என் முன்னாள் காதலி 11

IMG-20220515-WA0044 (2)-f3572e68

என் முன்னாள் காதலி 11

என் முன்னாள் காதலி 11

 

ஆறு வருடங்களுக்கு முன்பு தான், அப்போதைய தென்காசி வட்டத்தில் அமைந்திருத்த சிவகிரி ஊரின், தலைமை தபால் அலுவலராக பணி மாற்றலாகி வந்திருந்தார் குணசேகரன். அதன் பொருட்டு தன் குடும்பத்துடன் அந்த ஊரிலேயே குடியேறி இருந்தார். அங்கிருந்த, சிவகிாி சேனைத்தலைவா் மேல்நிலைப் பள்ளியில், தனது எட்டாம் வகுப்பைத் தொடர்ந்தான் தனசேகரன். 

 

அதற்கு முன்னர் அப்படியொரு ஊரைப் பற்றி அவன் கேள்விப்பட்டது கூட இல்லை. தன் சொந்த ஊர், இதுவரை படித்த பள்ளி, நண்பர்களைப் பிரிந்து வந்ததில், உம்மென்று பள்ளி சென்று வந்தவனுக்கு, புது பள்ளியிலும் நண்பர்கள் சேர்ந்துவிட உற்சாகமாக படிப்பை தொடர்ந்தான்.

 

தனசேகரன் எப்போதுமே படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டி. பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி என்று எதையும் அவன் விட்டு வைத்ததில்லை. தன் இடத்தை விடாமல் பிடித்து வைப்பதில் சற்று பிடிவாதக்காரன் அவன். படிப்பில் முதல் இடத்தை நழுவாமல் தக்க வைத்துக் கொண்டிருந்தான். அதனால், பத்தாம் வகுப்பில் அந்த பள்ளியில் முதல் இடத்திலும், பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாம் இடத்திலும் தேர்ச்சி பெற்று, அருகில் உள்ள ஆலங்குளம் சர்தார் இராசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தான். 

 

அதுவரை அம்மாவின் பாசம், அப்பாவின் அன்பு, தளறாத படிப்பு, நண்பர்களோடு கொண்டாட்டம் என்ற வட்டத்தில் சுழன்று வந்தவனை முதல்முதலாக, அந்த வட்டத்தை தாண்ட செய்திருந்தாள், சுவாதிஸ்ரீ.

 

அவளிடம் வாக்கு தந்தபடி அன்று மாலை வீட்டுக்கு சென்ற உடன், பரணில் ஏறி அலசி, தன் பத்தாம் வகுப்பு நோட்டு புத்தகங்களை எடுத்து தூசு தட்டி, திறந்து பார்த்தவன் இதழில் குறுநகை தவழ்ந்தது. அன்று தன்னை சிறுவனாக நினைத்திருந்தவன், இன்று இந்த இரண்டு வருட இடைவெளியில் தன்னை இளைஞனாக உணர்கிறான். அந்த உணர்வே அவனை உயர்வாக உணர வைக்க, அவன் உடலும் விறைத்து நிமிர, தன் அரும்பு மீசையை மிதப்பாக வருடிவிட்டு கொண்டான்.

 

மறுநாள் காலை உணவை முடித்துக்கொண்டு, அம்மாவிடம் சொல்லிவிட்டு, ஞாபகமாக நோட்டு புத்தகங்களை எடுத்துவைத்து, தன் மிதிவண்டியை மிதித்து வந்தான்.

 

கந்தக பூமியான சிவகாசியில் பிறந்து வளர்ந்தவனுக்கு, இந்த தென்காசியின் இயற்கை வளமும், பச்சை பசேலென்ற பசுமை நிறைந்த குளுமையும் எப்போதுமே நெஞ்சை அள்ளிச்செல்லும். அவன் ரசிகன். ஒவ்வொன்றையும் ரசித்து சுகித்து ஆழ்ந்து அனுபவித்து மகிழ்பவன். அதனாலேயே அவன் தனிமை விரும்பி. அவனுக்கு பள்ளியிலும் கல்லூரியிலும் நண்பர்கள் அதிகம் என்றாலும், அவனது தனிப்பட்ட வட்டத்திற்குள் அவன் யாரையுமே அனுமதித்தது இல்லை இதுவரை.

 

‘நாம வாழப்போவது ஒருமுறை தான் அந்த வாழ்வை மகிழ்ச்சியாக நேர்மறையான எண்ணங்களுடன் வாழணும்’ என்று அவன் தந்தை சொல்லும் சொல்லை மனதில் நிறுத்தி, எதையும் பொறுமையாக நேர்த்தியாக கையாள்பவன். அவன் வெற்றிகளின் ரகசியமும் இதுதான்.

 

அடர்ந்த கரும்பு தோட்டத்தின் இடையில் வேகமெடுத்து சைக்கிளை செலுத்த, இதமாய் அவன் நாசிக்குள் இறங்கிய கொத்தமல்லி தழையின் புத்துணர்வான வாசத்தை அனுபவித்தவனாக, வேகத்தை குறைத்து செல்ல, கொத்தமல்லி தளிர் தழைகள் அசைந்தாடும் கழனிக்காடு அவன் கண்களுக்கு விருந்தானது. எப்போதுமே அந்த மல்லிதழை கழனியை கடந்து போகும் மட்டும், வானவெளியில் மிதப்பது போன்ற பரவசமான உணர்வு பரவி கிடக்கும் அவனுள். 

 

வழக்கம் போல அதை அனுபவித்தபடி கடந்து வர, தென்னந்தோப்பின் ஊடே செல்லும் பாதையில் சைக்கிளை திருப்பி செலுத்தினான். தென்னந்தோப்பு முடிந்ததும், புளியந்தோப்புக்குள் நுழைந்து ஒற்றையடி பாதையில் வளைந்து சென்றான்.

 

உயர்ந்து அகன்று கிளைகள் பரப்பி இருந்த புளிய மரங்களின் அடர்த்தியில், அந்த இடம் பகற்பொழுதிலும், சற்று மங்கிய வெளிச்சையும், சற்றே குளுமையும் கொண்டிருந்தது. அந்த புளியமரங்களில் வாழ்ந்து வரும் பலவகை புள்ளினங்களின் வெவ்வேறு ஓசைகள், அந்த இடத்திற்கு இசை மீட்டிக் கொண்டிருந்தது. 

