💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 17💋

20210912_153757-6366a98e

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 17💋

அத்தியாயம் 17

 

சிற்றுந்தை(கார்)   செலுத்திக்கொண்டிருந்தவன், “இப்போ போற இடத்துல உங்க அப்பா இருப்பாருன்னு நம்புற…” என்று சந்தேகமாய் பியானாவிடம் விளம்பினான் புறஞ்சேயன். 

 

“ஏன் சார், நீங்க மட்டும் இப்படி இருக்கீங்க. நல்ல வார்த்தை எல்லாம் உங்க வாய்ல இருந்து வராதா?” என்று எரிந்து விழுந்தாள் பியானா. 

 

வினய் கூறி இவர்கள் வந்தடைந்த இடமோ  கீழ்ப்பாக்கம்  மனநல மருத்துவமனை, “சார் மென்டல் ஆஸ்பிடல்!” என்றவள் திகைத்து போனாள். 

 

“ஆமா, எதுக்கும் இங்கவும் தேடிப்பார்க்கலாம்னுதான்… வந்தோம் அப்புறம் என்ன?” என்று சாதாரணமாகக் கூறினான்.  

 

மருத்துவனைக்குள் சென்று தலைமை அதிகாரியிடம் விடயத்தை கூறி கண்காணிப்பாளருடன், தன்னை பற்றி தெரியாதவர்தகளையும், முகவரியற்றவர்களையும் பார்வையிட சென்றனர். செல்லும் வழியில் ஒரு இளம் பெண். பச்சை வர்ண உடை அணிந்து தலைவிரிக்கோலமாய் மனநல பாதிப்பில் புறஞ்சேயனை வெறித்து பார்த்தப்படி ஓடி வந்தாள். 

 

“வந்துடீங்களா, ஏன் என்னை ஏமாத்திட்டு இங்க விட்டுட்டு போனீங்க. இங்க இருக்கிறதெல்லாம் லூசுங்க. என்னைய இங்கயிருந்து கூட்டிட்டு போய் தாலி கட்டுங்க. நம்ம சேர்ந்து வாழலாம்” அப்பெண் புறஞ்சேயனின் கையை பற்றிக்கொண்டு கூறினாள். 

 

பியானா புறஞ்சேயனை பார்த்து சிரிக்க, அவனோ கைகளை தளர்த்திவிட்டு வியர்ந்து பிரம்மித்து நின்றிருந்தான். அப்பெண்ணின் நிலையை அறிந்தவன் திட்டவும் முடியாமல் பக்குவமாய் எடுத்து கூறவும் முடியாமல் சிக்கித்தவித்தான். 

 

நல்ல வேளை கண்காணிப்பாளர் வேலை ஆட்களை அழைத்து அப்பெண்னை சிறை செய்யுமாறு கூறினார். “சாரி சார், அந்த பொண்ணு கொஞ்சம் அப்படிதான்” என்றார் கண்கணிப்பாளர். 

 

“இட்ஸ் ஓகே” என்று புறஞ்சேயன் பெண்ணின் நிலையை அறிந்ததால் பெரிது படுத்தவில்லை. 

 

“ஏன் சார், அந்த பொண்ணு பாவம் தானே, வாழலாம்னு வேற கூப்பிடுது நீங்க எதுவுமே சொல்லாம இருந்துட்டீங்களே” என்று சிரித்தவாறு புறஞ்சேயனை சீண்டினாள் பியானா. 

 

“உனக்கு என்னைய பார்த்தா கிண்டலா இருக்கு, இருக்கட்டும்  இருக்கட்டும். அப்பறமா கவனிச்சிக்கிறேன்” என்று கண்ஜாடையில்  கண்டித்தான் தன்னவளை. 

 

“சார், இதுல அஞ்சு பேர் இருக்காங்க. இங்க பாருங்க அந்த பக்கமும் இன்னும் கொஞ்சப்பேர் இருக்காங்க சார். அங்கயும் போய் பார்க்கலாம்” என்று விளக்கினார் கண்காணிப்பாளர். 

 

அங்கிருக்கும் அனைவரும் மனநல குறைப்பாட்டில் பாதிப்படைந்து இருப்பதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சத்தத்துடன் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். சிறு பிள்ளை போல் விளையாடுவதும், ஆடைகளை கிழித்துக் கொண்டிருப்பதும், தனிமையில் பேசுவதும், தன்னை தானே அடிப்பதும் பிறரை கடிப்பதும் உலகை மறந்த நிலையில் செய்வதறியாது இருப்பதும் அவர்களின் பொதுவான இயல்புநிலைகள்தான்.

