😍உணர்வை உரசி பார்க்காதே! 13😍

IMG-20211108-WA0067-703cd522

🌹அத்தியாயம் 13

தினமும் விகுஷ்கி, சஷ்டியை பார்க்க சென்ற பிறகு மீத்யுகா செல்வாள். 

“குட் மார்னிங்க் சஷ்டி, எப்பவும் உனக்கு டிரிப்ஸ்தான் சாப்பாடா, எங்கள மாதிரி தோசை, இட்லி,  பூரி இதெல்லாம் சாப்பிட மாட்டியா, நான் சொன்னேன்ல நீ கோமா பேஷண்ட் கெடயாது எழும்பி நடக்கலாம்னு. இப்படியே இருந்தா சரியா, எழும்பி நடக்குற ஐடியா இல்லயா. நீ இங்க இப்படி இருக்க, உன் அண்ணன் விகுஷ்கி ஆக்சிடன்ட் ஆகி ஹாஸ்பிடல்ல படுத்திருக்கான். என்னத்த சொல்ல?” 

விகுஷ்கிக்கு விபத்து நடந்து வைத்தியசாலையில் இருக்கிறான் என்று மீத்யுகா கூற, சஷ்டியின் கையில் சிறிய அசைவு தெரிந்தது. 

விடமால் முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்தாள். “பாவம் உன் அண்ணா, எவ்ளோ கஷ்டப்படுறான் தெரியுமா, உயிர் பொழக்கிறதே கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டாரு. உன் அண்ணா டூவிலர் எடுத்துக்கிட்டு வெளிய போனாரா, வேகமா ஒரு கார் வந்து விகுஷ்கி மேல மோதிருச்சு. தலையில அடிபட்டு கோமா ஸ்டேஜ்ல இருக்கான், உன் அண்ணன்.” சஷ்டியின் உதடுகள் அசைந்தது ஆனால் வார்த்தைகள் எதுவும் வரவில்லை.

“விகுஷ்கிய பார்த்துக்க கூட யாருமே இல்ல. நீயும் இப்படி கெடக்குறியே!” என்று மேன் மேலும் சஷ்டியின் உணர்ச்சிகளை கிளர்ந்து ஊட்டமளித்தாள். 

“உன்ன பார்க்குறதுக்கு விகுஷ்கிதான் வந்துட்டு இருந்தான். இனி யாரு வருவா?” என்றிட சஷ்டியின் கை விரல்களும் கால் விரல்களும் மெது மெதுவாய் நன்கு அசைய ஆரம்பித்தது.  

இமைக்களை இறுக்கினாள் சஷ்டி, “ஐயோ விகுஷ்கி உங்களுக்கு இப்படி ஒரு நிலமையா, சஷ்டி சீக்கிரம் வா நம்ம போயி பார்க்கலாம். வா சஷ்டி, சஷ்டி வா நம்ம போய் உன் அண்ணன் விகுஷ்கிய பார்க்கலாம். எழும்பு சஷ்டி சீக்கிரம் எழும்பி வா.” என்று உறுதியான குரலில் சற்று பலமாக கூறினாள். 

சஷ்டியின் கண் திறக்காமலே கண்ணிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. தலை அங்குமிங்கும் மெதுவாக அசைந்தது.மனதார கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு, “சஷ்டி சீக்கிரமா வீட்டுக்கு வந்துரு.” என்று சஷ்டியின் காதருகில் கூறினாள். 

இதற்கு மேல் மீத்யுகா அங்கிருந்தால் பிரச்சனை ஏற்படும் என்று செவிலியரை அழைத்து சஷ்டியின் நிலையை கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றாள். 

செவிலியர், சஷ்டியின் அங்க அசைவுகளை பார்த்து அவசரமாக வைத்தியரை அழைத்து வந்தார். 

மீத்யுகா கூறிய வார்த்தைகளில், சஷ்டிக்கு ஏற்பட்ட பதற்றமும் பயமும் உடல் நடுக்கத்தை ஏற்படுத்தியது. 

