😍உணர்வை உரசி பார்க்காதே! 20😍

20211124_190527-9781e17e

🌹அத்தியாயம் 20

வழக்கிற்கான நாளும் வந்தது வழக்கிற்காக இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலை ஆனார்கள்.

விகுஷ்கி, மீத்யுகா, வஜ்ரன், நீதிபதி மற்றும் மேலும் சில வழக்கறிஞர்களை மட்டும் கொண்ட ஓர் அறையில் வைத்தியரின் பரிசோதனை அறிக்கைகாக காத்திருக்க, சஷ்டி வழக்கின் முடிவுக்காக வெளியே காத்திருந்தாள்.  

 நீதிபதி, விகுஷ்கியின் தரப்பில் வாதாடுவதற்கு வக்கீல் இல்லையாயென்று வினவ, “நான் நேர்மையா இருக்கேன். ரிப்போர்ட் உண்மைய சொல்லும் மை லார்ட். அப்படி வாதாட வேணும்னா நானே எனக்கு வாதாடிக்கிறேன் மை லார்ட்.” என்றிட, வைத்தியர், பரிசோதனை அறிக்கையை நீதிபதியின் கையில் சமர்ப்பித்தார். 

 அறிக்கையை படித்த நீதிபதி மீத்யுகாவின் முகத்தையும், விகுஷ்கியின் முகத்தையும் பார்த்துவிட்டு, அவர் உரையை தொடர்ந்தார். “மீத்யுகாவின் வயிற்றில் வளரும் குழந்தை விகுஷ்கி தந்தையென காரணம் காட்டி மீத்யுகா தொடர்ந்த வழக்கில், வைத்திய ஆய்வின் அறிக்கையின் படி, மீத்யுகாவின் வயிற்றில் வளரும் குழந்தை விகுஷ்கியின் குழந்தைதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.” 

 விகுஷ்கியின் விழிகள் அகல விரிந்தது. நீதிபதி கூறிய வார்த்தைகளை விகுஷ்கியின் செவிகள் நம்ப மறுத்தது.  அவனை அறியாமலே ஒரு குழந்தைக்கு எப்படி தகப்பனான் என்ற சிந்தனை வாட்டி வதைக்க, நீதிமன்றத்திலே தலையை பிய்த்துக்கொள்ள வேண்டுமென்று ஓர் உணர்வு அவனுள் ஊடுருவியது. 

மீத்யுகாவின் விழிகளில் வெற்றி வாகையின் சாயலும், நீரும் நிரம்பி இருந்தது. ‘என்னோட கற்ப சந்தேகப் பட்டுடீங்களே விகுஷ்கி. இப்போவாவது நம்புறீங்களா, நான் உங்க வாரிசதான் சுமக்குறேன்னு?’ அவளை அறியாமலே விகுஷ்கியின் அன்பை நாடவேண்டும் என்பது போல் ஒரு உணர்வு. கருவுற்ற ஒரு பெண்ணுக்கு இயல்பாய் தோன்றும் உணர்வுகள் அவளிடமும் தோன்றியது. ஓடிச் சென்று கணவனை கட்டித் தழுவி அன்பை வெளிக்காட்டி கொள்ளை இன்பத்தை கொட்டித் தீர்த்திட வேண்டுமென்ற ஆசையில் அவனை பார்த்தாள். ஆனால், அவனுடைய கண்களோ ரத்தக்களறி நிறத்தில் காட்சியளித்து சூலியின் உணர்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

 “விகுஷ்கி ஏதாவது பேச விரும்புறீங்களா?” என்று நீதிபதி வினவினார். 

 ‘ஐயோ இது என் குழந்த இல்லயே! கோர்ட்டுல வச்சி என்னால சத்தம் போட முடியலயே!  இன்னைக்கு நான் சத்தம் போட்டா, லாயர் இன்டஸ்டிரில என்னோட கௌரவம் என்னாகும்? பெஸ்ட் லாயர்னு வாங்குன பேர் எல்லாம் வீணாகிரும் விகுஷ்கி பொறுமையா இருடா.’ என்று அவன் மனதை அவனே சமாளித்துக்கொண்டான். 

