💕நெஞ்சம் மறப்பதில்லை.💕23..

நெஞ்சம் மறப்பதில்லை.23

மாலை விளக்கேற்றும் நேரம்

மனசில் ஒரு கோடி பாரம்

தனித்து வாழ்ந்தென்ன லாபம்

தேவையில்லாத தாபம்

தனிமையே போ… இனிமையே வா…

நீரும் வேரும் சேர வேண்டும்

காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது

காரணம் துணையில்லாமல் 

வாடிடும் வயது

ஆசை கொல்லாமல் கொல்லும்

அங்கம் தாளாமல் துள்ளும்

என்னைக் கேட்காமல் ஓடும்

இதயம் உன்னோடு கூடும்

விரகமே ஓ நரகமோ சொல்

பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பனி விழும் இரவு 

நனைந்தது நிலவு

இளங்குயில் இரண்டு 

இசைக்கின்ற பொழுது

பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது

வா… வா… வா…

தன்முன் தெரிந்த லஷ்மி யின் காலடியைப்‌ பார்த்தும், பவளமல்லி திட்டில் அமர்ந்திருந்த ஆதியா நிமிரவில்லை.

அவள் அருகில் அமர்ந்து கொண்டவர், அவளது கை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டார். 

இரண்டாம் சாமம். கொட்டும் பனி. வெட்டும் குளிர். வெண்பட்டாய்‌ நிலவொளி. ஏங்க வைக்கும் ஏகாந்தம். அப்பொழுதுதான் குளித்த ஈரத்தலையோடு கன்னியவள்.

“ஆதியா தூங்கலையா?” சில சமயங்களில் தெரிந்தே கேட்கப்படும் அபத்தமான கேள்வியைத் தவிர்க்க முடியாமல் லஷ்மியும் கேட்க, தலைமட்டுமே பெண்டுலமாக அசைந்து பதிலுரைத்தது.

அவளை சில கணங்கள் உற்று நோக்கியவர்,

“கண்ணா ஆஃபிஸ் வந்திருந்தானா?”

அவளது நிலைகண்டு தாளாமல் லஷ்மி அமைதியாக இருந்தவளிடம் மீண்டும் கேட்க,

நிமிர்ந்து பார்த்தவளை, “என்னடாம்மா?” என வலக்கரம் கொண்டு கண்ணம் தாங்க, தாங்கியவரின் கை சுட்டது பங்குனி மாத பாறையாக கன்னிப்பெண்ணின் கண்ணீரில்.

“என் வயசுக்கு தூக்கம் வரலைனா… வயசாகறது காரணம். உனக்கு தூக்கம் வரலைன்னா… வயசுதான் காரணம்.” என்றவரின் மடியில் படுத்துக் கொண்டவள்  இருகை கொண்டு லஷ்மி யின் இடுப்பைச் சுற்றி கட்டிக்கொண்டாள். பிள்ளை சுமக்காத வயிறாக இருந்தாலும், பாசம் சுமந்த மனது பாரம் சுமந்து படபடத்தது கன்னியவள் நிலைகண்டு. 

அவளது தலையை வாஞ்சையாகத் தடவிய லஷ்மி, “நான் காய்க்காத பூ தான் ஆதிம்மா. ஆனா மணக்காத பூ இல்லம்மா.” என்றவரிடம்,

“இந்த ஒரு வாரமா கண்ணா தான் ஆஃபிஸ்க்கு வர்றாங்க ஆன்ட்டி.” என்றாள் மெதுவாக.

இதுநாள் வரை அவளவனை விட்டு, மங்கையர்க்கரசியின் அச்சத்தை மனதில் கொண்டு எட்டியிருந்தவளிடம் இருந்த வைராக்கியம், அவனை அருகே பார்க்கும் பொழுது தளற, தன் காதலைக் கட்டுப்படுத்த முடியாமல் படாதபாடு படுகிறாள். 