அதை பார்த்த பியானாவிற்கு பயத்தை மூட்டியது. பயத்தில் புறஞ்சேயனின் கையை இறுகப்பற்றினாள்.

 

“இப்போ எதுக்கு என் கைய புடிக்கிற?” என்று இதற்கு முன் அவனை கிண்டல் செய்ததை எண்ணி அவள் கைகளை தளர்த்திட விட்டான். 

 

“பயமா இருக்கு சார்” என்றவள் முழிகளை உருட்டிக்கொண்டு வாயை பிதுக்கியவாறு கூறினாள்.

 

“ஆமா…, எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே… வா, அழகாக வேற இருக்கியா, உன்னைய கடிக்கிற வேகத்துல மாறி என்னைய கடிச்சிறப்போறாங்க” என்ற வார்த்தைகள் மேலும் பயமுறுத்தியது. 

 

“சார்….!” என்று அவன் கைகளை மீண்டும் பற்றினாள். 

 

கண்காணிப்பாளர் கூறியவாறு அங்கிருக்கும் நபர்களை உற்று உற்று இருவரும் பார்க்க ஒருவருக்கும் தந்தையின் ஜாடை ஒரு துளியேனும் இருக்கவில்லை. 

 

“நாங்க தேடி வந்ததுல இவங்க யாருமே இல்ல” என்று புறஞ்சேயன் கூற அடுத்த பக்கத்தை நோக்கிச்சென்றனர். 

 

அவ்விடத்திலும் சென்று பார்த்தால் தலையில் அடிப்பட்டு சுயநினைவு இன்றி தலையில் கட்டிட்டு ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு குணப்படுத்த சிகிச்சை நடக்கும்  காட்சிகள் தனது தந்தையும் இப்படி ஒரு நிலையில் இருப்பார் என்று பியானாவை கதி கலங்க செய்தது.

 

அவள் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்த புறஞ்சேயன், “இதுக்குதான் அன்னைக்கும் தனியா போனேன்” 

 

“இவங்கள பார்க்கும் போது  டாடியும் இப்படி இருப்பாறோனு மனசு பதறுது சார்” என்றவள் கூறினாள். 

 

“அப்படி எல்லாம் இல்லாம நல்லா இருப்பாங்க. கண்டதையும் யோசிக்காத” என்று நல்வழி படுத்தினான்.

 

அடுத்து அடுத்து இருப்பவர்களை பார்த்துக்கொண்டே சென்றனர். 

மனநோயாளிகளை பார்க்கும் போது இருவருக்கும் மனதில்  வருத்ததை ஏற்படுத்தினாலும் மனதை கல்லாக்கிகொண்டனர். 

 

“சார் கடைசியா இருக்கது இவங்க மட்டும்தான்” என்றார் கண்காணிப்பாளர். 

 

இருப்பவர்களில் மூவர் மொட்டை அடித்து இருக்க இருவர் முனிவர் போல் முடிவளர்த்திருக்க அடையாளம் கண்டு கொள்வதே கடினமாய் இருந்தது.

 

உற்று உற்று சில நிமிடங்கள் பார்த்து விட்டு தந்தை இல்லை என்று அவள் மனதில் பட, “கிளம்பலாம் சார்”  என்று வருத்ததுடன் கூறினாள் பியானா.

 

“சரி” என்று இருவரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். சீருந்தின் கதவை திறந்தான் புறஞ்சேயன். 

 

தயக்கத்துடனும் சந்தேகத்துடனும் “சார் எதுக்கும் மறுபடியும் ஒரு வாட்டி பார்த்துட்டு வரலாமே!” என்று மெதுவான குரலில் கேட்டாள் பியானா. 

 

பெரும்மூச்சை இழுத்து விட்டபடி, “சரி வா…” என்று மீண்டும் உள்ளே வந்தனர். இறுதியாக பார்வையிட்ட இடத்திற்கே வந்து பார்த்தவர்களையே மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தாள் பியானா. சிறுது நேரம் அங்கு அமர்ந்திருத்து யோசனையில் மூழ்கி இருந்தாள். அவளின் மூளை சொல்வதை கேட்டு புறஞ்சேயனிடம், “இவங்களோட சட்டைய கழட்டி பார்க்கலாமா சார்?” என்று அவள் தாழ்ந்த குரலில் பணிந்தாள். 

 

“என்ன பியூ! திடீர்னு இப்படி கேக்குற, அலவ் பண்ணுவாங்களானு தெரியலயே..?” என்று தயக்கத்துடன் கண்காணிப்பாளிடம் கேட்டான். கண்காணிப்பாளரும் சரி என்றார்.

