தாழையாம் பூமுடித்து🌺1

TPM.1

“ஏம்ப்பா… பொண்ணோட தாய்மாமனும், மாப்பிள்ளையோட தாய்மாமனும் முன்னுக்கு வாங்கப்பா. நல்ல நேரம் முடியறதுக்குள்ள சம்பந்தம் கலக்க வேண்டாமா?” என ஒரு பெரிய தலை, சபையில் இருந்துகொண்டு குரல் கொடுத்தது.

செங்குருதி சேயோனே,

வங்கொடிய வேலோனே

(டுகு டுகு டுகு)

செவ்வலறி தோளோனே, என் குடிய காப்போனே

[டும் டும் டும் (டுகு டுகு டுகு)]

கடம்பா இடும்பா முருகா

கதிர்வேல் குமரா மருதா

துடிவேல் அரசர்க்கரசே

வடிவேல் அருள்வாய் மலர்வாய்!

டும் டும் டும் (டுகு டுகு டுகு

பாடல் உயரக்கட்டிய மைக்செட்டில், உரக்க ஒலித்துக் கொண்டிருந்தது.

பெரிய வீட்டின் முன், தெருவை அடைத்து கிடுகுப் பந்தல் போடப்பட்டிருந்தது. 

முன்பு போல், பந்தல் போட்ட வீட்டின் முன் ஓடியாடி விளையாடும் பிள்ளைகளைக் காண முடியவில்லை. பந்தக்காலைப் பிடித்து சுற்றி விளையாண்டு, பந்தல்காரரால் விரட்டி அடிக்கப்படும் குழந்தைகளும் அங்கு இல்லை. பந்தலின் கீழ் ஒழுங்கற்று கிடந்த சேர்களில் ஆளுக்கொரு திசையில் அமர்ந்து கொண்டு, ஃபோனும் கையுமாக யாருடனோ ஆன்லைனில் விளையாண்டு கொண்டிருந்தனர்… கழுத்து வலிக்க.

பெற்றோரும், தங்களை தொல்லை செய்யாமல் இருந்தால் போதுமென ஃபோனைக் கையில் கொடுத்துவிட்டு, வந்திருப்பவர்களின், பட்டிலும் பகட்டிலும் கவனமாகினர். 

அது கல்யாணச்சத்திரம் எனும் தோற்றத்திலும் இல்லை. வீடு போன்ற தோற்றமும் இல்லை.

போன தலைமுறை வரைக்கும் வீடாக இருந்தது, தற்பொழுது மண்டபமாகவோ, மடமாகவோ மாற்றம் பெற்றிருக்கிறது. வீட்டு கதையை பிறகு பார்க்கலாம் நண்பர்களே. 

இப்பொழுது உள்ளே நடைபெறும் விசேஷம் என்னவென்று பார்ப்போம். 

பெரியவீட்டின் முன் இருந்த காலியிடத்தில், தற்காலிகமாக அமைக்கப்பெற்ற, அந்த பெரிய மேடையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த… நான்கு ஊர் பெரிய தலைகளும், உள்ளூரைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் என அனைவரும்  வீற்றிருந்தனர். எல்லாரும் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த முறுக்கு மீசை பெருசுகள். 

தும்பைப் பூவாய் வெளுத்துப் பூத்துப்போன மீசைக்கும், சாயம் பூசி இரண்டாம் தலைமுறைகளோடு மல்லுக்கு நின்ற சில பெருசுகளும் இருந்தன.

கீழே சொந்த பந்தங்களோடு, ஊர் ஜனங்களும் அமர்ந்திருந்தனர். சொந்தமும், சொத்தும் விட்டுப் போகக்கூடாது என்பதற்காக ஒன்றுக்குள் ஒன்றாக சம்பந்தம் செய்துகொண்ட, கொண்டான் கொடுத்தான் என வீட்டிற்கு ஒருவரோ, இருவரோ தவறாமல் வருகை தந்திருந்தனர். பெரிய வீட்டு விசேஷம் ஆயிற்றே.

அவர்களைப் பொறுத்த வரையில் பெரியவர் வீட்டு விசேஷம். ஆனால் சின்னவர் மீது கொண்ட மரியாதையில் அனைவரும் அங்கு வந்திருக்கின்றனர். 

பெரிய தலை… மாமன்களை அழைக்க, நடுத்தர வயதைத் தாண்டிய இருவர் சபைக்கு முன் வந்தனர். 

