வெண்பனி 22

IMG-20220405-WA0023-8ca572c6

பனி 22 

ஸ்ணோ ரேஸ் ரிசார்ட் என்ற பெயர் பலகை, பொன் எழுத்துக்களால் மின்னியது. அதை பனிமலரும் அன்புவும் வார்த்தைகள் அற்று பார்த்திருந்தனர். மனம் நெகிழ்ந்திருந்தது. பெண்ணின் கண்களில் மௌனம் தண்ணீர்.

பனிமலரின் ஒவ்வொரு முக பாவனையையும் ரசித்த கதிர் அவள் அருகே வந்து, அவளது கரத்தை பற்றி அழைத்து சென்று, ரிசார்ட்டை திறக்க கட்டியிருந்த ரிப்பன் முன் நிறுத்தினான். மலரின் கண்கள் கேள்வியாக கதிரின் கண்களை சந்தித்தது. 

அவளிடம் கத்திரிக்கோலை நீட்டி,”நம்ம ரிசார்ட் நல்ல நிலைக்கு வரணும்னு மனசார வேண்டி, இதை கட் பண்ணு பனி” என்றான் எதையோ சாதித்த கர்வ புன்னகையோடு. 

அன்பரசனுக்கும் பனிமலருக்கும் மயக்கம் வராத குறை. அன்பரசன் சுதாரித்து தன் தமயனை தழுவி கொண்டான். ஸ்தம்பித்து போயிருந்த பெண்ணிடம் மீண்டும் கத்திரிக்கோலை நீட்டினான். பனிமலரின் கைகள் அதை வாங்க மறுத்தது, கால்கள் இரண்டு எட்டு பின் வைத்தது, தலை முடியாது என மறுத்தசைத்தது.

“பனி” மென்மையான அழைப்பு.

“நா.. எப்ப.‌.?” முதல் நாளே எப்படி மறுத்து கூற என பனிமலர் தயங்கினாள். 

“நீ தான் பண்ணனும்.” அழுத்தமாக கூறினான்.

“என்னால் முடியாது. அதுக்கு தகுதி இருக்க, வேற யார்கிட்டயாவது குடுங்க.” பெண் தன் மறுப்பை கூறியேவிட்டாள்.

“நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிற உன்னைவிட, இதை கட் பண்ண தகுதியானவங்க வேற யாரும் இல்லை.” அவளுக்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டுமென்ற தீவிரம் அவனிடம்.

அவன் வார்த்தைகள் பெண்ணை மயிலிறகால் வருடி சென்றது. ஆனாலும் மனம் முரண்டியது.”வேண்டாம் கதிர் நான் ராசி இல்லாதவள்.”

அவள் இதை சொல்லி தான் மறுப்பாள் என்பதை தெரிந்தவன், தயக்கமின்றி,”நீ மட்டுமே என் அதிர்ஷ்ட தேவதை.”

அவனின் ஒவ்வொரு வார்த்தையும் பெண்ணை அசைத்துப் பார்த்தது. கத்திரிக்கோலை வாங்கலாமா? வேண்டாமா? என மனம் ஊஞ்சலாடியது.

அவளது தயக்கத்தை உணர்ந்தது போல,”மலர் சீக்கிரம் கட் பண்ணு. எல்லோரும் காத்திருக்காங்க.” என்ற குரல் அவர்களது பக்கவாட்டிலிருந்து வந்தது.

குரலுக்கு சொந்தக்காரரை கண்டு, பெண் மட்டுமின்றி சுற்றி இருந்த அனைவருமே திகைத்தனர். அந்த குரலுக்கு சொந்தக்காரர் பர்வதம்மாள்.

கதிரின் எண்ணத்தையும், பெண்ணின் தயக்கத்தையும் புரிந்த பர்வதம், அதற்கு தீர்வு வழங்கும் பொருட்டே பேசி இருந்தார்.

‘இவங்க என்னையா சொன்னாங்க?” என திகைத்த பெண் அவர் முகத்தையே வெறித்திருந்தாள்.

அவளது திகைத்த முகத்தை கண்டு பழனிவேலின் முகம் கணிந்தது. அவர்களை நெருங்கி கதிரின் கரத்திலிருந்த கத்திரிக்கோலை பனிமலரின் கரத்தில் கொடுத்து வெட்ட வைத்து,”ரெண்டு பேரும் வலது கால் வைத்து உள்ளே வாங்க.”