 

முனிவர் போல் இருப்பவர்களில் ஒருவரின் உடையை நீக்க மற்றொருவர் நீக்க விடவில்லை. மறுத்துக்கொண்டு வம்பிழுத்தார். ஒரு வழியாக  அவரின் கைகளை பிடித்து உடையை நீக்கினர். 

 

அவரையே உற்று பார்த்த பியானா அவரது மார்பை மறைத்த நீண்ட தாடியை அவள் கைகளால் அகற்றிப்பார்த்தாள். சிறுவயதில் இருந்து பார்த்த ஒன்று அதை இப்போது இவரின்  மார்பில் பார்க்கும் போது பதறியவள். “எங்க டாடி… கிடச்சிட்டாரு, டாடி கிடச்சிட்டாரு..!” என்று சத்தமிட்டவள் கண்களில் நீர் சிந்த ஆரம்பித்தது.  

 

“எங்கம்மா பேரு பச்சை குத்திருக்காங்க. இவங்கதான் என்னோட டாடி” சங்கீதா என்று பச்சை குத்தியிருந்த அவரது மார்பை பார்த்து தன்பாட்டில் புலம்ப ஆரம்பித்தாள். எத்தனை வருடங்கள் தந்தையை தேடியிருப்பாள் அத்தனை தவிப்பும் ஏக்கமும் அவள் கண்களில் ஆனந்த கண்ணீராய் வெளியேறியது. 

 

“டாடி, டாடி…!” என்று எத்தனை முறை  தந்தை என்று அழைத்தும் அவரிடம் இருந்த எந்த அசைவும் இருக்கவில்லை. அசைவின்றி இருக்கும் தந்தையை பார்த்த  அதிர்ச்சியில் திகைத்துப்போய் நின்றிருந்தாள் பியானா.

 

புறஞ்சேயனும், “பியூ இவங்க தான் அப்பாவா!?” என்றவனுக்கும் அதிர்ச்சிதான் என்றாலும் ஒரு வகையில் நிம்மதி. 

 

ஆமாம் என்று தலையை அசைத்த பியானா விழிகளில் நீரோட, “என்னோடு டாடி… டாடி கிடச்சிட்டாரு, டாடி, டாடா…” என்று கதறிய பியானா தந்தையை குலுக்கினாள். அவரோ அதே போல் எந்த வித அசைவும் இன்றி இருந்தார். 

 

“டா..டாடி… என்னை தெரியலயா? நான் உங்க த..தன்வி” தந்தை ஜானின் கன்னத்தை பற்றி, “உங்க தன்வி வந்துருக்கேன் டாடி என்னை பாருங்க டாடி” தந்தையோ பிரம்மை பிடித்திருக்க அவளை அடையாளம் காணாததை எண்ணி பரிதவித்து அழுதாள் பியானா. 

 

“பத்து நிமிசம் இரு” என்று  நாவிதரை அழைத்து காடாய் படர்ந்த முடியையும்  கொடியாய் தொங்கிய தாடியையும் வெட்டி மாமனாரை குளியலறைக்கு அழைத்து சென்று தூய்மை படுத்தி வேறு ஓர் ஆடையை அணிவித்து புதிய மனிதனாய் வெளியே அழைத்து வந்தான் புறஞ்சேயன். 

 

அதுவரை அங்கிருக்கும் மருத்துவரிடம் பியானா தந்தையின் உடல் நிலையை பற்றி ஆராய்ந்துக்கொண்டிருந்தாள். 

கேசம் அகற்ற நிலையான உருவம் வந்தது. பியானா தந்தையை தந்தை வடிவிலேயே பார்த்தவுடன் கட்டியணைத்தாள். “டாடா என்னைய உண்மையாவே தெரியலயா, நீங்க பெத்த பொண்ணு வந்துருக்கேன் அடையாளம் தெரியலயா டாடா?” என்றவள் தந்தையின் முன்னே இறைஞ்சி அழுதாள். 

 

“இப்போ தானே பார்த்தாரு கொஞ்சம் வெய்ட் பண்ணு” என்ற புறஞ்சேயன் தன்னவளை இதப்படுத்தினான். 

 

“இல்ல சார்,  டாடி இங்க வந்த நாள்ல இருந்து இப்படிதான் இருக்காங்களாம். அவருக்கு தேவைனா மட்டும்தான் பேசுவாங்களாம். டாடி ஏன் இப்படி இருக்காருனு டாக்டருக்கே தெரியலயாம்” என்று பல வருடங்களுக்கு பிறகு தந்தையை இப்படி ஒரு நிலையில்தான் பார்க்கவேண்டுமா என்று அழுதாள் பியானா. 

