💕நெஞ்சம் மறப்பதில்லை.💕26.

நெஞ்சம் மறப்பதில்லை.26.

உள்ளே வந்த நால்வரும் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டனர். வீட்டின் செழுமை, வீட்டுக்கு சொந்தக்காரனின் செழுமையை பறைசாற்ற, அவர்களது கண்களில் சிறிது மிரட்சி எட்டிப்பார்த்தது. “வாங்கப்பா! யாரப் பாக்கணும்?” வீட்டுக்குள் வந்தவர்களை மங்கையர்க்கரசி வரவேற்க,

“ம்மா… வந்தவங்களுக்கும் டிஃபன் ரெடி பண்ணச் சொல்லுங்கம்மா!” சொல்லிக் கொண்டே, சட்டையின் முன்கைப்பட்டனைப் போட்டவாறே படிகளில் இறங்கி வந்தான் சூர்யா. 

இரண்டு நாட்களாக சரியாக முகம்கொடுத்துப் பேசாத மகன் இன்று பேசியதில் ஆனந்தம் அந்த தாய்க்கு. அதே சந்தோஷத்தோடு வந்தவர்களுக்கு என்ன வேண்டும் என கேட்க ஆரம்பித்தார்.

வந்திருந்த நான்கு பேருக்கும் கிட்டத்தட்ட சூர்யாவின் வயதுதான் முன்னபின்ன இருக்கும்.

“எதுவும் வேண்டாம்‌.” என்றனர் சங்கோஜமாக. 

“உக்காருங்க! ஏன் நின்னுகிட்டே இருக்கீங்க? இதுவும் உங்களுக்கு அத்தை வீடுதான்.” அவர்களை உபசரித்தவாறே, அவர்கள் முன்னே வந்து நின்றவனைப் பார்த்து ஆச்சர்யம் அவர்களுக்கு. அவனை ஒன்றிரண்டு முறைதான் பார்த்திருப்பார்கள். அவர்கள் பார்த்தவனுக்கும், இவனுக்கும் எவ்வளவு வித்தியாசம். ப்ளாக்கலர் ஜீன்சும், ஆலிவ் க்ரீன் ஃபுல்ஹேன்ட் சார்ட்ம் அணிந்து, ஆம்பளை எதுக்கு இவ்வளவு கலரா இருக்கனும் என ஆண்கள் பொறாமைப்பட, உன் கலர்ல எனக்கும் கொஞ்சம் வந்திருக்கலாம் என பெண்கள் ஏக்கப்பட, ஷேவ் செய்த கன்னத்தில் பச்சைபடிந்திருக்க, ஜெல்லின் உபயத்தால் படியவைக்கப்பெற்றும், முடிந்தால் என்னை அடக்கிப்பார் எனும்   அலையடித்த கேசம் என தங்கள் முன் ஆறடிக்கும் மிஞ்சி நிமிர்ந்து  நின்றவனைப் பார்த்தவர்களுக்கு, இவனா? அவன்! என்ற சந்தேகம் எழாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

“யாருப்பா இவங்க?”

“என் தாய்மாமன் மகனுங்க ம்மா.”

“எனக்குத் தெரியாம யாருடா அது உனக்குத் தாய்மாமன்?”

“அரசி! நீ மட்டும் அவனுக்கு அம்மா இல்ல. லஷ்மியும் அம்மாங்கறத மறந்துட்ட.” சொல்லிக்கொண்டே சத்யப்ரகாஷும் வர,

“ஓ…! லஷ்மி யோட அண்ணன் புள்ளைகளா? வாங்கப்பா!” என மீண்டும் வரவேற்றார்.

“ஆமாம்மா!” என்றவன்,

“முதல்ல வாங்க சாப்பிடலாம். அப்பறமா பேசிக்கலாம்.” என அவர்களை சூர்யா அழைக்க, அவர்கள் தயங்கி நின்றனர்.

“அட வாங்கப்பா! இங்க எதுக்கு கூச்சம். சாப்பிட்டு சாவகாசமா பேசலாம்.” என வலுக்கட்டாயமாக சாப்பாட்டு மேஜைக்கு அழைத்து சென்றார் சத்யப்ரகாஷ்.

