வெண்பனி 19

IMG-20220405-WA0023-1973ba07

பனி 19

ராஜபாளைய தொகுதியில் பெயர் சொல்லக்கூடிய மண்டபம். வண்ண விளக்குகளால் மின்னியது. வாசலில் இருந்த பெயர் பலகையில்

கதிர் அரசன்

weds

பனிமலர் 

என்ற வாசகம் கவர்ந்தது. அப்படியே உள்ளே சென்றால், ஐநூறுக்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய வகையில் நாற்காலிகள், ஒரே சீராக போடப்பட்டிருந்தது. மேடை அலங்காரங்கள் கண்ணை பறித்தது.

ஆங்காங்கே கூட்டமாக அமர்ந்து ஆண்கள் அரட்டைக் கச்சேரி நடத்தினார்கள் என்றால், பட்டு சேலை சரசரக்க, நகை கடை விளம்பரம் போல் பெண்கள் நடமாடினார்கள். 

இன்முகத்துடன் சுசிலாவும், தியாகராஜனும், ஏனோதானோவென கார்த்திகேயனும், வேண்டா வெறுப்பாக சுகந்தியும், வாசலில் நின்று வருவோர்களை வரவேற்றார்கள். பழனிவேலும் பர்வதமும் வந்தவர்களுடன், உரையாடிக் கொண்டும், தீப்தி அலட்சியத்துடனும் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

அன்பரசன் அதிக சந்தோஷத்துடன், தன் மொட்டுவின் ரிசப்ஷன் வேலைகளை, இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தான். தங்கள் நண்பர்கள், தன் சகோதரனின் நண்பர்கள் என அனைவரையும் உபசரிக்கும் பொறுப்பை அன்பரசன் ஏற்று கொண்டான்.

அன்று பனிமலரின் திருமணத்திற்காக, அனைத்து சொந்தங்களும் கலந்து கொண்டிருந்தனர். அதனால் கதிர் அரசனின் திருமணத்திற்கென்று, புதிதாக யாரையும் சொந்தத்தில் அழைக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. அதனால் இப்போது அதிக அளவில் தொழில் வட்டார நண்பர்களும், கல்லூரி, பள்ளி கால நண்பர்களும் வந்திருந்தனர். இளமையும், முதுமையும் கலந்து, கதிர் அரசன் பனிமலரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, அமோகமாக தொடங்கியது.

மேடையின் சலசலப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அங்கு கம்பீரமே உருவாக, கதிர் அரசன் கோட் சூட்டில் மேடை ஏற, அவன் கரம் பற்றி அழகே உருவாக மேடை ஏறினாள் பனிமலர்.

பெண்ணின் சேலையிலிருந்து அலங்காரம் வரை, அனைத்தும் கதிர் ரசித்து ரசித்து தேர்வு செய்திருந்தான். அந்த அலங்காரத்தில் அவளை கண்ட கதிர், தன் கண்களை விலக்க முடியாமல் திண்டாடினான். அவனின் பார்வையில் பெண் வசீகரிக்கப்பட்டாள். நாணத்தில் தலை தாழ்ந்தது. ‘அவள் தன் கை சேரும் நாள், வெகு தூரத்தில் இல்லை’ என கதிர் மகிழ்ந்தான்.

அவர்களை பார்த்த சுசீலா, தியாகராஜனுக்கு மகிழ்ச்சி ஒருபுறமும், ஜாதகத்தின் பயம் ஒருபுறமும் என அல்லாடினார்கள். தாத்தா, பாட்டிக்கு அவர்களை காண இரு கண்கள் போதவில்லை. ஜோடி பொருத்தத்தில் கண்ணை நிறைத்தார்கள். இனி என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டார்கள் அவர்கள்.

முதலில் மேடை ஏறிய, கதிரின் கல்லூரி நண்பர்கள் குழு,’நினைச்சதை சாதிச்சிட்ட’ என கூறி சென்றனர். அதை கேட்ட பனிமலர் குழம்பி போனாள். அவளது குழப்ப முகத்தை கண்ட கதிர் அலர்டானான்.

அடுத்து வந்தவர்களை அறிமுகப்படுத்துவது போல், அவளது கவனத்தை திசை திருப்பி விட்டு நிம்மதி மூச்சு விட்டான். அந்த நிம்மதிக்கு ஆயுசு கம்மி என்பது போல் அடுத்து வந்தவர்களும் அதையே சொல்ல கதிர் நொந்தே போனான்.

