💙இருளை ஈர்க்கும் ஒளி💙

eiFC8EY29611-84a8a4ae

ஈர்ப்பு – 7

“’ஏமாற்றம்’ வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம், அதை நன்றாக கற்றவனின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்”

 

காலை உணவை முடித்து ஓய்வாக தொலைக்காட்சி  பார்த்துக்கொண்டிருந்தனர் சந்திரன் லட்சுமி இருவரும்.

தியா கோவிலுக்குச் செல்ல தயாராகி கீழே வந்தாள்.

“என்ன தியா சண்டே அதுவும் எங்க கிளம்பிட”.

“கோவிலுக்குமா”.

“இன்றைக்கா……என்ன விசேஷம்”.

‘ஐயோ! மண்டை மேல இருக்க  கொண்டைய மறந்துட்டேனே, இப்போ அம்மா கிட்ட என்ன சொல்லறது’.

“லட்சுமி”……என வாசலில் குரல் கேட்க.

பக்கத்து வீட்டு மாமி தான் வந்திருந்தார்.

“வாங்க மாமி….”

“இந்தா லட்சுமி, இன்னைக்கி சதுர்த்தி அதான் கொஞ்சம்  சக்கரைப்பொங்கல் செய்தேன்”,  என கொடுத்தார்.

“என்ன தியா எங்க கிளம்பிட…”

“கோவிலுக்குத் தான் மாமி…”

“நல்லதுமா போய்ட்டு வா  இன்னைக்கி பிள்ளையாருக்குச் சிறப்புப் பூஜை”.

‘ரொம்ப நன்றி மாமி, என்னடா சொல்றதுனு யோசிச்சிட்டு இருதேன் நல்ல நேரத்துக்கு வந்திங்க’

“அதுக்கு தான் மாமி போறேன்”.

“சரிம்மா 12 மணிக்கு நட சாத்திடுவா சீக்கிரம் போய்ட்டு வா”.

“ம்…..”, என அனைவரிடமும் விடை பெற்றுச் சென்றாள்.

தியா கோவில் சென்று அவள் வரச்சொன்னவரின்  வரவிற்காகக் காத்திருக்கும் சமயம் வர்ஷுவிற்கு என்ன தான் ஆனது…..? பார்ப்போம் வாங்க.

செம் விடுமுறைக்கு தங்கள் சொந்த ஊரான கும்பகோணத்திற்கு அன்னையுடன் சென்றாள் வர்ஷு.

அங்கு அவர்களின் பூர்விக வீடு இருந்தது, அந்த ஊரின் பெரிய தலைக்கட்டு அவர்கள் தான். அந்த ஊர் மக்கள் இவர்களை பெரிய வீட்டு ஆட்கள் எனத் தான் பேசிக்கொள்வர்.

இப்போது அங்கு வசிப்பது அவள் தாத்தா வீரராகவன் மற்றும் அவள் பாட்டி மீனாட்சியம்மாள், வீரராகவரின் அப்பா கட்டின வீடு தான் அது,

தொழில் காரணமாக கிருஷ்ணமூர்த்தி சென்னையில் தங்கிவிட விடுமுறை சமயங்களில் இங்கே வந்து செல்வர்.

அவர்களுக்கென்று இங்கே மா, தென்னை தோப்புகள், மல்பெரி  தோட்டம், பண்ணை அனைத்தும் இருக்கின்றன இவை அனைத்தையும் வீரராகவன் தான் பார்த்துக்கொள்கிறார்.

ராதாவிற்கு தன் மாமியார் மாமனார் மேல் பாசம் அதிகம், அதன் காரணம் அவர்கள் ராதாவை நடத்தும் முறை தான், கல்யாணம் ஆகி வந்த நாளிலிருந்து இதோ அவர்கள் பிள்ளைகள் கல்லூரி செல்லுமளவு வளர்ந்த பிறகும்கூட தங்கள் மகளைப் போல் பாசமாக நடத்துகிறார்கள்.

ஷ்யாம், வர்ஷு இருவரும் தாத்தா பாட்டிக்கு உயிர். அவர்கள் வந்தால் தினமும் விருந்து தான்.

ஷ்யாம் தன் தந்தைக்கு உதவுவதால் வர்ஷு மட்டும் வந்திருந்தாள்.

தினம் எங்கேனும் வெளியில் சென்று வருவர். அந்த ஊர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர்கள் தாத்தா தான் அதற்கு தர்மகர்த்தா, அங்கே செல்வது அம்மா மகளின் தினசரி வேலை. பின் தோட்டம், பண்ணை என ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடம்.

