ஹலோ,மிக்கி!

WhatsApp Image 2022-03-14 at 7.28.58 PM-bb6c6582

Hello, Mickey!
 
மிக்கி

“ஹலோ ஹோமீஸ்! இட்ஸ் மீ மிக்கி a.k.a மிகலி! பனிவாடை பாலாடைனு கவித்துவமா பேசாம மனசுக்கு தோணினத சட்டுனு சொல்லி பிரச்சனைய பட்டுனு முடிங்கன்ற வாட்ஸப் ஃபார்வோடோட இன்னையோட முதல் நோட்ட படிக்கப்போறோம்.. ம்ஹ்ம்” என்று தொண்டையை லேசாய் செருமிக்கொண்ட மிகலி கடிதத்தை வாசிக்கத் தொடங்கினாள்.

மிக்கி, முன்பு முதல் வருடத்தில் அந்த கல்லூரியின் ரேடியோ க்ளப் மெம்பராய் சேர்ந்தவள் இப்பொழுது அதே க்ளப்பின் ஆர்.ஜே மிக்கி.

“ஹே மிக்கி! இன்றைய கேள்வி.. இந்த பேஷன் கனவுலாம் ரொம்ப ஓவர் ரேட்டட்னு தோணுதா? லைக் கனவோ அந்த கனவு மேல பேஷனோ இல்லாதவங்க வாழ்க்கையே இல்லாதவங்கன்ற அளவு பேசறது.. வெல் அதை விடுவோம்.. காதல்.. அதபத்தி பேசுவோம்.. காதல்தான் இருக்கதுலேயே ஓவர் ஓவர் ரேட்டட் இல்லையா? காதலுக்காக இதை செய்யனும் அதை செய்யனும்.. உஃப்! எப்பவாது நமக்கு பிடிச்சவங்களும் பிடிக்காதவங்களும் ஓரேயாள இருக்கப்ப என்ன செய்ய? பிடிச்சிருக்குனு பிடிச்சிக்கனுமா? இல்லை பிடிக்கலைனு பிடிச்சுக்க ட்ரை பண்ணாமயே விட்றனுமா? காதல் நிஜமாவே அந்தளவு வர்த்தா என்ன?” என்ற கடிதத்தை வாசித்து முடித்தவள் எழுதியவரின் பெயரைத் தேட, கீழே கண்ட பெயரில் இவள் இதழில் சிறு கிண்டல் மொழி முறுவல் ஒரு ‘ஹ’ உடன் வெளிவந்தன அதிலிருந்த “மிக்கி” என்ற இவளது பெயரை கண்டதில். இதொன்றும் புதிதல்ல. தினமும் இதே போன்றதொரு கடிதம் வந்துவிடும். அதுவும் இவள் தொகுக்கும் நாட்களில் மட்டுமே வருவதை அவளும் மௌனமாய் கவனித்திருந்தாள். இதை எழுதுவது ஒரே ஆள் என்பதில் இவளுக்குத் துளி சந்தேகமில்லை. பெயரிடாத கடிதங்கள் என்பதால் பல மாணவர்களின் கைவரிசையை காணலாம். அதனாலையே எல்லாவற்றையும் வடிகட்டி தயார் நிலையில் வைத்துவிட்டே இவர்கள் தொடங்குவது. அது அங்குள்ள முறை. ரேடியோ ரூம் சாவியை இவர்களிடம் கொடுக்கும் முன்பு பத்தாயிரம் முறை இவர்களுக்கு ஹெச்.ஓ.டி எச்சரித்தது. சீனியர்கள் சரியாய் செதுக்கி வைத்திருந்த கோட்பாடுகளைப் பின்பற்றியபடி இதோ, இன்று இவர்களும்.

கண்ணாடிக்கு அந்தப்புறமிருந்து அனந்தா கையசைப்பதைக் கண்டுவிட்டு விஷமமாய் புன்னகைத்து கட்டைவிரலை உயர்த்தினாள் மிக்கி. அதற்கு அனந்தா வலக்கையை கழுத்திற்கு முன் வெட்டுவதுபோல் ஆட்ட அதையும் அதே விஷம சிரிப்புடன் தெத்துப் பல் தெரிய நாக்கை கடித்துச் சிரித்தவள் வலக்கையை உதறுவது போல் வீசிவிட்டு மீண்டும் கடிதத்தில் கவனமானாள்.

“வெல்.. வெல்.. உலகத்திலேயே பெரிய க்ளிக்பெய்ட் இதுதான்! ஹா..ஹா.. யெஸ் ஹோமீ! ஐ காட் யூ! உங்களுக்கான பதீ….ல் இதோ!” என்றவள் கடைசி வாக்கியம் முடிக்கும் முன்னே தொடங்கியது அப்பாடல்.

I stay out too late
Got nothing in my brain
That’s what people say, mm, mm
That’s what people say, mm, mm
I go on too many dates
But I can’t make ’em stay
At least that’s what people say, mm, mm
That’s what people say, mm, mm
But I keep cruising
Can’t stop, won’t stop moving
It’s like I got this music in my mind
Saying it’s gonna be alright
‘Cause the players gonna play, play, play, play, play
And the haters gonna hate, hate, hate, hate, hate
Baby, I’m just gonna shake, shake, shake, shake, shake
I shake it off, I shake it off (Whoo-hoo-hoo)

என்ற பாடல் வரிகள் அங்கு அதிர அதற்கேற்றாற்போல முதலில் மெல்லத் தலையாட்டியபடி எழுந்தவள் ஹெட்ஃபோனை கழட்டிவிட்டு பாடலுக்கேற்றவாரே சேர்மேல் ஏறி நின்றவள் அங்கிருந்தவாறே ஆடியபடி அனந்தாவை விரலால் வா என்பதுபோல் வம்பிழுக்க இங்கு இவள் கழுத்துக்கு வைத்திருந்த குஷனை தூக்கி எறிந்தாள். அது அந்த கண்ணாடியில் மோதி விழ, ஆடியபடியே வெளியில் வந்த மிக்கி அனந்தாவிடம் ‘பை’ என்பதுபோல் கையை குவித்து ஒரு ஷெஃப் கிஸ்ஸுடன் தோள் பையைத் தூக்கிக்கொண்டு வெளியேறப் போக,

“எங்க போற” என்ற அனந்தாவிடம்

“லைப்ரரி. ப்ரின்ட் ஔட் எடுக்க. ஃபஸ்ட் க்ளாஸே சிசி” என்றாள் தலையையும் தோளையும் பீட்டுக்கு ஏற்றார்போல அசைத்தபடி. சி சி சிடுமூஞ்சி சிங்காரத்தின் சுருக்கம்.