பனிமலருக்கு குழப்பமிருந்தாலும், வந்தவர்களுடன் இன்முகத்துடனே உரையாற்றினாள். இளமை கூட்டங்கள்,  பஞ்சமில்லாமல் கேலி கிண்டலில் இறங்கி, பனிமலரை வெட்கப்பட வைத்து, சிவக்க வைத்தே சென்றனர். அவளின் வெட்கத்தை கதிர் ரகசியமாக ரசித்தான்.

அப்போது மேடை ஏறினார்கள் நான்கு இளைஞர்கள். சிரித்த முகத்துடன் பெண்ணின் முன் நின்று,”என்னம்மா தங்கச்சி எங்களை ஞாபகம் இருக்கா?”

பெண்ணுக்கு ஞாபகம் வரவில்லை திரு திருவென முழித்தாள். அதை கண்ட கதிரின் நண்பன்,”ஏம்மா மலரே இந்த அண்ணனை மறந்துட்டியே? என்னோட லிட்டில் ஹார்ட் இதை தாங்குமா?” என்றான் வராத கண்ணீரை துடைத்து.

அவனின் ‘மலரே’ என்ற வார்த்தையில் அவன் யார் என்று ஞாபகத்தில் வந்துவிட்டது பெண்ணிற்கு. (இரண்டாம் பதிவில் வந்த கதிர் அரசனின் நண்பர்கள்) முகம் எல்லாம் பூரிக்க,”அட நம்ம அப்பாவி அண்ணாத்த. என்ன அண்ணா எப்படி இருக்கீங்க? இந்த தங்கச்சி கல்யாணத்துக்கு இவ்ளோ லேட்டா வரீங்க?” என பாச பயிரை வளர்க்க ஆரம்பித்து விட்டாள்.

அவன் ‘தங்கச்சி’ என்று உருக, இவள் ‘அண்ணா’ என்று கரைய இங்கு கதிரின் பொறுமையும் மறைந்தது. 

“டேய் போதும்டா. உங்க பாசமலர் படத்தை அப்புறமா ஓட்டுங்க. இப்ப எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்க.” என்றான் அழ மாட்டாத குறையாக.

“சரியான பொறாமை புடிச்சவன் தங்கச்சி. இப்படிதான் நீீீீ” என்று ஆரம்பத்தவனின் வார்த்தைகள், கதிர் அவன் வாயை மூடியதால் நின்றது.

“கதிர் அண்ணனை விடு. நீங்க சொல்லுங்க, என்னமோ சொல்ல வந்தீங்க?” கதிருக்கு கட்டளையிட்டு, அவன் நண்பனிடம் நிறுத்தினாள்.

“அது ஒன்னும் இல்ல தங்கச்சி நீ…” 

“சாரதி போதும். நிறைய பேர் வெயிட்டிங்ல இருக்காங்க.” என சாரதியின் பேச்சை கத்தரித்தான் கதிர்.

“டேய் நண்பா! இத மட்டும் சொல்லிட்டு போயிறேன்டா.” என்றான் வில்லங்கமாக.

“நீ ஆணியே புடுங்க வேண்டாம். எல்லாம் நான் பாத்துக்குறேன். இப்ப இடத்தை காலி பண்ணுடா ராசா.” என பெரிய கும்பிடு போட்டான் கதிர் அரசன்.

“போனா போ ஏதோ கெஞ்சுற.” என்று கதிரிடம் சொல்லியவன், பனிமலரிடம் திரும்பி,”நீ கவலைப்படாத தங்கச்சி, உன் நம்பரை கொடு, நான் உனக்கு போன்ல சொல்றேன்.” என அவளது நம்பரையும் வாங்கி விட்டே சென்றான்.

மேடையில் நடந்த அனைத்தையும் பார்த்திருந்தார்கள் பெரியவர்கள். திருமணத்தன்று அவசர கதியில் அனைத்தும் நிகழ்ந்ததால் யாரும் கண் குளிர அதை கண்டு ரசிக்கவில்லை. இன்று மனமும் குளிர்ந்து போனது.

