அவள் பௌர்ணமி 6

IMG-20200921-WA0010-49a69c37

அவள் பௌர்ணமி 6

 

அவள் பௌர்ணமி 6

 

நிழல் காதலன் – (பிளாஷ்பேக்) காட்சி:

 

”சொல்லுங்க அத்த, என்ன முடிவு எடுத்து இருக்கீங்க?” பைரவநாத் ஆர்வமாக கேட்டார்.

 

“நம்ம எஸ்டேட் பொறுப்பை இனி நம்ம சந்துரு எடுத்து நடத்தட்டும் மாப்பிள” காந்திமதி தன் முடிவை சொல்ல பைரவநாத்தின் முகம் மாறி போனது.

 

“நீங்க புரிஞ்சி தான் பேசறீங்களா அத்த? சந்துருவால எப்படி, தொழில்ல பொறுப்பெடுத்துக்க முடியும்?” அவர் பதறி கேட்க,

 

“ஏன் முடியாது? அவங்க அப்பாவுக்கு அடுத்து இதெல்லாம் கட்டி காக்கற பொறுப்பு அவனுக்கு தான இருக்கு மாப்பிள” 

 

“ஓரறைக்குள்ள முடங்கி கிடக்கறவனால இவ்வளவு பெரிய வேலையை செய்ய முடியுமா என்ன? நொண்டி வேற” அவரின் இறுதி முணுமுணுப்பில் காத்திமதி வெகுண்டு எழுந்து விட்டார்.

 

“மாப்பிள்ள, மறுபடி என் புள்ளய பத்தி இப்படி ஒரு வார்த்தை வந்தது நல்லா இருக்காது சொல்லிட்டேன், அவன் ஒன்னும் பிறப்பிலயே இப்படி இல்லையே, நாலு வயசு வரைக்கும் நல்லா தான் நடந்துட்டு இருந்தான். கேப்பார் பேச்சை கேட்டு போலியோ தடுப்பூசி போடாம விட்டதால, அவனால நடக்க முடியாம போச்சு, எல்லாம் நான் செஞ்ச தப்பு தான், என் அறியாமையால என் புள்ள முடங்கி போயிட்டான்” என்றவர் முந்தானையால் ஈரமான கண்களை ஒற்றி துடைத்து கொண்டு மேலும் பேசினார்.

 

“அவனோட அப்பா இருந்தவரைக்கும் தான் தன் மகன் ஊனம்னு மத்தவங்களுக்கு காட்டறதை அவமானமா நினைச்சாரு. சந்துருவ வெளி உலகத்துக்கு காட்டாம முடக்கி வச்சிட்டாரு. என் மகனோட கால் தான் ஊனமே தவிர அவனோட அறிவும் திறமையும் ஊனமில்ல, நான் முடிவு பண்ணிட்டேன், இனி இந்த குடும்பத்தையும் தொழிலையும் சந்துரு தான் முன்னெடுத்து நடத்துவான், நீங்க அவனுக்கு கணக்கு வழக்கெல்லாம் சொல்லி கொடுத்து உதவி செயிங்க போதும்” 

 

பைரவநாத் முகத்தில் அப்பட்டமாக ஆத்திரம் ஏறியது. “என்ன அத்த, வீட்டோட மாப்பிள்ளயா இருக்கறவன் தானேன்னு என்னை உங்க புள்ளைக்கு சேவை செய்ய சொல்றீங்களா? சந்துருவ வச்சு எஸ்டேட் நடத்தினா நாமெல்லாம் தெருவுல தான் நிக்கனும், பெருசா பேச வந்திட்டீங்களே உங்க மகனை பத்தி, வயசு முப்பது ஆக போகுது அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க முடிஞ்சதா உங்களால?”

 

காந்திமதி முகம் கவலை காட்டியது. எத்தனை பெண்களை அவரும் பார்த்து இருப்பார். ‘உன் நொண்டி மகனுக்கு கல்யாணம் தான் ஒரு கேடு’ என்ற கணவனின் அலட்சியம் ஒருபுறம், ‘என்னை கட்டிக்கிட்டு ஒரு பொண்ணோட வாழ்க்கை வீணாக வேணாம்மா, எனக்கு அதுல விருப்பமில்ல’ மகனின் மறுப்பு மறுபுறம் என, ஒரு தாயாக அவர் ஓய்ந்து போனார்.