“லைப்ரரில ஏதோ இஷூ. லேப்க்கு தான் போகனும்” என்றதும் மிக்கியின் ஆட்டம் ஸ்விட்ச் போட்டாற்போல் நின்றது.

“ப்ச்! இவ்ளோ பெரிய காலேஜ் லைப்ரரில ஒரேயொரு கம்ப்யூட்டர் அதுவும் வேலை செய்யல! நல்லது!” குரலில் சிறு எரிச்சலும் நிறைய ஏமாற்றமும் தொனித்தது.

அனந்தாவிற்கும் புரிந்தது. லைப்ரரியும் இவர்களது ‘ஸ்டேஷனும்’ ஒரே கட்டிடத்தில். அடுத்த தளத்தில். அதாவது கிட்டத்தட்ட ஐந்து நிமிட நடை. பிறகு அங்கிருந்து அடுத்த பில்டிங்கிலுள்ள வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். இப்பொழுது இது இல்லையென்றால் இவள், இவள் வகுப்பறை இருக்கும் கட்டிடத்திற்கு நேரெதிர் திசையிலுள்ள ப்ளாக்கில் உள்ள லேபிற்கு செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து வகுப்பறை! எவ்வளவு வேகமாய் நடந்தாலும் இவள் வகுப்பிற்குத் தாமதமாகிவிடும். ஆனால் மிக்கி விஷயத்தில் அதற்கான வாய்ப்புகள் 50 : 50 அவள் சாதாரணமாகவே சிறு துள்ளலுடன் கூடிய மெல்லொட்டத்திற்கு சொந்தக்காரி. அதனால் இதொன்றும் பெரிதாய் தோன்றவில்லை இவளுக்கு. ஆனால் சுகமும் வலியும் அனுபவிப்பவளுக்குதானே! உர்ரென்றதை பாவமாய் மட்டுமன்றி வெளிப்படையாகவே சத்தமெழுப்பியவாறே வெளியேறினாள் மிக்கி. ஹை வெய்ஸ்டட் தொள தொள நீல ஜீன்ஸ், கறுப்பு நிற க்ராப் டாப் அதற்கு மேல் கறுப்பும் வெள்ளையிலுமான தொள தொள செக்ட் ஷர்ட். லோ பன்னில் அடங்கியிருந்த லேயர் கட் செய்யப்பட்ட நீளக் கூந்தல். தோளில் சிவப்பு நிற பேக்பேக் காலில் வெள்ளை நிற ஸ்னீக்கர்ஸ் சகிதம் ஓடியவளில் இருந்து கவனத்தைத் திருப்பினாள் அனந்தா. அது மிக்கி ஸ்டைல்!

வேர்க்க விறுவிறுக்க லேப் இருக்கும் ப்ளாக்கிற்குள் நுழைந்தாள் மிக்கி.

அதற்கு சற்று முன்,
லைப்ரரியின் ஏதோ ஒரு மூலையில் போடப்பட்டிருந்த மேசையில்..

புத்தங்களை பரப்பி வைத்துக்கொண்டு எதோ நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தவனின் செவியில், “ஹலோ ஹோமீஸ்..” விழவும் அவன் முகத்தில் சிறு மாற்றம். அவள் பேச்சில் புருவங்கள் இரண்டும் ஒரு கணம் ஏறி பின் தாழ்ந்தன. அவள் பேசி முடித்து “Shake it off” ஓடவும் இவனும் புத்தகங்களைப் பையினுள் திணித்தபடி எழுந்துகொண்டான். இவன் நிவன்.

நிவன்

புத்தகங்களை ஒவ்வொன்றாய் பையினுள் போட்டவன் மீதியைத் தூக்கிக்கொண்டான். ஒவ்வொன்றாய் இடம்பார்த்து அடுக்கியவனுள் ஹலோ ஹோமீஸ் பேச்சு ரீங்காரமிட அலையடிக்கும் எண்ணங்கள் கரைத்தொட்டன.

இதோ.. இந்த குரலுக்கானவளைப் பற்றி. மிக்கி! கேம்பஸ் ஆர்ஜே. க்ளாஸ் நேரம் தவிர்த்து மத்த நேரமெல்லாம் ஒரு இடத்துல அமைதியா உட்காராத துருதுரு க்ளாஸ்மேட். எல்லாத்துலயும் முழு ஆர்வத்தோட கலந்துக்கறவ. அவ இல்லாத நிகழ்ச்சியே கம்மி. ம்ஹ்ம்.. இதெல்லாம் அவனும் சொல்லிருப்பான் அவளோட இன்னொரு பக்கத்த பார்க்க நேராம இருந்திருந்தா! இவ பண்றதெல்லாம் மத்தவங்களுக்கு வேணா வாலுத்தனமா தெரியலாம் ஆனா அவனுக்கு.. மிக்கி சரியான ட்ரபிள்மேக்கர் ரகம்! அவன் ஒவ்வொருவாட்டி பார்க்கும்போதும் ஒன்னு அவ பண்றது அவ பண்ணக்கூடாதவையா இருக்கும் இல்லை இல்லீகலா இருக்கும்! ஒருவாட்டிக்கூட அவ சாதாரணமா இருந்து அவன் பார்த்ததேயில்ல.. ஏன் இந்த காலேஜ்ல முதல் நாள் இன்ட்ரோவே அவளது எப்படி இருந்தது? இவன்கிட்ட கேட்டா ஒன்னில்லை தொண்ணூறு காரணம் சொல்லுவான் அவனுக்கு ஏன் மிக்கி பிடிக்காதுனு! அதுல முதல் சம்பவமே அவள முதல் தடவை பார்த்ததுதான்!

