வெண்பனி 29

பனி 29

போதை! ஒரு மனிதனை தன்னையே மறக்கச் செய்யுமளவு கொடியது. மது, மாது, பணம், பதவி என எண்ணற்ற போதை மனிதனை ஆட்சி செய்கிறது. அந்த போதை இல்லாத மனிதனை, இவ்வுலகில் காண்பதென்பதே அரிது.

கதிர் அரசனுக்கும் அப்படி ஒரு போதை இருந்தது தன் பெண் நிலவின் மீது. தெளிய விரும்பாத போதை. மேலும் அதனுள் அமிழ்ந்து போக தூண்டும் போதை.

ஆனால் இப்போது அவனை ஆட்சி செய்வது வேறு போதை. அவன் உணவுடன் கலந்து உட்கொண்ட வஸ்து, அவனை தன் வசம் இழுத்தது. தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தவன் உடனே சுதாரித்தான்.

தன் அறைக்கு செல்ல மாடிப்படிகளில் ஏறியவனின் கால்கள் தடுமாறியது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த தீப்தி, “ஐயோ மாமா. பார்த்து.” என அவனை நெருங்கினாள்.

தன் சுட்டெரிக்கும் பார்வையால் அவளை எட்ட நிறுத்தி, தடம் மாற இருந்த தன் வாழ்க்கையை நேராக்கினான். அவனது பார்வையில் அரண்டு போன பெண்ணவளோ நான்கடி அவனை விட்டு தள்ளி நின்றாள்.

“குட். இதையே மெயின்டைன் பண்ணு. கிட்ட வந்து தொட்டு பேசற வேலை வச்சுக்காத. அப்பறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். பி கேர்ஃபுல்.” என கதிர் எச்சரிக்க, தீப்தி பயந்து போய் அவனை கண்டாள்.

அவளை அலட்சியம் செய்த கதிர் தன் அறைக்கு சென்று கவனமாக கதவை தாழிட்டான். உடலில் இளமை தேடல் அதிகரித்தது.

தன் படுக்கையில் விழுந்தவனின் உதடுகள்,”பனிமா ஏன் என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போன? ஐ லவ் யூ டி. என்கிட்ட திரும்ப வந்துடு. உன்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிறேன். ப்ளீஸ் டீ கண்ணம்மா வந்துடு. ஐ பேட்லி நீட் யூ பிசிக்கலி அண்ட் மெண்டலி” என குழறியது. கைகள் தன் இணையை தேடி துழாவியது.

அப்போது ஒரு வளைகரம் அவன் கரத்தில் சிக்கியது. அதை தன்னோடு இழுத்து சேர்த்தனைத்தான். அந்த அதீத போதையிலும், அவனால் தன்னவளின் ஸ்பரிசத்தையும் வாசத்தையும் உணர முடிந்தது. 

கண்கள் தன்னவளின் முகம் காண ஏங்கியது. மயக்கத்தில் சொருகிய கண்களை சிமிட்டி அவளது முகம் கண்டான். மங்கலாக தெரிந்த கண்களில், பிரகாசமாக ஜொலித்தாள்.

அவன் தன்னை மறந்து, அவளுள் மூழ்கினான். லட்ச முத்தங்களால் அவளை அர்ச்சித்தான். யாராலும் நம்ப முடியாத அழகான சங்கமம், யாருக்கும் தெரியாமல் அங்கு நடந்தேறியது. ஆத்மார்த்தமான காதல் உயிர் பெற்றது.

அவனது உடல் போதையின் மயக்கத்தில் துவண்ட போதும், மூளை விழிப்புடன் இருந்தது. தன்னவளை தவிர யாரையும் தீண்டாத கரங்கள், யாரையும் தீண்ட தயாராக இல்லாத கரங்கள், இப்போதும் அவளை மட்டுமே தீண்டியது.

கதிர் மயக்கம் தெளிந்து காலையில் எழும்போது படுக்கையில் அவள் இல்லை. ஆனால் அவளது வாசம், அவன் மனதை நிரப்பியது போல், அந்த அறையையும் நிரப்பி இருந்தது. மனம் உற்சாகமாக, தன் பணிகளை ஆரம்பித்தான்.

