💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 15💋
💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 15💋
அத்தியாயம் 15
பியானா அழுது கொண்டிருப்பதை பார்த்த புறஞ்சேயனுக்கும் பரிதாபமாய் இருக்க தன்னவளின் தோளை ஆறுதலாய் பற்றினான். “தப்பான வழிக்கு போயிருக்க மாட்டா” என்றான் தன்னவளுக்கு.
“வெளிநாட்டுல… கல்யாணம் பண்ணாமலே குழந்தை பெத்துப்பாங்களாமே…, இவளும் வெளிநாட்டுக்காரிதானே! அம்மா வளர்க்கலயே அக்கா தானே வளர்த்தா அதுனாலத்தான் இப்படி பண்ணிட்டாளோ என்னம்மோ?”
கருக்கலைப்பு மாத்திரையை வேர்லின் குடித்ததால் தமக்கையின் வளர்ப்பு தப்பு என்று சொல்லிக்காட்டினார் செல்வம்.
பியானா, வேர்லினை எண்ணி பரிதவிப்போடு புறஞ்சேயனின் முகத்தைப்பார்க்க,
“அம்மா… உங்கள யாரும் இங்க வெத்தல பாக்கு வச்சு அழைக்கல.வாயமூடிக்கிட்டு இருக்கிறதா இருந்தா இருங்கம்மா. இல்லன்னா இப்பவே கிளம்புங்க” என்று கருகினான்.
“எல்லாரும் பொண்டாட்டி முந்தானையதான் புடிச்சிட்டு பின்னாடியே… போவாங்க. நீ எல்லாத்துக்கு மேல பொண்டாட்டி டீசர்ட்ட புடிச்சிட்டு போற. எத்தன நாளைக்கினு பார்க்குறேன்” என்று வசைபாடினார் செல்வம்.
“அவன் எப்படியோ போறான். நீ கொஞ்சம் வாய மூடு செல்வோம்” நடக்கும் சம்பவத்தை விட்டு வேற எதையோ பேசியது புகழிற்கு எரிச்சலை மூட்டியது.
“அப்பனுக்கும் புள்ளைக்கும் என் வாய மூடுறதுதான் வேலை” என்று சீற்றத்தோடு செப்பிவிட்டு அப்படியே வாயை மூடினார் செல்வம்.
“பேஷன்ட் கண் முழிச்சிட்டாங்க” என்று தாதியர் கூற அங்கிருந்த அனைவரும் அறைக்குள் சென்று அல்லோலப்பட்டனர். பியானாவிற்கு தங்கை கண் மலர்ந்தது எண்ணி மகிழ்வதா இல்லை, அதன் பிறகு உருவாக்கும் கேள்விகளுக்கு என்ன பதில் கிடைக்குமோ என்கிற பயத்தில் நிலைதடுமாறுவதா என்றறியாமல் இருந்தாள்.
ஆளாளுக்கு வேர்லினிடம் கருக்கலைப்பு மாத்திரை உண்டதை பற்றி கேட்க, வேர்லின் யாருக்கு பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள். பாட்டி, “யாரவது ஒருத்தர் பேசுங்க” என்றார்.
“நான் வேர்லின் கிட்ட பேசுறேன் எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று அனைவரையும் அமைதிப்படுத்தினாள் பியானா.
ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து முழித்துக்கொண்டனர். எக்குத்தப்பாக எதுவும் நடந்திருந்தால் புறஞ்சேயன் நிம்மதியாக வீட்டில் உலாவ முடியும் என்பது சந்தேகத்திற்குள்ளாகியது.
“வேர்லின் மா ஏன்டா இப்படி பண்ண, நீ உண்மையாவே அபோஷன் மாத்திரை சாப்பிட்டியா?
என்னால நம்பவே முடியல டா” என்று பியானாவின் விழிகளில் ஏக்கமும் நீரும் நிறைந்திருக்க விசனத்தோடு விசாரித்தாள்.
வேர்லின் காற்றோடு கலந்த குரலில், “ஆமா அக்கி… அபோஷன் மாத்திரை சாப்பிடேன்” என்று அவள் கூறிய அந்த வார்த்தை பியானாவின் காதில் கணீர் என்று ஒலிக்க, யாரும் எதிர்பாரா விதமாய் ஓங்கி ஓர் அரையை வேர்லின் கன்னத்தில் விட்டாள். பியானாவின் கை தடம் நன்கே வேர்லினின் கன்னத்தில் பதிந்திருந்தது. பியானாவின் செய்கையில் அங்கிருந்த அனைவரின் நாடித்துடிப்புகளெல்லாம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.
