😍உணர்வை உரசி பார்க்காதே! 21😍

IMG-20211108-WA0067-6fce2e4f

🌹அத்தியாயம் 21

பாராளுமன்ற உறுப்பினர் ராஜயோகியனின் வீட்டில் இருந்து விரைவாக வந்திருந்தான். வந்தவனுக்கு மனதில் ஏதோ நெருடல் இருந்துக்கொண்டே இருக்க, குளியலறைக்குள் புகுந்து கொண்டான். 

சஷ்டியும் மீத்யுகாவும் வீட்டின் மண்டபத்தில் அமர்ந்து வலைப்பந்தாட்டத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். 

மீத்யுகாவிற்கு அதிர்ச்சி தரும் வகையில், “விகுஷ்கி!” என்று வாசலில் இருந்து நமசிவாயம் சத்தமிட்டார்.   

சட்டென வாசலைப் பார்த்த மீத்யுகா, தந்தையை கண்ட பூரிப்பில், “வாங்க ப்பா திடீர்னு வந்துருக்கீங்க!” என்று ஆசையோடு அழைத்தாள். உள்ளம் முழுவதும் தந்தையை கண்ட ஆசை இருந்தாலும், மீத்யுகா கருத்தரித்து இருப்பதை அவள் தந்தையிடம் கூறவில்லையே! தந்தை முன் எப்படி நிற்ப்பாள்? 

“நான் உள்ள வரல மா, விகுஷ்கி எங்க?” என்றவர் முகத்தில் கோபத்தை தெளித்துவிட்டது போல் தெரிந்தது. மீத்யுகா எழும்பி அருகில் சென்றாள்.மீத்யுகா அப்பா என்று அழைக்கும் போதே, சஷ்டி, நமசிவாயத்தை யாரென்று புரிந்துக்கொண்டாள்.

“குளிக்கிறாரு பா, நீங்க உள்ள வாங்க ப்பா.” என்றிட, நமசிவாயம் மேலிருந்து கீழ் வரை மீத்யுகாவை பார்த்து வாயடைத்துப்போனார். 

“நான் தாத்தாவாக போறேனா மா?” என்று நமசிவாயத்தின் குரல் மகிழ்ச்சியோடு துக்கத்தை வெளிப்படுத்தியது. 

“ம்ம்”. என்று மீத்யுகா கவலையோடு தலையை அசைத்தாள். கண்களில் துயர்நீர் கசிந்துருகியது.

“அதைக்கூட சொல்ல வேணாம்னு சொல்லிட்டானா அந்த ராஸ்கல்?” 

“வீட்டுக்குள்ள வாங்கப்பா பொறுமையா பேசலாம்.” 

“இல்ல மா, முதல்ல உன் புருஷன வரச் சொல்லு.” 

“ஏதாவது கோபமா ப்பா?” என்று ஏக்கத்தோடு கவலையாய் கேட்டாள் மீத்யுகா. 

விகுஷ்கி, நமசிவாயத்தின் குரல் கேட்டு குளியல் வேலையை வேகமாக முடித்துவிட்டு வெளியே வந்திருந்தான். 

“வாங்க மாமா.” என்று இன்முகத்தோடு கூறுவது போல் அவன் நடிப்பை ஆரம்பித்தான். 

அதற்கு நமசிவாயமோ, “எதுக்கு விகுஷ்கி அந்த கேஸ நீ எடுத்த?” என்று நமசிவாயம் தீவிரமான குரலில் கேட்டார்

“முதல்ல உள்ள வாங்க மாமா.” 

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?” அவர பிடித்த பிடியில் நின்றார். 

“நீங்க எந்த கேஸ கேக்குறீங்க மாமா, ஒரு கேஸா, ரெண்டு கேஸா நான் எடுத்திருக்கேன். எந்த கேஸுன்னு சொன்னாதானே தெரியும்!” விகுஷ்கிக்கு, நமசிவாயம் கேட்பது தெரிந்தும் சீண்டிப்பார்த்தான். 

