😍உணர்வை உரசி பார்க்காதே! 23😍

IMG-20211108-WA0067-7f307095

 🌹அத்தியாயம் 23

மீத்யுகாவிற்கு இப்போது ஒன்பதாவது மாதம் நடைபெறுகிறது. விடிந்த பொழுது வலையல் ஓசையுடன் நிறைய மாத வயிற்றை வருடிக்கொடுத்து வழக்கிற்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தாள்.  திடீரென மீத்யுகாவின் இடுப்பில் யாரோ சாட்டையால் ஓங்கி அடித்தது போல் இருந்தது. 

இடுப்பை பிடித்துக்கொண்டு அமர்ந்துகொண்டாள். அதீத வலிதான் இருப்பினும் சத்தமிடவில்லை. தைரியசாலி என்பதனால் வலியை பொறுத்துக்கொண்டாள். “என்ன குட்டி, அம்மாவ உதைக்கிறியா, மெதுவா உதை அம்மா பாவம்ல.” என்று வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் கெஞ்சிவிட்டு, உணவு உண்பது மாத்திரை உட்க்கொள்வது என்று அடுத்த அடுத்த வேலைகளில் முழ்கினாள். 

அரை மணி நேரம் கழித்து மீண்டும் இடுப்பில் சுருக்கென்ற ஒரு வலி, “திவ்யா! இடுப்பு வலிக்குது.” என்று உதட்டை கடித்துக்கொண்டு பெரும்மூச்சை விட்டாள் மீத்யுகா. 

“ஆஸ்பிடல் போகலாம் டீ, இரு கேப் புடிச்சிட்டு வாரேன்.” என்று வேகமாக திவ்யா கிளம்பினாள். சஷ்டியோ என்ன செய்வதென்று தெரியாமல் நிலை தடுமாறினாள். 

“அண்ணி கொஞ்சம் பொறுத்துக்கோங்க. சீக்கிரம் ஆஸ்பிடல் போயிரலாம்.” என்று கூறிவிட்டு சுவாமி அறையின் முன்னாடி நின்று, “அண்ணிக்கும் பாப்பாக்கும் ஒண்ணும் ஆகக்கூடாது.” என்று தும்பிக்கை உடையன் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்து மீத்யுகாவின் நெற்றியில் திருநீறு பூசினாள். 

“மீத்யுகா கேப் வந்துருச்சு.” என்று திவ்யா கூறி மீத்யுகாவின் கையை  பிடித்துக்கொள்ள, சஷ்டி, மீத்யுகாவிற்கு தேவையான பொருட்களின் பையை எடுத்துக்கொண்டாள். 

“ம்ம், ஹா..” என்று வலியில் முனங்கிக்கொண்டிருந்தாள் மீத்யுகா. 

“ரொம்ப வலிக்குதா அண்ணி?” மீத்யுகா வலியால் துடிப்பதே சஷ்டிக்கு பயத்தை கிளரி கண்களை நிரம்ப வைத்தது. 

கீழ் உதட்டை பற்களால் கவ்விப்பிடித்து வலியில் சிவந்திருந்த  கண்களை இமைத்து, தலையை மேலும் கீழும் அசைத்து, ‘ஆம்’ என்று சைகை புரிந்தாள் மீத்யுகா. 

மகிழுந்து சீறாக சென்றுக்கொண்டு இருக்க, சஷ்டி, விகுஷ்கிக்கு அழைப்பு விடுத்தாள். 

“அண்ணிக்கு வலி வந்துடுச்சு ணா, ஆஸ்பிடல் போயிட்டு இருக்கோம். எனக்கு பயமா இருக்கு ணா! நீ கிளம்பி வாரீயா?” என்று அவளை அறியாமல் கேவல்களுடன் கெஞ்சினாள். 

“நான் டிரைவ் பண்ணிட்டு இருக்கேன். கோர்ட்ல கேஸ் இருக்கு, போன வை சஷ்டி.” என்று சட்டெனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். தன் மனைவியென்றும், குழந்தையென்றும் நினைக்காவிட்டின் பரவாயில்லை. தெரிந்த பெண் பிரசவ வலியில் துடிக்கிறாளென்று பெண் மீது ஒரு துளி பச்சாதாபமேனும் வரவில்லை. 

