என் முன்னாள் காதலி 24

என் முன்னாள் காதலி 24

என் முன்னாள் காதலி 24

அவர்கள் தென்காசி சென்று சேரும் முன்னமே, சோஷியல் மீடியாக்களில் பவன்யாஷ் பற்றிய செய்திகள் தீயை விட வேகமாக பரவி வந்தன.

‘பாஸ் தேடி அலையும் அந்த பெண் யார்?’

‘அவரின் முன்னாள் காதலியா?’

‘அப்ப நம்ம பாஸ் ஹீரோக்கு நிஜமாவே ஆள் இருக்கா என்ன?’

‘அந்த பெண் யார்? பவன்யாஷுக்கு அவள் காதலி மட்டும் தானா? இல்ல…’

முன்பு‌ புகைந்து அடங்கியிருந்த பவன்’ஸ் எக்ஸ் லவ்வர் ஆஸ்டேக் உடன், பவன்யாஷ் பற்றிய வதந்திகள் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தாறுமாறாக பரவி கொண்டே போக, அதையெல்லாம் பார்த்து திருக்குமரன் நொந்து போனான். இதில் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்த அலைபேசி அழைப்புகள் வேறு.

“திரு, அந்த மொபைலை சைலண்ட்ல போடுங்க இல்ல தூக்கி வெளியே போடுங்க” பவன்யாஷ் கடுப்பாகி கத்திவிட, தன் ஐபோனை காருக்கு வெளியே வீசும் எண்ணமெல்லாம் திருவுக்கு நிச்சயமாக இல்லை. உடனே சைலண்ட் மோடில் வைத்துவிட்டான்‌.

தென்காசி காவல்நிலையத்தின் முன்பு அவர்கள்‌ கார் நிற்க, இப்போதும் திருக்குமரன் முதலில் இறங்கி உள்ளே சென்று பேசிவிட்டு வெளியே வந்தழைக்க, பவன்யாஷ் இறங்கி மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காத வகையில், காவல்துறை ஆய்வாளரை சந்தித்தனர்.

ஆய்வாளர் மணிகண்டன், “சுவாதி காணாமபோன கொஞ்ச தூரம் தள்ளி, ரோட்டோர புதர்ல ஒரு ஹேண்டபேக் கிடந்தது. இந்த பேக் சுவாதிவோடது தானா, பார்த்து சொல்லுங்க சார்.” என்று அவர்களிடம் ஒரு தோள்பையைக் காட்டினார்.

பவன்யாஷ் அதைப் பார்த்ததும்,

“இது சுவாதியோட பேக் தான் இன்ஸ்பெக்டர், சுவாதி பத்தி தகவல் ஏதாவது கிடைச்சதா?” கேட்டவன் குரலிலும் இதுவரை இல்லாத அத்தனை பரிதவிப்பு.

“நாங்க தேடிட்டு இருக்கோம் சார். யாரோ அந்த பையை வீசிட்டு போயிருக்கணும். இது… கடத்தலா இருக்க வாய்ப்பு அதிகம் சார்.” மணிகண்டன் சந்தேகமாகச் சொன்னவர், “அவங்க பேக்ல இந்த லெட்டர் இருந்தது. இது சுவாதியோட கையெழுத்து தானே?” என்று அவர் ஒரு காதிதத்தை நீட்ட, அதை வாங்கி படித்தவனின் நெற்றி தசைகள் சுருங்கின.

‘என் இறப்புக்கு யாரும் காரணமல்ல. என் முடிவை நானே தேடிக்கிறேன். எங்க அப்பா ஈஸ்வரமூர்த்தி எந்த கொலைக்குற்றமும் செய்யல. நான் செய்த கொலைக்கு தான் அவர் எனக்காக தண்டனை அனுபவிச்சிட்டு இருக்காரு. இதை என் மரண வாக்குமூலமாக ஏற்று என் தந்தையை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.’

‘சுவாதிஸ்ரீ’ என்ற கையொப்பத்தோடு முடிந்திருந்தது அந்த கடிதம். 

