💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 19💋

eiHO4LK40803-5267fa5c

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 19💋

அத்தியாயம் 19

தன்னவனுக்கு செல்லப்பெயர் யோசிக்க மூளையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தாள்.

“பேர் சொல்லுவேன், பிடிக்கலனா மறுபடியும் எதுவும் செல்லப்பேர் வைக்க மாட்டேன்” என்று தீவிரமாக கூறினாள். 

“சரி சரி எதுவும் சொல்ல மாட்டேன்.  நீ எனக்கு வச்ச செல்லப்பேர சொல்லு பியூமா” என்று இறைஞ்சி நின்றான். 

“வெளிய இருக்கும் போது சேய்னு கூப்பிடுவேன். தனியா இருக்கும் போது சேய்யூனு கூப்பிடுறேன் ஓகேவா” என்று கூறிவிட்டு, ‘செல்லப்பேருக்கு மீனிங்க் கேப்பாரோ” என்று முழித்துக்கொண்டிருந்தாள்.

“ஏய்! பியூ, சேய்யூ, சூப்பரா இருக்கு. என் செல்ல பொண்டாட்டி” என்று அவள் கன்னங்களை பற்றிக் கொஞ்சினான். 

“சரி இப்போ நான் போகலாமா, கைய எடுக்குறீங்களா?” என்று அவன் கைவளைவுகளில் இருந்து விடுபட முயன்றாள். 

“சீக்கிரமா கைய எடுக்கத்தான் இறுக்கி பிடிச்சேனா?” என்று சொக்கும் விழி பார்வையிலே பாவையை பார்த்து சொக்கிபோய் நின்றான். 

“இடுப்புல கூச்சம் இருக்கு ப்ளீஸ் கைய எடுங்க” நாணத்தால் இறைஞ்சினாள். 

“அப்படியா! உன்ன பார்த்தா கூச்சப்படுற மாதிரி தெரியலயே?” என்று பாவையை பரிதவிக்க வைத்தான். கூச்சம் இருப்பதாக கூறியதால் கூச்சம் மூட்டினான்.  அவளும் கலகலவென்று சிரித்தாள். 

“போதும் சார் சிரிக்க முடியல” சிரிக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தாள். 

“செல்லப்பேர் சொல்லி கூப்பிடு அப்போதான் விடுவேன்” என்றவன் கூறிக்கொண்டே கூச்சமூட்டினான். 

“சேய்யூ, ப்ளீஸ் சேய்யூ விடுங்க” என்று இறைஞ்சினாள். 

கூச்சமூட்டுவதை நிறுத்தி விட்டு, “சேய்யூ ஓகே. வாங்க, போங்க, விடுங்க இதெல்லாம் விட்டுட்டு. வா, போ, விடு இப்படி உரிமையோட பேசுனும்” என்று அன்பும் ஆசையுமாய் கட்டளையிட்டான். 

“டிரை பண்றேன் சேய்யூ” என்று தன்னவன் மிடுக்கு பொருந்திய மீசையை ஆட்டிப்பிடித்துக் கூறினாள். 

“ஏய், ஏய்! மீசைல கை வைக்காத. வலிக்குது பியூ” அவள் பிடியிலிருந்து விடுபட்டான். 

“அடிப்பாவி கெத்தா முறுக்கி வச்ச மீசைய இப்படி கவுத்துட்டியே!” என்று மீசையை முறுக்கிக்கொண்டு அவளை பிடிக்க போக, 

அவள் அறையின் கதவை தாண்டி வெளியே வந்து, “சமைக்கப்போறேன் சேய்யூ பாய்” என்று படிக்கட்டில் இறங்கினாள். 

படிக்கட்டில் ஒவ்வொரு பதங்கள் பதிக்க, இவ்வளவு நேரம் தன்னவன் நடத்திய ஊடல்களை எண்ணி தனக்குள்ளேயே நாணித்து சிரித்தாள். யாராவது பார்த்தால் கேலிக்கை இடம் பெறுமென்று தன் தலையை தானே தட்டி சுதாரித்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். 

