அத்தியாயம்-6
அத்தியாயம்-6
ஆட்டம்-6
“எனக்கு ஆரத்திஈஈஈ” ரஞ்சனியின் பின்னிருந்து ஒரு மினி சைஸ் வாண்டு, வட்ட முகமாக தலையில் இரட்டை சிண்டுடன் எட்டிப் பார்க்க, அனைவரும் ஆர்வமாய் ரஞ்சனியை பார்க்க, “மித்ரா” என்றார் அவரின் ஆறு வயதான இரண்டாவது மகளை முன்னால் கொண்டு வந்து நிறுத்தியபடி.
“பாட்டி அக்காவை விட நான்தான் க்யூட்டா இருப்பேன். எனக்கு டென் டைம்ஸ் ஆரத்தி சுத்துங்க” சொல்லி தன் அரிசி பற்கள் தெரிய சிரிக்க, அனைவரும் சத்தமாய் சிரித்தனர்.
வாயடிச் சுட்டிப் பெண். சுருங்கச் சொன்னப் போனால் ஒரு பிங்க் நிற டெடி பியர் அழகு பொம்மை அவள். கொழுகொழுவென்று பஞ்சு மிட்டாய் நிற ப்ராக்கில், மழலை மாறாது இருந்தவளை அனைவரின் விழிகளும் பாசமாகவும், ரசனையுடனும் வருட, ரஞ்சனியின் கண்களோ இறங்கி வந்து கொண்டிருந்த அபிமன்யுவிடம் மீண்டும் பாய்ந்தது.
குட்டி பொம்மைக்கும் ஆரத்தி எடுத்து முடிக்கப்பட, மூவரையும் உள்ளே அழைத்தவர்கள், புதியாய் வந்திருந்த குட்டி பெண்களுக்கு அனைவரையும் அறிமுகம் செய்ய, கீழே இறங்கி வந்த அபிமன்யு கால் மேல் காலிட்டு முகத்தில் எதையும் காட்டாது, புதிதாய் மூவர் வந்திருப்பதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை எனும் ரீதியுடன், ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுடன் அமர்ந்துவிட்டான்.
அரிமா பூபதி கலந்து கொள்ளவும் இல்லை, விலகவும் இல்லை, தந்தையின் ஆணைப்படி, வெறுமனே கடமைக்காக நின்றிருந்தார்.
பெரியவர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்த இமையரசி, “இது தான் உங்க சின்ன மாமாவோட பசங்க. இது விக்ரம் அபிநந்தன். உங்களுக்கு விக்ரம் மாமா” என்று கூறி அறிமுகம் செய்து வைக்க, இருவரையும் பார்த்து, “ஹாய்” என்றவன், தன்னை அறிமுகம் செய்து கொள்ள, அப்போது கீழே வந்தாள் நறுமுகை. குடுகுடுவென வந்தாள் என்பதே சரி.
முன்னால் ஒரு கட்டு சிகை, அவள் பருவ இடை வரை விழுந்து வழிந்திருக்க, படி இறங்க இறங்க தன் முன் மேனியை தழுவியிருந்த மயில் தோகையை ஒத்த தன் அடர் சிகையை, அந்த பாவை ஒரு கரத்தால் பின்னே தள்ளவும், அது துள்ளிச் சென்று அவள் பின்புறம் விழுந்ததை பார்த்த விக்ரமிற்கு அவளின் செய்கை ஒரு நொடி, “மை ஹார்ட் ஸ்கிப்ட் எ பீட் ( My heart skipped a beat )” என்றது.
அடுத்த விநாடிப் பொழுதே தன்னிலை அடைந்தவன், ‘விக்ரம்!’ தன்னையே அடக்கியவன், சிறு பெண்களிடமும் சிரிக்க, அவர்களும் சிரித்தே வைத்தனர்.
“நறுமுகை இங்க வா” அழைத்த இமையரசி, “இவ நறுமுகை. எனக்கு பொண்ணு இருக்கானு சொன்னேன்ல. அவங்க பொண்ணு நறுமுகை” என்று இமையரசி அறிமுகம் செய்ய,
“ஹாய் ஐம் உத்ரா” என்று சினேகமாக கரத்தை நீட்டினாள் உத்ரா.
“ஐம் நறுமுகை” என்றவள் உத்ராவின் அருகிலிருந்த பொம்மையை பார்க்க, “நான் மித்ரா” என்று அழகாய் குண்டுக் கன்னங்கள் சிரிப்பில் ரோஸ் நிறம் பூசக் கூறினாள்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அபிமன்யுவிடம் எப்படி இவர்களை அறிமுகம் செய்து வைப்பது என்று தெரியாது கைகளை பிசைந்து கொண்டே உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்தார் இமையரசி. அத்தையின் மேல் அலாதி பிரியம் உள்ளவன் அவன். அதுவுமின்றி மகன், கணவனுக்கு மேல் அழுத்தமும், தீரா கோபமும் உள்ளுக்குள் வெடிக்கத் தயராய் இருக்கும் எரிமலையின் சீற்றத்தோடு காத்துக் கொண்டிருக்கும் வேங்கையவன்.