 

அதை தாண்டி இன்னும் சற்று உள்ளே செல்ல செல்ல, அங்கே ஒரு சிதிலமடைந்த கல்மண்டபம் காட்சியானது. அமானுஷ்யம் உறைந்திருப்பதாக அங்குள்ள மக்கள் அஞ்சும் மண்டபமும் கோயிலும் இதுதான். அதன் அருகில் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினான் தனா.

 

அவனது இடுப்பு உயரம் கருங்கல் மேடை அமைத்து, அதன் நான்கு புறங்களிலும் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த பெரிய தூண்கள் தாங்கி நிற்க, நீளவாக்கிலான ஆறு கரும்பாறைகள் கொண்டு மேற்கூறை அமைக்கப்பட்டு காட்சி அளித்தது அந்த கருங்கல் மண்டபம். அதையடுத்து இருபதடி தூரத்தில் ஒரு கற்கோவிலும் இருந்தது.

 

நேராக அவன் கால்கள் அந்த கோவிலை நோக்கி நடந்தன. சுற்றிலும் கருங்கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு, வடக்கு நோக்கி சிறு வாசல் மட்டும் அமைந்திருந்த கோயில் அது. ஆதி காலத்தில் அந்த இடமும் இந்த கோயிலும் போற்றத்தக்கதாக இருந்திருக்க வேண்டும், இப்போதோ சுற்று சுவர்கள் தூண்கள் எல்லாம் சிதிலமடைந்து உடைந்து அங்கங்கே பாதி மண்ணில் புதைந்து கிடக்க, மூலவர் சந்நிதி மட்டுமே மிஞ்சி நிற்கிறது. 

 

கால் செருப்பை கழற்றி விட்டு, கோயில் முன்பு போய் வணங்கி நின்றான். அந்த கர்ப்பகிரகத்தில் பீடம் மட்டுமே அமைந்திருந்தது. அங்கே எந்த சிலையும் இருக்கவில்லை. எதிரில் ஐந்தடி உயரமான பெரிய சூலம் மட்டுமே இப்போது காட்சியானது. முன்னர் அங்கே நேர்த்தியான அம்மன் சிலை இருந்ததாகவும், அது களவாடப்பட்டதாகவும், அதற்கு பிறகு தான் அந்த கோவில் கைவிடப்பட்டதாகவும் அங்குள்ளவர்களைக் கேட்டறிந்து கொண்டிருந்தான். 

 

அருகில் இருந்த செவ்வரளி பூக்களை பறித்து அந்த சூலத்திற்கு சாற்றி வணங்கிவிட்டு, மண்டபத்தை நோக்கி வந்தவன் அதிர்ச்சியாகி நின்று விட்டான், அவன் எதிரில் வந்து நின்ற சுவாதிஸ்ரீயை கண்டு.

 

நிஜமாகவே அவள் தானா என்று ஒருமுறை தலையை உலுக்கி விட்டு பார்க்க, அவன் முன்னால் திமிரான உடல்மொழி காட்டி நின்றிருந்தாள் அவள்.

 

“நீயா… இவ்வளோ தூரம் தனியாவா வந்த?” பெரிய ஆண்களே அந்த இடத்திற்கு வர பயந்து கிடக்க, இவள் அத்தனை தூரம் வந்து நிற்பது அவனுக்கு திகைப்பாகத்தான் இருந்தது.

 

“தாத்தா, நான் சொன்னேனில்ல, அவன் இவன் தான்.” சுவாதி இறுகிய குரலில் அவனை பார்வையால் சுட்டிச் சொல்ல, ‘தாத்தாவா?!’ என்று யோசித்து அவளைத் தாண்டி பார்த்தவனுக்கு திக்கென்றானது.

 

அங்கே ஆறடி தாண்டிய உயரத்தில், கட்டுமஸ்தான முறுக்கேறிய தேகத்துடன், முன் வழுக்கை தலையும், முறுக்கிவிட்ட தும்பைப்பூ மீசையும், காலோடு சுற்றி மடித்த கட்டிய வேட்டியுமாக, வயதுக்கும் வலிமைக்கும் சம்மந்தம் இல்லையென்றபடி திடகாத்திரமாக ஒருவர் நின்றிருந்தார்.

 

தனா, அவரையும் அவளையும் மாறி மாறி பார்த்து குழம்பி நிற்க, “ஏன்டா பெரிய வூட்டுக்கார பொண்ணு கிட்டயே வம்பு வளக்கற அளவுக்கு ஆயிடுச்சா உனக்கு?” என்ற அதட்டலோடு அவனை நோக்கி வந்தவர் அவன் சட்டையைப் பிடிக்க, 

 

தனா அவளை முறைத்தவன், “இங்க பாருங்க நீங்க தப்பா புரிஞ்சி இருக்கீங்க. நான் யார்கிட்டையும் வம்ப வளக்கல…” அவன் சொல்லி முடிக்கும் முன்னே அவன் முகத்தில் குத்து விழ, அந்த அதிர்ச்சியில் இரண்டடி தள்ளி கீழே விழாமல் சமாளித்து நின்றான்.

 

குத்துப்பட்ட அவன் தாடை பகுதியில் விண்விண்ணென்று வலியெடுக்க, அவர் தன்னை அடிப்பார் என்று எதிர்பார்க்காதவன், அவரை உருத்து பார்த்தான். “இப்ப எதுக்கு என்மேல கைய வச்சீங்க? நான் எந்த தப்பும் பண்ணல…” அவன் பேசும்போதே அவர் அடுத்தடுத்து அவனை தாக்க, இவன் அவர் தாக்குதல் தன்மேல் விழாமல் விலகி விலகி பின்னால் நகர்ந்தான்.

 

அவன் விலகலில் அவருக்கு இன்னும் கோபம் அதிகமாக, அவன் மேல் பாய்ந்து தாக்கினார். தன் இரு கைகளாலும் அவரை தடுத்துப் பிடித்தவன், அவரை முன்னேற விடாமல் தடுக்க, அவரோ அவனை அப்படியே தூக்கி சுழற்றி தரையில் அடிக்க, செம்மண் தரையில் அவன் முதுகு தம்மென்று இடிபட‌ விழுந்தான்.

