💕நெஞ்சம் மறப்பதில்லை.💕28 final..

  1. நெஞ்சம் மறப்பதில்லை.28.

அவினாசி. பூர்விக வீடு. தாலிமாற்ற முகூர்த்தம் குறிக்கப்பட, இடம் மட்டும் நம்ம அவினாசி வீடுதான் என்று உறுதியாகக் கூறிவிட்டான். 

கொங்குமண்டல தொட்டிக்கட்டு வீடு. நடுவில் திறந்தவெளி முற்றத்தோடு, நாலாபுறமும் அறைகள் என விசாலமான அந்தக்காலத்து காரைவீடு. வாசல் நிலைப்படியே அவ்வீட்டில் வாழ்ந்தோரின் செல்வசெழிப்பைக் கம்பீரமாய் கட்டியம் கூறி நிமிர்ந்து நின்றது. பெரிய பெரிய உத்திரக்கட்டைகள் கொண்டு மச்சடைத்ததும்… கடைந்தெடுத்த தேக்கு மரத் தூண்கள் பளபளவென மல்யுத்த வீரனின் தோள்களைப்போல வாலிப்பாயும். 

திறந்தவெளி முற்றம்… இந்த முற்றம் தன் சந்ததியினரின் எத்தனை விசேஷங்களைப் பார்த்திருக்கும். எவ்வளவு மழை, வெயில், பனி என எத்தனை பருவமாற்றங்களை உள்வாங்கியிருக்கும். எத்தனை வயல் வெள்ளாமைகளுக்கு களமாகி இருக்கும். தன் தலைமுறையினருக்கு சிறுவயதில் எத்தனை பேருக்கு விளையாட்டுக் கூடமாகியிருக்கும். கூட்டுக்குடும்ப கொண்டாட்டங்கள் எத்தனை எத்தனை கண்டு களித்திருக்கும். நிலா வெளிச்சத்தோடு எத்தனை நிலாச்சோறு விருந்து இந்த முற்றம் பார்த்திருக்கும். எத்தனை பிள்ளைகள் இந்தத் தூண்களில் மறைந்து கண்ணாமூச்சி ஆடியிருப்பர். 

இன்று தனது நிகழ்கால தலைமுறையின் எதிர்கால வாழ்விற்கு, அஸ்த்திவாரம் போட தயாராகிக்கொண்டு இருக்கிறது.

திருமணவைபவத்திற்கு சற்றும் குறைவில்லாமல் இதை ஏற்பாடு செய்திருந்தார் சத்யப்ரகாஷ். வெகுநாட்களாகக் காத்திருந்த, ஒரே பேரனின் விசேஷம் ஆயிற்றே! பூர்வீக ஊர் என்பதால் அவருடைய பால்ய கால நட்புகள் ஒருபக்கம், பங்காளி, மாமன் மச்சான் ஒருபக்கம் என வீடு சொந்தங்களால் நிறைந்து காணப்பட்டது.

லஷ்மி யின் அண்ணன் மகன்கள் முன்னின்று எடுத்து நடத்த, ஆதியாவின் சொந்தங்கள் அனைத்தையும் பேருந்து ஏற்பாடு செய்து வரவைத்திருந்தான் சூர்யா.

விசேஷத்திற்கு வந்திருந்த நந்தினி, ஆதியாவை முறைத்துக் கொண்டே வீம்பாகத் திரிய, 

“நந்தினி சாரிடி… உன்கிட்ட மறைக்கனும்லாம் இல்ல. எல்லார்கிட்டயும் சொன்னதையே உன்கிட்டயும் சொல்ல வேண்டியதாப் போச்சு.”

“பேசாத எங்கிட்ட! அப்ப மத்தவங்களும் நானும் ஒன்னு. அப்படித்தான.”

தோழியாக நெருங்கிப் பழகியவள்‌ தன்னிடம் மறைத்துவிட்டாளே என்ற ஆதங்கம் அவளுக்கு.

“இப்ப என்ன? நங்கையா வீம்பக் காட்டுறியா?” அமைதியாக இருந்தால் இவளிடம் வேலைக்காகாது என, சற்று குரல் உயர்த்தியவள்,

“நாத்தி அதிகாரத்த நீ எப்படி வேணாலும் காமி. ஆனா பேசாம‌ மட்டும் இருக்காத நந்து. எனக்கிருக்கிறது ஒரே ஒரு ஃப்ரெண்ட். என்னப் பாத்தா பாவமா இல்லையா?” முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு கேட்க,

“யாரு… நீயா‌ பாவம்? சரியான அமுக்குணிடி நீ! ஆமா… புள்ள எங்கயாவது படிக்குதா? முதல்லயே சொல்லிரும்மா. இன்னொரு அதிர்ச்சிய இந்த நெஞ்சு தாங்காது.” பட்டென்று நெஞ்சில் கைவைத்து சொன்னவளைப்பார்த்து ஆதியா சிரிக்க,

“சிரிக்காத… இப்படி சிரிச்சே, ஊமைக்கோட்டானாட்டம் எல்லாத்தையும் மறச்சுட்ட! சும்மாவா சொல்லியிருக்காங்க, ஊமையா இருக்கவங்கள நம்பக்கூடாதுனு.” 

“நானொன்னும் ஊமை இல்லயே? அப்ப என்னை நம்பலாம்.”

“சோத்துல பூசணிக்காய மறச்ச மாதிரி புருஷனையே மறச்சவளாச்சே?”

“அது எப்படி நந்தூஉஉ… சோத்துல பூசணிக்காய மறைக்கிறது?” 

“எனக்கெப்படித் தெரியும்? நீதான் அதுல எக்ஸ்பர்ட் ஆச்சே?”