விஜயவர்தனின் குடும்பம் இங்கு வரப்போகிறார்கள் என்று போன மாதம் கூறியபோதே அவனின் முகத்தில் அடங்காது தெறித்த ருத்ரமும், அதன் அனலில் அங்கிருந்தோர் கால்கள் மரத்துப் போனதையும், அவனின் அன்னையும், பாட்டியும், அவனின் வெளிக்காட்டாத கோபத்திலேயே மூச்சடைத்து நின்றதையும் இமையரசியால் மறக்க முடியுமா?
என்ன செய்வது என்று தெரியாது அவர் நிற்க, ஒருவளின் அசாத்திய துணிவு அங்கு இருந்த அனைவரையும் தொண்டைக் குழியில் பயம் கவ்விக்கொள்ளச் செய்தது.
மெதுவே நடந்து சென்ற மித்ரா, “ஹாய், ஐம் மித்ரா” வழக்கம்போல தன் சிரிப்பு பொங்கி வழிய குழந்தைத்தனத்துடன், அபிமன்யுவின் முன் தனது பிஞ்சுக் கரத்தை நீட்ட, யாருக்கும் ஈயாடவில்லை.
பெண்களோ, ‘கடவுளே’ என்று நினைத்துக்கொள்ள, அழகி மகன் எதுவும் குழந்தையிடம் கடுமையாக பேசிவிடக் கூடாது என கடவுளை மானசீகமாக வேண்டத் துவங்கிவிட்டார்.
அங்கு போடப்பட்டிருந்த ராஜகரிகமான ஷோபாவில் கால் மேல் காலிட்டு ராஜ தோரணையில் அமர்ந்திருந்தவன், தன் முன் குட்டி கரங்கள் நீள எதிரில் நின்றவளை பார்த்தவன், சில நொடிகள் அவளையே எந்த உணர்ச்சியும் இன்றி பார்த்திருக்க, எல்லோருக்கும் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கியது என்றால், எதிரில் நின்றவளோ சிரிப்பு மாறாது கையை நீட்டிக்கொண்டே நின்றிருந்தாள்.
பேசாமல் மித்ராவை அழைத்துவிடலாமா என்று கூட தோன்றியது இமையரசிக்கு. மகளை ரஞ்சனி அழைக்க நினைக்கும் முன், உலக அதிசயமாய் அது நிகழ்ந்தது. சின்னவளான திலோத்தமையே வாய் பிளக்கும் வண்ணம்.
ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அங்கு அமைதி நிலவத் துவங்கியது.
சின்னவளை இமைக்காது அழுத்தமாக பார்த்திருந்தவனின் விழிகள் கூர்மையாகி, இதழோரங்கள் சிறு கோடாய் புன்னகையில் பூக்க, உட்கார்ந்திருக்கும் இராஜவம்சத்தினருக்கே உரிய தோரணை மாறாது தனது கரத்தை நீட்டியவன், “ஹாய், ஐம் சித்தார்த் அபிமன்யு” என்று அந்த பெரிய மனுஷியிடம் இவன் தன்னை கம்பீரமாக அறிமுகம் செய்துகொள்ள, அனைவரும் பேரதிர்ச்சியில் மயங்கி சரியாத நிலைதான்.
“ஹ்ம், குட் நேம். நைஸ் டூ மீட் யூ (Hmm. Good name. Nice to meet you)” என்று தலையை ஆட்டி பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் தோற்றத்தோடு அவனிடம் உரையாடியவள் அவனிடம் புன்னகைக்க, இதழ்கள் விரிய புன்னகைத்தவன் அமெரிக்க ஆக்ஸன்டில் (உச்சரிப்பில்), “தட்ஸ் மை ப்ளஷர் லிட்டில் டால் (That’s my pleasure my little doll)” என்றான்.
“வாவ் யூ ஆர் ஸ்பீக்கிங் அமெரிக்கன் ஆக்ஸன்ட்!! ( Wow you’re speaking American accent) ” சிறியவள் வாய் பிளந்து அவனிடம் கூறினாள். பொதுவாக அங்கு படிப்பவர்கள், அந்நாட்டவர்கள், அங்கு குடியிருக்கும் இந்தியர்களுக்கே அமெரிக்க உச்சரிப்பு வரும். திடீரென அங்கு மற்ற நாட்டவரை தள்ளினால், நன்றாக ஆங்கிலம் தெரிந்தவனுக்கே புரிவதற்கு நேரம் எடுக்கும். அதுதான் சின்னவள் வாய் பிளந்ததிற்கு காரணம்.