சம்பவம் – 1

அது கல்லூரியின் முதல் நாள். மாணவர்கள் அனைவரும் சிறு சிறு குழுக்களாய் பிரித்து உட்கார வைக்கப்பட்டிருந்தனர். சோஷியலஸிங் செஸ்ஷன் என. ஒவ்வொரு குழுவும் பெஞ்சுகளை வசதியாய் இழுத்துப்போட்டு வட்டமாய் அமர்ந்திருக்க அனைவரும் வரிசையாய் தன்னையும் தனது பிடித்தங்கள் என தன்னைப்பற்றியும் விருப்பப்பட்டதை குழுவுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். நிவனுக்கு முதல் நாளின் இந்த பகுதி மட்டும் அத்தனையாய் ருசிக்கவில்லை. மனதுக்குள் வேறு மெல்லிய கொழும்புச் சத்தங்கள் மெல்ல மெல்ல நெருங்கிக்கொண்டிருக்க அதிலிருந்து அவனைத் தட்டியெழுப்புவதுபோல திடீரென ஒரு குரல்! அதி உற்சாகத்துடன். எல்லாரும் முதல் பேச்சை எப்படித் தொடங்குவோம்? ஹாய் ஃப்ரெண்ட்ஸ்? ஹலோ எவ்ரிவன்? இல்லை ஹாய் ஆல்? ஆனால் அவள் எப்படித் தொடங்கினாள் தெரியுமா..

“ஹே ஹோமீஸ்!! நான் மிக்கி a.k.a மிகலி! சாகித்யா ஸ்கூல். கே ட்ராமா, ஜே ட்ராமா, சி ட்ராமா, டி ட்ராமா, ஈ சீரீஸ், எஸ் சீரீஸ், மாங்கா, மான்ஹ்வா, காபி, படம், பாட்டுனு எதைப் பத்தி வேணாலும் என்ட்ட பேசலாம்! அனிமேனா தனி இஷ்டம்! யாராவது அனிமேனா கார்டூன்தானேனு வந்தா அப்பறம் என் ஷாரிங்கன அன்லாக் பண்ணிடுவேன்!!” என்ற சிறு மிரட்டலை தன் தெற்றுப்பல் தெரிய விரியப் புன்னகைத்துச் சொல்லிவிட்டு அமர அங்கு புயலடித்து ஓய்ந்த அமைதி. அவளையே தன்னை மறந்து வெறித்துப் பார்த்திருந்த நிவன் அந்த அமைதியில் தன்னிலை மீண்டவனாய் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டான், உள்ளுக்குள்ளே ஆழ் மூச்சொன்றை இழுத்துவிட முதலும் முற்றுமாய் அவனுக்குத் தோன்றிய ஒரே எண்ணம் “இவளுக்கும் நமக்கும்.. எதுலயுமே செட்டாகாது!” தான்.

காத்திருந்தவன் தன் முறை வரவும் எழுந்து, “ஹாய்! நான் நிவன்” என்றுவிட்டு அமர்ந்துகொள்ள அதற்குள்ளேயே அவனுக்குள் ஒருவித படபடப்பு வந்துவிட்டதை இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது. இந்த ஆங்ஸைட்டியை வைத்துக்கொண்டு இவன் ஒன்றையும் உருப்படியாய் செய்யப்போவதில்லை என்று எரிச்சலாய் நினைத்துக்கொண்டான்.

சம்பவம் – 2

இரவு மணி பத்தை தாண்டியிருக்கும். நன்றாய் இருட்டிவிட்டிருந்தது. ஒரு காதில் மட்டும் ஏர்பாடை மாட்டிக்கொண்டு ஹூடியால் மறைத்தபடி பாட்டுக்கேட்டபடி மெல்ல நடந்துகொண்டிருந்தான் நிவன். அது அவனது வழக்கம். தினமும் இரவு இருட்டிய பிறகு தன் வேலையெல்லாம் முடித்துவிட்டுப் பாட்டுக்கேட்டபடி சற்று தூரம் நடந்துவிட்டு வருவது. அன்றும் அப்படிதான் நடந்துகொண்டிருந்தான். சொல்லப்போனால் அன்றுதான் அவ்வழியில் அவன் முதலும் கடைசியுமாய் நடந்தது.

இரவு நேர இதத்தை அனுபவித்தபடி நடந்துகொண்டிருந்தவனின் நடை தடைப்பட்டது அவன் கவனத்தில் விழுந்தவையால். இவனைப்போலவே தலைவரை ஹூடியால் இழுத்து மூடியிருந்த உருவம் ஒன்று அவ்வீட்டின் முதல் தள மேல்மாடத்தில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தது. மெல்ல மொபைல் அருகே சென்ற கை பட்டென ப்ரேக்கிட்டது இறங்கிய உருவத்தின் முகத்தைக் கண்டு. அது மிக்கி! சந்தேகமின்றி அவளேதான்! அவள் கீழே இறங்கிய மறு நொடி முதல் தளத்தில் விளக்குகள் போடப்பட்டு மெல்லிய சலசலப்பு எழவும் இவள் விடுவிடுவென காம்பௌண்ட் சுவரை ஏறிக் குதிக்கவும் சரியாய் இருக்கக் கதவு திறக்கப்பட்டு முதல் தளத்தில் இருந்து யாரோ ஓடி வருவது போலிருக்க இவள் இங்குப் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடியதிலேயே இவனுக்கு உரைக்கிறது அது அவள் வீடாய் இருக்க வாய்ப்பில்லையென. அதற்குள் காலடிச்சத்தங்கள் வெகு அருகில் கேட்கவுமே இன்னொன்றும் உரைக்கிறது. இன்னும் ஒரு நொடி இவன் இங்கு நின்றாலும் நாளைய பொழுது இவனுக்குக் கம்பிகளுக்குப் பின் என.. அவள் சென்ற திசையைத் திரும்பிப் பார்க்கச் சாலையே வெறிச்சோடிக் கிடந்தது. மறுகணமே ஓட்டமெடுத்தான் நிவன். ஏன் எதற்கு என்றே தெரியாமல் அன்று நிம்மதியாய் வாக்கிங் சென்றவன் உயிருக்குத் தப்பி ஓடியதுபோல வேர்க்க விறுவிறுக்க வீடு வந்து சேர்ந்தான்.