இன்று காலை அலுவலகம் வந்த வன், இம்முறை அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. நேராக எம்.டி. அறைக்கு சென்றவன் செய்த முதல் காரியம் திரைமுழுமையும் இழுத்து விட்டு கண்ணாடிக் கதவுகளை மறைத்தது தான். அறைக்கு திரைபோட முடிந்தது எளிதாக அவனுக்கு. ஆனால் மனத்திரை எதுவென்று தெரியாமல் தவிக்கிறான். 

முடிந்த அளவு வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்… தன்னை அலைக்கழிப்பவளின்  நினைவுகளை வெளியேற்றும் வழி அறியாமல்.

அவனுக்குத் தெரியவில்லை. பிடுங்கி எறிய அது வேரூன்றிய மரமில்லை… உடலோடும் உள்ளத்தோடும் கலந்த உணர்வது என்று. 

மதிய உணவு வேளைக்குப்பிறகு, ஆதியா அவனது அறைக்கதவு தட்டி அனுமதி கேட்க, அனுமதி அளித்தான். 

உள்ளே வந்தவள் தன்னவனை ஏறிட்டு முகம் பார்க்க அவனோ‌ நிமிர்ந்தும் பார்க்கவில்லை. தனது மடிக்கணினியிலேயே கவனம் முழுதும் வைத்திருந்தான். ஆனால் முகம் மட்டும் எள்ளும் கொள்ளும் வெடித்தது. 

இன்று காலையில் உணவு வேளையின் போதே தாத்தா இவனது திருமணப் பேச்சை ஆரம்பித்தார். 

“சூர்யா, நாதன்‌ ஃபோன் பண்ணியிருந்தான் டா.” சாப்பிட்டுக் கொண்டே பேச்சை ஆரம்பிக்க,

“என்னவாம் தாத்தா?” என்றான்.

“எல்லாம் நல்ல விஷயம் தான். கம்பெனிய நம்மகிட்ட ஒப்படைச்சவன், உறவையும் புதுப்பிச்சக்கலாம்னு பாக்குறான்.”

சூர்யா கேள்வியாய் நிமிர்ந்து பார்க்க… “ராமநாதனோட மக வயித்துப் பேத்திய உனக்குப் பேசி முடிக்கக் கேக்குறான்டா. வெளிநாட்டுல வளந்த புள்ள. இப்ப லீவுக்கு தாத்தா வீட்டுக்கு வந்திருக்காம். உனக்கு சம்மதம்னா போய்ப் பாக்கலாம். இல்லைனா நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ண ஏற்பாடு பண்ணவா?”

இவர்கள் பேச்சு மங்கையர்க்கரசிக்கு கிலியை ஏற்படுத்தியது. ‘இவரு பேசறதைப் பாத்தா மருமக கையால அடிவாங்கின மாமியார்னு எனக்கு பேரு வாங்கிக் கொடுக்காம விடமாட்டார்‌ போலயே? ஏற்கனவே நேர்ல‌ சந்திக்கிற வரைக்கும் தான் வைராக்கியமா இருப்பேன்னு சொன்னா. இப்ப கூடவே வேற இருக்கா. என்னாகும்மோனு நானே பயந்துகிட்டு இருக்கேன். இவரு வேற பீதியைக் கிளப்புறாறே?’ என அவர் எண்ணிக் கொண்டிருக்க,

“அரசி என்னம்மா சொல்ற?” என மருமகளையும் கூட்டு சேர்க்க,

“முதல்ல அவன் ஜாதகத்தைப் பாப்போம் மாமா. கல்யாண யோகம் வந்திருச்சானு பாப்போம். அப்புறமா எதுனாலும் பேசிக்கலாம்.‌” என்றார். திருமணம் முடிந்த மகனுக்கு திருமண யோகம் பாக்க எண்ணியவராக… இப்போதைக்கு இந்த பேச்சைத் தள்ளிப்போடும் எண்ணத்தில். 

“அதைப் பாக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது. நம்ம ஜோசியர்கிட்ட சொன்னா இன்னைக்கே பாத்து சொல்லிறப்போறாரு.”

