ஹேய் மின்னல் பெண்ணே – அத்தியாயம் 05

மின்னல் 5

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டு இருந்த யுவரத்னாவின் விழிகள் அணிந்திருந்த கூலிங்க் கிளாஸின் பின்னே சுழன்று அபியைத் தான் தேடியது. ஒரு மனம் அவன் வந்திருக்கக் கூடாது! தன்னால் அவனை எதிர்கொள்ள முடியாது என்று எண்ணினாலும் மறுமனமோ அவனைக் கண்டு விடமாட்டோமா என்று துடித்துக் கொண்டு இருந்தது.

கொடிய இருவருடங்கள் ஆகிவிட்டன அவனைக் கண்டு! இறுதியாக அவனைக் காணும் பொழுதும் அவன் மேலிருந்த எண்ணங்கள் எல்லாம் மாறி அவன் மேல் இவ்வளவு பித்தாகிப் போய் இருப்பாள் என்று யுவரத்னா எண்ணவே இல்லை. தந்தையை, அபியை, சாரதா அத்தையை எதிர்த்து வெளிநாடு சென்று இருந்தவள் இன்று தான் மீண்டும் நாடு திரும்பியுள்ளாள். என்னதான் வருடங்கள் கடந்து இருந்தாலும் நாட்டிற்குள் இறங்கியதுமே அவளை அறியாமல் கடந்து போயிருந்த மறந்து போயிருந்த கொடிய நினைவுகள் முன்னால் வந்து அடிவயிற்றில் ஒரு பயப்பந்தை உருட்டி விட்டிருந்தது.

அதனை சமாளிக்க முடியாமல் திணறியபடியே ட்ராலியை உருட்டியபடி வெளியே வந்தவளின் ட்ராலி அழுத்தமாக பற்றப்படவும் பற்றியவனின் ஸ்பரிசமே யார் என்று கூறிவிட ஒரு நொடி உறைந்து தான் போய்விட்டாள் யுவரத்னா. அசையாமல் நின்றுவிட்டவளிடம் எதுவுமே கேட்காமல் ட்ராலியைத் தள்ளியபடி அபி நடக்கவும் நிறைந்து போன விழிநீரை இமைசிமிட்டி அடக்கியபடியே தொடர்ந்தவளின் உள்ளத்தினுள்ளே ஒரு துளி தேன் சிதறத்தான் செய்தது.

 அமைதியாக வெளியே சென்று தனது காரின் டிக்கியைத் திறந்து யுவாவின் லக்கேஜை வைத்த அபி கதவை அறைந்து சாற்றிய ஒலியில் உடல் தூக்கிப் போட கூலிங்கிளாஸின் பின்னே அவனை நோக்கின யுவாவின் கண்கள். உடல் இன்னும் முறுக்கேறி இருக்க நரம்புகள் இலேசாக தெறித்த இடதுகையில் சமத்தாக அமர்ந்திருந்த காப்பை முறுக்கி விட்டவாறே யுவாவைப் பார்த்தபடி முன்னேறினான் அபிஷிக்த்.

அவன் தன்னை நோக்கி வருவது தெரிந்தாலும் அசையாமல் அதிரும் இதயத்தின் ஒலியை உள்வாங்கியபடியே விறைத்து நின்ற யுவாவின் புறம் கார் கதவைத் திறந்து விட்ட அபி  “உள்ள ஏறி வரப்போறியா? இல்லாட்டி இப்படியே திரும்ப ஓடிப்போக போறியா?” என்று அழுத்தமாக கேட்கவும் தலை குனிந்தவள் ஒரு பெருமூச்சுடன் மௌனமாகவே ஏறி காரினுள் அமர்ந்தாள். ஏறி அமர்ந்தவளின் பக்கம் இருந்த கார்க்கதவை அவன் சாற்றிய வேகத்திலேயே அவனது கோவம் புரிந்தாலும் எதுவுமே செய்ய இயலாமல் அப்படியே கார் சீட்டில் சாய்ந்து கொண்டவளிடம் வேறு எந்த பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை அபி.

அபிக்கு யுவாவின் மனதில் இருக்கும் காதலோ சலனமோ தெரியாது! அவன் மனதில் அப்படி ஒரு எண்ணமும் இதுவரை இல்லை. ஆனால் தனது வார்த்தையை மறுத்து அவள் நாட்டைவிட்டு சென்ற கோவம் இன்னும் இருந்தது. தனது தந்தையைப் பற்றிக் கூட யோசிக்கவில்லையே அவள் என்கின்ற கோவம். தினமும் அவரதும் தனது தாயினதும் வேதனை படிந்த முகத்தைப் பார்க்க பார்க்க வந்த கோவம்!