இங்கு மீத்யுகாவோ தலையை அங்கும் இங்கும் அசைத்து அடிவயிற்றியில் கையை வைத்து வலியில் துடியாய் துடித்தாள். அவ்வலியிலும், “சஷ்டி நீயும் திவ்யாவும் கோர்ட்டுக்கு போங்க. நான் தனியா மேனேஜ் பண்ணிப்பேன்.” 

“இல்ல அண்ணி. நான் உங்கள விட்டுப்போக மாட்டேன். உங்ககூடதான் இருப்பேன்.” 

“மீத்யுகா, நீ போல்ட் கேர்ள்தான், அதுக்காக இந்த மாதிரி நேரத்துல  தனியா விட்டுட்டு போக முடியாது.” என்று இருவருமே உறுதியாய் இருந்தனர். 

மீத்யுகா, திவ்யாவின் கையை பற்றி, “ப்ளீஸ் டீ நீயாவது போயிட்டு வா. கோர்ட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும்.” என்று இறைஞ்சினாள். 

“சஷ்டி சின்ன பொண்ணு, அவளுக்கென்ன தெரியும். அவளே அழுறா அங்க பாரு.” 

“அவ பார்த்துப்பா, நீ ஆஸ்பிடல்ல விட்டுட்டு கிளம்பு.” என்று கூற திவ்யாவால் மறுக்க முடியவில்லை. மீத்யுகாவின் பிடிவாதத்தை வேறு வழியின்றி திவ்யா ஏற்றுக்கொண்டாள். 

சீறாக சென்ற வண்டி எதிர்பாரா விதமாய் வேகதடையிட்டு நின்றது. “என்ன ணா வண்டிய நிறுத்திட்டீங்க?” என்று திவ்யா வினவ, “தெரியலயே  மா இருங்க பார்க்குறேன்.” என்றார் வண்டி சாரதி.

வண்டியை பரிசோதித்து விட்டு,  “மா இதுக்கு மேல வண்டி நகராதுமா. இருங்க வேற வண்டி பார்க்குறேன்.” என்றார். 

“அண்ணா கொஞ்சம் சீக்கிரமா பாருங்க.” என்று பதற்றத்துடன் சஷ்டி.  வழியில் செல்லும் வண்டியை வழி மறித்து, “சார், ஒரு அம்மா பிரசவ வலில இருக்காங்க. நீங்க போற வழில ஆஸ்பிடல் இருக்கு. இறக்கிவிட்டு போங்க சார். பாவம் சார் ரொம்ப வலில இருக்காங்க.” 

“ஓகே சீக்கிரமா வரச்சொல்லுங்க.” 

“அம்மா, அந்த கார்ல போகலாம் வாங்கம்மா.” என்றிட, மூவரும் இறங்க, மீத்யுகாவும் சஷ்டியும் விகுஷ்கியின் மகிழுந்தை பார்த்து வியந்து நிற்க, “அண்ணி, அண்ணா வண்டில போகலாமா?”  அப்போதுதான் திவ்யா விகுஷ்கியை பார்த்தாள்.

மீத்யுகா சரியென தலையை அசைத்தாள். இப்போது மீத்யுகாவிற்கு தேவைப்பட்டது விகுஷ்கியின் அருகாமை மட்டுமே! 

விகுஷ்கியோ, ‘ப்ளான் பண்ணி பண்றாங்களோ! ச்சே அப்படி இருக்காது. உண்மைலே வலிலதான் இருக்கா, ஹெல்ப் பண்ணுவோம்.’ என்றது விகுஷ்கியின் மனம்.  

மூவரும் வண்டியில் அமர்ந்து கொண்டனர். மீத்யுகா கண்களால் ஏங்கிக்கொண்டிருந்தாள், விகுஷ்கியின் அன்பான வார்த்தைகளுக்கு, “சஷ்டி எந்த ஆஸ்பிடல்?” என்றான் அவன்.

“இன்னும் அஞ்சு கிலோ மீட்டர் போ, பக்கத்துல பிரைவட் ஆஸ்பிடல் இருக்கு. அங்க நிப்பாட்டு.” 