சம்பவம் – 3

சைக்கிள் பெல் சத்தங்களும் வண்டி ஹார்ன் சத்தங்களும் மற்ற மாணவர்களின் சலசலப்புமாய் அன்றைய காலை அழகாய் விடிந்திருந்தது காலேஜின் வாசலில். தனது சைக்கிளில் வந்திறங்கிய நிவன் அதை அங்கிருந்த ஸ்டாண்டில் வைத்து பூட்டுவதற்காய் முயற்சி செய்துகொண்டிருக்கும்போதே உள்ளுக்குள் ஓர் எண்ணம் திண்ணமாகிறது! இன்று மிக்கியிடம் அன்றைய இரவை பற்றி கேட்டுவிடவேண்டுமென்று. அவன் எண்ணங்கள் ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்கையில் கவனம் சிதறுகிறது அவனைக் கடந்து சென்று சில அடி தூரத்தில் நின்ற பைக்கில். அதில் இருந்து இறங்கிய மிக்கியில்! இவர்கள் வயதையொத்த இளைஞன் ஒருவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தவள் ஒரு குட்டி ஜம்புடன் இறங்கிக்கொள்ளவும் முன்னால் அவள் பேக்பேக்கை வைத்திருந்தவன் ஏதோ பேசியபடி அதைத் தூக்கி வீசுவது போல் பாவனை செய்ய அதற்கு அவன் காதை பிடித்து திருகி இழுத்தவள் முதுகில் பட்டென்று வலக்கையால் ஒரு அடி வைத்துவிட்டு இடக்கையால் தன் பையைப் பிடுங்கிக்கொண்டு, வலியில் காதை தேய்த்துக்கொண்டவனுக்கு ஒரு மெல்லிய அணைப்பும் கண்ணத்து முத்தமும் தந்துவிட்டு ஓடிவிட்டாள். அவனும் வண்டியைத் திருப்பிக்கொண்டு கிளம்பிவிட்டான். நிவன் நின்ற இடத்திலேயே நின்றுவிட்டான். சற்று நேரத்திற்கு முன் அவளிடம் கேட்க வேண்டும் என்றெண்ணியவை எல்லாம் அந்த பைக்கோடு பறந்துவிட்டதுபோல சைக்கிளைப் பூட்டிவிட்டு கஃபட்டீரியாவை நோக்கி நடந்தான்.

சம்பவம் – 4

விடாது கருப்பைபோல அந்தோ பரிதாபம் அங்கும் அவளே!

நேராய் கஃபட்டீரியா வந்தவன் தனக்கொரு காபியை வாங்கிக்கொண்டு ஓரத்து இருக்கை ஒன்றைத் தேர்வு செய்து அமர்ந்துவிட்டான். மெல்லக் காபியை உறிஞ்சியவனின் பார்வை அந்த கஃபட்டீரியாவையே அளந்துகொண்டிருந்தது. அப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வையில்தான் அதுவும் விழுந்தது. அதாவது அவன் பார்வையில் மட்டும் தான் அது விழுந்தது! கஃபட்டீரியாவினுள் நுழைந்த மிக்கி ஒரு கணம் பொருத்து புருவ முடிச்சுடன் பார்வை அலையவிட்டாள். பிறகு அவள் பார்வை தேடியதை கண்டுவிட்டதை போல ஒரு முடிவுடன் சட்டென பெரிய புன்னகையை ஒட்டிக்கொண்டவளாய் தனது வழமையான துள்ளல் நடையுடன் கூட்டத்தினுள் கலந்தவள் ஒரு டேபிளின் அருகே வரும்பொழுது மேசையிலிருந்த ஆவி பறக்கும் காபியை அமர்ந்திருந்தவனின் மடியில் விழுமாறு ஸ்டீல் மேசையை மெல்ல இடித்துவிட்டுச் செல்ல மறுநொடி அந்த இடமே அவனின் அலறல் சத்தத்தில் அதிர்ந்து அமைதியானது. கொதிக்கக் கொதிக்க கொட்டப்பட்டதில் எந்தவித விசாரணைக்கும் எண்ணமின்றி வாஷ்ரூமை நோக்கி ஓடினான் அவன். இவன் அவனைப் பார்த்திருக்கிறான்! அவன் இவர்களது சீனியர். ஆனால் அதைத் தவிர்த்து இவனுக்கு பெரிதாய் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இவன் பார்வை மிக்கியிடம் பாய்ந்தது அவள் இது எதற்கும் சம்பந்தமில்லாதவள் போலப் பாதாம் பாலை உறிஞ்சியபடி வெளியேறினாள்.

சம்பவம் – 5

இதுதான் இருப்பதிலேயே அவனை அதிகம் பாதித்தது. அன்றைய பேஸ்கட் பால் மேட்ச் முடிந்த பிறகு கோர்ட்டே வெறிச்சோடிக் கிடந்தது. நிவன் பி.ஈ டிபார்ட்மெண்ட் ஆஃபிஸில் இருந்து வெளியேறியவன் கோர்ட் வழியாய் வெளியேற எண்ணி நுழைந்தான். அப்படி நுழைந்தவனின் கால்கள் சட்டென நின்றது கண்ட காட்சியில். தூரத்தில் பவிலியனில்.. கடைசி வரிசை மூலையில் இருவர் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த காட்சி. அறிவு பார்வையைத் திருப்பு என்றாலும் அது யாரெனக் கண்டுவிட்டவனின் பார்வை ஒரு நொடி அவன் அனுமதியின்றியே நிலைத்து மீள மறுகணமே சட்டென வெளியேறிவிட்டான் வந்த சுவடின்றி. அது.. அது மிக்கிதானே? அவளுடன் நித்யா! ஆம் அது இவனது அத்தை மகள் நித்யாவேதான்! கஸின்ஸ் என்றாலும் இருவரின் தன்மையால் அதிகம் பேசியிராத அதே நித்யா.

ஆகிற்று, இது நடந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிற்று. இருந்தும் ஏனோ இப்பொழுதும் அதை நினைக்கையில் இவனுக்குள் சுருக்கென்றது.