“மறச்சதுக்குத் தண்டனையா வேணும்னா எங்களுக்கு பொறக்கப்போற பிள்ளைகளுக்கு அத்தை சீரெல்லாம் நீயே செஞ்சுறேன். கூடக்கொறைய இருந்தாலும் மனங்கோணாம வாங்கிக்கறே.” என அவளுக்கு அத்தை உரிமையைக் கொடுக்க, முறுக்கிக் கொண்டிருந்தவள் பட்டென சிரித்து விட்டாள்.

“என்னம்மா… இன்னும் ரெடியாகலியா?” கேட்டுக் கொண்டே மங்கையர்க்கரசி வர,

“இதோ ரெடியாகிட்டேன் அத்தை.” என்றவளைப் பார்த்தவர், 

“அப்படியே எங்கண்ணே பட்ரும்போல இருக்க!” என்று மருமகளின் தோற்றத்தை மெச்சியவராக… கன்னம் தடவி நெட்டி முறித்தார்.

“கீழ எல்லாம் ரெடிபண்ணியாச்சு. இறங்கி வாங்கம்மா!” என அழைத்து விட்டு செல்ல,  

மயில்கழுத்து வண்ண சாமுத்ரிகா பட்டில், சர்வலட்சணங்களோடு தளரப்பின்னிய இடைதாண்டிய கூந்தலில், முல்லைச்சரம் தோள்வழிய, சந்தனச்சிலையென தன்னவனின் கண்ணையும், கருத்தையும் ஒருசேர கவர்ந்தவளாக இறங்கி வந்தாள். 

வந்தவளும்… பட்டு வேஷ்டி சட்டையில், சபையில் தாத்தாவோடு நின்றுகொண்டு வந்தவர்களை உபசரித்துக் கொண்டு, தன்மீது வைத்த கண்ணை எடுக்கமுடியாமல் தடுமாறியவனைத்தான் கண்களில் நிரப்பிக் கொண்டு இறங்கினாள்.

வீடு முழுக்க பூந்தோரணமும், மாவிலை தோரணமும், மங்களகரமாய்.

முற்றத்தில் மனைபோடப்பட்டு அதன்மீது புது வெள்ளைத் துணி விரிக்கப்பட்டிருந்தது. சண்முகம் மற்றும் லஷ்மி சார்பாக பிறந்தவீட்டு சீர்வரிசைத்தட்டுக்களை பிள்ளைகள்  கொண்டு வந்து வைத்து சபை நிறைத்தனர்.

மனையில் இருவரும் வந்து அமர, பழுத்த சுமங்கலிகள் கொண்டு செயினில் தாலி உருக்கள் கோர்த்து வைக்க, முன்நிற்க சங்கோஜப்பட்ட லஷ்மியையும், மங்கையர்க்கரசியையும் முன்னுக்கு அழைத்து, தாலிச்செயினை எடுத்துத் தருமாறு பணித்தான் புதல்வன்.

ஆதியாவின் கழுத்திலிருந்த மஞ்சள்கயிறிலிருந்த மோதிரமும் உருக்களோடு சேர்த்து கோர்க்கப்பட்டிருக்க, தாலிச்செயினை தனது அன்னைகளின் கையிலிருந்து வாங்கியவன், தன்னவள் கண்கலந்தவாறே, ஒவ்வொரு மணித்துளிகளையும் தனது நினைவுப் பெட்டகத்தில் பொக்கிஷமாக சேமித்தவனாக… சகதர்மினியின் சங்கு கழுத்தில் அனுவிக்க… தன்னவளின் கண்களிலிருந்தும் ஒருசொட்டுக் கண்ணீர் ஆனந்தமாக அவன் கைமீது. 

சந்தோஷமோ துக்கமோ கண்கள் முதலில் தூதுவிட்டு அழைப்பது என்னவோ கண்ணீரைத் தான்.

நந்தினி குங்குமச்சிமிழை எடுத்துக் கொடுக்க, மாங்கல்யத்திலும், நெற்றிவகிட்டிலும் குங்குமம் வைத்தவன், அவளது கன்னம் தாங்கி, தன்னவளை நோக்கிக் குனிந்து நெற்றியில்‌ அழுந்த முத்தமிட… 

“ஹோஓஓ…” வென சந்தோஷக்கூக்குரல் பிள்ளைகள் மத்தியில் இருந்து.

சபையின் முன்‌ காளையவன் செய்கை, கன்னியவளின் நலுங்கு வைத்த கன்னத்திற்கு நானச்செம்மை பூச,

நிமிரமுடியாமல் முகம் புதைத்தாள் தன்னவன் தோள்மீதே!

இந்த அழகான காட்சியையும் விஷ்வா தனது கைபேசியில் தவறவிடாமல் சேமித்தான்.

“சதீஷ்! விருந்து ஓகேவா?” சாப்பிட்டு முடித்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம், சூர்யா விசாரித்தான்.

“கண்ணா அண்ணா போட்ட கேசரிக்கு சூர்யா மாமா போட்ட விருந்து எவ்வளவோ மேல்.”

கல்யாண‌ விருந்தாக பனியாரம், ஆப்பம், சந்தகம் முதற்கொண்டு ஆனபண்டம் அத்தனையும் இலையில் வரிசை கட்டி நின்றதை மூக்குப்பிடிக்க ஒருகை பார்த்தவன் தான் இவ்வாறு கூறியது.

“ஏன்டா கொங்கு நாட்டு சமையல் அத்தன வகையும் போட்டுருக்கே. ஏதோ போனாப்போகுதுன்னு சொல்ற மாதிரி சொல்ற.”