 

“நான் கல்யாணம் செஞ்சுகிட்டா தான், என்னால எஸ்டேட்டை நிர்வகிக்க முடியும்னு நினைக்கிறீங்களா மாமா?” அவர்கள் பேச்சிடையே ஆழ்ந்த குரல் கேட்க, இருவரும் திரும்பினர். சந்துரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, பௌர்ணமி அதை தள்ளிக் கொண்டு அவர்களிடம் வந்திருந்தாள். 

 

வீட்டு கூடத்தில் தான் அவர்கள் பேச்சு நடைப்பெற்று கொண்டிருந்தது. இதுவரை அவர்கள் பேசியதை கேட்டபடி அமைதி காத்தவன், மேலும் பொறுக்க முடியாமல் அவர்கள் முன் வந்திருந்தான்.

 

“உத்தியோகம் மட்டுமில்ல கல்யாணமும் புருச லட்சணம் தான். இத்தனை வருசம் உன்ன பத்தி எதுவும் சொல்லாம இருந்துட்டு இப்ப திடுதிப்புனு வீல் சேர்ல உன்ன தள்ளிட்டு போய் நீதான் இனி முதலாளின்னு தொழிலாளிங்க முன்னாடி நிறுத்தினா எவன் மதிப்பான் உன்ன? எஸ்டேட் தொழிலாளிகளோட நம்பிக்கையும் விசுவாசமும் இல்லாம, உன்னால தொழில்ல ஒன்னையும் கிழிக்க முடியாது” பைரவநாத் அசராமல் குயுக்தியோடு பேசி விட்டார்.

 

“அம்மா… எனக்கு உடனே கல்யாண ஏற்பாடு பண்ணுங்க, நீங்க எந்த பொண்ணை சொன்னாலும் நான் கட்டிக்கிறேன். கல்யாணத்துக்கு எல்லா எஸ்டேட் தொழிலாளர்களையும் குடும்பத்தோட வர சொல்லுங்க, அன்னிக்கே நான் எஸ்டேட் பொறுப்பேத்துக்கறதா எல்லாருக்கும் அறிவிக்கிறேன்” என்று சந்துரு வேகமான உத்தரவுகளை இட, அவன் மாமன் திணறித்தான் போனார். 

 

இதுவரை சந்துரு நொண்டி, எதற்கும் வேலைக்கு ஆகாதவன், வேண்டாத குடும்பத்து சுமை என்று மட்டுமே இவரின் எண்ணம் இருந்திருக்க, இப்போது அவனின் அழுத்தமான பேச்சும், அவன் தொழிலில் பொறுப்பேற்று கொள்வதில் உள்ள சிக்கலை கேட்டதும் உடனே தீர்வு கண்ட அவனது சமயோஜித யோசனையும் கண்டு வியந்து தான் போனார் மனிதர். 

 

திருமணத்திற்கு மகன் சம்மதம் சொல்லி விட்டதில் காந்திமதி உள்ளம் குளிர்ந்து போக, “இதோ பா, இப்பவே பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிறேன்” அவர் நெகிழ்வாக சொல்ல, “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்துக்கு நாள் குறிங்க மா” என்று உத்தரவிட்டு சந்துரு கையசைக்க, அதுவரை அவர்கள் பேசுவது ஒன்றும் விளங்காது தேமே என்று நின்றிருந்த பௌர்ணமி, சந்துருவின் கையசைப்பில் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு நடந்தாள்.

 

அந்த மாளிகையின் தென்மேற்கு மூலையில் கடைசி அறையாக தோட்டத்தை ஒட்டி அமைந்திருந்தது சந்துருவின் அறை. அறை என்பதைவிட அது அவனின் தனி உலகம். அவனுக்கான எல்லாம், அவன் விரும்பியது எல்லாமே அந்த அறையில் கிடைக்கும் படி அனைத்து வசதிகளையும் அதற்குள் அமையும்படி பார்த்து செய்திருந்தார் காந்திமதி. வீட்டில் தன் கணவனால் முடக்கப்பட்ட தன் மகனுக்கு அவன் அறைக்குள் முழு சுதந்திரத்தை பழக்கப்படுத்தி இருந்தார்.

 

அவனுக்கான கல்வி, விளையாட்டு, உலக அறிவு, இசை ஆர்வம், தனி திறமைகள் அனைத்தும் அவன் அறைக்குள் அடங்கி இருந்தன. அவனின் அனுமதியின்றி யாரும் அவனறைக்குள் நுழைய முடியாது. இதில் இப்போதெல்லாம் பௌர்ணமி மட்டுமே விதிவிலக்கு. 

