வெண்பனி 16

IMG-20220405-WA0023-cf140585

பனி 16

முன் தினம் நடந்த நினைவுகளில் உழன்று கொண்டிருந்தவர்கள் நிகழ்காலத்துக்கு திரும்பினர்.  தன்னைக் கெஞ்சிக் கொண்டிருந்த அன்பரசனை கண்டு உள்ளம் குமுறி கொண்டு வந்தது. பனிமலரால் அன்பரசன், ‘தன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று சொன்னதை மன்னிக்க முடியவில்லை.

அவள் எதற்காக கௌதமை திருமணம் செய்யும் முடிவை எடுத்தாலோ? அதற்கு அர்த்தமே இல்லாமல் ஆக்கியிருந்தது அவனது வார்த்தைகள். அவன் மேல் கொலை வெறியிலிருந்தாள்.

“சாரி மலர் இனி இப்படி பேச மாட்டேன். இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சுடு. அது கஷ்டம்தான். இருந்தாலும் மன்னிச்சிடு. உன் அரசு பாவமில்லை. உன்னோட பேசாமல் என்னால் இருக்க முடியாது.” என உருகினான். 

“சாரி மலர், சாரி மொட்டு” என நூறு தடவைக்கு மேல் புலம்பி விட்டான்.

பெண்ணின் ஒரு மனம் ‘என்னை இகழ்ந்தவர்களின் முன், நான் தலை குனிய கூடாது என்பதற்காகவே, அவன் அப்படி சொன்னான். அவன் சூழ்நிலை கைதி’ என எடுத்துக் கொடுக்க, அவளது கை நீண்டு அவன் தலை கோத விளைந்தது, மறு மனம் ‘என்னதான் சூழ்நிலை என்றாலும், அவன் எப்படி அப்படி சொல்லலாம்?’ என முறுக்கிக் கொண்டு, அந்தக் கரத்தை தடுத்தது. 

தன் கை அவனது தலையை நோக்கி செல்வதும், எடுப்பதுமாக சிறிது நேரம் அலைபாய்ந்து கொண்டிருந்தாள். அவனை மன்னிக்கவும் முடியவில்லை, தண்டிக்கவும் முடியவில்லை. இருதலைக்கொல்லி எறும்பாக மனம் முரண்டியது.

அவளின் அசைவில் அவளது உணர்வை உணர்ந்த அன்பரசன் மேலும் உடைந்து போனான். ‘என்னாலையே என்னை மன்னிக்க முடியவில்லையே, என் மொட்டுவால் எப்படி மன்னிக்க முடியும்?’ என தன்னைத்தானே நிந்தித்து கொண்டான்.

அவளது மூளைக்கும் மனதிற்கும் நடந்த சண்டையில், மனம் வென்றது.

தன் மடியில் புதைந்து மழலைப் போல் கெஞ்சிக் கொண்டிருந்தவனை கண்டு உள்ளம் பாகாக உருகியது. அதன் பின் அனைத்தும் தூர போனது. அவன் மட்டுமே கண் முன் நின்றான். தானாக கரங்கள் நீண்டு அவன் தலை கோதியது.

அன்பரசனுக்கு ஆனந்தம் கூத்தாடியது.  ஆயிரம் சூரியனின் பிரகாசம் அவன் முகத்தினில். விருட்டென எழுந்து அவளது முகம் கண்டான், பழைய முகப்பொலிவு இல்லை என்றாலும், சிறு புன்னகை இருந்தது. 

“மொட்டு என்னை மன்னிச்சிட்டியா?” குரல் நடுங்கியே வந்தது. 

ஒரு பெருமூச்சு பெண்ணிடம்,”போ அரசு. போய் வேலையை பார்.”

முன்பை போல் இல்லை என்றாலும், தன்னோடு, தன் மொட்டு பேசியதில் மனம் மகிழ்ந்து போனான் அன்பரசன். 