“நாங்க பொண்ணு வீட்டுக்காரங்க மாமா. அப்படித்தான் பவுசு காட்டுவோம்.”

“ஏன்டா இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான்டா செய்வாங்க. இங்க நாங்க அடக்கித்தானடா வாசிக்கிறோம்.”

“மாமா… எந்தக் காலத்துல இருக்கீங்க? பொண்ணு கிடைக்காத நைன்டிஸ் கிட்ஸ் கிட்ட கேட்டுப்பாருங்க… பொண்ணுவீட்டுக்காரங்கனா எவ்வளவு கெத்துன்னு தெரியும்.” என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டான். 

வந்தவர்களைக் கவனித்து அனைவரையும் வழியனுப்பி விட்டு, கடைசிப் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு முடித்த விசேஷ வீட்டுக்காரர்களாக, அலுப்பார… கூடத்தில் சேர்களைப் போட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“சரிடா… நாங்க கிளம்பறோம்.” என விஷ்வா கூற,

“டேய்! நாளைக்கு கறிவிருந்து இருக்கு. அதுக்குள்ள கிளம்பறேங்குற?”

“அப்படிங்கறே? சரி… ஆளுக்கொரு ரூமாப்பாத்து செட்டிலாக வேண்டியதுதான்.” என கூறியவனைப்பார்த்து,

“டேய்ய்ய்….!” என அதிர்ச்சியாக,

“தெரியுதுல்ல!” என்றவாறு வாயில் கைவைத்து சைகை காட்டியவன்,

“அடேய்… நல்லவனே! தொடச்சுக்க ராசா!  நீயே எப்படா போவீங்கனு தொறத்துறதுக்குள்ள நாங்களே மரியாதையா கிளம்பிர்றோம். அதெல்லாம் கறிவிருந்துக்கு டான்னு டயத்துக்கு ஆஜராகிருவோம்.”

நண்பனிடம் கூறியவன், அவனது அசட்டுச் சிரிப்பை காணச்சகியாதவனாக, பிள்ளைகள் மற்றும் சண்முகத்தோடு கிளம்பினான். 

   ******************************

“இப்படியே எவ்வளவு நேரம் நிக்கறதா உத்தேசம்?” 

படுக்கையறைக் கதவில் தாழ்வைத்துவிட்டு, உள்ளே வந்தவன், வெளிமாடத்திற்கு செல்லும் வாசலில் சாய்ந்து கையைக் கட்டிக் கொண்டு நின்றவாறு,  மாடத்து ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு காலில் வேரோடியவளாக நின்றவளைப்பார்த்து வினவ… அவள் திரும்பியும் பார்க்கவில்லை. 

தைமாதப் பனிமூட்டமும், சாளரத்தில் விழுந்த முழுநிலவொளியும் மங்கையவளை மோகச்சித்திரமாய் மாற்றியிருக்க,

சிவப்பு வண்ண ஷிஃபான் புடவை சந்தனமேனியைத் தழுவி இருக்க, ரவிவர்மன் ஓவியமாய் ஒயிலாக நின்றவளை அவன் பார்வை விழுங்கிக் கொண்டிருந்தது.

ஊஞ்சலுக்கும் படுக்கையறைக்கும் இடையில் பத்தடி தூரம் தான் இருக்கும். அதுவே அவளுக்கு  பெரிய மலையைக் கடப்பது போல் இருக்க, மலைத்துப் போய் நின்றாள். முதன்முதலாக அலுவலகத்தில் அவனை சந்தித்தவேளையில், ஃபைலை இறுகப் பற்றிக் கொண்டு படபடத்து நின்றவளது தோற்றமும் கூடவே நினைவு வந்தது அவனுக்கு. தன்னவனைக்கண்டு அன்று அவள் அதிர்ந்து நின்றதும், தன்னவள் என்று அறியாமலே அன்று இவன் மயங்கி நின்றதும் நினைவில் நிழலாட, சிறு புன்னகை இதழில். மறந்தாலும் மரத்துப் போகாத உணர்வது என்று இன்று தோன்றியது.

“இப்ப… எனக்கு அங்க வந்து உன்ன அப்படியே அள்ளிக்கிட்டு வரனும்னு தோனுது. ஆனா உனக்கு தான் அது பிடிக்காதே.” என்றான், அன்று மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தவளை தூக்க முற்பட்டபோது மறுத்ததை நினைவில் கொண்டு கூற,

“அன்னைக்கி… பிள்ளைகளும் பெரியவங்களும்… நம்மல சுத்தி இருந்தாங்க… அதனால ஒரு மாதிரியா இருந்துச்சு…” என்று வார்த்தைகள் உள்ளே வெளியே விளையாட திக்கித்தினறி சொல்லி முடித்தாள்.

இதையே தான் அன்று புடவை எடுக்கும் பொழுதும் அவளவன் கூறினான். அடுத்த முகூர்த்தத்திற்கு நானே தேர்வு செய்கிறேன் என அவளைச் சீண்டியவன், அவளை அழைத்துச்சென்று தேர்ந்தெடுத்தது, சிவப்பு வண்ணத்தில் ஆங்காங்கே சிறுகற்களுடன் கூடிய ஷிஃபான் புடவையைத் தான். அவள் மெச்சுதலாக அவனைப் பார்க்க… “என்ன… அம்மணி வேறமாதிரி ட்ரெஸ்ஸ எக்ஸ்பக்ட் பண்ணீங்களாக்கும்?” என வினவ,

“ம்கூம்…. ம்ம்ம்…”. என ரெண்டுங்கெட்டானாக தலையை ஆட்டி வைத்தாள். 