 

அந்த வலியில் முகம் சுருக்கியவன், தாமதிக்காமல் எழுந்து அவரை‌ பிடித்து தூர தள்ளிவிட்டான். வயதில் மூத்தவர் அவரை திருப்பி தாக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. 

 

“ஒழுங்கு மரியாதையா பாப்பா கிட்ட மன்னிப்பு கேளுடா, உன்ன விட்டுறேன்” மருது விரல் நீட்டி எச்சரிக்க, 

 

“நான் எதுக்கு மன்னிப்பு கேக்கணும்? செய்யாத தப்புக்கெல்லாம் மன்னிப்பு கேக்கணும்னா, நான் பார்க்கற எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டே தான் இருக்கணும்.” தனாவின் பதிலும் கோபமாக வந்தது.

 

“நோஞ்சான் மாறி இருந்துட்டு என்ன திமிருல உனக்கு, முடிஞ்சா எங்கிட்டருந்து உன் கை கால காப்பாத்திக்கல” என்று அவர் அவன்மேல் பாய்ந்து தாக்க, தனாவும் பொறுமை இழந்தான். தன் பலம் கொண்ட மட்டும் அவரை தாக்க முற்பட்டான்.

 

இருவரும் சரிக்குச் சமமாக தாக்குவதும், தாக்குதலை தடுப்பதுமாக, ஒருவரையொருவர் பிடித்து அடித்துக்கொண்டு தரையில் உருண்டு சண்டையிட்டனர்.

 

சுவாதிஸ்ரீ, அந்த இடத்தை பார்வையால் சுழற்றி பார்த்துவிட்டு, அவர்கள் சண்டையை அசட்டை பாவனையுடன் பார்த்து நின்றாள். தானே நேராக அவனை தேடி வந்து கேட்டும், அவன் உதாசீனம் செய்ததை அவளால் நிச்சயமாக ஜீரணிக்க முடியவில்லை. இதுவரை அவளை யாரும் எதற்கும் உதாசீனம் செய்ததுமில்லை. அவள் ஒன்றை நினைத்தால், அது அப்போதே நடந்துவிடும். அவள் ஒன்றை கேட்டால், அது அப்போதே கிடைத்துவிடும். எதற்கும் அவள் காத்திருந்து பழக்கமுமில்லை. அதனால் தானோ என்னவோ அவனின் சாதாரண மறதி கூட அவளை பெரிதான உதாசீனமாக உணர வைத்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சினங்கொள்ள வைத்தது.

 

இதைப்பற்றி அவள் வீட்டில் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், அவனை அலேக்காக தூக்கி வந்து அவள் காலடியில் போட்டிருப்பார்கள். ஏதோ அவனிடம் சின்னதாக பாவம் பார்த்து, அவளுக்கு காவலாக இருக்கும் மருது தாத்தாவிடம் மட்டும் விசயத்தைச் சொல்லி இங்கே அழைத்து வந்திருந்தாள்.

 

“நீ வரவேணா பாப்பா, அந்த பயல நானே ரெண்டு தட்டு தட்டி நோட்டு புஸ்தகத்த வாங்கி வரேன்” என்று மருது தடுத்தும், “நானும் வருவேன் தாத்தா, அவன் என்கிட்ட கண்டிப்பா மன்னிப்பு கேட்டே ஆகனும்” என்று வீம்பாக அவருடைய டிவிஎஸ் பிஃப்பிடியில் உடன் வந்திருந்தாள். புளியங்காட்டிற்கு அவன் படிக்க வருவதாக மட்டுமே அவளுக்கு தெரிந்ததை சொல்லியிருக்க, மருது நேராக கல்மண்டபத்திற்கு அழைத்து வந்து சரியாக அவன் முன்னால் நிறுத்தி இருந்தார்.

 

‘அவருக்கு எப்படி தெரிந்தது இந்த இடம் தான் என்று?’ என்ற யோசனையோடு அவர்களைப் பார்த்தவள் முகம் மாறியது. 

 

மண்ணில் மருது தனாவின் ஒற்றைக்காலை லாவகமாக வளைத்து பிடித்திழுக்க, தனாவின் கைகள் மருது தாத்தாவின் வயிற்றை சுற்றி கிடுக்குபிடியிட்டு இருந்தது. இருவருமே ஒருவரையொருவர் மண்ணில் சாய்க்கும் முயற்சியில் இருந்தனர். தனா மூச்சை இழுத்துப் பிடித்து அந்த தாத்தாவை சுழற்றி தரையில் அடித்து, மூச்சு வாங்க அவர்மேல் ஏறி அமர்ந்திருந்தான். தரையில் கிடந்தவருக்கும் மூச்சு வாங்கியது. 

 

அவரின் தும்பைப்பூ மீசை மூடிய இதழ்களில் கர்வமான சிரிப்பை நெளியவிட்டவர், தன் மேலிருந்தவனை கீழே தள்ளிவிட, மறுபடி இருவரும் உருண்டு புரண்டனர்.

 

அவர்கள் இருவரும் ஒன்றேபோல சண்டையிடும் லாவகத்தை இப்போது தான் கண்டு கொண்டவளின் முகம் புசுபுசுவென ஊதிப் போக, “தாத்தா…” என்று சத்தமாக கத்தி இருந்தாள்.

 

அவள் கத்தலில், சண்டையை நிறுத்திவிட்டு இருவரும் அவள் புறம் திரும்பி பார்த்தனர். அங்கே முகம் சூடேறி சிவந்திருக்க இருவரையும் ஒன்றே போல முறைத்து நின்றிருந்தவள், “நான் என்ன சொல்லி கூட்டிட்டு வந்தா, இங்க நீ என்ன பண்ணிட்டு இருக்க தாத்தா?” கோபமாக கேட்டாள்.

 

அத்தனை பெரியவரை அவள் மரியாதையின்றி பேசுவதைக் கவனித்தவனுக்கு சுர்ரென்று கோபமேற, “வயசுல பெரியவருக்கு மரியாதை கொடுத்து பேச தெரியாதா உனக்கு?” என்று அவள்மேல் காய்ந்தபடி எழுந்து நின்றான் தனா.

 

அதில் அவள் முகத்தில் இன்னும் கடுப்பேற, மருது தாத்தாவை முடிந்தமட்டும் முறைத்து நின்றாள். 

 

“அட, அது நான் தூக்கி வளர்ந்து புள்ளய்யா, அப்படியே பேசி பழகிடுச்சு விடுய்யா” என்ற மருது தாத்தாவும் எழுந்து தன்மேல் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டபடி வாஞ்சையான குரலில் சொன்னார்.