“அதெல்லாம் சரித்தான் மாமா. அந்தப்பிள்ள ஜாதகமும்‌ இவனுக்குப் பொருந்தி வரனுமில்ல.”

“என்னம்மா நீ? உன்‌ பேச்சு ஏதோ தட்டிக் கழிக்கிற மாதிரி இருக்கே? நீ எந்தப் பொண்ணையாவது உங்க சொந்தத்துல மனசுல வச்சிருக்கியா?” என்றார் சற்று கோபமாக. ஏனெனில் இப்பொழுதெல்லாம் பேரனின் கல்யாணப் பேச்சை எடுத்தாலே மருமகள் ஏதாவதொரு காரணம் சொல்லி மறுப்பது கண்கூடாக மாமனாருக்குத் தெரிகிறது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க சூர்யாவின் கை சாப்பாட்டுத் தட்டில் அலைந்து கொண்டிருந்தது.

“அப்படி எல்லாம் இல்ல மாமா. ரொம்ப நாளா இழுத்தடிக்குதே. அதான்‌ ஜாதகம் பாக்கலாம்னு சொன்னேன்.”

“எங்கே… எது சொன்னாலும் அம்மாவும் மகனும் ஏதாவதொரு காரணம்‌ சொல்றீங்களே. இவன் என்னாடான்னா எனக்கு‌ ஃபீலிங் வரலைங்கறான். நீ என்னடான்னா கல்யாண யோகம் வரலைங்கற.”

இவர்கள் பேச்சு சூர்யாவிற்கு சினமேற்ற, “இப்ப என்‌ன எனக்கு அறுபது வயசா ஆயிருச்சு? இப்ப உடனே கல்யாணத்தைப் பண்ணி எதை சாதிக்கப் போறேன்?” என இருவரிடமும் கத்தியவன், அதே கோபத்தோடே அலுவலகம் கிளம்பி வந்திருந்தான். இதுவரை அவன் தனது வீட்டில் காட்டாத முகம் அது. 

‘எல்லாம் இவளால் தான்‌.’ என்று ஆதியாவின் மீதும் வெறுப்பு மண்டியது.

ஏனென்றால் தாத்தா திருமணப்‌பேச்சை எடுத்ததும் தன் கண்முன்‌ தோன்றியது அவளது வதனம் தானே. 

எவ்வளவுக்கு எவ்வளவு அவள் மீது அவன் மனம் ஈடுபடுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீயூட்டனின் மூன்றாம் விதியாய் அவள் மீது வெறுப்பும் மேலிடுகிறது.

உள்ளே வந்தவள் ஓரமாக இருந்த ஸ்டூலை இழுப்பது தெரிந்தது. 

“என்‌ன பண்றீங்க ஆதியா?”

“சார், மேல் கபோர்ட்ல கொஞ்சம் ஃபைல்ஸ்‌ இருக்கு. எடுக்கணும்.” என்றாள்.

“அதை நீங்க தான் செய்யணுமா? அட்டென்ட்டரைக் கூப்பிட்டு எடுக்க சொல்ல வேண்டியது தானே?”

“வச்சது நான்‌ தான் சார். எனக்கு தான் தெரியும். அட்டென்டர் குடவுன் லாக் ஸ்ட்ரக்காகிக்கிட்டு திறக்க முடியலைனு அதைப் பாக்கப் போயிட்டாரு.”

“இன்னும் லாக்க சரி பண்ணலியா? இந்த சூப்பர்வைசர் என்ன பண்றாரு?” எனக் கேட்டுக் கொண்டிருந்தவன், அவள் ஏற‌ முற்பட, இருக்கையில் இருந்து எழுந்து வந்தான்.

“தள்ளுங்க… எந்த ஃபைல் சொல்லுங்க.‌ நான் எடுத்துத் தர்றேன்.” 

