💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 08 💋

20210823_161826-e62c361d

அத்தியாயம் 08 

ஒரு  நிமிடம் அவளிதயம் ஸ்தம்பித்தாலும் இவன் கூறுவதெல்லாம் விளையாட்டாய் எண்ணிக்கொண்டாள்.

“ஏதோ ஒரு புக்கு அப்டி இல்லன்னா பைக்கு இதெல்லாம் உங்க ஃபர்ஸ்டு பொண்டாட்டின்னு சொல்லுவீங்க. உங்க விளையாட்டுக்கெல்லாம் இது நேரமில்ல சார், வண்டிய வீட்டுக்கு விடுங்க”

 

“நீ ஸ்கூட்டர ஹஸ்பன்டா வைச்சிருந்தா, எனக்கு பொண்டாட்டி பைக்கா இருக்கனுமா? இந்நேரம், இவ்ளோ தூரம் மெனகட்டு சும்மாதான் செமட்ரிக்கு கூட்டிட்டு வந்தேனா?” என்று தீவிரமாக கேட்டான்.

“சார் விளையாடாதீங்க” என்று எச்சிலை விழுங்கியவாறு மறுபுறம் திரும்பி சீருந்தின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி பார்த்தாள் பியானா. 

 

பிணமொன்று  எரிந்து முடிய வெண்நிற புகைமூட்டம் நிறைந்திருக்க பிணம் எரிப்பவனின் கையில் ஓர் குச்சி அதை கொண்டு மண்டை ஓடுகளை கிளரிக்கொண்டிருந்தான். சில மனித எலும்பு கூடுகள் முழுமையாகவும் சில எலும்புகள்  சிதறி கிடக்கவும், 

காற்றில் வெண்நிற சாம்பல் தூசியாய் பறக்க, பறக்கும் தூசிகளெல்லாம் அவள் கண்களுக்கு ஆவியாக தெரிய, காற்றோடு பிணங்களின் எரிந்த வாடையும் சேர்ந்துக்கொண்டது.

மற்றொருபுறம் சிலுவையுடன் கூடிய கறுப்புநிறக் கல்லறைகள் அதற்கு மேல் வாடிய மலர்மாலைகள் இவற்றை பார்த்தவளுக்கு இதயத்துடிப்பு அதிகரிக்க பெருமூச்சை இழுத்துட்டாள். முத்து முத்தாய் வியர்வை துளிகள் அவள் முகத்தை நனைத்தன. 

இங்கு புறஞ்சேயனோ சீருந்தை விட்டு இறங்கி அவள் பார்க்கும் புறம் வந்து சீருந்தின் கதவை தட்டி, “பியூ வெளிய வா” 

 

“என்னை தனியா.. விட்டு..ட்டு ஏன் சார் கீழ இறங்குனீங்க. நான் வல..ல” (வரல) என்ற அச்சத்தில் அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்  குழறியது.

 

‘இது சரி வராது’ என்று கதவை திறந்து அவள் கையை பற்றி வெளியே இழுத்தெடுத்தான். 

 

“வேணாம் சார் எனக்கு பயமா இருக்கு அங்க பேயெல்லாம் இருக்கும். நான் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போறேன்”

 

இவள் கூறுவதெல்லாம்  அவனின் செவிகளுக்கு எட்டவில்லை.  அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தான். மயானபூமியில் பாதம்பட பயந்த பாவையோ  மன்னனின் மார்பில் தஞ்சமடைந்தாள்.

 

“ஏய், பியூ இங்க பாரு” 

 

இன்னும் ஒரு பிணம் எரிந்து கொண்டிருப்பதை எட்டி பார்த்தவளுக்கு அச்சம் அதிகரித்து  தன்னவன் மார்பில் தாரளமாக  முகத்தை பதித்தாள். ‘தினமும் செமட்ரி அழச்சிட்டு வந்தா நல்லதுபோல’ என்று உல்லாசமாக எண்ணிக்கொண்டான் அவன்.  

 

“வேணாம் சார், ரொம்ப பயமா இருக்க வீட்டுக்கு போகலாம்” அவள் விழியில் நீர்விழ்ச்சி பாய்ந்தது. 

 

“உங்கிட்ட எதுவும் மறைக்க கூடாதுன்னுதான் நான் நினைக்கிறேன். அவளும் உன்னை மாதிரி ஒரு பொண்ணுதான். பியூ இங்க பாரு”

 

மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள் அவனை. புறஞ்சேயனோ தன்னவளின் இடையை பற்றி முன்பக்கமாக திருப்பினான். “இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் வைஃப், நேம் கிரண்யா” என்று கல்லறையில் பொறிக்கப்பட்டிருந்த படத்தை கைபேசியின் தொடுஒளியில் காண்பித்தான். 