அந்த மகிழ்ச்சியோடு என்ன செய்கிறோம்? ஏது செய்கிறோம்? என்று உணராமலேயே அவளை அணைத்து, கன்னத்தில் இதழ் பதித்து ஓடிவிட்டான். காமத்தில் சேராத அன்பு முத்தம். ஒரு குழந்தைக்கு பிடித்த பொம்மையை கொடுத்தால், அதன் எதிரொலியாக கட்டியணைத்து ஒரு முத்தம் கொடுக்குமே அதேபோல். கள்ளம் கபடம் எதுவுமில்லாமல், தன்னை மீறி வெளிப்பட்ட அன்பின் அடையாளமே அந்த முத்தம்.  அண்ணி என்பவளும் இன்னொரு அன்னை தானே?

முதல் முறையாக அவன் உணர்ச்சிவசப்பட்டு, இப்படி செய்ததை கண்டு பெண் திகைத்துப் போனாள். சிறிது நேரத்தில் திகைப்பு நீங்கி சிறு புன்னகை தோன்றியது. 

நினைவிலிருந்து வெளிவந்த கதிர் மீண்டும் பால்கனியில் நின்றான். அவன் பார்வையில் இந்த காட்சி விழுந்தது. சிறு ரசனையோடு அவர்களை பார்த்திருந்தான். முன்னை போல் அவர்கள் மேல் பொறாமை வரவில்லை. மாறாக ஒரு நிறைவே இருந்தது.

†††††

அன்பு அங்கிருந்து சென்ற பின், கதிர், அன்புவின் அறையாக இருந்து, நேற்று தங்கள் அறையாக மாறிய, கதிரின் அறைக்குள் நுழைந்தாள். 

நுழைந்தது தான் தாமதமென கதிரின் இறுகிய அணைப்பில் சிக்கி கொண்டாள். பெண்! ஒரு நிமிடம் திகைத்தாள் என்பதை விட பயந்து போனாள். உடனே தெளிந்தவள்,”கதிர் என்ன விளையாட்டு இது? என்னை விடு” என அவன் கைகளை பிரிக்க முயன்றாள். 

அவன் பின்னிருந்து அவளை இடையோடு அணைத்திருந்ததால், அவனை தள்ளவும் முடியவில்லை. அவனாக விட்டால் தான் அவளால் வெளி வர முடியும். ஆனால் அவனோ அவள் அருகாமையை இழக்க விரும்பாமல், மேலும் தன்னுள் இறுக்கி, தன் முகத்தை அவளது கழுத்து வலைவில் புதைத்தான். அவனது மூச்சின் வெப்பம் பெண்ணின் கண்ணம் தீண்டியது. பெண்ணின் தேகம் சிலிர்த்தது.

ஆணின் தவிப்பு அடங்கிவிடும்

 பெண்ணின் தவிப்போ தொடங்கி விடும் 

இப்போது தவித்து போனது என்னவோ பெண்மை தான்.”ஏன் இப்படி… பண்…?” அவளை போல் வார்த்தைகளும் சிக்கி தவித்தது.

“என் பொண்டாட்டி கிட்ட இப்படி பண்ணாம, வேற எப்படி பண்ணனும்? நீயே சொல்லு.” அவள் நிலை உணர்ந்து சரசம் பேசினான்.

“ஏன் இம்ஸை பண்ணுற? இதுவரை நீ இப்படி பண்ணுனது இல்லையே?” குற்றாலத்தில் நடந்ததை மறந்து போய்விட்டாலோ?

‘என்னோட இம்ஸை அரசியே நீதான் டி என் செல்ல பொண்டாட்டி. அன்னைக்கு குற்றாலத்தில் என்னை ஒட்டிக்கிட்டு, இதைவிட இம்ஸை பண்ணுன டி என் இம்ஸை அரசி.’ என மனதில் கொஞ்சியவன், “அப்ப எல்லாம் நீ என் பொண்டாட்டி இல்லையே?” என வாய் வார்த்தைகளாக வெளிவந்தது.

அவன் பதிலில் திகைத்து,”இந்த மஞ்சள் கயிறு கட்டிட்டா நான் உன் பொண்டாட்டி ஆயிடுவேனா?”

“இல்லையா பின்ன?” அவன் இதழ்கள் அவளது செவி மடலை தீண்டியது.

பாரம்பரியத்தில் ஊறி போயிருந்த பெண்ணால், இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? மௌனித்தாள்.