‘இவங்க வளத்திக்கு ஸ்டூலே தேவை இல்ல.’‌ என நினைத்தவள்,

*****கம்பெனி நேம் போட்ட ஃபைல் சார்.” எனக்கூற, அவன் எட்டியே எடுக்க, அதன் கூடவே வரிசையில் இருந்த மற்ற ஃபைல்களும் சரிய… தள்ளி நின்றவள் வேகமாக அவற்றை எட்டிப்‌ பிடிக்கவென, அவனை‌ நெருங்க வேண்டியதாய்ப் போயிற்று. 

அவள் அருகே நெருங்க, தவறிய ஃபைல்களை பிடிக்க எத்தனித்தவன், அவளையும் சேர்த்துப் பிடித்திருந்தான். 

இடையோடு அழுத்தி கோதையைப் பிடித்தவன் கோப்புகளைத் தவற‌விட்டிருந்தான். கணநேரம்உரசிய உடல்கள் பரிமாறிய வெப்பம், இறுகிய பனியாய் இருந்தவளை, என்னவன் என இளக வைக்க, அவனுக்கோ எப்பொழுதோ நினைவில் புதைந்துபோன கஸ்தூரி மஞ்சளும் பூலாங்கிழங்கும் கலந்த வாசம் அவனுக்குள் தீமூட்ட… இடைபற்றியவன் கைகள் எல்லைக் கோடு தாண்டும் தீவிரவாதியாக எத்தனிக்க, கன்னியவளோ எல்லைப் படையிடம் அகப்பட்ட அகதியாக உள்ளம் படபடத்தாள். காற்றில் விரித்த புத்தகமாக உணர்வுகள் பரபரத்தது.

தாலி கட்டியவன் தான். உடமைப் பட்டவன் தான். உரிமை இருக்கிறது தான். ஆனால் அவனுக்கு அந்த நினைப்பு இருக்கிறதா? எப்படி அனுமதிக்க முடியும். கூர்தீட்டிய வாளாய் மைதீட்டிய விழியில் மையலோடு  அச்சமும் சேர்ந்தே தெரிந்தது.

இருந்தும் ஏனோ அவனுக்கு அந்த ஏகாந்தத்தை இழக்க விருப்பமில்லை என்பது போல் நின்றிருந்தான் தன்னை மறந்து. 

படக்கென கதவு திறக்கும் சத்தத்தில் தான் இருவரும் சுயம் பெற்று, தன்னிலை விலக, உள்ளே வந்த ராகவன் கண்களில் அக்காட்சி தப்பாது விழுந்தது. 

சட்டென்று விலகியவன்,‌ தனது இருக்கையில் வந்து அமர, விழுந்த ஃபைல்களை எடுத்து அதன் இடத்தில் அடுக்கி விட்டு வேகமாக வெளியேறினாள் ஆதியா.

ராகவன் வெளிச்செல்பவளையே ஓரக்கண்ணால் பார்க்க, “யெஸ் ராகவன்.” என்றான் சற்று உரக்க… அதே நேரம் அழுத்தமாக.

“சார்‌ இன்னைக்கு போற ஸ்டாக் லிஸ்ட் இது. நீங்க சைன் பண்ணிட்டா அனுப்பிறலாம்.” 

“கொடுங்க ராகவன்!” என வாங்கியவன், கையழுத்திட்டுத் தர,‌ வாங்கிக் கொண்டுத் திரும்பி நடந்தவன் இதழ்களில் ஓநாயின்  இழிப்பு.

“புருஷனை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு எத்தனை நாளைக்கு தான் கட்டுப்பாடா இருக்க முடியும்?  ம்ம்ம்…‌ நாமளும் தான் ட்ரை பண்ணோம். ஊருக்கு தான் உபதேசம்‌போல.” என அவன் வாய்விட்டு அலுத்துக் கொண்டது சூர்யாவின் செவிகளில் தெள்ளென விழுந்தது. எம்.டி. ஆயிற்றே. நேரிடையாக கேட்க முடியாமல் ஜாடை‌ பேசிச் சென்றான் தன்னைப்‌போல் தான் மற்றவரும் என்ற துரியோதனன் எண்ணம்‌ கொண்டு.