எட்டிப்பார்த்து படித்த திருக்குமரனின் கண்கள் சாசர் அளவு விரிந்தன. “என்னாது கொலை பண்ணதை கொழம்பு வச்ச மாதிரி இவ்வளோ சிம்புளா எழுதி வச்சிருக்கா!” 

அவன் முணுமுணுப்பு கேட்டு பவன்யாஷ் அவனை கண்டனமாக முறைக்க, திரு வேகமாக தலையாட்டி நேராக அமர்ந்துகொண்டான்.

“இது சுவாதியோட கையெழுத்து தான் இன்ஸ்பெக்டர். இந்த லெட்டர் பத்தி அவகிட்ட நேரடியா விசாரிக்காம நாம ஒரு முடிவுக்கு வரவேண்டாமே ப்ளீஸ்… இப்ப முதல்ல அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சாகணும். இந்த பேக் உங்களுக்கு எந்த ரூட்ல கிடைச்சது?” பவன்யாஷ் கேட்டான்.

இன்ஸ்பெக்டர் தலையசைத்து, “புளியங்குடி ரூட்ல தான் பேக் கிடைச்சது. அங்க சுவாதியோட சித்தப்பாவ விசாரிச்சதுல, அவருக்கும் ஒன்னும் தெரியல. என் அண்ணன் பசங்கள பார்த்து அஞ்சு வருசம் ஆச்சுன்னு சத்தியமே பண்றாரு. உங்களுக்கு வேற யார் மேலையாவது சந்தேகம் இருக்கா?” என்று வினவினார்.

“இங்க சுவாதிக்கும் அவளோட தம்பிக்கும் ஆபத்து இருக்குனு தெரியும்…” என்றவனுக்கு அதன் முழுவிவரம் தெரிந்திருக்கவில்லை. 

“சுவாதியோட தம்பி இப்ப இருக்க இடம் தெரிஞ்சா, அவன்கிட்ட விசாரிக்கலாம் ஏதாவது விவரம் கிடைக்கும்.” என்ற ஆய்வாளரிடம் மறுப்பாக தலையசைத்தவன், “யதுநந்தன் இங்க இல்ல. நீலகிரி ரெஸிடன்ஸி கான்வென்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கான். அங்கேயே ஹாஸ்டல்ல தனியா தான் தங்கி படிக்கிறான். அவனுக்கு எதுவும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.” பவன்யாஷ் விளக்கம் சொன்னான்.

“மிஸ்டர் பவன்யாஷ், சுவாதி காணாம போய் ரெண்டு நாளாச்சு. அட்லீஸ்ட் அவங்ககிட்ட மொபைல் இருந்தாலாவது டிராக் பண்ணலாம் அதுவும் இல்ல. இப்ப அவங்க எப்படி இருக்காங்கனும் தெரியல. ஏதாவது தப்பாயிடுச்சினா…” மணிகண்டன் முடிக்காமல் நிறுத்தி அவனை பார்க்க, பவன்யாஷ் பார்வை அவரை நேர்நோக்கியது.

“அவளுக்கு எதுவும் ஆகாது… அப்படியொன்னும் அவ கோழை இல்ல இன்ஸ்பெக்டர்” உறுதியான குரலில் சொன்னதோடு அவன் எழுந்து கொண்டான்.

“நீங்க சொல்ற மாதிரி தைரியமான பொண்ணா இருந்தா சந்தோஷம் தான் சார். சுவாதிய பைக்ல மோதிட்டு போனவனை உள்ள வச்சு விசாரிச்சிட்டு இருக்கோம். அவனுக்கு ஏதாவது தெரியுதான்னு பார்க்கலாம்.” என்றபடி மணிகண்டனும் எழுந்து வந்தார். அவரிடம் கைக்கொடுத்து தலையசைப்பை தந்துவிட்டு பவன்யாஷ் கிளம்பி விட்டான்.

நேற்று முதல் தொடர் அலைச்சல். இரவில் சற்றும் உறங்காமல் வந்த பயணகளைப்பு வேறு. திருக்குமரனுக்கு கண்கள் சொருகியது. தலையை உலுக்கி கண்களை திறந்து வைத்து உட்கார்ந்து இருந்தான். 