அவளும் கீ கொடுத்த பொம்மையாக அனைத்தும் செய்தாள். ‘ஜாதகத்தை பெரிதும் நம்பும், பழனிவேலும் பர்வதம்மாளுமா இது?’ என கதிர் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம். 

“தாத்தா, ஆச்சி நீங்களா இது?” அன்பு வாயை திறந்து கேட்டே விட்டான்.

“நாங்க தான்டா. ஏன் உனக்கு வேற யார் மாதிரியும் தெரியுதா? மச மசன்னு நிக்காம, போடா போ போய் வேலையை பார்.” என அசால்டாக பர்வதம் கூறினார்.

“வர வர உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு கிழவி. அதோட என்னையும் ரொம்ப அதிகாரம் பண்ற.” அன்பரசன் நெடித்துக் கொண்டான்.

“யாரைடா கிழவின்னு சொல்ற?” பழனிவேல் சண்டைக்கு கிளம்பினார்.

“கிழவிய கிழவின்னு சொல்லாம, குமரினா சொல்ல முடியும்? சின்ன புள்ளத்தனமா இருக்கு.”

“என்னோட பொண்டாட்டி எப்பயும் எனக்கு குமரி தாண்டா.” என மீசையை முறுக்கிக் கொண்டார் பழனிவேல். பத்தாதுக்கு தன் மனைவியிடம் காதல் பார்வை வேற.

“என்னங்க இது? பேர பசங்க முன்னாடி.” பர்வதம்மாளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

“வயசான காலத்துல ரொமான்ஸ பாருடா?” அன்பு கிண்டலில் இறங்கினான்.

“சின்ன பையன் உனக்கு என்ன இங்க வேலை? அந்தாண்ட போ.”

“இது எல்லாம் நல்லா இல்லை. இது எங்கே போய் முடியுமோ? ஒன்னும் சரியில்ல.” என புலம்பிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். ஆனால் மனமோ,’நானும் தனாவும், இப்படி ஒரு காதல் வாழ்க்கையை வாழ்வோமா?’ என எண்ணியது.

ஒரு பெருமூச்சுடன்,’அதுக்கு வாய்ப்பே இல்லை’ என விருந்தினர்களை கவனிப்பதில் ஈடுபட்டான்.

இன்னும் பனி சிற்பத்துக்கு உயிர் மீளவில்லை. அதே திகைப்பிலிருந்தாள். அவளது கவனத்தை வந்தவர்களிடம் திசை திருப்பி விட்டான் கதிர் அரசன்.

அதன் பிறகு அங்கு மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது.

†††††

ரிஷார்டில் தங்களுக்காக ஒரு பிரத்யேக குடிலை அமைத்திருந்தான் கதிர். ஒரு படுக்கையறை, வரவேற்பறை, சமயலறை கொண்ட சூட் ரூம். அன்றைய இரவு தம்பதியர் அங்கு தங்கினார்கள்.

இரவே அவனுடன் பேச வேண்டும் என நினைத்திருந்தாள் பனிமலர். ஆனால் ரிஷார்ட் திறப்பதில் இத்தனை நாட்கள் அலைந்து திரிந்த கதிர், இருந்த அலுப்பில் படுத்ததும் தூங்கிவிட்டான். அவனது உறக்கத்தை கலைக்க விரும்பாத பெண், பிறகு பேசிக்கலாம் என விட்டு விட்டாள்.

‘கதிரின் காதலுக்கு தான் தகுதியானவளா?’ கேள்வி பூதாகரமாக எழுந்து, பெண்ணின் தூக்கத்தை பறித்தது.

தூக்கம் வராமல் புரண்டவள், காலை நேரமே கதரின் தூக்கம் கெடாதவாறு எழுந்து, குளித்து, புடவை உடுத்தி, பால்கனியில் நின்று சூரியோதயத்தை ரசித்தாள். இந்த மூன்று மாத திருமண வாழ்வு, தனக்கு ஏற்படுத்திய மாற்றங்களை மனம் அசை போட்டது.

அவள் அந்த நினைவில் தன்னை மறந்திருக்கும் போது, கதிரின் அணைப்பு அவளை தன் வசம் இழக்க வைத்து, அவனுடன் ஒரு உடலாய் இணைய வைத்தது.

‘அவன் காதலுக்கு தான் தகுதியானவளா?’ மீண்டும் மனம் முரண்டியது. 

அவள் நினைவுகளில் இருக்க, கதிர் குளித்து முடித்தான். மோனநிலையில் இருக்கும் பெண்ணை பார்த்து, மோகம் தலை விரித்தாடியது.