பெரியவர் சொல்லை மறுக்க முடியாமல் அவர்களும் செல்ல பார்த்துப் பார்த்து சூர்யாவே அவர்களைக் கவனித்தான்.

“நீயும் உக்காரு சூர்யா! நான் பாத்துக்கறே.” மங்கையர்க்கரசி கூற அனைவரும் சேர்ந்து காலை உணவை முடித்தனர்.

உணவு முடித்து கைகழுவி வந்தவர்களுக்கு துண்டை எடுத்து கொடுத்தான். அனைவரும் வந்து சோஃபாவில் அமர, சற்று நேரம் அவர்கள் ஆசுவாசப்பட தாமதித்தவன்,

“சொல்லுங்க! லஷ்மி அம்மாகூட உங்களுக்கு என்ன பிரச்சினை?” நேரிடையாகவே விஷயத்திற்கு வந்தான் சூர்யா.

சதீஷ் கூறியதை வைத்து லஷ்மி அம்மாவிற்கு, அவரது அண்ணன்‌ குடும்பத்தோடு இருக்கும் பிணக்கை அறிந்தவன், மறுநாளே அதைப்பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தான். அவன் விசாரித்த வரையிலும் லஷ்மியின்‌ அண்ணன்களுக்கு, தங்கையின் மீது வழக்கு தொடுப்பதில் விருப்பமில்லை எனத் தெரிந்தது. அவர்களின் மகன்கள் தான் துள்ளுவதாக அறிந்தான். அதனாலே நேரிடையாக அழைத்து வரச்சொல்லி கார் அனுப்பியிருந்தான. 

“எங்க சொத்து… நாங்க கேக்குறோம்… இதுல பிரச்சினை எங்க இருந்து வந்தது?” நால்வரில் ஒருவன் பதில் கேள்வி கேட்க,

“அதைத்தான் பிறந்தவீட்டு  சீராக் கொடுத்துட்டாங்களே? மறுபடியும் எதுக்குங்க கேக்கறீங்க?”

“அதுக்குப்பதிலாத்தான் வேற இடம் தர்றோம்னு சொல்றோமே?”

“ஏம்ப்பா இவ்வளவு நாளா பாடுபட்ட நிலத்த விடச்சொன்னா எப்படிப்பா?” சத்யப்ரகாஷ் அவர்களிடம் தன்மையாகவே கேட்டார்.

“அதுக்காக யாரு எவருன்னே தெரியாததுகளுக்கு எல்லாம் எங்க பரம்பறை சொத்த விடமுடியாது.” ஒரு‌ இளவட்டம் சற்று துள்ளியது.

“இதுல உங்க அப்பாக்களுக்கெல்லாம் விருப்பம் இல்ல போலியே?” அவன் பேச்சு கோபத்தைக் தூண்டினாலும், சூர்யா அமைதியாகவே கேட்டான்.

“அவங்களுக்கெங்க இப்ப இருக்கற நிலத்தோடு மார்க்கெட் வால்யூ தெரியுது. அந்தக்கால மனுஷங்க. கூடப் பொறந்த பொறப்புனு சென்டிமென்ட் பேசிட்டுத் திரியறாங்க.”

“அப்ப உங்களுக்கு அந்த நிலத்தோட மார்க்கெட் வால்யூதான் உறுத்துது. நம்ம பரம்பரை சொத்துங்கற அக்கறை இல்ல.”

“ஆமா… நாளைப்பின்ன நல்ல விலைக்குப் போகுமுல்ல?”  வந்த நால்வரில் மூவரே  பேசிக்கொண்டிருக்க அதில் ஒருவன் மட்டும் அமைதியாகவே இருந்தான். அதுவே அவனுக்கு‌ இவர்கள் செய்வது பிடிக்கவில்லை எனக்காட்டியது. ஏதோ இவர்கள் வலுக்கட்டாயத்தில் வந்திருக்கிறான்.