நமசிவாயத்திற்கு கோபம் அதிகரித்தது. “பார்லிமெண்ட் மெம்பர் ராஜயோகியன் வீட்ல ஒரு கேஸ் போகுதே அதைதான் கேக்குறேன்.” 

“ஓ! அதுவா மாமா, பத்து கோடி தாரேனு சொன்னாங்க. அதான் ஓகே சொல்லிட்டேன்.” 

“என்னது? அந்த சின்ன பொண்ணு உசுருக்கு உங்கிட்ட பத்து கோடிக்கு பேரம் பேசிட்டானா அவன். நீ எப்படி அந்த மாதிரி கேஸ் எல்லாம் வாதாடலாம்?” 

“ஏன் மாமா, நான் அந்த கேஸ வாதாடுறதால உங்களுக்கு என்ன ப்ராப்ளம்?” 

“ஏன்னா, அந்த கேஸ கொலை வழக்கா வாதாட போறது நான்.  அதனால நீ விலகிக்க விகுஷ்கி” என்று அவர் குரலை உயர்த்தி பேசினார்.  

“மாமா இது ஒண்ணும் குடும்பம் விஷயம் கெடயாது. என்னோட தொழில் உங்களுக்கு புடிக்கலனா நீங்க விலகிக்கோங்க மாமா, ஸாரி” என சட்டென்று முகத்தில் அடித்தாற் போல்  பேசினான். 

சஷ்டி என்ன விடயமென்று தெரியாமல் முழிக்க, மீத்யுகா இருவருக்குமிடையிலானா கருத்து வேறுபாட்டை எப்படி சரி செய்வதென்று தெரியாமல் தடுமாறினாள். 

“நல்லா பண்ற உன் தொழில, உன்னைய எதிர்த்து வாதாடுறது எனக்கு ஒண்ணும் பெரிய விஷயம் கெடயாது. நீ நெனைச்சா அந்த சின்ன பொண்ணு குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வாங்கிக் குடுக்க முடியும். நீ இதை தற்கொலைனு வாதாடுறதுல உனக்கு பணம் கெடக்கலாம். ஆனா நீ இதுநாள் வரைக்கும் சம்பாரிச்சு வச்ச பேர் புகழ் எதுவுமே இருக்காது.” 

“அதை பத்தி நானே கவலை படல மாமா, நீங்க ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க.” 

“உனக்கு என் பொண்ண குடுத்துட்டேனு இப்போ ரொம்ப ஃபீல் பண்றேன்.  என் பொண்ணு உண்டானத கூட எங்கிட்ட சொல்லல. இப்போ புரியுது நீ எவ்ளோ நல்லவன்னு”

“நான் நல்லவன்தான், உங்க பொண்ணுதான் தப்பானவ, உங்க பேரபுள்ளைக்கு நான் அப்பா இல்ல. அதை உங்க பொண்ணுக்கிட்டவே கேட்டுக்கோங்க.” என்று கூறிய பிறகு நமசிவாயத்தை கண்டுகொள்ளாமல் அவனது அறைக்குள் சென்றான். 

நமசிவாயத்தின் முகமெங்கும் வியர்த்து கொட்டியது. தன்னுடைய ஆசை மகளை பற்றி அவன் அவதுறு கூறும்போது விகுஷ்கியை அறையும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. நமசிவாயம் மீத்யுகாவை பார்த்து, “என்ன மா இங்க நடக்குது? அவன் எப்படி பேசுறான் நீ பார்த்துட்டு இருக்க, இதுவே நீ பழைய மீத்யுகாவா இருந்து இருந்தா, நடக்குறதே வேற!” என்றவர் குரலில் விசனம் நிலவியது. 

மீத்யுகா பதில் கூற முடியாமல் வார்த்தைகளை மென்று விழுங்கினாள். தந்தையிடம் எப்படி கூறுவதென்று சிக்கித்தவித்தாள். 

“அப்பா! இப்போ எதுவும் கேக்காதீங்க பா, இன்னுமொரு நாள் பொறுமையா எல்லாம் சொல்றேன்.” 

