😍உணர்வை உரசி பார்க்காதே! 26😍

eiXXP6Q62891-ed5de489

🌹அத்தியாயம் 26

பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணத்தில் எப்படியெல்லாம் வாழலாமென்று நினைத்திருந்தாள் மீத்யுகா. 

“ஏய் உங்க அப்பாக்கு ஃபோன் போட்டு சொல்லு?” என்று திவ்யா கூற, “இந்நேரம் அப்பா அங்கதான் இருப்பாரு.” என்று சிதைந்த குரலில் மீத்யுகா கூறினாள். 

“அண்ணி நான் அண்ணாவ பார்த்துட்டு வாரேன்.” என்று சஷ்டி அண்ணன் பாசத்தில் கவலையோடு கூறினாள்.

“நானும் வாரேன் சஷ்டி.” என்று மீத்யுகாவின் குரல் இருவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. 

“ஏய் உனக்கென்ன லூசா நீ பச்ச உடம்பு காரி டீ குழந்தய வச்சிக்கிட்டு வெளிய போகக்கூடாது. நாங்க பார்த்துட்டு வாரோம் நீ இரு.” என்று அதட்டலாக கூறினாள் திவ்யா.

மீத்யுகா, திவ்யாவின் கைகளை பிடித்து, “திவ்யா நீ குழந்தைய பார்த்துக்கோ ப்ளீஸ். நான் விகுஷ்கி கூட ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்துரேன். ப்ளீஸ் ப்ளீஸ்!” என்று கெஞ்சினாள். 

“ஏதோ பண்ணு டீ நான் சொன்னா கேக்கவா போற?” 

“சஷ்டி வா சீக்கிரம் போயிட்டு வந்துருவோம்.” என்று வேகமாக கிளம்பினாள். 

முச்சக்கர வண்டியை பிடித்து காவல்நிலையத்திற்கு வந்தனர். காவலரிடம் அனுமதி வாங்கிவிட்டு விகுஷ்கியை  சிறைப்படுத்திய அறையை பார்த்து அருகில் நமசிவாயமும் வேலனும் விகுஷ்கியிடம் பேசிக்கொண்டிருந்தனர். 

அருகில் சென்ற மீத்யுகா நமசிவாயத்தின் தோள்களில் ஆறுதலுக்காக சாய்ந்துகொண்டாள். “அப்பா அவர எப்படியாவது வெளிய எடுத்துருங்க.” என்று கேவல்களுடன் கூறினாள். 

“நீ ஏன் மா இங்கெல்லாம் வந்த, அந்த விஷயமாதான் பேசிட்டு இருக்கேன் மா. மாப்பிள்ளை  அவருக்காக வாதாட வேணாம்ன்னு சொல்றாரு, நீ பேசிட்டு வாம்மா. நான் அப்பறமா பேசிக்கிறேன்.” 

“சார் நீங்க நல்லவர் சார்! நீங்க வெளிய வாங்க சார் நான் செஞ்சதா ஒத்துக்கிறேன்.” என்று விகுஷ்கியை வெளியே எடுக்கும் நோக்கில் கூறினான் வேலன். 

“நீ இப்படி சொல்லுவேன்னு தெரியும், அதான் வீடியோ எடுத்தேன். எனக்கு பதிலா நீதான் ஆஃபீஸ்ஸ பார்த்துக்கணும் வேலா.” என்று கூற, வேலன், மீத்யுகாவிற்கும் சஷ்டிக்கும் இடத்தை கொடுத்து விட்டு, “நான் அப்பறமா உங்ககூடப் பேசுறேன் சார்.” என்று கூறி வேலன் நகர்ந்தான். 

“அண்ணா! ஏன் ணா இப்படி பண்ண ஆயிரம் சட்டம் இருக்கும் போது நீ ஏன் ணா சட்டத்த கைல எடுத்த?” என்று  விம்மி விம்மி அழுதுகொண்டே கேட்டாள்.

“எங்கூட வாழ விருப்பமில்லயா விகுஷ்கி?” என்று மீத்யுகா கலங்கிய கண்களில் ஏக்கத்தோடு கேட்டாள். 

