வெண்பனி 17

IMG-20220405-WA0023-826ba1a2

பனி 17

கௌதம் கேட்ட கேள்வியில் மலர் என்ன சொல்வது என புரியாமல் முழித்தாள். மனதறிந்து எப்படி அவளால் பொய்யுரைக்க முடியும்? பதிலற்று தலை குனிந்தாள்.

“நீ எதுக்கு புள்ள தலை குனியற? அந்த அவசியமே இல்ல. உனக்கு அந்தக் கல்யாணத்துல, துளிக்கூட விருப்பமில்லைன்னு எனக்கு தெரியும்.” 

அவள் இடையிட முயன்றதை தடுத்து, தொடர்ந்தான்,”அன்புவோட வாழ்க்கைக்காக மட்டுமே நீ நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன. நான் தனா மூலம் உனக்கு நெருக்கடி கொடுத்தேன். உன்னை மாத்திட முடியும்னு நம்பிக்கையோடு கட்டாயப்படுத்தினேன். மண்டபத்துல நம்ம பேசும்போது உன் முகத்தில் விரக்தி தெரிஞ்சது. அதுக்கு காரணம் நான் என யோசிக்கும் போது மனசு ரொம்ப வலிச்சது.” அவன் முகத்தில் வேதனை அப்பட்டமாக தெரிந்தது.

அவனது வேதனையைக் கண்டு மலரின் மனமும் வருந்தியது. அவன் மேலும் தொடர்ந்தான்,

“கல்யாணத்துக்குப் பிறகு உன்னை என் அன்பால் மாத்திடலாம்ன்னு நம்பிக்கை இருந்துச்சு. இப்பவும் இருக்கு. ஆனா அதைவிட நீ கேட்ட கேள்வி, என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. நான் ஸ்ரீ ராமன் இல்லை. இனி அப்படி இருப்பேன்னு சொன்னாலும், இதுவரை அப்படி இல்லையே?

உன்னை மாதிரி நல்ல பொண்ணுக்கு, என்னை மாதிரி கலங்கப்பட்டவன் கணவனா வரக்கூடாது. அதுக்கு கல்யாணத்தை நிறுத்தனும். எப்படி நிறுத்துறதுன்னு கேள்வி என் முன்னாடி? பொண்ணை பிடிக்கலைன்னு சொல்லி போக முடியாது, ஏன்னா இது மத்தவங்களை பொறுத்தவரை காதல் கல்யாணம். அடுத்து எனக்கு இருந்த ஆப்ஷன், எனக்கு உடம்பு சரியில்லாமல் போறது. அதனால பாத்ரூம்ல விழுந்து அடிப்பட்டு ஹாஸ்பிடல் வந்துட்டேன்.” என சொல்லி முடித்தான். 

இங்கு அவன் சில விஷயங்களை மறைத்தான்.

அன்று இரவு பனிமலர் மணமகள் அறைக்கு சென்ற பின், கௌதம் அங்கிருந்த நிலவையே வெறித்து நின்றான்.

அவளின் வேதனை, விரக்தி அனைத்தும் அவனின் மனதை பிசைந்தது. அவனைக் கவர்ந்த அவள் விழிகளின் துறுதுறுப்பு காணாமல் போயிருந்தது. எந்த முகத்தில் காலம் முழுதும் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டானோ? அங்கு விரக்தியும் சோகமும் மட்டுமே நிறைந்திருந்தது.

முதல் முறையாக சந்தேகம் பிறந்தது. ‘நான் கல்யாணம் என்ற பெயரில் அவளோட உணர்வுகளை கொன்னுட்டு இருக்கேனா? அவளின் உயிர்ப்பை அழிச்சு என் காதலை வாழ வைக்கணுமா? இந்த கல்யாணம் அவசியம் வேண்டுமா?’ என பல கேள்விகள், பூதாகரமாக எழுந்து நின்று அவனைப் பார்த்து சிரித்தது.

தலைவலி மண்டையைப் பிளந்தது. அடுத்து என்ன செய்வது? என குழப்பம் மேலோங்கியது. அவன் குழப்பத்திலிருக்கும் போது,”என்ன கௌதம் விடிஞ்சா கல்யாணம், புது மாப்பிள்ளை, ரொம்ப சந்தோஷமா இருக்க போல?” என கேட்டவாறு, அவன் அருகே கதிர் வந்து நின்றான்.

