அனல் பார்வை 28🔥

eiMVVGW69203-d4be4a91

அனல் பார்வை 28🔥

அக்னி அந்த குகைக்குள் நுழைந்து அடுத்த பல மணி நேரங்கள் அந்த குகை முன்னே திக் பிரம்மை பிடித்தது போன்று அருவி அமர்ந்திருப்பதை பார்த்து ராகவ்விற்கு அத்தனை வேதனையாக இருந்தது.

சுற்றி இருந்த மக்களுக்கு அவளின் மொழி புரியாவிடினும் அவளின் கதறல் எதற்கு என்று புரிந்து பாவமாக இருக்க, டார்சியோ அருவியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

தாரக்கும் அருவியை சமாதானப்படுத்த முடியாது அறைக்குச் சென்றுவிட, ராகவ் தான் நொந்து போய் விட்டான். உணவு, தூக்கம் எல்லாவற்றையும் மறந்து அருவி அந்த குகை முன்னேயே அமர்ந்திருக்க, அவளுக்கு ஆறுதலாக அவள் பக்கத்திலே ராகவ் அமர்ந்திருந்தான் என்றால்,  ராகவ்வையே பார்த்தவாறு தூரமாக அமர்ந்திருந்தாள் ஆலா.

ஏனோ அருவியின் உணர்வுகளை சரியாக புரிந்துக் கொண்ட ஆலாவும் சில பழங்கள் கொண்டு வந்து கொடுத்து அருவிக்கு சாப்பிட கொடுக்குமாறு சொல்ல, அது என்னவோ இருக்கும் காயத்திற்கு மத்தியில் ஆலாவின் செயல் அத்தனை இதமாக இருந்தது ராகவ்விற்கு!

“மஹி, சாப்பிட்டிருக்க மாட்டான். நான் சாப்பிட மாட்டேன்.” என்ற அருவியை சமாதானப்படுத்தி ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்குள் ராகவ்விற்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது. அதுவும், சரியாக சாப்பிடாது இரண்டாவது நாள் காலையிலேயே சுயநினைவின்றி அவள் மயங்கி விழுந்திருக்க, மொத்தப் பேருமே பதறிவிட்டனர்.

என்ன தான் வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டாலும் தன் மகனை நினைத்து வேதனையில் இருந்த டார்சிக்கு கூட தன் சேவகர்கள் அருவியின் நிலை பற்றி சொல்லும் போது அவளின் காதலை நினைத்து வியப்பாகத் தான் இருந்தது.

இரண்டாவது நாள் காலையில் அருவி சுயநினைவின்றி விழவும் அவளுக்கு டார்சியின் உத்தரவுப்படி வைத்தியம் பார்த்து மூலிகைகள் கலந்த ஒரு சாற்றை பருகச் செய்துவிட்டு தன் அறைக்குள் வந்த ராகவ், அங்கு தாரக் திசைக்கருவி உட்பட சில முக்கியமான பொருட்களை பையில் அடுக்கிக் கொண்டிருப்பதை புரியாமல் பார்த்தான்.

“ஹேய் குட்டிப்பையா, எங்க கிளம்புற?” என்று அவன் புரியாமல் கேட்க, “அக்னி ப்ரோ குகைக்குள்ள போறதுக்கு முன்னாடி இந்த நகரத்துலயிருந்து எப்படி போறது என்கிற வழிய சொல்லிட்டு தான் போனாரு. இப்போ தான் அதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுக்கு மேலும் என்னால இங்க இருக்க முடியாது. நான் கிளம்புறேன்.” என்று சொன்னான் தாரக்.

அவனை எரிச்சலாக பார்த்த ராகவ், “உன் அக்கா சுயநினைவில்லாம அங்க படுத்து கிடக்குறா. இப்போ நீ போறதுன்னு சொல்றது எனக்கு சரியா தோணல.” என்று காட்டமாக சொல்ல, “நீங்களும் சரி, அருவும் சரி எப்படியும் ப்ரோ அ விட்டு வர போறதில்லை. அப்போ எதுக்கு நான் இங்கயிருந்து டைம் வேஸ்ட் பண்ணனும். அதுவும், ப்ரோ உங்க இரண்டு பேரையும் அழைச்சிட்டு போக தான் சொன்னாரு. பட், வர்ற நிலையில நீங்க இல்லை. சோ, நானாச்சும் போறேன்.” என்றுவிட்டு தன் பையை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து தாரக் வெளியேற,

அவன் போகும் திசையை பார்த்த ராகவ், “சரியான சுயநலவாதி!” என்று திட்டிவிட்டு தன் நண்பர்கள் பற்றிய யோசனையில் ஆழ்ந்தான்.