 

“உன்ன எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தேன், நீ இங்க என்ன செஞ்சிட்டு இருக்க தாத்தா…” சுவாதி அவரிடம் சீறினாள்.

 

“இவன் நம்ம பையன் தான் பாப்பா… அஞ்சு வருசமா என்கிட்ட தான் சண்டை பயிற்சி எடுத்துட்டு இருக்கான். நீ சொல்ற மாதிரி தப்பானவன் எல்லாம் இல்லமா, பொறுப்பான பையன், தங்கமான குணம்…” 

 

அவர் அவனைப் பற்றி பாராட்டி சொல்ல சொல்ல இவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது. தான் யாரென்று அவன் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற இறுமாப்பில் வந்தவளுக்கு, அவனைப் பற்றிய பாராட்டுதலான பேச்சு கடுப்பை கிளப்பியது.

 

“போதும் தாத்தா, அவனை பத்தி நான் எதுவும் தெரிஞ்சிக்க வேண்டியதில்லை. நானே நேரா போய் கேட்டும் அவன் என்னை அலட்சியப்படுத்தி இருக்கான். என்கிட்ட மரியாதை இல்லாம திமிரா பேசி இருக்கான், இதையெல்லாம் கேட்கமாட்டியா?”

 

சுவாதி படபடவென பொறிய, தனாவை பார்த்த மருது, “என்ன தனா இது, ஈஸ்வரமூர்த்தி ஐயா பொண்ணு கிட்ட இப்படித்தான் நடந்துப்பியாப்பா?” அவனிடம் கண்டனமாக கேட்டார்.

 

தனா, “வாத்தியாரய்யா, இப்ப நாம ஒருத்தர்கிட்ட உதவி கேக்கணும்னா பொறுமையா நிதானமா தான கேக்கணும். இந்த பொண்ணு என்னவோ என்கிட்ட வந்து அதிகாரம் பேசினா நான் என்ன நினச்சிக்கிறது?” அவன் தன் விளக்கம் தர,

 

“நான் அப்படித்தான் பேசுவேன்,‌ அதுக்காக நீ என்னய மரியாதை இல்லாம பேசுவியா?” அவள் பொறுமையின்றி துள்ளினாள்.

 

“வயசுல சின்ன பொண்ணு கிட்ட நான் என்னனு மரியாதையா பேசறது? இப்ப கூட பாருங்க, படிப்பு விசயமாச்சேன்னு நான் அது கேட்ட நோட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தா, அது என்னை அடிக்க ஆள கூட்டிட்டு வருது… என்னத்த சொல்ல?” தனா நொந்துபோய் தலையில் அடித்துக் கொண்டான்.

 

“விடுய்யா, அது செல்லமா வளர்ந்த புள்ளயா, அதான் விவரம் தெரியாம பேசிபுடிச்சு, எங்க பாப்பா எங்களுக்கு குலசாமியா… அது கேட்டு நாங்க யாரும் இல்லனு சொல்லமாட்டோம். நீயும் அது மனசு நோகாம நடந்துக்கயா” முரட்டு ஆசாமியான மருதுவின் வாஞ்சையான வார்த்தைகளே, அவர் சுவாதி மீது வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தை பறைசாற்றியது.

 

எனவே, மேலும் ஏதும் பேசாமல் தான் எடுத்துவந்த நோட்டு புத்தகங்களை எடுத்து அவளிடம் வேண்டாவெறுப்பாய் நீட்டினான். அவளும் அதை வெடுக்கென பிடிங்கிக் கொண்டு திரும்பி நடந்தாள்.

 

“ஒரு நன்றி சொல்ல கூட தெரியல, என்ன பொண்ணோ” அவன் வாய்க்குள் முணுமுணுத்துக் கொள்ள, மருது ஒரு தலையசைப்புடன் நகர்ந்தார்.

 

அவர்கள் இருவரின் தலை மறையும் வரை பார்த்திருந்தவனுக்கு, இன்றைக்கு படிக்கும் எண்ணமே இல்லாமல் போனது. சற்று நேரம் கல்மேடையில் மல்லாந்து படுத்தவன், சண்டையிட்ட களைப்பில் உறங்கிப்போய் இருந்தான்.

 

இனி அந்த அடங்காபிடாரியின் தொல்லை இருக்கப் போவதில்லை என்றெண்ணி ஒரு வாரத்தை கடத்தியவன், அடுத்த வார விடுமுறையில் கல்மண்டபத்தில் அமர்ந்து சாட் வேலை செய்து கொண்டிருக்க, மாலை போல அந்த இடத்திற்கு சற்றும் பொறுந்தாமல், ‘ஜல்…ஜல்…’ என்ற‌ சலங்கை ஒலி கேட்டது. சந்தேகமாக நிமிர்ந்து பார்க்க, சுவாதிஸ்ரீ தான் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

 

அவளை பார்த்த திகைப்பில், “ஏய்… மறுபடியும் நீ எங்க இங்க?” என்று கத்திவிட்டவன், அவள் பயம் மேவிய முகத்தையும், மிரண்ட பார்வையும் பார்த்து சன்னமாய் சிரித்து, “நான் இங்க தான் இருக்கேன், இங்க வா” என்று அவளை அருகழைத்தான்.

 

அவன் குரல் கேட்டதுமே அவள் வேகநடையோடு அவனை நெருங்கி இருந்தாள். அன்று மருது தாத்தாவுடன் வரும்பொழுது அவளுக்கு அத்தனை பயம் இருக்கவில்லை. இன்று தனியே வந்தபொழுது அந்த இடமும், மரங்களும், அவள் கேள்வியுற்ற அமானுஷ்ய கட்டுக் கதைகளும் அவளை வெகுவாக பயமுறுத்தின.

 

மூச்சு வாங்க ஓடிவந்து தன் எதிரில் அமர்ந்தவளைப் பார்த்தவனின் முகத்தில் புன்னகையின் சாயல் நன்றாகவே விரிந்தது. “இவ்வளோ பயம் இருக்கறவ, எதுக்காக இவ்வளோ தூரம் தனியா வரணும்?” என்று கேள்வி தொடுத்தான்.