“இந்தாங்க ப்பா சந்தனம். சம்பந்தம் கலந்துக்கோங்க.” என சந்தன கும்பாவை எடுத்து அவர்களிடம் கொடுக்க, வாங்கிக் கொண்டனர். முதலில் தாய்மாமன்கள் சம்பந்தம் கலப்பதே வழக்கம் அங்கு. இருவரும் சந்தனத்தை அள்ளி மாற்றி மாற்றி கைகளில் தடவி விட்டு, நெற்றியிலும் வைத்துக் கொண்டு தாய்மாமன்கள் சம்பந்தம் கலந்தனர்.

“பொண்ண, சபைக்கு அழச்சுட்டு வாங்க ம்மா!” என அதற்குள் ஒரு பெருசு குரல் கொடுத்தது. 

“பொறு பெருசு. பொண்ணு இன்னும் ரெடியாகல.” என வாய்த் துடுக்குக்காரி ஒருத்தி பதில் கூற,

“வெரசா கூட்டியாங்கம்மா. நல்ல நேரம் போறதுக்குள்ள தட்ட மாத்தணும்ல. பொம்பளைகளுக்கு எம்புட்டு நேரம் கொடுத்தாலும் தொலையாது.”

“உன்னய மாதிரியா பெருசு, சும்மா நாலுமொழ வேட்டிய சுத்திட்டு வரமுடியும். எட்டுகஜ புடவைய இடுப்புல சுத்த வேண்டாமா?” என இங்கு இவர்கள் வழக்காடிக் கொண்டிருக்க, 

வெண்கல குத்து விளக்கை பளிச்செனத் துலக்கி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரித்து, மல்லிச்சரத்தை தொங்கவிட்டு, சுடர்விட்ட குத்துவிளக்காய், சபைக்கு அழைத்து வரப்பட்டாள் சிவசங்கரி. 

“புள்ள, டவுன்ல வளந்தாலும், அப்படியே நம்ம ஊரு லட்சணம் மாறாம இருக்காள்ல?” என கீழே சேரில் அமர்ந்திருந்த பெண்கள் பேசிக்கொள்ள,

சபைக்கு வந்தவளை, பெரியகுளத்து கிளிமூக்கு மாங்காயை வாயூற பார்ப்பவன் போல், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் மாப்பிள்ளை ஸ்தானத்தில் அமர்ந்திருந்த அஸ்வின். அவனுக்கு பேன்ட்டோடு காலை மடக்கி மேடையில் அமர்வதே பெரிய விஷயமாக இருந்தது. 

மேடையில் ஊர்ப்பெரியவர்கள் அனைவரும் கீழேயே அமர, பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் அவ்வாறே அமர வேண்டியதாய்ப் போயிற்று. 

பெண்வீட்டார்க்கு ஊர் வழமை தெரியும். ஆனால் மாப்பிள்ளை வீடான, அஸ்வின் குடும்பம் தான் முகம் சுழித்தது. 

“பொண்ணு வந்துருச்சு. தாய்மாமன் வந்து பொண்ணுக்கு மாலைய போடுப்பா. சபைய கும்புட்டுட்டு, புள்ள உள்ள போகட்டும். பெத்தவங்க முன்னாடி வந்து தட்ட மாத்திக்கோங்க.” என அழைக்க, பெண்ணின் தாய்தந்தையும், மாப்பிள்ளையின் தாய்தந்தையும் முன்னுக்கு வந்தனர். இரு குடும்பத்தையும் சேர்ந்த மற்ற பெண்கள் சற்று ஓரமாக நின்று கொண்டனர்.

ஒரு பெண்ணின் கழுத்தில் திருமணத்திற்கு முன் மாலை போடுவதாக இருந்தால், அந்த உரிமை தாய்மாமனுக்கு மட்டுமே உண்டு நமது தெற்கத்தி சீமையில்.

“அத்தை வீடு, மாமன் வீட்டு ஆளுகளுக்கு எல்லாம் சம்மதம் தானப்பா. தட்டு மாத்தி நிச்சயம் பண்ணுன பின்னாடி, பொண்ணு மேல உரிமை இருக்கு உருத்து இருக்குனு யாரும் வரக்கூடாதுப்பா.” என ஊர் பெரியவர் ஒருவர், ஊர் வழக்கப்படி, சம்பிரதாயமாகக் கேட்க, 

“அப்ப… உரிமை இருக்கறவன், கேக்கலாம்னு சொல்றீங்க. அப்படித்தானே தாத்தா?” என சபைக்கு முன்னிருந்து கணீரென ஒலித்தது ஒரு குரல்.