சுகந்தியின் பிரச்சனை, கார்த்திகேயனின் சிகிச்சை என அன்றைய தொடர் சஞ்சலங்களால் அவளுடனான நினைவுகள் பின்தங்கியது.

அனைத்தும் முடிந்து தனதறைக்கு சென்றவனின் மனம் எதையோ உணர்த்தியது. அதை புறம் தள்ளியவன், எப்போதும் போல் அவனது அன்றைய நிகழ்வுகளை, அவளது புகைப்படத்துடன் பகிர்ந்தவன், மன்னிப்பையும் வேண்டி படுக்கையில் விழுந்தான்.

படுத்த அடுத்த நொடி விருட்டென எழுந்து, தன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான். நேற்று இந்த படுக்கையில் நடந்த கூடலின் காட்சி மங்கலாக கண்முன் தோன்றியது. அவனது கைகள் ஆசையுடன் படுக்கையை தடவியது.

சிறிது நேரம் தன்னை மறந்திருந்தவன், அதை தத்ரூபமாக வந்த கனவு என நம்பி படுத்தான். கண்களை மூடியவனின் அறிவு விழித்தது. அவனது சிந்தனை முழுவதும் அந்த கூடலில் லயத்திருந்தது.  அவளது ஸ்பரிசத்தை இவனது உடல் இப்போதும் உணர்ந்தது. அதில் சிலிர்த்தெழுந்தான்.

முதலில் கனவென்று நம்பியவன், நேரம் செல்ல செல்ல, அதை கனவாக ஒதுக்க முடியவில்லை. அவனது மனம் திரும்பத் திரும்பத் தன்னவளின் இருப்பை தெரிவித்தது. அவனது கண்கள் அந்த அறை முழுவதும் அலைந்தது. வித்தியாசமாக ஒன்றுமில்லை. மனம் சோர்ந்தான்.

“கண்ணம்மா! நீ இங்க இருக்கிற மாதிரி எனக்கு தோணுது. நீ இங்கதான் இருக்கியா? இங்க இருந்தா என் கண் முன்னாடி வா. என்னை இன்னும் தவிக்க விடாத.” ஒரு சத்தமும் இல்லை, அவனது முகம் வாடியது.

“நேத்துல இருந்து நீ என்கூட இருக்கிறதை என்னால் உணர முடியுது. அது பொய்யா? உனக்கு என் மேல் என்ன கோபம் கண்ணம்மா? ஏன் என் முன்னாடி வர மாட்டீங்கற?” என்றவனின் கண்கள் கசிந்தது. அறையில் எந்த மாற்றமும் இல்லை.

“பனிமா! ப்ளீஸ் டி வா. எனக்கு நீ எப்பவும் வேணும். நீ இல்லாம நான் நடைபிணமாகிட்டேன். நம்ம பாப்பா இல்லைன்னா நானும் உன் கூடவே வந்திருப்…” என பைத்தியம் போல் பிதற்றியவனின் வாயை, ஒரு மெல்லிய கரம் மூடியது.

சரியாக அந்த நேரம் ஆக்ரோஷமாக காற்று வீசியது. மூடி இருந்த ஜன்னல்கள் அதிர்ந்தது. திரைசீலைகள் பலமாக அசைந்தது. மலர்களின் நறுமணம் நாசியை தீண்டியது. எரிந்து கொண்டிருந்த சிறிய இரவு விளக்கும் அணைந்தது. 

அவன் வாழ்வின் இருளை போக்கும், வெளிச்சமாக அவன் முன் தோன்றினாள் பனிமலர். எப்போதும் இருக்கும் வசீகரித்தை விட, இப்போது பல மடங்கு அதிகமாக வசீகரித்தாள்.

கதிர் அரசனின் வாயை அவளது தளிர்க்கரம் மூடி இருக்க, அவனது கண்களோ நிலை குத்தி நின்றது அவளது முகத்தில். தன் கண்கள் காட்டும் காட்சி மெய்யா? பொய்யா? ஒன்றும் புரியாமல் திகைத்துப் போனான். 

“பனி நீ நீ..” ஆடவனுக்கு வார்த்தைகள் என்ன மூச்சே வர மறுத்தது.