மீண்டும் சஷ்டியை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். விகுஷ்கிக்கு அழைப்பை விடுத்து அவசரமாக வருமாறு கூறினர் வைத்தியசாலை நிர்வாகத்தினர். 

விகுஷ்கியும் நீதித்துறையில் இருக்கும் வழக்குகளை ஒத்தி வைத்துவிட்டு அவசரமாக வைத்தியசாலைக்கு வந்தான். 

“சிஸ்டர் தங்கச்சிக்கு என்னாச்சு?” என்று பதற்றத்துடன் செவிலியரிடம் கேட்டான். 

இப்போ பதில் சொல்ல முடியாது. வெய்ட் பண்ணுங்க.” என்று கூறிவிட்டு சிகிக்சை நடக்கும் அறைக்குள் நான்கைந்து செவிலியர்கள் உள்ளே சென்றனர். 

அக்காட்சியை பார்க்கும்போதே சற்று பயமாய் இருந்தது விகுஷ்கிக்கு. 

குறுக்கும் நெடுக்கும் செல்லும் செவிலியரிடம் தங்கையை பற்றி விசாரித்துக்கொண்டிருந்தான். யாரும் அவனுக்கு பதில் கூறுவதாக இல்லை.

தலையில் கையை வைத்து கதிரையில் அமர்ந்துகொண்டான். ‘சஷ்டிக்கு எதுமே நடக்ககூடாது கடவுளே. என் தங்கச்சி எழும்பி நடக்காட்டியும் பரவாயில்ல. உயிரோட இருந்தாலே போதும். காலம்பூர என் தங்கச்சி கூடவே இருந்துருவேன்.’ மனதிற்குள் கடவுளை பிரார்த்தனை செய்தவாறே இருந்தான். 

சிறுவயதில் சஷ்டியுடன் விளையாடியது, உணவருந்தியது, பாடம் சொல்லிக்கொடுத்தது, சஷ்டி அன்னயாய் இருந்து விகுஷ்கியை தண்டிப்பது இவற்றை எண்ணி ஏங்கிக்கொண்டிருந்தான். 

வைத்தியர் வெளியே வந்தவுடன், கலங்கிய கண்களுடன் அருகில் சென்று, “டாக்டர், டாக்டர் என் தங்கச்சி எப்படி இருக்கா?” அவன் அவனாக இல்லை. பதற்றத்துடன் பயந்திருந்தான். 

“ட்ரீட்மண்ட் நடக்குது பார்க்கலாம்.” என்று கூறிவிட்டு நகர்ந்தார். 

சிகிச்சை முடிவடைய சஷ்டிக்கு தேவையான வேலைகளை செய்துவிட்டு செவிலியர்கள் வெளியேற, “சிஸ்டர் நீங்களாவது சொல்லுங்கள், என் தங்கச்சிக்கு என்னாச்சு?” 

“சார், அன்னைக்கு வந்த பொண்ணுதான் இன்னைக்கும் வந்துச்சு, ரொம்ப நேரம் பேசிட்டு கிளம்பும்போது சஷ்டி அசையிறாங்கனு பார்க்க சொல்லிச்சு, நானும் வந்து பார்த்தேன். சஷ்டி கண்ணுல இருந்து கண்ணீர் வழிஞ்ச வண்ணம் ஒரு கை நடுக்கமா இருந்துச்சு,  உடனே டாக்டர கூட்டிட்டு வந்தேன். இப்போ ட்ரீட்மண்ட் பண்ணிட்டு போறாங்க.” 

“ஓ என் தங்கச்சிக்கு பயப்படுற மாதிரி எதுவும் இல்லதானே சிஸ்டர்?” 

“சார் இந்த பேப்பர்ல சைன் பண்ணுங்க. இதுக்குதான் அவசரமா வர சொன்னோம். நீங்க வந்ததே லேட்டு. டாக்டர் உங்களுக்கு வெய்ட் பண்ணாம ட்ரீட்மண்ட் ஸ்டார்ட் பண்ணிட்டாரு.” 