மலரின் மௌனம் அவனை முன்னேற தூண்டியது. அவளது இடையை சுற்றியிருந்த அவனது கரங்கள், அவளது தேகத்தில் ஆராய்ச்சியை தொடங்கியது. அவனின் நெருக்கத்தில் பெண்ணின் உடல் அனலாக தகித்தது. பெண்மையின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டுக் கொண்டிருந்தது. இது தொடரக்கூடாது. தொடர்ந்தால் காதலில்லா தாம்பத்தியத்தில் முடியும்.

அதனால் பேச்சை மாற்றி, எதை சொன்னால் அவனுக்கு கோவம் வருமோ, அதை சொன்னாள்.”எனக்கு கௌதமை பார்க்கணும். ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ.” 

இப்போது ஆணின் கரங்கள் தானாக விலகியது. துள்ளி குதித்து அவனிடமிருந்து நாலு அடி விலகி நின்றாள். 

இவ்வளவு நேரம் தாபம் வழிந்த முகத்தினில், இப்போது கோபம் கொழுந்து விட்டெறிந்தது. நெருப்பைக் கக்கிய ஆணின் கண்கள் பெண்ணை சுட்டுப் பொசிக்கியது. பெண்ணின் தலை குனியவில்லை, நேர் கொண்டு அவன் கண்களை சந்தித்தாள்.

“எதுக்கு அவனைப் பார்க்கணும்?” அதே சூட்டோடு கேள்வி பிறந்தது அவனிடம்.

“அவனுக்கு விபத்தாகிருக்கு, ஹாஸ்பிடல்ல இருக்கான். நான் பார்க்க வேண்டாமா?”

“வேண்டாம்” என்றான் ஒரே வார்த்தையில்.

“ஏன், ஏன் நான் பார்க்க வேண்டாம். முடியாது நான் போகனும்.” படபடத்தாள்.

அவளது படபடப்பை பார்த்துக் கொண்டே,”லூசு மாதிரி பேசாத பனி. அவனை எதுக்கு பார்க்கணும்?”

மனதில் உள்ளதை என்னவென்று சொல்வது? உண்மையை மறைத்து,”நாங்க காதலிச்சோம். என்னை கல்யாணம் பண்ண இருந்தவன். இப்ப நான் போகலைனா ஊர் உலகம் தப்பா பேசாதா?” 

அவளது ஒவ்வொரு வார்த்தைக்கும் கோபம் அதிகரித்து கொண்டேயிருந்தது,”ஊர் உலகம் ஆயிரம் பேசும். இப்ப நீ என்னோட பொண்டாட்டி. அவனை பார்க்க என் பொண்டாட்டி போக கூடாது.” பல்லை கடித்தான்.

 “இந்த ஆக்சிடென்ட் ஆகலைனா இந்நேரம் நான் அவன் பொண்டாட்டி. நான் போவேன். நீ கூட்டிட்டு போகலைனா, நான் ஆட்டோல போறேன்.” பிடிவாதம் பிடித்தாள்.

‘இப்போதுதான் திருமணமாகிருக்கு, உடனடியா அவளிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.’ என்பதை உணர்ந்தவன்,”சரி கிளம்பு. நானே கூட்டிட்டு போறேன். அவன பார்த்து பேச பத்து நிமிஷம் தான் டைம் கொடுப்பேன். அதுக்குள்ள பேசி முடிச்சுட்டு கிளம்பிடனும். இனிமேல் அவனை எப்பவும் பார்க்க கூடாது.” கோபம் மறையாத குரலில் கட்டளையாக கூறினான்.

மலர் எல்லா பக்கமும் தலையை உருட்டி, கிளம்புவதற்கு ஒரு சுடிதாரை எடுத்து வைத்தாள். நேற்றே அவளது பொருட்கள் அனைத்தும் கதிரின் அறைக்கு மாறியிருந்தது. கதிருடன் இருந்த அன்பு, அவளது அறைக்கு மாறி இருந்தான்.

அந்த அறையை விட்டு வெளியே செல்லும் முன் சற்று தாமதித்த கதிர்,”அவனை காதலிச்சேன்னு, தத்து பித்துன்னு பொய் சொல்லிட்டு சுத்தாத. இனி நீ என் மனைவி. அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ.” என சொல்லி வெளியேறி விட்டான்.