“சரி உங்களுக்கு அந்த நிலத்தோட வால்யூ தான் உறுத்துதுனா நான் அதை கொடுத்துர்றேன். அவங்களுக்கு பிரச்சினை கொடுக்கக் கூடாது.”

“அதெல்லாம் வேணாம் சார். நீங்க எதுக்கு அவங்களுக்காக கொடுக்கனும்.” அமைதியாக இருந்தவன் இப்பொழுது பேச, மற்றவர்கள் அவனை முறைத்தனர்.

“நானும் லஷ்மி அம்மா மகன் தான். மகனா என் கடமையை செய்ய நினைக்கிறே. அவ்வளவுதான்.”

“என்ன சார் உங்க பணத்தோட மிதப்பக் காட்டுறீங்களா?” துள்ளிய இளவட்டம் மீண்டும் பேச,

“நான் என் அதிகாரத்தக் காட்டுறதா இருந்தா… ஒரே நாள்ல வேல முடிஞ்சிருக்கும். இப்படி உக்காரவச்சு பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்.”

“…………..”

“லஷ்மி அம்மாவோட அண்ணன் மகனுங்கங்கறதாலதான்… வில்லங்கம் வேண்டாமேன்னு கூப்பிட்டு வச்சு பேசிக்கிட்டு இருக்கேன். ஏன்… இவ்ளோ நாளா சண்முகம் அங்கிளே உங்கள விட்டு வச்சுறுக்கறதே, லஷ்மி அம்மா முகத்துக்காகத் தான. அவங்க அண்ணனுகளுக்காகத் தானே பாக்குறாரு.”

“எங்க அப்பாக்களால தான் இவ்ளோ நாளா கேஸு இழுக்குது. இல்லைனா எப்பவோ முடிஞ்சுருக்கும்.” ஒருவன் முகத்தில் சலிப்பு காட்ட, 

“கண்ணன்னு பேரு வச்சாலே கம்சனும் வந்தே ஆகனும் போல. ஆனா இங்க கம்சனோட பிள்ளைக தான் துள்ளுறாங்க.” என்ற சூர்யா சிரித்தான்.

“சார்… கொஞ்ச நாளா இருந்த உங்களுக்கே எங்க அத்தை மேல இவ்வளவு பாசம்னா, எங்களுக்கு கொஞ்சம் கூட இருக்காதா சார்.” அமைதியாக இருந்தவன் மீண்டும் பேச,

“அப்புறம் ஏன் இவ்வளவு பிரச்சினை பண்றீங்க?”

“எங்க அப்பாக்கள் காலத்தோடு விவசாயத்துக்கு மவுசு கொறஞ்சு போச்சு சார். அத்தைக்கு கொடுத்தது கொஞ்சம் ரோட்டோரமா இருக்குறதால நல்ல விலைக்குப் போகும். அதனாலதான் அதைக் கேக்குறோம்.”  

“வயிறுன்னு ஒன்னு மனுஷனுக்கு இருக்கிறவரைக்கும் விவசாயத்துக்கு மவுசு குறையாதுப்பா. என்ன காலத்துக்குத் தகுந்த மாதிரி நாமளும் கொஞ்சம் மாத்திக்கனும். புதுப்புது உத்திகள பயன்படுத்தனும்.” சத்யப்ரகாஷ் அவர்களிடம் பொறுமையாக எடுத்துக்கூற,

“சொல்றது ஈஸிங்க. வெள்ளாமை செஞ்சு பாத்தாதான் தெரியும். தண்ணி இருந்தா வேலைக்கி ஆள் கிடைக்கறது இல்ல. ஆளும், தண்ணியும் கிடைச்சா வெளச்சல் இருக்கறது இல்ல. வெளச்சல் இருந்தா வெல இருக்கறது இல்ல. ஒவ்வொரு வெள்ளாமையும் போட்டு எடுக்கங்குள்ள நாக்கு தள்ளுதுங்க.” துள்ளிய வன் இப்பொழுது தளர்ந்து பேசினான்.