கையிலிருந்த பேனா பறந்து போய் சுக்கு நூறாய்ச் சிதறியது, சூர்யா சுவற்றில் வீசியடித்த வேகத்தில். 

இருகை கொண்டு தலை தாங்கிக் கொண்டான். ஈசன் தலை ஏறிய கங்கையென, மங்கை தான் அவன் தலையைவிட்டு இறங்க மறுக்கின்றாளே. அவனுள் சகம் ஆகிப்போன சக்தி அவள் என்று இந்த பித்தனுக்குத் தான் தெரியவில்லையே. 

வெளியேறி வந்தவள் தன் இருக்கையில் சென்று அமரவும் இல்லை. நந்தினியிடம் கூட சொல்லிக் கொள்ளவில்லை. தனது கைப்பையை எடுத்துக் கொண்டு‌ வெளியேற எத்தனிக்க,

அவ்விடம் வந்த ராகவனோ, “என்ன ஆதி? வண்டியை சர்வீஸ்க்கு விட்டுட்டீங்க போல!” அவனின் இரட்டை அர்த்தக் கேள்வியில், உள்ளம் தீப்பற்ற, அவனை முறைத்துப் பார்க்க,

“இல்ல… பஸ்ல வந்து இறங்கினதைப் பாத்தேன்.” என்றான்.

“யார் எங்க போறாங்க, எதுல வர்றாங்கனு பாக்குறதை விட்டுட்டு உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க ராகவன். அதுதான் உங்களுக்கும் நல்லது. இல்லைனா ஆகுற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல. மரியாதை கெட்டுறும்.” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

திரைவிலக்கி கண்ணாடிக் கதவு வழியாக சூர்யா பார்க்க, ஆதியா முறைப்பதும், ராகவனின் கேவலமான இழிப்பும் தெரிய, அவன் ஏதோ வம்பு பேசுகிறான் என புரிய கோபம் தலைக்கேறியது. ஆதியா வேகமாகத் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்புவதும் தெரிந்தது.

நந்தினி அவளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதுவரை ராகவன் எது பேசினாலும் முறைப்போடு சொறிநாயைப் போல் பார்த்துவிட்டு சென்று விடுவாள். இவ்வளவு கோபம் காட்ட மாட்டாள்.  

அவள்‌ வெளியேறியதும், இருக்கையில் சென்று‌ அமர்ந்தான். சற்று நேரத்தில் ஏதோ யோசனையில் எழுந்தவன், அறையின் பின் ஜன்னலின்  திரை விலக்கி சாலையை வெறித்தான். எதிர்புற பேருந்து நிறுத்தத்தில் ஆதியா நிற்பது தெரிந்தது. வண்டியை சர்வீசுக்கு விட்டிருப்பதால் இரண்டு நாட்களாக பஸ்ஸில் தான் வந்து செல்கிறாள். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவள் கைகொண்டு கண்துடைப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அவளது கண்ணீரைக் கண்டவனுக்கு கோபம் மேலும் அதிகமாகியது. இந்தக் கோபம் இப்பொழுது தன் மேலேயே.

அதற்கு மேல் அவனும் அங்கு‌ இருக்கவில்லை. தனது பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். பார்க்கிங்கில் இருந்து தனது காரை எடுத்துக் கொண்டு வெளியேற, பேருந்து  நிறுத்தத்தில் நின்றவள், பஸ்ஏறிச் செல்வது தெரிந்தது.

வீட்டிற்கு வந்தான். தோட்டத்தில் சத்யபிரகாஷ் அமர்ந்திருக்க, மாமனாருக்கு மாலை நேர தேநீரை எடுத்துக் கொண்டு வந்தார் மருமகள். 

காலையில் இவர்களிடம் கத்திச்சென்றது நினைவு வர, சற்று நிதானித்தான். தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். சிறுபிள்ளையென முகம் திருப்பிக் கொண்டார். அது என்னவோ பேரனைப் பார்த்தால் மட்டும் தாத்தா சிறு பிள்ளையாகிப் போகிறார்.

