என் முன்னாள் காதலி 10

என் முன்னாள் காதலி 10

என் முன்னாள் காதலி 10

 

கீழே விழுந்து கிடந்தவளைப் பார்த்து, அந்த நொடியில் மிரண்டு தான் போனான் பவன்யாஷ். அவள் மனதை காயப்படுத்தவென்று வரைமுறையற்று பேசியவனுக்கு, அவள் உடல் காயம்பட்டு கிடப்பதைப் பார்க்க தாளவில்லை.

 

தடதடவென படிகளில் இறங்கி வந்து, கடைசி படியில் தலைகீழாக கிடந்தவளை தூக்க முயல, அவள் வலியில் முனகினாள். பாதி மூடி இருந்த அவள் விழிகளில் கண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அவள் நிலை அவனுக்கு பயத்தைக் கொடுத்தது. துவண்டிருந்த மெல்லியலாளை ஏந்தியவனுக்கு கைகள் நடுக்கம் கொண்டன. 

 

அவளை தூக்கி வந்து காருக்குள் கிடத்தியவன், திருவை அழைத்து குறிப்பிட்ட மருத்துவமனை வரும்படி உத்தரவிட்டு, இவனும் வேகமாக காரை செலுத்தினான். 

 

ஹாஸ்பிடல் முன்பு கார் நிற்கவுமே, அங்கே திருக்குமரன் உடன் காத்திருந்த செவிலியர்கள் அவளை தூக்கி ஸ்டச்சரில் கிடத்தி சிகிச்சைக்கு உள்ளே அழைத்துச் சென்றனர். பவன்யாஷ் காருக்குள் அமைதியாக அமர்ந்திருந்தான். பொதுவில் அவளுக்காக அவன் எதுவும் செய்ய முடியாது. அப்படி அவன் இங்கு தலை காட்டினால் கூட, அது பலவகையில் வேறுமாதிரி பரவிவிடும். 

 

மேலும் அவன் செய்யக் கூடியதும் இங்கு எதுவுமில்லை. திருவிடம் சுவாதியைக் கவனித்துக்கொள்ளும் படி உத்தரவிட்டு, வீட்டுக்கு திரும்பி விட்டிருந்தான்.

 

கோபம்… அவனுக்கு அவன்மீதே அத்தனை கோபம் கிளர்ந்தது. “ஏன்டா ஏன்டா ஏன்டா… அவகிட்ட அப்படி பேசின…” அவன் கன்னங்களில் மாறி மாறி தன் கைகளாலேயே அடித்துக் கொண்டான்.

 

ஆற்றாமை… அவனுக்கு அவன் மீதே அத்தனை ஆற்றாமை பெருகியது. “தப்புடா… தப்புடா… தப்பு தப்பு… நீ அவகிட்ட நடந்துக்கிற முறை மொத்தமே பெரிய தப்பு… முன்ன நீ இப்படி இல்லயே… எப்பவுமே நீ தப்பானவன் இல்லடா… யாருக்கும் நம்மால சின்ன கஷ்டம் கூட வந்துடக்கூடாதுனு நினைப்பியே! இப்ப அவள கஷ்டப்படுத்தனும்னே ஒவ்வொன்னையும் செய்றீயேடா…” இருகைகளாலும் தலை கேசத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டு தன் அறைக்குள் கத்தினான்.

 

ஆத்திரம்… அவன் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஆத்திரம் அவன்மேல் பரவியது. “ஏன் ஏன் ஏன்… உன் புத்தி இப்படி மாறுது? பைத்தியம் பிடிச்சிடுச்சாடா உனக்கு… அவளை விட முடியலையா உன்னால… விட்டுறா… அவள விட்டுடு… விட முடியுமா உன்னால…” தனியறையில் தன்னிலை இழந்து தன்னிடமே கத்திக் கொண்டிருந்தவன், சோர்ந்து தரையில் அமர்ந்து விட்டிருந்தான்.

 

தாங்கவியலாத உணர்ச்சிப்‌ பிடியில் சிக்கி இருந்தான் பவன்யாஷ். அவனால் எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை. அவளை அணைத்துக் கொண்டு அழுது தீர்க்க வேண்டுமென‌ தோன்றியது அவனுக்கு. அதேநேரம், அவள் கன்னம் கன்னமாக அறைந்து தள்ள தோன்றியது. அந்த இரண்டும் கெட்டான் மனநிலையில், அப்படியே வெறுந்தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டான்.