குரல் வந்த திசை நோக்கி அனைவரது தலையும் திரும்பியது. அடுத்த நொடி வெண்கல செம்பில் பிடித்துப் போடப்பட்ட, ஈசலின் சலசலப்பாய், கூட்டத்தினுள் பேச்சு சத்தம் சலசலத்தது. அதாங்க… கிசுகிசுன்னு பேசிக்கிட்டாங்க.

“ஏய்… யாருப்பா நீயி? நல்ல காரியம் நடக்குறப்ப வந்து சலம்பல் பண்ணிட்டு இருக்க.” என, அவனை அடையாளம் தெரியாத ஒரு பெருசு குரல் உயர்த்தியது.

”இப்ப நீங்க சொன்னீங்களே. அந்த உரிமையும், உருத்தும் இருக்குறவன்.” எனக் கூற, அனைவரும் இவனைத்தான் பார்த்தனர். 

‘இவனா!!!’ என்று தான் சிவசங்கரியும் கண்களில் ஆச்சர்யம் காட்டினாள்.

அவன் சபைக்குள் வரும்பொழுதே அங்கு குழுமி இருந்தவர்கள், இவனை யாரென்று வியப்பாகப் பார்க்க… 

அவனை அடையாளம் தெரிந்தவர்களோ, ‘இவன் எதுக்கு இங்கன வர்றா…’ என ஆச்சரியமாகப் பார்த்தாலும், ‘இன்னைக்கு ஏதோ தரமான சம்பவம் இருக்கு போல.’ என முகத்தில் சுவாரஸ்யம் காட்டினர்.  

அவனும் பட்டு வேட்டி சகிதமாக, மாப்பிள்ளை கோலத்தில் தான் ஜம்மென வந்திருந்தான். இடுப்பில் கையூன்றி அவன் கேட்ட தோரணை, அவனை அடையாளம் தெரிந்தவர்களுக்கு, சின்னவரை நினைவூட்டியது. 

பெரும்பாலும் குழந்தைகள் தந்தைவழி ஜாடை கொண்டு தான் பிறப்பார்கள். ஆனால் இவனோ தாய்வழி தாத்தா ஜாடையில் வாட்ட சாட்டமாக, தெற்கத்திய திராவிட நிறத்தில், நிமிர்ந்து நின்றான். எப்பொழுதும், கற்றை மீசைக்கடியில் தவழும் குறும்புன்னகை. இன்று… அந்த குறும்புன்னகையில் சற்று குறும்பும் ஏறியிருக்கிறதோ!! 

கிருஷ்ணன் வேஷம் போடுவதற்கான அத்தனை லட்சணங்களும் முகத்தில் குடிகொண்டிருந்தது. நீண்ட, அகன்ற கண்கள் பெண்களுக்கு அழகு என்றால், சற்று உருண்ட நீண்ட கண்கள் (அதுதாங்க முட்டைக்கண்ணு, விஜய்காந்த் மாதிரி) ஆண்களுக்கும் அழகு.

சுருட்டை முடி, சாக்லேட் ப்ரவுன் கலர் (கருப்புனு சொல்லாம), சற்று அகன்ற கண்கள்… இவை எல்லாம் பெரும்பாலும் திராவிட ஜாடை. இவைதான் நாம் எல்லாரும் கும்பிடும் குறும்பு கண்ணனின் அடையாளமும் கூட. 

நவீனகால இளவட்டங்கள் சாக்லேட் ப்ரவுனிலிருந்து, கேரமல் ப்ரவுனிற்கு மெருகேறி இருக்கின்றனர். அதாங்க… கேப்பக்கழி நெறத்துல இருந்து, கோதும்பங்கழி நெறத்துக்கு பாலிஷ் ஆகி இருக்குறானுக.(wheat கலர்!)

“ஏம்ப்பா! பாத்தா… படிச்ச பயலாட்டம் இருக்க. இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம வந்து, வம்பு பேசிக்கிட்டு இருக்க?” என ஏற்கனவே கேள்விகேட்ட பெரியவரே மீண்டும் கேட்க, மற்ற பெரிய தலைகள் அமைதி காத்தன.

