💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 26💋

mt41ua-524d9ae8

அத்தியாயம் 26

இத்தனைநாள் புறஞ்சேயனாய் இருந்தவனுக்கு இப்போது தந்தையாய் பதவிப்பிரமாணம்  கிடைத்ததை நினைத்து வானில் இறக்கையின்றி பறந்திட ஆசை. 

“ஏன் பியூ இத்தன நாள் எங்கிட்ட சொல்லாம மறச்ச, நமக்கு பேபி பொறக்கப்போறது எவ்ளோ நல்ல விஷயம், எவ்ளோ சந்தோசமான விஷயம்” 

அவன் பிடியிலிருந்து விலகியவள், “ஹா, எனக்கு பிரீயட்ஸ் வரலன்னு சொன்னேன். அதுக்கு நான் என்ன பண்ணனு கேட்டுட்டு போனீங்க!”

“ஏய், சாரி மா ச்சே! கோபத்துல அப்படி பண்ணிட்டேன் பியூமா. 

இந்த மாதிரி நேரத்துல உன்னை ரொம்ப கஷ்டப்படுததிட்டேன்ல சாரி டா மனசே ஒரு மாதிரி” 

“ஆமா ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்க சேய். பேபிக்கு இப்போ ஒன் மந்த்” என்றவள் வேறு எந்த பரிசோதனையை மாத்திரையோ எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறிமுடிக்கும் முன், அவள் உண்ட வெதுப்பி குமட்டலை ஏற்படுத்த வாயைப் பொத்திக்கொண்டு குளியலறைக்கு ஓடினாள். 

செய்வதரியாது அவனும் அவள் பின்னே ஓடினான். “பியூமா என்னாச்சு, ஆஸ்பிடல் போலாமா? இல்ல டாக்டர வர சொல்லட்டுமா?” 

வாந்தி எடுத்து முடிய நீர் அருந்தி வாயைத் துடைத்தவள், “இல்ல சேய்யூ இது நார்மல்தான்” 

“வாமிட்டிங்க நார்மல்தான் இருந்தாலும் கொஞ்சம் பயமா இருக்கு மா. வேர்லின்கிட்ட சொல்லிருந்தா அவளே மாத்திரை குடுத்திருப்பாளே!” என்றான் அவன். 

“உங்கக்கிட்டதான் முதல்ல சொல்லனும்தான் வேற யார்க்கிட்டவும் சொல்லல” 

“ரொம்ப தப்புப் பண்ணிட்டேன்” என்று அவள் முன்ன மண்டியிட்டு அவள் கால்களை கட்டியணைத்து வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முத்தமிட்டான். 

“இது பாத்ரூம் ஃபர்ஸ்டு எழும்புங்க”

“பாத்ரூமா இருந்தா என்ன, டாய்லட்டா இருந்தா என்ன, என் பொண்டாட்டியோட காலடி எனக்கு சொர்க்கம்” எழுந்து நின்றவன்,

“ஐ லவ் யூடா தங்கம். குட்டி தங்கத்துக்கும் சேர்த்து” 

“சேய்யூ, ஒரு மாசமா ரொம்ப  எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? உங்களோட லவ், ஹக், கிஸ் எல்லாமே மிஸ் பண்ணேன்” என்று அவள் கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள். 

“பியூமா பியூமா, அழாதமா, ப்ளீஸ்மா. புள்ளத்தாச்சு பொண்ணு அழக்கூடாது டா” 

“நீதானே அழ வச்ச போடா!” என்று துடுக்குத்தனமாய் கூறினாள். கர்ப்பமாக இருப்பதை கூறிவிட்டு கெஞ்சவிடலாம் என்று எண்ணினாள். ஆனால், கெஞ்சவிட முடியவில்லை. கொஞ்சவிடத்தான் முடிந்தது அவளால்.

“வேணும்னா தோப்புக்கரணம் போடட்டுமா பியூமா?” 

“கண்டிப்பா பனிஷ்மண்ட் உண்டு. பட் இப்போ வேணாம். எனக்கு போர் அடிக்கும் போது சொல்றேன். இப்போ கீழ போய் எல்லாருக்கும் சொல்லுவோம் சேய்யூ. நான் முதல்ல லக்ஷு அக்காக்கிட்டதான் சொல்லுவேன் ஓகே” 

“சரி டா. இனி எல்லாம் உன் விருப்பம்தான். நான் வினயிக்கு சொல்லிட்டு வாரேன்” உடனே வினய் அழைப்பை விடுத்து விஷயத்தை கூறி, வினயின் வாழ்த்தையும் பெற்றுக்கொண்டான். வினயின் அன்னைக்கு தெரிவிக்குமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். 