‘தனக்குப் பிடிச்சவங்ககிட்ட மட்டும் தான் சார் தன் சுயத்தைக் காட்ட முடியும்.’  அன்றொரு நாள் ஆதியா அவனிடம் சொன்னது நினைவு‌க்கு வர, தாத்தனின் செய்கை சிரிப்பூட்டியது. 

சிறுவயதில் இருந்து கடமைக்கென மட்டுமே வாழ்ந்த மனுஷன். ஓஹோவென வாழ்ந்த காலத்திலும், மனைவியை இழந்த இளவயதிலும் மகனுக்கென கட்டுப்பாட்டோடு வாழ்ந்தவர். வெற்றி தோல்வி என பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து மகனையும் இழந்து, பேரனுக்காக என மீண்டும் நிமிர்ந்தவர். தன்னைப்பற்றி ‌யோசிக்காமல், எப்பொழுதும் தன்னை நம்பி‌ இருப்பவர்களுக்காகவே வாழ்பவர். 

‘இவருக்காக நாம‌ என்ன செஞ்சுட்டோம்?’ என மனம் கேள்வி கேட்க, ‘அவர் ஆசைப்படுவது என்ன? பேரனின் திருமணம். நியாயமான ஆசை தானே? அதைக்கூட நிறைவேத்தி வைக்காம அப்படி என்ன வாழ்ந்து சாதிக்கப்போறோம்.’ என நினைத்தவன், தாத்தாவிற்காகவும், ஆதியாவின் நினைவிலிருந்து தப்பிக்கும் நோக்கோடும் திருமணத்திற்கு‌ சம்மதிக்க முடிவெடுத்தான்.

“அம்மா, அவரு இப்ப கோபத்துல இருக்காரு. டீ எல்லாம் குடிக்க மாட்டாரு. எனக்குக் கொடுங்க!” என கொண்டு வந்த டீயை அவன் எடுத்துக் கொண்டான்.

அப்பொழுதும் அவர் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

“சரி…‌ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லாம்னு நினைச்சேன். அவருக்கு இப்ப கேக்குற மூடு‌ இல்ல போலம்மா.‌ இன்னொரு நாளைக்கு பேசிக்கலாம்.” என அலுத்துக் கொள்ள,

“டேய் தம்பி! நீ இன்னும் அந்தப் பிள்ளைய பாக்கல. அதுக்குள்ள சம்மதம் சொன்னா எப்படிடா.‌ உனக்குப் பிடிக்க வேண்டாமா?” என மங்கையர்க்கரசி வேகமாகக் கூற, இப்பொழுது சந்தேகமாகப் பார்ப்பது மகனின் முறையாயிற்று. 

பேரனின் சம்மதத்தில் வேகமாகத் திரும்பியவர், மருமகளின் கேள்வியில் சற்று சினம்‌ கொண்டார்.

“ஏம்மா அரசி! நான் என்னமோ அவனை வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைக்கப் பாக்குறேங்கற மாதிரி பேசுற. பொண்ணு யாரா இருந்தாலும் அவனுக்குப் புடிச்சா மட்டும் தான் கல்யாணம்.” என்று கராறாகக் கூற,

‘எனக்கு உங்களைப் பத்தி தெரியும் மாமா. ஆனா இவனைப் பத்தி தான் உங்களுக்கு முழுசா தெரியாது. தேவையில்லாம உங்ககிட்டயும் மறைச்சு பெரிய தப்புப் பண்ணிட்டேன் மாமா.‌ உண்மை தெரியற அன்னைக்கு என்ன நடக்குமோன்னு நினைச்சாலே இப்பவே என் ஈரக்குலை நடுங்குது.’ என மாமனாரை நினைத்துப் பயந்து தனியாக ஒரு ட்ராக் மனதிற்குள் ஓட்டிக் கொண்டிருந்தார்.