இங்கு அரண்மனையின் பின்பக்கம் வந்த தாரக்கிற்கு இத்தனை நேரம் எதிர்ப்பார்த்த வாய்ப்பு கிடைத்தது போன்று இருந்தது. வழமையாக அத்திசையில் காவலர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இன்றோ, சடங்கு தொடர்பாக அரண்மனையில் நடக்கும் கூட்டத்திற்கு காவலர்கள் சென்றிருக்க, ஒரு காவலன் மட்டுமே அந்த மரத்திற்கு முன் பாதுகாப்புக்கு நின்றிருந்தான்.

அதுவும், ஏற்கனவே முன்னர் இருந்த நகரத்தின் பாதுகாப்பு சற்று தளர்த்தப்பட்டிருந்தது தாரக்கிற்கு சாதகமாக போக, கூடவே அக்னி காவலர்களை திசை திருப்பவென தாரக்கிடம் கொடுத்து விட்டுச் சென்றிருந்த ஸ்மோகிங் போம் போன்ற பொருள் அவனுக்கு தப்பிக்க உதவியாக இருந்தது.

முதல்முறை அக்னி நகரத்திலிருந்து வெளியேறும் போது காவலர்களை திசைதிருப்ப பயன்படுத்திய ஒரு பொருள் அது. அதையே தாரக்கிடம் அவன் கொடுத்துவிட்டுச் சென்றிருக்க, சிறிதுநேரம் சுவருக்கு பின்னால் மறைந்திருந்து பார்த்திருந்தவன் அந்த காவலன் இருந்த இடத்தை நோக்கி அதை எறிய, அது வெடித்து அந்த இடமே புகை மூட்டமானது.

உடனே அந்த காவலன் புகையை விலக்க முடியாது தடுமாற, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய தாரக் சாமர்த்தியமாக அவனின் கண்ணில் சிக்காது நகரத்திலிருந்து வெளியே செல்வதற்கான அந்த குறுக்கு வழியினுள் புகுந்துக் கொண்டான்.

தாரக் நகரத்திலிருந்து வெளியேறியிருக்க, அன்று மதியம் சுயநினைவுக்கு வந்த அருவி அடுத்தநொடி, “மஹி…” என்று அழுதவாறு அந்த குகை முன்னே ஓடிப் போய் நின்றுக்கொண்டாள்.

அதேநேரம் ஒருநாள் முழுதும் தூங்காத களைப்பில் தூங்கச் சென்றவனுக்கு அத்தனை யோசனைக்கு பிறகு அப்போது தான் கண்கள் சொக்க, அதற்குள் பக்கத்து அறையில் கேட்ட அருவியின் குரலில் பதறியடித்துக் கொண்டு ஓடினான் ராகவ்.

“மஹி…” என்று அழைத்தவாறு அந்த குகையையே பார்த்துக்கொண்டு அருவி அழ, மூச்சு வாங்கியவாறு இடுப்பில் கை குற்றி அவளை வலி நிறைந்த பார்வையுடன் நோக்கிய ராகவ்வும் அந்த குகை வாயிலை ஒருவித பயத்துடனும், வேதனையுடனும் தான் நோக்கினான்.

அடுத்த மூன்றாவது நாளும் கழிந்து அக்னி அந்த குகையிலிருந்து வெளிவரும் நேரமும் வந்தது. அந்த குகை முன் நகரத்தின் மொத்த மக்களும் காத்திருக்க, ஒருவித பதட்டத்துடன் அந்த குகை வாயிலையே பார்த்தவாறு நின்றிருந்தார் டார்சி.