ஒரு விரிந்த சிரிப்புடன் அவளை நெருங்கி, தன் தலையை சிலுப்பினான். அவன் முடியிலிருந்து நீர் சிதறல்கள், பெண்ணின் தேகத்தின் மீது பட்டு உடல் சிலிர்த்தது, மோனம் கலைந்தது.

தன்முன் இடுப்பில் கட்டிய டவலுடன், வெற்றுமேனியாக நின்ற கதிரை கண்ட பெண்ணின் முகம் சிவந்து, தலை தாழ்ந்தது. பிறகே தன்னிலை உரைக்க, வெட்கம் பிடுங்கி தின்றது. ஆடையாக தன் மேலிருந்த போர்வையால் தன் முகத்தை மறைத்தாள்.

கதிரின் சிரிப்பு பெரிதானது. அவளை நெருங்கி முகம் மறைத்த போர்வையை விலக்கி, குனிந்த தலையை நிமிர்த்தினான். 

“போ கதிர்” என அவனின் மார்பை பிடித்து தள்ளிவிட்டு, போர்வையை தன்மேல் சுற்றிக்கொண்டு  குளியலறை புகுந்தாள். கதிர் வெடித்து சிரித்தான். கதவை சாத்தியவளின் முகத்திலும் வெட்க ரேகைகள்.

குளித்து முடித்த பிறகே ‘தான் மாற்றுடை எடுத்து வரவில்லை’ என்பது உரைத்தது. தலையிலேயே அடித்துக் கொண்டவள், டவலை மார்புடன் முடிச்சிட்டு, கதவை மெல்ல திறந்து தலையை மட்டும் நீட்டி, அறையை ஆராய்ந்தவள் கண்களுக்கு யாரும் புலப்படவில்லை.

“அப்பா கதிர் இல்லை” நிம்மதி மூச்சுடன் குளியல் அறையிலிருந்து வெளியேறினாள். பாவம் அவளிருந்த பதற்றத்தில், பால்கனி திறந்திருப்பதை கவனிக்காமல் போனாள். 

அவன் வரும்முன் தயாராகி விட வேண்டுமென, பெட்டியை குடைந்து கொண்டிருந்தாள். சரியாக அந்த நேரம், கைப்பேசி உரையாடலை முடித்த கதிர், பால்கனியிலிருந்து வந்தான். 

புத்தம் புது மலராக, டவலுடன் நின்ற தன் மனையாட்டியின் தோற்றத்தை கண்டு உறைந்து போனான். மார்பிலிருந்து தொடை வரை மட்டுமே மறைத்திருந்த அவள் உடலில், மறைந்தும், மறையாமலும் தெரிந்த காட்சி அவனுக்கு போதை ஏற்றியது. பூவின் மேலிருக்கும் பனி துளி போல், மலரின் மேல் ஆங்காங்கே ஒட்டியிருந்த நீர் துளி, அவனது சித்தத்தை தடுமாற வைத்தது. பார்வையாலேயே அவளை மென்று தின்றான்.

அறையில் அரவரத்தை உணர்ந்து, நிமிர்ந்த பனிமலரின் விழிகளில் சிக்கியது, உறைந்து நின்ற கதிரும் அவனது பார்வையும். அவனது விழுங்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாத பெண், தன் முதுகை காட்டி திரும்பி நின்றாள். அந்தோ பரிதாபம் அது அவனது தாபத்தை இன்னும் அதிகரித்தது. முடியிலிருந்து வடிந்த நீர் அவனது தாபத்துக்கு நெய் ஊற்றியது.

அவள் மேல் பதித்த பார்வையை விலக்காமல், அடிமேல் அடிவைத்து அவளை நெருங்கினான். அவனது ஒவ்வொரு அடியும் பெண்ணின் மனதில் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

அவளது முதுகை மறைத்த முடியை ஒதுக்கி முன்னால் விட்டவன், வெற்று தோளில் உதடு பதித்தான். அவனது மீசையின் உராய்வு பெண்ணை தகிக்க வைத்தது. பெண் மயங்கி நின்றாள்.

எப்போதும் போல் அவளை பின்னிருந்து இடையோடு அணைத்தவன், “இன்னும் என்கிட்ட மறைக்க, உன்கிட்ட என்ன இருக்குன்னு திரும்பி நிக்கிற?” குரலில் தாபம் பொங்கி வழிந்தது.