பனிமலருக்கு வீட்டில் யாருடனும் ஒட்டுதல் இல்லையென்றாலும், அவள் முகம் எப்போதும் புன்னகை பூசி இருக்கும். ஆனால் கதிர் அப்படி இல்லை. அனைவரிடமும் பேசினாலும், அவனது முகம் எப்போதும் ஒரு இறுக்கத்துடனே காணப்படும். கடந்த ஒரு வாரமாக அவன் முகத்தில் காணப்பட்ட இலகுத்தன்மை, தியாகராஜன், சுசிலா தம்பதிகளை சிந்திக்க வைத்தது.

முகமெல்லாம் பிரகாசிக்க, வானையே தன் வசப் படுத்திய மகிழ்ச்சியில் திளைத்த கதிர் அரசனையே வட்டமடித்தது பழனிவேல், பர்வதத்தின் கண்கள்.

அவர்களது விழிகள் ஆனந்தத்தில் பனித்தது. நினைவுகளோ திருமணத்திற்கு முன்பு நடந்த உரையாடலுக்கு சென்றது.

†††††

கௌதம் கிருஷ்ணாவுக்கு விபத்து ஏற்பட்டதை அறிந்த கதிர், நேரே சென்று நின்றது தாத்தா பாட்டியிடம். விபத்தை பற்றி கூறி மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து சென்றான்.

கௌதமை பார்த்து விட்டு திரும்பும் போது, வழியில் காரை நிறுத்திய கதிர், பழனிவேலிடம் திரும்பி,”தாத்தா, எனக்கு பனியை ரொம்ப பிடிக்கும். அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க.” நேரடியாக அவர்களின் தலையில் இடியை இறக்கினான்.

“என்ன அரசு சொல்ற?” அவர்கள் திகைத்து போய் கேள்வி எழுப்பினார்கள்.

“ஆமாம் தாத்தா. எனக்கு அவள் வேணும். அவளை நான் விரும்புறேன்.” எந்த வித பிசிருமில்லாமல் உறுதியாக கூறினான்.

“வேண்டாம் அரசு. அவ ஜாதகத்துல பிரச்சனை இருக்கு.” என மறுத்தனர் அந்த முதியோர்.

“இன்னும் எந்த காலத்தில் இருக்கீங்க? ஜாதகம், ஜோசியம்ன்னு சொல்லி, இதுவரை அவளை ஒதுக்கி வச்சது பத்தாதா? இன்னும் என்ன?”

“உன்னோட உயிருக்கு ஆபத்து வந்தா என்ன பண்றது?” என்றார் பருவதம் நடுங்கும் குரலில்.

“அவ இல்லாம நடைபினமா நூறு வருஷம் வாழ்றதைவிட, ஒரு நாள் வாழ்ந்தாலும் அவள் கூட நிம்மதியா வாழனும். எனக்கு அது போதும் ஆச்சி.” திடமாக வந்தது வார்த்தைகள்.

“சுகந்தி வம்பு பண்ணுவா அரசு.”

“இன்னும் எத்தனை காலத்துக்கு அவங்களுக்கு பயந்து, அந்த அப்பாவி பொண்ணை ஒதுக்கி வைக்கப் போறீங்க?” சாட்டையடியாக கேள்வி கேட்டான்.

அதில் துடித்துப் போனவர்கள்,”மீனா மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தவுடன், மலரை தாய் போல பாத்துக்குவான்னு நம்பி, கார்த்திகை கட்டாய படுத்தி சுகந்திக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். ஆனால் அவளோட சுயநல புத்தி கொஞ்ச நாளில் புரிஞ்சிருச்சு.”

இதைக் கேட்கவும் கதிரின் கரங்கள் கோபத்தில் இறுகியது. (அது ஏன் என்று பின்னால் தெரியவரும்)

“நம்ம வீட்டில் மலர் இருந்தால், அவளால் நிம்மதியா இருக்க முடியாதுன்னு, மீனாவோட பேரண்ட்ஸ் கிட்ட அவளை கொடுத்தோம். சில வருஷத்துல அவங்களையும் இழந்து, மறுபடியும் நம்ம வீட்டுக்கு திரும்பும் நிலை. நாங்க மலர் கிட்ட பாசமா இருந்தா சுகந்தியின் வஞ்சம் மலரை வதைக்கும். அதனால் நாங்க ஒதுங்கி போனோம். மலர் எங்க பேத்தி. அவ மேல பாசமில்லாமல் போகுமா?” என கண்ணீர் சிந்தினர் அந்த முதியவர்கள்.