மலர் கேட்ட அதே கேள்வி கொஞ்சம் மாற்றி கேட்டிருந்தான். எண்ணங்களில் கூட என்ன ஒரு பொருத்தம்? 

“நான் ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன். நீ வேற கடுப்பை கிளப்பாத.” கடுப்போடு கூறினான்.

“நீ எதுக்கு டென்ஷனாகுற? அதுதான் அவளை பயங்காட்டி, கட்டாயப்படுத்தி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டியே. சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே?” என்றான் நக்கலாக.

கௌதமுக்கு அந்த குளிரிலும் வியர்த்து வடிந்தது. ‘இவனுக்கு எந்த அளவு தெரியுமுன்னு தெரியலையே?’ குழப்பம் மேலோங்கியது. சந்தேகமாக கதிரின் முகம் கண்டான்.

“என்னடா இவனுக்கு எப்படி தெரியும்ன்னு யோசிக்கறயா? என்னோட பனியை சுற்றி நடக்கிறது எனக்கு தெரியாமல் இருக்குமா? அன்னைக்கு எப்படி சரியான நேரத்தில் குற்றாலம் வந்தேனு, என்னைக்காவது யோசிச்சி இருக்கியா? நான் அங்க இல்லைனாலும் அவள் எப்போதும் என் கண் பார்வையில இருப்பா.”

கதிரின் அக்கறையை கண்ட கௌதமுக்கு  ஆச்சரியமாக இருந்தது. அவனது அக்கறை தனக்கு வில்லங்கமாவதால் கதிரை முறைத்தான்.

“என்ன முறைப்பு? உன்மையதான சொன்னேன். அவளை கட்டாயப்படுத்தி இங்க வரைக்கும் தான் உன்னால் கொண்டு வர முடியும். அவ கழுத்துல உன்னால் தாலி கட்ட முடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். உன்னை எத்தனை தடவை எச்சரித்தேன், அதையும் மீறி துணிஞ்சு இவ்வளவு தூரம் வந்திருக்க. என்னோட பனியை உன்கிட்ட கொடுத்துடுவேன்னு எப்படி நினைச்ச? என் கண்ணம்மாவை என்கிட்ட இருந்து பிரிச்சிடலாம்ன்னு உன் கனவுல கூட நினைச்சுடாத.” என்றவன் வாசல் வரை சென்று, மீண்டும் திரும்பி கௌதம் முன் நின்றான்.

“மறுபடியும் என்ன?” கௌதமுக்கு அழுப்பாக இருந்தது.

அதைக் கண்டு கொள்ளாத கதிர்,”நாளைக்கு இந்தக் கல்யாணம் நிக்கும். நான் நிறுத்திக் காட்டுறேன்” என சவாலிட்டு அங்கிருந்த சென்றான். 

“நானே இப்ப மலரை கல்யாணம் பண்ணனுமா? வேண்டாமா? என்ற குழப்பத்துல் இருக்கேன். இவன் வேற? இருக்கிற டென்ஷன்ல சும்மா பினாத்திட்டு போறான்.” என கதிரை டீலில் விட்டான்.

நீண்ட நேரம் சிந்தித்து, மிகவும் கடினப்பட்டு அந்த முடிவை எடுத்தான். விருப்பமில்லாத திருமணத்தை நிறுத்தி பனிமலருக்கு மன நிம்மதியை கொடுக்க வேண்டும் என்று. இந்த முடிவு எடுத்ததற்கு பின் மனம் வலித்தது. ரணமாக எரிந்த இதயத்தை, ‘பனிமலரின் மகிழ்ச்சிக்காக’ என அடக்கினான்.

இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக, வேண்டும் என்றே பாத்ரூமில் விழுந்து அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டான். அவனுக்கு அடிபட்ட விஷயம், கௌதமின் மேல் கண் வைத்திருந்த கதிருக்கு தெரிந்தது. உடனே தாத்தா பாட்டியிடம் விஷயத்தை கூறி, அவர்களை அழைத்து மருத்துவமனைக்கு சென்றான். அங்கிருந்து திரும்பி வரும்போது அனைத்தும் கைமீறி இருந்தது. சுகந்தி ஆர்ப்பாட்டம் செய்து, அன்புவும் வார்த்தையை விட்டிருந்தான். அப்போதுதான் கதிர், பனிமலரின் திருமணம் முடிந்ததும்.

