ஆலாபனை-16

ஆலாபனை-16

அத்தியாயம்-16[நிழல்]

 

 

“A child who is not embraced by the village will burn it down to feel it’s warmth” – African proverb

 

 

காதல் என்பது காலைச் சுற்றும் பாம்பைப் போல. முதலில் மெல்ல மெல்லச் சுற்றுவது பிறகு மெதுவாய் ஊர்ந்து கழுத்திற்கு மேலேறி, நாம் பார்த்துக்கொண்டே இருக்கையில் நம்மை விழுங்கிவிடும். அப்படி என்னை விழுங்கியது தான் அவிரன் எனும் அரசன். நான் விழுங்கப்படத் தயாராய் இருந்தேன்.

 

நான் யாரா? நான்தான் மிளிராவின் நிழல். அவளது இன்ப துன்ப கணக்குகளைப் பாவ புண்ணிய காரியங்களை ஆழ் மன வக்கிரங்களை அதைத் தாண்டிய ஆசைகளை என அத்தனையும் அமைதியாய் பார்த்து நிற்கும் ஒரு சராசரி நிழல் நான்.

 

யாரும் பார்த்திரவில்லை என்றெண்ணத்தில் மனிதர்கள் செய்யும் அத்தனையும் அமைதியாய் பார்த்தபடி பின்தொடரும் மௌன நிழல். வெயிலோ மழையோ, பகலோ இரவோ உன் அத்தனையிலும் நான் இருக்கிறேன். எனது உருவம் மட்டும் உன் வெளிச்சத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே கிடக்கிறதே தவிர நான் என்றுமே உன்னைவிட்டு மறைவதில்லை. நீயே மறைந்தாலும் உன்னை எனக்குள் அமிழ்த்திக் கொள்ளுவேன். இறுதி என்றொன்றை நான் நம்புவதில்லை. அதை நீ நம்பினால் அந்த இறுதிவரையும் நான் உன்னுடன்தான் இருக்கிறேன். அதற்குப் பின்னும் நீ என்னுடன் தான் இருக்கிறாய். இறுதியற்ற இந்த பிரபஞ்ச வெளியில் என்னுள்ளிருந்து உன் இறந்தகாலத்தை பார்த்தபடி. உன் துன்பங்கள் கூடக் கூட நானும் எடை கூடுவேன். உன் இன்பங்கள் கூடினால் சுருங்குவேன். எடை கூடிய என் காலை நீ அனாதரவாய் கட்டிக்கொள்கையில், உன்னை என்னுடன் அமிழ்த்துவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. என்னுள் உன் துன்பங்கள் உன்னை ஊடுறுவதில்லை. உன் இன்பங்கள் உன் உணர்வுகளைத் தீண்டுவதில்லை. உன் உறவுகள் உன் கண்களுக்குத் தெரிவதில்லை. உன் உலகம் உன் மூளையை எட்டுவதில்லை. ஆனால் அங்கு நீ வலியற்று இருப்பாய்! வலி, சுகம், துக்கம் என எதுவுமற்ற நிலையில் இருப்பாய். வலி இல்லாத வாழ்வுதானே வேண்டும்? வந்துவிடு என்று நான் அழைக்கப்போவதில்லை. என்றுமே நான் அழைத்ததில்லை. ஆனால் நீயே வருவாய் என்னிடம். உலகமே உன்னிடம் முதுகைக் காட்டுகையில் என் நெஞ்சில் புகுவாய். அப்படிதான் மிளிராவும் புகுந்தாள்.

 

உலகத்தையே கண்டிராத பருவத்தில் அவளது உலகமே தலைகீழாய் மாறியது. அவள் எதற்குமே அசைபவள் அல்ல. அவள் யாரைப்போலவும் அல்ல. அவள் அவளைப்போல மட்டுமே இருந்தாள். எதற்குமே அலட்டிக்கொள்ளாதவள் தான் உயிரென்று வந்ததும் அம்மாவினதை தேர்ந்தெடுத்தாள். ஏதோ ஒரு மூலையில் அவளை அம்மா பாதித்திருந்தாள். அவளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆழமாய் படிந்து கறையானது. அதற்காகக் கொலை தான் செய்யவேண்டும் என்று வந்த பொழுதுகூட அவள் அசரவில்லை. அவளுக்கு அது உணரக்கூட இல்லை. கண்கள் முழுதும் மினர்வாவின் உயிர்தான் தெரிந்துகொண்டிருந்தது.  அவளுக்கு வேண்டிய உயிரைக் காக்க எத்தனை உயிரையும் எடுப்பவள் மிளிரா.