“அதெல்லாம் நம்ம தனியா ஹனிமூன் போறப்ப…” என்று கூறி கண்சிமிட்டியவன்,

“எப்படியும் அன்னைக்குன்னு லஷ்மியம்மா, அம்மா, பிள்ளைக எல்லாம் இருப்பாங்கள்ல. நானும் குடும்பஸ்தனாக்கும். எங்களுக்கும் இங்கிதம் தெரியும்.” என்றவனை  காதல் பொங்க பார்த்து வைத்தாள்  கன்னியவள். எந்தச் சூழ்நிலையிலும் தன்னவளை சங்கடப்படுத்திப் பார்க்க விரும்பவில்லை. ஆனால் அந்த புடவைக்கு அவன் கொடுத்த விளக்கம் தான் அவளை சிரிக்க வைத்தது. சின்ன வயதில் தாத்தாவுடன் அமர்ந்து அடிக்கடி பார்த்த வசந்தமாளிகையின், ‘மயக்கமென்ன…’ பாடலின் தாக்கம் தான் இந்தச் சிவப்பு புடவை மோகம் என்று கூற, வெகுநாட்கள் கழித்து வாய்விட்டு சிரித்து விட்டாள்.

அப்புடவை… தன்னவளின் தாழம்பூ மேனியைத் தழுவியிருக்க, தோள் தழுவிய ஜாதிமல்லியோ ஜாடை காட்டியது.

“அப்படினா…. இப்ப வந்து தூக்கிக்கலாம்ங்கறயா?” அவளது பதிலை மீண்டும் எதிர்பார்க்க,

‘அய்யோ!’ என்றிருந்தது அவளுக்கு.

அவள் முன் வந்து நின்று அவளை ஏற இறங்கப் பார்த்தவன்,

“விடிஞ்சிறும்…” என அலுத்துக் கொள்ள, ஏனென்று கேள்வியாக நிமிர்ந்தாள்.

”நகைக்கடையவே இல்ல போட்டு விட்டுறுக்காங்க.” என கேலிபோல் கூறினான்.

“ஆமா… எங்கம்மா நகை, அத்தையோட நகை, அதுமட்டுமில்லாம பாட்டியோட ராசியான நகைன்னு தாத்தா கொடுத்த அட்டிகை வேற…” என சினுங்கினாள். வீட்டில் விசேஷம் என்றால்கூட ஒரு சிறுநகையும் போடமாட்டேன் என தாயிடம் வழக்கடிப்பவளுக்கு, மாமியார் இருவரும் அத்தனையும் பூட்டிவிட்டுச் சென்றிருந்தனர். 

“என் நிலைமைதான் கஷ்டம் போலயே?” என சலித்துக் கொண்டவனிடம்,

“போட்டுட்டிருக்கற எனக்கில்லாத கஷ்டம், உங்களுக்கு எங்க இருந்து வந்ததாம்?” எனச் சிலுப்பினாள்.

“ஏன்டி… இதுக்கே கோழிகூவிறும். மத்ததெல்லாம் எப்பத் தொடங்கறதாம்.” கள்ளனாய்க் கண்சிமிட்ட,

“எதுக்கே கோழிகூவ்…” எனக் கேட்க வந்தவள், அவனது சில்மிஷம் பார்வையைப் பார்த்துவிட்டு, ஏதோ ஏடாகூடமா நினச்சுருப்பாங்க போலயே என யோசித்தவளாக, பேச்சைப் பாதியில் நிறுத்தினாள்.

“என்ன ப்ரேக் போட்டுட்டு?”

“எப்படியும் ஏடாகூடமாத்தான் யோசிச்சிருப்பீங்க?”

“அப்பறம் இங்க வந்து பாகவதம் பத்தியா யோசிக்க முடியும். சாமி கண்ணக்குத்திறாது?”

அவனது பேச்சில் சிரிப்பு வந்தாலும், அதன் அர்த்தத்தில் முகம் சிவப்பை அப்பிக்கொள்ள, அவன் முகம் பார்க்காமல் ஊஞ்சல் சங்கிலியில் இருந்த யானையை சுரண்டிக்கொண்டிருந்தாள்.

”இன்னும் நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லல?” மீண்டும் அவன் கேட்க, கேள்வியில் கடுப்பாகியவள்,

“இந்த சூர்யா எப்பவும்‌ ஸ்லோ தான். கண்ணா தான் செம ஸ்பீடு. ரெண்டே மாசத்துக்குள்ள கல்யாணம் வரைக்கும் போயாச்சு. நீங்க என்னடான்னா பத்து மாசத்துக்கு மேல ஆகியும் இன்னும் கையக்கட்டிகிட்டு வேடிக்க மட்டும் பாக்க வேண்டியது.” அவளுக்கிருந்த படபடப்பை வார்த்தைகளாகக் கொட்ட, 

அவனும் அவளைப்பார்த்தவுடன், மூச்சு முட்டியதைத்தான், ஏதேதோ பேசியே சமாளித்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு எங்கே தெரிகிறது!?

பெண்மைக்கு மட்டுமல்ல… முதன்முதலாக பெண்மையை அறியும் ஆண்மைக்கும்… தடுமாற்றம் இயல்புதானே!?

“அடிங்க… இங்க எனக்குப் போட்டி அந்தக் கண்ணனா? இப்ப பாரு இந்த சூர்யா யாருன்னு காட்டுறே?” என்றவன் வாரி அள்ளிக் கொண்டான் வஞ்சியவளை. கழுத்தில் முகம் புதைத்து கட்டிக்கொண்டாள் காளையனை.

