ஆட்டம்-8(1)

ஆட்டம்-8(1)

ஆட்டம்-8(1)

சுற்றியும் இரு ஏக்கருக்கு பச்சை விரிப்பாக விழிகளை கவர்ந்திழுக்க, அதற்கு நடுவே இன்றும் கலை குறையாது, தூசி, குப்பை இல்லாது, அழகாக பரிமாறிக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது அந்தக் கோயில்.

ஆயிரம் வருடங்களுக்கு முன் சிம்மவர்ம பூபதியின் முன்னோர்களால் கட்டமைக்கப்பட்ட கோயிலுக்கு மிகப்பெரிய வரலாறே இருந்தது. தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே இக்கோயிலை அவர்கள் அழகாக வடிவமைத்து செதுக்கியிருக்க, இன்றும் புது வர்ணம் கூட பூசாது தஞ்சை பெரிய கோயிலின் வண்ணத்தைப் போன்று, எப்படி கோயிலை கட்டியிருந்தார்களோ அப்படியே பராமரிக்கப்பட்டு வந்தது.

ஒரு புறம் மலைகளும், மறுபுறம் மலைகளுக்குச் செல்லும் காடுகளும், மலைகளில் வரிவரியாக பொங்கி வழிந்த அருவிகளும், மற்ற இருபுறமும் தோப்பும், வயலும் என அதற்கு இடையில் பாதையமைத்து, செல்லும் வழியை அமைத்திருந்தினர். அனைத்தும் அவர்களுக்கு சொந்தமானது.

அந்த ஒற்றை கார் மட்டும் செல்லும் பாதைகளுக்கு நடுவே அபிமன்யு காரை செலுத்திக் கொண்டிருக்க, உத்ராவோ தன் பக்கம் இருக்கும் தென்னந்தோப்புகளை விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். மறந்தும் அவள் மறுபுறம் திரும்பவில்லை. ரசிப்பதற்கு கூட.

விக்ரமும் பின்னால் இருந்தபடி அபிமன்யுவை கவனித்துக் கொண்டு வர, சிறிது நேரத்தில் விக்ரமின் பார்வையை உணர்ந்த அபிமன்யு, “நறுமுகை, வாட் அபௌட் ராம்? (What about ram?) ” என்று வினவ, அதுவரை அமைதியாக அமர்ந்துகொண்டு வந்தவள் அந்த பேரை கேட்டவுடன் குஷியாக,

“மாமா!! அவன் ரொம்ப ஸ்வீட் தெரியுமா?” குரலில் தித்திப்பு திகட்டாது கூறியவள்,

“அன்னிக்கு நான் வைட் மேக்ஸில போயிருந்தேன் இல்ல ஸ்கூலுக்கு.. என்னோட பின்னாடியே வந்துட்டு இருந்தான் தெரியுமா.. என்னோட சீக்ஸை (கன்னம்) பிடிச்சு அழகா இருக்க நுறுன்னு சொன்னான்” அபிமன்யுவின் நகர்வு அறியாதவள் உளறிக்கொண்டே போக, விக்ரமின் ஆக்ரோஷம் அணு அணுவாய் நொடிக்கு நொடி கொந்தளித்து எகிறிக் கொண்டிருந்தது.

“உனக்கு அவனை ரொம்ப பிடிக்குமா?” அபிமன்யு ஸ்டீயரிங்கில் விரல்களால் தாளமிட்டபடியே கேட்க,

“ஐ லவ் ஹிம் மாமா” என்றாள் தன் ஹனி ப்ரவுன் கருவிழிகள் மின்னி ஜொலிக்க.

“அவனை ஒருநாள் நானும் ஸ்கூல் வந்து பாக்கறேன்” அபிமன்யு இலகுவாக கூற,

“ஷ்யூர் மாமா. அவன்கிட்ட உங்கள பத்தி சொல்லி வச்சிருக்கேன். உங்களை பாக்க ரொம்ப ஆர்வமா இருக்கானாம்” நறுமுகை கூற, இங்கு விக்ரமோ, அபிமன்யுவையும், நறுமுகையையும் பஸ்பமாக்கும் அளவிற்கு, அவனின் நரம்புகள் உள்ளுக்குள் ருத்ரதாண்டத்தில் புடைத்துக் கொண்டிருக்க, கோபத்தைக் கட்டுப்படுத்த துடித்துக் கொண்டிருந்தான்.