“சரி முடிஞ்சது முடிஞ்சு போச்சு. இனி அவளை நான் பார்த்துக்கிறேன். அவளை எனக்கு கொடுத்துடுங்க.” என்றான் மன்றாடும் குரலில்.

“ஆனா அரசு, அவ கௌவுதமை விரும்புறா? இப்போ அவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்றதுக்காக, நம்ம இடையில் புகுந்து குழப்ப முடியாது. கல்யாணத்தை கொஞ்சம் தள்ளி வைக்கலாம்.”

“அவ கௌவுதமை மட்டுமில்ல யாரையும் விரும்பல.”

“அது எப்படி உனக்கு தெரியும்? அன்னைக்கு கௌதம் விரும்புறோம்ன்னு சொன்னான்?”

“அவன் பனியை விரும்புறான். ஆனா அவ மனசுல யாருமில்லை.” என்றான் உறுதியாக.

“அது எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?” சந்தேகமான கேள்வி பழனிவேலிடம்.

“அவளை பத்தி என்னை விட யாருக்கு அதிகம் தெரியும்?” வாய் கர்வமாக  சொன்ன போது, மனம் ‘அன்புவுக்கு தெரியும்’ என்றது. ‘நீ சும்மா கிட’ என மனதை அடக்கியவன் அவர்களிடம்,”எனக்கு அவ மட்டும் தான் பொண்டாட்டியா வர முடியும்.” முடிவாக கூறினான்.

அவனது உறுதி வென்றது. வேறு வழியின்றி கதிரின் ஆசைக்கு தலையாட்டியவர்கள், இன்று அவனின் முகத்தில் கண்ட பிரகாசத்தில் நிம்மதி அடைந்தனர்.

அவர்கள் மனதில் தோன்றியது ‘ஜாதகமும் வேண்டாம், ஜோசியமும் வேண்டாம், அவர்களது இந்த சந்தோஷம் போதும். அரசு சொல்லியது போல், பிடிக்காத வாழ்வை நூறு வருடம் வாழ்வதை விட, பிடித்த வாழ்வை ஒரு நாள் வாழ்வதே மகிழ்ச்சி.’ என்ற முடிவுக்கு வந்து அவர்களை மனதார வாழ்த்தினார்கள்.

“என்ன தாத்தா, ஆச்சி அதுக்குள்ள கொள்ளுப்பேரன் கனவுல வர ஆரம்பிச்சுட்டானா?” என்ற அன்புவின் கிண்டல் குரல், நினைவுகளில் இருந்த அவர்களை மீட்டெடுத்தது. சுற்று புறம் உரைத்தது.

“அது மட்டும் நடந்துருச்சுன்னா, உன் வாயில ஒரு கிலோ சர்க்கரை அள்ளி போடுறேன்டா அன்பு குட்டி.” என்றார் பாட்டி வாயெல்லாம் பல்லாக.

“நடக்கும், நடக்கும், நடக்காம எங்க போகப்போகுது? வாங்க அவங்க ரெண்டு பேத்தையும் கூப்பிட்டு சாப்பிட போலாம். மொட்டு சோர்ந்து போயிட்டா.” என்ற அன்பு மேடையிலிருந்த அவர்களை நோக்கி சென்றான்.

இவர்கள் எப்போதும் இதே ஒற்றுமையுடனும், சந்தோஷத்துடனும், இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொண்டார்கள் அந்த முதியோர்கள்.

பாவம் அவர்கள் அறியவில்லை விதி ஆட போகும் சதிராட்டத்தை?

†††††

அன்றைய இரவு அவர்களது அறையில், அலங்காரத்தை கலைத்து, அதே புடவையில், முகத்தில் குழப்பத்துடன் அமர்ந்து, கதிரையே விழி எடுக்காமல் பார்த்திருந்தாள் பனிமலர்.

அவளது குழப்பம் எதனால்? என்பதை உணர்ந்த கதிர் அதை போக்க முயலவில்லை. ‘அவளுக்கு தன் மேல் சிறிதாவது விருப்பம் வந்த பிறகு, தன் காதல் தெரிந்தால் பிரச்சினை இல்லை. இப்போது அவளிருக்கும் மனநிலையில், தன் காதல் அவளிடம் எந்த பாதிப்பை ஏற்படுத்தும், என உறுதியாக சொல்ல முடியாது. அவளது மறுப்பை தாங்குமளவு மனதில் வலு இல்லை. இப்போதைக்கு அவனது காதல், அவன் மனதுடன் இருக்க வேண்டும்.’ என முடிவு செய்தான்.