மலர்மாலையாய் மங்கையை மஞ்சத்தில் கிடத்தியவன்,

மெட்டி விரலில் குட்டியாய் முத்தமிட்டு அச்சாரம் போட்டுத் துவங்க, அடுத்து சிணுங்கி சிலுப்பிக்கொண்ட கொலுசுக்கு முத்தமிட்டு கெண்டைக்கால் வலம் வர, அங்கே சிணுங்கியது கொலுசு மட்டுமல்ல.  இடை தழுவிய மேகலைக்கு இதழ் முன்னேற்றம் பெற… அவன் இதழ்கள் மேகலையின் பணியைக் கைமாற்ற… இல்லையில்லை இதழ்மாற்ற, இதழ்வேலை சற்று இளைப்பாறியது இடையில். அடுத்து அவன்‌ இதழ் வரும் இடமறிந்து, உச்சி முதல், உள்ளங்கால் வரை கூசியவளாய், இடக்கை கொண்டு அவன்முகம் தடுக்க… அது என்ன ஆற்று வெள்ளமா அணைபோட. புது மோகவெள்ளத்தில் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம். வரைமுறை பார்க்காது. பார்க்கவும் தெரியாது. மேடு பள்ளம் பாராது தடை அகற்றி பாய்ந்தோடும். முகம் மறைத்த கரம் பற்றி கணையாழியில் முத்தம் பதித்து இதயம் தீண்ட, இனி தடை போடமுடியாது என அறிந்தவளும், அழகாய் வளைக்கரம் கொடுத்தாள் வாகாக… அடுத்த முத்தத்திற்கு. மணிக்கட்டில் வளையல்களாய் வலம் வந்தவன், ஆரமாய் மார்தழுவி, அட்டிகையாய் கழுத்தில் ஊர்வலம் நடத்தி, அடுத்து ஊர்ந்த இடமோ, அணைத்து நாடிநரம்புகளையும் சிலிர்க்க வைக்கும் செவியில் ஜிமிக்கியாய் சில்லிப்பூட்டியவன், அவனுக்கு மிகவும் பிடித்த ஒற்றைக்கல் மூக்குத்திக்கு செல்ல முத்தம் வைத்தான் இஷ்டமாய். நெற்றி முட்டி சுட்டியாய் ஒரு முத்தம் நெற்றிசுட்டிக்கு,  உச்சிஏறி சந்திரபிறை, சூர்யபிறை தொட்டவன், முத்தப்புள்ளியை முற்றுப்புள்ளி ஆக்காமல் தொடர்புள்ளியாக்கினான் அடுத்த அடி எடுத்து வைக்க.

இந்தப் பண்டமாற்றுக்காரன் பலமுத்தம் கொடுத்து, ஈடாக ஒரு முத்தம் பாவையிடம் பெற்றுக் கொண்டு நட்டக்கணக்கையும் லாபக்கணக்காக மாற்றிக் கொண்டிருந்தான் தன்னவளிடம்.

கொஞ்சினான்… கெஞ்சினான்… மிஞ்சினான்… விடியலில் கண்துஞ்சினான்.

“காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த.” விடிந்து தன்னவளின் சோபைமிளிர்ந்த முகத்தைப் புன்னகையோடு பார்த்தவனுக்கு மனதில் தோன்றியது, சாண்டில்யன் கடல்புறாவின் முதல் வரி. 

குழந்தை கலைத்த கோலம் மட்டுமல்ல… கொண்டவன் கலைந்த கோலமும் அழகாகியது அனங்கவளுக்கு.

“தியா…” அவளைத் தொட்டு எழுப்ப,

“ம்ப்ப்ச்ச்… தூங்க விடுங்க கண்ணன்.” என்று மீண்டும் போர்வைக்குள் சுருண்டவளை,

“அடியேய்! மணி எட்டாகுது. என் கொழுந்தியாளுக வந்து மானத்த வாங்கறதுக்குள்ள, குளிச்சிட்டு கீழபோகணும். எந்திரிடி…” அதட்டலாக ஆரம்பித்து கெஞ்சலாக முடிக்க,

பட்டென்று கண்விழித்தவள், போர்வையோடு சுருட்டிக் கொண்டு குளியலறை புகுந்தவளை, அவனது கேலிச்சிரிப்பு பின்தொடர்ந்தது.

குளித்துவிட்டு கீழே இறங்கி வர, லஷ்மியும், மங்கையர்க்கரசியும் அடுக்களையில் வேலையாக இருந்தனர்.

சத்யப்ரகாஷ் வாக்கிங் எனும் பெயரில் தனது பால்ய கால நண்பர்களைப் பார்க்க விடியும் முன்னே கிளம்பிவிட்டார்.

“வாம்மா! குளிச்சுட்டியா? சாமியறையில போய் விளக்கேத்திட்டு வாம்மா! காஃபி கலந்து வைக்கிறேன்.” என்று மாமியார், வீட்டுக்கு வந்தவளுக்கு முதல் பொறுப்பைக் கொடுக்க,

“சரிங்க த்தை.” என்று பூஜையறை சென்றாள்.

விளக்கேற்றி வந்தவள் அடுக்களை செல்ல, “ஆதிம்மா! தலைய நல்லா துவட்டு. இன்னும் ஈரம் சொட்டுது பாரு.” குளித்து முடித்து நீளக்கூந்தலில் நுனியை மட்டும் முடி போட்டிருந்தவளிடம், லஷ்மி கூற,

“ஆதியாவுக்கு நல்ல முடி. நல்லா வளத்தியா இருக்கு.” என்ற மாமியாரின் வார்த்தையைக் கேட்டவள்,

“இதுக்கே எனக்கும் எங்கம்மாவுக்கும் சண்டை வரும் அத்தை. நான் முடிய வெட்டப்போறேன்னு சொல்லுவே. அவங்க உடனே கரண்டியத்தூக்கிட்டு வருவாங்க. தல தேய்ச்சு விடுற மாமியாராப் பாருங்கனு கண்டிஷனே போட்டுறுக்கேன்னா பாருங்களே.” அன்னையின் நினைவில் கண்கள் சிவப்பேற, சிரித்துக் கொண்டே கூறியதைக் கேட்டு இருவரும் சிரிக்க…

இவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டே இறங்கி வந்தவன்‌ ஆதியாவை முறைத்துப் பார்த்தான். 