வாயடைத்து நின்றாள் அவள். “வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டான் அவன்.  இவன் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை மௌனம் காத்து பயத்தைவிடுத்து தன் போக்கில் நடந்தாள் அவள்.

 

“ஏய், நான் இங்க பேசுறேன் நீ உன் பாட்டுக்கு போற, பியூ… பியூமா நில்லு” 

 

முச்சக்கரவண்டியை நிறுத்தி அதில் ஏறிக்கொண்டாள். இவனும் சீருந்தை செலுத்தி முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்தான். 

 

“அப்ப்ப்பா, நல்லவேளை எங்க வீட்லயே இறங்கினா” 

 

இவர்கள் வந்த நேரத்திற்கு அனைவரும் உணவருந்தி தத்தமது அறையில் இருந்தனர். இவனை ஒரு மனிதனாக கூட பொருட்படுத்தாமல் அவளுடைய வேலைகளில் மும்முரமாய் இருந்தாள். 

 

“பியூ எனக்கு பசிக்குது வா சாப்பிடலாம்” 

 

அவளிடமிருந்து பதில்வரவில்லை முதல் திருமணம் முடிந்து மனைவி இறந்த விட்டதை கூறவில்லையே!   முதல் திருமணத்தை பற்றி பியானாவிடம் கூறமால் அவளையும் திருமணம் செய்து கொண்டால் யாருக்குதான் கோபம் வராமல் இருக்கும் வார்த்தைகளற்ற பாவையின் மொழி கண்ணீரானது.

 

“பியூமா ஏன் அழற, உங்கப்பா கிடைப்பாரு எனக்கு நம்பிக்கை இருக்கு ப்ளீஸ் அழாத” அவள் தந்தையை நினைத்துதான் இப்படி அழுகிறாள் என்றெண்ணிக்கொண்டான்.

 

“போதும் சார் நடிக்காதீங்க. போயும் போயும் உங்கள கல்யாணம் பண்ணத நினைக்கும் போது அரு..வெறுப்பா இருக்கு” 

 

“ஓ… கிரண்யாவ பத்தி சொல்லுறியா, எனக்கும் அவளுக்கும் மன…” என்று அவன் உரையை முடிக்கும் முன் முந்திக்கொண்டாள் அவள்.

 

“ஐயா சாமி உங்க நடிப்பெல்லாம் போதும் அதான் சொல்லிடீங்களே ஃப்ர்ஸ்ட் வைஃப்னு அதவிட வேறறென்ன வேணும். ஏமாளி கிடைச்சா போதும் ஏமாத்துறவங்களுக்கு, அதான் நான் கிடைச்சிட்டேனே! போங்க போய் சாப்பிட்டு நிம்மதியா.. தூங்குங்க”

 

“நான் சொல்லுறத கொஞ்சம் கேளு பியூ” 

 

“ஒரு மண்ணாகட்டியும் வேணாம்” என்று அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் அவள். 

அவனும் வேறொன்றும் கூறவில்லை பசியுடன் உறக்கத்தில் ஆழ்ந்தான். 

 

தன் வாழ்வை நினைத்து கனவெல்லாம் இல்லை அவளுக்கு. இருந்தாலும் தாலி கட்டிய கணவன்  தனக்கு மட்டும் சொந்தமானவன் அல்ல என்று நினைக்கும் போது  வாழ்க்கையே வெறுத்தாயிற்று. 

 

‘அம்மா அப்பா இல்லன்னா இப்டிதான் கண்டவனும் ஏமாத்துவான். இன்னைக்கு என் வாழ்க்கைதான் கேள்விக்குறியா இருக்கு, ஏன் ஜீசஸ் எனக்கு மட்டும் இப்டி விதி எழுதிடீங்க என்னை பார்க்க பாவமா இல்லயா? எனக்கும் ஃபீலிங்க்ஸ்  இருக்கு ஏன் அது யாருக்கும் புரிய மாட்டிங்குது’ புழுங்குவதா புலம்புவதா என்றறியாமல் இருந்தாள் அவள். 

 

இதிலும் இவன் இரவு நேரத்தில் மயானபூமிக்கு அழைத்து சென்றிருந்தது மண்டையோட்டை பார்த்தக்காட்சிகள் அவ்வப்போது உன்னுதல் ஊட்டியது. எல்லாம் செய்து விட்டு தனக்கு எதுவும் தெரியாதது போல் குறட்டை விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தான் அவன். 