 

“இத்தன வருஷத்துக்கு அப்புறம் அப்பா கிடச்சதே பெரிசு அதை நினைச்சி பாரு. கொஞ்சம் கொஞ்சமா சரி படுத்தலாம்” என்று பல வருடங்கள் கழித்து தேடிக்கிடைக்காத தந்தை இப்போது கிடைத்ததே பெரிய வரமாய் எண்ணி ஆறுதல் அளித்தான் புறஞ்சேயன். 

 

வேர்லினுக்கு கைபேசியில் விடத்தை கூறினாள் பியானா. வேர்லினுக்கும் அளவில்லா மகிழ்ச்சிதான். தந்தை கிடைத்தார் என்பதை காட்டிலும் தமக்கை பட்டபாடு, பல வருடக்காத்திருப்பு பெண்ணாய் துணிந்து நின்ற அவளது தேடல் அநாதை என்கிற பட்டம், அத்தனைக்கும் இன்று பலன் கிடைத்தது போல் உணர்ந்தாள். இருப்பினும் அவளால் தந்தையை பார்க்க எழுந்து செல்ல முடியவில்லை. 

 

தந்தை கிடைத்ததே போதுமாய் இருந்தது மூவருக்கும். பியானா தந்தை கிடைத்த ஆனந்ததில் அவளவது கண்கள் இமைக்க மறந்து அன்பு, அக்கறை, நிம்மதி அனைத்தையும் தந்தை மீது கொட்டுவதை புறஞ்சேயனின் கண்கள் பார்க்க தவறவில்லை.

 

“எத்தன வருஷம் எங்க எல்லாம் நாயா பேயா டாடிய தேடி அழைஞ்சிருப்பேன். இப்பயாவது கடவுள் கண் திறந்தாரே” கோவிலுக்கு சென்று பூ வைத்து பார்த்தது. தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தது எல்லாம் வீண் போகவில்லை. என்று நினைத்தவள் சிலுவையிட்டுக்கொண்டாள்.

 

“அதான் அப்பா கிடச்சிட்டாரு இல்ல” என்றவனும் கடவுளுக்கு நன்றி கூறினான். 

 

“சார் டாடிய வீட்டுக்கு கூட்டிட்டு போலாம். வேற வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் சார்” என்றவள் புறஞ்சேயனின் வீட்டிற்கு அழைத்து செல்ல விரும்பவில்லை. 

 

“வீடெல்லாம் நான் ஏற்பாடு பண்ணுறேன். டாக்டர் கிட்ட பேசிட்டு கூட்டிட்டு போகலாம்” என்று மருத்துவரிடம் வந்து அழைத்து செல்லதற்கு அனுமதி கேட்டனர். 

 

“நோ நோ…, அவங்களுக்கு காடியன் இருக்காங்க. அவங்க தான் இங்க சேர்த்துவிட்டாங்க. அவங்க கிட்ட கேட்காம உங்க கூட அனுப்ப முடியாது” என்று மறுத்தார் மருத்துவர்.

 

“அவங்க யாரு, பார்க்கலாமா டாக்டர்?” என்று பதற்றத்துடன் கேட்டாள் பியானா.

 

“அவங்க ஒரு விஐபி, காடியன பத்தி டிடைல்ஸ் எதுவும் வெளிய சொல்ல வேணாம் சொல்லிக்காரு. வெய்ட் பண்ணுங்க கேட்டு சொல்றேன்”  

 

மருத்துவரிடம் “சரி” என்று கூறிவிட்டாள். மருத்துவரும் தந்தையை மனநல மருத்துவமனையில் சேர்த்தவருக்கு  தொலைபேசியில் அழைப்பை விடுத்தார்.

 

 புறஞ்சேயனிடம், “பயமா இருக்கு சார்” என்றாள் பியானா.

 

“என்ன பியூ.., இப்போ உனக்கு பயம், அப்பாவே கிடச்சாலும் உன்ன புடிச்ச பயம் உன்ன விட்டு போகாதா?” என்று தந்தை கிடைத்த பிறகும் பியானா பயப்படுவதை அவன் விரும்பவில்லை. 

 

“இல்ல சார், காடியன் ஒரு வேளை சித்தப்பாவா இருந்தா அதான் பயாமா இருக்கு சார்” 

 

“பார்க்கலாம். நல்லதையே நினை ஓகே” என்று அவளை பார்த்து தலையை ஆட்டினான். 

 

மருத்துவர் தொலைபேசியில் உரையாடலை முடித்து விட்டு, “மிஸ் அவங்க நாளைக்கு வாராங்களாம்” 

 

“ஓகே டாக்டர்” என்றவள் மனதில் அத்தனை பயம் சிற்றப்பனை நினைத்து ஊசலாடியது. 

 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!