“என்னாச்சு பனி? போய் டிரஸ் மாத்திட்டு வந்து தூங்கு.” தன் பதட்டத்தை மறைத்து இயல்பாக.

“ம்ம். கதிர் நீ எதுவும் என்கிட்ட மறைக்கிறாயா?” குழப்பத்துடன் கேள்வி பிறந்தது.

அவனுக்கு தூக்கி வாரி போட்டது. இப்படி நேரடியாக கேட்பாள் என எதிர்பார்க்கவில்லை. “உன்கிட்ட என்ன மறைக்கப் போறேன்? அதெல்லாம் ஒன்னும் இல்ல.” தினறினான்.

“ஆனா இன்னைக்கு உன்னோட ப்ரெண்ட்ஸ், ஏதோ நீ நெனச்சத சாதிச்சிட்டேன்னு சொன்னாங்க. அது என்ன?” 

“அது, ரிசார்ட் தொடங்குவது, என்னோட ரொம்ப நாள் விருப்பம் இல்லையா? அதைதான் கேட்டாங்க.” என எதையோ சொல்லி சம்பாதித்தான்.

“அனா நீ ரிசார்ட் தொடங்குவது, அவங்களுக்கு முன்னமே தெரியும் இல்லையா?” கேள்வி தொடர்ந்தது.

‘இதுல நல்லா விவரமா இருடி’ என மனதில் சலித்தவன், “இப்பதானே நேர்ல மீட் பண்ணுறோம். அதுதான்.” என மீண்டும் மலுப்பினான்.

“ஆனா..” என தொடங்கியவளை முடிக்க விடாமல்,

“போதும் பனி. உன்னோட கேள்விகளை நாளைக்கு கேளு. இன்னைக்கு நின்னு, நின்னு கால் வலிக்குது. சீக்கிரம் தூங்கலாம் வா” என்றவன், அவள் புடவை மாற்ற வேண்டும் என்பதையும் மறந்து, அவளை இழுத்தணைத்து படுத்து விட்டான்.

இந்த ஒரு வாரமாக அவனது அணைப்பிற்கு பழகியிருந்த பெண், மறுப்பு தெரிவிக்காமல் அவனுடன் பாந்தமாக பொருந்தி, அவன் மார்பில் முகம் புதைத்தாள். 

நீண்ட நேரமாக சிந்தித்தும் ஒன்றும் பிடிபடாமல், மெல்ல உறக்கத்திற்குள் புகுந்தாள். அவள் உறங்கவில்லை என்பதை உணர்ந்த கதிரும், தூங்குவது போலவே கண் மூடி படுத்திருந்தான். ‘எங்கு கண் விழித்தால், கேள்வி கேட்டே தன் வாயிலிருந்து, தன் காதலை பிடுங்கி விடுவாள்’ என்ற நல்ல எண்ணம் தான். 

அவள் உறங்கி விட்டது, அவளது சீரான மூச்சுக்காற்றில் உணர்ந்தவன், பிறகே இழுத்து வைத்த தன் மூச்சை வெளி விட்டான். அதன் பிறகு நிம்மதியாக உறக்கத்தின் பிடியில் சென்றான். 

†††††

மறுநாள் காலையில் பனிமலரை தனியே சந்தித்த தீப்தி, “என்ன மலர், நான் அவ்வளவு சொல்லியும் நீ மாமாவ கட்டிகிட்ட? அவர் என்னைத்தான் விரும்புறார். தாத்தா சொன்னதுக்காக மட்டுமே உன்ன கல்யாணம் பண்ணினார். கூடிய சீக்கிரம் உன்கிட்ட இருந்து அவரை பிரிச்சு கூட்டிட்டு போயிடுவேன். டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட, ரெடியா இரு.” என தன் விஷத்தை கக்கிவிட்டு சென்றாள்.

‘கதிர், தீப்தியை விரும்பினால், தாத்தா கிட்ட சொல்லி அவளையே கட்டியிருக்க வேண்டியதுதானே? எதுக்கு என்னோட வாழ்க்கையை பாழாக்கினார்?” என மீண்டும் குழம்பத் தொடங்கினாள்.