இங்கே வந்தாள் தன் மாமனாருக்கு தன்னால் ஆன உதவிகள் செய்வார் ராதா.

அப்படி ஒரு நாள் ராதா அவர் மாமனாருடன் கணக்குகள் பார்க்க,

“அம்மா…. தோட்டத்துக்கு போய்ட்டு வரலாமா”, என வந்து நின்றாள் வர்ஷு.

“நேற்று தானே போனோம்”.

“அங்க சூப்பரா இருந்துச்சிமா அதான் இன்றைக்கும் போகலாம்”.

“இல்லைடி எனக்குக்  கொஞ்சம் வேலை இருக்கு”.

“அப்போ நான் மட்டும் போய்ட்டு வரட்டா”.

“தனியாவா….”

இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த  மீனாட்சிம்மா, “ஏன்மா ராதா, அங்கன தான் பிள்ளையை வெளியவே விட மாட்ட இங்கன என்ன பயம் போவடும் விடு, அதான் வேலையாட்கள் இருக்காங்கல அவங்க பாத்துப்பாங்க”.

“சரிங்க அத்தே”.

“தேங்க்ஸ் பாட்டி”, என  பாட்டிக்கு ஒரு முத்தம் வைத்துக் கிளம்பினாள் வர்ஷு.

என்னதான் இப்போது  கல்லூரியில் படித்தாலும் வெளியுலகம் அதிகம் அறியாதவள் வர்ஷு,  தாய் தந்தை அவர்களுக்கு பின் அண்ணன் என மாறிமாறி உடன் இருந்து அவளைக் கடைக்குட்டி எனப் பாதுகாத்தே பழக்கப் படுத்திவிட்டனர். இங்கேயும் இத்தனை நாள் சின்ன பெண் எனத் தனியே விட்டது இல்லை.

தனியே வெளியில் சென்று பழக்கப் படாதவள் முதல் முறை இப்படி வரவும் சந்தோஷமாக நடந்தாள்.

பட்டுப் புழுக்கள் கட்டும் கூட்டிலிருந்து கிடைக்கும் நூல்தான், பட்டுச் சேலை நெய்யப் பயன்படுகின்றது. பட்டுப்புழு வளர்ப்பில் முக்கியப் பயன்பாடு மல்பெரி இலைகள்!

மல்பெரி இலைகளே,  பட்டுப்புழு வளர்ப்புக்கு அடிப்படை ஆதாரம். பட்டுப் புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எதையும் உண்பதில்லை. எனவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பிறகே,  பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட இயலும். மல்பெரி இலை உற்பத்தி ஆண்டு முழுவதும் பலன் தரும் என்றாலும், பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்காக, தோட்டம் அமைத்து, பராமரிக்கப்படுகிறது.

(*இறவை என்றால் கிணறு, ஏரி, கால்வாய் பாசனம் மூலம் பயிர் செய்வது)

வீட்டின் அருகே தான் மல்பெரி தோட்டம். வரிசை வரிசையாய் செடிகள் நடப்பட்டிருந்தது.

அதன் அழகைப் பார்த்துக்கொண்டே வந்தவள் எதிலோ கால் இடற விழப்போகிறோம் எனக் கண்களை இறுக்க மூடிருக்க ஒரு முரட்டு கரம் அவளைப் பற்றி விழவிடாமல் காப்பாற்றியது.

“யாரது”, என இவள் பார்க்க, அவனோ இவளைப் பார்த்து சினேகமாய் சிரித்தான்.

“பார்த்து வரக்கூடாதா”.

“பார்த்துத் தான் வந்தேன் எப்படியோ தடுக்கிடுச்சி”.

“சரி இனி பார்த்து போங்க”.

“கண்டிப்பா”.

முதல் முறை ஒரு அந்நிய ஆண் முன்பின் பழக்கம் இல்லாதவனுடன் பேசி இருக்கிறாள்.

மறுநாள் தன் அன்னையுடன் கோவில் செல்ல அங்கேயும் அவனைக் கண்டாள்.

அவன் இவளைப் பார்த்துச் சிரிக்க இவளும் பதிலுக்குச்  சிரித்தாள்.

பெரிய வீட்டு மருமகள் என ஐயர் அவள் அன்னையிடம் கோவில் குறைகளை பற்றிப் பேச, இவள் தனியே பிரகாரத்தை வளம் வந்தாள்.

அவனே இவளிடம் பேச்சுக்  கொடுத்தான்.

“என் பேர் ரவி இதே ஊர் தான், நான் என்ஜினீயர்.  நீங்கப் பெரிய வீட்டுக்கு வந்துருக்கிங்களா”.

