ஹேய் மின்னல் பெண்ணே – அத்தியாயம் 04

மின்னல் 4

அழுது கொண்டு இருக்கும் மிஸஸ்.மல்கோத்ராவை இரக்கமின்றி நோக்கிக்கொண்டிருந்தன அபியின் விழிகள். “மேடம்! ஆர் யூ ஓகே?” என்று யுவரத்னா அவரின் தோள்களை அழுத்தவும் ஆமென்பது போல தலை அசைத்தவர் நிமிர்ந்து அழுந்த முகத்தைத் துடைத்துக் கொண்டார். அவரின் புறம் அங்கிருந்த நீர்க்குவளையை நகர்த்திய அபி

“இப்போ நீங்க அழுது முடிச்சாச்சு என்றால் இந்த தண்ணீரைக் குடிச்சுட்டு விசாரணைக்கு சப்போர்ட் பண்ணுங்க” என்ன மனிதன் இவன் என்பது போல பார்த்த யுவரத்னாவையோ அதிர்ந்து போய் பார்த்த மிஸஸ்.மல்கோத்ராவையோ அவன் கணக்கியேயே எடுக்கவில்லை. அவர் நீர் அருந்தி முடித்ததும் மேஜை மீது ஏறி அமர்ந்தவன் விட்ட இடத்திலேயே விசாரணையைத் தொடங்கினான்.

“ஸோ அந்த பதினைந்து நிமிஷ இடைவெளியில உங்க குடும்ப கௌரவத்தைக் காப்பாத்துறதுக்காக என்ன செய்தீங்க மேடம்?” உங்க என்பதை அழுத்திக்கூறியவன் “அது..அது” என்று அவர் திணறவும்

“இனி நீங்க சொன்னது இல்லை என்று போய்டுமா? எல்லாமே ரெக்கார்ட் ஆகி இருக்கு! நாங்க கண்டுபிடிச்சு தெரியுறத விட நீங்க சொல்லிட்டா பெட்டரா இருக்கும்” விழிகளைத் தாழ்த்தி நிலம் நோக்கியவாறு இருந்தவர் ஒரு முடிவுடன் நிமிர்ந்தார்.

“அன்று என்னோட அண்ணா இறந்து போன நாள்! அண்ணன்கிட்ட ஒரு சைன் வாங்க இருந்ததால தான் அவரோட வீட்டிற்கு போனேன். காலிங்க் பெல் அடித்துப் பார்த்து கதவு திறக்கவில்லை என்றதும் எதேர்ச்சையாக  கதவை திறந்து பார்த்தேன். அது லாக் பண்ணாமலே இருந்தது”

“ஹும்ம்..அப்புறம்”

“அப்புறம்..உள்ள உள்ள போய்ப்பார்த்தா அண்ணனை..அண்ணனை யாரோ கத்தியால குத்தி இருந்தாங்க! ஆடிப் போய்ட்டேன். அண்ணா என்று அலறிகிட்டே கிட்ட போய் மூச்சு இருக்கா என்று பார்த்தேன். இல்லை. கண் வாயெல்லாம் திறந்து..” அப்போது அண்ணனைக் கண்டது போல உடல் சிலிர்த்தவர் முன்னால் இருந்த மிகுதி நீரையும் மட மடவெனக் குடித்து விட்டு கிளாஸை வைத்த்தார்.

“உடனே போலிஸிற்கு கால் பண்ணுவோம் என்று தான் ஃபோனை எடுத்தேன். கொலை செய்தவன் இன்னும் அங்க இருக்கிறானா என்று பார்வையை சுழல விட்டப்போ தான் நான் அதைக் கண்டேன்! அண்ணாவோட போட்டோக்கு மேல இரத்தத்தால “பொம்பளைப் பொறுக்கி” என்று எழுதி இருந்தது. அது மட்டுமில்லை டீவியில அண்ணா யாரோ ஒரு பொண்ணு கிட்ட..கிட்ட.. தப்பா நடக்கிற வீடியோ!  பொண்ணோட முகம் தெரியல! அண்ணனோட முகம் மட்டும்” என்று கூறிவிட்டு முகத்தை மூடிக் கதறிக் கதறி அழுதவர் மீண்டும் முகத்தைத் துடைத்து விட்டு நிமிர்ந்து