காரை இயக்கி வந்த பவன்யாஷ், “நீங்க தூங்குங்க திரு. நோ பிராப்ளம்” அவன் அவஸ்தையை பார்த்துச் சொல்லவும்,

“உங்களுக்கும் ரெஸ்ட் அவசியம் பாஸ்.” திரு தயக்கமாகச் சொன்னான்.

“ஷூட்டிங் டைம்ல முழிச்சிருந்து எனக்கு பழக்கம் தான் திரு. நான் சமாளிச்சிக்குவேன்” என்றவன் குரலில் சற்றும் உயிர்ப்பிருக்கவில்லை.

அதை கவனித்து வருந்திய திரு, “இப்ப எங்க போறோம் பாஸ்?” தயக்கமாக வினவினான்.

“எங்க வாத்திராய்யாவ பார்க்க போறோம். அவர்கிட்ட சில விசயத்தை தெளிவு படுத்திக்கணும்” என்றவன் கைகளில் கார் சீறிச் சென்றது.

சாலையின் ஓரம் மரநிழலில் காரை நிறுத்திவிட்டு, நெல்வயல் குறுக்கே நீண்டிருந்த வரப்புகளில் இறங்கி நடந்தான் பவன்யாஷ். சற்று தூரம் தள்ளி விளைநிலத்திற்கு நடுவில் அமைந்திருந்தது மருது தாத்தாவின் வீடு. முன்பு ஓடு வேயப்பட்டிருந்த ஓட்டுவீடு, இப்போது சிமெண்ட் சீட் போர்த்தி காட்சிதந்தது. அவ்வளவுதான் அதை தவிர்த்து அங்கே பெரிய வித்தியாசம் எதுவும் தனாவுக்கு தெரியவில்லை.

“ஐயா… ஐயா…” இரண்டு மூன்று அழைப்பிற்கு பிறகு, வீட்டின் பின்பக்கமிருந்து வெளியே வந்தார் பெரியவர்.

முன்பு கட்டுமஸ்தாக முறுக்கேறி இருந்த தேகம் மெலிந்து, எப்போதும் நிமிர்ந்த நடையோடு இருப்பவரின் நடை தளர்ந்து சற்றே வளைந்த முதுகோடு வந்த மருது தாத்தாவை பார்த்தவனுக்கு என்னவோ போலானது.

அவர் அருகில் வரும்முன்னே இவன் அவரிடம் விரைந்தான். “யாருப்பா நீங்க?” சுருக்கம் விழுந்திருந்த கண்களை மேலும் சுருக்கி பார்த்தும், அவர்களை அடையாளம் காணமுடியாமல் கேட்டவரை வாஞ்சையுடன் பார்த்தவன், “வாத்தியாரய்யா… என்னை தெரியலையா? நான் தனா… உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என கேட்டவன், குருவுக்கு மரியாதையாக அவர் பாதம் தொட்டு வணக்கம் வைத்தான்.

“அட, நம்ம தனா பயலா நீயீ!” என்றபடி அவனை உற்றுப்பார்த்தவர்‌‌ முகம் விளக்கொளி பட்டது போல பளீச்சென்றானது.

“ஏல, எம்புட்டு வருசமாச்சு உன்ன பார்த்து, நல்ல உசரமா வளர்ந்து நிக்கறலே” என்றவர்‌ அவன் இரு தோளையும் தன் பலம் கொண்ட மட்டும் கைகளால் அழுந்த பற்றி சோதித்து பார்த்து, “பரவால்லலே, உடம்ப சும்மா கன்னு மாதிரி தான் வச்சிருக்க ம்ம்” என்று திருப்தியாக தட்டிக்கொடுத்தார்.

அதில் தனாவின் முகத்தில் சிறுமுறுவல் தொன்ற, “ஆமா, நீ மட்டும் வந்திருக்க,‌ சுவாதி பாப்பா எங்கலே?” அவர் அடுத்து கேட்டதில், அவன் முகத்தின் மலர்ச்சி மறைந்துபோனது.