 “நோ மை லார்ட்” என்று சாதுவாய் கூறினான். அங்கிருந்த மேலும் சில வழக்கறிஞர்கள் விகுஷ்கி குடும்பத்தில் ஏதோ ஒரு குழப்பம் என்றும் அதனால்தான் நீதிமன்றம் வரை வந்திருக்கிறது என்றெண்ணிக்கொண்டனர். 

 “இந்த வழக்கு முடிவடைந்தது.” என்று நீதிபதி கூறி வழக்கை முடித்து வைத்தார். 

 மீத்யுகா, விகுஷ்கியை ஏக்கத்தோடு பார்க்க, அதனை பொருட்படுத்தாமல் அவளை கடந்து வெளியே சென்றான். 

 சஷ்டியோ பதற்ற நிலையில் பரிதவித்துப் போனாள். “அண்ணி, அண்ணி என்னாச்சு, அண்ணாக்கிட்ட கேட்டேன் எதுமே சொல்லாமா போறான். நீங்களாவது சொல்லுங்க?” 

 “உங்க அண்ணனோட பேபினு கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க.” என்று மீத்யுகா கூறினாள். 

 “சூப்பர் அண்ணி, இதுக்கு அப்பறம் அண்ணா என்ன செய்றானு பார்ப்போம்.” என்று மீத்யுகாவிற்கு தைரியம் வழங்கிவிட்டு, “ரொம்ப தேங்க்ஸ் சார்.” என்று வக்கீல் வஜ்ரனுக்கு, சஷ்டி நன்றியை தெரிவித்தாள். 

 “என் கடமையதான் செஞ்சேன். இதுக்கு அப்பறம் கவனமா இரு மீத்யுகா.” என்று கூறி வஜ்ரன் விடைப்பெற்றான். 

 “ஜட்ஜ் அண்ணாவோட பேபினு சொன்னதும், அண்ணாவோட ரியாக்ஷன் எப்படி இருந்துச்சு, அக்செப்ட் பண்ற மாதிரி உங்கள பார்த்தானா அண்ணி?” 

 “பார்த்தாரு, எனக்கு எந்த ஃபீலும் தெரியல, கோபம்தான் தெரிஞ்சுது.” 

 “என்ன அண்ணி சொல்றீங்க?” 

 “இதுக்கு மேல என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல சஷ்டி?”

 “அதை விடுங்க அண்ணி, வீட்டுக்கு போவோம். உங்களுக்கு வாமிட்டிங்க் சிம்டம்ஸ் எதுவும் இல்லதானே! நானும் நீங்களும் சேர்ந்து பாயசம் செஞ்சி அண்ணாக்கு குடுப்போம். அண்ணா கண்டிப்பா வீட்லதான் இருப்பான்.” என்று சஷ்டி, விகுஷ்கியை வெறுப்பேற்றி விடலாம் என்றிட,  “நாம போக முன்னாடி உங்க அண்ணன் பாயசம் ரெடி பண்ணி வச்சிருப்பாரு. நீ வேணும்னா பாரு வீட்டுக்கு போனதும் எனக்கு அபிஷேகம் நடக்கும்.” என்று உறுதியாய் விளம்பினாள். 

 “அதெல்லாம் நடக்காது. நான் இருக்கும் வரைக்கும் உங்களுக்கு ஒண்ணும் ஆகாது அண்ணி.” என்றாள் சஷ்டி.

 வீட்டில், பூனைப் போல் இருவரும் உள்ளே நுழைய, விகுஷ்கி சாய்வு இருக்கையில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்து தொலைக்காட்சி பெட்டியை பார்த்துக்கொண்டிருந்தான். 

 மீத்யுகா அவனை பார்த்து தட்டுதடுமாறி நடக்க, சஷ்டி, மீத்யுகாவின் கையை பற்றி வேகமாக இழுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். 

 “என்ன அண்ணி ஏதோ பூச்சாண்டிய  பார்த்த மாதிரி பம்மிக்கிட்டு இருக்கீங்க?” 

 “உங்க அண்ணாக்கு பயப்படல சஷ்டி, ஏதாவது சொல்லுவாருனு பார்த்துட்டு இருந்தேன். அவ்ளோதான்.” 