லக்ஷதாவும் புறஞ்சேயனும் பியானாவை தடுத்தனர்.
“லூசு மாதிரி எடுத்தோம் கவுத்தோம்னு பண்ணாத பியானா.
வேர்லின கொஞ்சம் பேச விடு” என்று கோபத்துடன் கூறினான் புறஞ்சேயன்.
முதல் முறையாக பியானாவிடம் வேர்லின் அடிவாங்கியது இதுதான்.
வேர்லினின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் எட்டிப்பார்த்தது. இருமல் கொடுத்த வேதனையை விட பியானாவின் அடி அதீத வேதனையை மனதளவில் கொடுத்தது.
“அடிக்காத அடிக்காத பச்ச உடம்புக்காரி” என்று ஏளனமாய் கூறினார் செல்வம்.
“நீங்க வாய மூடுங்க… அவ ஒன்னும் ப்ரெக்னன்ட் ஆகல!
என்ன பண்ணாலும் எங்கிட்ட சொல்லிட்டுதானே பண்ணுவா
இத ஏன் எங்கிட்ட சொல்லல? சொல்லாதனால தான் என் தங்கச்சிக்கு இவ்ளோ பெரிய தலைகுனிவு. அதுக்குதான் அடிச்சேன்” என்று உரக்க சினத்தோடு கூறினாள்.
“சொன்னா நீ குடிக்க விடமாட்ட அதுதான் அக்கி உங்கிட்ட சொல்லல?” என்று வருந்திக்கொண்டாள் வேர்லின்.
“சரி வேர்லின் இப்போவாவது ஏன் இப்படி பண்ணேனு சொல்லு? என் தங்கச்சிய யார் முன்னாடியும் தலைகுனிய விடமாட்டேன்”
லக்ஷதாவை சைகையால் அருகில் அழைத்தாள். அவள் பார்வை புரிய அருகில் வந்தாள் லக்ஷதா, வேர்லின் லக்ஷதாவின் கைகளை பற்றினாள். “லக்ஷு அக்கிக்காக தான் இப்படி பண்ணேன்” என்றவள் கூறியது அங்கிருந்த யாவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.
‘இவ எதுக்கு எனக்காக அபேஷன் மாத்திரை சாப்பிடனும்’ என்றெண்ணம் லக்ஷதாவின் மனதில் ஓடியது.
“ஏன்னு கேட்டா எனக்காகனு சொல்லுற…, நீ சொல்லுறது எதுவுமே புரியல வேர்லின்… கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு” தீவிரமாகவும் தன்மையாகவும் வினவினாள் லக்ஷதா.
வேர்லின் தனது தொண்டையை சரி செய்தபடி பேச ஆரம்பித்தாள்.
“நான் காஃபிபோட கிட்சன் போனேனா… ரஞ்சனாவும் ஆன்ட்டியும் இருந்தாங்க. செல்வம் ஆன்ட்டி யார் யாருக்கு காஃபி போடுறேனு.. கேட்டாங்க. அப்புறம் லக்ஷு அக்கிக்கு காஃபி போட்டாத சொன்னாங்க. சோ நான் உங்களுக்கு காஃபி போடல. அவங்களும் ரஞ்சனாவும் அந்த இடத்துல இருந்து போனதுக்கு அப்புறம்.. அந்த இடத்துல ஒரு கவர் இருந்துச்சு. மைஃவ்ப்ரிஸ்டோன் பில் கவர். இது ஒரு அபோஷன் பில்!” அவள் முழுதாக கூறிமுடிக்கவில்லை. அனைவரும் வியந்து நிற்க. லக்ஷதா திகைத்துப்போனாள்.
ரஞ்சனா முந்திக்கொண்டாள். “நீயா அபோஷன் மாத்திரை குடிச்சிட்டு… நல்லாவே கதை கட்டுறியே…” என்றவள் பேச்சில் தடுமாற்றம் தெரிந்தது.