பியானா நுழையும் வரை செல்வம் அங்கு வரவில்லை. பியானாவை கண்டவுன் செல்வமும் உள்ளே நுழைந்தார். 

உலையை கொதிக்க வைத்து காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள் பியானா. செல்வத்தை பார்த்து, “அத்தை நான் சமைக்கிறேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்றாள் பண்பாய் கூறினாள். 

“என் மகள காப்பாத்தினதுக்காக எல்லாம் கண்டதுகளையும் எம்மருமகளா ஏத்துக்க முடியாது  இந்த வீட்டுக்கு மருமகளா வராத்துக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும்!” என்று இழிவுபடுத்தினார். அத்தனை அவமானங்கள் பட்டும் புத்தி வராதது ஒன்றுதான் குறை செல்வத்திற்கு, இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதனை உணராது அப்படி சொன்னார். 

“உங்களுக்கும் ஒருநாள் மனசுமாறும் அத்தை” என்று அவர் கூறிய வார்த்தைகளை கேட்டு மனம் தளராமல் திடமாய் கூறினாள். 

“ம்க்கும்” என்று ஒரு புறம் உதட்டை இழுத்துவிட்டு சென்றார் செல்வம். 

எல்லாவற்றையும் முன்பு போல் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. சமைப்பதில் மும்முரமாய் இருந்தாள். லக்ஷதாவிற்கு இன்னும் சில நாட்களில் இதயத்தில் சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதால் அவளுக்கும் வேர்லினிற்கும் ஏற்றாற்போல் காரமின்றி உணவை தனியே செய்தாள். 

தனியே சமைப்பதை பார்த்து பாட்டியின் மனம் பொறுக்காமல் அவரும் இணைந்துகொண்டார். 

பாத்திரங்களை கழுவுவதற்கு ஆயத்தமானார். “ஐய்யோ பாட்டி! நீங்க இதெல்லாம் செய்ய வேணாம்” என்று அவள் கூறினாள்.

“நீ சும்மா இரு. நான் பார்த்துட்டுதான் இருக்கேன். எல்லா வேலையும் நீயே இழுத்து போட்டு செய்ற, நீ இவ்ளோ வேலை செய்யாத. பாரமான ஜாமான் எல்லாம் தூக்ககூடாது” என்று அவளுக்கு புத்திமதிகளை கூறினார் பாட்டி. 

“நான் எப்பவும் போலதானே வேலை செய்றேன். அதுல என்ன பாட்டி இருக்கு?” என்றவள் சாதாரணமாக கேட்டாள். 

“பாட்டி சொன்னா அதுல பக்குவமா பத்து விஷயம் இருக்கும். சொல்லுறத கேக்கனும் அதவிட்டுட்டு ஆராய்ச்சி பண்ணாத. என் பேரன் ரூம்ல தனியா இருப்பான். அவன் கூட பேசிக்கிட்டு இரு. இப்போ ரூமுக்கு ஓடு அப்புறமா வந்து சாப்பாடு கொண்டு போ” என்று பாட்டி மென்மையாய் பாசமாய் அதட்டினார். 

கிழவிக்கு குழவியை கொஞ்சும் ஆசையில் இவர்கள் கொஞ்சி விளையாடுவார்கள் என்று பியானைவை அறைக்கு அனுப்பி வைத்தால்,  இவள் குழந்தையாய் இருக்க, அவன் பல்லை காட்ட அதற்கே நேரம் முழுவதும் செலவாகிவிடும்.  

“என்ன அவ்ளோ சீக்கிரம் சமச்சிட்ட?” என்றவன் கேட்டான். 

“சமையல் முடிச்சிட்டேன் சேய்யூ. பாட்டிதான் சொன்னாங்க நீங்க தனியா இருப்பீங்க. நீயும் போய் என் பேரன் கூட பேசிட்டு இருனு அனுப்பி வச்சிட்டாங்க” மீதி வேலையை பாட்டி செய்வதாக கவலையுடன் கூறினாள். 

“அப்பாயிக்கூட என் நிலமை புரியுது. உனக்குதான் புரியல” என்று தன்னிலையை அப்பாவி போல் முகத்தை வைத்து  கூறினான். 