“ஓ! அவன்தான் என்னைய மதிக்காம போறான்னா, நீ அதுக்கு மேல மா. அவனோட குழந்த இல்லேங்குறான். நீ குத்துக்கல்லு மாதிரி கேட்டுட்டு நிக்கிற, இதை நான் எந்த அர்த்தத்துல எடுத்துக்கிறதுன்னு எனக்கு தெரியல, ஆனா ஒண்ணு! அவனுக்கு நீ பொண்டாட்டியா இருந்து இது அவனோட குழந்தையா இருந்தா மட்டும்தான் நான் உனக்கு அப்பா. இல்லேனா இந்த அப்பாவ மறந்துடு மா.” என்று கூறிவிட்டு விறுவிறுயென அவ்விடத்தை விட்டு கிளம்பினார். 

“அப்பா! அப்பா!” என்று சத்தமாக மீத்யுகா கூப்பிட ,நமசிவாயத்தின் செவிகளுக்குள் செல்லவில்லை. 

தந்தை கூறிய வார்த்தைகள், தவறே செய்யாத மீத்யுகாவின் மனதை கிழித்தது. மீத்யுகாவிற்கும் நமசிவாயத்திற்கும் சிறு வயதிலிருந்த நெருக்கத்தில் விரிசல் விழுந்தது. தந்தையை எண்ணி மகளும், மகளை எண்ணி தந்தையும் மனம் மருகினர். 

அவன் அறைக்குள் இருக்க சஷ்டி வேகமாக அறைக்குள் சென்றாள்.  “அண்ணா வெளிய வா.” என்று கோபத்துடன் சத்தமிட்டாள் சஷ்டி. 

“இப்போ எதுக்கு சஷ்டி சும்மா கத்துற?” 

“அண்ணியோட அப்பாக்கிட்ட இப்படிதான் பேசுவியா? இப்போ என்ன பிரச்சனை, நீ எந்த கேஸ் வாதாட போற என்று தீவிரமாக கேட்டாள். 

“டிவிய போட்டு பாரு, ப்ரேங்கிங் நியூஸ் போகும்.” என்று கூறிவிட்டு, சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான். 

அவன் கூறுவதை கேட்டு வேகமாக மீத்யுகா தொலைக்காட்சி பெட்டியை உயிர்ப்பித்தாள். ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக்கொண்டே வந்தாள். 

அவரசர செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அடுத்து  உள்நாட்டு செய்தி, என்று செய்தி வாசிப்பாளர் கூற, மீத்யுகாவும் சஷ்டியும் கூர்ந்து நோக்கினர். 

“இன்று வலை தளங்களில் பரபரப்பாகப் பகிரப்படும் தகவல், ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மு. ராஜயோகியனின் வீட்டில், பதிமூன்று வயதிலிருந்து பணிப்பெண்ணாய் வேலை செய்து வந்த சிறுமி பதினைந்து வயதில் மனஉளைச்சல் காரணமாக திடீரென தற்கொலை! சிறுமியின் பெற்றோர் சிறுமியை கொலை செய்த்திருக்கலாமென்று சந்தேகிக்கின்றர். போலீஸார் மு. இராஜயோகியனின் குடும்பத்தினருடன் முதல் கட்ட  விசாரணை செய்து வருகின்றனர்.  செய்திகள் மேலும் மதிய வேளையில் தொடரும் நன்றி, செய்திகள் முடிவடைந்து.”

இருவருக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழப்ப நிலைக்கு ஆளானார்கள். “அண்ணி, ஃபேஸ்புக், யூடியூப்ல பார்க்கலாம். கண்டிப்பாக உங்க அப்பா ஏன் சத்தம் போட்டாருன்னு தெரியும்.” என்று சஷ்டி கூற, இருவரும் ஆளுக்கு ஒரு புறம் கைபேசியில் அலசி ஆராய ஆரம்பித்தனர். 