 

“நிஜமா உனக்கு இங்க பயமாவே இல்லையா? படிக்க உனக்கு வேற இடம் கிடைக்கல. நீயென்ன மனுசனா ஜந்துவா? எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு, முதல்ல உன் காலை காட்டு” அவள் பேசிய பாவனையில் வாய்விட்டு சிரித்து விட்டவன், மடித்து வைத்திருந்த கால்களை தளர்த்தி அவளிடம் காட்டினான்.

 

“நான் மனுசன் தான்மா, நீதான் பொண்ணா இல்ல மோகினி பிசாசான்னு டவுட் எனக்கு.” அவன் கிண்டலாகச் சொல்ல, 

 

அவன் கிண்டல் கேலியை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. “நானும் மனுஷி தான். இந்த சம் எப்படி போட்டும் எனக்கு வரல. சார் போடுற மெத்தட் வேறயா இருக்கு. அது எனக்கு சுத்தமா புரியல. நீ நோட்ல போட்டிருக்க மெத்தட் வேறயா இருக்கு, இதுல நீ எப்படி சால்வ் பண்ணனு எனக்கு புரியல.” என்றவள் நோட்டை திறந்து அந்த பக்கத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

 

தனா அந்த நோட்டை வாங்கிப் பார்த்தான். பலநாள் சென்றுவிட்ட கணக்கு. சட்டென பார்த்ததும் அவனுக்கும் தெளிவாக புரியவில்லை. வேறு தாள் எடுத்து அந்த கணிதத்தை மறுபடி போட்டு பார்த்தவனுக்கு, எல்லாம் புரிபட, அதை அவளிடமும் விளக்கினான். சுவாதிஸ்ரீக்கும் இப்போது தெளிவாக புரிந்தது. அவளும் தன் பங்குக்கு அந்த கணிதத்தை ஒருமுறை போட்டுப் பார்த்து பயிற்சி‌ எடுத்துக் கொண்டாள். விடை சரியாக வர, அவளுக்கு அப்பாடா என்றிருந்தது.

 

“இதை கேக்கவா இவ்வளோ தூரம் தனியா வந்த?” தனா நம்பாமல் அவளிடம் கேட்க,

 

“வேறென்ன செய்ய, உன் கையெழுத்து கோழி கிறுக்கல் மாதிரி இருக்கு. இதை படிச்சு புரிஞ்சிக்கறத்துக்குள்ளேயே எனக்கு தலை வலிச்சு போகுது” என்று நொந்து கொண்டவள், “இந்த கையெழுத்துக்கு எப்படித்தான்‌ உனக்கு ஃபுல் மார்க் கிடச்சதோ தெரியல” என்று தலையில் தட்டிக் கொண்டாள்.

 

“நோட்ஸ் வேகமா எழுதுவேன் அதான் அப்படி. மத்தபடி என் கையெழுத்து நல்லாத்தான் இருக்கும்” என்றவனை நம்பாமல், அவன் அருகிருந்த நோட்டை திறந்து பார்த்தாள். அதில்‌ முத்து முத்தாய் அச்சில் வார்த்ததைப் போல அவன் கையெழுத்து இருக்க, அவள் பார்வையில் மெச்சுதல் தெரிந்தது. ஆனாலும் அவள் வாய் திறந்து அவனை பாராட்டிவிடவில்லை. அவனை‌ பாராட்டும் எண்ணமும் அவளுக்கு இல்லை.

 

“வாராவாரம் ஞாயித்திக்கிழமை சாயந்தரம் ஸ்கூல் பசங்களுக்கு ஃபிரீ டியூஷன் எடுக்குறேன். நீ வேணா அங்க வந்து டவுட் கிளியர் பண்ணிக்க, இந்த இடத்துக்கு தனியா வரவேணா” தனா சொன்னதும் உடனே மறுப்பாய் தலையசைத்தவள்,

 

“நான் டியூஷன் போறேன்னு சொன்னாலே, வீட்லேயே டியூஷன் எடுக்கற மாதிரி டீச்சர வரவச்சிடுவாங்க. வெளியல்லாம் போய் கத்துக்க விட மாட்டாங்க. அதோட எனக்கு டியூஷன் எல்லாம் தேவயில்லை. சின்ன சின்ன டவுட்ஸ் கிளியர் பண்ணா மட்டும் போதும்.” என்று விளக்கம் தந்தவளை ஆமோதித்து தலையசைத்தவன்,

 

“சரி டவுட் கிளியர் ஆகிடுச்சில்ல,‌ இப்ப கிளம்பு” என்று சொல்ல, அவளும் தாமதிக்கவில்லை. “தேங்க்ஸ்” என்ற ஒற்றை வார்த்தை நன்றியை உதிர்த்துவிட்டு சென்றுவிட்டாள்.

 

தனா, அவளிடமிருந்து உதிர்ந்த அபூர்வ நன்றியில் சிரித்துக் கொண்டு தன் வேலையை கவனிக்கலானான்.

 

இவ்வித சந்திப்புகள் அவர்களுக்கிடையே அடிக்கடி நிகழ்ந்தன. முதலில் வரும்பொழுது பயந்தாலும் அடுத்தடுத்து பயமின்றி வந்து சென்றாள் சுவாதி. கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்பதற்கு மட்டுமே என்றிருந்த அவள் வரவு, நாள்போக்கில் எந்த பாடத்தில் சந்தேகம் இருந்தாலும், இல்லையென்றாலும் வாராவாரம் புளியங்காட்டுக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள். அவள் வரவை தனாவும் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தான்.

 

“இப்படி வாரவாரம் தனியா வரீயே உங்க வீட்ல யாரும் கேக்கமாட்டாங்களா?” தனா ஒருநாள் அவளிடம் வினவ,

 

“நானெல்லாம் அதுல உஷாரு. வாராவாரம் சனிக்கிழமை சனிபகவானுக்கு எள்ளு தீபம் போட்டு நூத்தியெட்டு முறை சுத்தி வந்தா… எனக்கு நல்லா படிப்பு வரும்னு சொல்லிட்டு தான் வரேன். அப்பப்ப கூட மருது தாத்தாவும் வரதுனால வீட்ல யாருக்கும் டவுட் வரல” என்று அசட்டையாக சொன்னாள்.