 

மேல் கூரை விட்டத்தில் வடிவமைக்கப்பட்டிருந்து பிரத்யேக சீலிங் அமைப்பு பார்வைக்கு வெகு அழகாய் தெரிந்தது. ஆனால் அதை எதையும் ரசித்துப்‌ பார்க்கும் மனநிலை தான் அவனுக்கு இல்லை. இமைகளை அழுத்தி மூடிக்கொண்டான்.

 

இருண்ட பார்வைக்கு முன்னால் அவளை‌ முதல் முதலாக சந்தித்த தருணம் மனதின் அடியாழத்தில் இருந்து கிளறிக் கொண்டு மேலெழுந்தது. 

 

“அன்னிக்கு ஏன்டி என்னை தேடி வந்த…? உனக்கு வேற யாருமே கண்ணுக்கு தெரியலையா… நான் மட்டும் தான் தெரிஞ்சேனா… இப்ப பாரு என்னையும் கஷ்டப்படுத்தி, உன்னையும் கஷ்டப்படுத்தி எதுக்கு இதெல்லாம்… நாம இப்படி கஷ்டப்படத் தான் சந்திச்சோமா…!” என்று புலம்பியவனின் கண்ணோரம் கசிந்து, காதோரத்தில் வழிய, மீண்டும் வாரா அந்த நாட்களுக்குள் இவனும் அமிழ்ந்து போனான்.

.

.

.

 

பென்சில் தேகம், அரும்பு மீசை, படிய வாரிய தலைக்கேசம் என, பள்ளியின் வாசம் மாறாது கல்லூரி முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தான் அப்போது. முதல் முதலாக தன்னை வளர்ந்த ஆண்மகனாக அவன் உணர்ந்த தருணம் அது. அந்த உணர்வே அவனுக்குள் தனி மிதப்பை தந்திருந்தது. அந்த மிதப்பிலும் பருவத்தின் துள்ளலிலும் தான் சுற்றிக் கொண்டிருந்தான். 

 

அவன் கல்லூரி சேர்ந்து ஒரு மாதம் கூட முடியாத நிலை. அன்று மாலையில் கல்லூரி முடித்து, சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான். இருபுறமும் வயல்வெளி, கரும்புத் தோட்டம், வாழைத் தோட்டம் என பசுமை நிறைந்திருக்க, அதற்கு இடையேயான மண்பாதையில் சைக்கிள் ஓட்டி செல்வது, அவனுக்கு அத்தனை ரசனையாக இருந்தது அப்போதெல்லாம்.

 

அன்று அவன் ரசனையில் சிறு தடங்கல், சைக்கிள் அவன் கைகளில் தள்ளாட, அவன் குனிந்து என்னவென்று பார்க்க, சைக்கிள் பின் சக்கரத்தில் காற்று இறங்கி இருந்தது. “அடடா போச்சா…” என்று நிமிர்ந்தவன், எதிரே வந்த சைக்கிள் மீது மோதி கீழே விழுந்திருந்தான்.

 

அவன் சைக்கிளோடு கீழே விழுந்தது கூட அவனுக்கு பெரிதாக தோன்றவில்லை. எதிரில் சைக்கிளில் வந்த பெண்ணும் கீழே விழுந்திருப்பாளே என்று பதறி நிமிர்ந்தவன் பார்வை சுருங்கியது. அவள் அசராமல் அவன் முன்னால் நின்றிருந்தாள்.

 

ஒரு காலை தரையில் ஊன்றி மறுகால் சைக்கிள் பெடலில் இருக்க, தன் முன்னால் கீழே விழுந்து கிடந்தவனை துச்சமாக பார்த்து நின்றிருந்தாள் அவள்.

 

“நீதான் தனசேகரனா?” அவளின் பார்வையும் கேள்வியும் திமிராக அவனை மோதி நிற்க, அவன் ரோஷம் வந்தவனாக சற்றென்று எழுந்து சைக்கிளை தூக்கி நிறுத்தியவன், தன்மேல் ஒட்டியிருந்த தூசியைத் தட்டி விட்டான்.