அவனது தாபமேறிய குரலும், வார்த்தைகளும், பெண்ணுக்கு கிளர்ச்சியூட்டியது. வெட்கத்தில் ஒளிந்து கொள்ள இடம் தேடி, கிடைக்காமல், தன் கரத்தின் பின் ஒளிந்தாள்.

அவளை தன்னை நோக்கி திருப்பியவன், மலர் முகத்தை காண ஆவல் கொண்டான்.”பனி கையை எடு. என்னை பார்”

“ம்ஹூம்” மறுப்பின் தலையசைவு.

“என் செல்ல கண்ணம்மா இல்ல. ப்ளீஸ்டா” கெஞ்சி நின்றான், அந்த ஆறடி ஆண்மகன்.

அவனது கெஞ்சலில் மனம் இறங்கியவள், தன் முகம் மறைத்த கரத்தை விலகினாள். ஆனால் அவன் முகம் காண நாணம் தடுக்க, அவனது மார்பிலேயே முகம் புதைத்தாள். அவளது நாடியை பிடித்து தன் முகத்தின் நேர் நிமிர்த்தினான். விழி மூடி இருந்தது.

மூடிய இமையில் உதடு பதித்து, நெற்றி, கன்னம் என முத்த அணிவகுப்பை நடத்தி, இதழ்களை அடைந்த நேரம், கரடியாக ஒலி எழுப்பியது கைப்பேசி. அழைத்தவரை மனதில் சாடியவன், அந்த முத்தத்தை முடித்த பிறகே கைப்பேசியை எடுத்தான். 

“டிரஸ் மாத்து.” என கட்டில் மேலிருந்த தங்கள் கல்யாண புடவையை காட்டிவிட்டு, பால்கனியில் நின்று பேச தொடங்கினான். 

‘கௌதம் வீட்ல எடுத்துக் குடுத்த புடவையை எதுக்கு கட்ட சொல்றான்?’ என நினைத்த படியே, அந்த புடவையை உடுத்த தொடங்கினாள்.

பேசி முடித்து வந்தவன் அவள் அழகில் மயங்கி தன்னை மறந்தான். “உனக்காக நான் பார்த்து பார்த்து எடுத்த சேலை. ரொம்ப அழகா இருக்கு கண்ணம்மா.” என அவனையும் அறியாமலே வார்த்தைகள் விட்டிருந்தான். அதை அவன் உணரவே இல்லை. ஆனால் பெண் அதை சரியாக மனதில் குறித்து கொண்டாள். 

அவளது விழிகள் அவனை சந்தேகத்துடன் வட்டமிட்டது. தலைகால் புரியாத மகிழ்ச்சியில் திளைத்திருந்த, அவன் மனதில், பெண்ணின் சந்தேக பார்வை பதியவில்லை.

வர வைத்திருந்த உணவை முடித்தவர்கள், பனிமலரின் இஷ்ட தெய்வத்தின் முன் கைகூப்பி நின்றனர்.

“ஆண்டவா! பனி என்னோட காதலை புரிஞ்சு, என்னை ஏத்துக்கிட்டா. இப்ப இருக்க இதே காதலோடும், மகிழ்ச்சியோடும் நான் அவளை கடைசி வரை பார்த்துக்கனும். இதுவரை அவள் அனுபவச்ச கஷ்டம் போதும். இனி என்ன கஷ்டமென்றாலும், எனக்கு மட்டும் கொடு. அவள் வாழ்வில் இந்த மகிழ்ச்சியை நிரந்தரமாக்கு.” என கதிர் வேண்டினான்.

“ஈஸ்வரா! கதிர் என்னை ரொம்ப விரும்பறான். என்னை அவனோட அதிர்ஷ்ட தேவதையா பார்க்கிறான். என்னோட துரதிஷ்டத்தை அவனுக்கு குடுத்துடாத. என்ன கஷ்டமென்றாலும், எனக்கு மட்டும் கொடு.” என பனிமலர் வேண்டினாள்.

ஏறக்குறைய ஒரே மாதிரி வேண்டுதல் வைத்த இருவரையும், பரமேஸ்வரன் மாறாத மர்ம புன்னகையுடன் பார்த்திருந்தார். 

மர்ம புன்னகை கூற வருவது என்ன?

†††††

கோவிலில் இருந்து வரவும், அவளை ஆசையாக அணைக்க வந்த கதிரின் கரங்கள், அவள் கேட்ட கேள்வியில் உறைந்து நின்றது. அவளிடம் எங்கு தொடங்கி? எங்கு முடிக்க? என வார்த்தைகள் தேடி தவித்தான்.