“என்ன செய்யச்சொல்றீங்க என்னை? இது வெளியில தெரிஞ்சா இறந்துபோன என்னோட அண்ணாவை மட்டுமா பழி சொல்வாங்க? எங்க குடும்பத்தையே பார்த்து காறித் துப்ப மாட்டாங்களா? என்னோட குடும்பம் மிகவும் பாரம்பரியம் ஆனது. அதோட கௌரவம்? எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா! அவளோட எதிர்காலம்? இதை எல்லாம் யோசிச்சு தான் அந்தப் படத்தைத் துடைச்சு காரில போட்டு அந்த சீடியையும் எடுத்துட்டு போய் என்னோட வீட்டில வைச்சுட்டு வந்தேன்” 

அனைவரும் மூச்சு விடாமல் தன்னையே நோக்கும் அசௌகர்யத்தில் தலைகுனிந்து அமர்ந்தவரின் முன்னால் சென்று அமர்ந்த அபிஷிக்த் “இதை நீங்க கோர்ட்ல சொல்லனும்! இப்போ சொன்னதை அப்பிடியே சொல்லனும். உங்க அண்ணாவைப் பற்றிய எல்லா உண்மையும் சொல்லனும்! என்ன புரியுதா?” அவன் குரலுயர்த்தவும்

“நோ! நோ! நான் சொல்ல மாட்டேன்! ப்ளீஸ் என்னோட குடும்ப கௌரவத்தைக் காப்பாத்துங்க!” என்று கையெடுத்துக் கும்பிட்டவரை அருவருப்பாக பார்த்தவன் சற்று முன்னால் சாய்ந்து

“அப்போ உங்க அண்ணன் தப்பா நடந்துக்கிட்டாரே ஒரு பொண்ணு, அந்தப் பொண்ணுக்கு குடும்ப கௌரவம் இல்லையா மிஸஸ்.மல்கோத்ரா?இப்படி குடும்பங்களே ஆதரவா இருக்கிறதால எவ்வளவு கண்ணுக்குத் தெரியாத  குற்றவாளிங்க சுத்திட்டு இருக்காங்க.தெரியுமா?” அவனின் கேள்வியில் இப்பொழுது யுவரத்னாவிற்கே கை தட்டலாம் போல இருந்தது.  அவர் அமைதியாக இருக்கவும்

“ஒரு பொண்ணைப் பலவந்த படுத்தி இருக்கானே உங்க அண்ணன் அப்போ அந்த பொண்ணோட குடும்ப கௌரவம் என்ன ஆகி இருக்கும் என்று யோசிச்சீங்களா? அவளோட குடும்பம்? எவ்வளவு வேதனை வலி? இதெல்லாம் உங்க பொண்ணுக்கு நடந்து இருந்தாலும் இறந்து போன அந்த நாயை அண்ணன் அண்ணன் என்று வாய் நிறையக் கூப்பிட்டுகிட்டு குடும்ப கௌரவம் என்று சொல்லிக்கிட்டு இருப்பீங்களா மிஸஸ்.மல்கோத்ரா? சொல்லுங்க! இப்போ பேசுங்க! டாமிட்” என்ற படி அவன் மேஜையை ஓங்கித் தட்டவும் மிஸஸ்.மல்கோத்ராவின் உடல் தூக்கிப் போட்டது.

அவருக்கும் தான் செய்த தவறு புரிந்ததோ என்னவோ கைவிரல்களைப் பிணைப்பதும் பிரிப்பதுமாக இருக்க விக்ரமிற்கு கண்களைக் காட்டி ரெக்கார்ட்டை நிறுத்த உத்தரவிட்டவன்