“எனக்கு கொடுத்து வைக்கல மீத்யுகா, நீதான் என்னைய வேணாம் சொல்லிட்டியே, இப்போ எதுக்கு கண் கலங்குற? உனக்கு செஞ்ச அநியாயத்துக்குதான் எனக்கிந்த ஜெயில் தண்டன, நீயும் குழந்தயும் சஷ்டியும் கவனமா இருங்க. இப்போயாவது நம்ம குழந்தன்னு சொல்லலாமா, அந்த உரிமைய எனக்கு குடுப்பியா?” என்று விகுஷ்கியின் கண்கள் சிவந்து உள்ளம் காதலில்  உருகிட, கண்களால் அவன் கெஞ்சுவதை மீத்யுகாவால் பார்க்க முடியவில்லை, அழ ஆரம்பித்தாள். 

“வார்த்தையால கொல்லாதீங்க விகுஷ்கி, எப்பவும் நம்ம குழந்ததான். நீங்க என்னைய ஏத்துக்காம உங்க குழந்த இல்லேன்னு சொன்னீங்க அதான் கோவத்துல நீங்க வந்து பேசும்போது நம்ம குழந்த இல்லேன்னு சொல்லி உங்கள வெளியப் போக சொன்னேன். உங்ககிட்ட அந்த நேரம் லவ்வோட ஃபீல நான் ஃபீல் பண்ணல” என்று சிறையில் இருக்கும் கம்பிகளை பிடித்து கண் கலங்கினாள் மீத்யுகா.

“எனக்கே நான் எப்படி ஃபீல் பண்ணேன்னு தெரியல? நம்ம குழந்தைன்னு தெரிஞ்சதும் சத்தியமா குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. ஆனா அதையும் தாண்டி அப்போதான் உன்ன பார்க்கணும் உங்ககூட வாழணும்ன்னு ஆசைப்பட்டேன்.  உங்ககூடவே இருக்கணும்ன்னு ஃபீல் பண்ணேன். நம்ம குழந்த பேர் என்ன மீத்யுகா?” என்று ஏக்கம் கலந்த குரலில் கேட்டான். 

“சகஸ்ரீ” என்றாள் உணர்ச்சி அற்ற குரலில். 

“அந்த மீத்யுகா சகஸ்ரீயத்தான் மிஸ் பண்ணியாச்சு, இனி இந்த மீத்யுகாவையும், சகஸ்ரீயயும் மிஸ் பண்ணக்கூடாதுன்னு நெனைக்கிறேன். ஆனா, காலம் கொஞ்ச நாளைக்கு பிரிச்சு வைக்கும்.” என்று கூறியவன் உமிழ்நீரை விழுங்கி விழிகளை தாழ்த்தினான்.

அந்த வார்த்தைகளை கேட்ட மீத்யுகாவால் தாங்கவே முடியவில்லை. கதறி அழ வேண்டுமென்று தோன்றியது.  உள்ளத்தை திடப்படுத்த எவ்வளவோ முயற்சித்தும் அணைக்கடந்த வெள்ளம் போல் கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது. 

“எப்படியாவது வெளியெடுக்க டிரை பண்றோம்.” என்று உறுதியுடன் மீத்யுகாவும் சஷ்டியும் கூறினர்.

“அண்ணா கைல என்ன இவ்ளோ பெரிய கட்டு?” என்று கேட்டாள் சஷ்டி.

“உன் அண்ணிக்கு பண்ண பாவத்துக்கு நானா தேடிக்கிட்ட தண்டன.” என்றான் விகுஷ்கி.

“தண்டன நீங்களா தேடிக்கக் கூடாது விகுஷ்கி நான்தான் தரணும், கைய என்ன பண்ணீங்க?” என்று மீத்யுகா தீவிரமாக கேட்டாள். அவன் கண்ணாடியை உடைத்து கையை கிழித்ததை கூறினான். மீத்யுகாவிற்கு பரிவு வரவில்லை. கோபம்தான் வந்தது. 

“பத்து தையல் போட்டு இருக்காங்கன்னு சொல்லுறீங்க, உங்களுக்கு வலிக்கலயா?” என்று குதர்க்கமாய் வினாவினாள்.

“உனக்கு நான் தந்த வலிய விட இது ஒண்ணும் பெரிசா தெரியல!” என்று விகுஷ்கி நிதானமாக கூறினான். 

“சும்மா நடிக்காதீங்க விகுஷ்கி, கம்பி கட்டுற கதையெல்லாம் எங்கிட்ட சொல்லாதீங்க. நான் இப்போ அழுதேன்னா அதுக்கு காரணம் உங்க மேல இருக்க லவ்தான்! ஆனா, நீங்க என்னைய லவ் பண்றீங்கன்னு என்னால ஃபீல் பண்ண முடியல விகுஷ்கி, இப்போக்கூட சஷ்டி கூப்பிட்டான்னுதான் வந்தேன்.” என மீத்யுகா கூற, சஷ்டி திருதிருவென முழித்தாள். 