 

அவன் இன்னுமே தன் கேள்விக்கு பதில் தராமல் இருக்க, அவளுக்கு கடுப்பேறியது. இதுவரை அவள் கேட்டு பதில் தராமல் யாரும் இருந்ததில்லை. “ஏய்… நான் கேக்கிறேனில்ல” அவள் மென்குரல் இப்போது உயர்ந்து ஒலிக்க, அவளிடம் நிமிர்ந்தவன், “ஆமா, அதுக்கென்ன இப்ப?” அவளின் கேள்வி வந்த விதத்திலேயே அவன் பதிலும் வர, அவள் முகம் மாறியது.

 

“நான்‌ யார் தெரியுமில்ல மரியாதையா பேசு” தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று கிட்டத்தட்ட ஆணையிட்டவளை, 

அவன் பார்வை மேலும் கீழும் அளந்தது.

 

வெள்ளை நிற சுடிதார், நீலநிற பைஜாம், அதே நீலநிற துப்பட்டாவை ஒன்று போல மடித்து தோளில் இருப்பக்கமும் பின் செய்திருந்தாள். வெள்ளை ரிப்பனில் மடித்து கட்டிய இரட்டை ஜடை, அவள் முன்புறம் தொங்கிக் கிடக்க பள்ளி மாணவியாக தன் முன்னால் நின்றவளை, இவன் சிறுபெண் என்று அசட்டையாக பார்த்தான்.

 

“நீ யாருன்னு எனக்கு தெரியாது. அதுவுமில்லாம சின்ன பாப்பாக்கெல்லாம் மரியாதை கொடுக்கனும்னு அவசியமில்ல” என்று தன் சைக்கிளை தள்ளியடி அவளை கடந்து போனவனை அவள் பேச்சற்று பார்த்து நின்றாள்.

 

அவர்களின் தென்காசி சுற்று வட்டாரத்தில் அவளையும் அவள் குடும்பத்தையும் பற்றி அறிந்து கொள்ளாமல் எப்படி ஒருவனால் இருக்க முடியும்? 

 

இதுவரை அவள் யார் முன்பும் இப்படி நின்றதில்லை. அவளின் பார்வைக்கே அவளருக்கில் வந்து, ‘என்னவேணும் தாயி’ என்று பணிவாக கேட்பவர்களை மட்டும் தான் அவள் கடந்து வந்திருந்தாள். இப்போது அவன் அலட்சியப்படுத்துவது அவளுக்கு சட்டென ஜீரணிக்க முடியாத ஓர் இறுக்கமான உணர்வை தந்தது.

 

அவனை மறுபடி அழைத்துப் பேச, இவள் கௌரவம் தடுக்க, புசுபுசுவென மூச்சை இழுத்துவிட்டவள், தன் சைக்கிளை திருப்பி வேகமாக மிதித்தப்படி அவனை கடந்து சென்றாள்.

 

அவனை கடந்து அவள் போகும் வேகத்தில், அவள் வாசத்தோடு கலந்த வாடைக்காற்று அவன் முகத்தில் மோதி அடிக்க, அவனிதழில் கீற்றாய் மென்னகை விரிந்தது.

 

அவளைப் பற்றி அவனுக்கு எப்படி தெரியாமல் இருக்கும்? அவன் பள்ளியில் படிக்கும் அழகான பெண்ணை அவன் கண்கள் ரசிக்காமல் விட்டிருக்குமா என்ன? ஆனால் ரசிப்பதோடு சரி. அதை தாண்டி அந்த பருவத்தில் பெரிதாக ஏதும் ஈர்ப்பு தோன்றியதுமில்லை. அப்படி தன் மனதை அலைப்பாய விடுபவனும் அவனல்ல.

 

‘ஆனால், அவளுக்கு தன்னை எப்படித் தெரியும்? எதற்கு தன்னைத் தேடி வந்தாள்? கொஞ்சம் நின்னு அவ பேசறதை கேட்டிருக்கனுமோ’ என்று காலந்தாழ்ந்து அவன் யோசிக்க,

 

‘டேய், இத்துனூண்டு இருந்துட்டு என்னவோ படையப்பா நீலாம்பரி ரேஞ்சுக்கு சீன் போட்டு போறா, அவகிட்ட பொறுமையா வேற பேசனுமா. போடா’ அவனுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு எழுந்தது.