 

ஆனால் அத்தனை உயிரை எடுத்தும் அவ்வுயிரை காக்க முடியாது போகையில்தான் அவளது ஆகாயம் இரண்டாய் பிளந்தது. அவள் அம்மாவை நேசித்தாள். ஆனால் தான் நேசித்த உயிரைக் காக்க முடியாத கையாலாகாத உணர்வு அவளைத் தினமும் கொன்றது. அவ்வுயிரின் உருவிலே வந்து வந்து வதைத்தது அவளை. எப்பக்கம் திரும்பினாலும் அம்மா நின்றாள். கண்களை மூடினாலும் அங்கும் நின்றாள். மிளிராவால் எதுவுமே செய்ய இயலவில்லை. அவளால் அம்மாவையும் காப்பாற்ற முடியவில்லை. இப்பொழுது அவளிடம் இருந்து அவளையும் காப்பாற்ற இயலவில்லை. விதம் விதமாய் வரும் விபரீத கனவுகளுக்கு பின்பும் அவளே இருக்க மிளிராவின் வாழ்க்கை முழுதும் அவளுக்குள் ஓடுவதிலேயே ஒழிந்தது. அப்படி ஓடிக் களைத்தவளைக் கதிராய் அணைத்தவன் தான் அவிரன் எனும் பேரமைதி.

 

முதன் முதலாய் அம்மா விலகினாள். அதுவும் அவிரனை பார்த்து. அத்தனையும் விலகியது. ஆகாயம் ஒட்டத் தொடங்கியது. மிளிரா மீண்டும் ஓடினாள். இம்முறை அவிரனை பார்த்து.

 

அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தவளுக்கு அவனும் தன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டுகொள்ள வெகு காலம் பிடிக்கவில்லை. அவனை ரசித்தாள் அவள். அவனது ஒவ்வொரு அணுவையும் ரசித்தாள். மிளிரா எனும் வறண்ட நிலத்தில் துளிர்த்த முதல் தளிர் அவிரன். தளிர் வளர்ந்து செடியானது. காதலுக்கும் அப்ஸஷனுக்கும் உள்ள நூலளவு வித்தியாசத்தை உணர்ந்திராதவள் அது விஷச்செடியா மலர்ச் செடியா என்பதைக்கூட ஆராய நினையவில்லை. அவளுக்கு அதன் குளுமையே போதுமானதாய் இருந்தது. அக்குளுமையைச் சீண்டுவதுபோல் எதுவேணும் வந்தால் அதை வெட்டி வீசவும் அவள் தயங்கவில்லை. அவிரனது சிறு சிறு ஆசைகளும் நிறைவேறிவிட வேண்டும் என்று துடித்தவளால் அவனை யாரும் தீண்டினால் பார்த்துக்கொண்டு இருக்க இயலவில்லை.

 

அவிரனே அறியாத வகையில் அவனைக் கேடயமாய் இருந்து காத்தாள். பள்ளி, கல்லூரி, அவனது பகுதி நேர ஃபூடீஸ், வேலை என அனைத்திலும். அதையும் தாண்டி அவனை நோகடித்தவர்களை நோகடிப்பதற்கு அவளிடம் துளி தயக்கம் கூட எழுந்ததில்லை. அவிரனை காக்கவெனவே படைக்கப்பட்டவளைப்போல நின்றிருந்தாள் மிளிரா. அவளது கோட்பாடுகள் எல்லாம் வெகு எளிதாய் இருந்தது. அவிரனுக்கு ஒன்றென்றால் எதையும் செய்வாள் மிளிரா. அவ்வளவுதான்.

 

அப்படியொரு சமயத்தில் தான் அவளது கனவுகளின் தடம் மாறத்தொடங்கியது. அத்தனை காலம் கோரமாய் வந்துகொண்டிருந்த கனவுகளுடன் விசித்திரமாய் சில கனவுகள் வந்தன. அதில் அவளும் அம்மாவும் அப்பாவும் அன்பாய் இருந்தனர். குடும்பமாய் இருந்தனர். கோரக் கனவுகளை ஏற்றுக்கொண்டவளால் இதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இவைதான் அவளை இன்னுமின்னும் துரத்தியது. ஒரு புறம் அவிரன். வாழும் ஆசை. மறுபுறம் அவளது நிதர்சனம் என இரண்டு வேறு உலகத்தின் நடுவில் சிக்கிக்கொண்டிருந்தாள் மிளிரா.

