அனல் பார்வை இறுதி அத்தியாயம்

eiT2X1Z35972-3a884e3d

அனல் பார்வை இறுதி அத்தியாயம்

தங்கத்திற்கே பஞ்சமில்லாத அந்த மனோவா நகரமே தங்கம், வைர வேலைப்பாடுகளுடனான அலங்காரங்களில் மின்ன, அந்த அரண்மனையில் மனோவா நகரத்தின் ஆடை, சடங்குகள், சம்பிரதாயத்தின் அடிப்படையில் அக்னி, அருவியின் திருமணம் நடந்து முடிந்தது.

கூடவே, அருவி அன்று சொன்ன ‘என்ன தான் மஹி இந்த ஊர சேர்ந்தவனா இருந்தாலும் கல்யாணம் நம்ம தமிழ் நாட்டு முறைப்படி தான்.’ என்ற வார்த்தைக்காக தமிழ் கலச்சாரப்படி  தாலிக்கு பதில் முத்துக்கள் கோர்த்த மாலையை மங்கள நாணாக அருவியின் சங்கு கழுத்தில் அணிவித்தான் அக்னி.

காதல் சாகரத்தில் ஆய்வுப்பயணிகள் இவர்கள்..

காதலெனும் தேடலில் கரையை கண்டு,
இருகரம் கோர்த்து,
விழிகள் சேர்த்து,
இதழ் இணைத்து

அனல் அவளை குளிர்வித்த பனியானவன், காதலுக்காக காதலையே கொல்ல துணிந்த விந்தை என்னவோ!

பொன் வேந்தனவனின் இதயச்சிறையில் இவள் ஆயுள் கைதியாக!

அருவியை கொள்ளையிட்டு காதலையே தன்னை காதலிக்க வைத்த இவன் காதலின் காதலனாக!

அக்னி அவளின் கழுத்தில் மங்களநாணை அணிவித்ததும், கண்கள் கலங்க தன் மார்பில் முட்டி மோதிக் கொண்டிருந்த தன் மாங்கல்யத்தை குனிந்து அருவி பார்க்க, அக்னியோ தன்னவளின் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்தான்.

அவனின் முத்தத்தின் ஸ்பரிசத்தை கண்களை மூடி அனுபவித்தவள், “லவ் யூ மஹி…” என்று காதலாக சொல்லி அவனிதழில் முத்தமிட, அதில் இன்பமாக அதிர்ந்தவன் பதிலுக்கு ஆழ்ந்த முத்தத்தை அளித்து, “லவ் யூ ஜானு…” என்று காதலாக சொன்னான்.

சுற்றியிருந்தவர்களோ அவர்களின் அன்னியொன்னியத்தை பார்த்து வெட்கப்பட்டவாறு தங்களுக்குள்ளே பேசி சிரித்துக் கொள்ள, டார்சியோ தன் மகனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில் மனம் நிறைந்து தான் போனார்.

“வாழ்த்துக்கள் டியூட்ஸ்!” என்று ராகவ் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவாறு தோழிகளுக்கு மத்தியில் தன்னையே ஓரக்கண்ணால் பார்த்தவாறு நின்றிருந்த ஆலாவை காதலாக நோக்க, அவனின் பார்வை தன் மேல் படிந்ததும் திரும்பிக் கொண்டவளின் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை!

“அம்மா, அப்பா இருந்திருந்தா ரொம்ப ஹேப்பியா இருந்திருப்பாங்கல்ல மஹி?” என்று அருவி தன் பெற்றோரின் நினைவில் தழுதழுத்த குரலில் கேட்க, அவளின் கன்னங்களை தாங்கி அவளின் மூக்கோடு மூக்கை உரசியவாறு, “அவங்க நமக்குள்ள தான் இருக்காங்க தீ, ஆதிகேஷவன் ஐயா கண்டிப்பா சந்தோஷமா இருப்பாரு. எனக்கு தெரியும்.” என்று புன்னகையுடன் சொன்னவனுக்கு அன்று ஆதிகேஷவன் தன்னிடம் சொன்ன வார்த்தைகள் தான் நியாபகத்திற்கு வந்தது.