‘இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி முறைக்கறாங்க. ஒருவேள அவங்க அம்மாவுக்கு வேலசொல்றேனு முறைக்கறாங்களா?’ என்று யோசித்தவாறே அவனுக்கும் காஃபி எடுத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள்.

“உனக்குக் கொஞ்சம்‌கூட விவஸ்தையே இல்ல.” மெதுவாகக் கடிந்தவனிடம்,

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு கோவிக்கறீங்க? முதல்ல தெரபிஸ்ட்டுகிட்ட கூட்டி போயி, கொஞ்சம் கண்ணனையும் வெளிய கொண்டு வரனும். சூர்யாவா இருந்துகிட்டு எப்பப்பாரு மொறச்சுகிட்டே திரிய வேண்டியது.” முகத்தைச் சுருக்கிக் கொண்டு கூற,

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். இதுதான் நல்லா இருக்கு. அடுத்தவன் பொண்டாட்டிய சைட்டடிக்கற மாதிரி.” அத்தனை எள்ளல் முகத்தில்.

“ச்ச்சீசீ… பேச்சப்பாரு. வரவர ரொம்ப மோசமா போயிக்கிட்டு இருக்கு. சரியில்ல…” விரல் நீட்டி எச்சரிக்க,

“நீ மட்டும் சூர்யா வேணாம். கண்ணன் தான் வேணும்னு கேக்கலாம். நான் மட்டும் அவன் பொண்டாட்டிய சைட் அடிக்கக் கூடாதா?”

“அப்பறம்… எப்ப பார்த்தாலும் மொறச்சுட்டே திரிஞ்சா… வேற என்ன சொல்றதாம்?”

“ஏன்டி! நீ சொன்னது மாமியாருக்கு போடற கண்டிஷனா? புருஷனோட டாஸ்க்க மாமியாவுக்குக் கொடுக்கற. கொஞ்சமாவது ரொமான்டிக்கா யோசிக்கறியா?”

“அப்ப எனக்கு அப்படித்தான் தோனுச்சு. அம்மாவுக்கு அடுத்து மாமியார் தானன்னு.”

“இப்ப பல்பு எரிஞ்சிறுச்சாக்கும். என் பொண்டாட்டிக்கு அம்மாவுக்கு அடுத்து எல்லாம் நானத்தான் இருக்கனும். அது என்னோட அம்மாவா இருந்தாலும் ஊடால வரக்கூடாது.” அவனது பேச்சில் உள்ளம் குளிர,

“அதுசரி… தானா வந்து சிக்குற அடிமைய யாரு வேண்டாம்பாங்க?”

“பொண்டாட்டிக்கு எப்படி சேவகம் பண்ணனும்னும் தெரியும். அதுக்குப் பலன எப்படி அனுபவிக்கறதுனும் தெரியும்.” என்று கூறி கண்சிமிட்ட,

“இது எதுவுமே சொல்லிக் கொடுக்காம சரஸ்வதி டீச்சர் போயிருச்சு. ஒழுங்கா சமைக்கக் கத்துக்கோ, வீடுவாசல‌ ஒதுங்க வை… போற இடத்துல என்ன பிள்ள வளத்துருக்காங்கனு பேசுவாங்கனு சொன்னாங்களே ஒழிய, இதெல்லாம் சொல்லித்தரல பாத்திங்களா?” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்க,

“ஏன்டி!! இதெல்லாமா அம்மா சொல்லித்தருவாங்க. அவுட்டோர் தான்டி அவங்க சொல்லித் தருவாங்க. இன்டோர் நான் தான்டி சொல்லித்தரனும். இதெல்லாம் அகத்தினை டி. இருந்தாலும் இந்த சிஷ்யை ஸ்லோவ் லியனர் தான்.”

“குருவுக்கு எல்லாம் தெரியுமோ?”

“தந்திரம் அறிந்த சூத்திரதாரியாக்கும் இந்த குரு.” குனிந்து அவள் காதருகில் கிசுகிசுக்க,

“அப்ப குருவோட போதனையைப் பொறுத்து தான் சிஷ்யையோட திறமை வெளிப்படும்.”

“வாத்தியார் மகளுக்கு பள்ளியறை பாடத்தை எக்ஸ்ட்ரா க்ளாஸ் வச்சு சொல்லிக் கொடுக்கறது தான் இனிமேல் இந்தக் குருவோட வேலையே.”

“அப்ப நாங்களும் குருவை மிஞ்சிய சிஷ்யை ஆகிறுவோம்ல. குருவோட டேலன்ட் அப்படி.” என்று அவள் கண்சிமிட்ட, ஆண்மை கலந்த சிறு வெட்கப் புன்னகை கற்றை மீசைக்கடியில்.