 “அவன் இப்போ எதுவும் பேச மாட்டான். அவன் லாயர்தானே, பாய்ன்ட் கெடைக்கும் வரைக்கும் வெய்ட் பண்ணுவான். நாம கருப்பட்டி பாயசம் பண்ணுவோம். அவனுக்கு அதான் ரொம்ப புடிக்கும். இம்ப்ரஸ் பண்ணி பார்க்கலாம்.” 

 ‘இரும்பு இதயம் எப்படி இம்ப்ரஸ் ஆகும்?’ என்றுது மீத்யுகாவின் அகம்.

 மீத்யுகா இதுவரை சமையலறைக்குள் சாப்பிடுவதற்கும், குளம்பி தாயாரிப்பதற்கும் மட்டும்தான் உள்ளே நுழைந்திருக்கிறாள். சமைத்ததே இல்லை. சில வேளை லட்சுமிக்கு காய்கறிகளை நறுக்கி கொடுப்பாள் அவ்வளவுதான். 

 “லட்சுமி மா நீங்க சமைச்சிட்டீங்களா?” என்று அருகில் இருக்கும் சஷ்டி வினவினாள். 

 “ஆமா பாப்பா, உனக்கு ஏதாவது செய்யணுமா?” 

 “இல்ல நீங்க கொஞ்ச நேரம் ஹால்ல போய் உக்காருங்க.” 

 “சரி பாப்பா.” என்று லட்சுமி சமையல் கட்டை விட்டு வெளியே சென்றார். 

 “அண்ணி நான் சொல்ற மாதிரி பண்ணுங்க” மீத்யுகாவும் தலையை ஆட்டினாள். 

 பாலை காய்த்து கருப்பட்டியையும் ஏலக்காயையும் பொடி செய்து பாலில் இட்டு நன்கு கொதிக்கும்போது சவ்வரிசியை இட்டு கிளரினாள். இறுதியா சேமியாவை தூவினாள். எல்லாம் நன்கு வெந்திட, “அண்ணி ஒன் பிஞ்ச் உப்பு போட்டு ஸ்டவ்வ ஆஃப் பண்ணிட்டு கிளரி விட்டுருங்க.” சஷ்டி கூறியது போல் அனைத்தையும் கட்சிதமாய் மீத்யுகா செய்து முடித்தாள்.  

 “இப்போ, ஒரு கப்ல ஊத்தி அண்ணாக்கு கொண்டு போய் குடுங்க.” என்று சஷ்டி கூற, மீத்யுகாவின் முகத்தில் ஏதோ ஒரு நரம்பு அடித்துக்கொண்டது. (அதிர்ச்சி), “என்ன சஷ்டி சொல்ற நான் பாயசம் குடுக்கணுமா?” 

 “ஆமா அண்ணி, நீங்களேதான் குடுக்கணும்.” 

 விகுஷ்கியின் வார்த்தைகள் எவ்வாறு இருக்குமென்ற பயத்தை விட, சுடச் சுட பாயசத்தை மேலே ஊற்றிவிடுவானோ என்கிற பயம்தான் மீத்யுகாவை ஆக்கிரமித்திருந்தது. 

 அவன் அருகில் சென்று பாயசத்தை நீட்டினாள். “என்னது?” என்று கணீரென்ற குரலில் கேட்டான். 

 மீத்யுகா தைரியத்தை வரவழைத்து, அவனுக்கு ஈடானா தொனியில், “பாயசம்” என்றாள். 

 பதிலுக்கு அவன் தலையில் ஆணாதிக்கம் குடிகொள்ள, மீண்டும்  கணீரென்ற குரலில், “எதுக்கு?” 

 “என் வயித்துல வளரது உங்க குழந்தனு ஃப்ரூப் ஆகிருச்சே! அதுக்குதான் இந்த ஸ்வீட் எடுத்துக்கோங்க.” என்ற மீத்யுகாவும் பெண் கொண்ட வீறை விட்டுக்கொடுக்காமல் செப்பினாள். 

 இவற்றை சற்று தள்ளி இருந்து பார்த்த சஷ்டியோ, “என் அண்ணி, என்னமா பேசுறாங்க!” என்று தூரத்திலிருந்தே நெட்டி முறித்தாள். 