“இப்ப நீங்கதான தாத்தா கேட்டீங்க. அத்தைவழி, மாமன் வழில உரிமை இருக்குறவங்க முன்னாடியே சொல்லிருங்கனு? அதத்தான்‌ இப்ப நானும் கேக்குற.” என்றான்.

“அது சம்பிரதாயமா கேக்குறது ப்பா.” என ஊர்வழமையைக் கூற,

“ஆனா… நான் சம்பிரதாயமா கேக்கல. என் உரிமைய கேக்குறே.” என்றவன், பேச்சில் அழுத்தம் அதிகம் இருந்தது. 

செங்காத்து பூமி… உறவுக்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இன்றும் மானம், மரியாதை என்று அரிவாள் பேசும் கலாச்சாரம் கொண்ட பூமி. 

கரிசல் காட்டு கலாச்சாரத்தையும் கள்ளிக்காட்டு இதிகாசமாய் மாற்றிய பூமி ஆயிற்றே. 

ஊர்க்கட்டுப்பாடு, கௌரவம், சீர்செனத்தி, ஊர் மரியாதை என ஊரிப்போன சனங்கள். பிறந்த வீட்டுச்சீர், தாய்மாமன் சீர், மொய்வரிசை என சீர்வரிசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சொந்த பந்தங்கள்.

வீட்ல ஒரு விசேஷமும் இல்லைனாக் கூட, மொய் வாங்க மட்டுமே, வசந்தவிழான்னு விசேஷம் வச்சு மொய் வாங்குவாங்கங்க!!!

கரிசல் காட்டு கலாச்சாரமே, கள்ளிப்பால் கலாச்சாரமாக, சென்ற தலைமுறை வரைக்கும், மாறியிருந்தது எனில், சீர்வரிசைகளில் இருக்கும் முக்கியத்துவத்தையும், கௌரவத்தையும் கண்டு கொள்ளலாம். 

ஏன்? இன்றைக்கும், மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்திற்கு சீர்வரிசை, முறைமைக்காரர்களால் அனுப்பி வைக்கப்படுகிறதே!! தெய்வத்திற்கே பிறந்தவீட்டு சீர் தேவைப்படுகிறது எனில், மதுரைமண் பிறந்தவீட்டு சீர்வரிசைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதும் பட்டவர்த்தனம் ஆகிறதே.

பெண்ணிற்கு திருமணம் என நிச்சயம் பேசும்பொழுது, வழக்கமாக உரிமை இருக்குறவங்க முன்னாடியே சொல்லிருங்கப்பா என சம்பிரதாயமாகக் கேட்கப்படுவது உண்டு. ஏனெனில் திருமணத்தன்று கூட, முறை இருப்பவர்கள் வம்பு பண்ண வாய்ப்பு இருக்கிறது. 

அதுபோல் வழமை மாறாமல் கேட்கப்பட, எனக்கு உரிமை இருக்கு என, அளவாக கத்தரிக்கப்பட்ட அழகு மீசையை முறுக்கி நின்றான் ஈஸ்வர் என அழைக்கப்படும் நித்தீஸ்வரன்.

“யாரு, எவருனே தெரியாம, நீபாட்டுக்கு வந்து, லந்து பண்ணிகிட்டு இருக்க?” என ஒரு பெருசு எகிற,

“நா… யாருன்னு சொல்றத விட, இங்க சபைல இருக்குற இவங்கள யாருன்னு சொன்னா இன்னும் நல்லா புரியும்.” என்றான்.

“யாரப்பா சொல்ற?” எனக் கேட்க,

“இதோ, பொண்ணோட அப்பாவா நிக்கிறாரே… அவரு என்னோட பெரிய தாய்மாமன் சக்திவேல். அங்க தள்ளி நிக்கிறவரு சின்ன மாமா முத்துவேல். அப்பறம்… இவ… என்னோட மாமன் பொண்ண்ண்ணு சிவசங்கரி.” என மாமன் பொண்ணில் அழுத்தம் கொடுத்தவனை நிமிர்ந்து பார்த்தாள் சிவசங்கரி. சற்றுமுன் இவனா! என ஆச்சரியமாகப் பார்த்தவள், இப்பொழுது ஆழமாகப் பார்த்தாள்.