 

மணி இரண்டை தாண்ட ஏதோ முனங்கல் ஒலி அவனுடைய செவிபரனை அடைய தூக்கக் கலக்கத்திலும், “பியூமா தூங்கிட்டியா?” என்று கைகளை விட்டு அவள் உறங்குமிடத்தை துழாவினான். 

 

தன்னவள் தன் அருகில் இல்லை என்று புரிந்துக்கொண்டு எழுந்தவன். வழக்கம் போல் நாற்கலியில் உறங்கிருப்பாள். என்றெண்ணிக்கொண்டு, ‘தூக்கி கட்டில்ல போட்டு நம்மலும் தூங்குவோம்’

 

நாற்காலிக்கு அருகில் வந்தவன். 

 

நாற்காலியில் சாய்ந்தவளுக்கு சயனமேது.  போர்வை உடல் முழுவதும் போர்த்திருக்க கண்கள் சிவந்து உறக்கமற்று கிடு கிடு என்று நடுங்கிக்கொண்டிருந்தாள். 

 

“பியூ என்னாச்சு இப்டி நடுங்குற?” என்று அவள் நெற்றியை தொட்டு பார்த்தான். 

 

“குளிர்க்காய்ச்சல் அடிக்குது இரு வேர்லின கூட்டிட்டு வாரேன்” என்று அவள் அறையை தட்ட வேர்லினும் பயந்துபோய் நின்றாள். 

 

“என்ன மாம்ஸ் இந்நேரம்?” அவளும் தூக்க கலக்கத்தில்தான் புறஞ்சேயனுடன் பேசினாள்.

 

“பியானாக்கு ஃபீவர்!” 

 

“ஓ மை காட் அக்கிக்கு வீசிங் இருக்கு!” வேர்லினின் தூக்கமெல்லாம் எங்கோ பறந்தது.

 

இருவரும் அறைக்கு ஓடிவந்தனர். தன் தமக்கையை பரிசோதித்தாள் தங்கை. 

 

“வீசிங் பஃப் எங்க அக்கி?” 

 

“முடிஞ்சி..ட்டு அதுக்கப்றம் வா..ங்கல குட்டி” 

 

“நீ எழுதி குடு வேர்லின் நான் வாங்கிட்டு வாரேன்” என்று புறஞ்சேயன் பதற்றத்துடன் கேட்டான்.

 

அவளும் ஒரு காகிதத்தில் மேலும் சில மாத்திரைகளை எழுதி கொடுத்தாள். 

 

சீருந்தை எடுத்து வேகமாக சென்றவன். இந்த நடுநிசியில் அனைத்து மருந்தகங்களும் மூடியிருக்க, ஒர் தனியார் வைத்தியசாலையில் கேட்க அவர்கள் மறுத்து கூறினர். நோயாளியை பார்வையிடாமல் மாத்திரைகள் விற்பனை செய்வதில்லை மற்றும் வைத்தியர் பெயரும் குறிப்பிட்டிருக்கவில்லை.

 

அதன் பிறகு வேர்லினுக்கு தன் கைபேசியில் அழைப்பை விடுத்து அவர்களுடன் பேச வைத்தான் புறஞ்சேயன்.  வேர்லின் பேசிய பிறகு, வேர்லின் மருத்துவக்கல்லூரி மாணவி என்பதால்  மாத்திரைகளை விற்பனை செய்தனர். மீண்டும் வேகமாக சீருந்தை செலுத்தி வீட்டை அடைந்தான். 

 

“அக்கி ஆ.. காமி” என்று மாத்திரைகளை வாயில் இட்டாள். 

 

அவள் கைகளை வேர்லின் தேய்த்து விட கால்களை புறஞ்சேயன் தேய்த்துவிட்டான். 

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல ஃபீவர் சரியாகிரும் மாம்ஸ் நான் கீழ போறேன்” தமக்கை ஒருவனுக்கு சொந்தமான பிறகு அவ்விடத்தில் இருக்க அவளுக்கும்  மனங்கொடுக்கவில்லை. 

 

அவனும் “ம்ம்ம்” என்றான். 

 

கால்களை தேய்த்துவிட்டவன் கைகளை பற்ற அவன் பிடியை மறுத்து உதறினாள். “வேணாம் சார் என்னை தொடாதீங்க எனக்கு அருவெறுப்பா இருக்கு, யாரும் எங்கிட்ட நல்லவன் மாதிரி நடிக்க வேணாம். இதுக்கு அப்றமும் நான் உங்கள நம்பினா என்னை செருப்ப கழட்டி அடிங்க வாங்கிப்பேன். ஒரு பொண்ண எப்டி ஏமாத்தனும் உங்கிட்ட கத்துக்கலாம் அவ்ளோ பெர்பெக்ட் உங்க எக்டிங்!” 