மீத்யுகா வலியில் துடிப்பதை கண்ணாடி வழியே பார்த்தவன்  பெரும்மூச்சை விட்டு, வண்டியை வேகமாக நகர்த்த ஆரம்பித்தான். 

“இன்னும் பத்து நிமிஷத்துல ஆஸ்பிடல் போயிறலாம். கொஞ்சம் பொறுத்துக்க சொல்லு.” என்று சஷ்டியிடம் கூற, அது மீத்யுகா செவியை சென்றடைந்தது, அது வேறும் வார்த்தைகள் அல்ல, இன்ப ஊற்று. அன்பு தென்படவில்லை என்றாலும், மனிதாபிமானம் தெரிந்தது. இறுதியாக அவனுடைய குழந்தை இல்லையென்று மீத்யுகா கூறிய வார்த்தைகளை  மீத்யுகா மறந்துபோனாள். வலி சற்று குறைந்தது போல் இருந்தது விகுஷ்கி கூறிய வார்த்தைகளில். 

ஆனால் விகுஷ்கிக்கோ, யாரோ ஒரு பெண் வலியில் துடிக்கிறாள். அவனுடைய வண்டியில் செல்வதாலும், அவன் வண்டியை செலுத்துவதாலும் பெண் படும் பாட்டை பார்க்க முடியாமல், அப்படி கூறினான் அவ்வளவுதான்! 

“ஆஸ்பிடல் வந்துருச்சு, இரு வாட் பாய வரச் சொல்றேன்.” என்று வேகமாக உதவியாளரை அழைத்து வந்துவிட்டு, “ஓகே நான் கிளம்புறேன் சஷ்டி.” 

“அண்ணிக்காக வேணாம் ணா.  எனக்காக கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போ ணா.” 

“இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல நான் கோர்ட்டுல இருக்கணும், பாய்.” என்று கூறிவிட்டு வைத்தியசாலையிலிருந்து வெளியேறினான். 

“திவ்யா நீயும் கெளம்பு” என்று வலியை கட்டு படுத்திக்கொண்டு கூறினாள்.

“ஓகே டீ, கவனம் மீயூ. நான் ஃபோன ஸ்வீச் ஆஃப் பண்ண மாட்டேன். சைலண்டுல போட்டுக்கிறேன்.” என்று கூறிவிட்டு மீத்யுகாவின் கையை அழுத்தமாக பற்றிவிட்டு சென்றாள். 

நீதிமன்றத்தில், வழக்கு ஆரம்பிப்பதற்கு இன்னும் சில நிமிடங்கள் அவையோர் அனைவருக்கும் படபடப்பாய் இருந்தது. அவையோரின் இதழ் கணத்த மௌனத்தை கடந்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் சாப்பாத்தின் சத்தம்  விகுஷ்கி வழக்கை வாதாட  நீதிமன்றத்திற்குள் வருகிறான் என்பதை உணர்த்தியது. 

முகத்தை எண்பது பாகை அளவில் பனித்து, வீரம் கக்கும் விழிகள் இரண்டும், புருவத்திற்கு நடுவே ஊடுருவி பார்க்கும் பார்வை, மிடுக்கை மிளிர வைக்கும் மீசை, சிரிக்காமல் தளர வைத்த உதடுகள். வழக்கின் கோப்பை இறுக்கமாய் பிடித்திருக்கும் கை. கறுப்பு கவுனை மாட்டிக்கொண்டு வீறு கொண்ட மார்பை உயர்த்தி முதுகின் முள்ளந்தண்டை நிமிர்த்தி, அவன் நடக்கும் வீர நடையில் குற்றப்பிரிவு வழக்கறிஞர் என்று பார்ப்பவர்களின் கண்களுக்கு புரியும். 

நீதிபதி வருகை தர, அனைவரும்  எழுந்து நின்று மரியாதை செலுத்திவிட்டு அமர்ந்து கொண்டனர். 