 

அவளைப் பற்றிய யோசனையை தள்ளி வைத்தவன், தன் சைக்கிளை பாவமாக பார்த்தான். “இன்னைக்கு இந்த சைக்கிள் என்னை கழுதறுத்துடுச்சே, இப்போ அரை மணிநேரம் லொங்கு லொங்குனு நடந்து போகனும்” அவன் புலம்பியபடியே சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வர, முன் பாதையில் அவள் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்றிருந்தாள்.

 

தனசேகரன், அவளை பார்த்து நெற்றி சுருக்கியவன், ‘இவ இன்னும் போகலையா? என்ன வேணுமாம் இவளுக்கு? கிழிஞ்சது, இவ கூட என்னை யாராவது சேர்த்து வச்சு பார்த்தாங்க… என்னைய இல்ல தோலை உரிச்சி உப்புக்கண்டம் போட்டுடுவாங்க’ என்று சற்று மிரண்டான்.

 

அவளிடம் வந்தவன், “உனக்கு என்ன வேணும்?” அவளிடம் நேராக கேட்க, “நீதான தனசேகரன், ஸ்கூல் ஃபர்ஸ்ட், ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தது!” அவள் சந்தேகமாக வினவினாள்.

 

“ஆமா நான் தான் தனசேகரன், ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தது நான் தான், ஆனா ஸ்டேட் செகண்ட் தான் வந்தேன். ரெண்டு மார்க்ல ஒரு புள்ள என்னை முந்திக்கிச்சு போதுமா!” 

 

தான் கேட்டதற்கு பெரிதாக விளக்கம் சொன்னவனை அசட்டையாகப் பார்த்தவள், “அதெல்லாம் விடு, நம்ம ஸ்கூல்ல டென்த், டுவல்த்ல மேத்ஸ்ல சென்டம் வாங்கினது நீ தானே?” 

 

அவள் விரல் நீட்டி கேட்ட தோரணையில், அவன் ஆமென்பதாக தலையை உருட்டினான். ‘இதையெல்லாம் இவ ஏன் கேக்குறா?’ என்ற குழப்பம் அவனுக்கு.

 

“நான் இப்ப டென்த்ல படிக்கிறேன். மத்த சப்ஜெட் எல்லாம் நான் எப்படியோ படிச்சிடுவேன், ஆனா இந்த மேத்ஸ்ல மட்டும் என்னால எய்ட்டி மார்க் தாண்ட முடியல… எனக்கு கண்டிப்பா மேத்ஸ்ல சென்டம் வாங்கனும். அதுக்கு நீதான் டிப்ஸ் கொடுக்கணும்” அழுத்தமும் அதிகாரமுமாகப் பேசியவளை, புன்னகையுடன் பார்த்தவன், “உன் பேரென்ன?” என்று கேட்டான்.

 

“ஸ்ரீ” என்றாள் பொதுவாய். 

 

“என்ன? வெறும் ஸ்ரீயா? இல்ல லாடுலபக்கு ஸ்ரீயா? ஒழுங்கா பேரை சொல்ல தெரியாதா உனக்கு?” அவன் கடிந்துகொள்ள, 

 

அவனை மிரட்சியாக பார்த்தவள், “சுவாதிஸ்ரீ…” என்றாள். அவளுக்கு இதுவரை கேள்வி கேட்டு தான் பழக்கம். எதற்கும் பதில் சொல்ல வேண்டி அவசியம் வந்ததில்லை அவளுக்கு. பள்ளியில் ஆசிரியர்களும் தன்னிடம் மரியாதையுடன் தழைந்து போக, இவன் மட்டும் என்ன தன்னை கேள்வி கேட்பது?’ என்றிருந்தது அவளுக்கு.

 

“குட் சுவாதிஸ்ரீ, உனக்கு ஒருத்தர் கிட்ட உதவி தேவைப்பட்டா அவங்ககிட்ட மரியாதையா பொறுமையா உதவி கேட்கணும். இப்படி ஜம்பம் எல்லாம் காட்டக்கூடாது சரியா?” என்று இதமான குரலில் தனக்கு புத்தி சொல்பவனை அதிசய ஜந்து போல பார்த்து நின்றாள் அவள்.