இவர்கள் பேச்சில் ஒன்று புரிந்தது. இவர்களுக்கு அத்தைக்குக் கொடுத்த சொத்தில் பிரச்சினை இல்லை. அது இருக்கும் இடம்தான் பிரச்சினை. அதனால்தான் மாற்று இடம் கொடுத்து அதைக் கைப்பற்ற நினைக்கின்றனர். சிறிது நேரம் யோசித்தவன்,

“நீங்க என்னைய பார்ட்னரா சேத்துக்கறீங்களா?” கேட்டவனைப் புரியாமல் பார்த்தனர் நால்வரும்.

“விவசாயத்துல என்னங்க பாட்னர்ஷிப் பண்ண முடியும்?”

“அப்ப நீங்க எங்களோட பார்ட்னரா ஆகிக்கோங்க!” என்க,

“நீங்க சொல்றது புரியல!” என்றனர்.

“எம்பேரன் சொன்னது ரெண்டுமே ஒன்னுதான் தம்பிகளா!” என்றார் சத்யப்ரகாஷ்.

“உங்களுக்கு விவசாயம் பண்ணத் தெரியும். எனக்கு வியாபாரம் செய்யத் தெரியும். உங்களுக்குத் தெரிஞ்ச விவசாயிகளையெல்லாம் நீங்க கூட்டு சேத்துக்கோங்க. உங்க விளச்சல நானே நேரடியாக வாங்கிக்கறே. உங்கள எங்க மசாலாக் கம்பெனில பார்ட்னரா சேத்துக்கறே.”

“இதுல எங்களுக்கு எப்படிங்க லாபம்?” அவர்கள் விபரம் புரியாமல் கேட்க,

“முதல்ல… இடைத்தரகர்கள் இல்ல. எப்பவும் நிரந்தரமா ஒரு விலை நிர்ணயம் வச்சுக்கலாம். என் ஃப்ரெண்ட் விஷ்வா உங்களுக்கு புது மெத்தட்ஸ எப்படி யூஸ் பண்றதுன்னு கைடு பண்ணுவான். விளச்சல நாங்க வாங்கி ஸ்டோர் பண்ணிக்குவோம்.”

இவன் சொல்வதைத் கேட்டு அவர்களும் கொஞ்சம் யோசித்தனர். நிரந்தரமான வருமானத்திற்கு வழி கிடைப்பதோடு, நல்ல லாபமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என தெரிந்து கொண்டனர். விஷ்வாவை அனுப்பி அவர்களது நிலங்களையும், சுற்றுவட்டாரப் பகுதிகளையும் பார்வையிடச் சொல்வதாகக் கூறினான். 

“சார்… நாங்க பேசிட்டு சொல்றோம்.” அமைதியாக இருந்தவன் பதில் கூற,

மற்றவர்களின் அமைதியே அவர்களுக்கும் ஓரளவுக்கு சம்மதம் எனத் தெரிந்தது.

சொத்து வழக்கு பற்றி விசாரித்தவன், இடத்திற்குரிய மதிப்பீட்டைத் தான் தருவதாகக் கூற, மறுத்துவிட்டனர்.

“சார்… எங்க அத்தை, பிள்ளைகளோடு இருக்க ஒரு இடம் வேணும்… அவ்வளவுதானேன்னு நினச்சு தான் வேற இடம் தர்றதா சொன்னோம். அவங்க உங்களுக்கு உதவுன்னாங்கங்கறதுக்காக, எங்களுக்காக நீங்க இவ்ளோ யோசிக்கும் போது, நாங்க சீராக்கொடுத்த சொத்துக்குப் பணம் வாங்கினா, அதை விடக் கேவலம் எதுவும் இல்லை சார்.”

இவன் அவர்களுக்கு உதவுவதாகக் கூறியதும், அவர்களுக்கு சிறிது குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டது போலும். எங்கிருந்தோ வந்தவனே அத்தைக்காக இவ்வளவு யோசிக்கும் பொழுது, ரத்தபந்தம்… அவர்கள் தசையும் சற்று அத்தைக்காக ஆடியது போலும். இதற்குத் தான் இன்னா செய்தார்க்கு நன்னயம் செய்யச்சொன்னாரோ நம்ம வள்ளுவர் தாத்தா?  