தனக்குப் பதிலாக மாமன்களை அறிமுகப்படுத்த, 

“டேய்!!! நீ சின்னவரு பேரனா? எந்தப்புள்ள மகன ப்பா நீயி? அதா சின்னவரு ஜாடை தெரியுது.” என வெளியூர் பெருசுகள் ஆச்சர்யம் காட்ட, பெரிய மாமனோ முகத்தில் ஆக்ரோஷம் காட்டினார்.

“டேய்… உன்னய யார்ரா இங்க அழச்சது. நீ எதுக்குடா இங்க வந்த?” என பெரிய மாமன் சக்திவேல் எகிற,

“மாமா மரியாதை!! நாளப்பின்ன, மறுவீடு, தலை ஆடி, தலதீபாவளின்னு எத்தனைக்கி வரவேண்டி இருக்கு. வீட்டுக்கு வரும்போது, ஒருத்தொருக்கத்தர் முகங்கொடுத்து பேசணுமா இல்லியா?” என சிரித்துக் கொண்டே கேட்டான்.

“உனக்கு யார்ரா இங்க பொண்ணு தர்ரேனு சொன்னது?” என வெகுண்டு எழ,

“மாமா, நீங்க சொல்லணும்னு அவசியமே இல்ல. ஒரு வயசு வரைக்கும் தான் பொண்ணு உங்களுக்கு சொந்தம். அதுக்கப்புறம் கட்டபோறவனுக்கு தான் சொந்தம்.” என்க,

“அந்த உரிமை உனக்கு இல்ல.” என இவர்கள் வாக்குவாதம் ஆரம்பிக்க. சின்னமாமன் பெரியவர்களுக்கு கண்ஜாடை காட்ட,

“ஏம்ப்பா… நீங்க ரெண்டு பேருமே பேசிக்குவீங்களா? அப்ப நாங்க எதுக்கு?” எனக்கேட்டு அமர்த்தியவர்கள்,

“இப்ப, நீ என்னப்பா சொல்ற?” என நித்தீஸ்வரனிடம் கேட்டனர்.

“நீங்க கேட்டது தான். யாராவது உரிமை இருக்கறவங்க சொல்லுங்கனு சொன்னீங்க. எனக்கு உரிமை இருக்குன்னு சொல்றே.” என ஊராருக்கு பதில் கூறியவனைப் பார்த்து,

“யாரு சம்பந்தி இது? நல்ல நேரத்துல வந்து பிரச்சினை பண்றது.” என மாப்பிள்ளையின் தந்தை ராஜசேகர் கோபமாக சக்திவேலைப் பார்த்து கேட்டார்.

“அவங்களோட சித்தப்பா பேரன ப்பா. சக்திவேலோட… தங்கச்சி மகன்.” என ஒரு பெருசு அவனை அறிமுகப்படுத்தி வைக்க,

“நீ யாரா இருந்தா எங்களுக்கு என்ன? பொண்ணு பாத்து, கல்யாணம்பேசி, நிச்சயம் பண்ற நேரத்துல வந்து கலாட்டா பண்ற.” என மாப்பிள்ளையின் அப்பாவும் பொங்கினார்.

“சார், எனக்கு தான் முதல் உரிமை. நான் விட்டுக் கொடுத்தா தான் நீங்களே சம்மந்தம் பண்ண முடியும்.” என விளக்கம் கொடுத்தவனிடம்,

“அதுக்காக, நாங்க எல்லாம் பேசி முடிச்சு, நிச்சயம் பண்ணப்போற நேரத்துல வருவியா?” என மாப்பிள்ளை அஸ்வினும், கோபமாக எழுந்து வந்தான்.

“நீ கல்யாணமே பேசி முடிச்சாலும், அவ கழுத்துல தாலி ஏறுற வரைக்குமே எனக்கு கேட்க உரிமையிருக்கு.” என அவனுக்கும் பதில் கூறியவன்,

“என்ன மாமா!! நான் சொல்றது சரிதான? நம்ம ஊர் பழக்கவழக்கத்த, அவங்களுக்கு எடுத்து சொல்லுங்க. உங்களுக்கே பாதி மறந்திருக்கும்.” என மாமனிடம் கூறினான்.

“அதெல்லாம் அந்தக்காலம் ப்பா. இப்ப சும்மா, பேச்சுக்கு கேக்குறது.” என ஒரு பெருசு விளக்கம் கொடுத்தது.