நமசிவாயம் வழக்கை தொடர்ந்தார். “யுவர் ஹானர்! சிறுமி மீத்யுகா சகஸ்ரீயை பரிசோதித்த வைத்தியரிடம்  மரபணு பரிசோதனைக்கான அறிக்கையை சமர்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றுதும், வைத்தியர் பெறுபேற்றை நீதிபதி உதவியாளரிடம் ஒப்படைக்க, அதன் பின்னர் நீதிபதியின் கைக்குச் சென்றது. 

பெறுபேற்றை படித்த நீதிபதியோ, ” இவ்வழக்கின் படி சிறுமி மீத்யுகா சகஸ்ரீ பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தபடவில்லையென்று ஊர்ஜிதப்படுத்துகிறது இந்த ஆய்வறிக்கை. மிஸ்டர். நமசிவாயம் நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?” 

“ஊழல் நிறைந்த உலகத்தில் லஞ்சம் கொடுப்பதற்கு இராஜயோகியனின் வீட்டில் பணத்திற்கு பஞ்சமா? வழக்கறிஞர் விகுஷ்கி விலைப்போனார். கைரேகை நிபுணர் விலைப்போனார். இப்போது வைத்தியரும் விலைப்போனால் இது ஆச்சரியத்திற்குறிய விடயமல்ல. இராஜயோகியனின் மகனை வழக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன். மை லார்ட்!” 

“பர்மிஷன் கிராண்ட்டட்.” என்று நீதிபதி கூற,  தாவாலி இராஜயோகியனின் மகன் நிவேத்தின் பெயரை மூன்று முறை கூறி அழைத்தார். 

விழிகளில் பயத்தின் பந்தை உருட்டிக்கொண்டு, குற்றவாளி கூண்டிற்குள் வந்து நின்றான் நிவேத். “நீங்கதான் நிவேத்தா?” 

“ஆமா” 

“எப்போ வெளியூர் போனீங்க?” 

“ஒரு மாதத்துக்கு முன்னாடி” 

“அப்போ இந்த கொலை சம்பவம் நடக்கும்போது வீட்ல இல்ல?” 

“நான் வீட்ல இருக்கல. அது கொலை இல்ல தற்கொலை.” என்றான் விரக்தியான குரலில்.

“ஒரு மாசத்துக்கு முன்னாடி நீங்க வெளியூர் போயிட்டீங்க. அப்பறம் எப்படி அந்த பொண்ணு  தற்கொலைதான் பண்ணிச்சுன்னு உங்களுக்கு தெரியும்?” குதர்க்கமாய் வினவினார் நமசிவாயம்.

“எங்க வீட்ல கொலை பண்ற அளவுக்கு யாரும் கெட்டவங்க இல்ல.” செய்த குற்றத்தை மறைக்க பெருமையான பதில்கள் வேறு!

“சரி, நீங்க கொஞ்சம் அப்படியே இருங்க.” என்று கூறிவிட்டு மீத்யுகா சகஸ்ரீயின் தாயை அழைத்தார். 

“அம்மா நீங்க இப்போ சொல்லுங்க, வீட்டு வேலைக்குப் போய் கொஞ்சநாள்ல உங்க பொண்ணு உங்கிட்ட என்ன சொன்னாங்க?”

“உன்னை பார்க்காம இருக்க முடியலமா? தனியா தூங்க பயமா இருக்குன்னு முதலாளியாம்மா கிட்ட சொன்னேன் மா. தனியாதான் தூங்கணும்னு சொல்லிட்டாங்க. அவங்க பையன் எங்கூட தூங்கவானு கேட்டாங்கமா, நான் வேணாம்னு சொல்லி தனியாவே  தூங்கிட்டேன். 

நான் கொஞ்சம் பயந்துட்டேன் ஐயா. அதுக்கு அப்பறம் என் பொண்ணுகிட்ட தனியா தூங்க பழகிக்கோன்னு சொன்னேன்.” என்று விம்மி விம்மி கேவல்களுடன் கூறினார் அந்த தாய்.

“ஐயோ அந்த புள்ள கிட்ட நான் அப்படி கேக்கவே இல்ல. இவங்க பொ..பொய் சொல்றாங்க.” என்று நிவேத் பதற்றத்துடன் கூற, “நான் உங்ககிட்ட எதுவுமே கேக்கலயே ஏன் இப்படி பதருறீங்க.” என்று நமசிவாயம் உசாவினார். 