“நானே தான் மாமா. உன்னை விட்டு போக மாட்டேன்னு சொன்னேன்ல. அதே மாதிரி திரும்ப வந்துட்டேன். இப்ப சந்தோஷமா?” என தலை சரித்து, கண் சிமிட்டி, அழகாக புன்னகைத்தாள்.

அவளில் கவரப்பட்டவன், அவளை இழுத்து அணைத்து கொண்டான். இந்த நிமிடம் அவள் இறந்து விட்டால் என்பதை நம்ப மறுத்தான். அவள் ஒரு ஆன்மா என்று பயம் கொள்ள மறுத்தான். ‘தன்னவள் தன்னிடம் வந்துவிட்டால், அது போதும் எனக்கு’ என்ற எண்ணம் மட்டுமே அவனிடமிருந்தது.

“பனி இது நிஜமா? நீ உண்மையாலுமே என்கிட்ட திரும்பி வந்துட்டியா? ஏன் என்னை தவிக்க விட்டுட்டு போன? நீ போனதுக்கு உனக்கு நிச்சயம் தண்டனை தருவேன்.” என்ற மிரட்டலுடன், கதிர் தன்னிலை மறந்து பிதற்றனான்.

அவனது அணைப்பில் கட்டுண்டவள், “இது நிஜம் தான் கதிர் மாமா. நான் உனக்காக, உன்னோட காதலுக்காக, நம்ம பாப்பாவுக்காக திரும்ப வந்துட்டேன்.”

“மறுபடியும் என்னை விட்டுட்டு போக மாட்டீல்ல?” அச்சத்துடன் கேட்டான்.

“மாட்டேன். நீ இந்த பூமியில இருக்குற வரை, நானும் உன்கூட இருப்பேன். எப்ப உன் உயிர் பிரியுதோ, அப்ப என்னுயிரும் உன்னுடன் பயணிக்கும்.” என்று கதிரின் மனதை குளிர்வித்தாள்.

கதிரால் நம்ப முடியவில்லை. இது கனவாக இருந்தால், எப்போதும் உறக்கம் கலைய வேண்டாம் என்றும், ஒருவேளை நிஜமாக இருந்தால், இந்த நிமிடம் இப்படியே உறைந்து விட வேண்டும் என வேண்டினான்.

என்னது பனிமலராாாா? என்னடா நடக்குது இங்கே? அவள் எப்படி அவனது அருகில்?

இது விதியின் விளையாட்டா? இல்லை தெய்வத்தின் அருளா?

†††††

சுகந்தியும் தீப்தியும், கதிரை வளைத்து போட திட்டமிட்டதை, அருவமாக இருந்த பனிமலர் கேட்டு கொதித்துப் போனாள். அவள் நேரே சென்று நின்றது அவள் வணங்கும் பரமேஸ்வரனின் முன்.

வெட்ட வெளியில் நின்றவள், “ஈஸ்வரா, ஈஸ்வரா” என உரிமையுடன் அழைத்தாள்.

அவளது அழைப்பிற்கு செவி சாய்த்து, உடனடியாக அங்கு ஒரு ஒளி தோன்றியது. தெய்வத்தைக் கண்ட மகிழ்ச்சி அவளது முகத்தில் துளி கூட இல்லை.

“எதற்காக என்னை அழைத்தாய் மகளே?” ஒளியிலிருந்து ஒலி மட்டும் செவியை தீண்டியது.

புகை வடிவில், காற்றில் அசைந்தாடிய பனிமலரின் ஆன்மா, “உங்களுக்கு இப்ப சந்தோஷமா? என் கதிர் மாமாவ இன்னும் எவ்வளவு தான் கஷ்டப்படுத்துவீங்க? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?”

என்னது ஒரு ஆன்மா தெய்வத்தை கண்டதா? அதுவும் இவ்வளவு உரிமையுடன் சண்டை இடுகிறதா?

ஆம்! தூய ஆன்மாவான பெண்ணவளுக்கு தெய்வ அருள் முழுதாக கிட்டியது. அவளது அழைப்புக்கு இணங்க தெய்வமும் ஒளி வடிவில் அவள் முன் தோன்றியது.