“ஆமா, நான் அவங்க பேத்தி”.

“ஓ! சரி நான் கிளம்புறேன் திரும்ப பாக்கலாம், பை”.

“பை”.

அவள் அன்னை வரவும் வீடு திரும்பினாள்.

அதன் பிறகு அவள் எங்குச் சென்றாலும் அவன் இருந்தான்.

மீண்டும் ஒருநாள் அவள் தனிமையில் செல்லும் நிலை வரக் குதூகலமாகவே சென்றாள்.

அவள் தோப்புக்குச் செல்ல,  ரவி அந்த தோப்பிலிருந்தான். இவளைக் காணவும் அருகே வந்தான்.

அவளிடம் பேச்சுக் கொடுத்தான் அது வெகு நேரம் தொடர்ந்தது, இனி அடிக்கடி சந்திப்போம் என முடிவு செய்யும் அளவு சென்றிருந்தது.

அப்படிச் சந்திக்கையில் ஒருநாள், தான் அவளைக் காதலிப்பதாகக் கூற இவள் சிந்தித்துச்  சொல்வதாக வீடு திரும்பினாள்.

இப்படி யாரென்றே தெரியாதவனுடன் பேசுகிறோமே எனக்  குற்றவுணர்வில் இருந்தவள் அவன் காதலிப்பதாகக் கூறவும் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவளுக்கு அவனுடன் பேசப் பிடித்திருந்தது ஆனால் காதல் என அதைக் கூறமுடியவில்லை ஒரு சினேகபாவம் மட்டுமே.

மறுநாள் அவனிடம் எப்படி இதைப் புரியவைப்பது என இவள் யோசிக்க, அவனோ “நீ இல்லை என்றால் இறந்து விடுவேன்”, எனக் கிணற்றில் விழச் சென்றான்.

அவனைத் தடுத்தாள் வர்ஷு, நீ சரி சொன்னதன்  விழமாட்டேன் எனக் கிணற்றின் மிக அருகே இருப்பவனைக் கண்டு ‘எங்கே தன்னால் ஒரு உயிர் போய்விடுமோ’ எனப் பயத்தில் அவன் காதலுக்கு ஒத்துக்கொண்டாள்.

அடிக்கடி இவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது  அலைப்பேசியிலும் பேசுவது உண்டு. அவன் தான் பேசுவான் இவள் கேட்பதோடு சரி, அப்படி பேசும் போது அவளை அப்படிப் பார்த்துக்கொள்வேன் இப்படிப் பார்த்துக்கொள்வேன், அவள் பணம் இவனுக்குத் தேவை இல்லை இவள் தான் அவன் சொத்து எனக் கூறுவான்.

ஏனோ அவனுடன் காதல் கல்யாணம் என இவளால் கனவு காண முடியவில்லை, நாம் அவனுக்கு சரி சொல்லிவிட்டோம், அவனும் நம்மை நன்றாகப் பார்த்துக்கொள்வதாக கூறுகிறான் இனி இவனைத் தான் கல்யாணம் பண்ண வேண்டும் என தன் மனதில் உருவேற்றிக் கொண்டு பேசினாள்.

அன்று ரவியைச் சந்திக்கச் சென்றாள். வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே சென்றாள். அவர்கள் சந்திக்கும் தோப்பிற்கு செல்லும் வழியில் மா தோப்பில் அவனைக் கண்டு அவன் அருகே சென்றாள்.

அவர்களுக்கு இடையே மோட்டார் ரூம் இருந்தது. அவன் யாரிடமோ பேசிக் கொண்டு வருவது அருகில் வந்த பின் தான் தெரிந்தது, தன் காரணமாக அவன் யாரிடமும் மாட்ட வேண்டாம் என மோட்டார் ரூமிற்குள் சென்றாள். தாங்கள் சந்திப்பது யாருக்கும் தெரிய வேண்டாம் என அவன் தான் கூறியிருந்தான்.

பேசிக் கொண்டே வந்தவர்கள் அந்த ரூமின் அருகே நின்று தங்கள் உரையாடலை தொடர்ந்தனர், அவள் உள்ளே இருப்பதை அறியாதவர்கள் அவளைப்  பற்றித் தான் பேசினர்.

“என்னடா ரவி பெரிய வீட்டு பொண்ணு கூட அடிக்கடி பாக்குறமாதிரி  இருக்கு”.

“இத நான் யாருக்கும் தெரியாமத்தானே பார்த்துகிட்டேன் உனக்கு  எப்படிடா தெரியும்”.

“பாம்பின் கால் பாம்பு அறியும் மச்சி. ஊரல் யாருக்கும் தெரியாது கவலைப்படாத”.