 

கட்டை பிரம்மச்சாரியான மருது வாத்தியாருக்கு, சண்டையை பயிற்றுவிப்பதை தவிர்த்து வேறெதுவும் தெரியாது. அங்கிருக்கும் சுற்றுப்பட்ட ஊர் இளைஞர்களுக்கு எல்லாம் அவர் தான் வாத்தியார். சிலம்பாட்ட பயிற்சியில் இருந்து, மல்யுத்தம், வாள் பயிற்சி, சுருள் வாள் பயிற்சி, வர்மக்கலை என அனைத்து தற்காப்பு கலைகளிலும் வல்லவர். ஆனால் சண்டையைத் தவிர்த்து உலக ஞானம் அவருக்கு குறைவு தான். 

 

‘இல்லையென்றால், வயதுப்பெண்ணை தன்னை தனிமையில் சந்திக்க அழைந்து வந்து விடுவாரா?’ என்று நினைத்து சிரித்துக் கொண்டவன், ‘தன் வாத்தியார் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்’ என்ற உறுதியையும் ஏற்றுக் கொண்டான். 

 

“ஒருநாள் இல்லனா ஒருநாள் உங்க வீட்டுக்கு தப்பித்தவறி உண்மை தெரிஞ்சா என் முதுகு தோலையில்ல உறிச்சி உப்புகண்டம் போட்டுடுவாங்க…” அவன் சற்று பயத்துடனேயே சொல்ல,

 

“ச்செ ச்செ உன்ன நான் அப்படி விட்டுடுவேனா… நீ எனக்கு படிப்பு தான் சொல்லி தந்தன்னு சொல்லி நான் உன்ன காப்பாத்துறேன்.” அவனுக்கு பாவம் பார்த்து அவள் சமாதானம் சொல்ல, தனசேகரன் தன் நெற்றியில் அடித்துக் கொண்டான். 

 

அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பான், அவர்கள் தனிமையில் சந்திப்பதே பெரிய குற்றமாக பார்க்கப்படும் என்று. அவளை இங்கு வரவேண்டாம் என்று அவனும் அவ்வப்போது தடுத்து சொல்கிறான் தான். ஆனால் அவள் தான் அவன் பேச்சை கேட்கும் ரகம் இல்லையே. அத்தோடு அவளுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் அவனை வாய்மூட வைத்திருந்தது. 

 

இதையெல்லாம் தவிர்த்து, ஊர் வியக்கும் அழகு தேவதை அவனை தேடி வருவது, அந்த வயதிற்கே உரிய ஒருவித குறுகுறுப்பை அவனுள் எழச் செய்திருந்தது. ஆனாலும் மனதை அலைபாய விடும் ரகம் அவனில்லையே. அதனால் அவளிடம் பொறுபையாக எடுத்துச் சொல்ல முயன்றான்.

 

“இங்க பாரு ஸ்ரீ, நாம ரெண்டு பேரும் இப்படி தனியா சந்திக்கிறது தெரிஞ்சாலே நம்மள தப்பா தான் பேசுவாங்க…”

 

“என்னை தப்பா பேசற தைரியம் இங்க யாருக்கு இருக்கு?” அவன் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல் சுவாதி துடுக்காக கேட்க, அவனுக்கு அவளிடம் எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.

 

“அது… தப்பானா இது வேற மாதிரி…” என்று இழுக்க,

 

“அது என்ன மாதிரி?” அவள் விடாமல் கேட்க, விளக்கிச் சொல்ல முடியாமல் பாவமாக அவன் தன் தலையை சொறிந்து கொண்டான்.

 

“என்னாச்சு தனா உனக்கு? ஏதோ சொல்ல வர, பாதிய நீயே முழுங்கிற, என்ன சொல்லனும், விளக்கமா சொல்லு” அவள் பொறுமையற்று கேட்டாள்.

 

“சரி நேராவே கேக்குறேன், இவ்வளோ தூரம் தனியா சைக்கிள்ல வரீயே யாராவது உன்கிட்ட தப்பா நடந்துகிட்டா… யாரோ என்ன, நானே உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா, இங்க உன்ன காப்பாத்த யாரு இருக்கா?” அவனுக்கு தெரிந்த வரையில் அவளுக்கு புரிய வைக்க கேட்டான்.

 

“என்னை காப்பாத்த ஏன் மத்தவங்க வரணும்? என்னாலயே என்னை காப்பாத்திக்க முடியும்” சுவாதி பதில் அத்தனை உறுதியாக வர, 

 

“சும்மா டயலாக் விடாத சுவாதி, நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன். நீதான் எதையுமே புரிஞ்சிக்க மறுக்கற” அவளின் பிடிவாதப்போக்கில் அவனுக்கு கோபம் வந்தது.

 

“நான் சின்ன பொண்ணுனு நீதான் என்னை மட்டம் தட்டுற… முடிஞ்சா என்னை நெருங்கி பாரு.” என்று சவால் விட்டவள், அவன் முன்னால் எழுந்து நின்றாள்.

 

அவளுக்கு சொல்லி புரிய வைக்கமுடியாது என்பதை உணர்ந்து அவள் முன்னால் எழுந்து நின்றவன், “நான் உன் தோளை பிடிப்பேன். நீ என் பிடியில இருந்து விலகி போகனும்” என்று சொல்ல, அவளும் சரியென்று தலையாட்டினாள்.

 

ஆண்பலம், பெண்பலம் என்பார்கள். உடல் ரீதியில் பெண்களைவிட ஆண்கள் பலம் எப்போதுமே அதிகம் தான். இயற்கையே ஆண்களை திடமாகவும், பெண்களை மென்மையாகவும் படைத்து தந்திருக்கிறது. இந்த ஒரு காரணத்தைக் கொண்டே பெண்களுக்கெதிரான வன்முறைகளும் இங்கே சர்வசாதாரணமாக அரங்கேறுகின்றன. யார் சொல்லியோ இல்லை சுயமாகவோ, எந்த பெண்ணுக்குள்ளும் தான் மென்மையானவள் என்ற உணர்வு ஒட்டிக்கொண்டு விடுகிறது. அந்த உணர்வின் வெளிப்பாடே அவள் செயல்களிலும் மென்மைதன்மை மிளிர்கிறது.

 

அதேபோலவே, எந்த ஆணுக்குள்ளும் தான் திடமானவன், வலிமையானவன் என்ற உணர்வு ஊறிப்போயிருக்கிறது. அதை அவன் ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் அநாயாசமாக வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறான். 