†††††

“சோ இந்தக் கல்யாணத்தை நிறுத்துறதுக்காக கீழே விழுந்து கையை உடைச்ச கரெக்ட்டா?” அவன் முகம் பார்த்தாள். அதில் அதிருப்தி தெரிந்தது.

ஆமாம் என்று தலையசைத்தான்.

“இந்தக் கல்யாணத்தை நடத்த என்ன பண்ணுன?” என்ற பெண்ணின் கேள்வியில் கூனி குறுகிப் போனான்.

“தனலட்சுமி ஏன் என்னை கார்னர் பண்ணாள்? நான் உன்னை கட்டிக்கிட்டா மட்டும் தான், அவ அரசுவை கட்டிக்குவேனு ஏன் சொன்னா? அவளையும் நீ மிரட்டினியா?” என கேட்கும் போதே ‘அப்படி இருக்குமோ?’ அவளது மனம் நடுங்கியது.

ஆம்! பனிமலர் இந்த திருமணத்துக்கு சம்மதித்தது தனாவினால். தனது அரசுவின் சந்தோஷத்திற்காக மட்டுமே பனிமலர் இந்த திருமணத்திற்கு சம்மதித்தாள். இல்லை என்றால் கௌதமால் ஒன்றும் செய்திருக்க முடியாது.

திருமணத்தன்று, காலையில்தான் தன் தவறை உணர்ந்த தனா, அன்புவிடம் உண்மையை கூறியிருந்தாள். அவளிடம் சண்டையிட்டு,”நீ எனக்கு வேண்டாம்” என சொல்லியவன், மண்டபத்தில் நுழைந்த போது தான் சுகந்தியின் பிரச்சனை நடந்தது.

தனக்காக தன் வாழ்க்கையை பணயம் வைத்து, இப்போது மேடையில் அசிங்கப்பட்டு நிற்கும் பெண்ணை காக்கவே,”நான் அவளை திருமணம் செய்து கொள்கிறேன்” என சொன்னான். அதனால் தான் மண்டபத்தில் வைத்து தனாவை “ஐ ஹேட் ஹேர்” என கூறினான்.

அவர்களது இஷ்ட தெய்வம் பரமேஸ்வரன், பனிமலரின் கௌதமுடனான திருமணத்தை, மாற்றியமைக்க ஒரு வாய்ப்பை வழங்கினார். அதை அன்பும் பயன்படுத்திக் கொண்டான். ஆனால் இங்கு அவன் இழந்தது, பனிமலரின் நட்பையும், அவனது வாழ்க்கையையும். இரண்டும் மீண்டும் கிடைக்கும், என்றாலும் இப்போது இழந்தது, இழந்தது தான். 

பதில் ஏதும் சொல்லாமல் அவள் முகத்தையே வெறித்திருந்தான் கௌதம் கிருஷ்ணா.

அவனது மௌனம் பெண்ணின் பயத்தை அதிகரித்தது,”கௌதம் சொல்லு? நம்ம அன்னைக்கு குற்றாலம் போனப்ப, எதார்த்தமா எடுத்த செல்பிய வச்சு, என்னை மிரட்டின மாதிரி, அவளையும் மிரட்டினியா?” மனதை போல் குரலும் நடுங்கியது.

கௌதம் முகத்தில் கசந்த முறுவல் தோன்றியது,”என்னை பத்தி ரொம்ப நல்ல அபிப்பிராயம் வச்சிருக்க மலர். நீ நினைக்கிறதிலும் தப்பு இல்ல. உன்கிட்ட நான் எப்படி நடந்துகிட்டேனோ, அதை வச்சு தானே நீயும் என்னை கணிப்ப. முன்ன பொண்ணுங்க கூட பழகுனேன் இல்லன்னு சொல்ல மாட்டேன். ஆனால் யாரையும் மிரட்டினதில்லை. அதுவும் உன் கூட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், வேற பெண்களை நான் தப்பா பார்த்ததில்லை. நீ நம்பலைனாலும் அது தான் உண்மை.”