“அந்தக்காலம் எந்தக்காலம்னாலும், மாமன் மாமன்தான? சித்தப்பா சித்தப்பா தான? உறவுமுறை மாறாதப்ப, பழக்கவழக்கம் மட்டும் எப்படி மாறும் தாத்தா.”

“நீ சொல்றதும் சரிதான். ஆனா… இம்புட்டு நாளா எங்க போன? அவங்க ஏற்கனவே பொண்ணு பாத்து, பேசி… நிச்சயம் வரைக்கும் வந்துட்டாங்கள்ல. இப்ப வந்து உரிமை இருக்குனு, பொண்ண மரிச்சா எப்படிப்பா?” என ஒருவர் நியாயம் பேச,

“எனக்கும் பொண்ணு கேட்டு, மொறப்படி கல்யாணம் பண்ணனும்னு தான் ஆச தாத்தா. ஆனா, நா… பொண்ணு கேட்டுப் போனா பெரிய மாமன் தான் தந்துறுவாரா? அதையும் மீறி எங்க அத்தை தான் தர விட்டுறுவாங்களா? அதனால தான் ஊர்முன்னாடி இவள பொண்ணு கேக்குறே. நீங்க பேசி முடிச்சு வைங்க.” என கூறியவன் பேச்சு வேண்டுதலாக இல்லை, கட்டளையாக இருந்தது.

“அதுதா… ஒட்டும் இல்ல, உறவும் இல்லைனு ஆகிப்போச்சுல்ல. மறுபடியும் எதுக்கு வந்து பிரச்சினை பண்ற?” என ஓரமாக நின்று கொண்டிருந்த சக்திவேலின் மாமியார் சற்று முன்னுக்கு வந்து அவனிடம் கோபமாகக் கேட்டார்.

“இதுல தலையிட, உங்களுக்கு உரிமை இல்ல. இது எங்க மாமனுக்கும், எனக்குமான வெவகாரம்.” என அவரை கண்களால் கோபம் காட்டி, கத்தரித்தான்.

அனைத்தையும் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தாள் சிவசங்கரி.

“அவன் கேக்குறதும் நியாயம்தான. உரிமை இருக்குறவன் கேக்குறான். நீ என்ன சொல்ற சக்திவேலு.” என பெரியவர் ஒருத்தர் கேட்க,

“என்னங்க நீங்க, இவந்தான் கேக்குறான்னா… நீங்களும் அவங்கூட சேந்துகிட்டு அவனுக்கு ஒத்துஊதுறீங்க. இதோ… தங்கச்சி மகன்னு வந்து நிக்குறானே, கூடப் பொறந்த தங்கச்சி மகனா? சித்தப்பா பேரந்தான?” என கோபமாகக் கேட்டாலும், அந்த வார்த்தை மனதிற்குள்  என்னவோ செய்தது சக்திவேலுக்கும், அருகில் நின்ற சின்னமாமன் முத்துவேலுக்கும்.

“என்ன சக்திவேலு? யாரோ எவரோங்கற மாதிரி பேசுற? உங்க குடும்பமும், உங்க சித்தப்பா குடும்பமும் எப்படி ஒத்துமையா இருந்தீங்கனு ஊருக்கே தெரியும். ஆண்வாரிசு இல்லாத உங்க சித்தப்பா புள்ளைகளுக்கு, தாய்மாமன்னு நீங்கதானப்பா எல்லா முறையும் செஞ்சீங்க?”

“நாங்களும் இல்லைங்கல. இதோ இவனுக்கு எம்மடியில வச்சுதான் காது குத்தினாங்க. ஆனா… இப்ப தங்கச்சி மகன்னு வந்து நிக்கிறான். யாருன்னே அடையாளம் தெரியல. அந்த அளவுக்கு தான உறவுமுறை இப்ப இருக்கு.” என சக்திவேல் கூற, அதைக்கேட்ட சொந்தமும் பந்தமும், ஊர்சனங்களும், எப்படி இருந்த குடும்பம் இப்ப, இப்படி அத்துக்கிட்டு நிக்கிது என உச்சுக் கொட்டியது.