 

இவள் ஏதோ காய்ச்சலில் குழறுகிறாள் என்று அவன் கண்டுகொள்ளவில்லை. 

 

“வா, பெட்ல தூங்கு குளிர்ஜுரம் வேற, வேணும்னா நான் உங்கிட்ட தூங்குறேன் குளிர் கொஞ்சம் குறையும்” என்றவன் அக்கரையில் கோரினான்.

 

“வேணாம் சார், நான் எப்டியோ போறேன் விடுங்க. ஆசிரமத்துல வளர்ந்த பிள்ளைங்க அநாதைனு நீங்களும் முடிவு பண்ணீட்டிங்கல்ல என்னை பத்தி கேக்குறதுக்கு யாரும் இல்லன்னா நினைக்காதீங்க சார் எனக்கும் தங்கச்சி இருக்கா, என்னை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணீங்கனு தெரிஞ்சாலே போதும், என்னை விட வேர்லின்தான் உங்களை ரொம்ப நம்பினா ச்சே” குட்டி ஈன்ற பூனையாய் அவள் பின்னே அவன் சுற்றிதெல்லாம் வெறும் நடிப்பானது அவளது பார்வையில்.

 

நீ சொல்வதை சொல் நான் செய்வதைதான் செய்வேன் என்று அவனிருந்தான். தன் மனவேதனைகளை அவள் கூறிக்கொண்டிருக்க அவளை அலேக்காக தூக்கினான். 

 

“என்னை விடுங்க சார், என்னை தொடுறதுக்கு எந்த தகுதியும் உங்களுக்கில்ல” 

 

சுவர் ஓரமாக கட்டிலில் அவளை வைத்தான். அவள் எழ முயற்சி செய்தாள். “இப்போ நீ எழும்புன உன்னை கட்டிப்பிடிச்சி தூங்குவேன் அவ்ளோதான்” பொய்யாய் மிரட்டினான் அவளை.

 

“உங்கள மாதிரி கீழ்தரமான ஆம்பிளங்களுக்கு அதுதான் அது மட்டும்தான் தெரியும், ச்சீ கேவலமா இருக்கு உங்கள பார்க்கும் போது, என் வாழ்க்கையே பாழா போச்சு உங்களாலதான்” 

 

மாத்திரைகள் வேலையை காட்ட 

கொஞ்சம் கொஞ்சமாய் கண்கள் சொக்க உறக்கத்தில் ஆழ்ந்தாள். தன்னவளின் உடலதாங்கா தணை தானும் தாங்கிக்கொள்ள வேந்தனுக்கு வேட்கைதான் தன்னவளின் மனம் அதற்கு இறங்க வேண்டாமா? குமரியவளை பார்த்தவாறு குமரனவனும் குப்புறப்படுத்து துயில் கொண்டான்.

 

****

 

வெய்யிலை பரப்ப வெய்யவன் காலையில் உதயமாக புறஞ்சேயன் சீக்கிரமாக விழித்துக்கொண்டான். பியானாவால் எழ முடியவில்லை.  உடல் முழுவதும் வலுவின்றிருந்தது.

 

அவள் பிறைநுதலை தொட்டு பார்த்தான். “பீவர் இப்போ பரவாயில்ல” என்று தன்னவளை பரிசோதித்த பின் அவன் தூய்மையாகி அவளை எழுப்பி குளம்பியை கொடுத்தான். 

 

“எனக்கு வேணாம்” 

 

“உன்னை கொஞ்சிக்கிட்டு இருக்க டைம் இல்ல பியானா . வீட்ல இருந்து ரெஸ்ட் எடு ஆபீஸ் வர வேணாம். நான் மட்டும்  கிளம்புறேன்.  டைம்கு மாத்திர போட்டுக்கோ” என்று தீவிரமாக கூறிவிட்டு அறையை விட்டு நகர்ந்தான்.

 

”இப்பா யாரு கேட்டா கொஞ்ச சொல்லி?” என்று நொடிந்து விட்டு மீண்டும் போர்வைக்குள் புகுந்து கொண்டாள். 

 

வேர்லின் தன் தமக்கையை குளம்பி அருந்த செய்து காலை உணவு மாத்திரைகள் எல்லாம் அவள் அருகில் எடுத்து வைத்து கல்லூரிக்கு முச்சக்கரவண்டியில் கிளம்பினாள். 