“அது பரவாயில்ல சிஸ்டர். தங்கச்சிய பார்க்கலாமா?” 

“இப்போதைக்கு பார்க்க முடியாது சார்.” 

“சரிங்க சிஸ்டர்” என்று ஐந்து நிமிட அளவில் அங்கு அமர்ந்து விட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்த வேலைகளை  பார்ப்பதற்கு மீண்டும் சென்றான். 

எரிமலை கொப்பளிக்கும் சூட்டிற்கு மிகையாமல் மீத்யுகாவின் மேல் கோபமானது அவனுக்கு. சஷ்டியை சென்று பார்க்க வேண்டாமென்று பலமுறை எச்சரித்திருந்தான். அதையும் மீறி அவள் என்ன செய்தால் என்று தெரியவில்லை. ஆனால் இந்நிலைக்கு அவள்தான், அவள் மட்டும்தான் காரணமென்று புரிந்தது. 

‘என் தங்கச்சிய பார்க்க நீ யாரு டீ?  அன்னைக்கு சிஸ்டர்கிட்ட பேரம் பேசுனா, இன்னைக்கு சஷ்டிய உயிரோடயே கொல்ல பார்க்குறா, இரு டீ சீக்கிரம் வெளிய துரத்துரேன்.’ என்று மனதளவில் அவள் மீது ஆத்திரம் கொண்டான். 

வழக்கு தொடர்பான வேலைகளில் சரியான ஈடுபாட்டை கொடுக்க முடியவில்லை. சஷ்டியை பற்றிய எண்ணமே அவனை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தது. 

சஷ்டியின் நிலை என்ன? மீண்டும் பழையபடி மோசமான நிலைக்கு சென்றிடுவாளோ என்று பயமே அவனை சித்தம் கலங்க வைத்தது. பகல் உணவையும் உண்ண முடியாமல் படாத பாட்டைப்பட்டான்.

வேலைகள் இழுபறியான நிலையில் இருக்க அப்படியே வைத்துவிட்டு மீண்டும் வைத்தியசாலையை நாடினான். 

“சிஸ்டர், சஷ்டி எப்படி இருக்கா?” என்று மூச்சு இறைக்க இறைக்க கேட்டான். 

“அப்படியேதான் இருக்காங்க சார், டாக்டர் இன்னும் வந்து பார்க்கல, வந்து பார்த்தாதான் எங்களுக்கு தெரியும்.” 

“ஓகே சிஸ்டர்” என்றவன், “ச்சே! எனக்கும் மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் நடக்குதோ தெரியல.” அவன் பாட்டிற்கு புலம்பிக்கொண்டான்.

***

வீட்டில், வைத்தியசாலையிலிருந்து அவசரமாக கிளம்பியவன் மீத்யுகாவை உயிரோடு புதைக்கும் அளவு கோபத்தில் இருந்தான். 

மீத்யுகா வீட்டின் பிரதானமான மண்டபத்தில் இருக்கையில் அமர்ந்து இருவரின் கூடலை எவ்வாறு உறுதிபடுத்துவது என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். 

வீட்டிற்கு வந்தவன் காலணியை கூட கழட்டாமல் விறு விறு என்று வேகநடையிட்டு அவள் அருகில் வந்து நின்றான். 

அவள் அருகில் ஏதோ ஒரு உருவம் இருப்பதை உணர்ந்தவள் ஒரு சந்தேக கண்ணோட்டத்துடன் அன்னார்ந்து பார்த்தாள். 

“ஏய்!” என்று சத்தமாக கூறி அவளை அறைய அவன் கையை ஓங்கினான். 

ஓங்கிய வேகத்தில் அவன் கையை பற்றினாள். கையை பற்றிய வேகத்தில் உதறி தள்ளினான். 

“எதுக்கு இப்போ கை ஓங்குறீங்க?” 

  1. “எனக்கு வர ஆத்திரத்துக்கு, உன்னைய உசுரோட கொன்னுருவேன் டீ.” ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான் விகுஷ்கி. 