 “ஓ! அதுக்குதானா!” என்று குதர்க்கமாய் வினவி, மீத்யுகாவின் கையில் இருக்கும் பாயசக் கோப்பையை பெற்றுக்கொண்டான். கருப்பட்டி பாயசம் என்பது நிறத்திலே தெரிந்தது. மீத்யுகாவின் பின் புறம் சஷ்டி நிற்பதை எட்டிப்பார்த்தான். கரண்டியை பிடித்து லேசாக கலக்கி, கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து சுவைத்தான்.  

 பாதியை முடித்திருந்தான், இடையில் பாயசத்தில் ஒரு முடி தெரிந்தது. அதை எடுத்து மீத்யுகாவின் கண்ணில் காட்டிவிட்டு கீழே வீசினான். சஷ்டி ஒரு புறம் தலையில் கையை வைத்தாள். ‘அண்ணாக்கு சாப்பாட்டுல முடி இருந்தா புடிக்காதே!’ உடனே சமாளிக்க வேண்டுமென்று, “அண்ணா சாப்பாட்டுல முடி இருந்தா உறவு நீடிக்கும்னு சொல்லுவாங்க.” என்றாள் சஷ்டி.

 “ச்சீ.. கருமம், இவ்ளோ நேரம் இதை சாப்பிட்டத நெனைச்சா அறுவெப்பா இருக்கு, நீ உண்டாகின இருக்க கருமத்துக்கு பாயசம் ஒரு கேடு! அதுக்கு அப்பனா இருக்க என் தலை எழுத்தா? இந்த மாதிரி ஹன்க்ளீனான சாப்பாடெல்லாம் எனக்கு தராத.” என்று கூறிவிட்டு, பாயசக் கோப்பையை வீசுவது போல் வேகமாக மேசையில் வைத்து விட்டு, கைகளை கழுவி வாயை கொப்பளித்தான். 

 காமத்தில் பெண்களின் கழிவும் அமிர்தமாகும். உணவில் ஒரு மயிரும் அசிங்கமாகும். 

 மீண்டும் வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டான். மீத்யுகா கோப்பையை எடுத்துக்கொண்டு அடுக்களைக்குள் சென்றாள். 

 “அண்ணி!” என்றிட, “உங்க அண்ணா சாப்பாட்டுல ஒரு முடி இருந்தா அதை எடுத்துப்போட்டு சாப்பிட மாட்டாரா?” என்று கோபமாக சஷ்டியிடம் கேட்டாள். 

 “ஸாரி அண்ணி! அவன் அப்படி வளர்ந்துட்டான். ” 

 விகுஷ்கி உத்தியோகத்திற்கு புறப்பட்டிருந்தான். மீத்யுகா வழிமறித்து, “விகுஷ்கி டிஎன்ஏ ரிப்போர்ட் வந்ததுக்கு அப்பறமும் நீங்க நம்பலயா?” 

 மீத்யுகா கேட்ட கேள்விக்கு, “சஷ்டி இங்க வா.” என்று அழைக்க, சஷ்டியும் அருகில் வந்தாள். 

 “நான், என் உயிரா நெனைக்கிற தங்கச்சி மேல சத்தியாம சொல்றேன். உன்னைய தொட்டதா ஞாபகம் எனக்கில்ல. உன் குழந்தைக்கு நான் அப்பா இல்ல.” என்று சஷ்டியின் தலை மேல் கையை வைத்து ஆழியும் அதிரும் அளவில் ஆணித்தனமாய் கூறிவிட்டு வெளியே சென்றான்.  சஷ்டி வாயடைத்துப் போனாள்.  மீத்யுகா வார்த்தைகள் அற்றுப் போனாள். 

 ஓவ்வொரு நாளும் மீத்யுகாவிற்கு தடைகளை தாண்டி ஓடுவதே போராட்டம்தான். கர்ப்பமாக இருந்தும் விளையாட்டு சங்கத்திற்கு செல்வதை நிறுத்தவில்லை. நின்ற நிலையில் இருந்தே மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினாள். உள்ளூர் மட்ட போட்டியில் மீத்யுகா பயிற்சி அளித்த குழு வெற்றியீட்டி மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. வெளியே திவ்யாவும், வீட்டில் சஷ்டியும் மீத்யுகாவை ஊக்கப்படுத்தி வலுவூட்டினர். 