“ஆமாடா, அவ வந்த நாளா பாத்துட்டு இருந்தேன் ஒருநாள் தனியா வரதை பாத்து வழில விழராமாதிரி செட் பண்ணேன் அப்படியே காப்பாத்துன மாதிரி  சீன் போட்டேன்”, எனச் சொல்லிக்கொண்டே புகைக்கத் தொடங்கினர்.

அந்த நெடியில் வந்த இரும்பலைக்  கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“அப்புறம் எப்படியாச்சும் லவ் பண்ண வைக்கலாம்னா  மசியவே இல்லை சாவப்போறேன்னு மிரட்டித் தான் ஓகே சொன்னா”.

“அப்புறம் என்ன மச்சி ஒரே என்ஜாய் தான்”.

“நீ வேறடா அவ சரியான பழம், சரியா பேசவே மாட்டிக்கறா  அப்புறம் எங்க”.

“நீ விடமாட்டியேடா…….”

“மத்தவங்க மாதிரி அவளை ட்ரீட் பண்ணக் கூடாது மச்சி, அவ பொன் முட்டை இடுர வாத்து, அவ போற போக்கில் போய்த்தான் காரியத்தை சாதிக்கணும்….. அவளைக் கல்யாணம் பண்ணா லைப் செட்டில்  மச்சி…அப்புறம் நமக்கு பிடித்த மாதிரி எத்திணி பேர் கூடவேணா சுத்திகளாம்”.

இடியென விழுந்த வார்த்தைகள் அவளை மிகவும் பாதித்தது.

“சரி மச்சி டைம் ஆச்சி, அவ வர நேரம் நான் அங்க போய் காத்துட்டு இருக்கேன், பை டா யாருக்கும் தெரியாம பாத்துக்கோ”.

“சரிடா….”

இவர்கள் போகவும் சிறிது நேரம் கழித்து எந்த சத்தமும் இல்லை என உறுதி செய்துகொண்டு அங்கிருந்து வீடு போய்ச் சேர்ந்தாள்.

அதன் பின் அவனை தவிர்த்தாள். விடுமுறை முடிந்து ஊர் திரும்பவும் கொஞ்சம் நிம்மதியானாள்.

அவன் அழைப்புகளையும் தவிர்த்தாள், நம்பரை மாற்றினாள்.

வீடு, கல்லூரி, குடும்பம், தோழிகள் என நாட்கள் நகர நகரத் தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் போனது என அனைத்தையும் மறக்க முயன்று ஓரளவு வெற்றி பெற்ற நேரம்.

அன்று தன் அண்ணனுடன் காரில் கல்லூரிக்குச் சென்றாள்.  வழியில் கார் ரிப்பேர், கடைசி செம் என்பதால் ஷ்யாமிற்கு ப்ராஜெக்ட் ஒர்க்கு போக வேண்டி இருந்தது தன் தந்தையின் நண்பர் ஒருவரின் கம்பெனில் அனுமதி பெற்று அங்கு தான் ப்ராஜெக்ட் செய்கிறான், ‘சரியான நேரத்துக்குப் போக வேண்டும்’, என நினைத்தவன் தாங்கள் வாடிக்கையாக சர்வீஸ் செய்யும் மெக்கானிக்கக்கு போன் செய்து இருக்கும் இடம் சொல்லி காரை எடுத்துக்கொள்ளச் சொன்னான்.

‘எப்படி போகலாம்’, என இவன் யோசிக்க இவன் போக வேண்டிய கம்பெனியின் எம்.டியே காரில் வந்தார்.

“என்னப்பா இங்க நிக்கற வண்டி ரிப்பேரா”.

“ஆமா அங்கிள்”.

“சரி வாப்பா, நம்ப கார்லயே போய்டலாம். நீயும் வாம்மா காலேஜ்ல விடுறேன்”.

தான் வரவில்லையென அண்ணனுக்கு ஜாடை காட்டிவிட்டு “இல்லை அங்கிள் இதோ காலேஜ் வந்துடுச்சி ஜஸ்ட் கிராஸ் பண்ணனும் அவளோ தான்”.

அவருக்கு இவளை மருமகளாக்கும் எண்ணம் உண்டு அவர் மகனை இவளுக்கு பிடிக்காது.

எனவே அவருடன் வரவில்லை என்று விட, தங்கையின் மனம் புரிந்தவன் “அவ போய்டுவா அங்கிள்”, எனத் தங்கைக்கு பத்திரம் சொல்லிக்  கிளம்பினான்.

அவன் போகவும் அவளை நெருங்கி “வர்ஷு” என ரவி அழைக்கவும் சரியாக  இருந்தது.