புத்தகங்கள் அனைத்தையும் வைத்துவிட்டு டெஸ்க்கிற்கு சென்றவன் பாக்கெட்டிலிருந்து உருவிய ஒரு பெண்ட்ரைவை காட்டியபடி, “எக்ஸ்க்யூஸ்மீ சர், பிபிடி” என்க அதற்கு அவர் சிறிதாய் அலுத்துக்கொண்டார்.

“இங்க ரிபேர். லேப்ல பாருங்க” என்று. இத்துடன் இதை எத்தனையாவதோ முறை சொன்ன அலுப்பு அது.

கையை திருப்பி மணியைப் பார்த்தவன் ஒரு எரிச்சல் “ப்ச்” உடன் லேப் இருக்கும் ப்ளாக்கை நோக்கி ஓடினான்.

லேப்

மூச்சிரைக்க எதிரெதிர் திசையிலிருந்து ஓடிவந்த இருவரும் ஒரே சமயத்தில் லேப் வாசலில் வந்து நிற்க, ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி. நின்றிருந்த இருவருமே உள்ளே செல்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க அவர்களது மூச்சு சத்தமே அவ்விடத்தை நிறைத்திருக்க அதை உடைத்துக்கொண்டு அலறியது ஸ்பீக்கரில் இருந்து அவசரமாய் வந்த ப்ரின்ஸிபலின் குரல்! செய்தியும் அவ்வாறே! அவசரச் செய்தி! மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு அருகிலிருக்கும் வகுப்பறைகளுக்குள் சென்று கதவை இறுக மூடிக்கொள்ளுமாறு வந்த செய்தி! ஏனெனில் யாரோ சிறையிலிருந்து தப்பிய சில கைதிகளோ இல்லை ஒரு கைதியோ கையில் ஆயுதங்களுடன் கல்லூரியினுள் நுழைந்துவிட்டதாய் வந்த செய்தி! ஆயுதம் என்றவர் எந்த ஆயுதம் என்று சொல்லவில்லை.. இருந்தும் காற்றில் சில பதட்ட அலைகளை உணர முடிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மிக்கியின் பார்வை சுற்றத்தில் ஓடியது. அப்பகுதியில் அவர்களைத் தவிர்த்து வேறு யாரும் இருப்பதாய் தெரியவில்லை. அவளே அப்பொழுதுதானே அங்கு வந்தாள். சட்டென எதிரில் நின்றவனைப் பிடித்து உள்ள தள்ளியவள் தானும் உள்ளே நுழைந்துவிட்டு கதவை இழுத்து இறுக பூட்டினாள். பூட்டியவளின் பார்வை நிவனிடம் செல்ல அவன் இன்னும் நடப்பவற்றை கிரகித்தபடி நின்றுவிட்டது புரிய அவன் கையை இறுக பற்றியவள் அவனையும் சேர்த்து இழுத்தபடி கடைசி மேசையின் அடியில் சென்று மறைந்துகொண்டாள்.

நிவனின் பார்வை முழுதும் தனக்கு சில சென்டிமீட்டர் தூரத்தில் இருந்த மிக்கியின் முகமும் அவள் பார்வையை அங்குமிங்கும் சுழட்டிக்கொண்டிருந்த விதத்திலுமே ஒரு முழு நிமிடம் மௌனமாய் படிந்து மீண்டது.

நிவன், “என்ட்ட கேட்காம என்ன தொடர வேலை வச்சுக்காத” என்றான் காட்டமாய்.

திடீரென அருகிலிருந்தவன் சொன்னதில் ஒரு கணம் புரியாமல் விழித்தவள் மறு நொடி முகம் இறுக, “உனக்கு என்ன பிடிக்காதுனு தெரியும் ஆனா அதை காட்றதுக்கான நேரம் இதில்லை!” என்றவள் அங்கிருந்து அகன்று அதற்குப் பக்கத்து மேசைக்கடியில் சென்று அமர்ந்துகொண்டாள், “இன்னும் எவ்ளோ நேரமோ இங்கதான் ஒருத்தர ஒருத்தர் சகிச்சிக்கனும்” என்று அதே வெற்றுக் குரலில் சொல்லியபடி.

என்னதான் சொல்லிவிட்டாலும் சொல்லும்பொழுதே நிவனுக்கு அவன் செய்வது தவறு என்று புரிந்து உறுத்தியது. அதைக் கூட்டுவது போல அவள் வேறு வெற்று குரலில் பேசிவிட வார்த்தையேதுமின்றி லேசாய் விழி மூடித் திறந்தவனின் பார்வையில் அவள் அமர்ந்திருப்பது வெகு தெளிவாய் தெரிந்தது.

இத்தனை காலமாய் அடக்கி வைத்திருந்ததை இப்பொழுது பொறுமையின்றி கேட்டேவிட்டான்.

“நீ நித்யாவ கிஸ் பண்ண..” என்று.

அதில் அவளிடமும் மெல்லிய அதிர்வொன்று பரவியதை அவனாலும் உணர முடிந்தது. ஆனால் அவளோ அதற்கு நேர்மாறாய் முகம் இறுக உணர்வுகளற்ற குரலில், “நான் யார கிஸ் பண்றேன் பண்ணலைன்றது எப்போதுல இருந்து பப்ளிக் டிஸ்கஷனாச்சு?” என்றுவிட

நிவன்,”நித்யா என் கஸின்”

“அப்போ அவகிட்ட போய் கேளு” என்றுவிட்டு சாய்ந்தமர்ந்துக்கொண்டவளுக்கு இப்பொழுது தோன்றுகிறது ஒருவேளை இவனுக்கு நித்யாவை பிடிக்கும் போல என. விழிகளை இறுக மூடிக் கொண்டவள் மனதினுள் பிடித்த பாடல் ஒன்றை ஓடவிட்டாள்.