 

“என்னோட டென்த் நோட்ஸ் எல்லாம் பரண் மேல இருக்கும், நான் தேடி எடுத்து நாளைக்கு கொண்டு வந்து தரேன். அதை பிராக்டீஸ் பண்ணாவே போதும்” என்றான் அவளுக்கு உதவுபவனாய்.

 

“அதுல எனக்கு ஏதாவது டவுட்ஸ் வந்தா எப்படி உன்கிட்ட கேக்கறது? உங்க வீட்ல டெலிபோன் இருக்கா?” மற்றதை எல்லாம் தள்ளி தன் படிப்பு தேவையை மட்டும் முன்னிறுத்தி அவனிடம் வினவினாள்.

 

மறுப்பாக தலையசைத்தவன், “இப்படி சட்டுனு யார்கிட்டயும் டெலிபோன் நம்பர் கேக்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது சுவாதி. நீ இப்ப சின்ன பொண்ணுல்ல பெரிய பொண்ணாயிட்ட இதுல எல்லாம் கவனமா இருக்கனும்.” 

 

அவளிடம் ஒரு வார்த்தை பேசிவிட ஏங்குபவர்கள் எத்தனை பேர் என்று அவனுக்கு தெரியுமாதலால், அவளை எச்சரிக்க வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது.

 

“நீ என் பாட்டி மாறி ஓவரா அட்வைஸ் பண்ணி கோபப்படுத்தாத, நான் உன்கிட்ட டவுட் எப்படி கேக்கறது அதை சொல்லு” என்றாள் சுவாதிஸ்ரீ தன் காரியத்தில் கண்ணாய்.

 

“இதே மாதிரி, ஈவ்னிங் மீட் பண்ணும்போது கேட்டுக்கோ” என்றவன், “முதல்ல நீ கிளம்பு, இப்பவே லேட் ஆகிடுச்சு வேற. உன்ன தேடி யாராவது கிளம்பி இருப்பாங்க.” என்று அறிவுறுத்தியவனின் சொல்லை மறுக்க முடியாமல், தலையாட்டி சென்று விட்டாள்.

 

அவள் சென்றதும் லொக்கு லொக்கு என்று மூன்று கிலோமீட்டர் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்து வீடு சேர்ந்திருந்தான் தனசேகரன். 

 

“என்னாச்சு ராசா, இம்புட்டு நேரம்?” கேட்டபடியே அவன் அம்மா மங்கை செம்பில் தண்ணீர் கொண்டு வந்து தர, அதை வாங்கி முழுவதுமாக பருகி முடித்தவன், “பாதி வழியில சைக்கிள் பஞ்சர் மா” என்று சோர்ந்து அமர்ந்துவிட்டான்.

 

“அய்யோ, முகமெல்லாம் வேர்த்துப்போய் சோர்ந்து போயிருக்கியே ராசா,” என்று முந்தானையால் மகனின் முகத்தை துடைத்தவர், “போயி மூஞ்சி கழுவிட்டு வா, அம்மா சோறு கொண்டாறேன்” என்றவர் உள்ளே சென்று, மதியம் வைத்த சாதம், குழம்பு, காயை தட்டில் எடுத்து வந்து அவனுக்கு தர, இருந்த பசியில் வேகமாக உடவை காலி செய்தவன், அடுத்த வேலையாக சைக்கிளை சரிசெய்ய தொடங்கி விட்டான்.

 

பள்ளி நாட்களில் இருந்தே அவன் பயன்படுத்தி வரும் சைக்கிள் என்பதால், அதை சரிசெய்யும் வேலையை அவனே செய்து பழகி இருந்தான். சற்று நேரத்தில் அவன் அப்பா குணசேகரன் வேலை முடிந்து வர, அவர் மகனுக்கு உதவி செய்ய வாசலோடு அமர்ந்துவிட்டார்.