இவளது பேச்சைக் கேட்ட தெய்வம், “மகளே! மனசாட்சி இருக்க வேண்டியது மனிதர்களுக்கு, எமக்கு அல்ல.”

“ஆமா எமக்கு இல்லை, எமனுக்கு இல்லைன்னு சொல்லிட்டு. உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருந்திருந்தா, என்னைய கூட்டிட்டு போய் இருப்பீங்களா?” ஒளியை முறைத்தாள்.

அவளின் நக்கலில் ஆண்டவனுக்கே சிரிப்பு வந்தது போல், ஒளி மேலும் பிரகாசித்தது. “அது முடிந்த போன கதை மகளே. இப்போ உனக்கு என்ன பிரச்சனை? அதை சொல்?” அவருக்கு தெரிந்தும் தெரியாதது போல் கேட்டார்.

தீப்தி சுகந்தியின் உரையாடலை கூறியவள், “எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கினது நீங்கதான்.” என அவர் மீதே குற்றசாட்டை வைத்தாள்.

“நான் என்ன செய்தேன் மகளே?” என்றார் அப்பாவியாக.

“ஒன்னும் தெரியாதது போல் பேசாதீங்க. அவங்க பேசுனதை கேட்டு, அவங்களை ஒன்னும் செய்ய முடியாமல், என்னை வச்சது நீங்க தான்.”

“ஆஹா இதேதடா வம்பா போச்சு. உன் ஆயுட்காலம் முடியவும் உன்னை தேவலோகத்துக்கு அழைத்து செல்ல முயன்றால், நீ அடம் பிடித்து பூலோகத்தில் உலவுகிறாய். அப்போ இந்த மாதிரி பிரச்சனைகளை நீ சந்தித்து தானாக வேண்டும். அதை சகிக்கவும் வேண்டும். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.”

ஆம்! பனிமலரின் உயிர் பிரியவும், அவளது ஆன்மாவை அழைத்து செல்ல முயன்றார்கள். அவள் செல்ல மறுத்துவிட்டாள். அதனால் தான் இப்போது அருவமாக தன் உயிரானவர்களை சுற்றுகிறாள். அவர்களை சுற்றி நடக்கும் சதிவேலைகள் கண்டு கொதித்து போய், அவர்களை ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தை நினைத்து, மனம் வெதும்பி இப்போது இறைவனுடன் சண்டையிடுகிறாள்.

“சொல் மகளே, நீ விருப்பப்பட்டு தானே பூலோகத்தில் உலவுகிறாய். உன் வேண்டுகோளை நினைத்து பார்.” அவளது நினைவு அன்றைய நாளுக்கு சென்றது.

†††††

அன்று மயக்க மருந்தின் உதவியுடன் பனிமலரை மயக்கமடைய செய்து, அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை இப்பூவுலகுக்கு உயிருடன் கொண்டு வந்தனர். 

மயக்கம் தெளிந்து எழுந்த பெண், தான் எங்கோ மிதப்பதை உணர்ந்தாள். ஒன்றும் புரியாமல் தன் விழிகளை சுழற்றினாள்.

அங்கு தன் உயிரை துளைத்த கதிர், ஜடகமாக இருந்தான். அவனிடம் சென்றவள்,”மாமா, நமக்கு என்ன குழந்தை பிறந்துச்சு? பாப்பாவை பார்த்தயா? யாரு மாதிரி இருக்கு? நீ பாப்பாவை தூக்குனயா?” என அடுக்கடுக்காக கேள்வி எழும்பினாள். ஒன்றுக்கும் விடை இல்லை.

பொறுமை இழந்தவள்,”கதிர் மாமா நான் கேட்டுக்கிட்டேயிருக்கேன். நீ பதிலே சொல்ல மாட்டிங்கற?” என அவனின் தோளில் கைவைத்தாள். ஷாக்கடித்தது போல் விலகினாள். அவளால் அவனை தொட முடியவில்லை.