 

நினைவு தெரிந்த நாளிலிருந்தே தனி அறைக்குள் அடைந்து கிடக்கும் சந்துரு, யாரையும் அவனிடம் அண்ட விட்டதில்லை. தனக்கு பணிவிடை செய்ய வரும் வேலையாட்களின் பார்வை அவனின் வளர்ச்சி குறைந்த காலில் படும்போது இவனுக்கு அத்தனை கோபம் வரும். அப்போதே கத்தி விடுவான், ”வெளியே போ…” என்று.

 

தளராத இறுக்கம் மண்டி கிடக்கும் முகம், வீல் சேருக்குள் முழுமையாக பொருந்தாமல் அமர்ந்திருக்கும் போதே ஆசகாய உயரம் காட்டும் கட்டான தேகம், கூர்தீட்டிய அழுத்தமான பார்வை, சிடுசிடுப்பு தெறித்திடும் கோப வார்த்தைகள் இதுதான் அந்த மாளிகையில் இருப்பவர்களை பொறுத்தவரை சந்துரு என்பவன். 

 

இதனாலேயே அவனிடம் நெருங்க, குடும்பத்தார் முதல் வேலையாட்கள் வரை தயங்கி விலகி கொள்வர். தன்னை கீழாக பார்க்கும் மற்றவர்கள் யாரையும் சந்துருவிற்கு பிடிப்பதில்லை. தனிமையில் மட்டுமே அவன் உலகம் இயங்கிக் கொண்டிருந்தது பௌர்ணமி வரும் வரையில்.

 

முதன் முதலில் பௌர்ணமியை பார்த்த போதும் சந்துரு பழக்கதோசத்தில் வழக்கம் போல அவளிடம் கத்தி விட்டு தான் இருந்தான். 

 

“அதை வச்சிட்டு வெளியே போ” என்று.

 

ஆனால், அவளால் தான் அவன் கத்தலை கேட்கவும் முடியவில்லை. அவன் கோப முகத்தின் காரணத்தை விளங்கி கொள்ளவும் முடியவில்லை. தேநீர் கோப்பையை அவனெதிரில் இருந்த சிறு மேசையில் வைத்தவள், அந்த அறையை கண்ணிமைகள் தட்டி வாய் பிளக்க வியந்து பார்த்து நின்றாள்.

 

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவனின் ஆளுமை தோற்றமும் இவளுக்கு அதிசயமானதாக தோன்ற அவனையும் விழிகள் விரிய பார்த்தாள்.

 

“ஏய் வெளியே போன்னு சொல்றேன் இல்ல, போ வெளியே…” அவன் அடிக்குரலில் சீறி, கதவு புறம் கைக்காட்ட, அவன் தன்னை வெளியேற சொல்வது புரிந்து, வெள்ளந்தி சிரிப்பு சிதற, வேகமாக தலையாட்டி விட்டு அங்கிருந்து சென்றவளை பார்க்க இவனுக்கு தான் வித்தியாசமாய் தெரிந்தது.

 

காந்திமதியிடம் அவளை பற்றி சந்துரு விசாரிக்க, “நம்ம எஸ்டேட்ல வேலை செஞ்ச பொன்னம்மாவோட மக பா, அவ உசுர விட்டுட்டா, இந்த புள்ளய யாரும் பொறுப்பெடுத்துக்கவும் முன்வரலையாம். பாவம் பொறப்புலயே வாய் பேச முடியாது, காதும் கேட்காது, வயசு புள்ள வேற, அதான் இங்க கூடமாட இருக்கட்டும்னு சேர்த்துக்கிட்டேன்” என்றார்.

 

அவளின் குறையை கேட்டதும் இவன் மனது பிசைய, தனது கத்தலுக்கும் வெள்ளைச் சிரிப்பை உதிர்த்து போனவளை எண்ணி இவன் உள்ளம் இளகியது.

 

“அந்த பொண்ணோட பேர் என்னம்மா?” என்று கேட்ட மகனை ஆதுரமாக பார்த்தவர், “பௌர்ணமி” என்று சொல்லி நகர்ந்தார்.

 

“பௌர்ணமி” சந்துரு ஒருமுறை அவளின் பெயரை உச்சரித்து பார்த்தான். ‘அவளின் பெயர் பௌர்ணமி என்று அவளுக்கு தெரிந்து இருக்குமா?’ விசித்திரமான கேள்வி அவனுள் எழுந்து அடங்கியது.