“சஷ்டி இங்க பாரு.” என்று கூறிவிட்டு காணொளியை அழுத்தினாள். 

அதில் இராஜயோகியனின் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. “எங்க வீட்ல அந்த பொண்ணு வேலை பார்க்க வந்து ரெண்டு வருஷம் ஆகுது. நாங்க நல்லாதான் பார்த்தோம். எந்தவித அசிங்கமான சம்பவமோ எங்க வீட்ல அந்த பொண்ணுக்கு நடக்கல. போஸ்ட்மொட்டம் ரிப்போர்ட் அதை சொல்லும். எங்க பக்கம் வாதாட போறதே வக்கீல் விகுஷ்கிதான். நியாயமான வழக்க மட்டும்தான் விகுஷ்கி வாதுடுவாருன்னு உங்க எல்லாருக்கும்  தெரியும். அந்த பொண்ணு வீட்ல பணம் புடுங்குறதுக்காக கேஸ் ஃபைல் பண்ணிருக்காங்க. இதுதான் உண்மை!” என்று காணொளி நிறைவடைந்தது. 

“ஐய்யோ!” என்று சஷ்டியும், மீத்யுகாவும் ஒரு சேர கூறி வியந்தனர். 

“இப்போதான் புரியுது. உங்க அண்ணன் இந்த மாதிரி கேஸ்ல வாதாடுறேனு ஒத்துக்கிட்டதாலதான் என் அப்பா வந்து சத்தம் போட்டு போயிருக்காரு!” 

“எனக்கு உண்மையாவே தலை வலிக்குது அண்ணி, அண்ணா இந்த மாதிரி கேஸெல்லாம் எடுக்க மாட்டான். ஏன் இப்படி பண்ணானு எனக்கு புரியல, அண்ணா, அந்த சின்ன பொண்ணுக்கு சார்பா வாதாடி இருக்கணும். அண்ணா இப்போல்லாமே தலை கீழா பண்றான்.” 

“அந்த பொண்ணு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும். ஸ்கூல் போய் என்ஜாய் பண்ற வயசுல.  பெத்தவங்கள பிரிஞ்சு வீட்டு வேலை பார்க்குறது எவ்ளோ வருத்தமா இருக்கும்.” என்று அச்சிறுமியை நினைக்க துக்கமானது. 

கைபசியில் அதற்கு கீழ் இருக்கும் இன்னுமொரு காணொளியை சஷ்டி அழுத்தினாள். 

அச் சிறுமியின் தாயின் கதறல். “வீட்டு கஷ்டத்துக்காகதான் என் புள்ளைய வேலைக்கு அனுப்பினேன். இப்போ என் புள்ளை உசுரோட இல்லயே. என் புள்ளைய எல்லாரும் சேர்ந்து கொண்டுட்டாங்க, கொண்டுட்டாங்க. என் புள்ளக்கு நீதி கெடைக்கணும். இந்த அரசாங்கம் இதுக்கு ஒரு முடிவு கட்டணும்!” என காணொளி முடியவில்லை. சஷ்டி காணொளியை மூடிவிட்டாள். 

அதற்கு மேல் அவளால் பார்க்க முடியவில்லை. “நான் எங்கயாவது ஓடிப் போகப்போறேன் அண்ணி” 

“உனக்கு அப்படி இருக்குனா, எனக்கு எப்படி இருக்கும்?” என்று மீத்யுகா அவளிடம்  கூறினாள். 

பள்ளிப் பருவத்தில்  பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியிமால் சிறுவயதின் உணர்வுகளை  கட்டிட்டு பணிப்பெண்ணாய் வேலை பார்த்த அவலம் அச் சிறுமிக்கு, பெற்றோரை பிரிந்து அவர்களின் அன்பு கிடைக்காமல் போக வேலை செய்வது கடினமென்றாலும், அவ்வயதில் பலாத்காரத்திற்கு உட்படுத்துதல்  என்பது உடலையும் தாண்டி மனதின் உணர்வுகள் தோற்று மனஉளைச்சலை ஏற்பத்தியதற்கான சந்தர்ப்பங்கள் ஏராளம். ஓர் நாள் இரவேனும் நிம்மதியாக கண்ணீரின்றி அவள் கண்கள் ஓய்வெடுத்திருக்குமா என்பதே கேள்விக்குறிதான்? 