அப்போது தான் தன் நிலை உணர்ந்தவள், தன்னை ஆராய்ந்தாள். புகைவடிவமாக மாறி இருந்தாள். தான் இறந்துவிட்டது புரிந்தது. ஆற்றுவாரின்றி அழுது கரைந்தாள். கண்ணீர் கூட வரவில்லை. நொந்தே போனாள்.

அப்போது அவளது கண்களை கூச செய்யும் ஒளியோடு, ஒரு ஜோதி தோன்றியது. நேர்கொண்டு அதை காண முடியாமல் கண்களை மூடினாள்.

“உன் கண்களை திறந்து பார் மகளே.” என ஒரு குரல் அவள் செவியை அடைந்தது.

“ம்ஹூம், எனக்கு கண்ணு கூசுது. என்னால பாக்க முடியல”

“இப்போது பார் மகளே.”

பயந்து கொண்டே மெல்ல கண்களை திறந்தாள், என்ன ஆச்சரியம்!? இப்போது அவளால் அதை பார்க்க முடிந்தது. மெல்ல உதடுகள் புன்னகையால் விரிந்தது.

“நீ… நீங்க யாரு?” வார்த்தையும் பயந்து வந்தது.

“நீ தினமும் வணங்கும் உன்  ஈஸ்வரன் தான் மகளே.”

“என்னது ஈஸ்வரனா! அவர் வேற மாதிரி இருப்பார். நீங்க சூரிய ஒளி மாதிரி இருக்கீங்க.” அறியாமையுடன் கேட்டாள்.

அவளுடன் விளையாடி பார்க்கும் ஆசை, அந்த தந்தைக்கு வந்தது போல். “உன் ஈஸ்வரன் எப்படி இருப்பார்?”

“நல்ல தோள் வரை முடிவச்சுட்டு, கழுத்துல பாம்பு சுத்திகிட்டு, கைல சூலாயத்தை வச்சுகிட்டு, அப்புறம்… ஞாபகம் வரல.” பாவமாக உதடு பிதுக்கினாள்.

அவளது பதிலில் அந்த ஒளி கூடுதல் பிரகாசித்தது (சிரித்தது). அதில் கோபம் கொண்டவள், “நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்னு சிரிக்கறீங்க?”

“உன் அறியாமையை நினைத்து சிரிப்பு வந்தது மகளே. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன், யாரோ ஒருவர் கற்பனையாக வரைந்ததை, நிஜமாக நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்?” 

“அப்போ உங்களுக்கு உருவம் இல்லையா?”

“இல்லை மகளே. அவரவர்களுக்கு விருப்பம்போல் உருவத்தை கொடுத்துக் கொண்டார்கள். இறைவன் என்பவன் நெருப்பை போன்றவன். நெருப்புக்கு நல்லவர்கள், தீயவர்கள், ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது. நெருப்பில் கை வைத்தால் யாராக இருந்தாலும் சுடும். நெருப்பு எப்போதும் மேல் நோக்கி மட்டுமே எரியும். அதுதான் இயற்கையின் நியதி. அதே போல் தான் இறைவனின் முன் அனைவரும் சமம். அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். அதனால் இறைவன் என்பவன் ஜோதி வடிவம்.”

அவர் பேசியது பனிமலருக்கு பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தது. தலையை சொரிந்தவள் என்ன சொல்வது என தெரியாமல் முழித்தாள்.

அவளைக் கண்ட அந்த ஒளி, மீண்டும் ஒருமுறை பிரகாசித்து குறைந்தது, “சரி போகலாமா மகளே.”

“எங்கே?”

“என்னுடன் மேலோகத்துக்கு.”

“நான் எதுக்கு வரணும்?”

“இது என்ன கேள்வி? எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.”

“அதுக்கு?” முகம் சுருக்கினாள்.

“அதனால் உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். உன் விருப்பமும் அதுதானே?”

“என்னது என்னோட விருப்பமா?”

“ஆமாம். ஒருமுறை உன் பாட்டி கிட்ட நீ கேட்கலையா? ஈஸ்வருக்கு என்னை பிடிக்குமா? என்னையும் அவங்ககிட்ட சீக்கிரம் கூட்டிட்டு போவாங்களான்னு? அதுக்கு தான் உன்னை கூட்டிட்டு போக வந்து இருக்கேன்.” குரலில் சிரிப்பு இருந்ததோ?