 

மறுமுறை பௌர்ணமி அவனுக்கு சிற்றுண்டி எடுத்து வந்து வைக்க, அவளை ஆறுதலாக பார்த்தான்.

 

பூப்போட்ட பாவாடையும் முழுக்கை மேல் சட்டையும் அணிந்து இருந்தாள் அவள். முழுநிலவு சாயல் காட்டும் வட்ட முகம், இமைகள் படபடக்கும் கோலிகுண்டு கண்கள், கற்றை கூந்தலை இரட்டை ஜடைப் பின்னலிட்டு அதன் நுனியில் ரிப்பனை பூப்போல கட்டி முன்புறம் விட்டிருந்தாள். நெற்றியில் கோபுரம் போல நீட்டி வைத்திருந்த சாந்து பொட்டு, கூர் மூக்கின் துவாரத்தில் மூக்குத்திக்கு பதிலாக வெறும் வேப்பஞ் சிறு குச்சி சொறுகி இருக்க, காதுகளோடு ஒட்டி சுருண்டிருந்த சிறிதான வளைய கம்மல்,

கழுத்தில் பாசிமணிகள் கோர்க்கப்பட்ட மாலை, நீள கைகளில் கலகலக்கும் கண்ணாடி வளையல்கள்… ‘ஆனால் அந்த வளைகள் எழுப்பும் சத்தத்தை இவளால் தான் கேட்கவே முடியாது’ என்ற எண்ணம் வந்து போனது அவனுக்குள். 

 

மாநிறத்து மேனியளாய் பார்வைக்கு அழகோவியமாக தெரியும் அவளின் குறை இவனை அசைத்து தான் போனது. தன் வளர்ச்சியற்ற காலை ஒருமுறை அசூசையாக பார்த்து பெருமூச்செறிந்தான்.

 

அவளது இடது கனுக்காலில் கருப்புநிற கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்க, அது இவன் பார்வையில் பட்டது. சந்துரு நெற்றி சுருக்கி, “பௌர்ணமி, எதுக்கு அந்த கருப்பு‌ கயிறு?” என்று அவள் காலை சுட்டி கையை எதற்கு என்பது போல் அசைத்து கேட்டான்.

 

பௌர்ணமிக்கு அவன் கேட்டது விளங்கி இருக்கும் போல, குனிந்து காலில் இருந்த கருப்பு கயிற்றை தொட்டு, கண் முழியை உருட்டி கைகளை மூடி தன் முகத்தை சுற்றி விரித்து, “ஆங் அஆக் ம்ம்” என்று ஒலி எழுப்பி பதில் தந்து முடித்தாள்.

 

அவளின் செய்கையை ஊன்றி கவனித்தவன், “ஓ திருஷ்டி கயிறா இது” என்று தனக்கு புரிந்ததை சொல்லி, அவளுக்கு சைகையில் சொல்ல யத்தனித்தவன், திருஷ்டிக்கு எப்படி சைகை செய்வது என்பது புரியாது தாமதித்து, அவள் செய்தது போலவே‌ கண்களை உருட்டி கைகளை சுற்றி விரித்து காட்ட, அவள் ஆம் என்பதாய் மேலும் கீழும் தலையாட்டி பற்கள் பளிச்சிட சத்தமின்றி குலுங்கிச் சிரித்தாள்.

 

அவளின் வெள்ளை சிரிப்பில் இவன் மனம் மீண்டும் இளகி போனது. அவன் கேட்க, அவள் சொல்ல என அவர்கள் இருவருக்குமேயான தனிமொழி தன்னால் உருவாகிப் போனது. 

 

அறையின் தனிமையில் அடைப்பட்டு கிடந்தவனுக்கு பட்டாம்பூச்சி பெண்ணாய் அவள் துணை வந்தாள். 

 

பேச ஆயிரம் இருந்தும் தன்மொழி புரியாத ஊமை உலகத்தில் ஏங்கி கிடந்தவளுக்கு அதிசய துணையாய் அவன் சேர்ந்தான்.

 

அவர்கள் இருவருக்குமான தனி உலகம்  அழகாய் உருவாகியது. யாருக்கும் தெரியாமல். யாரும் அறியாமல்.

 

***

 

இரவுநேர தொடர் படபிடிப்பில் தடங்கள் ஏற்பட்டது. 

 

இன்றும் பொருட்கள் விழுந்து உருளும் அதே சத்தம் கேட்டது!