“காளிதாஸ் இறந்து விசாரணை ஆரம்பிச்சப்போவே அவனைப் பற்றி அவனோட பொறுக்கித் தனத்தைப் பற்றி நிறைய சாட்சி எங்களுக்கு கிடைச்சுது! நாங்களும் மனுஷர் தானே? அந்தப் பொண்ணுங்க கையெடுத்துக் கும்பிட்டு காலில விழுந்து கதறியும் நாசமாக்கி இருக்கான் அந்த நாய்! உங்களோட அண்ணன்! அதுமட்டுமா? அந்தப்பொண்ணுங்களை நாசமாக்கிறதை ஃபோனில வீடியோ எடுத்து வைச்சு இருக்கான். அவன் மட்டும் உயிரோட இருந்து இருந்தா ஏன் இருக்கிறோம் என்று எண்ணி எண்ணி அழுற மாதிரி செய்து இருப்பேன்! அவனோட நல்ல நேரம் தப்பிச்சுட்டான்.”

விழிகள் சிவக்க காப்பை முறுக்கியவாறே கர்ஜித்தவன் ஆழமூச்செடுத்து மிஸஸ்.மல்கோத்ராவை நோக்கி “இப்போ இங்க ஒரு ஸ்டேட்மன்ட் எழுதிக் குடுத்துட்டு போங்க! உங்களை எங்க டீம் கண்காணிச்சுட்டே இருப்பாங்க! அதுமட்டுமில்லை அங்க எடுத்த ஆதாரங்களை இப்போ உங்க கூட வர்ர எங்க ஆபிஸரிடம் கையளிக்கனும்.”

“ சர்வா! நீங்க போய் ஆதாரங்களைக் கலக்ட் பண்ணிட்டு வாங்க! ஃபாரன்சிக் ரிப்போட் எடுக்கனும் நியாபகம் இருக்கட்டும்” என்று கூறவும் புரிந்ததற்கு அடையாளமாக தலை அசைத்த சர்வா

“வாங்க மேடம்” என்று மல்கோத்ராவை விளித்தான்.

 அவரும் தலையைக் குனிந்தவாறே வெளியேறப் போக விரலைச் சுண்டி அவரை நிறுத்தியவன் “நீங்க கோர்ட்டில உங்க அண்ணனைப் பற்றி சொல்லனும் என்று நான் கூறியது உங்களோட குடும்பத்தையும் மனதுல வைச்சுத் தான். உங்க அப்பா ஒரு சமூக சேவகர். உங்க அம்மா பெண்களுக்கு நடக்கிற தப்புக்களை அந்தக் காலத்திலேயே தட்டிக் கேட்டவங்க!”

“அவங்களோட பரம்பரை நீங்க! சொந்த அண்ணாவா இருந்தாலும் அவன் இறந்த பின்னாலும் அவனால பாதிக்கப் பட்ட பொண்ணுங்களுக்கு நியாயம் கிடைக்கிறதுக்கு குறுக்கா இருக்க கூடாது! இல்லை  நான் எதுவும் சொல்ல மாட்டேன்! குடும்ப மானம் பொண்ணோட வாழ்க்கை என்று பேசிட்டு இருக்க போறிங்க என்றால் உங்க குடும்பத்தோட மானத்தையும் சேர்த்து இழுத்து சந்தி சிரிக்க வைச்சுடுவேன்!” ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டியவன் “போங்க” என்று கையைக் காட்டினான்.

அவர் சென்றதும் விக்ரமை நோக்கித் திரும்பி “விக்ரம்! அவங்க வீட்டு மேல ஒரு கண் இருக்கட்டும்! அதோட இன்னும் காளிதாஸைக் கொன்றவங்களை நம்ம கண்டு பிடிக்கல்ல! எனக்கு இன்றைக்கே காளிதாஸோட வீட்டில எடுத்த பொருட்கள், அவனைக் குத்தி இருந்த கத்தி இதோட ஃபாரன்சிக் ரிப்போர்டை மெயில் பண்ணிடு” என்று உத்தரவிடவும் “யெஸ் பாஸ்” என்றவனின் கண்கள் தன் பின்னால் சென்று சென்று வருவதைக் கண்டதும் தான் அபிக்கு யுவாவின் நினைவே வந்தது.