“அவங்க எம்மேல வீண்பழி சுமத்துராங்க. என்னால சும்மா இருக்க முடியல.” 

“மை லார்ட் இதிலிருந்தே புரிகிறது, இவ்வழக்கில் சதி வேலை நடந்திருக்கிறது என்று, இராஜயோகியனின் மகனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” 

வேகமாக விகுஷ்கி முந்திக்கொண்டான். “அதுக்கு அவசியமே இல்ல. மீத்யுகா சகஸ்ரீ தற்கொலை பண்ணத்துக்கு ஸ்டோங்கான ஆதாரம் எங்கிட்ட இருக்கு. யுவர் ஹானர் மீத்யுகா சகஸ்ரீயின் தந்தையையும் சகோதரனையும் விசாரணை செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.” என்று விகுஷ்கி கேட்க, கோரிக்கையை ஆமோதித்தார் நீதிபதி.

“பெத்த புள்ளைய எந்த நம்பிக்கையில இன்னொருத்தர் வீட்ல வேலைக்கு விட்டீங்க?” என்று விகுஷ்கி கேட்கும் கேள்வி அவன் தரப்பு வாதத்திற்கு சம்மதம் அற்றது.

பாராளுமன்ற உறுப்பினரோ, ‘இவன் எதுக்கு தேவையில்லாம பேசுறான்.’ என்று மனதில் கருக ஆரம்பித்தார். 

“சொல்லுங்க உங்களதான் கேக்குறேன்?” 

“வேறு வழி தெரியல சார். வீடு இல்லாம நடு ரோட்ல இருந்தோம்.  தலைக்கு மேல கடன்.” 

“இருக்கட்டும், நீங்க தோட்ட தொழில விட்டு வேற எங்கையும் தங்கி வேலை பார்த்து இருக்கலாமே!” என கூறிவிட்டு, மீத்யுகாவின் சகோதரனிடம், “ஏன் தம்பி நீயாவது சொல்லி இருக்கலாம். தங்கைச்சி இருக்கட்டும் நான் வேலைக்கு போறேனு சொல்லி இருக்கலாம். ஏன் அப்படி சொல்லல?” 

இருவரும் மௌனித்தனர். நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல், “மை லார்ட்  இது தற்கொலை என்று நிரூபிக்க சிறுமி மீத்யுகா சகஸ்ரீயின் கைப்பட எழுதிய கடிதம் என் கை வசம்! அதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கிறேன்.” என்க, நமசிவாயத்தின் நெற்றியில் நாமம், அங்கு வருகை வந்த அனைவருக்கும்  அதிர்ச்சி, கடிதத்தை  நீதிபதியிடம்  சமர்ப்பித்தான். 

ஒரு பக்க கடிதம் அல்ல நான்கு பக்கம் எழுதப்பட்ட கடிதம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது சிறுமி மீத்யுகா சகஸ்ரீ யாருக்கும் தெரியாமல் எழுதிய வைத்த ரகசியங்கள். கடிதத்தை படித்த நீதிபதியோ மூக்கு கண்ணாடியை கழட்டி வைத்து கைக்குட்டையால் கண்களை ஒற்றினார். 

“இந்த கடிதம் உங்களுக்கு எப்படி கிடைச்சுது விகுஷ்கி?” 

“மை லார்ட், மீத்யுகா தற்கொலை பண்ணதும், அவங்க வீட்டுக்கு வரச்சொன்னாங்க. அங்க போய் அந்த பொண்ணு ரூம்ல எதுவும் இருக்குமான்னு பார்த்தேன். அப்போ எடுத்ததுதான் இந்த லெட்டர்.” 

“வெரி குட் விகுஷ்கி, ப்ரௌவ்ட் ஆஃப் யூ, இந்த இடத்துல வேற யாரும் இருந்தா கண்டிப்பா இப்படி பண்ணிருக்க மாட்டாங்க” என்று நீதிபதியின் பாராட்டுகள் விகுஷ்கியை மகிழ்வித்தது. 

அனைவரும் குழப்ப நிலையில் ஆழ்ந்தனர். என்ன நடக்குமென்று அறியாமல், கடிதத்தில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறது என்று தெரியாமல் அல்லோலப்பட்டனர். 