“அதுக்கு யார் காரணம் மாமா? ஒன்னுமில்லாத விஷயத்தை ஊதி பெருசு பண்ணி குடும்பத்த பிரிச்சது யாருன்னு எல்லாருக்கும் தெரியும். பழச எல்லாம் பேச விரும்பல. இப்படியே சொந்தம் அத்துப் போயிறக்கூடாதுங்கறது தான் எங்க அம்மாவோட ஆசை. நான் என்னோட உரிமைய கேக்குறே. எனக்கு உங்க சம்மதம் கூட தேவையில்ல. உங்க பொண்ணு சம்மதம் கெடச்சா மட்டும் போதும்.” என மாமனுக்கு பதில் கூறியவனை, கண்களில் வெறுமையாகப் பார்த்தாள் சிவசங்கரி.

அம்மாவோட ஆசை, சொந்தம் விட்டுப் போகக்கூடாது எனும் வார்த்தைகள்,  அவளை என்னவோ செய்தது. வெறும் உரிமை மட்டும் தானாம். மனதிற்குள் குறித்துக்கொண்டாள். 

“என்ன தைரியத்துல வந்து இப்படி எல்லாம் கேக்குற?” என மாமன் கேட்க,

“ஏற்கனவே இந்த மாதிரி கல்யாணம் நம்ம குடும்பத்துல நடந்திருக்குல்ல. என்னோட பெரிய தாத்தா, அதான்… உங்க அப்பா இதே மாதிரி தானே பொண்ண மரிச்சு கல்யாணம் பண்ணினாரு.” என மாமனுக்கு பதில் கொடுத்தவன்,

“இல்ல… அம்மாச்சீஈஈஈ?” என ஓரமாக நின்று கொண்டிருந்த சக்திவேலின் அன்னையை எட்டிப்பார்த்து குறும்பாகக் கேட்க, சபையோரிடையே சிரிப்பொலி கேட்டது. 

“ஈஸ்வரா… அது அந்தக்காலம் ப்பா. பொண்ணு புடிச்சுப்போச்சுனா, உரிமை இருக்கறவன், நின்னதுநிக்க… இடுப்புல கெடக்குற அரணாக்கயிற அவுத்து, தாலி கட்டி, கூட்டிப்போன காலம் அது. ஆனா இப்ப முடியுமா?” என சிரித்துக் கொண்டே ஒருவர் கேட்க,

“உங்க வயசுக்கு இதுமாதிரி நெறய பாத்திருப்பீங்க போலயே?” எனக் கேட்டு ஈஸ்வரனும் சிரிக்க,

“நீயாவது நிச்சயத்தன்னைக்கே வந்து நிக்கிற. உங்க பெரிய தாத்தா, உங்க அம்மாச்சி கல்யாணத்தன்னிக்குல போய் மரிச்சாரு. அப்ப நாங்க எல்லாம் எளந்தாரிப் பயலுக. அன்னைக்கி, உங்க தாத்தாவுக்கு நாங்கதான் தொணையா இருந்தோம்.” என பூத்துப்போன மீசையை நீவிக்கொடுத்து, அந்த நாள் நினைவில், பொக்கைவாய் திறந்து கலகலவென சிரித்தவர்,

“அதெல்லாம் அந்தக்காலம் ப்பா?” என்றார் மீண்டும் அங்கலாய்ப்பாய்.

“அதனால தான் தாத்தா, பொண்ணோட சம்மதம் கேட்டு நிக்கிறே. இல்லைனா அந்தக்காலம் மாதிரி, மதுரவீரனாட்டம் பொண்ண தூக்கிட்டுப் போயில்ல தாலி கட்டிருப்பே.” என சபையோர்க்கு பதில் கூறியவன், தன்மீது பார்வையை பதித்திருந்தவளைப் பார்த்து, சட்டென கண்சிமிட்ட, 

‘எவ்ளோ தைரியம்?’ என பல்லைக் கடித்தவள், முறைத்துக் கொண்டே முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“என்ன சக்திவேல்? ஆளாளுக்கு கதை பேசிக்கிட்டு இருக்கீங்க. நாங்க என்ன வேடிக்கை பாக்கவா வந்திருக்கோம்?” என மாப்பிள்ளையின் தந்தை கோபப்பட்டார்.