அதிர்ந்து என்பார்களே அப்படி ஒரு லுக்கில் இமைக்காமல் இருந்தவளின் முன்னால் சொடக்கிட்டவன் “என்ன லாயர் மேடம்? தூக்கமா? மிஸஸ். மல்கோத்ராவிற்கு பாதுகாப்பு என்று வந்திட்டு இப்படி தூங்கிக் கொண்டு இருக்கீங்க”

கிண்டலாக வெளிவந்த அபியின் பேச்சிலும் அபியின் சொடக்கிலும் தெளிந்தவளிற்கு ஒரே வெக்கமாகிப் போனது. அவள் இப்பொழுது தான் சிறிய சிறிய கேஸ்களைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றாள். சண்முகசுந்தரம் கேட்டுக்கொண்டதால் வந்தவளிற்கு க்ரைம் கேஸ்! அது மாறிய விதம்! எல்லாம் வியப்பாக இருந்தது. நிறைய கேஸ்களைப் பற்றி படித்து இருந்தாலும் கண்முன்னால் காணும் போது சுவாரஸ்யமாக இருந்தது.

அதே நேரம் அப்பெண்களை எண்ணி துக்கமாகவும் இருந்தது! அந்த எண்ணத்திலேயே அப்படியே அமர்ந்திருந்ததன் மடத்தனத்தை உணர்ந்தவள் எதுவும்  பேசாமல் உதட்டை சுழித்தபடி எழுந்தாள்.

“பார்த்து வீடு போய் சேருங்கமா! உங்களை மிஸஸ்.மல்கோத்ராவிற்கு சப்போர்ட்டா பேசக் கூப்பிட்டு வந்தால்  கேஸோட கதையைக் கேட்டு விறைச்சு போய் நிற்கிறீங்க! எல்லாம் கலிகாலம்” என்று நக்கலாகக் கூறவும் அவன் முன்னால் கையை ஆட்டியபடி

“ஹலோ! ஹலோ..கொஞ்சம் நிறுத்துறீங்களா? கதைக்க வந்தவளை உஷ் என்று வாயில விரல் வைச்சு மிரட்டிட்டு! அது மட்டுமில்ல மிஸஸ்.மல்கோத்ராவைப் பேசவிடாமலே நான் செய்து இருப்பேன். எங்க கிட்டயும் சொல்லாம ஏதும் உண்மையை மறைச்சு வைக்கிறாங்க போல என்று தான் அது வெளியில வரும் மட்டும் சத்தம் போடாம இருந்தேன்”

அவள் பேச்சில் புருவம் உயர்த்தியவன் “அப்படியா? எப்படி நிறுத்தி இருப்பீங்க?”

“ஒருத்தங்க இறந்த நேரம் அவங்களோட போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட்லையே வந்து இருக்கும். மிஸஸ்.மல்கோத்ரா போன நேரத்தையும் காளிதாஸோட போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட்டையும் பார்த்தாலே தெரிஞ்சிடும் அவங்க இந்தக் கொலையை செய்யலை என்று!”

“இது உங்களுக்கே நூறு சதவீதம் உண்மை என்று தெரியும். அவங்களை எமோஷனலா அட்டாக் செய்து உண்மையை வரவைக்கத் தான் நீங்க அப்படிப் பேசி இருக்கீங்க!! என்ன சரியா?!  ” என்று கேட்டு தனக்கு எதிராக புருவம் உயர்த்தியவளைப் பார்த்தபடி மேஜையில் குதித்து ஏறி அமர்ந்து கைகளைத் தட்டியவன் ‘பலே மாமா! உம்ம பொண்ணை நல்ல புத்திசாலியாத்தான் ஓய் வளர்த்து வைச்சு இருக்கீர்’ என்று மனதிற்குள்ளும் கூறிக்கொண்டான்.

அவன் கைதட்டவும் கெத்தாக சல்வாரில் இல்லாத காலரை உயர்த்துவது போல சைகை செய்தவள் செல்லத் திரும்பிவிட்டு மீண்டும் அபியின் புறம் திரும்பினாள்.  “எனக்கு இன்னொரு சந்தேகம்” என்று ஆள்காட்டி விரலால் ஒன்று என்பது போலக் கைகாட்டியவளை கேளு என்பதாக அபி கை அசைக்க

“நீங்க அன்றைக்கு அந்த ரோட்டில ஏன் அந்த ஆளைப் போட்டு அந்த அடி அடிச்சீங்க?” என்று கேட்கவும் அபிஷிக்தின் விழிகள் விக்ரமை நோக்கியது. ‘மாதாஜிக்கே அந்தப் பேச்சு! இப்போ இந்தப்பொண்ணுக்கு என்ன சொல்லப் போறாரோ’ என்பது போல அவன் விழிகள் பாவமாக யுவாவை நோக்கிக் கொண்டு இருந்தது.