அவளுக்கும் அது தெரிந்தது தானே, எப்படி இல்லை என்று சொல்வாள்? “நீ முன்ன எப்படி இருந்தியோ? எனக்கு தெரியாது. மத்தவங்க சொல்றதுல, பெருசா எனக்கு உடன்பாடு இல்லை. என் கூட பழகுன வரைக்கும், கண்ணியமா இருந்த. அதே மாதிரி அனாவசியமா பொண்ணுங்க கூட பேசியும் பார்த்ததில்லை. அப்புறம் ஏன், என்கிட்ட மட்டும் அப்படி மிரட்டின?” மில்லியன் டாலர் கேள்வி மனதை குடைந்தது.

“சொல்றேன் புள்ள.” என்று தன்னை பற்றி சுருக்கமாக கூறத் தொடங்கினான்.

“நான் அப்பா அம்மாவுக்கு ஒரே பையன். வீட்டில ரொம்ப செல்லம். ஓரளவு படிப்பேன். விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். நான் பார்க்கவும் சூப்பரா இருப்பேனா” இந்த வார்த்தையில் கொலை வெறியுடன் அவள் அவனை முறைத்தாள்.

‘நீ சூப்பரா இருக்கியா?’ என்ற கேள்வி அதில் தொக்கி நின்றது.

‘இல்லையா பின்ன?’ தெனாவட்டாக பதில் பார்வை பார்த்தான்.

‘இல்லவே இல்லை’ என்ற அலட்சிய பார்வை கொடுத்தாள்.

அதில் காண்டானவன்,”என்ன? நீ பார்க்கறத பார்த்தா, என்னை அசிங்கமா இருக்கேன்னு சொல்ற மாதிரி இருக்கு?” காதலன் கௌதம் மறைந்து, நண்பன் கௌ வெளிவந்திருந்தான்.

“அத நான் வேற, என் வாயால் சொல்லனுமா? ஓவர் பெருமை உடம்புக்கு ஆகாது தம்பி” என்றாள் பெண் சலுகையாக.

“உனக்கு வரவர வாய் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு. உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து தப்பு பண்ணிட்டேன்.” செல்லமாக மிரட்டினான்.

“என் பிரண்டு கிட்ட நான் செல்லம் கொஞ்சுறதுல என்ன தப்பு இருக்கு?” உரிமைக்குரல் கொடுத்தாள். 

அவளின் இந்த உயிர்ப்பான பேச்சுகளை இந்த சிறிது நாட்களாக மிஸ் செய்திருந்தான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் திருமணத்திற்கு அவளை கட்டாயப்படுத்திய தினத்திலிருந்து. அவளின் உயிரோட்டமான பேச்சு எங்கோ ஓடிமறைந்திருந்தது.

அவளது முகத்தில் தெளிவையும், பேச்சில் உயிர்ப்பையும கண்ட பிறகே, கௌதமின் மனம் அமைதியடைந்தது.

“தப்பே இல்ல புள்ள. தப்பே இல்ல. இப்ப நான் கதைய சொல்லவா வேண்டாமா?” என்றான் இலகுவாக.

“அய்யய்யோ சொல்லு, சொல்லு. இனி நான் பேச மாட்டேன்” தனது இதழில் ஒரு விரல் வைத்து அமர்ந்து கொண்டாள். இப்போது அவளிற்கு கோபம் மறைந்து ஆர்வம் வந்திருந்தது.

“சூப்பரா இருப்பே..” என ஆரம்பித்தவன் அவள் முறைப்பில், “சரி சரி சுமாரா இருப்பேனா” என்றான் வேண்டா வெறுப்பாக.

“அதனால பொண்ணுங்க பழகுவாங்க. நமக்கும் கெத்தா இருக்குமுன்னு நானும் ஒன்னுக்கு ரெண்டா மெயின்டைன் பண்ணிக்குவேன். உன்னை ஸ்கூல்ல பார்த்திருக்கேன் நல்லா சப்பியா, அமுல் பேபி மாதிரி இருப்ப.” இப்போது காண்டான பெண், அங்கிருந்த தலகாணியை எடுத்து அவனை மொத்தினாள். 