இதில் அருவியை சொல்லவா வேண்டும்? ‘தன்னவனுக்கு ஏதும் நேர்ந்திருக்கக் கூடாது.’ என்று கடவுள் நம்பிக்கை இல்லாத அவளே மானசீகமாக மொத்த கடவுள்களையும் துணைக்கு அழைத்து வேண்டிக்கொண்டு இருக்க, ‘ஆகு, சீக்கிரம் வா டா!’ என்று தன் நண்பனை எதிர்ப்பார்த்து நின்றிருந்தான் ராகவ்.

அந்த அதிகாலை சூரியன் உதயமாகும் முன் சரியாக அந்த குகை வாசல் திறக்கப்பட, எல்லாரும் தங்களுக்குள் வேண்டியவாறு குகையை உற்று நோக்கினர். சில நிமிடங்கள் கழித்து எல்லோரையும் பதட்டப்பட வைத்து நடக்க கூட சிரமப்பட்டவாறு ஒவ்வொரு அடியாக வைத்து வெளியே வந்தான் அக்னி.

அந்த மக்களை பொருத்தவரை மூன்று நாட்கள் கழித்து அந்த குகையிலிருந்து உயிரோடு வெளியே வரும் மனிதன் மனதளவில் உண்மையானவன். அதுவும், அந்த குகைக்குள் மூன்று நாட்கள் உணவு, உடை எதுவுமின்றி உள்ளேயிருக்கும் விஷ பூச்சிகள், வௌவால்கள் என்பவற்றிலிருந்து தன்னை காத்து வெளியே வருபவன் அவர்களுக்கு கடவுளை போன்றவன்.

முகத்திலும், உடலிலும் விஷப்பூச்சிகள் கடித்த காயங்கள், மூன்று நாட்களாக சரியாக தூங்காது கண்கள் வீங்கி சிவந்து உடலில் சக்தியே இல்லாது கஷ்டப்பட்டு வெளியே வந்தவனை மொத்த காவலர்களும் சூழ்ந்துக் கொள்ள, டார்சியோ தன் மகனை பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தார்.

“மஹி…” என்று கத்தியவாறு அவனது நிலையை கண்டு பதறிய அருவி அவனை நோக்கி செல்ல போக, அவளைப் பிடித்து நிறுத்திய ராகவ், “ஆகு சாதிச்சிட்டான்ல…” என்று தன் நண்பனை பெருமையாக சொல்லிக் கொண்டான். அருவியோ, “மஹி! மஹி!” என்றவாறு அவளின் கண்களில் கண்ணீர் ஓட அழுதவாறு பார்க்க, ஆனால், அக்னிக்கோ அவளை நிமிர்ந்து பார்க்கக் கூட முடியவில்லை.

மொத்த ஊருமே மேளதாளங்கள் கொட்டி, ஓலம் போட்டு, கோஷம் போட்டு தங்கள் தலைவன் அந்த குகையிலிருந்து வெளியே வந்ததை கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். அவர்களின் வழக்கப்படி ரபான் தட்டி அவர்கள் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தி கொண்டாட, தன் மகன் அருகில் வந்த டார்சி அவனுக்கு நீர் அருந்த கொடுத்து, பழத்தையும் உண்ண வைத்தார்.

கொஞ்சம் நீர் அருந்தியதும் தான் கண்களை திறந்து பார்த்த அக்னியின் கண்கள் முதலில் தேடியது என்னவோ தன்னவளை தான். அவள் சென்றிருப்பாள் என்று நினைத்திருந்தவனுக்கு அவளுடைய “மஹி…” என்ற அழைப்பு நன்றாகவே காதில் விழுந்திருந்தது. அந்த அழைப்பில் முதலில் அதிர்ந்தவன் ஏனோ அவள் செல்லாததிலும் மனதிற்கு இதமாகத் தான் உணர்ந்தான்.

அவன் நீர் அருந்தி, பழம் சாப்பிட்டதும் தான் தாமதம் சூரிய உதயத்திற்கு முன் அடுத்த சடங்கை செய்வதற்காக அக்னியை காவலர்கள் படை சூழ அழைத்துச் செல்ல, அவகாசம் கூட கொடுக்காது அவர்கள் அடுத்து செய்த சடங்குகளை அருவியும், ராகவ்வும் வியந்து தான் பார்த்தனர்.