சத்தம் கேட்டு சமையலறையிலிருந்த லட்சுமியும் வெளியே வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.  

“உங்க இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பண்றதுக்கு நான் ஒண்ணும் உங்க ப்ரோபட்டி இல்ல.” திமிரோட கூறி ஒற்றை புருவத்தை உயர்த்தினாள். 

“ஏய், ஏய்! ரொம்ப பேசாத டீ, என் தங்கச்சிய நீ ஏன் போய் பார்க்குற?” 

தமக்கையை காப்பாற்றுவதற்காக மீத்யுகா, சஷ்டியை ஏதேனும் செய்திடுவாள் என்றொரு சந்தேகம் அவனுள் இருந்து உருத்திக்கொண்டே இருந்தது. 

“எல்லாம் நல்லதுக்குதான் போய் பார்த்தேன். நீங்களே ஒரு நாள் எனக்கு தேங்க் பண்ணுவீங்க.” 

“உன் அக்கா செஞ்ச நல்லதே போதும். நீ ஒண்ணும் கிழிக்க தேவையில்ல. நீ என்ன பண்ணியோ தெரியல, என் தங்கச்சிக்கு ஏதோ ஆகிருச்சு.” கோபமாக இருந்தாலும் சஷ்டியை பற்றி கூறும் போது கவலையில் ஆழ்ந்தது அவன் மனம். குரலின் தொனி மட்டும் மறாவில்லை அப்படியே ஆன்டி ஹீரோவாக இருந்தது. 

சஷ்டிக்கு ஏதோ நடந்துவிட்டு என்று கூறும் போது அவளுக்கு புரியவில்லை. “சஷ்டிக்கு என்னாச்சு?” பதற்றத்துடன் கேட்டாள் அவள். 

“இனி என்ன ஆகணும். மறுபடியும் ஐசியூல போட்டுருக்காங்க. நீ என் தங்கச்சிய என்ன டீ பண்ண சொல்லு?” என்று அவளை தள்ளிவிட்டான். நல்ல வேளை மீத்யுகா இருக்கையில் விழுந்தாள். 

“அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டேன்.” என்று வீம்புரைத்தாள். 

அவளை அடிப்பதற்காக வீட்டில் அழகுக்கு வைத்திருக்கும் பொருட்களை எடுத்து அவள் வீச ஆரம்பித்தான். 

மீத்யுகா சற்றும் அசரவில்லை.  வலைபந்தாட்டத்தில் பந்தை பிடிப்பதாய் எண்ணி ஒவ்வொரு பொருட்களையும் பிடித்து இருக்கையில் வைத்தாள். 

அவள் மீது ஒரு பொருட்களும் விழாமல் இருக்க, அவனுக்கு சினம் சின்னாபின்னமாக  அதிகரித்தது. 

“ஏன் டீ நான் பண்றது எல்லாம் உனக்கு கிண்டலா இருக்கா?” என்று பற்களை கடித்துகொண்டு அவள் அருகில் வேகமாக சென்றான். 

“என்ன சத்தம் போட்டு பேசுனா பயந்துருவேனு நெனைப்பா, உன்ன மாதிரி குறுக்கு புத்தி எனக்கு கெடயாது. சஷ்டிய கொலை பண்ணணும் நினைச்சி இருந்தா, சஷ்டிக்கு முதல் உன்னையவே கொன்னுருப்பேன். மதுரைல எங்க வீட்ல தூங்கும்போது கல்ல போட்டு கொன்னுருப்பேன். 

அப்படி இல்ல சாப்பாட்டுல வெஷத்த வச்சியிருப்பேன்.” அவன் ஆணாதிக்கத்தை அடக்கும் எண்ணம் அவளுள் மேலோங்கியது.

“ஓ! இந்த நெனைப்பு வேற இருக்கோ? உன்ன என்ன பண்றேன் பாரு” என்றவன், அவள் ஒரு கொத்து முடியை  பற்றி  சுவற்றில் மோதச்செல்ல, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த லட்சுமிக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. 