கீழே வந்தனர் இருவரும் நேராக லக்ஷதாவின் அறைக்கு சென்று அந்நற்செய்தியை வெட்கத்துடனும் தயக்கத்துடனும் கூறினாள் பியானா.

“ஐய்யோ, எனக்கு கையும் ஓடல காலும் ஓடலயே! இருங்க நான் சக்கரைய எடுத்துட்டு வாரேன்” என்று ஓடிச் சென்று எடுத்து வந்து சக்கரை அள்ளி இருவர் வாயிலும் திணித்தாள். 

“ஏதோ, எனக்கு குழந்தை பொறக்குற மாதிரி ஃபீல்” என்று ஆர்வத்தில் கூறியவளின் முகம் கூம்பியது. 

பியானா, லக்ஷதாவின் கையை பிடித்து பியானாவின் வயிற்றில் வைத்து, “இது உங்க குழந்ததான் கா. எங்கிட்ட வளருது. அவ்ளோதான்! பெத்ததும் உங்கக்கிட்ட குடுத்துருவேன்” 

“என்னையும் மதிச்சு முதல்ல எங்கிட்ட சொன்னதுக்கு ரொம்ப நன்றி பியானா” என்று கட்டியணைத்து தனது மகிழ்வை தெரிவித்தாள். 

“அக்கா நீதான் எல்லார்க்கிட்டவும் சொல்லனும்” என்றான் புறஞ்சேயன்.

“இதோ எல்லாரையும் ரூம்முக்கு கூட்டிட்டு வாரேன். இரு” 

பியானா கர்ப்பவதியாக இருப்பதை கூறி எல்லோரையும் அழைத்து வந்தாள். பாட்டிக்குதான் அளவில்லா ஆனந்தம், “எங்க எங்க என் பேத்தியா காணோம். எல்லாரும் விலகுங்க” என்று பியானா அருகில் சென்று அவள் முகத்தை வருடி சொடுக்கிட்டார். 

வேர்லினுக்கு சிற்றன்னையாக பதவி உயர்வு கிடைத்தது பேரனந்தம், “அக்கி சோ ஸ்வீட்” என்று கன்னங்களை பற்றி கொஞ்சி அன்பை வெளிக்காட்டும் வகையில் கட்டியணைத்தாள். 

“வீட்டுக்கு பேரனோ பேத்தியோ வந்துட்டா போதும். பிசினஸ் எல்லாம் தூக்கிப்போட்டு வீட்டுலயே இருப்பேன்” என்று கழிப்புரைந்தார் புகழ்முரசன். 

செல்வத்தின் முகத்தில் சந்தோசமே தெரியவில்லை. முசுடாய் இருந்தது அவர் முகம், ‘இது ஒன்னுதான் கேடு’ 

“அம்மா எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. ஏன்மா நீங்க மட்டும் உர்ருனு இருக்கீங்க?” என்று வினா தொடுத்தாள் லக்ஷு. 

“நான் செவனேனு இருக்கேன். என்னைய சும்மா சீண்டிப்பார்க்காத?” என்று எச்சரித்தார் செல்வம்.  

“அது ஒன்னுமில்ல லக்ஷதா. அவ கிழவி ஆகிட்டானு ஃபீல் பண்றா போல” என்று வம்பிழுத்தார் பாட்டி. 

‘ஆமா இவங்க குழந்த பெத்துக்கலனா மட்டும் நான் குமரியவே இருப்பேனா? இப்பவே பாதி மூஞ்சு முத்தி போச்சு மீதி மூஞ்சு வத்தி தொங்கிப்போச்சு’ என்று மனதில் கருவினார். 

“டேய் தம்பி, இதுக்கப்பறம் மாடி ரூம்ல இருக்க வேணாம். கீழ ரூம்ல இருங்க. நான் மேல இருக்கேன்” 

“சரிக்கா” 

“அக்கி எப்போ ஸ்கேன் பண்ணபோற?” என்று வேர்லின் கேட்டாள்.

“என்னாது ஸ்கேனா, அதெல்லாம் இப்போ பண்ணக்கூடாது. மூனுமாசம் ஆகனும். ஒரு அவசரமும் இல்ல. பொறுமையா பண்ணலாம்” அக்கால வழக்கத்திலிருந்து மாறாமல் இருக்க அப்படி கூறினார் பாட்டி.

“ஐயோ பாட்டி, அதெல்லாம் பழைய காலம். இப்போ மூனுநாள்ல கூட ஸ்கேன் பண்ணலாம்” 

“அப்படிங்கிற! அப்போ இரு நல்லநாள் பார்த்து சொல்லுறேன். 

செல்வோ காலண்டர் எடுத்துட்டு வா” என்றார் முத்தாயி பாட்டி. 