“நான் எப்ப சொன்னேன்?” சிந்தித்தாள். ஞாபகம் வரவில்லை.

“உன் எட்டாவது வயதில்.”

பனிமலரின் கோபம் புசுபுசுவென ஏறியது. “ஏதோ அறியா புள்ள, புரியா வயசுல, தெரியாம சொன்னத மனசுல வச்சுக்கிட்டு, இப்ப என்ன கூட்டிட்டு போக பாக்குறீங்களா? நான் வரமாட்டேன்.”

“உன் ஆயுள் முடிந்தது மகளே. நீ வந்து தான் ஆகணும்.”

“நான் என் குழந்தையை விட்டுட்டு வரமாட்டேன்.” 

“உயிர் உடலை விட்டு பிரிந்தால், மேலோகம் செல்ல வேண்டும். அது இயற்கையின் நியதி.”

“அது உங்களின் நீதியாக இருக்கலாம். எனக்கு ஒரு நியாயத்தை சொல்லுங்க?”

“உனக்கு என்ன நியாயம் வேண்டும்?”

“நான் பிறக்கும்போதே என் அம்மாவ பறிச்சிங்க. அதோட சேர்த்து அப்பா பாசத்தையும் அழிச்சிங்க. பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாமல் வளர வைத்தீங்க. ஏன் எல்லா கஷ்டத்தை எனக்கு கொடுத்தீங்க?”

“உன்னை இந்த நிலையில் நிறுத்தியது, உன் முன்னோர்களின் கர்மா. என்ன புரியவில்லையா?”

ஆம் தலையசைத்தாள்.

“உன் பெற்றோர், அவர்களது பெற்றோர் என வழி வழியாக செய்யும் பாவங்கள் அனைத்தும், அந்த சந்ததியினரின் அடுத்தடுத்த தலைமுறை மக்களை சேரும். உன் மூதாதையரின் பாவம் உன்னை அடைந்தது.”

“அவங்க செஞ்ச தப்புக்கு அவங்களுக்கு தான தண்டனை கொடுக்கணும். எனக்கு எதுக்கு தண்டனை?”

“முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து மட்டும் அல்ல, அவர்கள் சேர்த்து வைக்கும் பாவ புன்னியமும், அவர்கள் வாரிசையே சேரும்.”

“இதுக்கு எப்போ முடிவு கிடைக்கும்?”

“தான் செய்யும் பாவம் தன் சந்ததியை பாதிக்கும் என்று மக்கள் உணர வேண்டும். எப்போது மக்கள் அதை உணர்ந்து திருந்திகிரார்களோ, அதன் பிறகு உன்னை போல் அபலைகள் பாதிக்கபட மாட்டார்கள்.”

“என்னை அன்புக்காக ஏங்கவிட்டது முன்னோர்கள் செய்த கர்மாவாக இருக்கட்டும். நானும் என் குழந்தையும் என்ன பாவம் செய்தோம்?  எதுக்காக எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை?”

இறைவனிடம் பதில் இல்லை. சிறிய அமைதிக்கு பின், “புரியுது மகளே. ஆனால் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை.”

“நான் என் குழந்தையை விட்டுட்டு வரமாட்டேன். என் குழந்தைக்கு தண்டனை கொடுத்தது உங்க தப்பு. அந்த தப்புக்கு தண்டனையா என்னை பூமியில் வாழ விடுங்கள்.” மன்றாடினாள்.

“ஒரு ஆன்மா பூமியில் வாழ்ந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் மகளே.”

“எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நான் சந்திக்க தயார்.”

“நான் இன்னல் என்று சொன்னது அநியாயத்தை. உன் கண் முன்னால் அநியாயம் நடக்கும். உன்னால் தட்டிக் கேட்க முடியாது. அதை பார்த்து கஷ்டப்படுவதற்கு என்னுடன் வந்து விடலாம்.”

“முடியாது. ஏது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். வருந்த மாட்டேன்.” என உறுதி கூறி, பூமியில் வாழ அனுமதி வாங்கி இருந்தாள்.

†††††