நிச்சயம் நிவனுக்கு அவன் செயல்களிலேயே விருப்பமில்லை! என்ன பேச்சிது? அவள் சொன்னது சரிதானே அடுத்தவர் வாழ்வில் தான் என்ன தலையிடுவது? என்றெண்ணம் ஒரு புறம் இந்த திடீர் செய்தியின் பதட்டம் மறுபுறமென எண்ணங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் பந்தய கார்களாய் மெல்ல மெல்ல வேகமெடுக்கச் சிறு சிறு வேர்வை துளிகள் அரும்பத்தொடங்க உள்ளுக்குள் குளிரெடுக்கத் தொடங்கியது. நெஞ்சுக்கூடு காலியாய் உணர அதில் கை வைத்து அழுத்தியவன் எழ முயன்று அவன் தலைக்கு மேல் இருந்த மேசை பலகையில் கை பதித்தான் பிடிமானத்திற்காய். அதற்கு மாறாய் அதிலிருந்த ஃபைல் சரிந்து விழ அந்த சத்தத்தில் பட்டெனக் கண்களைத் திறந்த மிக்கியின் கவனத்தில் நிவன் விழுந்த மறுகணம் அவனருகில் விரைந்தவள் சற்று நேரத்திற்கு முன் அவனுரைத்தவை அனைத்தையும் கிடப்பில் போட்டவளாய், முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவனை அப்படியே அணைத்துக்கொண்டு மென் குரலில் பேசியபடி மெல்ல முதுகை நீவிவிடத் தொடங்கினாள். சில நிமிடங்கள் பிடித்தது அவனுக்குப் பதட்டங்கள் மட்டுப்பட. மெல்ல மெல்லத் தெளிந்தவன் சுவரில் சாய்ந்தமர்ந்துக்கொண்டான்.

சுவரில் தலை சாய்த்து மேலே சீலிங்கை பார்த்திருந்தவன் லேசாய் தலையை அருகில் அமர்ந்திருந்தவள் புறம் திருப்பினான்.

“தாங்க்ஸ்” என்று. அதற்கு அவள் எதுவும் சொல்லாது அவனையே பார்த்துக்கொண்டிருக்க அவனும் சில நொடிகள் அவள் விழிகளிலேயே பார்வையைப் பதித்தான்.

மிருதுவாய் வெளிவந்தன அவன் கேள்வி, “உனக்கு நித்யாவ பிடிக்குமா?” என.

அவனது கேள்வியில் ஒரு கணம் அவனை நம்ப மாட்டாத பார்வை பார்த்தவளுக்கு அவளையும் மீறிச் சிரிப்பு வரத்தான் செய்தது. அதை மறையாது கேட்டாள், “உனக்கு ஏன் என்ன இவ்ளோ பிடிக்கல?” என்று

இப்படி சிரித்துக்கொண்டே கேட்பவளிடம் அவன் என்னவென்று சொல்லுவான்? ஆனால் அதற்கு மாறாய் அவனுக்கும் மெல்லிய சிரிப்பே மேலிட மறுபடியும் சீலிங்கையே வெறிக்கத் தொடங்கியவனிடம் மௌனம். நீண்ட நேர மௌனம் அது. நொடிகள் நிமிடங்களாகி நிமிடங்கள் நேரங்களாகின. இருவரும் அதற்குப் பின் எதுவும் பேசியிருக்கவில்லை. அதைக் கலைப்பதுபோல திடீரென அவனிடம் இருந்து ஓர் கேள்வி.

“நான் உன்ட்ட சிலது கேக்கலாமா?” என்று சீலிங்கையை வெறித்தபடி கேட்டவனைப் பார்த்தவள் சில நொடி மௌனத்திற்கு பிறகு, “கேளு” என்றுவிட்டு சுவரை வெறித்தாள்.

“நீ ஏன் நித்யாவ கிஸ் பண்ண? ஏற்கனவே வேற ரிலேஷன்ஷிப்ல இருக்கப்போ..” என்க

முதலில் ‘நீ இத விடவே மாட்டியா?’ என்பதுபோல் தலையைத் திருப்பி பார்த்தவள் பிறகு கடைசியாய் அவன் சொன்னதில் ‘எதே?’ என்று விழித்தாள்.

பிறகு, “நித்யா லவ்வ கன்ஃபெஸ் பண்ணா.. எனக்கு இப்போ காதல்ல இன்ட்ரஸ்ட் இல்லன்னதும்..”

நிவன்,”ஓஹ்..” என்றவன் அவள் இன்ட்ரஸட் இல்லை என்று மட்டும் மறுத்ததில் அவளைப் பார்க்க அவளோ நீட்டியிருந்த அவன் காலில் தன் காலால் தட்டினாள், “நான் பேன்செஷுவல்” என

“ஓஹ்..” என்றவன் அமைதியாகிவிட திடீரென நினைவு வந்தவளாய், “ஆமா அதென்ன எனக்கே தெரியாத ரிலேஷன்ஷிப்?” என்க

அவனோ,”ம்ம்.. டெய்லி உன்ன ட்ராப் பன்ற பையன்” என்கவும் வெகுவாய் பிரயத்தனப்பட்டுச் சிரிப்பை அடக்கியவள், “அது என் கஸின்” என்றாள்.

“ஓஹ்.. சாரி! அன்னைக்கு கிஸ் பண்ணவும்.. தப்பா புரிஞ்சிக்கிட்டேன்” எனும்பொழுதே அவனுக்கு ரொம்பவே ஒரு மாதிரி இருந்தது.

“ஏன் உங்க வீட்டுல ஹக் பண்ணி கிஸ் பண்ணிக்க மாட்டீங்களா?” என்று அதே சிரிப்புடன் கிண்டலாய் கேட்டவளின் சிரிப்பு சட்டென நின்றது அவன் “ஆமா..” என்று ஒருவித அமைதிக்குரலில் சொன்னதில்.

ஆமாம். அவன் வீட்டில் இப்படியெல்லாம் நாளுக்கு நான்கு முறை கட்டியோ முத்தியோ ஐ லவ் யூக்களை பகிர்ந்துகொள்வதில்லைதான். அதற்காகப் பாசமில்லை என்றெல்லாம் இல்லை அவர்களது அன்பு பரிமாற்றங்கள் வேறுவிதமாய் இருக்கும். ஆம் இவள் சொல்வதை போன்ற ஃபிஸிக்கல் அஃபெக்ஷன் எல்லாம் அவன் உணர்ந்ததில்லை. அவர்களது அதிகப்படி ஃபிஸிக்கல் அஃபெக்ஷனே யாரேனும் அழுதால் மெல்லத் தோளில் தட்டிக்கொடுப்பதும் கையை இறுகப்பற்றிக்கொள்வதுமே! இன்னொருவரை அணைப்பதே இவனுக்கு இவனது கம்ஃபர்ட் ஸோனுக்கு வெளியில்தான் இதுவரை என்கையில், இது வித்தியாசமாய் பட்டதில் இவனுக்கு ஆச்சரியமில்லைதான்.