“இல்ல சம்பந்தி! இவன் ஏதோ, சும்மா கலாட்டா பண்ண வந்திருக்கான்.” என சமாதானமாக, சக்திவேல் பதில் கூற,

“என்ன மாமா… சும்மா கலாட்டாவா? பொண்ணு எனக்கு தான். நீங்க கூட்டியாந்த ஆளுகள ஊருக்கு கார எடுக்க சொல்லுங்க. இஷ்டம்னா… இருந்து கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டு போகட்டும்.” என கேலியாகக் கூற, அது மாப்பிள்ளை வீட்டாரை சீண்டி விட்டது.

அவர்களும் ஆளுக்கொன்றாக கோபமாகப் பேச, 

“என்ன மிஸ்டர் சக்திவேல். எங்கள அவ்ளோ தூரத்துல இருந்து கூட்டிவந்துட்டு அவமானப் படுத்துறீங்களா? இதுக்கு தான் சென்னையிலேயே நிச்சயம் வச்சுக்கலாம்னு சொன்னே. நீங்க தான் கல்யாணத்த சென்னைல வச்சுக்கலாம். நிச்சயித்த உங்க சொந்த ஊர்ல வைக்கணும்னு கூட்டிட்டு வந்தீங்க.” என ராஜசேகர் எகிறிக்கொண்டு வர,

“பொண்ணு எனக்கு தான். இல்லைனா உங்கள சும்மா விடமாட்டோம். சென்னையில இருந்து ஆளுகள வரவச்சு பொண்ண தூக்குவோம்.” என மாப்பிள்ளையும் முறுக்கிக் கொண்டு வந்தான். 

“அடியேய் மாப்ள! எங்க வந்து என்ன பேசிக்கிட்டு இருக்க?” என அமர்ந்து இருந்தவர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு தலை எழுந்து வந்தது.

“வக்காளி, எவன்டா அது… எங்க ஊருக்குள்ள வந்து, எங்க பொண்ணு மேல கைவக்கிற ஆம்பள. நீ காசு குடுத்து ஆளுகள கூட்டியாறணும். இங்க கண்ணக்காமிச்சா போதும். வீட்டுக்கு ஒரு அருவா பறந்து வரும். ஏதோ சக்திவேல் மொகத்துக்காக பாத்துட்டு உன்னைய சும்மா விடுறோம். இல்லைனா இந்த வார்த்தைய நீ கேட்டு முடிக்கிறதுக்குள்ள… தலைய வெட்டி மந்தையில நட்டுறுப்போம்.” என ஒரு தலை வேட்டியை மடித்துக் கட்ட, ஆளுக்கொன்றாகப் பேச, வாக்குவாதம் அதிகரித்தது.

மண்ணைக்கூட விட்டுக் கொடுப்பார்கள். ஒரு பெண்ணின் மீது கைவைப்பதாகக் கூறினால், கூறியவன் உயிரோடு ஊர்போய்ச் சேரமுடியாது. 

பிரச்சினை பெரிதாவது போல் தோன்ற,

“இங்க பாருப்பா… இது ஊர் வழக்கம். உரிமை இருக்குறவன் பொண்ணு கேட்டா, மறுக்க முடியாது. கொடுத்து தான் ஆகணும். அந்தப் பையலும்… பொண்ணோட சம்மதம் இருந்தா மட்டும்தான்னு சொல்லிட்டாப்ல. இப்ப முடிவு சொல்ல வேண்டியது பொண்ணுப்புள்ள கைலதான் இருக்கு.” என பெரியவர் ஒருவர் கூட்டத்தை அமர்த்தினார். 

அனைவரும் சிவசங்கரியின் பதிலை எதிர்பார்த்து நிற்க, 

நித்தீஷ்வரனும் உள்ளுக்குள், ‘என்ன சொல்லப் போறாளோ?’ என சிறு பதட்டத்தோடு இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், கெத்தாக சிவசங்கரியின் முகம் பார்த்து நின்றான்.

அவளோ செய்வதறியாது யாரும் அறியாமல் சித்தப்பன் முத்துவேலின் முகத்தைப் பார்த்தாள். 

மாமா உன்

பொண்ண கொடு

ஆமா சொல்லி புடு

மாமா உன் பொண்ண

கொடு ஆமா சொல்லிபுடு

இது சாமி போட்ட முடிச்சு 

அது தான்டா

மூனு முடிச்சு

தாலி கட்டவும்

மேளம் கொட்டவும் நேரம்

வந்துடுச்சு ஊரு உலகம்

சேர்ந்து எனக்கு மாலை

தந்துடுச்சு

மாமா உன்

பொண்ண கொடு…..