அவன் சொல்லியதை கேட்ட மலர் சிலையாக சமைந்து போனாள். ‘கதிருக்கு, எப்படி  நான் கௌதமை காதலிக்கலைன்னு தெரியும்? எதுவரை தெரியும்?’ பயத்தில் கால்கள் நடுக்கம் கொண்டது.

கடினப் பட்டு கால்களை நகர்த்தி மருத்துவமனைக்கு தயாரானாள். பைக்கில் கதிருடன் பயணம் செய்த முழு நேரமும் இந்த கேள்வி அவளை வண்டாக குடைந்தது.

†††††

குழப்பமான முகத்துடனே கௌதமை அட்மிட் செய்திருந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கு அவனுக்கு துணையாக அவனது அன்னை இருந்தார்.

கௌதம் யாரிடமும் பேச விரும்பாமல் கண்களை மூடி படுத்திருந்தான். அப்போது உள்ளே நுழைந்த மலரை கண்ட, அவனின் அன்னை முகத்தில் அதிருப்தி தோன்றியது. கௌதம் இன்னும் அவளை பார்க்க வில்லை.

“நீ எதுக்கு இங்க வந்த? என் பையன் உயிரோடு இருக்கானா? செத்துப் போயிட்டானான்னு பார்க்க வந்தியா?” என கௌதமின் அன்னை, வீசிய விஷ வார்த்தையில், பெண்ணின் கண்கள் கலங்கிவிட்டது.

அன்னையின் குரல் கேட்டு கண்விழித்த, கௌதமின் கண்களில் விழுந்தது, கலங்கிய மலரின் விழிகளும், அவள் கழுத்தில் புதிதாக இடம்பெற்றிருந்த புது மஞ்சள் சரடும். ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் அதை நேரில் காண மனம் வலித்தது. 

அன்னையின் வார்த்தைகள் புத்தியில் உரைக்க,”அம்மா என்ன பேசுறீங்க? என்னோட நிலைமைக்கு நான் மட்டும் தான் காரணம். எதுக்கு மலரை பேசுறீங்க?”

“நீ விரும்புறேன் சொல்லவும், ஜாதகம் கூட பார்க்காமல் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம். இப்பதானே தெரியுது இவ ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவ. அதனாலதான் இப்ப நீ கீழ விழுந்து கை, கால உடைச்சிட்டு ஹாஸ்பிடல்ல இருக்க?” என்ன நிறுத்தாமல் மலரின் மேல் வார்த்தைகளை பிரயோகித்தார்.

“எனக்கு கை கால் உடைஞ்சதுக்கு, என்னோட கேர்லஸ் மட்டும் தான் காரணம். இனி மலரை பத்தி பேசாதீங்க. அதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.” என அவரது வாயை அடக்கியவன்,”என்னை பாக்க வந்த கெஸ்டுக்கு, டீ வாங்கிட்டு வாங்க” என அந்த கெஸ்டில் அழுத்தம் கொடுத்தான்.

மலரை மருத்துவமனை வாயிலில் இறக்கிவிட்டு, பைக்கை பார்க்கிங்கில் விட்டு திரும்பிய கதிரின் செவிகளில், கௌதம் அன்னையின் கூற்று விழுந்தது. கடும் கோபத்துடன் கதவில் கையை வைத்தான். கரங்கள் தேங்கியது கௌதம் மலருக்கு ஆதரவாகப் பேசவும்.

ஒரு மனம் கௌதம் மலருக்கு ஆதரவாக பேசுவதை கேட்டு மகிழ்ந்தது. மறுமனமோ,”அவன் எப்படி உன் மனைவிக்கு ஆதரவா பேசலாம்?” என போர் முழக்கமிட்டது.

கலவையான மனநிலையில் உள்ளே நுழைந்தான். அவனை பார்க்கவும் கௌதமின் அன்னை,”நான் கேன்டீன் போய் டீ வாங்கிட்டு வரேன்” என பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

கதிர் அரசனை கண்ட கௌவுதமின் முகத்தில் அப்பட்டமான வெறுப்பு. பனிமலர், கௌதமின் கட்டிலின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். கதிர் அவளை முறைத்து நின்றான். மலரின் முகம் கண்ட கௌதமின் வெறுப்பு மறைந்து சாந்தம் வந்தது.