ஏரியின் பக்கத்திற்கு அவனை அழைத்துச் சென்றவர்கள், அக்னியின் உடல் முழுக்க சேற்றை அப்பி விட்டு, தங்கத்துகள்களை அவன் மேல் பூச, சுற்றி இருந்த மக்களோ ஓலம் போட்டு கரகோஷம் எழுப்பினர்.

இத்தனை நேரம் சோர்ந்து போயிருந்த அக்னி கூட ஏனோ சற்று தெம்பு வந்தது போல் கம்பீரமாகவே நிமிர்ந்து நிற்க, இதையெல்லாம் மிரட்சியாக பார்த்துக்கொண்டிருந்த அருவியோ, “என்ன டா பண்றாங்க என் மஹிய?” என்று பதற்றமாக கேட்க, “அதை தானே ராங்கி நானும் புரியாம பார்த்துக்கிட்டு இருக்கேன். சேத்தை உடம்புல அப்பி என்ன டி பண்றாங்க?” என்று புரியாமல் கேட்டான்.

இருவரின் முகபாவனைகளை கவனித்துக்கொண்டிருந்த ஆலா அவர்களை நெருங்கி, “எங்க தலைவன தூய்மைப்படுத்துறோம்.” என்று சொல்ல, இருவருமே அவளை ‘ஙே’ என ஒரு பார்வை பார்த்து வைத்தனர்.

அக்னியின் மேல் தங்கத்துகள்களை பூசிவிட்டு சுற்றி இருந்தவர்கள் விலக, அக்னியை பார்த்த இருவருமே, ‘ஆஆ…’ என்று வாயை பிளந்து விட்டனர். முகம் உட்பட உடல் முழுக்க தங்கம் பூசப்பட்டு ஏதோ தங்கம் மனிதன் போல் ஜொலித்துக் கொண்டிருந்தான் அவன்.

அந்த ஏரியில் வைத்திருந்த படகில் அரண்மனையை சேர்ந்த சில அமைச்சர்கள் ஏறிக்கொள்ள, டார்சியோ மனோவா நகரத்தின் பல நூற்றாண்டு காலமாக பாதுகாத்து வைத்திருந்த அவர்களின் பாரம்பரிய தங்கத்திலான பொருட்கள், ஆபரணங்களை படகில் ஏற்ற சொல்லி உத்தரவிட்டார். அடுத்து அவர் அக்னியை பார்த்து தலையசைத்ததும் படகில் ஏறிக் கொண்டான் அக்னி.

அந்த படகும் ஏரியின் நடுப்பகுதி வரை சென்றதும் தான் தாமதம் அக்னியோ ஏரிக்குள் குதித்து விட, இங்கு இதைப் பார்த்துக் கொண்டிருந்த அருவியோ, “அய்யய்யோ! மஹி… டேய் சாகு! உன் ஃப்ரென்ட் என்ன டா முழு பைத்தியமா இருக்கான்? தண்ணிக்குள்ள விழுந்துட்டான் டா. இடியட்! ஏன் டா இப்படி பண்ற?” என்று கத்தி கூப்பாடு போட, டார்சியோ அவளை சலிப்பாக ஒரு பார்வை பார்த்தார்.

“வாய மூடு ராங்கி! இப்படி கத்தினேன்னா உன்னையும் தூக்கி போட்டுருவாங்க. அவன் எல்லாம் கடல்லையே சுவிம் பண்ணி அடுத்த கண்டத்துக்கு போயிருவான்.” என்று ராகவ் அவளை கடிந்துக்கொள்ள, அருவியோ உதட்டை பிதுக்கியவாறு தன்னவனை தான் எட்டி எட்டி பார்த்திருந்தாள்.

சரியாக அருவியின் கண்களுக்கு நேரே சூர்யன் உதயமாக, அந்த ஏரியிலிருந்து சூரிய உதயம் போல் தன்னை நீரில் கரைத்து ஆஜாகுபானுவான தோற்றத்தில் எழுந்தான் அக்னி.