          ***************************

“வரவர அப்பாவும் பொண்ணும் என் பேச்சைக் கேக்கறதே இல்ல. எவ்ளோ நேரம் தான் பம்ப்செட்ல விளையாடுவீங்க? சளிப் பிடிக்கப்போகுது? மேல வாங்க ரெண்டு பேரும்!” ஆதியா இருவரையும் அதட்டிக் கொண்டிருக்க,

“என்னமோ இன்னைக்கு தான் புதுசா விளையாடுற மாதிரி சொல்றீங்க க்கா? இவ பொறந்து தவக்க ஆரம்பிச்சதுல இருந்து இந்தத் தண்ணில தான் ஆடுறா?’ என்றவாறு சதீஷ் வர,

“மாமாஆஆ… நீயும் பா மாமா!” என‌ அழைப்பு விடுத்தது… அப்பனின் பின்கழுத்தில் அமர்ந்து கொண்டு நீரில் விளையாடிய மூன்று வயது பூச்சிட்டு.

இப்பொழுது சதீஷ் இரண்டாமாண்டு கல்லூரி மாணவன். அப்பா ஹார்டுவேர். மாமா கன்ஸ்ட்ரக்ஷன். அதனால சிவில் இன்ஜினியரிங் தான் எனது விருப்பம் எனக் கூறிவிட, வீட்டுக்கொரு இன்ஜினியர் திட்டத்தில் சேர்ந்து விட்டான்.

இன்று ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொரு வாரமும் சூர்யா குடும்பத்திற்கு இந்தநாள் விடிவது சண்முகத்தின் களத்து வீட்டில் தான்.

பம்புசெட்டைப் போட்டுவிட்டு பிள்ளைகளோடு அப்பாவும் பொண்ணும் இறங்கினால், தோல் வெளுத்தாலும் வெளியேறுவதில்லை. ஆதியாவின் பிபியை எகிற வைத்தே வெளியேறுவர். 

“சும்மாவே சாப்பிட படுத்துவா. இப்படியே ஆடிட்டு இருந்தா எப்ப சாப்பிடறதாம்?”

“ஆதிம்மா! நீ வந்து சாப்பிடு. வயித்துப் புள்ளயோட நீ ஏன் வெயில்ல நிக்கற. இன்னைக்கி அப்பனும் புள்ளையும் பட்டினி தான்.” வீட்டினுள் இருந்தவாறே லஷ்மி குரல் கொடுக்க,

“ரெண்டு பேரும் உள்ளயே இருங்க! நான் சாப்பிட போறேன்.”

“குட்டிம்மா… உங்கம்மா சாப்பாடுனதும் நம்மல விட்டுட்டுப் போறா பாத்தியா?”

“உங்க புள்ளதான் உள்ளயே பசியில ராட்டினம் சுத்துதே?”

அவளது பதிலைக் கேட்டவன், “வாடாம்மா… நாமும் போவோம். தம்பிக்கு பசிக்கும்ல.” 

அப்பொழுதும் தண்ணியை விட்டு வெளியேற மறுத்த வாண்டை சமாதானப் படுத்தி, அப்பனும் புள்ளயும்‌ மேலே ஏறி வந்தனர்.

“அப்ப உள்ள இருக்குற புள்ள மேல இருக்குற அக்கறை பொண்டாட்டி மேல இல்ல.” முறுக்கிக் கொண்டு நடையைக் கட்ட, ஈரத்தோடு அவளை சேர்த்து அணைத்தான். 

“விடுங்க… என்னையும் நனைக்காதீங்க.”

“நீ தான் சூடா இருக்கியே. அதான் கூல் பன்றே.”

“ஐயோ கைய எடுங்க! புள்ளைக இருக்கு.” என்றவள் துண்டை எடுத்து மகளின் ஈரத்தலையைத் துவட்ட, வயிற்றினருகில் மகளின் தலை இருக்க,

“ம்மா… அம்பி பாப்பாக்கு முத்தா.” என்றவாறு கட்டிப்பிடித்து வயிற்றில் முத்தம் வைத்தது சிட்டு. உடை மாற்றிவிட்டு, உணவுத் தட்டை எடுத்துவர, ஓட்டம் பிடித்தது.

“ஆதிம்மா! இங்க கொடு. நீயும் கண்ணனும் போய் சூடா சாப்பிடுங்க. நான் ஊட்டுறே.” என லஷ்மி வர,

“அவ உங்கள ஏச்சுறுவா ஆன்ட்டி. எங்கம்மா பேர வச்சதும் போதும். நான் அவங்களப் படுத்தினதுக்கு, இவ என்னைய பழிவாங்குறா.” அலுத்துக் கொண்டாள்.

அன்னையின் நினைவாக, பெண்குழந்தை பிறக்க கலையரசி எனப் பெயரிட்டனர்.

“ஒரு நேரம் தானம்மா. சாப்பிடலைனா பால் கொடுத்துக்கலாம். நீங்க போய் சாப்பிடுங்க.” சண்முகமும் கூற,

பாட்டியிடம் விட்டுச் செல்ல, அது செல்லம் கொஞ்சி விளையாட ஆரம்பித்து விட்டது. வாரா வாரம் நடக்கும் கூத்து இது. 

இன்று அசைவ உணவு. வரும் பொழுதே முழு ஆட்டையே உரித்து வாங்கி வந்து விடுவான். 

சூர்யா எவ்வளவோ பொருள் உதவி செய்வதாகக் கூறியும் மறுத்து விட்டனர். இது என் கடமை எனக் கூறியவனிடம், உன் கடமையை பிள்ளைகள் படித்து முடிக்கும் பொழுது. அவர்கள் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டுதலில் காட்டு. என் பிள்ளைகளை என் வசதிக்குள் தான் வளர்க்க வேண்டும் எனக் கறாராகக் கூறிவிட்டனர். அவர்‌ ஒன்றும் பிள்ளைகளை கஷ்ட்டப்பட்டு வளர்க்கவில்லை. இஷ்ட்டப்பட்டு கட்டுக்கோப்பாக வளர்க்கிறார்.