வேண்டா வெறுப்பாய் பஞ்சாங்கத்தை கொண்டுவந்து கொடுத்தார் செல்வம்.

“நாளைக்கு காரிக்கிழமை, நாலுநாள் கழிச்சு புதன்கிழமை போயிட்டு வாங்க” 

“சரி அப்பாய்” என்றான் புறஞ்சேயன்.

“குழந்த பொறக்குற வரைக்கும் நீ எந்த வேலையும் செய்ய வேணாம். எல்லா வேலையும் செல்வம் பார்த்துக்கிட்டும்” 

“பாட்டி என்னால சமைக்க முடியும். முடியலனா அத்தை சமைக்கட்டும்” 

“சரி டா கண்ணா. உடம்ப கஷ்டப்படுத்தி எந்த வேலையும் பார்க்க  வேணாம். பார்த்து சூதானமா வேலை செய்யனும்” என்று அறிவுரை வழங்கினார். 

‘சரி’ என்று பியானா கூற, அடுக்களைக்குள் நுழைந்த செல்வமோ பியானாவை அழைக்க, பியானா அடுக்களைக்குள் சென்றாள். 

“என்னத்தை கூப்பிட்டீங்க” 

“ரொம்ப ஆசையா இருக்காத சந்தோசப்படாத, என் பொண்ணு குழந்த பெத்துக்காம நீ எப்படி பெத்துக்கிலாம். அவ மனசு நோகாதா, மரியாதையா கலைச்சுரு” என்று  மெதுவான குரலில் அதட்டினார் செல்வம்.

“என்னத்தை சொல்லுறீங்க. லக்ஷதாக்கா எவ்ளோ சந்தோசப்பட்டாங்க தெரியுமா?” லக்ஷதாவிற்கு மற்றட்ட மகிழ்ச்சி. பொறாமை கொள்ளும் மனதை கடவுள் அவளுக்கு படைக்கவில்லையே!

“அவ அப்படித்தான் சொல்லுவா, உள் மனசு நோகுதோ எண்ணமோ?”

“குழந்தைய கலைக்கச் சொல்லுற மாமியார இன்னைக்குதான் பார்க்குறேன்” என்றவள் மெலிதான குரலில் கூற கண் கலங்கியது. 

“இந்த கருவ கலைச்சாதான். நான் உன்ன என் மருமகளா ஏத்துப்பேன்” 

சற்று நேரம் சிந்தித்தவள், “நீங்க என்னைய மருமகளா ஏத்துக்க வேணாம். இது எங்க உரிமை, எங்க குழந்தை. ஒரு வார்த்தை உங்க மகன் கிட்ட சொல்லிப்பாருங்க, நடக்கிறதே வேற. ஒரு குழந்தை பெத்துகிறது அந்த பொண்ணோட உரிமை. அதை அழிக்கிறதுக்கு எந்த பொண்ணுக்கும் உரிமையில்ல. அது உங்களுக்குமில்ல” 

“என்ன டீ ரொம்ப பேசுற” 

“நான் சரியாதான் பேசுறேன். நீங்க பெரியவங்களா நடந்துக்கோங்க” 

“குழந்தைய எப்படி கலைக்கனும்னு எனக்கு தெரியும்!” என்று சவால் விட்டார் செல்வம். 

அதற்கு பியானா எதுவும் கூறவில்லை. மௌனமாய் இருந்து நேரத்தை கடந்தாள். அடுக்களையிலிருந்து வெளியேறியவள் வீட்டின் மண்டபத்தில் அமர்ந்து கொண்டாள். 

லக்ஷதாவின் பொருட்களை மேலுள்ள அறையிலும், புறஞ்சேயன் மற்றும் பியானாவின் பொருட்கள் கீழுள்ள அறைக்கு மாற்றப்பட்டது. கட்டில் உட்பட. 

புதிய அறையில் தூங்குவது கடினமாய் இருந்தது பியானாவிற்கு. சொக்கி சொறுகி தூங்கினாலும் காலின் தசைப் பிரண்டு பாடாய் படுத்தும். சரமாரியாக இந்த அவஸ்தை இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்தது. 

இன்றிரவும் அப்படித்தான் காலில் தசைப் பிரண்டு “சேய்யூ கால் இழுக்குது. வலி உயிர் போகுது” என்றவள் கத்தும் சத்தம் கேட்டு உடனே எழுந்து கால்களை பிடித்து விட ஆரம்பித்தான். 

“வலி குறஞ்சிட்டா பியூமா?” 

“இப்போ பரவாயில்ல சேய்யூ” கட்டிலின் விரிக்கையில் ஏதோ கரை படிந்திருக்க, இரவுவிளக்கை அணைத்து. மின்விளக்கை உயிர்ப்பினான். 