“முதல்ல… இந்த சார் னு கூப்புடுறத நிப்பாட்டுங்க. எனக்கு நீங்க மாமன் மகனுங்க தான். எப்பவும் மச்சானுங்க தான். மலையேறப்‌போனாலும் மாமன் மச்சான் தயவு வேணும்.” கூறிவிட்டு சிரிக்க, அவர்கள் தான் கொஞ்சம் கூசினர் இவன் வசதி பார்த்து. 

“…………”

“சட்டுனு எப்படி சொந்தம் கொண்டாடறதுனு பாக்காதீங்க. 

நீங்க எல்லாரும் லஷ்மி அம்மாவோட சொந்தம். எங்க அம்மா பக்கம் எனக்கு இந்த மாதிரி சொந்தம் இல்ல. அதனாலதான் உங்களுக்கு என்னைய மாப்பிள்ளையா தத்து கொடுக்கறே.”

அவன் சொன்ன விதம் அவர்களுக்கு சிரிப்பை வரவழைக்க, 

“சரிங்க மாப்ள!”என்றான் அவர்களில் சற்று பெரியவன்.

“ரொம்ப சந்தோஷம் தம்பிகளா. அப்படியே என்னையும் தாத்தனா தத்து எடுத்துக்கோங்க ப்பா. இவன் ஒருத்தனோடயே மல்லுக்கட்டிப் போரடிக்குது!”

சத்யபிரகாஷும் அவர்களது கூச்சம் பார்த்து அவர்களை இலகுவாக்க… அவர் சொல்வதைத் கேட்டு அனைவரும் சிரித்தனர். சற்று நேரம் மற்ற விபரங்களை எல்லாம் அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கிக் கூறியவன், மீதியை விஷ்வா சொல்லித் தருவான் எனக்கூறினான். 

பேசிக் கொண்டு இருந்தவர்கள், சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு சூர்யா. லஷ்மிக்கு பொறந்த‌வீட்டு சொந்தத்த மறுபடியும் தேடிக் கொடுத்துட்ட.” ஒரு பெண்ணாய் மங்கையர்க்கரசி சந்தோஷப்பட,

“அது என் கடமை‌ ம்மா.” என்றான்.

“ஆனா உரிமைய இன்னும் கண்டுக்க மாட்டேங்கிறியே?” மங்கையர்க்கரசி அலுத்துக் கொள்ள, அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை என்பது போல் கடந்து விட்டான்.

நேற்றைய முன்தினம் ஆதியாவின் வீட்டில் அனைவரிடமும் கேள்விகள் கேட்டு தன்கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய பேரனை, தாத்தா தான் சற்று சமாதானப் படுத்தினார். தாத்தா சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் சற்று ஆசுவாசப்பட,

“சரிப்பா கெளம்பலாமா?” சத்யப்ரகாஷ் கேட்க, அவன் திரும்பி தன்னவளைப் பார்த்தான். 

அவன் பார்வையே, “கிளம்பு.” எனக் கட்டளையிட,

அதைப்பார்த்த சண்முகம்,

“கண்ணா! கல்யாணம் தான் அவசரமா முடிச்சுட்ட. யாருக்கும் தெரியாமப் போச்சு. அதனால தாலிபிரிச்சு கோக்குற சடங்கையாவது, ஆதியாவோட சொந்தங்களுக்கெல்லாம் சொல்லி சிறப்பா செஞ்சு, அவங்க வாய அடைக்கனும் கண்ணன்.” என்க,

சண்முகம் கூறுவதைக் கேட்டு சத்யப்ரகாஷும், “அதுவும் சரித்தான். பேரன் கல்யாணத்த தான் பாக்கல. அதையாவது கொஞ்சம் கிரான்டா பண்ணிறலாம்.”