*****

அலுவலகம் சென்றவனுக்கு மனமெல்லாமல் அவனது அறையில், “குட் மார்னிங் மச்சான், மிசஸ் எங்கடா?” என்று வினய் வினவினான்.

 

“பியானாக்கு கொஞ்சம் பீவர் டா,  அதான் வீட்ல ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு நான் மட்டும் வந்துட்டேன்” என்று கூறியவன் முகத்தில் சலனம்.

 

“ஓகே டா நீயும் வீட்லயே இருந்து இருக்கலாம்” 

 

“ம்ம்ம், ஹாஃப் டேல கிளம்புறேன் டா” 

 

“நீ கிளம்பு டா நான் பார்த்துக்கிறேன்” 

 

“கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன் டா” 

 

“சரி உன் விருப்பம்” 

இருவரும் வேலை செய்வதில் மும்முரமாக இருந்தனர். பியானாவின் வருகையின்றி க்றிஸ்யாவுக்கும் சோர்வாகியது.

புறஞ்சேயன் இடைக்கிடையில் பியானாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிருந்தான். அவள் எதற்கும் பதில் அனுப்பவில்லை. ஓரிரண்டு அழைப்பு விடுத்து பார்த்தான். அதுவும் தோல்வியை தழுவியது. 

பதினோரு மணியளவில், “வினய் நான் கிளம்புறேன் ஆபீஸ்ஸ பார்த்துக்கோடா” 

 

“முதல்லே சொன்னேன் கேட்டியா? சீக்கிரம் கிளம்பு டா”

 

வேகமாக சீருந்தை செலுத்தினான். எத்தனை குறுஞ்செய்திகள் எத்தனை அழைப்புகள் அனைத்தும் தோல்வியை தழுவ தன்னவளின் நிலை மோசமாக உள்ளதோ என்ற விசனம்(கவலை)  ஊசலாடியது.  அரக்கபறக்க வந்தவன் பாட்டியின் கேள்விகளுக்கு பதில்களை கூறி அறையை சென்றடைந்தான். 

 

தன்னவளோ இன்னும் போர்வையை விட்டு வெளியே வராமல் போர்வைக்குள் பதுங்கி இருந்தாள். குளியலறைக்கு சென்று அவன் முகம் கை கால்களை தூய்மைபடுத்திய பிறகு பியானாவின் அருகில் சென்று மீண்டும் அவளை பரிசோதித்தான்  இரவில் தென்பட்ட குளிர்காய்ச்சல்  இப்போது அனல் பறந்தது. ஊணும் உண்ணாமல் ஒரு ஆப்பிள் பழத்தை மட்டும் உண்டிருந்தாள். ஒரு தட்டில் கத்தியுடன் ஆப்பிள் தோள்கள் மேசையிலிருந்தது அதை வைத்து அறிந்துகொண்டான். தன்னவள் முடங்கிக்கிடப்பதை பார்த்தவனுக்கு மிஞ்சியது விசனம் மட்டும்தான்.

“பியூமா, கொஞ்சமா சாப்பிட்டு ஆஸ்பிடல் போகலாம் எழுந்திரி”  அவன் அவலக்குரலில் மெதுவாக எழுந்தமர்ந்தாள். 

 

“எனக்காக யாரும் கவலைபட தேவையில்ல” 

 

“நான் என்னடீ பண்னேன் இப்டி படுத்துற, வா ஆஸ்பிடல் போகலாம்”  என்று அவன் கண்களை சுருக்கி இறைஞ்சி கேட்டான். 

 

“தப்பு பண்ணிட்டேன் சார். நீங்க கைய வெட்டியிருக்க கூடாது. நீங்க வேணாம்னு நான்தான் வெட்டிருக்கனும்” பியானா கூறிய விடயம் அவனுக்கு புரியவில்லை.

உடல் சோர்வெல்லாம் எங்கு சென்றதோ படக்கென்று எழுந்து மேசையிலிருந்த கத்தியை  எடுத்து கையை வெட்ட முயன்றாள், புறஞ்சேயனோ செய்வதறியாது அவளை தடத்துக்கொண்டிருந்தான். 

 

அவள் கத்தியின் கைபிடியை பற்றியிருந்தாள். அவன் கத்தியின் கூர்மை பகுதியை பற்றி வேகமாக இழுத்தெடுத்தான். இறுதியில் அவன் கைகளில்தான் உதிரம் சிந்தியது. 

*****