 

அனைவரின் முகத்திலும் அப்பட்டமான பீதி தெரிய, மித்ராவதி படப்பிடிப்பை அத்தோடு முடித்துக் கொண்டார்.

 

நடிகர்கள் தங்கள் அறைக்குள் சென்று முடங்க, மற்ற தொழில் கலைஞர்கள் அப்பாடா என, தங்கள் இறுதி வேலைகளை முடித்து உறங்க ஆயத்தமாயினர்.

 

‘அதெப்படி தினமும் இரவு நேரத்தில மட்டும் இப்படி சத்தம் வரும்? யாராவது வேணும்னே செய்றாங்களா?’ மித்ராவதிக்கு சந்தேகம் தோன்றியது.

 

எது எப்படி இருந்தாலும் இதுபோல தினமும் மர்மமான சத்தங்கள் வருவது, அதனால், தங்கள் படப்பிடிப்பிற்கு இடையூறு ஏற்படுவது அவருக்கு ஒப்புதலாக இல்லை.

 

யோசனையில் இருந்த மித்ராவதி, “விக்கி என் கூட வா” அவனை அழைத்து கொண்டு பங்களாவின் பின்புறம் நோக்கி நடந்தார்.

 

மறுபடி அதேபோல பொருட்கள் விழுந்து உடையும் சத்தம்… இப்போது அருகிலேயே கேட்டது! 

 

சத்தம் கேட்ட வழியில் மின் விளக்குகளை ஒளிரவிட்டு இருவரும் கவனமாக நடந்தனர்.

 

அந்த பங்களாவின் பின்புறத்தின் ஓரமான தரைப் பகுதியில் சற்று சாய்வாக கீழிறங்கும் சில படிகள் தெரிந்தன. பயன்பாடற்ற பொருட்களை போட்டு வைக்கும் அறை அதன் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கே தான் முன்பு பௌர்ணமி உடலும் தீக்கிரையாகி இருந்தது!

 

மித்ராவும் விக்கியும் தைரியமாகவே படிகளில் இறங்கி வந்தனர். அகலமான இருபக்க இரும்பு கதவு வெளிபுறம் பூட்டி இருந்தது. இவர்கள் கதவை நெருங்க, உள்ளிருந்து கதவு தடதடவென்று அடித்து கொண்டது!

 

இருவரின் முகங்களும் பயத்தில் வெளிர பின்வாங்கி நின்றனர்.

 

சில திடுக் திடுக் நிமிடங்களுக்கு பிறகு, முன்னைவிட வேகமாக மீண்டும் அந்த கதவு உட்புறமிருந்து தடதடவென்று அடித்துக் கொள்ள, இருவரும் பயந்து நடுங்கி ஒரே மூச்சில் அங்கிருந்து ஓடிவந்து அறைக்குள் புகுந்துக் கொண்டனர்.

 

மித்ராவதி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, தன் நெஞ்சை நீவி விட்டு கொண்டார்.

 

விக்னேஷ் வியர்த்து விதிர்விதிர்த்து, தான் கண்டதை நம்பமுடியாமல் நின்றிருந்தான்.

 

தண்ணீர் பாத்தலை எடுத்து தொண்டையில் கவிழ்த்து கொண்டு, தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவர், விக்கியின் தோளைத் தட்டி அவனிடமும் தண்ணீர் பாத்தலை கொடுத்து விட்டு கட்டிலில் ஆயாசமாக அமர்ந்து விட்டார்.

 

தண்ணீர் பருகிய பின் விக்கிக்கும் சற்று ஆசுவாசமானது. “நடந்தது ஒருவேளை… நம்ம பிரம்மையா கூட இருக்கலாம் மேடம்!” என்றான் இன்னும் நம்பாத குரலில்.

 

மேலும் கீழும் தலையசைத்தவர், “அது நம்ம பிரம்மையாவே இருக்கட்டும் விக்கி” என்றார் சூசகமாக.

 

அதன் பிறகு இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. நடந்ததை உள்வாங்கி கொள்ள முயன்றிருந்தனர்.

 

“அந்த கதவு பக்கம் யாரையும் போக கூடாதுன்னு சொல்லிடு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஷுட்டிங் முடிச்சிட்டு நாம கிளம்பிடலாம்” மித்ராவதி சற்று தெளிந்து சொல்ல, விக்னேஷ் தலையாட்டிக் கொண்டான். 

 

***

அவள் வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!