 

அதே ஆணுக்குரிய கர்வம் தந்த துணிவு தனசேகரனுக்குள்ளும் இருக்க, சிறு அசட்டையாக ஒற்றை கையால் எட்ட நின்றே அவள் தோளை பற்றினான். அடுத்த நொடியில் அவள் செயலில் அவன் கண்கள் மிரண்டு விரிந்தன. அவன் நிச்சயமாக அந்த சிறுபெண்ணிடம் இவ்வித தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை.

 

அவன் தோள் தொட்ட மறுநொடி, தன் இடையில் கைக்கொண்டு போனவள் அதே வேகத்தில் அவன் கழுத்தை குறி வைக்க, அவள் கையிலிருந்த கைப்பிடிக்குள் அடங்கும் ஆயுதத்தின் கூர்முனை அவன் கழுத்து சதையை உரசிக் கொண்டிருந்து.

 

அதை அவள் கரம் பிடித்திருக்கும் லாவகமும், அவள் அழுத்தமாக நின்ற தோரணையும், அதை பயன்படுத்துவதில் அவளுக்கு பயிற்சி அதிகம் என்பதை அறிவித்தது.

 

அவன் மிரண்ட கண்களை நேர்நோக்கியவள், “இப்ப சொல்லு, என்னை என்னால காப்பாத்திக்க முடியுமா? முடியாதா?” அவளின் திமிர் தெறிக்கும் பேச்சு, அவனுக்கு முதல்முறை ரசித்தது.

 

தான் சற்று அசைந்தாலும் அந்த கூர்முனை கிழித்துவிடும் என்று எச்சரிக்கையாக அசையாமல் நின்றவன், “ம்ம் ஒத்துக்குறேன். இந்த கத்தி உன்ன ஓரளவுக்கு பாதுகாக்கும் தான். ஆனா இதை மட்டும் நம்பி நீ பெரிய ரிஸ்க் எல்லாம் எடுக்கக்கூடாது” பெரியவனாக அவளுக்கு அறிவுறுத்தவும் செய்தான்.

 

சுவாதி ஓர் அசட்டை தலை சிலுப்பலுடன், கையை விலக்கியவள், “இது பேரு கத்தி இல்ல. குத்து வாள்னு சொல்லுவாங்க.” என்று சொன்னாள்.

 

“குத்துவாளா?!” அவள் கையிலிருந்த ஆயுதத்தைப் பார்த்தான். சிறு கத்தி போன்ற அமைப்பில், அசாத்திய கூர்முனையோடு பளபளத்தது. ஆனால் அதன் கைப்பிடியும், அதை அவள் பிடித்திருக்கும் விதமும் வித்தியாசமாக இருந்தது.

 

“இது குத்துவாள். எங்க குடும்பத்துக்கு சொந்தமானது. இது பார்க்க சாதாரணமா தான் இருக்கும். ஆனா…” என்றவள், அவன் முன்னால் அதை விரிக்க, அவன் கண்களும் அகல விரிந்தன. அந்த சிறு கத்தி நான்கைந்து கூர்முனைகளாக விரிந்து மூடியது. 

 

“ஏய்… இதெப்படி!” அவன் அதிசயமாக அந்த கத்தியை வாங்கிப் பார்த்தான்.

 

“அது அப்படித்தான், எதிரிங்க வயித்துல குத்தி ஒரு திருப்பு திருப்புனா போதும், கத்தி நாலா விரிஞ்சி அவன் குடலை எல்லாம் துண்டு துண்டாக்கிடும். அப்புறம் அவனுக்கு உசுரு மிஞ்சாது.” சுவாதி சர்வசாதாரணமாக சொல்ல, அதை நினைத்து பார்க்கவே தனசேகரனுக்கு வியப்பாக இருந்தது.

 

அவள் மறுபடி அந்த கத்தியை வாங்கி இடைக்குள் மறைத்து வைக்க, “ஏய்… அங்கயா வச்சிருக்க? ரொம்ப ஷார்ப்பா இருக்கு வயித்த கிழிச்சிட போகுது” அவன் நிஜமாக பதறினான்.

 

அவன் பதற்றத்தில் சிரித்தவன், “அதெல்லாம் குத்தாது. ஏழு வயசுல இருந்து இதை வச்சிருக்கேன்… இது இல்லாம எங்க வீட்ல என்னைய வெளியவே விடமாட்டாங்க” சுவாதி பெருமையாகச் சொல்ல,

 

“பரவால்ல நல்ல வழக்கம் தான்.” என்றான் அவனும் மெச்சலாக. 

 

இருவருக்கிடையே பேச்சு வார்த்தை சுமூகமாக சென்றாலும், அவர்களுக்குள் நட்பென்ற உறவை இருவருமே வளர்த்துக்கொள்ள முயலவில்லை. சுவாதி வருவாள், சந்தேகம் கேட்பாள், தன் வேலை முடிந்தது என்று சென்றுவிடுவாள். தனாவும் படிப்பை தவிர்த்து அவளிடம் வேறு எதையும் பேசுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இருவருக்கிடையே படிப்பை தவிர்த்து பேச எதுவும் இருக்கவில்லை. 

 

அந்த வயதில் வீட்டிலும் வெளியிலும், ‘படிப்பு தான் உனக்கு முக்கியம் அதைத் தவிர வேற எதுவுமே முக்கியமில்லை’ என்ற வசனத்தை வெவ்வேறு நிலைகளில் கேட்டு கேட்டு, அதுவே அவர்களுக்குள்ளும் அழுத்தமாக பதிந்திருந்தது. படிப்பில் மட்டும் ஜெயித்து விட்டால், முழு வாழ்க்கையிலும் ஜெயித்து விடலாம் என்ற கனவுகளோடு புத்தகப்புழுக்களாக இருந்தனர் இருவரும்.

 

அந்த வருடம் அப்படியே முடிந்திருந்தது. அன்றும் வழக்கம்போல கல்மண்டபத்திற்கு வந்திருந்தவனுக்கு என்னவோ மனதில் வெறுமை சூழ்ந்தது. இத்தோடு நான்கு வாரங்களாக சுவாதி அவனை சந்திக்க வந்திருக்கவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு சென்ற வாரமே முடிந்திருக்க, இன்று வருவாள் என்ற எதிர்பார்ப்போடு வந்திருந்தான். அந்த எதிர்பார்ப்பு அவனுக்கு ஏமாற்றத்தை தந்திருந்தது.