‘என் மகளுக்கு உன்னை விட ஒரு  நல்ல துணை யாரும் இருக்க மாட்டாங்க அக்னி. உன்னோட ஒரு வார்த்தைக்காக நடந்ததை நான் சொல்ல போறதில்லை. ஆனா, அந்த கடவுளே உன்னை என் மகள்கிட்ட கொண்டு சேர்ப்பாரு.’ என்று ஆதிகேஷவன் அன்று தன் வீட்டிற்கு செல்வதற்கு முன் அக்னியிடம் சொல்லிவிட்டு சென்றிருக்க, இன்று அதை நினைத்தவனுக்கு இதழில் உறைந்த புன்னகை!

இவர்களின் திருமணம் முடிந்த அடுத்த சில மணிநேரங்களிலே ராகவ், ஆலாவின் திருமணம் மனோவா சம்பிரதாயத்தின் படி நடக்க, தன் சொந்த ஊரிற்கு சென்று கோவிலில் வைத்து தன் வழக்கப்படி அவளின் கழுத்தில் மாங்கல்யம் அணிவிப்பதாக சொல்லிவிட்டான் ராகவ்.

திருமண சடங்குகளின் போது ராகவ்வோ ஒவ்வொன்றையும் தடுமாறியபடி செய்தாலும் காதலோடு செய்ய, ஆலாவும் இதன்பிறகு ஒரு புது உலகில் தன்னவனுடன் வாழப்போகும் புது வாழ்க்கையை நினைத்து மனம் முழுக்க காதலுடன் சடங்குகளை செய்தாள்.

ஆனால், டார்சி அரண்மனை சார்பாக ஆலாவுக்கும், ராகவ்விற்கும் கொடுத்த தங்கத்திலான பரிசுகளை ராகவ் மறுத்து, “என் பொண்டாட்டி சின்னதா போடுற மோதிரம் கூட நான் வாங்கிக் கொடுத்ததா இருக்கனும்னு ஆசைப்படுறேன்.” என்று விடாப்பிடியாக சொல்ல, அக்னி தன் நண்பனை பற்றி தெரிந்து அதை ஏற்றுக் கொண்டாலும், அவர்களை வற்புறுத்தி அவர்களின் பரம்பரை தங்க ஆபரணங்களிலிருந்த ஒரு மோதிரத்தை மட்டும் ஆலாவின் விரலில் அணிவித்துவிட்டார் டார்சி.

“ராகு, சொன்ன மாதிரி என் ஊர் பொண்ணயே கல்யாணம் பண்ணிக்கிட்ட. பேஷ்! பேஷ்! காலையில எழுந்து உனக்கு கோஃபி போட்டு தருவாளோ, இல்லையோ? தினமும் உனக்கு கத்தி, வாள்னு சண்டை போட கத்து தருவா.” என்று அன்று ராகவ் தன்னை கேலி செய்தது போல் இன்று அக்னி கேலி செய்து சிரிக்க,

“ஆகு, உனக்கு வர வர வாய் ரொம்ப அதிகமாயிருச்சி.” என்று ராகவ் அவனை அடிக்க துரத்த, பெண்கள் அவர்களின் விளையாட்டை பார்த்து வாய்விட்டே சிரிக்க, அந்த அரண்மனையே சிரிப்பலையில் மூழ்கியது.

ஆனால், அடுத்தநாள் காலையிலேயே ராகவ் மனோவா நகரை விட்டு செல்வதாக இருக்க, என்ன தான் சந்தோஷமாக, தைரியமாக இருப்பது போல் வெளியில் காட்டிக்கொண்டாலும், அறிமுகமில்லாத புது உலகை சந்திக்கப் போவது குறித்து பயம் கலந்த பதட்டம் இருக்கத்தான் செய்தது ஆலாவுக்கு!