அவனின் வசீகரமான அனைவரையும் ஈர்க்கும் விழிகள், பெண்ணவளை அடக்க முடியாத மூர்க்கத்துடனும், கட்டுப்படுத்த இயலாது, தன்னை சுற்றி இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஆங்காரம் தெறிக்க பார்க்க, அவளோ அதையறியாது, அவனின் மனதில் தன் மேலிருக்கும் கோபம் எகிறிக் கொண்டிருப்பதை அறியாது, பேசிக்கொண்டே போக, அனைத்தையும் அடக்கியவன், இடது கை பெருவிரலை நாடியில் யோசிப்பது போல வைத்துவிட்டு அமைதியாய் அமர்ந்துவிட்டான்.

முன்னே இருந்த உத்ராவுக்கு எல்லாமே புரிந்தது. அவள் வளரும் கலாச்சாரம் அப்படியல்லவா. அதனால் அவளுக்கு எல்லாம் தெளிவாக புரிந்தது.

குலதெய்வக் கோயில் வந்தபின்பு நால்வரும் இறங்கவும், நறுமுகை அபிமன்யுவோடு அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டு நகர்ந்து போக, இருவரின் முதுகையும் வெறித்துக் கொண்டிருந்தவனின், கைகள் சில்லிட, அவனின் பெருங்கையுடன் தனது சிறிய கரத்தை கோர்த்தபடி நின்றிருந்த உத்ரா அவனைப் பார்த்து கன்னம் மிளிர புன்னகைத்தாள்.

அவளின் கரத்தை மென்மையாய் பிடித்துக் கொண்டவன் அவளுடன் கோயிலை நோக்கி நகர, முன்னே சென்று கொண்டிருந்த நறுமுகையையும், அபிமன்யுவையுமே தொடர்ந்து கொண்டிருந்தது விக்ரமின் கழுகை ஒத்த ஊசி முனை கூர் விழிகள்.

வசீகரத்தை மட்டுமே வீசிடும் விழிகள், ஆங்காரத்தில் அனைவரையும் உருக்கிவிடும் கொதிக்கும் அனலை கக்கிக் கொண்டிருந்தது.

இருவரின் மீது சந்தேகம் என்றெல்லாம் அவனுக்கு இல்லை. ஆனால், இருவரின் ஒற்றுமை அவனுக்கு ஆக்ரோஷத்தை விளைவித்தது. அதுவும் சிறிது நேரத்திற்கு முன், அவர்கள் பேசியது அவனுக்கு இன்னுமும் மொத்த உடலிலும் ஆங்காரத்தை விரவியிருக்க, அவனின் சிவந்த நிறமான வதனம், மாலை நேரத்து செவ்வானமாய் கோபத்தில் இறுகிச் செக்கச் சிவந்தது.

அவனின் ஆக்ரோஷத்தை அனைத்தும் வடிகட்டும் விதமாக, “டூ யூ லவ் ஹெர் (Do you love her?)” அவனின் கரத்தைப் பிடித்து வந்து கொண்டிருந்த உத்ரா, தன் மாமனிடம், மனதில் பட்டதை கேட்டேவிட, அவளின் கேள்வியில் அவனின் மொத்த கவனமும் சிதறிப் போய்விட, அவளைப் பார்த்தவன் நடப்பதை நிறுத்தாமல், அவளிடமே எதிர் கேள்வியை வீசினான்.

“என்னை பாத்தா அவளை லவ் பண்ற மாதிரி தெரியுதா? அவ ரொம்ப சின்ன பொண்ணு” அவனின் அதரங்கள் அவ்வாறு உரைத்தாலும், அவன் மனம் கூறுவதை அவனாலேயே ஏற்க முடியவில்லை. அவனின் எதற்கும் படியாத ஈகோ அவனை விடவும் இல்லை.

“அப்புறம் ஏன் அவங்க யாரையோ பத்தி பேசும்போது உங்க பேஸ் (face) கோபமா மாறுச்சு?” அவள் தன் சந்தேகத்தைக் கேட்க,

“அப்படியா?” அவன் நின்று யோசிப்பதுபோல பாவனை செய்ய, அவனுடன் இருந்த தன் கரத்தைப் பிரித்தவள்,

“ஆஹா.. நீங்க பொய் சொல்றீங்க மாமா.. இருங்க அந்த அக்கா கிட்டையே சொல்றேன்” என்றவள் முன்னே நறுமுகையை நோக்கி ஓட,

“ஹேஏஏஏ!! நில்லு உத்ரா” அவன் அவளை துரத்திக் கொண்டு பின்னேயே ஓட, விக்ரமை பார்த்துக் கொண்டே ஓடியவள், தடுமாறி விழப்போக, அதற்குள் அவளின் அருகே வந்த விக்ரம் அவளை பிடித்துவிட,

“அதெல்லாம் அவகிட்ட சொல்லாத..” கூற,

“ஏன்??”