“இன்னும் ஒண்ணு புரிஞ்சிக்கோங்க!  இப்போ உங்கள வெளிய எடுக்குறத்துக்கு ஒரே காரணம், உங்கள அலைய விடணும்! அது மட்டும்தான் என் நோக்கம்.” 

“முதல்ல கோர்ட்டுல கேஸ் போகட்டும் அதுக்கு அப்பறம் நீ அலைய விடுற பத்தி யோசி” என்று சாதுவாய் கூறினான். 

குழந்தை அழ, திவ்யா அழைப்பு விடுத்தாள். “குழந்த அழுறா வீட்டுக்குப்போறேன்.” என்று கவலையோடு மீத்யுகா கூற, விகுஷ்கி பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான். 

“நான் கிளம்புறேன்னு சொல்றேன். அப்போக்கூட ஒரு ஃபீல் இல்ல. நீ போனா எனகென்னனு இருக்கீங்கல்ல?” என்க, விகுஷ்கி தலையில் கையை வைத்தான். “மறுபடியும் என்னைய பார்க்க வர வேணாம்!” என்று விரக்தியான குரலில் கூறினான். 

“கண்டிப்பா வர மாட்டேன்.” என்று மீத்யுகா கோபமாக கூறிவிட்டு, சஷ்டியையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள். 

அதன் பின்னர் நமசிவாயமும் வேலனும் சேர்ந்து விகுஷ்கியை எப்படி வெளியே எடுப்பதென்று கலந்துரையாடினர். ஆனால் விகுஷ்கி தண்டனையை அனுபவிப்பதே சரியென்றே உறுதியாய் நின்றான். 

இன்று விகுஷ்கியின் வழக்கு, நீதிமன்ற வளாகத்தில் ஊட்டியை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். விகுஷ்கியை விடுதலை செய்யுமாறு பதாகைகளை ஏந்தி கூச்சலிட்டுப் போராடினர். 

நீதிமன்றத்தில் விகுஷ்கியை எதிர்த்து வாதாட யாருமில்லை.  நீதிபதி, “வழக்கறிஞர் விகுஷ்கி சட்டம் படிச்ச நீங்களே இப்படி ஒரு காரியத்த செய்யலாமா, ஏன் இந்த மாதிரி செஞ்சீங்க?” என்று நீதிபதி  உசாவினார். 

“மை லார்ட்! சட்டத்துல தப்பிச்சுபோக ஓட்ட இருக்குன்னு கேள்வி பட்டுருக்கேன். இப்போ நேர்ல பார்க்குறேன். தப்பிச்சு வந்தவன போலீஸ்ல ஒப்படைக்க தெரியாம இல்ல யுவரானர், போலீஸ்காரங்களே ஒழுக்கமில்லாம இருக்கும்போது நிரபராதி எல்லாம் குற்றவாளியாகி ஜெயில்லயும், தப்பு பண்ண குற்றவாளி உல்லாசமா சுதந்திரமா வெளிய திரியணுமா? 

ஏழுமாசமா எவ்வளவு கஷ்டப்பட்டு நிவேத்தா புடிச்சிருப்பேன் மை லார்ட்! நாட்டுக்கு நல்ல போலீஸா இருந்தா, அவன தப்பிக்க விட்டிருக்க மாட்டாங்க, இங்க இருக்க நூறு போலீஸ்ல தொன்னுத்தொன்பது பேரோட கை அழுக்காதான் இருக்கும் ஒருத்தர்  மட்டும்தான் நல்லா இருக்காங்க. ஆத்திரம் தாங்க முடியாமதான் நிவேத்க்கு ட்ரக்ஸ் குடுத்து தற்கொலை பண்ண வச்சேன். அப்போதானே அவனுக்கு தெரியணும் அந்த சின்ன பொண்ணோட வலி என்னனு.” என்று ஆவேசமாய் இருந்தது அந்த விளிப்புரை.

“வழக்கறிஞர் விகுஷ்கி என்னதான் காரணம் கூறினாலும், ஒருவரின் உணர்வை  தற்கொலைக்கு தூண்டியது, சமூகத்திற்கு வேண்டுமென்றால் அவர் செய்தது தலைமைத்துவமாக தென்படலாம்.

