்கிட்டே இருந்தா, இந்த நிமிஷமே ஃபர்ஸ்ட் நைட்டை கொண்டாடிடுவேன். இந்த அலங்காரங்களாவது வேஸ்ட்டா போகாமலிருக்கும்.” என்றான் அவளை தலை முதல் பாதம் வரை ரசனையாக பார்த்தவாறு.
பெண் சர்வமும் அடங்கி போக விழித்தாள்.”சரி வா. இந்த நாளை ஸ்பெஷல் நாளா மாத்திடலாம்” என்றவன் அவள் சுதாரிக்கும் முன் தன் கரங்களில் அள்ளியிருந்தான்.
இப்போது தெளிந்த பெண், “என்னை விடுடா” என தன் கரம் கொண்டு அவன் மார்பை குத்தினாள். உடற்பயிற்சியால் கிண்ணென்றிருந்த அவன் உடம்பில், அவள் அடிகள் அனைத்தும் தென்றலாக மோதி வீணானது.
அவளது அடிகள் அனைத்தும், ஆணின் மனதையோ உடலையோ, துளி கூட அசைக்கவில்லை. இருந்தாலும் அவளை சீண்டும் பொருட்டு,”ஏய் பனி அடிக்காதடி. வலிக்குது. இப்படியே அடிச்சிட்டிருந்த, நான் படுக்கைக்கு போற வரைக்கும் வெயிட் பண்ண மாட்டேன். இங்கேயே இப்பவே லிப் லாக் பண்ணிடுவேன்.” அப்பட்டமாக காதல் மிரட்டல் விடுத்தான்.
இனி பெண் அடிப்பாளா? மாட்டவே மாட்டாள். அவனது மிரட்டலில் கையோடு சேர்ந்து வாயும் அடங்கியது.
அவளை மஞ்சத்தில் மலரோடு மலராக கிடத்தியவன், தானும் அவள் அருகில் படுத்தவாறு, அவள் விழியோடு விழி கலந்து,”என்ன ஸ்டார்ட் பண்ணலாமா?”
பெண்ணால் தன் உமிழ் நீரை கூட விழுங்க முடியவில்லை. பயத்தில் நா வறண்டது. அவள் நிலையை உணர்ந்தவன் மலரத் துடித்த புன்னகையை மறைத்தவாறு,”என்னமோ முதல் தடவை என்கிட்ட படுக்கிற மாதிரி பயப்படுற. இது என்ன நமக்கு புதுசா?”
திகைப்பிலிருந்த பெண் இன்னும் மீளவில்லை. அவள் விழித்திருக்கும் போதே, அவளது நெற்றியில் தன் இரண்டாவது முத்திரையை மென்மையாக பதித்தான். அந்த நெற்றி முத்தம் அவளை என்னவோ செய்தது? அவள் விவரம் தெரிந்த பின் அவளுக்கு (தெரிந்து) கிடைத்த முதல் முத்தம், அவளது மனதை அவன் வசம் சாய்க்க போதுமாக இருந்தது.
விழியெடுக்காமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது முக வடிவம், அவள் மனதில் கணவனாக பதியத் தொடங்கியது.
அவளது அசையா பார்வை ஆணவனையும் தன்வசம் இழக்க வைத்தது. எப்போதும் போல் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டவன்,”உனக்கு கொஞ்ச நாளவே டென்ஷன். மனசை போட்டு குழப்பிக்காமல் ஃப்ரீயா விடு. எல்லாம் தானா சரியாகும். இப்ப தூங்கு” என மீண்டும் ஒரு முத்தத்தை பதித்து, அவளை தன் கையனைவிற்கு கொண்டு வந்து கண்களை மூடினான்.
ஏனென்றே தெரியாமல் பனிமலரும் நிம்மதியாக கண்ணயர்ந்தாள்.
†††††
சூரிய கதிர் அவளது முகத்தில் பட்டு உறக்கத்தை கலைத்தது. பறவைகளின் இன்னிசையோடும், கண் முன் தெரிந்த கணவனின் முக தரிசனத்தோடும், அதைவிட இன்னும் அவன் அணைப்பில் இருக்கும் இதத்தோடும், அன்றைய நாள் அவளுக்கு அழகாக தொடங்கியது.
அவனது உறக்கம் கலையாதவாறு அவனது கரத்தை விலக்கி எழுந்தவள், குளித்து முடித்து கீழே தோட்டத்திற்கு சென்றுவிட்டாள். தோட்டத்தில் இருந்த மேடையில் அமர்ந்தவாறு, இரவு நடந்ததை மனதில் அசைபோட்டாள். கண் முன் தோன்றியது அவன் இட்ட முத்தம். அந்த முத்தத்தின் தித்திப்பில் லயத்து போனாள்.
அவனது கரம் பட்ட இடையும், தன் மேனியை உரசிய அவன் உடல் ஸ்பரிசமும், இன்னமும் தன் மீது இருப்பது போல் குறுகுறுப்பை ஏற்படுத்தியது. மனம் முழுவதும் அந்த இனிமையான நினைவுகளில் மூழ்கி தன்னிலை மறந்தாள்.