அவனது பதிலில் சற்று நெருங்கி அமர்ந்தவள் தரையில் இருந்த அவன் கையை மென்மையாய் பற்றிக்கொண்டாள்.

வெகு அருகாமையில் தோள் உரச அமர்ந்திருந்தவளின் உடல் கதகதப்பு அதிசயமாய் அவனுக்கு வெகு இதமாயும் ஆறுதலாயும் இருந்தது.

“மனுஷங்களுக்கு இன்னொரு மனுஷ கதகதப்பு நிச்சயம் தேவை நிவி. இத்தனை பதட்டத்திலயும் இப்போ உன் பக்கத்துல உக்காந்துருக்கும்போது நான் உணர்ர உன் உடல் சூடே எனக்குத் தனி ஆறுதல் கொடுக்கும். எனக்கு பெருசாலாம் எதுவும் தெரியாது ஆனா இன்னொரு மனுஷங்கட்ட இருந்து வர இந்த கதகதப்பே வறண்ட வாழ்க்கைய இன்னும் கொஞ்சம் இதமாக்கும்னு நம்பறேன்..”

“கதகதப்பு கூட பிரச்சனையும் வந்தா?” என்றான் கிண்டல் மேலிடும் லேசான குரலில். அதற்கு, “ஹ..ஹ..” என்று மெல்லிய புன்னகை ஒன்றை வெளியிட்டவள்,”எதுவுமே ஃப்ரீ கெடயாது ஹோமீ!” என்க இருவரிடையும் மெல்லிய சிரிப்பலை.

“இவ்ளோ நல்லா பேசற ஏன் அன்னைக்கு அப்படி சைக்கோ மாதிரி சூடான காபிய தள்ளிவிட்ட?” என்றவனின் நகை குரலில் மிக்கியின் பார்வை குறுகுறுவென அவனிடம் படிந்தது.

“என்ன பத்தி தெரியாதது எதுவும் வச்சிருக்கியா?” என்றாள் கேலியாய்

நிவன், “ம்ம்.. நீ” என்று அதே கேலியுடன் சொன்னானவன்.

மிக்கி, “அனந்தாவ அந்த ரோக் ஃபோர்ஸ்புல்லா கிஸ் பண்ண ட்ரை பண்ணிருக்கான்”

நிவன், “ஓஹ்.. கம்ப்ளைண்ட் பண்ணலையா? அவன அப்படியேவா விட்டீங்க?”

மிக்கி, “இல்லையே ஹாட் காபி பாத்தோட தானே விட்டேன்” என்று தெத்துப் பல் தெரிய விஷமமாய் சிரித்தவளைக் கண்டவனோ அப்படியே பார்த்திருக்க அவளும் அவனையே பார்த்திருக்கவென சில நொடிகள் கரைய சட்டென நிகழுக்கு வந்த மிக்கி தொண்டையை செருமி பார்வையைத் திருப்பிக்கொண்டாள், “கம்ப்ளைண்ட்லாம் வேஸ்ட் இங்க” என்று. அவனுக்கும் வரலாறு தெரிந்தமையால் வேறெதுவும் அதைப்பற்றிக் கேட்கவில்லை.

நிவன் அதற்கு மேலே எதுவும் அவளிடம் கேட்கவில்லை. அவனுக்கு நன்றாய் புரிந்தது தான்தான் அத்தனையும் தப்பும் தவறுமாய் புரிந்து வைத்து அவளிடம் இருந்து ஒதுங்கியிருப்பது. அவன் ஏன் அதை செய்தான் என்பதும் ஆழ்மனதிற்குப் புரியத்தான் செய்தது. அமைதியாகிவிட்டான்.

சற்று நேர அமைதிக்குப் பிறகு அவளே தொடர்ந்தாள், “நீ இப்போலாம் அந்த வழியா வாக் போறதில்லையா?” என்று சிரித்தவளையே கொலைவெறி பார்வை பார்த்தவன்,” போறா மாதிரியா நீ பண்ண?” என்கவும் உடைத்துக்கொண்டு வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தியவள், “அட கிறுக்கா! அது என் கஸின் வீடு” எனவும்தான் அவனுக்கு அன்றைக்கு அவளும் தன்னை பார்த்திருக்கிறாள் என்பது உரைத்தது. கூடவே இத்தனை நாள் தான் அத்தனையும் தவறாய் புரிந்து வைத்திருப்பது புரிய ஒருவித சிரிப்பை இதழோரங்களில் தேக்கிக் கொண்டான். இவள் அனந்தாவிற்காய் செய்ததை கூட தான் எவ்வளவு தப்பாய் எடுத்துவிட்டோம் என்று தோன்றாமல் இல்லை.

நிவன் தேய்ந்த குரலில், “நீ ரொம்ப ப்ரேவ்..” என்றான்.

சில கணங்கள் மௌனமாய் அவனைப் பார்த்தவள் பிறகொரு “ப்ச்” உடன் சாய்ந்தமர்ந்துக்கொண்டாள்.

“நான்தான் ஆகச்சிறந்த பயந்தாங்கொலி” என

நிவன் புரியாமல் பார்ப்பது புரிந்தது. பார்வையை எதிர் சுவரில் பதித்தவள் ஆழ மூச்சிழுத்துவிட்டு தொடர்ந்தாள்.

“யூ ஆர் ரைட். எனக்கும் க்ரஷ் இருக்கு. வருஷக் கணக்கா..” என்றவள் அவனை ஒரு முறை பார்த்துவிட்டுத் தொடர்ந்தாள்.

“ரெண்டு மூனு வருஷம் இருக்கும்.. அப்போ நீ பாத்தீயே அந்த கஸினோட ஃபேமிலி பிஸ்னஸ் ஒன்னு.. சம்மர் ஹாலிடேஸ அங்க கிட்சன்ல வேலை செஞ்சுதான் கழிச்சேன். அப்போதான் மஃபின்ன முதல் தடவ பார்த்தேன்”

நிவன் “மஃபின்?”