இரு வருடங்கள் கோவத்தை இழுத்துப்பிடிக்க முடியும் என்பதே அவனுக்கு யுவா கற்பித்த பாடம் தான்! அவளைத் தான் பாதுகாப்பாக வைத்திருக்க எண்ணிணால் தன்னைத் தவிர்த்துவிட்டு சென்ற கோவம். இப்பொழுது தயாபரனும் இவர்களுடன் தான் தங்கி இருந்தார். போன மாதம் வந்த மைல்ட் அட்டாக்கின் பின்னே  அவரை  தனது வீட்டிற்கே கடத்தி வந்து விட்டிருந்தான் அபி.

அவரின் அந்த நிலைதான் யுவரத்னவையும் மீண்டும் நாட்டிற்கு திருப்பி இருந்தது. இல்லாவிடில்? அருகில் இருந்தவளை திரும்பிப் பார்த்தவன் மீண்டும் பாதையில் கவனம் வைத்தான். கார் அருகில் வந்ததும் காவலாளி திறந்துவிட்ட பாதையினுள்ளே கார் வழுக்கிச் செல்ல யுவர்த்னாவின் நெற்றியில் வியர்வை முத்துக்கள். ‘என்னை எப்படி நோக்கப் போகிறார்கள்? அவர்களின் பரிதாபமோ கண்ணீரையோ தாங்கும் சக்தி என்னிடம் உள்ளதா?’ என்று எண்ணிப் பயந்தவாறே கீழிறங்கியவளை ஓடி வந்து ஆர்வமாகக் கட்டிக்கொண்டார் சாரதா!

யுவரத்னா வரும் செய்தி அறிந்தவுடனே “பாவமாகவோ துக்கமாகவோ அவளை நோக்கக்கூடாது” என்று அன்னை மற்றும் மாமாவிடம் கண்டிப்பாகக் கூறியிருந்தான் அபிஷிக்த். அதனாலோ என்னவோ நீண்ட நாட்கள் பிரிந்திருந்த குழந்தையை ஆர்வமாக அணைக்கும் தாயின் அணைப்பு தான் சாரதாவிடம் யுவா உணர்ந்தது. அவளை தன்னிடம் இருந்து பிரித்து மேலிருந்து கீழாக நோக்கியவர் “ஒழுங்கா சாப்பிடுறியா? இல்லையா? பாருங்கண்ணா எப்படி மெலிஞ்சு போய்ட்டா” என்று அதட்டலாக கூறிய சாரதாவின் குரலில் யுவாவின் மனதில் எழுந்த ஆசுவாசத்தை ஒரு சொல்லில் அடக்க முடியாது.

சாரதாவின் “அண்ணா” என்ற அழைப்பில் அவர் அருகே நின்ற தந்தையைக் கண்ணுற்றவள் “அப்பா” என்று முணுமுணுத்தபடியே அவள் அருகில் செல்லவும் உணர்ச்சியில் நடுங்கும் கரங்களால் அவள் தலையைத் தடவி அணைத்து உச்சி முகர்ந்தவர்

“நல்லா இருக்கியாடா?” என்று கேட்கவும்

“ம்ம்ம்” என்று அவர் மார்பில் தலை சாய்த்தவாறே உதட்டைப் பிதுக்கி முணகினாள். அவ்வாறு முணகியவளைப் பார்க்கையில் சிறுவயதில் தன்னிடம் அடி வாங்கிவிட்டு தந்தையுடன் ஒன்றிக்கொள்ளும் யுவாவின் விம்பம் அபியின் மனதில் மின்னி மறைந்தது.

“சரி சரி! வாசலிலேயே இரண்டு வருசக் கதையையும் பேசலாம் என்று யோசிக்காம உள்ள போங்க” என்று அதட்டலாக கூறிய அபியைக்கண்டு நொடித்த சாரதா “க்ரைம் ப்ராஞ்ச் ல திரும்ப சேர்ந்த திமிரா?” என்று வினவவும் ஒரு நொடி அபியினதும் யுவாவினதும் விழிகள் சந்தித்துப் பிரிந்தன. அவர்களைக் கணக்கிலேயே எடுக்காமல் உள்ளே திரும்பி