லட்சுமி அவன் அருகில் வருவதற்குள், அவன் மீத்யுகாவின் நெற்றியை சுவற்றில் அடித்தான். 

லட்சுமி, “தம்பி தம்பி!” என்று சத்தமிட்டார். 

விகுஷ்கி இப்படி செய்வான் என்று மீத்யுகா எள்ளளவும் எதிர்பார்க்கவில்லை. அன்று போல் முடியை பற்றி பல விதமான வியாக்கியன உரையை தொடர்வான் என்றே எதிர்ப்பார்த்திருந்தாள். ஆனால் இன்று அவன் சஷ்டியின் மீதான பாசத்திலும், சஷ்டியின் உடல் நிலையை எண்ணி கவலையிலும் உண்டான வீரியமே விபரீதமானது. 

“பொம்பளகிட்ட வீரத்த காட்டுற நீ ஒரு ஆம்பளயா?” என்று ஓரமாய், “தூ..” என்று துப்பினாள். 

“அம்மாடி கோபத்துல வார்த்தைய விடாத மா.” என்று அவளை ஒரு புறம் இழுத்தார் லட்சுமி. மீத்யுகாவின் நெற்றி சற்று புடைக்க ஆரம்பித்தது. 

விகுஷ்கியின் கைபேசிக்கு அழைப்பு வர அதனை கண்டு கொள்ளாமல் வீட்டில் உள்ள கண்ணாடி பொருட்களை உடைத்துக்கொண்டிருந்தான். 

மீத்யுகாவின் புறம் திரும்பி, “இனிமே இந்த வீட்ல உனக்கு இடமில்ல போடீ வெளிய!” அவனுடைய குரல் ஆணாதிக்கத்தின் உச்சத்தில் இருந்தது.  அவளை பிடித்து வெளியே தள்ளினான். 

அவன் தள்ளிய வேகத்தில் சிதறிக்கிடந்த கண்ணாடி சில்லுகள் மீத்யுகாவின் மென்மை நிறைந்த பாதத்தை பதம் பார்த்தது. 

“ஸ்… ஆ… அம்மா!” என்று சத்தமிட்டவாறு நடக்க முடியாமல் தடுமாறினாள். உடனே லட்சுமி, மீத்யுகாவை தாங்கிப்பிடித்தார். 

“இங்க உக்காரு மா.” என்று பிளாஸ்டிக் கதிரையில் அமர வைத்தார். 

‘நான் மேல போயிட்டு கீழ வருவேன். அதுக்குள்ள நீ உன் பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துகிட்டு வெளிய போயிரணும்.” என்று எச்சரித்து விட்டு மேலே வேகமாக சென்றான்.

மீத்யுகாவின் கால்களில் குத்திய கண்ணாடிச் சில்லுகளை மெதுவாக வெளியே எடுத்தாள். அவளுக்கு லட்சுமியும் உதவி செய்தார்.  

நேரம் சரியில்லை என்று லட்சுமி வேறு எதையும் மீத்யுகாவிடம் பேசவுமில்லை, கேட்கவுமில்லை. 

விகுஷ்கி மாடி அறையிலிருந்து தலைகால் புரியாமல் வேகமாக ஓடி வந்தான். 

“எங்க தம்பி இவ்ளோ அவசரமாக கிளம்புறீங்க?” என்று லட்சுமி கேட்டார். நடந்த சண்டையில் எதும் தவறான முடிவுக்கு வந்துவிடுவானென்கிற பயத்தில் அப்படிக் கேட்டார். 

“சஷ்டிக்கு சீரியஸ்!” என்று கூறிக்கொண்டே ஓடினான்.  மீத்யுகாவுக்கும் சற்று பயமானது.

“அக்கா வாங்க நாமளும் கிளம்புவோம்.” என்று பதற்றமானது அவளது குரல். 

“எதுக்கு மா அங்க போயும் சண்ட போடுறதுக்கா?” 