மிக்கி,”ஹா..ஹா.. ஆமா அதான் நான் வச்ச பேர்! அவன் ஹேர்ஸ்டைலும் அப்படிதான் இருக்கும்!” என்றுவிட்டுத் தொடர நிவனிடம் அமைதி ஆழமானது.

“கிட்சனுக்கு பின்னாடி தெருல யார் வீட்டுலயோ நாய் குட்டி போட்டிருந்தது. அதுல ஒரு குட்டி மட்டும் அங்க எப்படியோ மிஸ்ஸாகி வந்துட்டு போல.. கிட்சன்ல யாரோ காலைல பால் சாப்பிட குடுத்திருப்பாங்க போல.. குட்டி அங்கேயே விளையாடிட்டு இருந்தது.. அப்போதான் அவன பாத்தேன். இங்க வந்துட்டு ரிடர்ன் போகும்போது பாத்துருப்பான் போல.. ரெண்டு பேரும் ரொம்ப நேரம் விளையாடிட்டு இருந்தாங்க.. நீ நம்பமாட்ட அவன் குட்டி மஃபின்கிட்ட என்னலாம் பேசினானு.. ப்ச் கிளம்பற டைம் வந்ததும் குட்டி மஃபினையே ஏக்கமா பாத்துட்டே போனான். அவனுக்கு கூட்டிட்டு போனும்னு.. அனா அவன் வீட்டுல விடமாட்டங்கபோல தெரிஞ்சுது.. ம்ஹ்ம் என்ன யாரோட ஏக்கமும் அந்தளவு பாதிச்சதில்லை” என்றவள் ஏதோ கனவில் இருந்து மீண்டவளை போலத் தலையை உலுக்கிக்கொண்டாள்.

“நான் மஃபின இங்க பாப்பேனு நினைச்சுக்கூட பார்க்கல.. அதுவும் தினமும்! ஆனா பாரேன்.. ஏனோ அவன்ட்ட போய் பேசற தைரியம்தான் கடைசி வரை வரவேயில்ல எனக்கு! ஏனோ அவன் மெல்லிய கண்ணாடி பாத்திரம் போலவும் நான் மிக்ஸி போலவும்.. எங்க எதையாவது தப்பா செஞ்சு மொத்தமா ஒடச்சிருவேனோனு ஒரு பயம்.. அதனாலையே யார்ட்ட நெருங்க ஆசைப்படறேனோ அவன்ட்ட இருந்தே ஒதுங்கி ஒதுங்கி போயிட்டேன்.. ம்ஹூம்.. சீரியஸா எனக்கு தெரியல.. நெருங்கி எதை செஞ்சிடுவேனு பயந்தேனோ அதைதான் ஒதுங்கி செஞ்சிருக்கேனு..” என்று அவன் முகத்தையே வெறித்தவள் பார்வையைத் திருப்பிக்கொள்ளப் பெரு மூச்சொன்றை வெளியிட்ட நிவன்,”நான்தான் அது.. உனக்கு டெய்லி ஹலோ மிக்கி நோட் அனுப்பறது” என்றான்.

இவள் விழிகள் இரண்டும் விரிய வெறித்ததில் அவன் மிருதுவான முறுவலொன்றுடன், “ஐ ஹேட் யூ!” என்றுவிட்டு திரும்ப இப்பொழுது அவளையும் தொற்றிக்கொண்டது அப் புன்னகை. அவன் கையில் பட்டென்று தட்டிவிட்டு நிமிர்ந்தமர்ந்துக்கொண்டாள்.

அதற்கு தோதாய் ஸீபீக்கரில் ஒலித்த செய்தி. கைதியைப் பிடித்துவிட்டதாகவும் இனி மாணவர்கள் அனைவரும் பத்திரமாய் வெளியேறுமாறும் பேசிக்கொண்டிருந்தார் ப்ரின்ஸிபல்.

வாட்சில் மணி பார்த்தவள் தன் பேக்பேக்கை தூக்கியவாறே எழுந்துகொண்டு மற்றவன் எழ கை நீட்ட அவனும் எழுந்துகொண்டதும்,

“நான் இப்போ கிளம்பியாகனும்.. நாளைக்கு பாக்கலாம்” என்றுவிட்டு வாசலுக்கு ஓடியவளைத் தடுத்தது நிவனின் குரல்,”நான் குட்டி மஃபின எப்ப பார்க்கலாம்?” என்று சொல்லும்பொழுதே மனதில் கருகருவென காட்டன் பந்தாய் அங்குமிங்குமாய் உருண்டோடிய நாய்க்குட்டியின் நினைவு வந்து செல்ல அது முகத்திலும் பிரதிபலித்தது.

அதற்கு மிக்கி, “எப்பவேணாலும்” என்று தனது ட்ரேட்மார்க் தெத்து பல் தெரியச் சிரிக்கவும் ஸ்பீக்கரில் பாடலொன்று ஓடவும் சரியாய் இருந்தது. யாரோ எதையோ தெரியாமல் அமுத்தியிருக்க வேணும்..

Oh, he’ll buy me a thorn before he’ll buy me a rose
Be covered in dirt before I’m covered in gold
He’s trying it on, yeah, he’s ticking me off
Say what you want but I won’t ever be told
‘Cause I’m in love with a monster
Friends say I’m stupid and I’m out of my mind
But without you, boy, I’d be bored all the time
No, I don’t really care for the same conversation
Got everything I need and I’d rather be chasing
Chasing love, with a monster
I’m in love (I’m in love)
I’m in love (I’m in love)
I’m in love with a monster

என்ற பாடல் அலறிக்கொண்டிருக்க அவனையே பார்த்திருந்தவள் “தென்” என்று பிறகு பார்க்கலாம் என விரலால் சைகை செய்துவிட்டு எப்பொழுதும்போல பாடலுக்கேற்ற நடையுடன் வெளியேறினாள் மிக்கி. வெளியில் இருந்த பரபரப்பான சூழலுக்கு நேரெதிர் நிம்மதியுடன்.

என்றுமில்லாத நாளாய் காரணமின்றி ஈஈஈ என்றதொரு புன்னகையுடன் வெளியேறிய நிவனின் அன்றைய கடிதத்தின் பதில் அவனறியாமலே கிடைத்திருந்தது.