“விக்ரம்! டேய் விக்ரம்! சீக்கிரமா வாடா” என்ற சாரதாவின் குரலில் சந்தேகமாக உள்ளே பார்த்த அபிக்கு கோவம் எகிறியது என்றால் இவ்வளவு நாட்களாக சிரிப்பைத் தொலைத்து இருந்த யுவாவின் இதழ்களோ சிரிப்பில் மூழ்கியது.,

“என்னம்மா இது?” ஆர்த்தித் தட்டை தூக்கியபடி மெதுவாக வந்து கொண்டு இருந்த விக்ரமைப் பார்த்து கோவமாக அபி கேட்கவும்

“பார்த்தா தெரியல? ஆர்த்தி!” என்று நக்காலாக கூறியவர் “சுத்துடா” என்று விக்ரமைப் பார்த்துக் கூறவும் விக்ரம் பரிதாபமாக முழிக்க அபியோ அன்னையை முறைத்தான்.

“லூஸா அம்மா நீ? அவன் ஒரு க்ரைம் ப்ராஞ்ச் ஆபிஸர் அவனைப் போய் ஆர்த்தி எடு! பொட்டு வை என்று சொல்ற?” என்று எரிச்சலாக வினவவும்

“டேய் நீ யுவாவை கூட்டிவர போனதால தப்பிச்ச! இல்லனா இந்த வேலையை உன்கிட்ட தான் சொல்லி இருப்பேன்! யாரும் மருமகளைக் கூட்டிட்டு வாங்கடா என்றால் துப்பு இல்லை! வேலைக்காரியும் லீவு!  அப்போ இருக்கிறவங்க தானே செய்யனும்? சி.பி.ஐ ஆபிஸர் என்றால் அவனும் மனுஷன் தானே? அம்மாக்கு பிள்ளை தானே? மற்றவங்களைப் போல வாயால தானே சாப்பிடுறான்? இல்லை சி.பி.ஐ என்று உங்களுக்கு ஸ்பெஷலா மூக்கால சாப்பிட முடியுதா?” என்று நக்கலாக கேட்கவும் “ஹா..ஹா” என்று சிரிக்கத் தொடங்கிய யுவாவைப்  பார்த்த அனைத்துக் கண்களிலும் மகிழ்ச்சி மட்டுமே!

உள்ளே வந்த யுவாவின் பைகளை தோட்டக்காரன் தூக்கி உள்ளே வரவும் அவனை மேலே கொண்டு சென்று வைக்குமாறு பணித்த சாரதா யுவாவின் புறம் திரும்பி “மேலே போம்மா! போய் ஃப்ரஷ் ஆகிட்டு சாப்பிட வா! உனக்கு அபிக்கு பக்கத்து அறையைத்தான் ஒழுங்கு படுத்தி இருக்கிறேன்” என்றதும் தலையை உருட்டியவள் மெதுவாக கால்கள் தடுமாற மேலே ஏறத்தொடங்கினாள். சிறிது நாட்கள் அந்த வீட்டில் தங்கி இருந்த கீழ் அறையை மீண்டும் ஒதுக்காமல் தனக்கு மேலே அறை ஒதுக்கியதற்கான காரணம் தெரியாத அளவு சிறுமி அல்லவே? வேம்பாய்க் கசந்த நினைவுகள் முன்னெழ கைகளை இறுக மூடியவள் வேகமாக மேலே செல்லத் தொடங்கினாள்.

அவளின் முகமாற்றங்களை கவனித்தவாறே சோபாவில் அமர்ந்த அபியின் உதடுகள் “இன்னும் அவளோட காயங்கள் ஆறல” என்று முணுமுணுக்கவும் அதைக் கேட்ட தயாபரனின் முகம் கசங்கிப்போக சாரதாவோ அவரை நோக்கி விழிகளை மூடி ஆறுதல் படுத்தினார்.

அதன் பிறகு அன்றைய தினம் அபி மற்றும் யுவா சந்திக்கும் தருணங்கள் அமையவில்லை. சிறிது நேரத்திலேயே அபி கிளம்பி தனது ஆபிஸிற்கு செல்ல இரவு வரை அவனை வேறு எந்த நினைவுகளும் அண்டவில்லை. ஒரு சிறுமியின் கடத்தல் விசாரணையில் இறங்கி இருந்ததால் அச்சிறுமியை மீட்கும் மட்டும் அவனுக்கு எதுவுமே நியபகம் இல்லை. இரவு அந்தக் குழந்தையை மீட்ட பின்னர் விக்ரமையும் அனுப்பி விட்டு கதிரையில் சாய்ந்தபோது தான் யுவாவின் எண்ணமே அவனுள் எழுந்தது.