சுவாதி காணாமல் போனது பற்றி அவரிடம் மேலோட்டமாக சொல்ல, மருது தாத்தா முகம் பதைபதைப்பைக் காட்டியது. “உன்ன நம்பி அனுப்புன புள்ளய இப்படி அல்லாட விட்டுட்டியேயா? உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல தனா… உன் உசுருக்கு ஆபத்து வந்திடக்கூடாதுன்னு தன்னை தானே வருத்திக்கிச்சியா அந்த புள்ள… அந்த புள்ளய விட்டுட்டியேயா?” ஆதங்கமும் வருத்தமுமாக அந்த பெரியவர்‌ சொன்ன விசயம் இவனுக்கு புதியது.

“எனக்கு என்ன ஆபத்து? நீங்க சொல்றது புரியலை வாத்திராய்யா”

“நீயும் பாப்பாவும் ஆசைப்பட்டு பழகற விசயம், ஈஸ்வரமூர்த்தி ஐயாவுக்கு தெரிஞ்சா உன்ன பொலி போட்டுருவாருன்னு பயந்து தான்ல, உன்ன வெறுக்கற மாதிரி பேசி உன்ன பிரிஞ்சு வந்துடுச்சு…” பெரியவர் சொன்னதும் தனாவின் தாடைகள் இறுக, அவனுக்குள் திகுதிகுவென கோபம் கனன்றது.

“என்னது? அவ அப்பன் என்னை கொன்னுடுவான்னு பயந்து என்னைவிட்டு போனாளா? அவளுக்கென்ன பையத்தியமா? நீங்க கூட என்கிட்ட சொல்லாம மறச்சிட்டீங்கல்ல வாத்திராய்யா” அவனுக்குள் பெரும்புயலாய் வியாபித்த ஆற்றாமையை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. 

தன்னையும் தன் நேசத்தையும் ஒரே நாளில் எப்படி அவளால் அத்தனை சுலபமாக தூக்கி எறிய இயன்றது என்று எத்தனை எத்தனை இரவுகள், எண்ணி எண்ணி குமைந்திருப்பான். தன் நேசம், தன்னுடனான நெருக்கம் எதுவுமே அவளை பாதிக்கவில்லையா? உயிரின் ஆழம் வரை வேர்விட்ட அவளுக்கான நேசத்தை, ஏதோ அசிங்கத்தை துடைத்தெறிவதை போல வீசிவிட்டு சென்றுவிட்டாளே! என இன்றளவும், அவள் தன்னருகிலே இருந்தும் கூட அவளை முழுதாக ஏற்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் அல்லாடி இருப்பான்… அதையெல்லாம் எண்ண எண்ண அவனுக்குள் ஆத்திரம் மேலும் மேலும் கூடியதே தவிர, சற்றும் அடங்க மறுத்தது.

“இல்ல தனா, அவங்க சமூகத்து சாதிவெறி பத்தி நான் தான் முன்னமே சொன்னனே. நீ தான் அசட்டு பண்ணிட்ட. பாப்பாவுக்கு புரியவைக்க முயற்சி பண்ணேன் பாப்பாவும் முதல்ல புரிஞ்சிக்கல. அவங்க அம்மாவும் பாட்டியும் சொன்னதுக்கு அப்புறம் தான் பாப்பாவுக்கு பயமே புடிச்சிக்கிச்சு. துர்காம்மா கொஞ்சமும் இரக்கமில்லாம சாட்டையில வெளுத்துபுட்டாங்க. பாவம் காயம் ஆறவே பாப்பாக்கு பலநாள் ஆச்சு” என்றோ நடந்து முடிந்ததை இன்று வேதனையோடு சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

ஆனாலும், தனசேகரன் மலையிறங்குவதாக இல்லை. “அந்த எல்லா மண்ணாங்கட்டியும் தெரிஞ்சு தான அவ காதலை ஏத்துக்கிட்டேன். உசுருக்கு‌ பயந்து அவளை பாதியில விட்டு ஓடவா மனசுக்குள்ள அத்தனை ஆசைய வளர்த்துக்கிட்டேன். நான் என்ன வெலில காய்க்கிற நெல்லிக்காவா, கண்டவன் வந்து என் தலைய வெட்டி பறிச்சிட்டு போறத்துக்கு… என்னையும் என் காதலையும் எப்படி காப்பாத்திக்கனும்னு எனக்கு தெரியாதா? பெருசா தியாகம் பண்ணாளாமா அவ… அவ பண்ணி கிழிச்ச தியாகத்துல என்ன பலனை கண்டுட்டா…?”