“யெப் (Yep). நான் அங்கதான் படிக்கறேன்” நன்றாக சாய்ந்துகொண்டு.
“குட். தட்ஸ் மை சிஸ்டர் உத்ரா (That’s my sister uthra)” என்ற வாண்டு தன் அக்காவை கை காட்ட, அவன் உத்ராவை திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவன் அறியாததா?
அவள் எங்கு படிக்கிறாள், என்ன படிக்கிறாள் என்பது அவனின் விரல் நுனியில் இருக்கிறது என்பதின் வீரியத்தை மற்றவர்கள் அறிந்திருந்தால், அவனின் மனதை மாற்ற முயன்று எதிர்காலத்தில் நிகழ இருந்த கசப்புகளை தவிர்த்திருக்கலாமோ?
அவனின் நடவடிக்கையை புரிந்த ரஞ்சனி, “மித்து, பாட்டி கோயிலுக்கு கிளம்பனும்னு சொல்றாங்க. வாடா வந்து கிளம்பு” தன்மையாக அழைக்க, அபிமன்யுவிடம் தன் பிஞ்சு கைகளை ஆட்டி, “பை” என்றவள் அன்னையுடன் செல்ல, உத்ராவையும் அழைத்துக் கொண்டு ரஞ்சனி செல்ல, அபிமன்யுவை அறைக்குள் செல்வதற்குள் இரண்டு முறை திரும்பித் திரும்பி பார்த்துவிட்டுச் சென்றாள் உத்ரா.
‘தன்னிடம் அவன் பேசவில்லையே?’ என்ற கேள்வி அவளுக்குள்.
அவர்கள் அறைக்கு சென்றபின், இடது கை பெருவிரலால் ஸ்டைலாக வலது புருவத்தை நீவியவன், தன் கோபத்தைக் கட்டுப் படுத்துவதை உணர்ந்த அனைவரும் அமைதியாய் இருக்க, வேண்டுமெனவே விக்ரம் அந்நேரம் தொடங்கினான்.
வேண்டுமென்றே நறுமுகையின் தோளில் கையை மடித்து வைத்து போஸ் தருவது போன்று நின்று, தலையை ஸ்டைலாக கோதியபடியே, “அப்ப எனக்கு மூணு அத்தை பொண்ணா பாட்டி?” வதனம் பிரகாசிக்க, விழிகள் மின்ன, அவன் கேட்க, அவனை முறைத்த நறுமுகை அவன் கையை தட்டிவிட்டு சென்றாள்.
அவள் கோபத்துடன் முகம் சிவக்க செல்வதையே திருப்தியுடன் பார்த்தவன், “மூணு அத்தை பொண்ணு அழகா கிடைக்கிறதும் வரம்தான்” கிசுகிசுப்புடன் கூறினான் இமையரசியிடம்.
இமையரசி பேரனை செல்லமாய் கொஞ்ச, ஓர விழியால் அபிமன்யுவை பார்த்தவன், அவனை வேண்டுமென்றே இகழ்ச்சிப் புன்னகையுடன் பார்த்து வைக்க, அந்த விழிகள், அதில் ஒளிந்திருக்கும் பளபளப்பு அவனின் பார்வை அபிமன்யுவுக்கு மட்டும்தானே புரியும்.
அவனின் உணர்வுகளை புரிந்து கொண்ட, ஒருவனும் அவன் மட்டும் தானே.
தந்தையை போலவே விக்ரமும் இருந்தான். போன மாதம் சிம்மவர்ம பூபதி விஜயவர்தனை அழைத்திருக்க, பெண்கள் அனைவரும் பேசத் தொடங்கிவிட்டனர். அரிமா பேசவில்லை என்றாலும், அவ்வப்போது ரஞ்சனியிடம் பேசிய மனைவியை அவர் தடுக்கவில்லை. அதே சமயம் கணவர் இருக்கும் நேரத்திலும் அவர் பேசவில்லை.
இதை போன மாதம் யூ.எஸ்ஸில் இருந்த போதே விக்ரம் அறிந்திருக்க, விஜயவர்தனும், விக்ரமும் ஒரு அழகான மாலை நேரத்தில் சந்தித்தனர்.
“வீட்டுக்கே வந்திருக்கலாம் விக்ரம் நீ” விஜயவர்தன் குறைபட,
“நெக்ஸ்ட் மன்த் பாக்க தானே போறோம்” என்றான் விக்ரம். பார்த்தவுடனே அவருக்கு விக்ரமை மனதுக்குள் பிடித்துப் போனது.