“ஏன் ரஞ்சனா, வேர்லின் உன்ன சொல்லிருவானு உனக்கு பயமா இருக்கா!” என்று புறஞ்சேயன் கேள்வியில் ரஞ்சனா நன்கு முழித்தாள்.
வேர்லின் கூறுவதெல்லாம் அனைவருக்கும் ஆச்சர்யமாயிருந்தது. இதிலிருந்து வேர்லின் எதோ கூற முனைகிறாள் என்று நன்கு தெரிந்தது. அவள் கூற வந்ததை தொடர்ந்தாள்.
“சந்தேகத்துல நானும் வேகமா ரூமுக்கு போய் பார்த்தேன். லக்ஷு அக்கி பாதி காஃபிய குடிச்சிருந்தாங்க. மீதிய நான் வாங்கிக் குடிச்சேன். நான் நினைச்ச மாதிரியே சிம்ப்டம்ஸ் தெரிஞ்சுது..”
என்று கூறியவள் இரும ஆரம்பித்தாள்.
“வேர்லின் என்ன சொல்லவறானு நான் சொல்லுறேன். ப்ரெக்னன்ட் ஆகாம அபோஷன் இந்த மாத்திரை சாப்பிட்டா பயங்கரமா இருமலும் பீவர் வரும் வொமிடிங் வரும் தலை சுத்தும் உடல் சோர்வாகும். அதே மாதிரி அந்த பொண்ணு இருமுனா, கொஞ்சநேரத்துல வேர்லினும் இருமி வொமிட் பண்ணினா. ஏம் ஐ கரக்ட் வேர்லின்?” என்று சரியாக ஊக்கித்து விளக்கினார் விரிவுரையாளர்.
“கரக்ட் சார். சார் சொன்ன மாதிரியேதான் நடந்துச்சு. செல்வம் ஆன்ட்டி தான் அக்கிக்கு காஃபி கலந்தாங்க… அவங்க கிட்டதான் கேக்கனும் மாத்திரை எப்படி வந்துச்சுனு…” என்று தட்டு தடுமாறிக்கூறினாள் வேர்லின்.
லக்ஷதாவின் மனம் அச்சப்பட ஆரம்பித்தது.
“ஏய், என்னடீ பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு எம்மேல பழிய போடுற” என்று அதட்டினார் செல்வம்.
“நான் யாரு மேலயும் பழிய போட அவசியமில்ல. ஒன்னு நீங்க இல்லன ரஞ்சனா உங்க ரெண்டுபேரையும் தவிர வேற யாரும் பண்ணமாட்டாங்க”
வேர்லின் கூறியதைக்கேட்டு ரஞ்சனா, “இவ இப்படிதான் லூசு மாதிரி எதுவும் பேசுவா, நாம கிளம்பலாம் அத்தை” என்று படபடப்பாய் கூறினாள்.
“மாம்ஸ், இங்க இருந்து யாரும்வெளியப்போககூடாது. அப்படி போனா போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க”
“சரி மா” என்றான் புறஞ்சேயன்.
“நான் பெத்த புள்ளைக்கு நான் ஏன் மாத்திரை போடனும். என் பொண்ணுக்கு ஒரு குழந்தை பொறக்கனும்னு நான் கோயில் கோயிலா அலையிறது எனக்குதானே தெரியும்” என்றார் பதற்றத்துடன் கவலையுடனும் கூறினார் செல்வம்.
“நான் சொல்லுறது பொய்யாவே இருக்கட்டும் லக்ஷு அக்கியோட ஃபைல்ஸ் எடுத்திட்டு வாங்க” என்றாள் வேர்லின். லக்ஷாவிற்கு மனம் பதறியது.
பியானாவும் லக்ஷதாவும் கோப்புகளை எடுத்துடு வர கிளம்பினர்.
“நீ என்னதான் நாடகம் ஆடுறனு பார்க்குறேன்” என்று உரத்த குரலில் கூறினார் செல்வம்.
பாட்டியும் புகழ்முரசனும் நடப்பவை என்னவென்று அறியாமல் தவித்தனர்.
கோப்பை எடுக்க சென்றவர்கள் அரை மணி நேரத்தில் மருத்துமனையை அடைந்தனர்.
“ஃபைல்ஸ் எடுத்திட்டு வந்துட்டோம்” என்று குரல் கொடுத்தாள் பியானா.