அன்றிரவு முழுக்க மனோவா நகரமே கொண்டாட்டத்தில் மிதக்க, அடுத்த நாள் காலை நகரத்தின் மொத்த மக்களும் நகரத்திலிருந்து வெளியே செல்வதற்கான வழியான அந்த பெரிய தடுப்பு சுவர் முன் நின்றிருந்தனர்.

அருவியோ ராகவ்வை கட்டிக்கொண்டு ஓவென்று அழ, அவள் தலையை ஆறுதலாக வருடிவிட்ட ராகவ், “ஏய் ராங்கி! இப்போ எதுக்கு அழுகாச்சி மாதிரி அழுதுக்கிட்டு இருக்க? நாம மறுபடியும் சந்திக்கனும்னு இருந்தா கண்டிப்பா சந்திப்போம்.” என்றுவிட்டு அவளின் காதருகில் மெதுவாக, “லுக்! நான் போய்டேன்னு சோகத்துல இங்க இருக்குற சரக்க குடிச்சி மட்டையாகிறாத! அதுக்கப்றம் உன் மாமியார் கொடுக்குற தண்டனையில கோவிச்சிக்கிட்டு உன் அம்மா வீட்டுக்கு கூட போக முடியாது.” என்று சொல்ல, மூக்கை உறிஞ்சியவாறு அவனை முறைத்துப் பார்த்தாள் அருவி.

ராகவ்வோ சிரிப்புடன் அருவியின் உச்சந்தலையில் முத்தமிட அவனை தாவி அணைத்தவள், “மிஸ் யூ சாகு!” என்று மீண்டும் உதட்டை பிதுக்கி அழ ஆரம்பிக்க, அவளின் தோளை தட்டிக் கொடுத்த அக்னியின் விழிகளோ கலங்கி சிவந்திருந்தது. அதை ராகவ்வும் உணரத் தான் செய்தான்.

“ஆகு, அழுறியா?” என்று ராகவ் சிரித்தவாறு கேட்க, மின்னல் வேகத்தில் தன் நண்பனை நெருங்கி அணைத்துக் கொண்ட அக்னி, “உன்னை மாதிரி ஒரு நல்ல நண்பனை நான் பார்த்ததே இல்லை ராகு! நான் கேட்க கூடாது தான். உன்னோட வாழ்க்கை உன்னோட முடிவுன்னு யோசிச்சேன். ஆனா, கேக்காம இருக்க முடியல. என்கூடவே இருக்குறியா ராகு?” என்று கேட்டான்.

தன் நண்பனை பதிலுக்கு இறுக அணைத்துக்கொண்டவன், “கண்டிப்பா ஒருநாள் சந்திப்போம்.” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு குரலை தாழ்த்தி, “ஆனா, உன்னை விட நான் ஒன்னும் ஸ்பெஷல் இல்லை ஆகு. எனக்காக உன் பொண்டாட்டிகிட்டயே வேலை பார்த்தல்ல? அதை நினைச்சா தான்…” என்று சொல்லி நமட்டு சிரிப்பு சிரிக்க, “ராகு!” என்று பொய்யான முறைப்புடன் அதட்டியவன் பின் பக்கென்று சிரித்துவிட்டான்.

இந்த இருநண்பர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க, அருவியோ ஆலாவிடம் தனக்கு தெரிந்த அரைகுறை ஸ்பானியன் மொழியில், “ஆலா, அந்த உலகத்துல நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க. எல்லாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பாத! அதே மாதிரி எல்லாரையும் சந்தேக கண்ணோட பார்க்காத!” என்று அறிவுரை வழங்க,

அவளோ அதெல்லாம் காதில் வாங்காமல், “அங்க அந்த லொல்லிபொப் இனிப்பு கிடைக்குமா அக்கா?” என்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தாள்.