“சண்டையெல்லாம் வராதுக்கா, எனக்கு பயமா இருக்கு, சஷ்டி எப்படி இருக்கானு பார்க்கணும்.” 

“சரி மா கிளம்பு.” என்று இருவரும் முச்சக்கரவண்டியை பிடித்து வைத்தியசாலைக்குச் சென்றனர். 

சஷ்டியிடம் தவறாக பேசிவிட்டோமோ, என்று மீத்யுகாவின் மனம் வருந்த ஆரம்பித்தது. 

வைத்தியசாலைக்குச் சென்று விகுஷ்கியின் நிலையை பார்ப்பதற்கே கவலைகிடமாய் இருந்தது. 

ஒரு செவிலியரையும் விடமால் தங்கையை பற்றி விசாரிக்க யாரும் பதில் கூறுவதாக இல்லை. 

மீத்யுகா, “சிஸ்டர் சஷ்டிக்கு என்னாச்சு?” 

“டாக்டர் வந்து சொல்லுவாங்க வெய்ட் பண்ணுங்க.” என்று கூறிவிட்டு அவர் பணியை தொடர்ந்தார். 

தங்கையை நினைத்து மனதில் மருகிக்கொண்டிருந்தான் விகுஷ்கி.

‘உனக்காகத்தான் ரொம்ப கஷ்டப்படுறேன். எப்படியாவது அண்ணன் கிட்ட வந்துருமா, எனக்கு அம்மா அப்பா எல்லாமே நீதான் சஷ்டிமா.’ என்று அவனுடைய குரல் சஷ்டி பெயரையே உச்சரித்துக்கொண்டிருந்தது. 

கதிரையில் அமர்ந்து தலையை சுவற்றில் அன்னார்த்தி சாய்ந்தான். கண்கள் சிவக்க கவலைகளை ஆழ்மனதிற்குள் அடக்கி வைத்தான். அவன் வாழ்வில் கவலைகளை ஆழ்மனதிற்குள் பதுக்கி வைப்பது பழகிப்போன ஒன்று. 

சிறிது நேரத்தின் பின்னர் வைத்தியர் சஷ்டியின் அறையை விட்டு வெளியே வந்தார். மீத்யுகாவும் வைத்தியரை பார்த்த வண்ணமிருந்தாள்

வைத்தியரை கண்டவுன் வேகமாக எழுந்து அருகில் சென்றான். “டாக்டர், என்… என் தங்கச்சி சஷ்டி க்யூர் ஆகிட்டாலா?” 

“சொல்ல கஷ்டமாதான் இருக்கு, பட் ஸாரி மிஸ்டர். விகுஷ்கி, எவ்வளவோ டிரை பண்ணோம். முடியல!” என்று வருத்தத்தோட கூறி, விகுஷ்கியின் தோளை ஆறுதல் தட்டிச் சென்றார். 

வைத்தியர் இப்படி கையை விரிப்பார் என்று கனவு கண்டிருப்பானா? இரண்டு வருடமாக உயிரை பிடித்து வைத்திருந்தானே எல்லாம் வீணா? தங்கை, தங்கையென்று சஷ்டியின் மீது அவன் வைத்திருந்த உயிர், உலகை விட்டு பிரிந்து சென்றதே! 

விகுஷ்கிக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது. நிலை தடுமாறி சுவற்றை பிடித்து கொண்டான். உடனே லட்சுமி விகுஷ்கியின் அருகில் வந்தார். 

‘சஷ்டி மீண்டு வரணும்னு தானே அப்படி எல்லாம் பேசினேன். அப்போ நானே சஷ்டிய கொன்னுட்டேனா?’ என்று தலையில் கையை வைத்து தரையில் அமர்ந்தாள். 

இனி என்னாவாகுமோ இருவரின் வாழ்க்கையில்? வாழ்க்கை என்பது ஆயிரம் சிறிய அற்புதங்களை அறிக்கை படுத்தும் தொடர்…

***

உணர்வுகள் தொடரும்…