ஆனால், இது சட்டத்திற்கு புறம்பான ஒரு செயல் என்பதனால் இரண்டு வருட சிறை தண்டனை அல்லது நீதிமன்றத்திற்கு பத்து லடசம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்தி தனது வழக்கறிஞர் பணியை மூன்று வருடங்கள் இடைநிறுத்த வேண்டுமென்பதே இவ்வழக்கின் தீர்ப்பு.” என்று நீதிபதி கூறினார்.

விகுஷ்கியின் சிந்தனை சற்று தீவிரமானது. தண்டப்பணத்தை செலுத்தி அவன் உயிராய் நினைக்கும் உத்தியோகத்தை மூன்று வருடம் தவிர்ப்பது இயலாத காரியம், சட்டத்தை மதிப்பவனே சட்டத்தை மீறினால் குற்றவாளிகளுக்கு முன்னுதாரணமாக இருக்குமென்றும்,  மீத்யுகாவிற்கு செய்த அவதூறிற்க தண்டனையை அனுபவிக்கலாமென்று முடிவு செய்தான். 

“நான், இரண்டு வருட சிறை தண்டனையை அனுபவிக்க தயாரா இருக்கேன் மை லார்ட்!” என்று விகுஷ்கி கூற, தீர்ப்பை எழுதி பச்சை வர்ண எழுதுகோலை உடைத்து வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி. 

ஏன் பச்சை வர்ண எழுதுகோலை தீர்ப்பை எழுதி முடித்துவிட்டு உடைக்க வேண்டும்? இப்படி பட்டவொரு வழக்கு இனியொரு வரக்கூடாதென்ற நோக்கத்திற்காகதான் பச்சை வர்ண எழுதுகோல் உடைக்கப்படுகிறது. 

***

நமசிவாயம் குடும்பத்தோடு சென்னைக்கு வந்துவிட்டார்.  மீத்யுகாவை தனியே விடுவதில் விருப்பமில்லை. தாய், பாட்டி என அனைவரும் அருகில் இருந்தும் ஏதோ குறை இருந்தது. மனமும் குமுறிக்கொண்டே இருந்தது. 

“நான் சொன்னேன்தானே! உன் வயித்து பிள்ளைய பார்க்கமா சாகமாட்டேன்னு?” என்று பரவை முனியம்மா பாட்டி கேலிச் செய்ய,  “என் வயித்து புள்ளைய பார்த்துட்டதானே, அப்போ செத்துப்போ!” என்று பதிலுக்கு மீத்யுகா கேலிச் செய்தாள். 

“அடிப்பாவி நான் திங்கிற சோத்துல வெசத்த வச்சாலும் வப்ப!” என்று பாட்டி நொடிந்து கொண்டார். 

“அம்மா சகிக்கு என்ன குழந்த பொறந்துருக்குமா? நடந்த பிரச்சனைல அவள பத்தி யோசிக்கல மா.” என்று மீத்யுகாவிற்கு கவலை ஒரு புறமிருக்க தமக்கையின் மழலை செல்வத்தை பற்றி அறிய ஆசையாய் இருந்தது. 

“சகிக்கு நாலு மாசம் இருக்கும். கடைசி ஸ்கேன்ல குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லேன்னு சொல்லி அபோர்ஷன் பண்ண சொல்லிட்டாங்க, சகிஷ்ணவி முடியாதுன்னு உறுதியாதான் இருந்தா, ஆனா வயித்துலயே!” என்றிட உமேஷ்வரின் கண்கள் கலங்க, “போதும் மா.” என்று கூறிய மீத்யுகாவின் மனம் குழந்தை பற்றிய சிந்தனைக்கு திரும்புமென்று சஷ்டியின் பக்கம் பேச்சை திருப்பினாள். அதே வேளை சஷ்டிக்கும் கவலைதான் சகிஷ்ணவியின் குழந்ததையை நினைத்து, “சஷ்டி உனக்கு வரன் பார்க்குறேன். உங்க அண்ணா வரும்போது கல்யாணம் பண்ற மாதிரி பேசி வச்சுக்கலாம்.” 

“அண்ணி நான் லவ் பண்றேன்.” என்று தயங்கி தயங்கி கூறினாள். 