அருவியோ, “எத?” என்று அதிர்ந்து, “அட அல்ப!” என்று சிரித்தவாறு ராகவ்வை பார்க்க, அவனோ இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன் தன்னவளிடம், “போகலாமா?” என்று தலையசைப்புடன் கேட்டான்.

அவளோ தன் சொந்தங்களை கலங்கிய விழிகளுடன் பார்க்க, அவளின் சிறுவயது தோழிகள், சகோதரிகள் கூட அவளை கட்டியணைத்து கண் கலங்கிவிட்டனர். ராகவ்வோ தன்னவளை ஒற்றை கையால் அணைத்து ஆறுதல்படுத்த, டார்சியின் உத்தரவுப்படி அந்த தடுப்பு சுவரை திறப்பதற்கான ஏற்பாடு நடந்தது.

அந்த பெரிய தடுப்பு சுவரில் கொடிகள் படர்ந்து பாசி படிந்து இருக்க, அங்கு சுவரோடு ஒட்டியிருந்த புதருக்குள் மறைந்திருந்த சுவரின் ஒரு பகுதியை காவலன் ஒருவன் அழுத்தியதும் அது நகர்ந்து உள்ளே சென்ற அடுத்தநொடி தடுப்பு சுவர் இரண்டாக பிரிந்தது.

இதை விழிவிரித்து பார்த்த ராகவ்வும், அருவியும், தடுப்புச்சுவருக்கு பின்னால் இருந்த அடர்ந்த மரங்களை பார்த்து வியக்க தான் செய்தனர். டார்சி தலையசைக்க, அவருக்கு நன்றி செலுத்திய ராகவ் தன் மனையாளை அணைத்தவாறு அந்த சுவரை தாண்டி நகரத்திலிருந்து வெளியேறினான்.

சுவரை தாண்டி நகரத்திலிருந்து வெளியேறியதும் ராகவ் தன் நண்பனை திரும்பிப் பார்க்க, ஒற்றை கண்ணை சிமிட்டி ‘கண்டிப்பா சந்திப்போம்.’ என்று மனதில் நினைத்தவாறு அக்னி புன்னகையுடன் அவனை ஒரு பார்வை பார்க்க, “குட் பாய் எல் டொரேடோ!” என்றவாறு முத்துப்பற்கள் தெரிய சிரித்து வைத்த ராகவ்வின் உருவம் மெல்ல மெல்ல இணைந்த அந்த தடுப்புச்சுவர் மூலம் மறைந்தது.

அடுத்து அக்னி இட்ட உத்தரவே, “நகரத்திலிருந்து வெளியே செல்வதற்கும், உள்ளே வருவதற்குமான அத்தனை வழிகளும் அடைக்கப்பட வேண்டும்” என்று தான். அக்னி வெளியேற பயன்படுத்திய அந்த பெரிய மரத்தின் நடுவிலிருந்த குறுக்குவழி கூட பெரிய பாறை கொண்டு அடைக்கப்பட்டுவிட, தாரக்கோ வாழ்நாள் முழுவதும் மனோவா நகரத்தின் சிறைச்சாலையிலே கைதியாக அடைக்கப்பட்டு விட்டான்.

அதன்பிறகு எல்-டொரேடோ  அதாவது மனோவா நகரத்துக்கான தேடல்கள் பல நாடுகள், ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுப் பயணிகள் மூலம்  மேற்கொள்ளப்பட்டாலும், எவராலும் அந்த தங்க நகரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் முயற்சிப்பவர்கள் ஒன்று வாழ்நாள் முழுவதையும் தேடலிலே கழித்து காலத்தை இழந்து விடுவார்கள் இல்லை, பித்து பிடித்து தான் போவார்கள்.

எல்லா தேடல்களும் பாதுகாப்பான தேடல்கள் அல்ல. அதுவும் இயற்கை வளங்களை அபகரிக்கவென இயற்கைக்கு எதிரான தேடல்கள் அந்த மனிதர்களுக்கே எதிராக திரும்பி விடுகிறது.