“தேங்க் யூ மை லார்ட், மை லார்ட் சிறிய வேண்டுகோள், இக்கடித்தின் வார்த்தைகளை சபையோர் தெரிந்துகொள்ள  வேண்டுமென நான் விரும்புகிறேன்.” என்று கூற, அவன் விருப்பத்தை நீதிபதி ஆமோதித்தார்.

நீதிமன்றம் முழுவதும் நிசப்தம்,  விகுஷ்கியின் கைக்கு மீண்டும் கடிதம் கிடைத்தது. அனைவரும் மடல் வரிகளை அறிய காத்திருந்தனர். 

இங்கு மீத்யுகாவோ பிரசவ வேதனையுடன் போராடிக்கொண்டிருந்தாள்.  “மீத்யுகா டிரை பண்ணுங்க. இன்னும் கொஞ்சம். கம் ஆன் புஷ் பண்ணுங்க.” வைத்தியர் அறிவுரைக்கினங்க, மீத்யுகா அவள் முதல் மகவை உலகிற்கு   கொண்டுவர முற்ச்சித்துக்கொண்டிருந்தாள். 

வலியின் உச்சக்கட்டத்தில் தலையை இங்கும் அங்கும் அசைத்து சிறு சிறு முணங்கள்களும், அம்மா என்ற அலறல்களும், இவ்வளவு வலிகளை கடந்து, அருகில் நிற்கும் சஷ்டியை அழைத்து, “சஷ்டி, கேஸ் விஷயம் என்னாச்சுனு திவிக்கு போன் போடு.” என்று முக்கி முணங்கிய வார்த்தை கடினத்தோடு கூறினாள்.

“அண்ணி குழந்த நல்லபடியா பொறக்கட்டும். அதை அப்பறம் பார்க்கலாம்.” 

“இல்ல நீ போன் போடும்மா….!” 

சஷ்டி, திவ்யாவுக்கு அழைப்பு விடுக்க, அழைப்பு செல்லவில்லை.

“அண்ணி, போன் ஆஃப்.” என்றிட, மீத்யுகாவிற்கு கவலை என்றாலும்  பிரவச வலி தாங்காமல் கண்ணீர் வழிந்தோடியது. விகுஷ்கியின் குரலை மனதில் மீட்டுக்கொண்டிருந்தாள்.

‘இன்னும் பத்து நிமிஷத்துல ஆஸ்பிடல் போயிறலாம். கொஞ்சம் பொறுத்துக்க சொல்லு.” என்ற வார்த்தைகளே அவள் எண்ணத்தில் அசரீரியானது.

நீதிமன்றத்தில், விகுஷ்கியின் கணீரென்ற குரல் கலைந்து ஏக்கக் குரலாய் மாறியது. “அம்மா! நீ பட்ட கடனையும், என்னை பெத்த கடனையும் அடச்சிட்டேன் மா. 

ஏன் மா, இங்க வீட்டு வேலைக்கு விட்ட, நம்ம ஊர்ல இருக்குற வசதிகூட நான் தங்கி இருக்க ரூம்ல இல்ல மா. காத்து இல்லாம, வெளிச்சம் இல்லாம, தூங்குறத்துக்கு தலகாணி கூட இல்ல மா, வீட்ல இருந்தா சுடச் சுட ரொட்டி சாப்பிடுவேன். இங்க பழைய சாதங்கூட, நொந்து போனதுக்கு அப்பறம்தான் சாப்பிட குடுப்பாங்க.” என்று அவன் கடிதத்தை படித்து முடிக்கவில்லை.

பெற்ற பிள்ளையை இழந்த சோகத்தில் மீத்யுகாவின் தாய் கதறி துடித்தார், கண்ணீர் வடித்தார். 

“வாரத்துல ஒரு நாள்தான் பேச முடியும். அதுவும் அஞ்சு நிமிஷம்தான். ஃபோன கைல குடுப்பாங்க. இங்க நடக்குற கொடுமை எல்லாம் சொல்லிருவேனு, என் கழுத்துல கத்திய வச்சிட்டு இருப்பாங்க மா.