 

அவிரனிடம் இருந்த தயக்கத்தை அறிந்திருந்தவள் அவளது நிதர்சனத்தை அவனுக்குச் சாதகமாக்கினாள். நிழலில் தவித்தவள் நிஜத்திலும் அதற்கு உருவங்கள் கொடுத்தாள். அவள் நினைத்தது போலவே அவிரனும் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான். வாய்ப்பை பற்றிக்கொண்டான். நீரில் விழுந்தவளுக்காய் முதன் முறையாய் நிழலில் இருந்தவன் வெளிச்சத்திற்கு வந்தான், அவளைக் காப்பாற்ற! சுவாசப் பை முழுதும் குளத்து நீர் நிறைந்த போதிலும் மிளிராவின் ஆழ்மனம் அமைதி கொண்டது. அவளது அவிரன் அவளிடம் வந்துவிட்டான்! ஆனால் அவனுடன் சேர்ந்து ஆதியும் வந்தான்! அவனுடன் வந்துவிடும்படி சொன்னான். அடிக்கடி வந்தான். அவள் அவனைப்போலவே இருக்கிறாள் என்று பெருமை அடித்துக்கொண்டான். மிளிராவின் முஷ்டி இறுகியது. அவள் என்றுமே ஆதி ஆக மாட்டாள்! அவள் என்றுமே அவிரனை காயப்படுத்த மாட்டாள்! கனவிலும் கூட அவன் மேல் சிறு கீறல் விழாமல் பார்த்துக்கொள்ளத் துடிக்கும் அவளும் ஆதியும் எப்படி ஒன்றாக முடியும்? அவன் கெக்கலித்தான். அப்படிதான் என்பதைப் போல எதுவும் சொல்லாமல் மறைந்துவிடுவான். இல்லை மிளிரா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவிரனிடம் சென்றுவிட வேண்டும்.

 

மிளிராவே எதிர்பாராத பல விடயங்களை அவிரன் செய்தான். அவளைக் காக்கவென.

 

அவிரன் எனும் காற்றின் போக்கிற்கு அசையும் படகானாள் மிளிரா. சிறு பிள்ளை விளையாட்டில் பெரியவர்கள் மாணவர்கள் ஆவதை போல துளி தயக்கம் இன்றி அவள் சூழ்நிலை கைதியானாள். அவிரன் அவளைக் காப்பாற்றினான். ஆதி வரவில்லை. ஆனால் அம்மா வந்தாள். அவிரனை பார்த்து மறுப்பாய் தலையசைத்தாள். எதையோ வேண்டாம் எனக் கதறினாள். மிளிராவிற்கு புரியவில்லை. ஆனால் அது புரிந்த போதோ எல்லாம் கையை மீறிவிட்டிருந்தது.

 

மிளிராவின் வாழ்க்கை முடிவில்லா வளையமாய் மறுபடியும் அதே இடத்திற்கு வந்து நின்றது. ஆனால் இம்முறை அவளுக்கென இருந்த ஒரு காரணமும் இல்லாமல் போனது. காதல் தளிராய் வந்த அவிரன் அடர் வனமாகி அவளை அவனுள் அடக்கிக்கொண்டிருந்தான். மிளிரா அதில் இருந்து தப்ப என்றுமே நினைத்ததில்லை. காட்டுத்தீ பரவிய பொழுதும் கண்களை மூடி அவிரனை கட்டிக்கொண்டாள். அவளது ஆகாயம் காணாமல் போனது. அவிரன் அவள் காதில் சொன்னான். அவளை மீண்டும் சந்திப்பதாக. இருவரின் சுண்டு விரலிலும் முடியப்பட்டிருந்த சிவப்பு நூலின் தொடர்பு அறுந்தது. ஆதியில் தொடங்கியவை அந்தனில் முடிந்தன. மிளிரா மீண்டும் அவள் அவிரனை சந்திப்பாள்..

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!