“இன்னும் ஒரு கொஞ்சநாள் டைம் குடுங்க சேய்யூ ப்ளீஸ்” என்று தன்னவனிடம் இன்னும் சில நாட்கள் காத்திருக்குமாறு கோரினாள். 

“எது வரைக்கும்! உங்க அப்பாக்கு பழைய ஞாபகம் வரும் வரைக்குமா?” என்று அவன் கேட்க, 

“சேய்யூ!” என்று ராகம் இழுத்தாள். 

“நமக்கு ஒரு குழந்த பொறந்தா எல்லாம் சரி ஆகிரும். உன்ன மாதிரி கொடமிளகா மூக்கோட பொறக்கும், பேபிய பார்த்ததும் உங்க அப்பாக்கு உன்ன சின்ன வயசுல பார்த்ததெல்லாம எல்லாம் ஞாபகம் வந்துரும்” என்று அவளை சீண்டினான்.

“உங்கள மாதிரி பேபி பொறந்துட்டா என்ன பண்றது?” என்று சந்தேகமாய் கேட்டாள். 

“இல்ல உன்ன மாதிரிதான் பிறக்கும்” என்றவன் உறுதியாய் கூறினான். 

“ஃப்ர்ஸ்ட் பேபி டாடி மாதிரி பிறக்கும்னு சொல்லுவாங்க. நீங்க என்னைய ஏமாத்தாதீங்க” அவளும் உறுதியாய் நின்றாள். 

“சரி உனக்கும் வேணாம். எனக்கும் வேணாம். நீ சரினு சொன்னா எண்ணி பத்தே மாசம் குழந்த யார மாதிரி இருக்குனு பார்க்கலாம்” என்றவன்  தந்திரமாய் கண்களை சிமிட்டி பூவையை தன்னுள் பூட்டிட பார்த்தான். 

“சேய்யூனு கூப்பிடாம கேடினு கூப்பிடட்டுமா?” அவன் தந்திரம் அறிந்ததால் பூவை பூட்டில் மாட்டிக்கொள்ளாமல் அப்படி கேட்டாள். 

பல்லை காட்டியவன், “சரி சரி நீ புத்திசாலிதான் நான் கேடினு ஒத்துக்கிறேன். பசிக்குது பியூ சாப்பாடு எடுத்துட்டு வாரியா?” 

“ஓகே சேய்யூ” என்று சமையல்கட்டுக்குள் நுழைந்து சாதம், வஞ்சிர மீன் வறுவல், பருப்பு பச்சடி, ரசம், பொரித்த அப்பளம்  எல்லாவற்றையும் ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். 

தன்னவனுக்கு அன்போடு அன்னத்தை கொடுத்தாள். “பியூ வஞ்சிர மீன் வறுவல்தானே! வாசனையே தூக்குது…” என்று வாசனையை மூக்கால் நன்கு உறிஞ்சி இழுத்தான். 

அத்தனை ஆவல் நாவின் சுவை அரும்புகள் ஊற ரசித்து ருசித்து உண்ண ஆரம்பித்தான். தன்னவள் அன்னம் அருந்தினாளா இல்லையா? என்று கேட்காமல் தன்பாட்டிற்கு உண்டான். அவள் நின்றுக்கொண்டு இருப்பதை பார்த்து, “நீ சாப்பிடலயா பியூ?” 

“நீங்க ஊட்டி விடுவீங்கனு பார்த்துட்டு இருந்தேன் சேய்யூ. நீங்க பசில சாப்பிடுறீங்க சோ நான் டிஸ்டார்ப் பண்ணல” என்றவள் தன்மையாய் கூறினாள். 

தன்னவள் கூறும் வார்த்தைகளை கேட்டு, ‘அன்னைக்கு ஊட்டினத வச்சி இன்னைக்கும் ஊட்டிவிடுவேனு நினைச்சிட்டா போல. நான் ஏமாத்தீட்டேன்’ மனதளவில் நொந்தான். 