“சொல்றேன்னு தப்பா நினைக்காத விக்ரம். நான் இந்தியா வரல. வீட்டுல அவங்க மூணு பேரு தான் வர்றாங்க” அவர் கூற, அவர் கூறியது சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் வெளியே சிறிதும் காட்டாதவன், தலையை மட்டும் கோதினான். அவனுக்கும் நீரஜா அத்தையை தனிமரமாய் பார்க்கும் போதெல்லாம் கோபம் வந்துததான்.
ஆனால், தந்தையைப் போல சூழ்நிலை என்னவோ என்று நினைத்துக் கொண்டான். அத்தையின் நிலையில் பார்த்தாலும், இவரை மறந்துவிட்டு இன்னொரு திருமணம் செய்திருந்து நன்றாக வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றும்.
“முக்கியமான விஷயம் பேசணும்னு தான் கூப்பிட்டேன்” என்று குரல் சிறிது உள்ளே செல்ல கூறினார் விஜயவர்தன்.
“சொல்லுங்க மாமா” ஒரு கரத்தை டேபிளில் வைத்துக் கொண்டு, மற்றொரு கரத்தை அமர்ந்திருந்த சேரில் வைத்தபடி அவன் சொல்ல, அவரோ அமைதியாகவே அமர்ந்திருந்தார்.
இவனிடம் அதை சொல்லலாமா வேண்டாமா என்ற யோசனை அவருக்குள்.
“எனிதிங் சீரியஸ்?” அவன் வினவ,
“இரண்டு மாசத்துக்கு முன்னாடி அபிமன்யுவை பார்த்தேன்” அவர் சொன்னவுடனே, அவனுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்தது.
“மாமா, யூ ஸ்போக் டூ ஹிம் (You spoke to him?)” அவன் விழிகள் கூர்மையடைய அவரிடம் கேட்க, அவரின் தலை மேலும் கீழும் ஆடியது.
“உங்க தாத்தாவை விட ஒரு படி மேலே போயிட்டான்” என்றவரின் சொற்கள் நல்ல முறையில் வந்ததுபோல இல்லை என்பது அவரின் குரலை வைத்தே அவன் புரிந்து கொண்டான்.
சிறிது நொடிகள் கழித்து, “கோபத்துல” என்றார் அவர்.
விக்ரம் அமைதியாகவே அவரைப் பார்த்திருக்க, “நான்தான் முதல்ல பாத்தேன். நானும் உத்ராவும் வெளிய போயிருந்தோம். அப்ப ஐஸ்க்ரீம் பார்லர்ல உத்ரா சாப்பிட்டு இருந்தப்ப, எதிர்ல இருந்த ஷாப்ல இருந்து வெளிய வந்து அபிமன்யு யார்கிட்டையோ ஃபோன் பேசிட்டு இருந்தான். அவன் முகத்தை என்னால மறக்க முடியாதுல. ஸோ உத்ராவை அங்கேயே விட்டுட்டு அவன்கிட்ட பேச போனேன். போய் நல்லா இருக்கியா அபி. என்னை ஞாபகம் இருக்கானு கேட்டேன், தலையை நிமிர்த்தி கூட என்னை பாக்கல அவன். ஃபோனையே பாத்திட்டு இருந்தான் விக்ரம். அவன் முகம் அவ்வளவு இறுக்கமா இருந்துச்சு. கோவம்னு புரிஞ்சிடுச்சு. மனசும் கேக்கல. அக்கா எப்படி இருக்காங்கனு கேட்டேன். அதுக்கும் பதில் இல்ல. அவன் கூட இருந்த பையன் கூட உன்கிட்ட தான் பேசறாங்கனு சொன்னான். அவன் சொன்னதும் காதுல கேக்காத போல முகத்துல ஒரு எக்ஸ்ப்ரஷனும் இல்லாம இருந்தான். என்னால அதுக்கு மேல நிக்க முடியல. வந்து உத்ரா கூட உக்காந்துட்டேன்” என்றவருக்கு அதுக்கு மேல் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.
டேபிளின் மேலிருந்த அவரின் விரல்கள் நடுங்கியதோ!
இதை மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ளாதவர் இப்போது விக்ரமிடம் பகிர்ந்து கொள்வதற்கு காரணம், மகளின் பாதுகாப்புக்காக மட்டுமே.
ஆனால், அதை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து வருங்காலத்தில் தன்னையும் தன் மனைவியையும் ஒருவன் பதறடித்து கண்டம் தாண்டி கண்டம் வர வைக்க போவதை அவர் அறியவில்லை.