“அவ திமிரு பிடிச்சவ. உனக்கு தெரியாது” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

உத்ராவுக்கோ ஓடிய காரணத்தினால், மூச்சு வாங்க, சிரித்தபடியே விக்ரமிடம், “ஆனா, நீங்கதான் அந்த அக்காவை முறைச்சு முறைச்சு பாக்கறீங்க” என்றாள். மனதில் தோன்றியதை பேசும் பழக்கம் அவளுக்கு.

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா உத்ரா? அந்த ராம் யாருன்னு கேட்டு சொல்லு” அவன் வினவ,

“உங்களுக்கு தான் அவங்க மேல லவ் இல்லியேஏஏஏஏஏஏ?” அவள் இழுத்து யோசிப்பது போல கேலி செய்ய,

“இல்லதான். ஆனா, யாரு அந்த அப்பாவினு தெரியனும்” என்றான் தனது கெத்தை சின்னவளிடம் கூட விடாது.

” ஓஹோ ஓகே மாமா” என்று அவள் விழிகள் சிரிப்புடனே கூற, “சரி இனிமே நாம பெஸ்ட் ப்ரண்ட்ஸ்?” அவன் தன் கரத்தை நீட்ட, அவனின் கரத்தை குறும்புடன் பார்த்தவள்,

“டபுள் ட்ரிபிள் ஓகே” தலையை அழகாய் ஆட்டி, அவனுடன் தன் கரத்தை குலுக்கியவளுக்குத் தெரியவில்லை, விக்ரமின் மேலுள்ள பாசத்தால் அவனுக்கு உதவச் செய்து எதிர்காலத்தில், தான் வேங்கையின் நெஞ்சம் அதிரும் உறுமலிலும், இருள் கானகத்திலும் சிக்கி யார் உதவியும் இன்றி, மனம் வெளிறி, தண்டுவடத்தில் பயம் பாய்ந்து சில்லிட்டுத் தவியாய்த் தவிக்கப் போகிறோம் என்று.

சிறியவளின் கரத்தைப் பற்றியவனும் அறியவில்லை, தன் அடி மனதில் உள்ள காதலால், மென்மையே தோற்கும் வண்ணம் இருந்த அவனவளின் மனம் இறுகி, தன்னவள் மனம் அடிபட்டு, தன்னால் எதிர்காலத்தில், மனம் என்னும் கூக்குரலால், தனக்குள் வேதனை என்னும் கடலில் மூழ்கி சிக்கி, மடிந்து உருகி மருகப் போகிறாள் என்று.

இமையரசி பொங்கலை வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்க, அழகியும், கோதையும் அவருக்கு உதவி செய்து கொண்டிருக்க, நீராஜா தந்தையுடன் அமர்ந்திருந்தார். திலோத்தமையும், மித்ராவும் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருக்க, விக்ரமுடன் அமர்ந்திருந்த உத்ரா அவ்வப்போது நறுமுகையை பார்ப்பதும், விக்ரமை பின்பு கேலியாக பார்ப்பதுமாக இருக்க, அவ்வப்போது அவனிடம் ஏதோ குசுகுசுவென்று பேச, இருவரையும் கவனித்த இமையரசிக்கு இருவரின் ஜோடிப் பொருத்தம் சரியாக இருப்பதைப் போல தோன்றியது.

தனக்குள் நினைத்ததை வெளியே சொல்லாதவர், தனது ஆசையை வெளியிட நினைக்கவில்லை. ஏற்கனவே பட்டிருந்தார் அல்லவா.

‘நீதான் நல்ல வழி காட்டணும் அம்மா’ என்று தங்கள் குலதெய்வமான பத்ரகாளி அம்மனை வேண்டினார்.

உத்ரா சரியான சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, “டேய் தங்கம், தாத்தா கார்ல வாழை இலையெல்லாம் இருக்கு எடுத்திட்டு வந்திடு” நறுமுகையிடம் இமையரசி கூற, உடனே அவள் எழுந்து செல்ல, விக்ரமை பார்த்து இதழுக்குள் விழி சிமிட்டி சிரித்த உத்ரா, நறுமுகை சென்று இரு நிமிடங்களுக்கு பிறகு, பின்னேயே சென்றாள்.