 

அப்பாவும் மகனும் ஊர் கதைகள் பேசி, சைக்கிளை சரிசெய்ய இருட்டி விட்டிருந்தது. வீட்டுக்குள் வந்தவர்கள் தொலைக்காட்சி முன்னால் அமர, அவர்கள் நேரங்களை தொலைக்காட்சி சுலபமாக உள்வாங்கிக் கொண்டது. இரவு உணவை சாப்பிட்டு விட்டு, அவனது வழக்கப்படி அன்றைய பாடங்களை ஒருமுறை படித்துவிட்டு படுத்தவன், மாலை நடந்து வந்த அலுப்பில் விரைவாகவே உறங்கிப் போயிருந்தான்.

 

இன்று ஒருத்தி அவனைத் தேடி வந்து உதவி கேட்டாள் என்பதை மறந்தே போயிருந்தான்.

 

மறுநாள் மாலையில் கல்லூரி முடிந்து அவன் வீடு திரும்பும் வழியில் அதே பாதையில், சுவாதிஸ்ரீ அவனுக்காக காத்து நிற்பதை பார்த்தவனுக்கு‌, முகம் சுருங்கி போனது.

 

“ஐயோ! சாரி, நேத்து நோட்ஸ் எடுக்கவே மறந்துட்டேன். கண்டிப்பா ஞாபகமா நாளைக்கு எடுத்துட்டு வந்து தரேன் சாரி” அவன் தன் ஞாபக மறதியை நொந்து கொண்டு அவளிடம் மன்னிப்பை வேண்டினான். 

 

அவன் மறந்துவிட்டேன் என்றதிலேயே அவளின் விழிகளில் நெருப்பு தனல் சுடர் விட ஆரம்பித்திருந்தது. “ஏய்… என்ன திமிரா உனக்கு? நானே வந்து உன்கிட்ட கேட்டது கூட உனக்கு மறந்து போகுமா? அதை என்னை நம்ப சொல்றீயா? நீ‌ வேணுன்னு தானே எடுத்துட்டு வரல?” என்றவளுக்கு கோபத்தின் வேகத்தில் மூச்சு வாங்கியது.

 

“ஏன் இவ்வளோ கோபம், நிஜமாவே நான் மறந்துட்டேன். நாளைக்கு கண்டிப்பா எடுத்துட்டு வந்து கொடுத்துறேன். பிராமிஸ்” என்றவனை இன்னும் கோபமாக பார்த்தாள்.

 

“நாளைக்கு சனிக்கிழமை ஸ்கூல், காலேஜ் எல்லாம் லீவு… எப்படி எடுத்துட்டு வந்து கொடுப்பியாம் ம்ம்? சத்தியம் பண்றானாம் சத்தியம். உன்னை எல்லாம் மதிச்சு என் பிரண்ட்ஸ கழட்டிவிட்டுட்டு ரெண்டு நாளா காத்திருந்தேன் பாரு என்னை சொல்லணும்…” தான் கேட்டும் முதல் முறை ஒருவன் அதை மதித்து செய்யவில்லை என்ற ஆத்திரத்தை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

 

நாளை சனிக்கிழமை என்றதும் நெற்றியை தேய்த்துக் கொண்டவன், “முதல்ல நீ ஏன் இப்படி கோபப்படுற சுவாதிஸ்ரீ… யாராவது வேணும்னு மறப்பாங்களா? அதுவும் படிப்பு சம்மந்தமா நீ கேட்டது, அதுல போய் நான் விளையாடுவேனா… கண்டிப்பா என்னோட எல்லா நோட்ஸும் திங்கக்கிழமை உன் கைல இருக்கும் சரியா.” என்றவனை அவள் கண்களைச் சுருக்கி நம்பாமல் முறைத்து நின்றாள். 

 

ஒளிரும் மஞ்சள் நிறத்து மேனியளாய், பார்வையால் தன்னை எரித்துவிடும் முயற்சியில் இருப்பவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. சிரித்து விட்டவன், “இத்துனூண்டு இருந்துகிட்டு என்னமா கோபம் வருது உனக்கு… பிஞ்சு பச்சமொளகா” என்று கேலி செய்பவனை என்ன செய்வது என்று தெரியாமல் அவள் பற்களை நறநறத்தாள்.