மதிய உணவையும் முடித்துக் கொண்டு அவர்கள் வருவது ஆதியாவின் வீட்டிற்குத்தான்.

இரவு பால் கொடுத்து மகளை தூங்க வைத்தவள், பவளமல்லித்திட்டிற்கு வந்து அவனருகில் அமர்ந்ததும், வழக்கம்போல் அவளது மடியில் படுத்துக் கொண்டான்.

தலையில் முட்டிய ஆறுமாத மேடிட்ட வயிற்றில் இடையோடு அணைத்து திரும்பி முத்தமிட, “அப்பாவுக்கும், பொண்ணுக்கும் இதே வேலையாப் போச்சு. எந்திரிங்க மொத.”

“யாரோ காலைல கண்டுக்கலைனு சொன்னாங்க?”

“இப்ப மட்டும் என்ன… என்னையவா கண்டுக்கறீங்க?”

“ஏய்! நான் உனக்கு தான் டி  முத்தம் கொடுத்தே.”

“ஆமாமா… நெல்லுக்கு இறைச்சது புல்லுக்கு ம் பாஞ்சுது.”

“இதுல நெல்லு யாரு? புல்லு யாரு?”

“ரொம்ப முக்கியம்.” பிள்ளையைக் கொஞ்சியவனிடம், சவலைப் பிள்ளையாய் சலுகை காட்டினாள்.

“தியா!”

“ம்ம்ம்…”

“இப்படியெல்லாம் வீம்பு பண்ணி என்னை டெம்ப்ட் ஆக்காத.”

“ஓ! நான் கோபப்படுவது உங்களுக்கு மூடேத்துதோ?”

“ஆமா… நீ கோபப்பட்டா சமாதானம் பண்ணனும். சமாதானம் பண்ணனும்னா கட்டிப்பிடி வைத்தியம் பாக்கனும். கோபத்துல ஜிவுஜிவுனு சிவந்து நீ வேற ஒரு மார்க்கமா இருப்ப.” குரலில் குறும்பு கொப்பளிக்க,

“எப்படா சான்ஸ் கிடைக்கும்னு பாக்க வேண்டியது.”

“நான் எங்க சான்ஸ எதிர்பாத்தே? கெடச்ச சான்ஸையும்ல மிஸ் பண்ணிட்டே.”

“எந்த சான்ஸ் மிஸ்பண்ணீங்க?” கேள்வியாய் புருவம் உயர்த்தியவள், “ஏடாகூடமா ஏதாவது சொல்லிப் பாருங்க… அப்ப இருக்கு உங்களுக்கு.” என்று எச்சரித்தாள்.

மடியில் அவள் முகம் பார்த்து படுத்திருந்தவன், எழுந்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டான்.

“எந்த புருஷனுக்கும் கிடைக்காத சான்ஸ் எனக்குக் கிடச்சது. கல்யாணம் பண்ணியதையே மறக்கறது. ஆனாலும் பாறே… விடாது கருப்புங்கற மாதிரி மறுபடியும் உன்னையே தேடி வந்திருக்கே.” பாவமாய்க் கூற,

“விடாது கருப்பா நான் உங்களுக்கு?” கோபம் எல்லைதாண்ட முயற்சிக்க,

“கருப்புன்னா சொன்னே? கரும்புனுல சொன்னே. டங்க் ஸ்லிப் ஆயிருச்சு போல?”

“உங்களை…” என்று வேகமாக எழுந்தவள், அவனிடம் கோபமாக வர, அவளை இழுத்து மடியில் அமர்த்தியவன், 

“தியா… மூளைக்கு தான்டி மறதி எல்லாம். ஆனா உள்ளுணர்வு உன்னப்பாத்த உடனே எனக்கானவள்னு சொல்லுச்சு. கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சு அதை ஏத்துக்க முடியாம நான் பட்டபாடு எனக்குத்தான்டி தெரியும்.” அந்த நாட்களின் நினைவில் முகம் இறுகியவனைப் பார்த்தவள், மனம் தாளாமல்,

“அதான் நீங்க அடுத்தவன் பொண்டாட்டியவே சைட் அடிக்கறவராச்சே?” என்று கேலி செய்ய,

“அப்பவும் பாரேன்!? என் பொண்டாட்டியத்தான் சைட்டடிச்சிருக்கே. எனக்கு அதுக்கும் கொடுப்பினை இல்லடி.” என்று அலுத்தவனை,

மடியில் இருந்தவள் கன்னத்தோடு சேர்த்துக் கடிக்க,

“ஷ்ஷ்… ராட்சசி.” எனக் கத்தினான்.

“ராட்சசி யா நானு ? அப்ப இன்னொன்னும் வாங்கிக்கோங்க. என்று அடுத்த கன்னத்தையும் பதம்பார்க்க,

“ராட்சசி இல்லடி… மயக்கும் யட்ஷினிடி நீ.” என்றவன், மனைவியின் சரசத்தில் யோகியாகிப் போனான்.

நிலவில் குளித்த பவளமல்லி குலுங்கி உதிர ஆரம்பித்தது, குதுகலமாய்.

நிலவு தூங்கும் நேரம்

நினைவு தூங்கிடாது

இரவு தூங்கினாலும்

உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர்கதை

தினம் தினம் வளர்பிறை

நிலவு தூங்கும் நேரம்

நான் உனை பார்த்தது

பூர்வ ஜென்ம பந்தம்

நீண்ட நாள் நினைவிலே

வாழும் இந்த சொந்தம்.

          

        💖💖💖💖💖💖💖💖💖💖💖