சுழல்நாற்காலியில் சுழன்றுகொண்டு கையில் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியவனின் மனதில் ஏதோ ஒரு மாற்றம் யுவாவிடம் இருப்பதாக சிறிய முணுமுணுப்பொன்று இருந்து கொண்டு இருந்தது. பட படவென பேசும் யுவாவின் மௌனம் தான் அதுவா? இல்லை என்றால் வேறு எதுவுமா என்று இனம்பிரித்தறிய முடியவில்லை. விழி நோக்கி தன்னை மிரட்டிக்கொண்டு இருந்த அந்தப் பழைய யுவாவின் விம்பம் மறைந்து போய் இப்பொழுது தனது விழிகளையே பார்க்கத் தடுமாறும் யுவாவின் விம்பம் தான் அவனது மனதில் நின்றது.

எவ்வாறாயினும் நடந்த சம்பவங்களின் தாக்கங்கள் அவளிடம் இருப்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது அபிக்கு. எப்படியாவது அதைப் போக்கி அவளை வெளியில் கொண்டு வர வேண்டும் என்று எண்ணியவன் சாரதாவின் அழைப்பு வரவும் தான் வீட்டை நோக்கி நகர்ந்தான்.

அவனை அழைத்துவிட்டு சாரதா அவர்து அறைக்கு சென்று உறங்கிவிட அலுவலகத்தில் இருந்து பதினைந்து நிமிடங்களில் கதவைத்திறந்து உள்ளே நுழைந்தவனுக்கு வெறுமையான வரவேற்பறையே காட்சிதந்தது. மேலே தனது அறைக்கு சென்று குளித்துவிட்டு உடைமாற்றி வந்தவன் கிட்சனுக்குள் நுழையவும் அடுப்பில் ஏதோ செய்து கொண்டு இருந்த யுவா “ஆஆஆ” என்று கத்தியபடி திரும்பவும் சரியாக இருந்தது. 

அவள் கத்தவும் ஒரு நொடி உறைந்து நின்றவன் உறங்கும் பெரியவர்களின் நினைவு எழ விரைந்து அவள் அருகில் சென்று அவளது உதட்டை கையால் மூடி “ஷ்..ஷ்! யுவா! நான் தான் அபி! அபிஷிக்த்! எவ்ரிதிங்க் வில் பி ஆல்ரைட்” என்று மெதுவாக அவளது காதின் அருகில் குனிந்து அழுத்தமாக கூறவும் கத்துவதை நிறுத்தியவள் கலங்கிய விழிகளால் அவனை நிமிர்ந்து நோக்கினாள். ‘இதனால் தான் உங்களை விட்டு ஓடிப்போனேன்’ என்ற செய்தியைப் படித்தானோ என்னவோ அவளது தலையைப் பற்றி தனது நெஞ்சில் அழுத்தியவன் “லூஸூ! ரொம்ப திங்க் பண்ற” என்று விட்டு அவளை விலக்கி அவள் அடுப்பில் என்ன செய்து கொண்டு இருந்தாள் என்று எட்டி நோக்கினான்.

அபி வந்ததிலேயே ஆறுதலாக உணர்ந்த யுவா தோளினூடாக அபி எக்கியதில் கழுத்தில் மோதிய மூச்சுக்காற்றில் சிலிர்த்தபடி சற்று விலகி அபியை நோக்கி “அது இந்த நேரம் அங்க சாப்பிட்டு பழகிடுச்சு போல! பசிச்சுது! அதான் முட்டைத்தோசை ஊத்தலாம்னு” என்று இழுக்கவும் “ம்ம்! எனக்கும் ஒன்று ஊத்தித்தாறியா?” என்று உரிமையாகக் கேட்கவும் மனதில் பட்டென்று ஒரு மகிழ்ச்சி! மகிழ்வுடன் தலையசைத்தவள் அடுப்பைநோக்கி நகரவும் டைனிங்க் டேபிளை நோக்கி நகர்ந்த அபியின் மனம் முழுவதும் கேள்விகளும் குழப்பங்களும்! ஆனால் அவனுக்கு தெரிந்த அப்பொழுது இருந்த தற்காலிகத் தீர்வு எல்லாம் ஒன்றே ஒன்று தான்! யுவாவின் கவனத்தை வேறு வேறு விடயங்களில் திருப்பிக்கொண்டே இருக்கவேண்டும்! இல்லாவிடில் அவள் சரியாவது கடினம்!