சூர்யாவைப் பொறுத்தவரை இந்த சம்மதம் தாத்தாவிற்காக. அதனால் பெண் யாராகயிருந்தாலும் ஓகே என்ற நிலமைக்கு வந்து விட்டான்.

“ம்மா! ராமநாதன் தாத்தா பேத்தி தானம்மா. தாத்தாவுக்கு தெரிஞ்ச ஃபேமிலி. எனக்கும் சம்மதம்மா. வேணும்னா சும்மா ஒரு ஃபார்மாலிட்டுக்கு ஒருநாள் பாத்துட்டாப் போச்சு. ஏன்னா அந்த‌ பொண்ணுக்கும் நம்மளப் பிடிக்கணும்ல.” கேலியாய்க் கேட்க,

“ஏன்டா! உன்னையும் ஒரு‌ பொண்ணு வேண்டாம்னு சொல்லிருமாடா?” 

“தாத்தா, நான் ஒன்னும் உங்க அளவுக்கு ஹேன்ட்சம் இல்ல. அந்தக் காலத்துல… பாட்டி கட்டுனா இவரைத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நின்னு உங்களைக் கட்டின மாதிரி என்னைய யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க.” 

“போட படவா.” என்று பேரனின் கிண்டலில் தாத்தாவிற்கும் சிறு வெட்கம் இந்த வயதிலும்.

தாத்தா சற்று இயல்பாகியதில், “ம்மா! பேச்சுவாக்குல இவருக்கு டீ கொடுக்க மறந்துறாதீங்க.‌ அந்தக் கோபத்துல ஏதாவது ஒரு வத்தலோ தொத்தலோ புடிச்சு என் தலையில கட்டிறப் போறாரு.” என்று கூறிச் சிரித்தவன், டீ கொண்டுவந்து கொடுக்குமாறு அன்னைக்கு பணித்துவிட்டு உள்ளே சென்றான். மங்கையர்க்கரசி தான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.

தனது‌ அறைக்கு வந்தவன், ஆயாசமாக உடையைக்கூட மாற்றாமல் கட்டிலில் படுத்துவிட்டான். தாத்தாவிற்கென யோசித்து சம்மதம் தெரிவித்தவன், தனிமையின் பிடியில் சிக்க மறுபடியும் அவள் நினைவு‌ விஸ்வரூபம் கொண்டது. அவன் கை பற்றிய இடையின்‌ மென்மையும், அந்த‌ மையல் கலந்த விழிகளும், அவனுக்கு புதிதாகத் தோன்றவில்லை. அவளின் வாசம் அவனின் உள் அமுங்கிய நேசத்தை சற்றே உசிப்பிற்று. 

எந்தப் பெண்ணிடமும் தோன்றாத மயக்கமும், உணர்வுக்குவியலும் இவளைப் பார்த்தால் மட்டும் ஏன் பேயாட்டம்‌ போடுகிறது என்பதை யோசிக்க விடாமல், மாற்றான் மனைவி என்ற மரபுவேலிக்குள் அவன் சிக்கித் தவிக்க, அந்தக் கிரகமெல்லாம் எனக்கெதற்கு என்று மோகம் அவனை முட்டித் தள்ளியது.

உறங்கும் உணர்வுகள் அவளைக் கண்டதும் உயிர் பெறும் மாயமென்ன. நீச்சம் பெற்றிருக்கும் உணர்ச்சிகள் பாவையைப் பார்த்ததும் உச்சம் பெறும் உள்ளர்த்தம் தான் என்ன. அவனது கட்டுப்பாடுகள் எல்லாம் கன்னியவளைக் கண்டதும் கோடை காலக் குளமாக வற்றி விடுகிறதே. 

காளையவனுக்கு அவளைக் கண்டவுடன் கந்துவட்டி யாக எகிறும் காதல் உணர்வுகளால், இப்படியே போனால் மீட்க முடியாத அடமானப் பொருளாக மூழ்கிப் போவோம் என்பது கண்கூடாகத் தெரிந்தது. ஏற்கனவே அவளிடம் ஆயுள்கைதியாகி அடிமை சாசனம் போட்டு விட்டது  நினைவில்லாமல். 