“சாரி டா மா. புருசன மன்னிச்சிக்கோ எவ்ளோ ஆசையா இருந்து இருக்க. நான் அதை கவனிக்காம சாப்பிட்டுருக்கேன். சாரி டா” 

“இதுக்கெல்லாம் சாரி கேப்பானா யாரும், பொண்டாட்டி பொண்டாட்டினு சொல்லுறீங்க, அப்புறம் எதுக்கு சாரிலாம் கேட்கனும்?” என்று அதை தவறாக எண்ணவில்லை அவள். 

“விட்டா இப்படியே பேசிக்கிட்டே இருப்ப” என்று அவள் கைகளை பிடித்து அமரச்செய்து அமுதூட்டினான். 

இருவரின் உதரங்கள் உணவருந்தி நிறைந்திருக்க, “சேய்யூ, டாடிக்கும் லஞ்ச் எடுத்து வச்சிருக்கேன். வஞ்சிர மீன் ரொம்ப புடிக்கும்” தந்தைக்கு பிடித்தமான உணவை தான் மட்டும் தனியே உண்டு மகிழ ஆசையில்லை. 

 

“என்ன பியூ இப்படி சொல்ற? நம்ம சாப்பிட முதல் கொண்டு போய் குடுத்திருக்கனும்” என்று அவன் வருந்தினான். 

“நம்ம சாப்பிட முதல் எடுத்து வச்சிட்டேன்” 

“பேசிக்கிட்டு இருக்காம சீக்கிரமா கிளம்பு” மனநல மருத்துவமனையில் உணவு வேளை முடியும் முன் கிளம்பினர்.

****

வரிசையில் உணவு உண்ண அமர்ந்திருந்தார் ஜான்.  தனியே அவரை மட்டும் அழைத்து வந்து மரநிழலில் அமர வைத்து, “டாடி, உங்களுக்கு புடிச்ச வஞ்சிரமீன் வறுவல் சாப்பிடுங்க” என்று உணவை புகட்ட அவள் கையை தந்தையின் வாய் அருகே எடுத்துச் சென்றாள். 

ஒருமுறை அவளை நன்கு பார்த்துவிட்டு என்ன நினைத்தாரோ  தெரியவில்லை? பியானாவின் கையில் இருக்கும் உணவை மறுக்காமல் உண்டார். 

தன் கையால் புகட்டிய உணவை  தந்தை மறுக்காமல் உண்டது அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு, 

புறஞ்சேயனுக்குத்தான் இதில் சந்தேகம் எழுந்தது. ‘யாரையுமே தெரியாது.  பிள்ளைங்களே இல்ல. அப்புறம் எதுக்கு பியானா ஊட்டும் போது சாப்பிடனும்!’ என சில கேள்விகள் அவனை நெஞ்சை கிளறியது. 

அன்னம் புகட்டி முடிய தந்தைக்கு சிறு குழந்தை போல் வாயை துடைத்துவிட்டாள். 

“சார், நீங்க இந்த மாதிரி அடிக்கடி வந்து பார்க்குறதும், சாப்பாடெல்லாம் கொண்டு வந்து குடுக்குறதும் மத்தவங்களுக்கு ஏக்கமா இருக்கும். உங்கள மாதிரி யாரும் அடிக்கடி வந்து பார்க்கமாட்டாங்க. அவங்களும் பாவம் சார். டாக்டர், நீங்க அடிக்கடி வந்து பார்க்குறதையும் இந்த மாதிரி சாப்பாடு குடுக்குறதையும் கொஞ்சம் குறைக்க சொன்னாரு” என்று தன்மையாய் கண்காணிப்பாளர், புறஞ்சேயனுக்கு கூற, பியானா அருகிலிருந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். 

“ஓகே சார், இனி நாங்க அடிக்கடி வரமாட்டோம்” என்று தாழ்மையுடன் கூறினான் புறஞ்சேயன். பியானாவின் விழிகள் பிதுங்கின. 

“அவங்க சொல்லுறதும் சரிதான் சேய், மத்தவங்களுக்கும் ஏக்கமா இருக்கும்” உண்மையை உணர்ந்துகொண்டாள் பியானா.