‘இந்த கேஸ் விகுஷ்கி வாதாடக்கூடாது. அந்த சின்ன பொண்ணுக்கு நீதி கெடைக்கணும். அதுக்கு நான் அப்பாக்கு சப்போர்ட்டா இருக்கணும்.’ அந்த காமவெறியனுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டுமென்று மனதில் கடவுளை வேண்டினாள்.

யாரை குற்றம் கூறுவது, ஏழை குடும்பத்தில் பிறந்தது அந்தச் சிறுமியின் குற்றமா? 

வீட்டின் வறுமைக்கு பெற்ற பிள்ளையை சிறுவயதில் பணிப்பெண்ணாய் வேலைக்கு அமர்த்தியது பெற்றோரின் குற்றமா? 

பெற்றோரின் சம்மதத்துடன் பதினெட்டு வயது பூர்த்தியடையாமல் ஒரு சிறுமியை வீட்டு வேலைக்கு எடுத்தது அரசியல் வாதியின் குற்றமா? 

பெற்றோரும், அரசியல்வாதியும் செய்த குற்றத்திற்கு அச் சிறுமியின் உயிர் அல்லவா உலகை விட்டு பிரிந்தது. 

விகுஷ்கியின் அலுவலகத்தில், “சார் இந்த மாதிரி ஒரு கேஸ நீங்க கண்டிப்பா வாதாடி ஆகணுமா?” என்று வேலன் குதர்க்கமாய் வினவினான். 

“ஆமா!” என்று விகுஷ்கியின் தொனி உயர்ந்தது. 

“ஓகே சார் அது உங்க விருப்பம். நான் சுத்தி வளைச்சு பேசல, நான் என் விருப்பத்த சொல்றேன். இந்த மாதிரி பணத்துக்காக ரேப் கேஸ வாதாடுறது எனக்கு புடிக்கல.

உங்கள மாதிரி ஒரு சீனியர் லாயர் கிட்ட, ஜூனியர் லாயரா வொர்க் பண்ண புடிக்கல சார், நான் விலகிக்கிறேன்.” என்று வேலன் முகத்திற்கு அடித்தாற் போல் பேசினான். இதுவரை வேலன் அப்படி பேசியதே இல்லை. 

“குட், உன் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு வேலா, நீ தாராளமா விலகிக்கோ எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல.” என்று கூறினான் விகுஷ்கி. அதற்கு மேல் பேசப் பிடிக்காமல் செல்வதைக் கூட சொல்லாமல் வேலன் வெளியே சென்றான். 

விகுஷ்கி தனியே இருந்து வழக்கிற்கு தேவையான குறிப்புக்களை குறித்துக்கொண்டிருந்தான். 

விகுஷ்கியின் கையில் கிடைத்த கடித்ததை விரித்து படிப்பதும், கடிதத்தை மடித்து விட்டு கண்கலங்குவதுமாய் இருந்தான். இப்படியே அரை மணிநேரம் கடந்தது.

சஷ்டி அழைப்பு விடுத்தாள். கண்களை துடைத்துவிட்டு கைபைசியை அழுத்தி காதில் ஒற்றினான். “அண்ணா எங்க இருக்க, லஞ்ச் சாப்பிட வரலயா?” 

“இரு மா பத்து நிமிஷத்துல வரேன்.” என்று அழைப்பை துண்டித்துவிட்டு, வழக்கிற்கு தேவையான ஆவணங்களை கையோடு எடுத்துச் சென்றான். 

வீட்டிற்கு வந்த மறுகணமே, “அண்ணா உன்னைய சாப்பிட கூப்பிடல, டிவிலயும் போன்லயும் நியூஸ் பார்த்தேன் அண்ணா!” என்றிட, சஷ்டி எதை கூற முனைகிறாள் என்று விகுஷ்கி புரிந்து கொண்டான். 