“என்னது லவ்வா! யார லவ் பண்ற?” என்று சாதுவாகதான் மீத்யுகா கேட்டாள். இருப்பினும் சஷ்டி இருக்கும் நிலையில் அவள் யாரை காதலிக்கிறாள் என்கிற எண்ணம் தோன்ற, அதை விகுஷ்கி எவ்வாறு எடுத்துக்கொள்வான் என்றும், சஷ்டியை ஒழுங்காக கவனிக்கவில்லையென்று குறை கூறுவானோ என்ற எண்ணம் மீத்யுகாவின் மனதை கிளரியது.

“உங்க ஃப்ரெண்ட் வஜ்ரனதான் லவ் பண்றேன். ரெண்டு பேரும் லவ் பண்றோம்!” என்றிட, மீத்யுகாவிற்கு நிம்மதியானது. 

“வஜ்ரன் ப்ராப்ளம் இல்ல. அவங்க வீட்டுல உன்னைய பொண்ணு கேக்க சொல்லலாம்.” என்று மீத்யுகா கூற, சஷ்டியின் மகிழ்வை அவளுடைய கண்கள் காட்டிக்கொடுத்தது. சஷ்டி மகிழ்ந்ததே மீத்யுகாவிற்கு போதுமாய் இருந்தது.  ஒரு வழியாக சஷ்டியின் பாதை நேரானது. 

“திவ்யா, நீ மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா இல்லயாடீ?” என்று மீத்யுகா கேட்க, “இல்ல டீ, லவ் பண்ணி பொம்மையா வாழுறதுக்கு சிங்கிளா செம்மையா வாழலாம். அரெஞ்ச் மேரேஜ் பெஸ்டு டீ!” 

“என்னைய பார்த்தும் நீ திருந்தலயா டீ?” என்று மீத்யுகா அதிசயத்தில் கேட்டாள். 

“உன்னைய பார்த்துதான் திருந்தி இருக்கேன். அண்ணா ரொம்ப நல்லவர் டீ. ஜெயில்ல இருந்து வெளிய வந்து உன் பின்னாடி பூனைக்குட்டி மாதிரி சுத்தப்போறாரு பாரேன்.” 

“வெளங்கிரும்!” என்று தலையில் அடித்துக்கொண்டாள் மீத்யுகா.

*** 

விகுஷ்கியிடம் காதல் உணர்வை உணராத மீத்யுகா கடும் கோபத்தில் இருந்தாள். அவன் சிறை தண்டனையை ஏற்காமல் மீத்யுகாவிற்காக பணத்தை கட்டிவிட்டு, மீத்யுகாவை ஏதோ ஒரு வழியில் காதல் அலையில் மூழ்கடிப்பானென்ற சொப்பனமெல்லாம் சின்னாப்பின்னமாகியது. 

‘வெறும் குற்றவுணர்ச்சிய காதல்ன்னு சொல்லி ஏமாத்த பார்த்தீங்கல்ல. என் மேல உண்மையான அன்பு இருந்தா இந்த தண்டனைய ஏத்துட்டு இருந்திருப்பீங்களா? எங்ககூட வாழணும்ன்னு எண்ணம் இருந்தா ஜெயிலுக்கு போறேன்னு சொல்லி இருப்பீங்களா? உங்க மூஞ்சில முழிக்க மாட்டேன். குழந்தையும் காட்டமாட்டேன்.” என்று அவன் மீதுள்ள பாசமே அவளை சித்திரவதை செய்து புலம்ப வைத்தது. 

விகுஷ்கி சிறை தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்தான். உணவு உண்பதே பெரும்பாடு மாமிசம் சமைக்கும் வேளையில் வெறும் சாதத்தை மட்டும் உண்பான். கொசுக்கடியில் உறங்குவது கடினம், அதைவிட கடினம் விளக்கமறியலிலே மலசலக்கூடம் ஒரு ஓரமாய் துர்மணம் வீசும். எல்லாவற்றையும் ஏதோ ஒரு வகையில் சகித்துக்கொண்டே அனுபவித்தான். 

இதில் கொடுமை என்னவென்றால், விகுஷ்கியை பார்ப்பதற்கு மீத்யுகா செல்லமாட்டாள். அவனுடைய குழந்தையின் முகத்தைகூட இன்னும் பார்க்கவில்லை.  குழந்தையின் முகத்தை கற்பனையில் செதுக்கி வைத்திருந்தான். 

ஆழ்கடலில் மிதக்கும் கப்பலை

போன்றதுதான் இந்த அன்பு

சில நேரங்களில் பேரன்பிலே

மூழ்கடிக்கும் – சில நேரங்களில் 

கண்ணீரிலே மூழ்கடிக்கும்!

***

உணர்வுகள் தொடரும்…