“நம்ம இனி எல்லாருக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வரலாம்” என்றான் புறா. 

“ஓகே சேய்!” என்று அத்தனை மகிழ்ச்சி பியானாவின் மனதில்.

பியானா தந்தையிடம் இனி அடுத்த வாரம் வருவதாக அவள் கூற, அவரோ பிரம்மை பிடித்தவர் போல் இருந்தார். 

தந்தையிடம் விடைப்பெற்று சிற்றூந்தில் குந்தியவள், “சேய்யூ ஷோப்பிங்க் போகலாமா?” என்று கண்களை குறுக்கி செல்லக்குரலில் கேட்டாள். 

“ஓ.. போகலாமே! என்ன அதிசயம் ஷோப்பிங்க் குப்பிடுற?” என்று ஆச்சயர்த்துடன்தான் கேட்டான். 

“இல்ல சேய்யூ, டாடிக்கு நான் சாப்பாடு ஊட்டி விட்டேனா அதுதான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். டாடி கிடைக்கிற வரைக்கும் சாக்லெட் சாப்பிட கூடாதுன்னு இருந்தேன். இப்போது டாடி கிடச்சிட்டாரு, இப்போதுதான் எனக்கு சாக்லெட் ஞாபகம் வந்துச்சு. அதான் ஷோப்பிங்க போயிட்டு வரலாம்” 

“ஒரு சாக்லெட் வாங்கி தர  கேக்குறதுக்கு, ஏன் இவ்ளோ அலப்பறை பண்ற?” 

பியானா தன்னவனை முறைக்க, “சரி சரி, வாங்கித்தாரேன்” அவள் முறைப்பின் கேலிக்கை தாங்காமல் அப்படி விளம்பினான். 

பேரங்காடியில் வண்டியை நிறுத்தி இருவரும் வெவ்வேறு பக்கமாக சென்று தேவையான பொருட்களை வாங்க தொடங்கினர். புறஞ்சேயன் பியானாவுக்கு பரிசளிக்க சில பொருட்களை எடுத்தான். 

சில மணிநேரம் கழித்து பியானா அழைப்பை விடுத்து புறஞ்சேயனை அவள் இருக்குமிடத்திற்கு வரச்சொன்னாள். 

அவள் இருக்குமிடத்தை தேடிப் பிடித்து வந்து பார்த்தால்! அவள் கையில் இருக்கும் பைகள் நிரம்ப நிரம்ப கோகோ மிட்டாய்கள். “ஏன் பியூ, இவ்ளோ சாக்லெட்?” 

“ரெண்டு ஆசிரமத்துக்கு, ஒன்னு எனக்கு” என்று பவ்யமாக கூறினாள். 

“என்னாது, ஒரு பேக் ஃபுல்லா உனக்கா?” அத்தனையும் உண்டால் என்னாகிவிடும் என்று அவளை பார்த்தான். 

“ஆமா சேய்யூ. டெய்ரி மில்க், கேர்ட்பெரி, டோப்லரோன், நெஸ்லே, பார்லே, அமுல், லோடஸ், மார்ஸ் எல்லா ஃப்ளேவர்ஸ்லயும் மூனு மூனு சாக்லெட் அவ்ளோதான்!” 

“மனசுல பேபினு நினைப்புத்தானு உனக்கு” என்றவன் பெருமூச்சை இழுத்துவிட்டான். 

“நானும் பேபிதான் சேய்யூ, குழந்த பேபி இல்ல. கொஞ்சம் வளர்ந்த பேபி” என்றவள் அவனை பார்த்து கண்ணடித்தாள்!

“அப்படியா! கொஞ்சம் வளர்ந்த பேபி, மீதிய வீட்டுக்கு போய் கன்டினியூ பண்ணுவோம்” வீட்டில் இப்படி எல்லாம் பேசமாட்டாள். வெளியே வந்து வேணுமென்று சீண்டிகிறாளென்று எண்ணினாள். 

வீட்டிற்கு வந்தவர்கள். களைப்பில் சிறிது நேரம் வியர்வை அடங்க அமர்ந்திருந்தனர். பியானா குளியலை முடித்து வந்திருக்க அதன் பின் புறஞ்சேயன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான். 