கோப்புக்களை விரிவுரையாளரின் கையில் கொடுக்குமாறு கூறினாள் வேர்லின். அதே போல் பியானாவும் கோப்புகளை விரிவுரையாளரின் கையிலளித்தாள்.
“இந்த ஃபைல்படி இவங்களோட யூட்ரஸ் எப்படி இருக்குனு சொல்லுங்க சார்”
பத்து நிமிடங்கள் நன்கு படித்து பார்த்தவர். “ஒரு ப்ராப்ளமும் இல்ல. நல்ல ஹெல்தியா இருக்கு”
“தேங்க்யூ சார். லக்ஷு அக்கி இந்த ஆஸ்பிடல்ல இன்னும் ஒரு வாட்டி உங்க ஃபுல் பாடி எப்படி இருக்குனு செக் பண்ணி பார்ப்போம்” என்று நடந்த கெடுதலை நிரூபிக்க சாதுவாக கோரினாள் வேர்லின்.
“ஓகே பட், எதுக்கு வீணா இன்னும் ஒரு வாட்டி செக்அப்” என்று பயத்தோடு கேட்டாள் லக்ஷதா.
“நீங்களும் எனக்கு அக்கிதானே. நான் உங்களுக்கு கண்டிப்பா கெடுதல் செய்ய நினைக்க மாட்டேன்” என்று பரிதாபத்தோடும் பணிந்து கூறினாள் வேர்லின்.
“நீ ஒன்னும் புடுங்க தேவையில்ல. என் அண்ணிக்கு எங்க டாக்டர் நல்லாதான் ட்ரீட்மெண்ட் பார்க்குறாங்க” என்று எரிச்சலுடன் விளம்பினாள் ரஞ்சனா.
“உங்க டாக்டர் என்ன நல்லத பார்த்தாங்கனு நானும் பார்க்குறேன். என்று விரக்தியாய் சவால் விட்டாள் வேர்லின்.
‘ஐயோ, இங்க பார்த்தா எல்லா உண்மையும் தெரிஞ்சிருமே நான் எப்படியாவது தப்பிக்கனும்’ என்று மனதில் எண்ணிக்கொண்டாள் ரஞ்சனா.
“நான் இப்போ வீட்டுக்கு போய் அப்புறமா வாரேன்” என்று ரஞ்சு நழுவப்பாத்தாள்.
“ஓ போறியா… போ, எங்கிட்ட இந்த கவர் இருக்கு. போலீஸ்க்கிட்ட குடுத்துட்டா கைரேகை நிபுணர் கிட்ட குடுத்து யாருனு கண்டுப்புடிச்சிருவாங்க. நான் என் கைபடாமதான் எடுத்தேன்.” என்று மிரட்டினாள் வேர்லின்.
வேர்லின் திட்டம் அங்கிருப்பவர்களுக்கு புரியவில்லை. விரிவுரையாளரை தவிர்ந்து.
லக்ஷதா பரிசோதனைக்கு சென்றிருந்தாள். அவளை பரிசோதித்து அறிக்கை வர மூன்று மணி நேரம் ஆகும் என்று கூற, விரிவுரையாளர் தனக்கு தனியார் வகுப்பு எடுக்கும் வேலை இருப்பதாக கூறி விடைபெற்றார்.
“எனக்கு இங்க நடக்குறதெல்லாம் பார்க்கும் போது என்ன சொல்லுறது, என்ன செய்றதுன்னு தெரியல சார். ஒரு பக்கம் வேர்லின் பெட்ல படுத்திட்டு இருக்கா, இன்னொரு பக்கம் அக்கா செக் அப் போயிருக்காங்க. ஆண்டவரே!” என்று தன்னவனிடம் கூறிவிட்டு சிலுவையிட்டுக்கொண்டாள் பியானா.
“நீ கொஞ்சம் சும்மாயிரு என்னையும் டென்ஷன் ஆக்காம இரு பியூ எனக்கே என்ன சொல்லுறதுன்னு தெரியல” என்று புலம்பினான் புறஞ்சேயன்.
ரஞ்சனாவின் நடவடிக்கைகளை உற்று நோக்கிய வண்ணம் இருந்தான் புறஞ்சேயன்.
லக்ஷதாவை முழு உடல் பரிசோதனையை முடிந்து வந்திருந்தாள். பரிசோதனையின் அறிக்கைக்கு எல்லோரும் வேர்லின் இருக்கும் அறையில் காத்திருந்தனர்.