“ஓ பார்த்துட்டியா? நல்லது!”

“ஏன் ணா, அந்த கேஸ எடுத்த? நமக்கு அந்த கேஸெல்லாம் வேணாம் ணா.” 

“நீ சின்ன புள்ள மா, உனக்கு ஒண்ணும் தெரியாது. இந்த கேஸ ஜெய்ச்சிட்டேனு வை. பத்து கோடி கெடைக்கும்!” என்று கூறும்போது விகுஷ்கியின் கண்கள் அகல விரிந்தது. 

“விகுஷ்கி, இந்த கேஸ நீங்க வாதாடாதீங்க. நம்ம செய்ற பாவம் நம்ம புள்ளைக்கு வந்து சேரும்.” 

“எது டீ நம்ம புள்ள? அது உன் புள்ள, டீஎன்ஏ ரிப்போர்ட்ட தவிற உங்கிட்ட வேற எதாவது ஆதாரம் இருக்கா?” என்றிட, மீத்யுகா ஒரு கையை அடிவயிற்றிலும், மறு கையால் வாயை பொத்தினாள். வார்த்தைகள் வரவில்லை. 

“என்ன விகுஷ்கி கேட்டீங்க, ஆதாரமா?” என்று கூறிவிட்டு, அவன் கையை பற்றி இழுத்து சென்றாள் அவனது அறைக்கு.  “இந்த நாலு சுவத்தயும் கேளுங்க, இந்த பெட்ட கேளுங்க, அன்னைக்கு என்ன நடந்துச்சினு சொல்லும்! ஏன் எந்த டேபிள கூட கேட்டுபாருங்க.” சிறு குழந்தை போல் விம்மி விம்மி அழுதுகொண்டே கூறினாள்.

அவள் தீவிரமாக கூறுவதை, விகுஷ்கி கேலியாக எடுத்துக்கொண்டான். “நான் ஒண்ணும் ஸ்கூல் பையன் இல்ல. லாயர்! யூகேஜி, எல்கேஜி பசங்க கிட்ட இந்த மாதிரி கதை சொல்லு கை தட்டி சிரிப்பாங்க.” 

“சிரிக்காதீங்க விகுஷ்கி. நான் சீரியஸ்ஸா பேசுறேன். நீங்க வாதாடுனா கண்டிப்பா அந்த சின்ன பொண்ணுக்கு நீதி கெடைக்காது. ப்ளீஸ் விகுஷ்கி அந்த கேஸ விட்டுருங்க.” என்று அவனிடம் இறைஞ்சினாள். 

“அனாவசியமா என் ஃபீலிங்க்ஸ சீண்டிப்பார்க்காத!” என்று எச்சரித்தான்.  

“இல்ல விகுஷ்கி இந்த கேஸ நீங்க வாதாடக் கூடாது. நான் விடமாட்டேன்.” 

சஷ்டியும் அறைக்கு வந்துவிட்டாள். “அண்ணா இந்த கேஸ் வேணாம். எங்களுக்கு புடிக்கல ணா.” 

“எல்லாம் விஷயத்துலயும் உன் பேச்ச கேக்கணும்னு எந்த அவசியமும் இல்ல சஷ்டி. தங்கச்சி பாசத்த வைச்சி ப்ளாக்மையில் பண்ணிட்டு வராத இத்தோட நிப்பாட்டு.” என்று சஷ்டியை அதட்டினான்.

“அண்ணா!” என்று சலனத்தோடு சஷ்டி கண்கள் கலங்கி நின்றாள். 

“என்னையும் குழந்தையும் நீங்க ஏத்துக்கலனாலும் பரவாயில்ல.  இந்த கேஸ மட்டும் வாதாடாதீங்க.  ப்ளீஸ் விகுஷ்கி.”