அவனை இங்கு எதிர்பார்க்காதவள் மனம் படபடக்க, அவனோ “என்ன வர்ஷு என்கிட்ட செல்லாமையே வந்துட்ட?, போன் பண்ணாலும் எடுக்கல?, எதாவது பிரச்சனையா?,  உங்க வீட்ல நம்ப லவ் தெரிஞ்சிடுச்சா?”, எனக் கேள்விக்  கணைகள் தொடுத்தான்.

அப்போது தான் அவளுக்குப் புரிந்தது, தான் அவனைக் கண்டுகொண்டது அவனுக்குத்  தெரியவில்லை என்று. ‘எப்படி இவனிடமிருந்து விலகிச்செல்வது’, என யோசித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் எண்ண ஓட்டத்தை அறியாதவன் அவளிடம் காதல் வசனம் பேசியபடி இருந்தான்.

ஒரு கட்டத்தில் அவளின் அமைதியும் மருண்ட பார்வையையும் கவனித்து எதையோ உணர்ந்து, “என்ன பத்தி யாராவது தப்பா சொன்னார்களா வர்ஷு,  அப்படி எதாவது இருந்தா அதை நம்பாத நான் உன்னை…….”

இதற்கு மேல் அவன் சொற்பொழிவைக்  கேட்க விரும்பாதவள், மேற்கொண்டு பேசவேண்டாம் என கை உயர்த்தி தடுத்து, தான் அவனை அவன் வாய்மொழியாகவே தெரிந்துகொண்டதை வெளியிட்டாள்.

அவன் அதிர்ந்தது சில நிமிடங்களே, பின் “ஓ!  எல்லாம் தெரிஞ்சிடுச்சா….. அதுவும் நல்லதுக்குத் தான் எவளோ தான் நடிக்கிறது சொல்லு, சரி ஒரு பத்து லட்சம் கொடு நான் இனி உன்ன தொந்தரவு பண்ணல”.

“நான் எதுக்கு உனக்குப்  பணம் தரணும்”.

அதற்கான விடையை அவன் காட்டினான் அவளும் அவனும் பேசும் போது எடுத்த புகைப்படங்கள்.

அவள் வளர்ந்த சூழல் அவனை நெருங்கிக் கூட பேசியது இல்லை ஆனால் அவன் அவர்கள் மிகவும் நெருங்கியிருப்பது போல் எடுத்திருந்தான்.

“இதுலாம் எப்போ எடுத்தது நான் இப்படிலாம் பேசவே இல்லையே”

“அது உனக்கும் எனக்கும் தானே தெரியும் உங்க அப்பா  அம்மாக்கு தெரியாதே. அவங்க கிட்டக் காட்டுவேன் அது மட்டும் இல்லை பேப்பர்ல டிவில இன்னும் மோசமா மார்பிங் பண்ணி வரும், பிரபல தொழிலதிபருடைய மகளின் காதல் லீலைகள்னு பரவாலையா”.

அவளுக்குக் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது தன் பொருட்டு தன் குடும்பமே  கஷ்டப்படுவார்களேயென.

“என்ன சொல்ற….”

“என்னால எப்படி இவளோ பணம் ரெடி பண்ண முடியும்”.

“உங்க அப்பாகிட்ட இருக்கச் சொத்துக்கு நான் கேட்டது ஒரு பெர்ஸன்ட் கூட இல்ல”.

இப்போதைக்கு இவனிடமிருந்து விலகிச்செல்ல வேண்டும் என எண்ணி “சரி எனக்குக் கொஞ்சம் டைம் கொடு”, எனக்  கேட்டாள்.

“சரி ஆன என்னை ஏமாத்த பாத்த  அப்புறம் நான் சொன்ன மாதிரி டிவில பேப்பர்ல உன் குடும்ப மானம் காத்துலபறக்கும் ஜாக்கிரதை” என எச்சரித்து சென்றான்.

அருண் மித்து பிரச்சனை,  ப்ராஜெக்ட் ஒர்க் என இவளின் மாற்றம் யாரையும் கவரவில்லை.

அதன் பின் அவனை அன்று அமுஸ்ட்மெண்ட்  பார்க்கில் தான் பார்த்தாள்.

(அப்பாடா ஒரு வழியா பிளாஷ்பேக்கை  முடிச்சாச்சு, தியா பாவம் ரொம்ப நேரமா  வெயிட் பண்றா அவ  யாருக்கு வெயிட் பண்றா  அவங்ககிட்ட என்ன  பேசுறானு நெஸ்ட் எபில  பாக்கலாம்……. பை……பை……..)