“அடிக்காத புள்ள” என ஒரு கையால் அந்த அடியை தடுக்க முயன்று, முடியாமல் “மலர் கை வலிக்குது கம்முனு இரு” என அலறிவிட்டான். பிறகே அவனது நிலை உணர்ந்து அடியை நிறுத்தினாள்.

அவனின் அலறலை கேட்டு, நாகரீகமாக வெளியே நின்ற கதிரும், கௌதமின் அன்னையும் உள்ளே ஓடி வந்தனர். அவர்கள் இருந்த நிலையை கண்டு திகைத்து நின்றனர். 

பனிமலர் திறுதிறுவென அவர்கள் இருவரையும் பார்க்க, கௌவுதம் குறுகுறுவென கதிரை பார்த்தான். அவனோ பல்லை கடித்து பனியை முறைத்தான். கௌதமியின் அன்னை சங்கடமாக கதிரை பார்த்தார்.

ஆக மொத்தம் மூவரின் விதவிதமான பார்வையும் கதிரை சுற்றி வளைத்தது. அவனது பார்வையோ முறைப்புடன் பெண்ணின் மீது. என்று அவள் கதிரின் பார்வையை மதித்தாள், இன்று மதிக்க. அதில் டென்ஷனான கதிர் வெளியேறி விட்டான். அவன் பின்னோடு கௌதமின் அன்னையும் சென்றுவிட்டார். மீண்டும் தனித்து விடப்பட்டனர் நண்பர்கள்.

ஆம்! அவர்கள் நண்பர்கள் மட்டுமே. கெளதம் தன் எண்ணத்தில் தெளிந்திருந்தான். மலர் தனக்கு சொந்தமாகவில்லை என்றாலும், எப்போதும் இதே மாதிரி தன்னுடன் நட்பாக பேசி, சிரித்து பழகினால் போதுமென்ற மனநிலைக்கு வந்திருந்தான்.

இப்போது மலரின் கண்கள் கௌதமிடம் சென்றது,”இந்த கதிர் ஏன் இப்படி பார்த்துட்டு போறான்?” உண்மையாலுமே அவனது பார்வைக்குண்டான அர்த்தம் புரியவில்லை பெண்ணிற்கு.

கௌதமின் கண்கள் கேள்வியாக அவளை நோக்கியது. “எப்பயும் இப்படி தான் பார்த்துட்டு, சீண்டிகிட்டே இருப்பான். எனக்கும் அவனுக்கும் ஆகவே ஆகாது. எதுக்கு எனக்கு தாலி கட்டுனானோ? பாவம் அவன்” என அவனுக்காக பரிதாபப்பட்டாள்.

கௌதம் மனதில்,’கதிர் நீ ரொம்ப பாவம். உன்னோட காதலை இவளுக்கு புரிய வைக்க, நீ ரொம்ப கஷ்டப்படணும். நான் தப்பிச்சுட்டேன். நீ ரொம்பபப நல்லவன்’ என நினைத்தவனின் முகம் புன்னகை பூசிக் கொண்டது.

“அதை நீ அவன் கிட்ட தான் கேட்கணும்” என்றான் புன்னகையோடு.

“எதை?” குழப்பத்தோடு வினவினாள்.

கதிரின் நிலையை நினைத்து சிரிப்பு பொங்கி வந்தது. “எதுக்கு உன்னை சீண்டுனானு? எதுக்கு தாலி கட்டுனான்னு? அவனை தான் கேட்கணும்.” 

“ஆமாமில்ல. நான் அவன்கிட்டயே கேட்டுக்கறேன்” என அசடு வழிந்தாள். கௌதமின் கண்கள் அவளை ரசித்தது.

“கேளு கேளு நல்லா கேளு. கேட்டு எனக்கும் சொல்லு பேப்.” சீண்டினான்.

“போ கௌ” என சிணுங்கினாள். அவளது சிணுங்களில் கௌதமின் மனம் சிறிது தடுமாறியது. என்ன தான் நட்பு என மனதை தேற்றினாலும், காதல் கொண்ட இதயம் தடுமாறுவது இயல்பு தானே? 

இந்த தடுமாற்றம் திடமாவது எப்போது?

அவனது மனம் அவனது பேப்பை தாண்டி செல்லுமா? 

சில வருடங்களுக்கு பிறகு மாறலாம். மாற்றம் ஒன்றே மாறாதது.