“உன்னைய ஏத்துக்கிட்ட மட்டும் எனக்கும் பணம் கெடச்சிருமா? வாதாட வேணாம் வாதாட வேணாம்ன்னு சொல்றீங்க! பத்து கோடிய எடுத்து வச்சிட்டு சொல்லுங்க. நான் அந்த கேஸ்ல இருந்து வாதாடாம இருக்கேன்.” 

“பணம் பணம்னு பேசுறீங்களே! சாகும்போது பணத்தையா கொண்டு போவீங்க. சின்ன பொண்ணோட கற்புக்கு பத்து கோடிக்கு பேரம் பேசிட்டீங்களே! பாவப்பட்ட காசுல நம்ம குழந்த, ஸாரி ஸாரி! என் குழந்த வளரக்கூடாது. இதுக்கு மேல இந்த வீட்ல இருக்கதுல அர்த்தமே இல்ல.” என்று விகுஷ்கியிடம் விசனத்தோடு வீம்புரைத்தாள். 

“சஷ்டி இதுக்கு அப்பறம் இந்த வீட்ல நான் இருக்க மாட்டேன். உன் அண்ணன் காசுல ஒரு சொட்டு தண்ணி குடிச்சாலும், என் புள்ளைக்கு அது வெஷம். இந்த மாதிரி பணத்தாச புடிச்ச அப்பா என்புள்ளைக்கு வேணாம். குழந்த பொறந்த அப்பறம் அப்பானு சொல்லி நானிருக்க வீட்டு பக்கம் வர வேணானு சொல்லு. இது அவர் குழந்த இல்ல. என் குழந்த, எனக்கு மட்டும்தான் சொந்தம்.” என்று மீத்யுகாவின் வாயில் இருந்து தீப்பொறிகள் போல் வந்த வார்த்தைகள் முடியவில்லை. விகுஷ்கி குறுக்கிட்டான்.

“நான் சொல்லும்போது நீ நம்பல அது என் குழந்தனு சொன்ன, இப்போ நீயே ஒத்துக்கிட்ட என் குழந்த இல்லனு. உன்ன யாரும் இந்த வீட்ல இருக்க சொல்லி கட்டாயப்படுத்தல. தாராளமா வெளிய போகலாம்!” என்றான், அவள் இப்போதாவது வெளிய செல்கிறாள் என்கிற மகிழ்ச்சியில்  வார்த்தைகளை அள்ளி வீசினான்.

“மறுபடியும் சொல்றேன். உங்க குழந்தனு எந்த மூஞ்ச வச்சிட்டும் வந்துறாதீங்க. அப்பா இல்லாம குழந்தைய என்னால வளர்க்க முடியும்!” மீண்டும் எச்சரித்துவிட்டு, அவளுக்கு தேவையான பொருட்களை திரட்டிக்கொண்டாள்.

“அண்ணி நானும் உங்கூட வரேன்.” தப்பான வழியில் வரும் பணத்தில் சஷ்டியும் வாழ விரும்பவில்லை. 

“அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத சஷ்டி, பின் விளைவுகள் மோசமா இருக்கும்.” என்றான் விகுஷ்கி. 

“எது சரி எது தப்புனு எனக்கு தெரியும். வாங்க அண்ணி போகலாம்.” சஷ்டிக்கு தேவையான பொருட்களையும் எடுத்துக்கொண்டாள்.  மீத்யுகாவின் கையில் உள்ள பாரமான பையையும் வாங்கிக்கொண்டாள். இருவரும் தலை நிமிர்ந்து வெளியே சென்றனர். 

என்ன நினைத்தானோ, சஷ்டியை கூட விகுஷ்கி தடுக்கவில்லை.  அவன் எண்ணம் முழுவதும் அவ்வழக்கில் எவ்வாறு வெற்றி அடையலாமென்றே இருந்தது.  இன்னும் ஒரு சில நாட்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும். 

வாழ்க்கை எனும் பயணத்தில்  மகிழ்ச்சியை தேடுவதே ஒரு துன்பம்! 

***

உணர்வுகள் தொடரும்…