“அதுவரைக்கும் ஆதியா இங்கேயே இருக்கட்டும். அடுத்த வாரத்துலயே ஒரு நல்ல நாள்‌பாத்து முடிவு பண்ணிறலாம்.” லஷ்மியும் கூற,

பெரியவர்கள் பேச்சுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் கிளம்பினான்.

       **************************

“எப்படி இருக்கா… உங்க அருமை மருமக?” நக்கலாக வந்தது விசாரிப்பு.

அலுவலகம் விட்டு வீடு வந்தவன், அன்னையைக் காணாமல் எங்கே என தாத்தாவை விசாரிக்க, ஆதியா வீட்டிற்கு காலையிலேயே சென்றுவிட்டதாகக் கூறியிருந்தார். இரவு வீடு திரும்பிய அன்னையிடம் தன்னவளைப் பற்றி விசாரிக்க,

“என்னடா தம்பி? பேச்சு ஒரு மாதிரியா இருக்கு? அதென்ன உங்க மருமக?”

“ஆமா… உங்களுக்கு மருமகளா நடந்துக்கனும்னு தான, உங்க பேச்சைக் கேட்டா. என் மனைவிங்கற நினைப்பு இருந்திருந்தா என்னைத் தேடில வந்திருப்பா?”

“உனக்கு மட்டும் உன் பொண்டாட்டிங்கற  நினப்பு, இப்பவும் இருக்காடா? தாலி கட்டியது தான் நினைப்புல இல்லைனா, மத்தது எல்லாமா மறந்திருச்சு?” அவரது கேள்வியில் அத்தனை காரம்.

“அதை ஞாபகப்படுத்த வேண்டியவதான் என்னைக் கண்டுக்கவே இல்லயே?” அங்கலாய்த்தான் அவன்.

“இப்ப நீ மட்டும் என்னவாம்? விட்டு வந்து ரெண்டுமூனு நாளாச்சே… என்னா ஏதுன்னு அந்தப்பிள்ளய விசாரிச்சயா? இல்ல ஃபோன் ஏதாவது அந்தப் பிள்ளைக்குப் பண்ணுனியா?”

“அதான், தாலி மாத்தறது, சடங்கு அது இதுன்னு அங்கேயே வச்சுக்கிட்டாங்களே? இங்க தான வரணும். அப்பப் பாத்துக்கறே.”

அன்றே தன்னுடன் அனுப்பவில்லை என்ற கோபம் அவனுக்கு.

“என்ன பேச்சு சூர்யா இது? இங்கதான வரணும்னா என்னடா அர்த்தம்? தாலி கட்டியிருக்கேன், வந்துதானே ஆகணும்ன்னு சொல்ற மாதிரி இருக்கு. தப்புடா.”

பேரனின் பேச்சிற்கு தாத்தாவாக கண்டனம் தெரிவித்தவர்…

“உனக்கு மனைவியா மட்டுமே வரணும்னு நினச்சுருந்தா, அப்பவே அந்தப்பிள்ள வந்திருக்கும் சூர்யா.” என்றார்.

‘இத்தனை நாட்களாக அவளை சந்தித்தலிருந்து இவள் தனக்கு சொந்தமில்லையே என எண்ணும்போது இருந்த மனக்குமுறலும், வேட்கையும் தனக்கு மட்டுமே உடமையானவள் எனத் தெரிந்ததும், கிணற்றுத்தண்ணி… எங்கு போகும் என நினைப்பு வந்துவிட்டதோ. தாத்தா சொல்வது சரிதானோ. தன்னைத் தேடி வராததால் அவள் மீது உரிமையைக் காட்ட வேண்டும் என கணவனாக கோபம் வந்த எனக்கு, அவள் நிலையில் இருந்து… காதலனாக யோசிக்க மறந்துவிட்டேனோ?’ மனம் யோசித்துக்கொண்டிருக்க,

“என் மருமக சொன்னது கரெக்ட் தான்டா. நான்தான் உன் பொண்டாட்டினு அப்பவே அந்தப்பிள்ள வந்திருந்தா கடனேனுதான் வாழ்ந்திருப்ப”

“இப்ப என்ன பண்ணிட்டேன்னு ரெண்டு பேரும் இந்தக்குதி குதிக்கறிங்க?” தன் தவறை மறைக்க, கோபம் காட்டினான் தாயிடம்.