பல மணி நேரத்தின் பின்னர். வைத்தியர் யாராவது ஒரு பெரியவரை அழைக்க, லக்ஷதாவோ அனைவரின் முன்னே கூறுமாறு கூறிவிட்டாள். திருமணமாகி பலவருடங்களாக மகப்பேற்றை அடையாதது. அங்கிருந்த அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
“நீங்க முன்னாடி பார்த்த டாக்டர் உங்கள சரியா பார்க்கலனு நினைக்கிறேன். அவங்களோட ரிப்போர்ட் தப்பு. உங்க கருமுட்டைகள் தரமா இல்ல. கருப்பபை சோர்வாயிருக்கு.
நீங்க குழந்தைக்காக ஏங்கும் போது அபோஷன் பில் ஏன் குடிச்சீங்கனு தெரியல?” என்று மேலேட்டாமாக கூறினார் வைத்தியர்.
“இல்ல.. டாக்டர் இல்ல. அபோஷன் மாத்திரை சாப்பிட்டதே இல்ல” என்று பதற்றத்தோடு பதில் கூறினாள். அங்கிருக்கும் அனைவரும் கதை எந்த திசைக்கு செல்கிறது என்றே தெரியவில்லை. ரஞ்சனாவை தவிர்ந்து.
“ரிப்போர்ட் அப்படிதான் சொல்லுது. அபோஷன் பில் குடிச்சதால பிரியட்ஸ் நிறைய போகும். ஒருதடவை ரெண்டு தடவை இல்ல. கிட்ட தட்ட அஞ்சு வருஷமா மாசத்துக்கு ஒருவாட்டி இல்லனா ரெண்டுவாட்டி குடிச்சிருக்கீங்க. அதனால ஒரு குழந்தை தாங்கு சக்திய உங்க கருப்பை இழந்துட்டு. நல்ல நேரம் தொடர்ந்து வீக் வீக்க பில் எடுக்கல எடுத்திருந்தா ஹார்ட்டுல எதும் பெரிசா ப்ராப்ளம் வந்துருக்கும்.
நீங்க இந்த மாதிரி பில் குடிச்சதால பாடி வெய்ட் கூடும். உடலுறவுல இன்ட்ரஸ்ட் இருக்காது. மனவுளைச்சல் அதிகமா இருக்கும். நீங்களும் மனசளவுல ரொம்ப வீக்கா இருக்கீங்க. நிறைய ப்ளெட் லாஸ் ஆகிருக்கு” என்று சற்று பொறுமையாகவே எடுத்துரைத்தார் வைத்தியர்.
வைத்தியர் கூறியதை கேட்டு அனைவருர் மனதிலும் சலனம் பெருகியது.
‘அக்காக்கு குழந்தையே பொறக்காதா!’ என்று புறஞ்சேயன் மனதில் கவலை ஆழமாய் வேர் ஊன்றி நின்றது.
“அப்போ இத்தன நாள் எங்க ஃபேமிலி டாக்டர் தப்பா தான் ட்ரீட்மென்ட் பண்ணாங்களா…
எனக்கு இதுக்கு அப்புறம் குழந்தையே பொறக்காதா..?” என்று லக்ஷதா மனதளவில் மருகி அழுதுக்கொண்டே கேட்டாள்.
“வாய்ப்புகள் குறைவு. கர்ப்பமானா ரெண்டு மூனு மாசத்துல கலைஞ்சிடும். இல்லன டெலிவரி டைம் யாரவது ஒருத்தர் உயிரமட்டும்தான் காப்பத்தலாம். ரெண்டுபேரும் உயிரோட இருந்தா குழந்த அப்நார்மல இருக்கும். இந்த மூனுல ஒன்னு கண்டிப்பா நடக்கும். ஆனால் உங்களுக்கு மறுபடியும் ஒழுங்கா ட்ரீட்மெண்ட் எடுத்து பார்க்கலாம்” என்று உறுதியாகவும் தீவிரமாகவும் கூறிவிட்டு நகந்தார் வைத்தியர்.
“அப்போ காலம்பூரா கடைசிவரைக்கும் நான் மலடியாதான் இருக்கனுமா?” விசனத்தோடு விழிகளில் நீர் சிந்தியது. அழுவதற்கு கூட லக்ஷதாவிடம் கண்ணீர் இல்லை.