தேடி தேடி வளங்களை அழிக்க நினைக்கும் இந்த மனிதகுலத்திலிருந்து தன்னை  பாதுகாக்கவே பல மர்மங்களை தனக்குள்ளேயே ஒழித்து வைத்திருக்கிறது இயற்கை. இதுவரை மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள்! அதில் எல்-டொரேடோவும் ஒன்று.

இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு,

தன் அப்பாவிற்கு குறையாத திறமையும், விவேகமும் கொண்டிருந்த அந்த வாலிபன், தான் வரைந்திருந்த ஓவியத்தை வருடியவாறு அதை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

‘நிஜமாவே வெளியுலகம்னு ஒன்னு இருக்கா? அப்போ நான் வாழுறது ஒரு சின்ன கூட்டுலயா?’ என்ற கேள்விகள் இப்போது சில வருடங்களாகவே அவன் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

சரியாக, “சத்ரு…” என்ற அழைப்பில் சட்டென திரும்பியவன், தன் முன் நின்றிருந்தவனை, “பபா…” என்று அழைக்க, அவன் முன் புன்னகையுடன் நின்றிருந்த அக்னி தலைலை சரித்து தன் மகன் வரைந்திருந்த ஓவியத்தை தான் கண்களை சுருக்கி பார்த்தான்.

அவனுக்கு வெளியுலகத்தை பற்றி கற்றுக் கொடுத்ததும் அவன் தான்! ஆனால், தன்னை போலவே தன் மகனும் இத்தனை ஆழமாக யோசிப்பான் என்று அவன் நினைத்திருக்கவும் மாட்டான். சில வருடங்களாக தினமும் சத்ரு கேட்கும் கேள்விகளிலிருந்து அக்னியை காப்பாற்றுவதே அருவி தானே!

“பபா, நீங்க சொன்ன மாதிரி வானத்துல பறக்க கூடிய வாகனம் கூட வெளியுலகத்துல இருக்கா? நீங்க அதை பார்த்திருக்கீங்களா?” என்று தன் தந்தை சொன்னதை வைத்து தான் வரைந்திருந்த ஓவியத்திலிருந்த விமானத்தை காட்டி சத்ரு ஆர்வமாக கேட்க, “அது சத்ரு…” என்று அக்னி ஏதோ சொல்ல வர, “இரண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா?” என்று கேட்டவாறு முறைத்துக் கொண்டு வந்து நின்றாள் அருவி.

“ஸப்பாஹ்…” என்று அக்னி பெருமூச்சுவிட, தன் மகனின் கேள்வி தாங்கிய முகத்தையும், தன்னை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்ட தன்னவனையும் மாறி மாறி பார்த்தவளுக்கு வழக்கம் போல் நடந்தது புரிந்து விட, “சத்ரு…” என்று கண்டிப்புடன் அழைத்தாள் அவள்.

ஆனாலும், தன்னவனின் விவேகமும், வேகமும் கொண்டு பிறந்த தன் மகனின் புத்தி கூர்மையை நினைத்து அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கூடவே, தன்னவனின் தோற்றத்தில் அதே கம்பீரத்துடன் ஆணழகனாக இருக்கும் தன் மகனை பெருமிதமாக பார்த்தவள் புன்னகையுடன், “உன் கேள்விகளுக்கான பதில் இருக்கு சத்ரு, அதை நீதான் கண்டுபிடிக்கனும். ஆனா, ஆபத்தை தேடி போக கூடாது.” என்று சொல்ல, அவனோ புருவ முடிச்சுகளுடன் தன் அம்மாவை ஏறிட்டு பார்த்தான்.