அந்த மக்களை பொருத்தவரை சடங்குகள் முடிந்து அந்த ஏரியில் தன்னை தூய்மைப்படுத்திவிட்டு எழும் அவர்களின் தலைவனே அவர்களின் கடவுள். அக்னியை கண்டதும் மொத்த மக்களும் கரகோஷம் எழுப்பி மண்டியிட்டு அமர்ந்து தலை வணங்க, ராகவ்வோ “வாவ்!” என்று வாயை பிளந்தான்.

அருவியின் கண்கள் சாரசர் போல் விரிய, தன்னை மீறி அவளின் உதடுகள், “எல் டொராடோ” என்று முணுமுணுத்தது. அது பக்கத்திலிருந்த ஆலாவின் காதில் விழ, அவளோ புன்னகையுடன், “எல் ரே டொராடோ(El Rey dorado)” என்றுவிட்டு மண்டியிட்டு அமர்ந்து தங்கள் தலைவனுக்கு தலை வணங்கினாள்.

அந்த நகரத்தின் பெயர் மனோவா ஆக இருக்க, எல்-டொரேடோ என்பது அவர்களின் தலைவனின் பெயரையே குறிக்கின்றது. அதுவும் அவர்களின் தலைவனுக்கான சரியான பதம் எல்-ரேய் டொராடோ ஆகும்.

தன்னை நீரில் தூய்மைப்படுத்தி விட்டு ஆஜானுபாகுவான தோற்றத்தில் சூரிய உதயம் போல் எழுந்து வந்தவன், தன் அம்மாவின் முன்னே போய் நிற்க அவரோ அவனை பெருமிதமாக பார்த்தார். ஆனால், அடுத்தகணம் அவனின் பார்வையோ அங்கே நின்றிருந்த அருவியின் மேல் தான் படிந்தது.

அருவியோ தன்னவனை புன்னகையுடன் பார்க்க, அதை கவனித்த டார்சியோ குரலை செறுமிவிட்டு, “ஒரு தலைவனா உன்னோட கடமைய நீ மறக்க மாட்டேன்னு நம்புறேன் அக்னி. ஆனா, ஒரே ஒரு திருத்தம் செய்ய வேண்டியதா இருக்கு. இதுவரைக்கும் நம்ம நகரத்தோட சட்டத்தை எவரும் மீறினதில்லை உன்னை தவிர. மறுபடியும் ஒரே ஒரு சட்டத்தை இப்போ நாம மீறினா நல்லது நடக்கும்னு எனக்கு தோணுது.” என்று சொல்ல, அக்னியோ புரியாமல் பார்த்தான்.

“உன் நண்பர்களை மனோவா அ விட்டு அனுப்பிரு அக்னி.” என்று அவர் சொல்ல, அக்னி அதிர்ந்தான் என்றால், அருவியோ அவர் சொன்னதை புரிந்து, “முடியாது. நான் போக மாட்டேன். என் மஹிய விட்டு போக மாட்டேன்.” என்று கத்த ஆரம்பித்துவிட்டாள்.

சுற்றி இருந்த காவலர்களோ அவள் கத்திய கத்தலில் கையிலிருந்த ஈட்டியை அவளை நோக்கி திருப்ப போக, அக்னி பார்த்த பார்வையில் ஆயுதங்களை கீழிறக்கி விட்டனர். டார்சியோ அவளின் கத்தலை அலட்சியமாக பார்க்க, கண்களை அழுந்த மூடித் திறந்து ஆழ்ந்த மூச்செடுத்தவன் தன்னவளை நெருங்கி வந்து அவளெதிரே நிற்க, அவளோ நலிந்த குரலில், “முடியாது மஹி… ப்ளீஸ்” என்று சொன்னாள்.

சுற்றியிருந்த எவரையும் கண்டுக்காது அவளின் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தவன் அவளின் கன்னங்களை தாங்கி, “தீ, இது தான் நான். இது தான் என்னோட உலகம். உனக்குன்னு ஒரு வாழ்க்கை, கனவு இருக்கு. மூனு வருஷமா உன்னோட வளர்ச்சியை பார்த்தவன் நான். இது உனக்கான இடம் இல்லை. நான் உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன். இங்கயிருந்து போயிரு ஜானு.” என்றுவிட்டு அவளின் வயிற்றில் கைவைத்து நெற்றியோடு நெற்றி முட்டிய அக்னி கண்கள் கலங்க, “என்னால இன்னொரு உயிர் போக கூடாது.” என்று சொல்ல, அவளோ அவனை உக்கிரமாக முறைத்துப் பார்த்தாள்.