இங்கு பியானாவோ கோகோ மிட்டாய் வேட்டையில் வேட்கையோடு இறங்கிக்கொண்டாள். 

குளியலறைக்கு சென்றவன், “குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்” என்ற பழைய பாட்டை பாடிக்கொண்டு குளியலை முடித்தான். 

பனியனும் காற்சட்டையையும் மாட்டிக்கொண்டு மீதியை தொடர்ந்தான். “நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள சுகம் மெல்ல மெல்லவே புரியும் நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள சுகம் மெல்ல மெல்லவே புரியும்” 

அவன் குரலை தாண்டி பியானாவின் குரல் குறுக்கிட்டது. 

“கிஸ் மீ, கிளோஸ் யூர் ஐஸ்,

மிஸ் மீ, கிளோஸ் யூர் ஐஸ், 

ஐ கென் ரீட் யூர் லிப்ஸ் ஆன் யூர் ஃபிங்கர்டிப்ஸ்,

ஐ கென் ஃபீல் யூர் ஸ்மைல்,

கம் ஆன் மை லிப்ஸ்…” என கட்டிலில் அமர்ந்து கையில் சாக்லெட்டை சுவைத்து சுவைத்து கண்களை மூடி பாடிக்கொண்டிருந்தவளை கண்டு,  தரையில் மண்டியிட்டு அவளையே உற்று பார்த்தான். 

உன் கண்களை மூடு நான் உன்னை முத்தமிடுகிறேன். உன்னை முத்தமிடுகையில் நான் என்னை இழக்கிறேன். உன் உதடுகளை நான் வாசிக்க என் விரல் நுனியில் உன் புன்னகையை நான் உணருகிறேன். உன் கண்களால் அந்த மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன். 

அவள் மீண்டும் கண்களை மூடியவாறு, “ஐ கென் ரீட் யூர் லிப்ஸ்…” என்றொரு சாக்லெட் துண்டை சுவைத்தாள். வாயை சுற்றி சாக்லெட் அங்கங்கே ஒட்டி கிடக்க நாவால் சுழற்றி எடுத்து சுவைத்தாள். 

அவள் செய்கையில் உமிழ்நீரை விழுங்கியவன். “நீ எங்க ரீட் பண்ண போற? நான், ஐ கென் நீட் யூர் லிப்ஸ்” என்று மெதுவான குரலில் கூறி அவள் எதிர்பாராத விதமாக அவன் இதழோடு அவளிதழ்களை சிறை செய்தான்.  

கண்களை முடியிருந்தவள், முத்ததில்  திடுக்கிட்டு கண்களை திறந்து, இமைகள் பட்டாம்பூச்சி போல சிறகடிக்க புறஞ்சேயனை தள்ளிவிட்டு பெருமூச்சை வாங்கினாள். 

சாக்லெட் கலந்த அந்த இதழ் சிறை  தேன் போல் அத்தனை தித்திப்பும் திகட்டாத இன்பமுமாய் இருந்தது அவனுக்கு. “இப்படி பண்ணாத பியூ ப்ளீஸ், முப்பது வயசு ஆக போகுது முழுசா ஒரு லிப் லாக் பண்ணவிடு,  ஃபர்ஸ்ட் லிப் லாக் ப்ளீஸ்!” என்று  பாவையிடம் பணிந்தான்.

பாவையோ பளிங்கு சிலையாய் அசைவின்றி தன்னவனை கண்களால் விரித்துப்பார்க்க, மீண்டும் அவன் இதழோடு  இதழ் பதித்தான். சில வினாடி வரை நீண்டது. இருவருக்கும் அனுபவித்த  ஒரு புது உணர்வு. இப்போது குழந்தையாய் இருந்தவள் குமரியானாள். 

“பியூ மா, ஹனிமூன் போலாமா?” என்று அவளை ஈர்க்கும் குரலில் கேட்க, அவள் நாணத்தால் தலை கவிழ்ந்தாள். 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!