 

“போனா போகுதுனு நானா உன்கிட்ட பேச வந்தா நக்கலா பண்ற, நான் என் அப்பா கிட்ட சொல்றேன் இரு. உன்ன உண்டு இல்லனு செஞ்சுடுவாரு” தன் அப்பாவின் பெயரைச் சொல்லி அவள் மிரட்டலில் இறங்கி இருந்தாள்.

 

அவள் கோபத்தில் அவள் அப்பாவிடம் ஏதாவது உளறப் போய், அது வேறு பிரச்சனையை உண்டாக்கி விட அதிக வாய்ப்பிருக்க, சற்று பயந்தவன், “இங்க பாரு. இந்த வயசுல இவ்வளவு கோபம் ஆகாது. நாளைக்கு உன் வீட்டுக்கே வந்து நோட்ஸ் எல்லாம் கொடுத்துறேன் போதுமா?” என்று அவசரமாக சொன்னவனை, அவள் யோசனையாக பார்த்தாள்.

 

“அதெல்லாம் வேணா, நாளைக்கு இங்கயே வந்து கொடு, நானும் வரேன். எங்க வீட்டு பக்கம் நீ வந்தா என் பாட்டியோட கேள்விக்கு எனக்கு பதில் சொல்லி மாளாது” என்றவள் மிடுக்கு குறையாமலேயே சொல்ல, 

 

சரியென தலையசைத்தவன், “நாளைக்கு நான் இங்க பக்கத்துல புளியங்காட்டுல தான் இருப்பேன். இந்த நேரத்துக்கு சரியா இங்க வெயிட் பண்றேன் போதுமா?” என்று அவன் உறுதி தந்தான்.

 

அவன் உறுதியை ஏற்பதாக தலையசைத்தவள், “புளியங்காட்டுல உனக்கு என்ன வேலை?” என்று சந்தேகமாகவே கேட்டாள். ஊருக்கு வெளியே புளியங்காட்டு பக்கம் பேய், பிசாசுகள் உலாவி வருவதாக சின்ன வயதில் இருந்து அவளுக்கு கற்பிக்கப்பட்ட கதைகள், அந்த காட்டை அமானுஷ்ய இடமாக உருவகித்து இருந்தது. அப்படிப்பட்ட இடத்தில் இவனுக்கு என்ன வேலை என்று அறிந்துகொள்ள அவளுக்கு ஆர்வம் குறுகுறுத்தது.

 

“அங்க தான் எப்பவுமே நான் படிப்பேன்” என்றவனை அவள் சற்று திடுக்கிடலுடன் தான் பார்த்தாள்.

 

“என்னது அங்க போய் படிப்பியா?” அவள் நம்பமுடியாமல் தான் கேட்டாள்.

 

அவள் அதிர்ச்சியில் சன்னமாக சிரித்தவன், “ஆமா, அங்க பேய் இருக்கு, பிசாசு இருக்குன்னு பயந்து எவனும் வரமாட்டான். எனக்கும் எந்த மனுசங்க தொல்லையும் இருக்காது. நான் நிம்மதியா பொறுமையா படிப்பேன்” என்றான்.

 

சுவாதிஸ்ரீ மேலும் அவனிடம் பேச்சு வளர்க்கவில்லை, ஒரு அழுத்தமான தலையசைப்புடன் தன் சைக்கிளில் ஏறி சென்று விட்டாள்.

 

‘ஏன் இந்த பொண்ண இவ்வளோ முரடா வளர்த்து வச்சிருக்காங்களோ…’ என்று சலித்துக் கொண்டவனும், தன் வீட்டை நோக்கி மிதிவண்டியை மிதித்தான்.

 

ஆனால், மறுநாள் அவள் புளியங்காட்டுக்கே வந்து அவன் முன்னால் நிற்பாள் என்று தனசேகரன் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அதுவும் தனியாக வராமல் அவளுடன் ஒரு முரட்டு ஆசாமியையும் அழைத்து வந்து தன்னை வெளுத்து வாங்குவாள் என்று, அவன் கற்பனை கூட செய்திருக்கவில்லை.

***

(இவ்வளோ தான் டைப் பண்ண முடிஞ்சது… அடுத்தது டைப் பண்ண முடிஞ்சதும் சீக்கிரம் போஸ்ட் பண்றேன் ஃப்ரண்ஸ். நன்றி) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!