காதல் என்பது பட்டாம்பூச்சி பரபரக்கும் உணர்வு மட்டுமல்ல. அது உனக்குள் நான் வந்து விட்டேன் எனக்கூறும் அறிமுகப் படலம் மட்டுமே. அக்காதலுக்கு சுவை கூட்டுவது ஊடல் என்றால், காதலர்களிடையே ஊடலுக்கு இணையான மற்றொன்று… மிகவும் நுட்பமான விஷயமும் கூட. அது தான் விரகதாபம். சற்றே இம்மி பிசகினாலும் விரசமாகிப் போகும் உணர்வது. காதலை இனிமையான இம்சையாக்குவது.

கண்டவர்கள் மீதும் தோன்றினால் அது காமம். தனக்கான‌ இணையால் மட்டுமே தூண்டப்பட்டால் தான் அது காதல். காதலில் காமம்‌ உண்டு. காமத்தில் காதல் இல்லை. (எல்லோரும் சொன்னதுதாங்க).  முதலது உள்ளத்தேவை. இரண்டாமது உடல் தேவை. இது சாப்பிட்டவுடன் அடங்கும் பசி போல. 

ஆனால் காதல் என்பது… முகர‌முகர மீண்டும் முகரத் தூண்டும் பூ‌வின் நறுமணம் போல. 

ராகவன் பேசியதும் சூர்யாவிற்கு நினைவு வர, தேவையில்லாமல் ஒரு பெண்ணின் உணர்ச்சியோடு விளையாடுகிறோமோ என உள்ளம் குமைந்து போனான்.

உரசிய தீக்குச்சியின்‌ நிலமையே இதுவென்றால் தீப்பற்றிய மூங்கில் காட்டின் நிலமை!

எவ்வளவொ கடினப் பட்டு மனதை அடக்க நினைத்தும், அது கட்டவிழ்ந்த கன்றுக்குட்டியாய் தன்னவனைத் தேட, அவளுக்குத் தான் கரக்காத பசுவின்மடியாக மனம் கனம் ஏறிப்போனது. 

தொட்டவுடன் துவண்ட தன் உணர்வுகளால், சூர்யாவின் பார்வையில் தான் எப்படிப்பட்ட பெண் என்ற எண்ணமும் தோன்ற, படுக்கையில் உழன்றவள்  கடைக்கண், ஆற்றாமையில் கண்ணீர் உகுக்க, எவ்வளவு நேரம் அழுதாலோ அவளுக்கே தெரியாது. இன்று தன்னவனின் நெருக்கமும் பழைய நினைவுகளைத் தூண்டி விட, கொண்டவன் துணை‌கொண்டு தானே காமனை வென்றாக வேண்டும். 

இவ்விளையாட்டை முக்கண்ணனிடமே நிகழ்த்தி எரிந்து சாம்பலாகிப்போன நினைப்பு சிறிதும் இல்லாமல், மன்மதனோ, ரதி உடனிருக்கும் மிதப்பில் இருவரையும் காதல் வதம் செய்து கொண்டிருக்கின்றானே!

கண்கள் தன்‌ வறுமையை உணர்த்த, எழுந்தவள் குளியலறை சென்று, என்ன நேரம் என்றுகூடப் பார்க்காமல், தண்ணீரைத்  திறந்தவள் ஷவரின் அடியில் நின்று கொண்டாள். வெகுநேரம் கழித்து சூடு தணிந்து குளிரெடுக்கவும் தான், தன் சுயம் உணர்ந்தவள், வெளியே வந்து உடைமாற்றிக் கொண்டவள், தனது அன்னையின் மடிதேடி பவளமல்லி திட்டிற்கு வந்து விட்டாள். 

இவளின் நிலை கண்டு லஷ்மிக்கு மனம் ஆறவில்லை. என்ன செய்து இவளை கரையேற்றுவது எனவும் புரியாமல், விடிந்ததும் தன் கணவனிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தார்.