காரின் டிக்கியை திறந்த நறுமுகை, இலையை எடுத்துக் கொண்டிருக்க, “ஹாய்” என்ற உத்ராவின் குரலில் நிமிர்ந்தாள்.

“ஹாய்” என்று அவளுக்கு பதிலளித்தவள், புன்னகைக்க,

“ராம், உங்க பாய் ப்ரண்டா?” அவள் கேட்டுவிட, இலையை எடுத்த நறுமுகை, கேள்வியாய் உத்ராவை புருவங்கள் நெறிய பார்க்க, இவளோ பெரிய மனுஷியாய், “பயபடாதீங்க. நான் யார்கிட்டையும் சொல்லமாட்டேன்” என்றாள்.

சிறிது நொடிகள் அவளைப் பார்த்தபடியே நின்ற நறுமுகை, உத்ராவின் பின்னே பார்க்க, அவளின் பார்வை சென்ற இடத்தைக் கண்டு விக்ரம் வந்துவிட்டானோ என்று நினைத்து திரும்பிய உத்ராவுக்கு, மனம் அரண்டு, உடல் பயந்து, மொத்தமாய் கிலி பிடித்து வெடவெடத்துப் போய் உதறலுடன் நின்றவள், தலையை படக்கென்று தாழ்த்திக் கொண்டாள்.

“நறுமுகை உன்னை பாட்டி தேடுறாங்க” அபிமன்யுவின் கம்பீரமான கணீர்க் குரலில், தலையைத் தாழ்த்திக் கொண்டிருந்தவளுக்கு உடல் தூக்கிவாரிப் போட, நறுமுகையோ,

“மாமா..” என்று, ‘பாவம் அவள்’ என்பது போல உத்ராவை பார்த்து தயங்கினாள்.

“ஐ செட் கோ (I said go)” அபிமன்யு கர்ஜித்த விதத்தில், நறுமுகை அதற்கு மேல் அங்கு நிற்காமல் ஓடிவிட, உத்ராவோ தலையை நிமிர்த்தவே இல்லை.

அவளின் கரங்கள் இரண்டும் எதிரில் இருப்பவனைக் கண்டதில் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்க, செவ்விதழ்கள் பயத்தில் துடித்துக் கொண்டிருக்க, “மைன்ட் யோர் ஓன் பிசினஸ் (Mind your own business)” ஆடவண் ஒவ்வொரு வார்த்தைகளையும் தன் இதழ்களுக்கு இடையே வெறுப்புடன் கடித்துத் துப்ப, சிறியவளுக்கோ ஒவ்வொரு வார்த்தைக்கும் உடல் திடுக்கிட்டுப் போட, மூச்சே நின்றுவிடும் என்னும் அளவுக்கு ஆனது அவளுக்கு.

அவன் போனதுகூட அவளுக்கு சில நிமிடங்கள் கழித்தே உறைய, முகம் முழுதும் வியர்க்க, கோயிலை நோக்கிச் சென்றவள், விக்ரமின் அருகில் அமர, அவளைப் பார்த்தவன், அவளின் முகத்தில் இருந்த வியர்வைத் துளிகளை கண்டவுடனே, “ஹே என்னாச்சு?” வினவ, அவளின் பார்வை தங்களுக்கு நேரெதிர் அமர்ந்திருந்த நுறுமுகையுடன் அமர்ந்திருந்த அபிமன்யுவின் மேல் பாய, மங்கையவளின் பார்வையை உணர்ந்தவனின் விழிகள் மட்டும், அவளை கூராய் துளைக்க, படக்கென்று பார்வையை திருப்பியவள், “ஒண்ணுமில்ல மாமா” என்றவளுங்கு நா உலர்ந்து போயிருந்தது.

அவளின் பார்வை போன திசையை பார்க்காமலேயே என்னவென்று யூகித்த விக்ரம், தங்கையை அழைத்து அவளுக்கு தண்ணீர் பாட்டிலை எடுத்து வரச் செய்ய, தண்ணீரை அருந்தியவளிடம், “நீ போய் விளையாடு” என்றான். அவளும் எதிரில் இருப்பவனை பார்க்க வேண்டாம் என்று எழுந்து தங்கைகளுடன் ஓடிவிட்டாள்.

Leave a Reply

error: Content is protected !!