இங்க இருக்க புடிக்கல மா, சில சமயம் செத்துரலாம்ன்னு தோணுதுமா, இங்கு வந்து அடுத்த நாளே என்னோட எல்லா டிரஸயும் எடுத்து வச்சிட்டாங்க. ரெண்டே ரெண்டு டிரஸ்தான் குடுத்துதாங்க. எல்லா வேலையையும் சீக்கிரமா செய்யணும். அப்படி செய்யலனா, டிரஸ் எல்லாம்…” என்று விகுஷ்கியின் கவலையில் கண்கள் கலங்கியிருக்க, குரலும் கலங்கியது. 

“போதும்யா இதுக்கு மேல படிக்காதீங்க. என்னால கேக்க முடியல.” என்று கையெடுத்து கும்பிட்டார், அந்த தாய்.

“இல்லமா நீங்க தெரிஞ்சிக்கணும்,  உங்க பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டானு, மத்த பேரன்ஸும் அவங்க பொண்ணுங்கள எப்படி பாதுகாப்பா வைக்கணும்ங்குறதுக்காக சொல்றேன்.” என்று அவன் மனதை திடப்படுத்தி கூற ஆரம்பித்தான்.

“டிரஸ் கழட்டி வைச்சு முதலாளி அம்மா அடிப்பாங்க மா. எல்லார் முன்னாடிதான்மா அடிப்பாங்க.

கூச்சமா இருக்கும் மா அடிக்காதீங்க, அடிக்காதீங்கனு அவங்க கால்ல விழுந்து கெஞ்சுவேன். ஒரு நாள் எதிர்த்து பேசிட்டேன் மா! அதுக்கு, வாயில, கழுத்துல, கைல, கால்ல சூடு போட்டாங்க மா. ரெண்டு நாளா சாப்பிட முடியாம கஷ்டப்பட்டேன் மா. நைட் ஒரு மணிக்கு தூங்கி விடிய அஞ்சு மணிக்கு எழும்பணும். 

கொஞ்சம் லேட்டா எழும்பி காஃபி போட்டு குடுத்தா கொதிக்கிற காஃபி முகத்துல ஊத்துவாங்க. முகமெல்லாம் எரிச்சலா இருக்கும். 

இதென்னமா, இதை விட எவ்வளவோ நடக்குது. எனக்கு இங்க நடக்குறதெல்லாம் எப்படி எழுதுறதுன்னு தெரியலமா, அசிங்கமா இருக்கு. பெரிய மனிஷி ஆகி பக்குவமே இல்லாம இருந்தேன். இங்கு வந்து மூனு கருவ கலைக்கிற அளவுக்கு பக்குவம் வந்துட்டு மா, அழுறதுக்குகூட எங்கிட்ட கண்ணீர் இல்லமா. ஏன் மா என்னைய வந்து பார்க்கவே இல்ல. என் மேல பாசம் இல்லயா மா. 

கடனெல்லாம் அடச்சிட்டேனு சொன்ன, ஆனா என்னைய கூட்டிட்டு போக வரவே இல்ல. இன்னும் ஒரு வருஷம் இருந்துட்டு வானு சொல்ற, என்னால முடியலமா. இப்போ பொறந்திருக்க பாப்பாவ இந்த மாதிரி  வேலைக்கு அனுப்பிறாதமா, அம்மா எதிர்காலத்துலயும் நீ கஷ்டப்பட்டா, பாப்பாவ அனாதை இல்லத்துல சேர்த்திருங்க மா.

குட்டிமாவ படிக்க வைங்க. அவளாவது நல்லா இருக்கட்டும். நான் உங்கள எல்லாம் விட்டுப்போறேன் மா, பாய் மா.” என்று எழுதப்பட்ட கடித்ததை சுருக்கமாகதான் படித்தான். மீத்யுகாவிற்கு நடந்த இன்னும் சில கொடுமைகளை எழுதியிருந்தாள். அதையெல்லாம் அவன் வாயால் சொல்லக்கூடிய அளவில் இல்லை. 

பெண்களை இழிவாய் பார்ப்போர்  ஒரு சிலர், கழிவாய் பார்ப்போர் பலர்!

***

உணர்வுகள் தொடரும்…