அவனின் முகப்பாவனையை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவாறு, “உன் கேள்விகளுக்கான பதில்கள மட்டுமில்ல, உனக்காக உன் காதலுக்காக என்ன வேணாலும் செய்ய துணியிற உன் வாழ்க்கை துணையையும் நீ கண்டுபிடிக்கனும். கூடிய சீக்கிரமே…” என்ற அருவியின் பார்வை தன்னவனை காதலுடன் நோக்க, அக்னியின் பார்வையும் தன்னவளை காதலாக நோக்கியது.

தன்னவளுக்காக தனக்கு கிடைத்த வரத்தையே தியாகம் செய்ய துணிந்தவன் அவன்! தன்னவனுக்காக தன் கனவு, இலட்சியத்தையே இழக்க தயாரானவள் அவள்! இருவரும் காதலை வெளிப்படுத்துவதில் ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் அல்லர்.

தன் அம்மா சொன்னதை கேட்டு சலிப்பாக தலையாட்டிய சத்ருவின் வார்த்தைகளோ, “காதல் நம்ம நேரத்தையே வீணாக்கிரும். அதை தேடி அலைஞ்சா நம்ம கனவு சிதைஞ்சிரும். என்னோட தேடலே வேற மமா…” என்று இருக்க, அந்த அடர்ந்த காட்டில் தன் குழுவினருடன் ஆய்வுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த அலீஷாவின் இதழ்களோ, “எவ்ரிதிங் இஸ் ஃபெயார் இன் லவ் என்ட் வார் (Everything is fair in love and war)” என்று சொல்லிக் கொண்டது.

தன் கையிலிருந்த தன் அம்மா அணிவித்த மோதிரத்தை உதட்டை பிதுக்கியவாறு பார்த்தவள், ‘சோரி டாடி, சோரி மா… உங்ககிட்ட பொய் சொல்லிட்டு வர வேண்டியதா போச்சு! எனக்கு எக்ஸ்ப்ளோர் ரொம்ப பிடிக்கும். ஆனா, உங்களுக்கு பிடிக்காது. ஐ க்னோ, பட், எனக்கு இது தான் வேணும். என்னோட தேடல் அ அடைஞ்சிட்டு உங்கள பார்க்க வர்றேன்.’ என்று மானசீகமாக சொல்லிக் கொண்டவளின் மனதில் ஏதோ ஒரு உந்துதல்.

அவளுடன் வந்த நான்கு பேரும் முன்னே சென்றிருக்க, இறுதியாக வந்துக் கொண்டிருந்த அலீஷா சட்டென்று நிற்க, அவளின் விழிகளோ  சுற்றிமுற்றி எதையோ தேடி அலைந்தது. கூடவே, அவளுடைய மனம் எதையோ உணர்த்துவதையும் விடவில்லை. அவளின் பார்வையின் தேடலில் சரியாக சிக்கியது அந்த மரம்.

சாதரணமாக யார் கண்ணிலும் தெரியாதவாறு பெரிய வேர்களினால் மறைக்கப்பட்டிருந்த அந்த பெரிய மரத்தின் நடுவிலிருந்த மரக்குகையை கூர்ந்து பார்த்தவளது கால்கள் தானாக அதை நோக்கி செல்ல, முன்னால் சென்றுக் கொண்டிருந்த அவளின் நண்பர்களும் அவளை கவனியாமல் போனது விதியின் விளையாட்டாகிப் போனது.

அந்த மரத்தின் அருகில் சென்றவள் சிறிது நேரம் அதையே ஆழ்ந்து பார்த்துவிட்டு அந்த மரத்தின் தண்டிற்கு நடுவிலிருந்த வழிக்குள் எதை பற்றியும் யோசிக்காது தன் முதல் அடியை எடுத்து வைத்து உள்ளே செல்ல, அவளுக்கானவனோ மனதில் பல கேள்விகளுடன் தேடலுக்கான சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க, மீண்டும் ஆரம்பமானது எல்-டொரேடோவின் காதல் பயணம்…

                *****முற்றும்*****

-ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!