சின்ன பொய்யால், இடையில் இழந்துபோன எட்டு வருட காதல்பிரிவுத் துயரை எதைக்கொண்டு நிரப்ப முடியும் அவனால்! இப்போது அவளை தொலைத்துவிட்டு அல்லாடும் நிலைவேறு அவன் பொறுமையை அதிகம் சோதித்து கொண்டிருக்க, அந்த மண்தரை அதிர காலை தரை நோக்கி உதைத்து மிதித்தான். வெடித்து சிதறும் எரிமலையாக அவன் நெஞ்சத்தில் அனல் வழிந்தது.

மருது பெரியவர் கூட தனாவிடம் இத்தனை கோபத்தை எதிர்பார்க்கவில்லை. சற்றே திகைத்து அவனை பார்த்திருந்தார்.

நொடிகளில் தன்னை முயன்று மீட்டுக்கொண்டவன், “முன்ன போனதெல்லாம் விடுங்க வாத்தியாரய்யா, இப்ப ஸ்ரீ எங்க இருப்பான்னு உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.

“வேறெங்க அந்த பரமேஸ்வரன் ஆளுங்க கண்ணுல பாப்பா மாட்டியிருக்கும், அவன் தூக்கியிருப்பான்.” என்றவர் குரலே மிகுந்த கவலையைக் காட்டியது.

“யார் அந்த பரமேஸ்வரன்?” தனாவின் ஒற்றை கேள்விக்கு அவர் சொன்ன விளக்கம் பெரிதாக இருந்தது.

அதேநேரம்,

முழுதாய் இரண்டு நாட்களாக தண்ணீர் ஆகாரம் இன்றி, சுருண்டு கிடந்த சுவாதிஸ்ரீயின் பார்வை, பகலிலும் இருளடைந்திருந்த இடத்தில் சிறு வெளிச்சப்புள்ளியை நுழைந்திருந்த ஒற்றை வெளிச்சப்புள்ளியை வெறித்திருந்தது.

அவள் கைகள் பின்புறம் சேர்த்து கட்டப்பட்டிருக்க, கால்கள் முட்டியோடு சேர்த்து அசையவிடாமல் கட்டப்பட்டிருந்தது. பிளந்த இதழ்களுக்கிடையே துணியை வைத்து பின்னந்தலையோடு இறுக்கி கட்டப்பட்டிருப்பதில், திறந்திருந்த வாயிலும் தாடைப்பகுதியிலும் அத்தனை வலி ஓயாமல் விறுவிறுத்தது.

அவர்கள் அவளை காருக்குள் இழுத்துப் போட்டு கடத்தி வரும்போது அவளிடம் எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை. ஒருவித மந்தமான மனநிலையில் தான் கடத்தியவர்களை கவனித்து வந்தாள். இங்கே கொண்டு வந்து கட்டிப்போடும் போதும், அவர்கள் பேசிய பேச்சும் அவளுக்கு புரிய வைத்தது, தானாக வந்து சரியாக புலிக்குகைக்குள் மாட்டியிருக்கிறோம் என்று.

அதற்கு பிறகும் அவள் தப்பிக்க எல்லாம் பெரிதாக முயற்சி செய்யவில்லை. என்ன செய்து விடுவார்கள் பார்க்கலாம் என்ற அவளின்‌ அசட்டை குணம் தலைதூக்கி நின்றது.

ஆனால், நேற்று மாலையில் அவளால் நிச்சயம் தாங்க முடியவில்லை. இத்தனை அவஸ்தையை பாவம் அவள் எதிர்பார்க்கவும் இல்லை. முழுநாளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தவளுக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம். ஒருநிலையில் பொறுக்க முடியாமல் அவள் முடிந்தமட்டும் கத்தி கூச்சலிட, காவலுக்கு நின்றவர்கள் அவளை அதட்டி அடக்க முயன்றனர். அவர்களுக்கு உணவு கொண்டு வந்திருந்த வயதான கிழவிக்கு அந்த பெண்ணின் அவஸ்தை புரிந்திருக்க வேண்டும்.