 

“இப்ப எதுக்காக அவளை தேடுற? நீ போற போக்கே சரியில்லை சொல்லிட்டேன். அவளுக்கு மட்டும் நீ அவளை தேடுறேன்னு தெரிஞ்சது கல்ல கொண்டு அடிப்பா… இல்ல வச்சிருக்காளே கத்தி அதாலயே உன் சோலிய முடிச்சுடுவா…” தனா அடங்காமல் தவிக்கும் தன் மனதை கடிந்து கொண்டு, அதை அடக்கி ஒடுக்க முயன்றான்.

 

ம்ஹூம், புத்தகத்தில் கவனம் செல்லவில்லை. எழுந்து அந்த இடத்தில் காலாற சுற்றினான். அங்கே ஒரு மரத்தடியில் சில காலி மதுப்பாட்டில்கள் அவன் கண்ணில் பட, அவன் பார்வை அந்த இடத்தை சுற்றிலும் மறுமுறை அலசி வந்தது. வேறெங்கும் எதுவுமில்லை. இங்கே மட்டுமே மதுபாட்டில்கள் இருந்தன.

 

அந்த இடத்தின் அமானுஷ்ய கதைகளை நம்பி பெரும்பாலும் யாரும் வருவதில்லை. ஆனால் எப்போதாவது, குடிகாரர்கள், திருடர்கள், மறைந்து தவறு செய்ய துணிபவர்களுக்கு இந்த இடம் நல்ல மறைவாக இருப்பதால் இங்கே வருவது வழக்கம். அப்படி யாரையாவது பார்த்தால் தனா தன் பாணியில் அவர்களை பயமுறுத்தி விரட்டி விடுவான். ஏனோ அந்த இடம் அசுத்தமாவதில் அவனுக்கு அத்தனை உடன்பாடு இல்லை.

 

அந்த யோசனையோடு திரும்பியவன், கல்மேடையில் தனியாக அமர்ந்திருந்த சுவாதியைப் பார்த்துவிட்டு, ஒரு நொடி அசையாது நின்று விட்டான். 

 

‘அவள் வந்து விட்டாள்… தன்னை தேடி… தனக்காக வந்துவிட்டாள்’ அந்த உணர்வின் கனத்தை அவனால் சட்டென தாங்கிக்கொள்ள முடியாமல் திண்டாடி நின்றிருந்தவனை, சுவாதிஸ்ரீயின் வார்த்தைகள் இன்னும் திக்குமுக்காட செய்தது.

 

அவனை பார்த்து விட்டு அவனிடம் உம்மென்ற முகத்துடன் வந்து நின்றவள், “எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதி இருக்கேன். கொஸ்டீன் பேப்பரெல்லாம் ஈஸியா வந்தது. எல்லாமே படிச்ச கொஸ்டீன்… எதையும் விடல. எல்லாத்தையும் கரைக்டா எழுதிட்டேன்.” என்று நிறுத்தினாள்.

 

மகிழ்ச்சியாக துள்ளலுடன் சொல்ல வேண்டியதை ஏன் இப்படி உம்மென்ற முகத்துடன் சுரத்தையே இல்லாமல் சொல்கிறாள்? என்று அவளையே பார்த்திருந்தான் தனா.

 

வழக்கத்திற்கு மாறாக அவள் பாதங்கள் தரையில் தங்காமல், அல்லாடி தள்ளாடி நிற்க, கண்களும் அங்குமிங்குமாக தவிப்பாக அலையாடின. கைகளிரண்டையும் பிசைந்து கொண்டு நின்ற அவளின் பரிதவிப்பு எதற்காக என்று அவனுக்கு தெளிவாகப் புரியவில்லை.

 

“என்னாச்சு சுவாதி. வீட்ல ஏதாவது பிரச்சனையா உனக்கு?” அவன் கேட்டதும், அவள் விழிகள் குளங்கட்டிக் கொண்டன.

 

“ஏன் அழற? என்னாச்சு?” அவளின் கலங்கிய முகம் அவனை கலவரப்படுத்த, 

 

“நீயே என்னை கல்யாணம் கட்டிக்கிறியா தனா? உன்ன பார்க்காம இருக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நீயில்லாம நான்… மூச்சு முட்டி செத்துடுவேன் போல இருக்குடா…” விழிகள் கலங்கி உதடுகள் நடுங்க சொன்னவளை, அப்படியே அள்ளிச் சேர்த்துக்கொள்ள தோன்றியது அவனுக்கு.

 

நெஞ்சம் விம்மும் பரவசத்தோடு அவளருகில் வந்தவன், “நான் தான் முன்னயே சொன்னேனில்ல… நாம ரெண்டு பேரும் அடிக்கடி சந்திக்கறது அவ்வளோ நல்லதுக்கு இல்லனு… அப்ப சொன்னா நீ புரிஞ்சிக்கல, இப்பவாவது புரியுதா?” நெஞ்சம் நிறைந்த சிரிப்போடு கேட்டவன், குனிந்து அவள் நெற்றியோடு நெற்றி முட்டி நின்றான்.

 

“தனா…” அவன் பெயரைத் தவிர அவளுக்கு வேறு எதையும் உச்சரிக்க வரவில்லை. 

 

அவன் தன்னில் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துவான் என்று அவளும் முன்பு எண்ணியிருக்கவில்லை. ‘இவனெல்லாம் தனக்கு இணையா?’ என்ற அவளின் இறுமாப்பு எப்போது தகர்ந்து போனது? எப்படி அவனை தன் உள்ளம் இத்தனை ஆழமாய் நேசிக்க ஆரம்பித்தது என்று அவளுக்கே தெளிவாக புரியவில்லை. 

 

தேர்வு முடியும் வரை பெரிதாக எதுவும் தோன்றி இருக்கவில்லை. அதற்கு பிறகான நாட்களில் தனாவை தவிர்த்து அவளால் எதையுமே யோசிக்க முடியவில்லை. தனக்குத் தானே போராடி திண்டாடி, இப்போது அவனிடமே அடைக்கலமாக வந்திருக்கிறாள். 

***

(தாமதத்திற்கு மன்னிக்கவும்… அடுத்த எபில பிளாஷ்பேக் முடிஞ்சிடும் மக்களே! உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி 😍)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!