 தந்தை, தாய், தமக்கை, பாட்டி என அனைவருடனும் கைபேசியில் பேசிக்கொள்வாள். ஆனால் சூலியாய் இருப்பதை இன்னும் தெரியப்படுத்தவில்லை. என்னாளும் சஷ்டி, விகுஷ்கியிடம் மீத்யுகாவை பற்றி எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்ளவே மாட்டான். 

 விகுஷ்கிக்காக மீத்யுகா பொறுமை காத்தாள். ஆனால் குழந்தை பொறுக்கவில்லை. இப்போ மீத்யுகாவிற்கு நான்கு மாதம் ஆரம்பித்திருக்க, மீத்யுகாவின் வயிரும் மேடு தட்ட ஆரம்பித்திருந்தது. 

 ஒவ்வொரு மாதமும் வைத்திய பரிசோதனைக்காக சஷ்டியுடன்தான் செல்வாள். இன்றும் அப்படிதான், பரிசோதனை முடிந்து சஷ்டி மாத்திரை வாங்கிக்கொண்டிருக்க, மீத்யுகா கதிரையில் அமர்ந்திருந்தாள். 

 மேலும் சில கர்ப்பிணி பெண்கள் தங்கள் கணவன்மாருடன் வருகை தந்திருப்பதை பார்ப்பத்துப் பார்த்து மீத்யுகாவின் மனம் ஏங்கியது. 

 ஒரு சூலி, மீத்யுகாவிற்கு எதிரே அமர்ந்து அவளுடைய கணவனின் தோளில் சாய்ந்திருந்தாள். அதை பார்த்த மீத்யுகா ஏக்கத்தோடு கண்கலங்கினாள். 

 “அண்ணி மாத்திரை வாங்கிட்டேன். நீங்க கவல படாதிங்க அண்ணி சீக்கிரம் அண்ணா மாறிடுவான். வாங்க வீட்டுக்கு போகலாம்.” என்றிட இருவரும் வீட்டிற்கு புறப்பட்டு வந்தனர். 

 விகுஷ்கிக்கு அவசரமாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜயோகியனின் வீட்டில் இருந்து அழைப்பு வர, அவனும் அவசரமாக அங்கு செல்வதற்கு ஆயத்தமானான். 

 “அண்ணா இவ்ளோ அவசரமா எங்க போற?” 

 “நீங்க வெளிய போகும்போது எங்கிட்ட சொல்லிட்டா போறீங்க. இல்லதானே! நான் வெளிய போகும்போது எங்க போறேனு கேக்க வேணாம்.” என்று கூறிவிட்டு மகிழுந்தை வேகமாக செலுத்திச் சென்றான். 

 அதற்கு மேல் இருவரும் அவர் அவர் வேலைகளில் கவனம் செலுத்தினர். 

 பாராளுமன்ற உறுப்பினர் ராஜயோகியனின் வீட்டில், “என்ன சார் இவ்ளோ அவசரமா வர சொன்னீங்க, என்ன விஷயம்?” 

 “அன்னைக்கு நீ வந்தப்போ கூட ஒரு சின்ன பொண்ணு இருந்துச்சே!” வியர்த்து விறுவிறுத்து போயிருந்தார். 

 “ஆமா சார். இப்போ அந்த பொண்ணுக்கு என்ன?” 

 பாராளுமன்ற உறுப்பினருக்கோ தயக்கம், எப்படி கூறுவது, அரசியலில் சம்பாதித்த அந்தஸ்து அடியோடு அழிந்துவிடுமே என்கிற பயம் வேறு, “அந்த பொண்ணுக்கு பதினைஞ்சு வயசுதான் இருக்கும். என் வைஃப்க்கு சொந்தம் கெடயாது. வீட்டு வேலைக்காக வச்சிருந்தோம். என் பையன் வயசு கோளாறுல ஆச பட்டு அந்த பொண்ண தொட்டுட்டான். அந்த பொண்ணு  தூக்கு மாட்டிருச்சு.” 