அபியோ விக்ரமின் எண்ணத்தை முறியடித்து யுவாவின் கண்களை உற்று நோக்கி “அவனை இன்னும் செய்திருப்பேன்! போலிஸிற்கு நீ தகவல் சொன்னதால தான் தப்பிச்சான்” என்றவாறே வெள்ளிக் காப்பை முறுக்கினான்.

“அப்படி என்ன செய்தான்?”

“என்ன செய்தானா?” என்று பல்லைக் கடித்தவன் ” அவன் ஒரு  ஸ்கூல் வாட்ச்மேன். அந்த ****. அங்க படிக்க வாற ஒரு பத்து வயது பிஞ்சுகிட்ட தப்பா நடந்துக்க பார்த்து இருக்கான். அவன் என்ன செய்யுறான் என்று கூட அந்தப்பிஞ்சுக்கு புரிஞ்சு இருக்குமா? அந்த *** தள்ளிவிட்டதுல அந்தக் குழந்தையோட தலையில அடிபட்டு சீரியஸா இருந்திச்சு! அவனை விடச் சொல்றியா? அவனை ஒட்டுத் துணி இல்லாம ரோட்ல ஓட விடனும் என்று தான் அன்றைக்கு வந்தேன். பட் உன்னால அவன் என் கையிலை இருந்து தப்பிச்சுட்டான்” என்று கூறியவாறே தனது தொடையில் குத்தியவனைப் பாவமாகப் பார்த்தவளின் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்.

“அய்யோ! என்னால ஒரு ராட்சசன் தப்பிச்சுட்டானா?” என்று தவிப்பாக கேட்டவளைப் பார்த்து சிரித்த விக்ரம் “ஏங்க! எங்க பாஸை என்ன என்று நினைச்சீங்க? போலிஸ் அவனைப் பிடிச்சுட்டு போனா தப்பிக்க விட்டுடுவாறா? அவனுக்கு கொடுக்க வேண்டியதை ஜெயிலுக்குள்ள இருக்கிற கைதியை வைச்சே கொடுத்திட்டார்” என்று கூறினான்.

அவனின் பதிலில் ஆர்வமாக பார்த்தவள்

“எப்படி? எப்படி தண்டனை கொடுத்தார்” என்று கேட்க விக்ரம் சங்கடமாக அபியை நோக்கினான். ஏதோ ஆர்வத்தில் வாயை விட்டுவிட்டான். அதற்கே என்ன வருமோ தெரியவில்லை. விக்ரம் தன்னைத் தயக்கமாகப் பார்க்கவும்

“நீ போ விக்ரம்! நான் சொன்ன வேலைகளைப் போய் பாரு” என்று அவனை அனுப்பியவன் ஏதோ தன் கையில் இருந்த மிட்டாயைப் பிடுங்கி எறிந்தது போல் செல்லும் விக்ரமைப் பார்த்தவளை “யுவரத்னா!” என்று அழைத்து தன்னை நோக்கித் திரும்பச்செய்தான்.

திரும்பிய அவளைப் பார்த்து “இப்போ என்ன? உனக்கு நான் என்ன தண்டனை கொடுத்தேன் என்று தெரியனும் அது தானே?”

விழிகள் மின்னத் தலை அசைத்தவள் புறம் சற்று சாய்ந்து மெல்லிய குரலில் “அவனை ஆண் என்று உடம்புல எது அடையாளம் காட்டுமோ அதை” கத்திரிப்பது போல விரலை வைத்து சைகை காட்டியவனைப் பார்த்து யுவரத்னாவின் விரல்கள் அதிர்ச்சியில் வாயின் மேல் சென்று தஞ்சம் அடைந்தன.