அவனை நேர்கொண்டு சந்திக்க முடியாத பெண்ணின் தலை தாழ்ந்தது. “சாரி கௌதம் எனக்கும் கதிருக்கும் கல்யாணமாயிடுச்சு. உனக்கு ஆக்சிடென்ட் ஆகவும், என்னோட ராசி சரி இல்லைன்னு சொல்லி ரொம்ப பேசிட்டாங்க. அப்புறம் தாத்தா தான் நிலைமையை சமாளிக்க,’மேடை வரை வந்த கல்யாணம் நிக்க கூடாதுன்னு’ சொல்லி இப்படி பண்ணிட்டாங்க” என தன்னிலை விளக்கம் கொடுத்து மன்னிப்பை வேண்டினாள். அவளின் விளக்கத்தில் கதிரின் முகம் இறுகியது.

அவள் கூறியதை கேட்டு, கதிரின் முகம் கண்ட கௌவுதமிற்கு சிரிப்பு வந்தது. அவனது கண்கள் கதிரிடம்,’அவள் உன்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கல. சூழ்நிலை தான் காரணம்’ என எள்ளி நகையாடியது.

“நீ எதுக்கு புள்ள சாரி கேக்குற? நான் தான் உன்கிட்ட சாரி கேட்கணும். உன்னை கட்டாயப்படுத்தி மேடைவரை கூட்டிட்டு வந்து, வேணும்னே கீழ விழுந்து அடிபட்டு வந்தது, என்னோட தப்பு. நான் தான் உன்கிட்ட சாரி கேட்கணும். ஐ அம் சோ சாரி. இதுவரை நீ மனதளவில் கஷ்டப்பட்டதுக்கு.” என உண்மையாலுமே வருந்தினான். பேச்சுவாக்கில் உண்மையை கூறியதை அவன் உணரவில்லை.

“என்னது வேணும்னே அடிபட்டுகிட்டியா. ஏன்?” எனத் திகைத்துப் போனாள் அந்த மலரானவள். ஒரு பெண், ஒரே நாளில் எத்தனை முறை தான் திகைத்து விழிப்பாள்? பாவம் அவள்.

அவளின் கேள்வியின் பிறகே தான் உளறியதை உணர்ந்தவன், தன் தலையிலே அடித்துக் கொண்டு, முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு என,”ஆமா மலர் வேணும்ன்னு தான், பாத்ரூம்ல விழுந்து அடிபட்டுகிட்டேன்” இப்போது அவனது தலை தாழ்ந்தது.

“ஏன் கௌ? இப்படி பண்ணுன?” நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளின் பிரத்யேக அழைப்பு, இதுவே அவனை மன்னித்து நண்பனாக ஏற்றுக் கொண்டாள் என்பதை காட்டுகிறது. கௌதம் மகிழ்ந்து போனான்.

“எனக்கு அந்த கல்யாணத்தை நிறுத்த வேற வழி தெரியல புள்ள.” என வருந்தினான்.

“எதுக்கு நிறுத்தணும்? நான் தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேனே” புரியாமல் விழித்தாள். இதை கேட்ட கதிருக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது. கோபத்தில் ஏடாகூடமாக ஏதாவது செய்து வைத்தால் பிரச்சினை ஆகிவிடுமென, அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

செல்லும் அவனேயே இருவரும் பார்த்தனர். ‘மலர் பேப், நீ சம்மதம் சொன்னால் மட்டும், அவன் அந்த கல்யாணத்தை நடத்த விட்டிருப்பான்னு நினைச்சியா?’ என்ற கேள்வி கௌதமின் மனதோடு அமுங்கியது.

“எங்க உன் மனச தொட்டு சொல்லு? நீ மனசார என்னை ஏத்துக்கிட்டு, அந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்னு.” நேற்கொண்டு அவள் விழிகளை சந்தித்து கேள்வி எழுப்பினான்.

பெண்ணின் பதில் என்னவாக இருக்கும்? என்பது நாம் அறிந்ததே?