அவனை விட்டு விலகி நின்றவள் அவனிடம் எதையும் விளக்காது, “நான் இப்போவே உன் அம்மாக்கிட்ட சோரி… சோரி… என் அத்தைக்கிட்ட பேச போறேன். தமிழ் தான் எனக்கு கம்ஃபோர்டபிள். சோ, ட்ரான்ஸ்லேட் பண்ணு.” என்று திமிராகவே சொல்லிவிட்டு டார்சியின் அருகில் செல்ல, அக்னியோ அவளை புரியாமல் பார்த்தான்.

அதிலும் டார்சியின் அருகில் சென்ற அருவி பட்டென்று அவரின் கைகளை தன் கைகளுக்குள் பொத்திக்கொள்ள, அவளை கேள்வி கலந்த அதிர்ச்சியுடன் பார்த்தார் அவர்.

“அத்தை, நான் பிறக்கும் போது எனக்கு அப்பா பாசம் கிடைக்கல. த க்ரேட் எக்ஸ்ப்ளோரர் ஆதிகேஷவன் உங்களுக்கு கூட நல்லா தெரியுமே… கூடவே, அம்மா பாசமும் இல்லை. என் கூட ரொம்ப பாசமா இருந்த என் மஹிமாவும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க. அப்போ என் வாழ்க்கையில புயல் மாதிரி வந்தான் அக்னி.

அவனோட மொத்த காதலையும் கொடுத்தான். கூடவே, ஒரு பரிசும். ஆனா என்ன, மலை மாதிரி வளர்ந்திருக்கானே தவிர அறிவு கொஞ்சமும் இல்லை.” என்றுவிட்டு தன்னவனை பார்த்தவள், “வசனம் மாறாம அப்படியே சொல்லனும்.” என்று மிரட்டும் தொனியில் சொல்ல, ‘க்கும்! அந்த ஆன்ட்டி நம்மள பாவம் பார்த்து உயிரோடயாச்சும் விட்டிருக்கும். இப்போ சுத்தம்!’ என்று தனக்குள்ளே நொடிந்துக் கொண்டான் ராகவ்.

“அவன் தான் என்னோட உலகம், என்னோட சந்தோஷம்னு அவன் புரிஞ்சிக்கல. என் சந்தோஷத்துக்காக பண்றேன்னு என் சிரிப்பையே தொலைக்க வச்சிட்டான். அவன் எதுக்கு என்னை விட்டு பிரிஞ்சானோ அது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், வாழ்க்கையில நிறைவை கொடுக்கல. காதல்ல விட்டுக்கொடுக்குறது அழகு. ஆனா, நம்ம காதலை என்னைக்கும் விட்டுக்கொடுக்க கூடாது. ரொம்ப பெரிய வலி அது. அந்த வலிய போக்கிக்க நான்…” என்று ஆரம்பித்தவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்துக்கொண்டு “தீ…” என்று அக்னி கடிந்துக்கொள்ள, அவனின் பார்வையில் பதறி வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள் அருவி.

ராகவ்வோ, ‘என்ன ஹீரோயின் மேடம் நிறுத்திடீங்க? அவங்களோட தலைவன ஷூ துடைக்க வச்சதை சொல்லுங்க. நீங்க தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே… சொல்லுங்க… சொல்ல மாட்டாங்க. வெறும் தண்ணில அப்பலம் பொறிக்க மட்டும் தான் செய்வாங்க.’ என்று தனக்குள்ளேயே அருவியை கேலி செய்துக் கொண்டான்.