மகப்பேற்றை எண்ணி அவள் கண்ணீர் எல்லாம் கரைந்து. இன்று அதுவும் நிறைவேறாத ஆசையானது.
“அதுமட்டுமில்ல உங்க ஹார்ட்டுல இரத்த கட்டி இருக்கு. அது ப்ராப்ளம் இல்ல ஆபரேஷன் பண்ணி ரிமூவ் பண்ணலாம்”
இரத்த கட்டிகள் ஏற்படுவது என்பது கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் மிகவும் அரிதாக ஏற்பட கூடிய பக்க விளைவாகும். இதய வலி, சுவாசிப்பதில் சிரமம், போன்றவை நுரையீரல் அல்லது இதயத்தில் இரத்த கட்டிகள் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள்.
உடனே புறஞ்சேயன் அவர்களது குடும்ப வைத்தியர் திருமதி. தில்லைநாதன் அவர்களுக்கு அழைப்பை விடுத்து, “டாக்டர், நீங்க பண்ணது உங்களுக்கே நல்லா இருக்கா, ஏன் இப்படி எங்க அக்கா வாழ்க்கையே வீணாக்கிட்டீங்க. நீங்களும் ஒரு பொண்ணுதானே, உங்களுக்கும் மனசாட்சியே இல்லயா?” தமக்கையின் வாழ்க்கையின் நிலையை எண்ண அவனால் இயலவில்லை. கைபேசியில் ஒலிப்பெருக்கின் சத்ததை முழுவதுமாய் அனைவருக்கும் கேட்குமாறு வைத்திருந்தான்.
“நீங்க என்ன சொல்லுறீங்கனு எனக்கு புரியல புறஞ்சேயன்” என்ற வைத்தியருக்கு உண்மையாகவே புரியவில்லை.
“மிசஸ். துரையரசன் லக்ஷதா, உங்க பேஷன்ட் தானே” துரையரசன் லக்ஷதாவின் கணவன்.
“ஆமா, அவங்களுக்கு என்ன இப்போ?”
“நீங்க குடுத்த ரிப்போர்ட் தப்பானது. நாங்க கண்டு புடிச்சிட்டோம். எந்த முறைல ஆக்ஷன் எடுக்கனுமோ அந்த முறைல எடுக்குறேன். போலீஸோட உங்கள வந்து பார்க்குறேன்” என்று சீற்றத்தோடு சீறினான்.
“நான் சொல்லுறத கொ..கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்” புறஞ்சேயன் மிரட்டலில் வைத்தியர் பதறினார்.
“இதுக்கு மேல என்ன இருக்கு கேக்குறதுக்கு அஞ்சு வருஷம் நீங்க சொன்னத தானே நம்புனோம். அது பத்தலயா, இதுக்கு மேலயும் நம்பணுமா, நாங்க என்ன முட்டாளா?” அவன் குரல்வளையின் சத்தம் உரக்கக் கூறினான்.
“நானா எந்த ரிப்போர்டும் குடுக்கல என்னை கொலை பண்ணுவேனு கொலைமிரட்டல் விட்டாங்க உங்க வீட்ல” என்று உண்மையை கூற முனைந்தார் வைத்தியர்.
“எது, எங்க வீட்ல கொலை மிரட்டல் விட்டாங்களா?” யார் கூறியதென்று ஒருவர் முகத்தை ஒருவர் மாற்றி பார்த்தனர்.
“ஆமா, உண்மையதான் சொல்லுறேன்” என்று அவர்கள் கூற ரஞ்சனா நழுவப்பார்க்க பியானா ரஞ்சனாவின் கைகளை இறுக பற்றினள்.
“யார், கொலை மிரட்டல் விட்டா, யார் இப்படி பண்ண சொன்னா சொல்லுங்க டாக்டர்” அனைவரும் ஆர்வமாகவும் பயத்துடன் இருக்க,
“அது… அதுவந்து..மிஸ்… ரஞ்சனாதான் அப்படி செய்ய சொன்னாங்க” மறு வினாடி அழைப்பை துண்டித்தான்.
அனைவரும் ரஞ்சனாவின் புறம் ஆக்ரோஷமான பார்வையுடன் திரும்பினர்.
***