சிறிது நேரத்திலே விழித்துக் கொண்டது அவளது மூளை,’அவன் உனக்கு செய்தது துரோகம். அவன் எப்படி உனக்கு தாலி கட்டலாம்?’ எனத் தவறாக எடுத்துரைத்தது.
‘உன் சம்மதத்திற்கு பிறகே தாலி கட்டினான். அது எப்படி தவறாகும்?’ என மனம் நல்வழியில் திருப்பியது.
‘சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, உன் கழுத்தில் தாலி கட்டியவன் உனக்கு வேண்டாம்’ மூளையின் கட்டளை.
‘அவ்வளவு பெரிய இக்கட்டில் இருந்த போதும், உன் சம்மதத்துடன் தாலி கட்டிய அவனே உன் கணவன்’ என மனதின் ஆசை.
மனம், மூளை இரண்டுக்கும் நடுவில் போராடி தோற்றாள். ‘அடுத்து?’ என்ற கேள்வியோடு, தலையில் கரம் பதித்து அமர்ந்து விட்டாள் பனிமலர்.
சரியாக அந்த நேரம், அங்கு வந்த அன்பரசன் அவளின் கோபத் தீயில் நெய்யை ஊற்றினான்.”மொட்டு என்னை மன்னிச்சிடுடி”
அவனைக் கண்ட பின் அவளது கோபம் பல மடங்கு பெருகியது. ‘இப்போது இருக்கும் மனநிலையில் அவனுடன் பேசினால், கோபத்தில் வார்த்தைகள் தடித்து விடும்’ என உணர்ந்தவள், அந்த பேச்சு தொடராமலிருக்க, அந்த இடத்தை விட்டு நகர முயன்றாள். ஆனால் அவளை எழவிடாமல் தடுத்து மீண்டும் அமர வைத்தான்.
அதில் கோபம் அதிகமானது. வார்த்தைகள் தாறுமாறாக வர தொடங்கியது,”என்னை தான் நேத்தே கொன்னு போட்டியே. அப்புறம் எதுக்கு மறுபடியும் மறுபடியும் வந்து பேசுற?”
“ப்ளீஸ் டி, அப்படி எல்லாம் சொல்லாத. உனக்கு நேத்திருந்த நிலை தெரிந்தும், என்னை குறை சொல்லலாமா? உனக்கு ஒரு அவமானமும் வரக்கூடாது, யாரும் உன்னை தப்பா பேசக்கூடாது என்று தான் நான் அப்ப….” அவளது உஷ்ண பார்வையில் அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்தது.
“மத்தவங்க தப்பா பேசக்கூடாதுன்னு நீயே என்னை கொன்னு போட்ட. நீ செய்ததை விட பெரிய அவமானம் வேறு எதுவும் இல்லை.”
“ப்ளீஸ் டி மொட்டு, இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சு ஏத்துக்கோ. இனிமேல் எந்த தவறும் செய்ய மாட்டேன்” எனக் குழந்தையைப் போல், அவள் காலடியில் அமர்ந்து, அவள் மடியில் முகம் புதைத்து கெஞ்சினான்.
அவளது கரம் நீண்டு, அவன் தலை கோத விளைந்தது. அதை தடுத்த மூளை, ‘அவன் துரோகி. மன்னிக்காதே’ என்றது. உடனே தன் கரத்தை கட்டுப்படுத்தி பின்னிழுத்து கொண்டாள். அன்பரசனின் முகத்தில் வருத்தம் பரவியது.
அதே நேரம், இந்த காட்சியை தன் அறையின் பால்கனியில் நின்று பார்த்த கதிரின் விழிகள் கோபத்தில் சிவந்தது. அவனது நினைவுகள் பின்னோக்கி நேற்று நடந்த நிகழ்விற்கு சென்றது, அவனுடன் பனிமலர், அன்பரசனின் நினைவும் அங்கு பயணித்தது.
†††††
மணப்பெண் பனிமலரை தன் கடும் சொற்களால் சுகந்தி வதைத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு குரல் ஓங்கி ஒழித்தது,”நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்”
குரல் வந்த திசையை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியது. அங்கு தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றான் அன்பரசன்.
அவனை கண்ட மணப்பெண்ணின் மலர் மனம் கசங்கியது. இந்த நிமிடமே பூமி பிளந்து தன்னை உள் வாங்கி கொள்ளாத? என பெண் ஏங்கினாள். அவன் மீது கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.
அவன் சொன்னதை கேட்ட தனலட்சுமி, உயிர் தொலைத்து நின்றாள்.
அன்பரசன்! ஒரு நாள் ஆண்டவன் ஈஸ்வரிடம் வேண்டுதல் வைத்தான், ‘பனிமலரின் வாழ்வை காக்க, என் வாழ்வை இழக்க தயார் என்று.’ இப்போது அந்த வாய்ப்பு கிட்டியது.
அவன் இழந்தது பனிமலரின் நட்பையா? வாழ்க்கையையா? இல்லை இரண்டையுமா?