 பதினைந்து வயது சிறுமியை பணிப்பெண்ணாய் வேலைக்கு அமர்த்தியதை எண்ணும்போது நாட்டின் அரசியல்வாதி தனது சுயதேவைக்காக அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துக்கின்றனர் என்று வநிகுஷ்கி நினைக்கும்போது கேவலமாய் இருந்தது. 

 சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படடுத்தியது தெரிந்தும் பெற்ற பிள்ளையை கண்டிப்பதை தவிர்த்து பிள்ளையை காப்பாற்ற நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர், ராஜயோகியனா அல்லது ராஜஅயோகியனா?  என்று நினைக்கும்போது ஆத்திரம் வந்தது. 

 பெருமூச்சை விட்டான் விகுஷ்கி.   “தப்பா நெனைக்காத விகுஷ்கி,  பெரிய இடத்து பையன் கஷ்டம் தெரியாம வளர்த்துட்டேன். அந்த பொண்ணு வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சு, அவங்க நாங்க கொலை பண்ணதா சொல்றாங்க. போலீஸ்ல கேஸ் போட இப்போதான் போனாங்க. போலீஸ் வரத்துக்கு முன்னாடி ஏதாவது பண்ணணும்.” 

 விகுஷ்கிக்கு இந்த வழக்கை வாதாட விருப்பமில்லை. அமைதியாய் இருந்தான். “என்ன பா, அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” 

 “எவ்ளோ பணம் கேட்டாலும் தாரேன்.” விகுஷ்கி மேலும் அமைதியாக இருந்தான்.

 “ஒரு கோடி, ரெண்டு கோடி, ரவுண்டா பத்து கோடி தாரேன் பா. நீயே இந்த கேஸ வாதாடு” என்றிட,  “உங்க மகன் பேர் வெளிய வரமா இருக்கணும் அப்படிதானே சார்?” என்று கேட்கும்போது விகுஷ்கியின் தொனி மாறி இருந்தது. 

 “ஆமா, இந்த கேஸ் எப்படியும், டிவி பேப்பர்னு வரத்தான் போகுது, பாடிய போஸ்ட்மாட்டம் பண்ணுவாங்க. நான் டாக்டர கவனிச்சுக்கிறேன். நீ எதுக்கும் பயப்படாத, அந்த பொண்ணு மனஉளைச்சல்லதான் தூக்கு போட்டானு கேஸ் வாதாடணும்.” என்று படபடப்பாய் அனைத்தையும் கூறினார். 

 “சரி சார், அந்த பொண்ணு இருந்த ரூம காட்டுங்க சார்.” என்று கேட்க,  அந்த சிறுமி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அறை முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு வெளியே வந்துவிட்டான். 

“இது உண்மையாவே தற்கொலைதான். ஆனால் என் பையன் தொட்ட விஷயம் வெளிய வரக்கூடாது. டாக்டர்ல இருந்து கை ரேகை நிபுணர் வரைக்கும் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். நீ ஸ்ரோங்கா வாதாடுனா போதும். இப்போ நீ கிளம்பு போலீஸ் வருவாங்க. நானே இன்ஃபார்ம் பண்றேன். இந்த கேஸ என் தரப்புக்கு நீதான் வாதாடுறேனு. நீ இப்போ கிளம்பு பா.” 

 “ஓகே சார்.” என்று கூறிவிட்டு அந்த நொடியே அவ்விடத்தை விட்டு கிளம்பினான். 

 விகுஷ்கியின் மனம் முழுவதும், ‘அந்த பொண்ணு உசுருக்கு, பத்து கோடி பேரம் பேசுறான்.’ 

 விகுஷ்கி இந்த வழக்கை எப்படி வாதாட போகிறானோ, தெரியவில்லை?  இந்தமாதிரி எந்த ஒரு வழக்கிலும் இதுவரை வாதாடியது இல்லை. நியாயமான வழக்குகளை மட்டுமே வாதாடுவான். நியாயமற்ற வழக்கை வாதாட அவனுக்கு எப்படி துணிவு வந்தது? 

 சாதாரண மனிதனிடம் ஒரு அதிகாரத்தை கொடுத்துப்பார். அவனுடைய விஸ்வரூபத்தை அன்று அறிவாய் நீ!

***

உணர்வுகள் தொடரும்…