“ஒரு தடவை விட்டுட்டு போய் உயிரோட கொன்னுட்டான். நான் கொஞ்சம் கோபமா நடந்துக்கிட்டதும் மறுபடியும் கோச்சிக்கிட்டு இங்க வந்துட்டான். போறது தான் போறான். என்னையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல! அவன் தான் என்னோட உயிர், என்னோட காதல், என்னோட சந்தோஷம், என்னோட உலகம், என்னோட கனவு! அவன் தான் என்னோட மஹி… அவனை விட்டு எனக்கு வாழ்க்கை இல்லை.

கேமரா முன்னாடி போலியான சிரிப்பை ஒட்டிக்கிட்டு வாழுற அந்த பொய்யான வாழ்க்கைய விட என் மஹி பக்கத்துல அவனோட மனைவியா மனசார சிரிச்சிக்கிட்டு வாழுற வாழ்க்கைய தான் நான் ஆசைப்படுறேன். அவனுக்கு புரிய வைங்க! என்னால அவன விட்டு இருக்க முடியாதுன்னு… என்னை விட அவனை யாராலையும் காதலிக்க முடியாதுன்னு… அவனுக்காக தான் நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்னு…” என்று சொல்லி முடிக்க, தன்னவளின் காதலை நினைத்து கர்வத்துடன் கலங்கிய விழிகளுமாக அவள் சொன்னதை தன் அம்மாவிடம் சொல்லி முடித்தான் அக்னி.

அருவி பேசி முடிக்கும் போது டார்சிக்கே கண்கள் கலங்கிவிட்டது. அவர் அக்னியை கலங்கிய விழிகளுடன் நோக்க, அவனோ தன்னவளை காதலாக பார்த்திருந்தான். டார்சிக்கும் இருவரின் காதலின் ஆழம் புரிய, இதற்கு மேல் அவர்களை பிரிக்க அவருக்கே மனம் வரவில்லை.

‘தங்களை சேர்ந்த பெண்ணை விட, தன் மகனை  காதலிக்கும் பெண்ணே அவனுக்கு பொருத்தமானவள்’ என்று அவருக்கும் தோன்ற, ஆனால் அந்த சந்தோஷம் கூட நிலைக்கவில்லை.  ஏதோ பேச வந்தவர் சட்டென கேட்ட துப்பாக்கி சத்தத்தில் விதிர்த்துப் போய்விட்டார்.

மொத்த மக்களும் பயந்து துப்பாக்கி சத்தம் வந்த திசையை நோக்க, கிட்டதட்ட ஐம்பது பேர் கொண்ட குழுவுடன் நின்றிருந்த தாரக்கை பார்த்த அருவி, அக்னி மற்றும் ராகவ் அதிர்ந்து விட்டனர். ‘தங்களின் நகரத்துக்குள் வெளியுலகத்தை சேர்ந்த மனிதர்கள் எப்படி நுழைந்தார்கள்?’ என்று தெரியாது டார்சி அவர்களை மிரட்சியாக நோக்க, அக்னியோ அப்போது தான் தன் மடத்தனத்தை நொந்துக் கொண்டான்.

அந்த ஐம்பது பேருமே கையில் ஆயுதத்துடன் நிற்க, அந்த மரத்திற்கு காவலுக்கு நின்றிருந்த காவலர்களின் சடலங்களை அக்னியின் முன் தூக்கிப்போட்டு தாரக் ஏளனமாக சிரிக்க, மற்ற காவலர்களோ தங்கள் கையிலிருந்த ஈட்டி, வாளை அவர்களை நோக்கி குறி வைத்தவாறு தாரக்கின் குழுவை நோக்கி ஆவேசமாக அடி எடுத்து வைத்தனர்.

ஆனால், அவர்களில் ஒருவன் இரண்டு அடி வைக்கும் முன்னே தாரக்கின் ஆட்களில் ஒருவன் அவர்களை சுட்டிருக்க, அந்த நகரத்தை சேர்ந்த மக்களோ தாரக்கின் ஆட்களின் கையிலிருந்த துப்பாக்கியை பார்த்து பயந்து ஒரு அடி பின்னே வைத்தனர்.

இதில் அருவியும், ராகவ்வும் நடப்பதை  நம்ப முடியாது அதிர்ச்சியாக நோக்க, முகம் சிவந்து கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தியவாறு நின்றிருந்தான் அக்னி.

-ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!