“ஏலே அந்த புள்ள ஒதுங்கணும் போலயிருக்கடா, கயித்த(கயிறு) அவுத்து உடுங்கடா” என்று அதட்டினார்.

“ஆங்… இதான் சாக்குனு தப்பிச்சு போயிடுச்சுனா?” ஒருவன் இழுத்தான்.

“அட போக்கத்தைவங்களா, பொட்ட புள்ள அவஸ்தை புரியாம பேசிகிட்டு, அந்த புள்ள தப்பிச்சா ஓடி புடிக்க துப்பில்ல உங்களுக்கு. போய் கட்ட பிரிச்சு விடுவீங்களா” அந்த கிழவியின் அதட்டலில் அவள் கால்கட்டு அவிழ்க்கப்பட, சுவாதிக்கு அப்பாடா என்றது.

மரத்திருந்த கால்களையும் சட்டை செய்யாமல், அந்த கிழவி அழைத்துச் செல்ல மறைவுக்குள் ஒதுங்கி இருந்தாள்.

அவளுக்கு தப்பிக்கும் எண்ணமெல்லாம் சற்றும் இருக்கவில்லை போல, அமைதியாக திரும்பி வந்து அந்த அறைக்குள் அடைந்து கொண்டாள். அப்போது தான் அந்த இடத்தை ஓரளவு கவனித்து கொண்டாள்.

அது ஒரு செங்கல் சூளை. வெட்டவெளி பரப்பில் குவிக்கப்பட்டிருந்த மண் குவியலும்,‌ அடுக்கடுக்காக அங்கங்க அடுக்கப்பட்டிருந்த செங்கல் அடுக்குகளும் மட்டுமே சுற்றிலும் பார்வைக்கு எட்டும் வரை அந்த இடத்தை ஆக்கரமித்திருந்தது. 

அந்த சூளையை ஒட்டி அமைத்திருந்த சிறு அறையில் தான் அவள் அடைக்கப்பட்டிருந்தாள்.

இரண்டு நாட்கள் உணவு தண்ணீர் இறங்காததில் நேற்றைய அவஸ்தை இன்று இல்லை. அதில் அவளுக்குள் ஓர் ஆசுவாசம் கூட.

என்ன விந்தையோ மாயமோ இரண்டு நாட்கள் சோறு தண்ணி இல்லாமல் இருந்தும் அவளுக்குள் அதிக சோர்வு ஏற்பட்டிருக்கவில்லை என வியப்பாக எண்ணிக்கொண்டாள்.

இதில் விந்தை என்ன இருக்கிறது? ஒரு மாதம் முழுவதும் விழுங்க வேண்டிய சத்து மாத்திரைகளை ஒரே மூச்சில் உண்டதால் வந்த நல்வினை இது. அதற்கான தீவினை போகபோகத் தெரியும் போல. 

இத்தனை வருடங்கள் தன்னை சுத்தலில் விட்ட பகையாளியை நேருக்குநேர் சந்திக்கப்போகும் வாய்ப்புக்காகத் தான் சுவாதியும் காத்திருக்கிறாள். அந்த பெரிய மனிதன் தான் வந்த பாடாய் காணோம்.

துரதிர்ஷ்டவசமாக அமைந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தன்னால் விளைந்த பகையை தானே முடித்து வைக்க வேண்டும் என்ற உறுதிபூண்டவளுக்கு தனாவின் எண்ணம் கூட மட்டுப்பட்டிருந்தது. அவனை தவிர்த்து அவள் வாழ்வில் நடந்தேறிய, நடந்திருக்கக்கக்கூடாத நிகழ்வுகள் எல்லாம் அவளின் நினைவில் ஓயாமல் சுற்றி சுழன்று வந்தது. 

*** 

அடுத்த பதிவு புதன்கிழமை… நன்றி ❤️

 

error: Content is protected !!