“ஏன்டா கேக்க மாட்ட? இன்னைக்கு முச்சூடும், வாசல்ல சத்தம் கேக்கும் போதெல்லாம் வாசலையே பாத்துப்பாத்து பிள்ளைக்கு கண்ணு பூத்துப்போச்சுடா.”

“இன்னைக்கு மட்டும் என்னவாம் அம்மணி ஸ்பெஷலா எதிர்பாத்திருக்காங்க?”

“ஏன் சூர்யா? இந்த நாளக்கூட அந்தப்பிள்ள தான் உனக்கு ஞாபகப்படுத்தனுமாடா? நீயா தெரிஞ்சுக்கிட்டு வருவேன்னு எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.” அன்னையின் வார்த்தைகளில் அத்தனை சீற்றமும், ஆதங்கமும் அவன் எதிர்பாராதது.

அப்படி எதை மறந்தோம்? இன்றைக்கு என்ன நாள் என யோசித்தவனுக்கு,  அந்த நாள் நினைவு வர… ஒருநிமிடம் தன்னவளை நினைத்து இயல்பாக துடிக்கும்  இதயம் இயந்திரமாக வேகமெடுத்தது. 

“ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு சூர்யா. அந்தப்பிள்ள அப்பவே வந்திருந்தா, இந்த அளவுக்கு உனக்கு ஈர்ப்பு வந்திருக்குமா? இந்தப் பிரிவுதானடா உனக்கான தேடல அதிகப்படுத்தி இருக்கு.” 

அன்னையின் வார்த்தைகள் சுட்டிக்காட்டிய உண்மை, அவனுக்கு உறுத்தியது.

காதலும் காந்தப்புலமும் ஒன்று. எதிரெதிர் காந்த துருவங்களுக்கு இடைப்பட்ட ஈர்ப்பு விசை ஒரு குறிப்பிட்ட தூரம் தான். அந்த தொலைவிற்குள் இருக்கும் வரைதான் ஒன்றையொன்று ஈர்க்கும். எல்லைக்கு அப்பாற்பட்டு ஈர்க்க முடிவதில்லை. ஒட்டிய துருவங்கள் ஈர்க்க முற்படுவதில்லை. இவனும் அப்படித்தான்… தன் சிந்தனை முழுமையும், ‘ஏன் என்னைத் தேடி வரவில்லை.’ என கோபப் புள்ளியில் குவியம் செய்தவன், தாலி கட்டியிருக்கிறேன்… இங்கு தானே வரவேண்டும் என எண்ணிக்கொண்டான். இந்த இடைவெளி தான் தனக்கு, தன்னவளுக்கான தேடலையும், அவள் மீதான ஈர்ப்பையும் அதிகப்படுத்தியது என உணராமல்.

ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்று கொண்டு அவள் தன்னைச் சுழற்றியிருக்கிறாள் என்பது புரிந்தது. 

தன்னவளை நினைத்தவன் ஒருநொடியும் தாமதிக்கவில்லை. 

இந்த நாள் தனக்கு விபத்து நடந்த நாள். அப்படியெனில் தன்னவள் தன் பெற்றோரை இழந்த‌ நாளாயிற்றே.

“லஷ்மியோட அண்ணன் புள்ளைகளும் வந்து அவங்கள களத்து வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க.” அன்னையின் தகவல் காற்றோடு வந்துதான் அவன் செவியை எட்டியது. நின்று கேட்க அங்கே அவன் இருந்தால் தானே. 

லஷ்மி யின் அண்ணன் மகன்கள் வந்து அழைக்க, தயங்கி நின்ற லஷ்மியை, “அவளோட கண்ணன் வந்து, அவன் பொண்டாட்டியப் பாத்துக்குவான். நீ தைரியமாக கிளம்பு லஷ்மி.” என்று கூறிவிட்டு தானே வந்திருக்கிறார்.