மின்விளக்கை உயிர்ப்பித்தவன் உயிரே போய்விடும் போல இருந்தது. “பியூமா, இது என்னடா? இரத்த கரையா இருக்கு!” 

“எங்க சேய்?” என்று தூக்க கலக்கத்தில் கண்களை கசக்கியவாறு கேட்டாள். 

“உங்கிட்டதான் மா நிறைய இருக்கு” 

அதை கேட்டதும் பதறிப்போய் எழுந்து பார்த்தாள். மாதாந்திர தொந்தரவு இவ்வேலை வந்துருக்க அவள் மனம் தூக்கிவாரிப்போட்டது. 

“சேய்யூ பிரீயட்ஸ்!” 

“என்னடா சொல்லுறா? கிளம்பு ஆஸ்பிடல் போகலாம்” 

“பயமா இருக்கு சேய்யூ வேர்லின கூப்பிடுங்க” அவள் குரல் நடுநடுங்கிப்போனது. ஓடிச்சென்று வேர்லின் இருக்கும் கதவை தட்டினான். அப்பொழுது மணி பத்து. 

“வேர்லின், உன்ன பியானா கூப்பிடுறா? சீக்கிரம் போய் பாரு”  என்று அவளை அறைக்குள் அனுப்பி வைத்து வாசலிலே இருந்தான். 

அறைக்குள் சென்று படபடப்பாய் ஓடி வந்தவள், “மாம்ஸ் சீக்கிரம் கார ரெடி பண்ணுங்க”

“இதோ இதோ!” என்று வாசற்கதவை திறந்து ஓடினான். 

சீருந்தை வேகமாக செலுத்த, “மாம்ஸ் சீக்கிரமா போகனும் ஆனா ஸ்பீடா போகாதீங்க. கேர்ஃபுல்லா போங்க” 

“அக்கி எதும் பெயினா இருக்கா?” 

“இல்ல” என்றவள் கண் நிறைய நீர்.

குழந்தை கலைப்பேன் என்று செல்வம் கூறிய வார்த்தைகள் அவள் காதில் ஒலிக்க ஆரம்பித்தது. 

‘உன்னோட பாட்டி என்னோடு குட்டித்தங்கத்த என்ன வேணாலும் பண்ணுவாங்க. ஆனா நீங்க அம்மாவ விட்டு எங்கயும் போகக்கூடாது. அம்மா கூடவே இருக்கனும்’ என்று வயிற்றை வருடியவாறே மனதில் எண்ணினாள்.

வைத்தியசாலையில் வாசலில் வேகமாக வண்டியை நிறுத்தியவன்

சீருந்தின் கதவை திறந்து, “மெதுவா வா மா” என்று கையை பற்றி அழைத்து வந்தான். 

வைத்தியரிடம் நடந்தவற்றை வேர்லின் கூற, இறுதியாக மாதவிலக்கு வந்த தினம், இவர்களின் மணம்முடிந்த தினம்.

இறுதியாக உண்ட உணவு, இது முதல் பிரசவமா இல்லை இரண்டாவது பிரசவமா என்று ஏகப்பட்ட கேள்வி, “ஓ, ஐ சி. பிரக்னண்டா இருக்கும் போது பிரீயட்ஸ் வரக்கூடாது. என்ட் பேபிக்கு ஒன் மந்த்தான். குழந்தைக்கு ஹார்ட் பீட் இருக்கானு பார்க்கனும் உடனே ஸ்கேன் ரூமூக்கு வாங்க” 

கலங்கிய கண்களிலிருந்தீ நீர் வழிய வாயை பொத்தி அழு ஆரம்பித்தாள். “குட்டித்தங்கத்துக்கு ஒன்னும் இருக்காது டா” என்றவன் குரல்வளையும் கும்பிடு போட அவன் கண்களும் மங்கியது. 

“முடியல சேய்யூ, ரொம்ப பயமா இருக்கு” என்று வயிற்றில் கையை வைத்தவாறே கூறினாள். 

“அக்கி பீ போல்ட், பேபிக்கு எந்த ப்ராப்ளமும் இருக்காது” என்று தைரியப்படுத்தி கர்ப்ப ஊடுகதிர் அறைக்கு அனுப்பி வைத்தாள். 

அறைக்குள், வைத்தியர் ஊடுகதிர் கருவியை வைத்து வயிற்றை அழுத்தி அழுத்தி பார்த்து, திரையை உற்று உற்றுப் பார்த்து உறுதியாக முடிவு செய்த பின்னர் பியானாவிடம் எதுவும் கூறவில்லை. உடனடியாக புறஞ்சேயனை அழைத்துவரச் சொல்ல, தாதியரும் விரைந்து வந்து புறஞ்சேயனை அழைக்க அவனும் விரைந்து அறையை நோக்கி ஓடினான். 

***