ஏப்ரல்-4

ஏப்ரல்-4

ஏப்ரல் – 4
 
“விழிகளில் அருகினில் வானம்..” என்ற பாடலை மெல்லிய முணுமுணுப்பாய் பாடிக்கொண்டே இடக்கையில் உப்பு ஜாடியை எடுத்தவன் வலக் கை இரு விரல் கொண்டு பனிச்சாரலாய் அதை கொதித்துக்கொண்டிருந்த குழம்பில் தூவினான் வெற்றி. 
 
அடுத்த இரண்டு வரிகள் என்னவென்று தெரியாததால் வாய்க்குள்ளேயே முணுமுணுப்பாய் பாடியவன் பாதங்கள் இரண்டையும் ஒவ்வொன்றாய் தரையில் தட்டி மிதப்பதுபோலொரு பாவனையுடன் வலக்கையில் இருந்த கரண்டியை மைக்காகவும் இடக்கையை பறப்பது போலவும் அசைத்தபடி அடுக்களையில் தனி கான்சர்ட் ஒன்றையே நடாத்திக்கொண்டிருந்தான். 
 
சற்றே உடலை குறுக்கி குனிந்து,
“என் முதல் முதல் அனுபவம் ஓ யே” என்று ஹை பிட்ச்சில் பாடியவன் சடாரென்று “மேகம் கருக்குது தப்புச்சிக்கு தப்புச்சிக்” என ட்ராக் மாறினான். ரீமிக்ஸ் இல்லாத வெற்றி கான்சர்ட்டா? நெவர்! 
 
மாயலோகமொன்றில் மங்கையருக்கு நடுவில் மேடையேறி பாடிக்கொண்டிருந்தவனை மடாரென்று மண்டையிலேயே தட்டி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது பக்கத்து அறையில் அதாவது முகப்பறையில் அலறிக்கொண்டிருந்த “ராத்திரி நேரத்து பூஜையில்” 
 
கனவிலிருந்து கடாசப்பட்டவனின் கடுப்பு ஏகத்திற்கும் இருக்க அது அத்தனையும் சென்று நின்ற இடம் என்னவோ ஏப்ரல் தான். 
 
“கற்பனைல கூட கமிட்டாக விடமாட்டா!” கறுவிக்கொண்டே வெளியேறிவனின் பார்வையில் அவள் படவேயில்லை. மாறாய் முகப்பறை இருக்கையில் விழுந்து கிடந்த ஏப்ரலின் அலைபேசியும் அதை தாண்டிக்கொண்டு “ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே” என்று அலறிக்கொண்டிருந்த அவள் அறையும் அப்பொழுதுதான் கருத்தில் விழுந்தது. 
 
அந்த ‘ராத்திரி நேரத்தை’ எட்டிப் பார்த்தான் அவளுக்குத்தான், யாரோ அழைத்துக்கொண்டிருந்தனர். ஆம், அதான் அவளது ரிங்டோன். 
 
‘எப்படிதான் இப்படியொரு ரிங்டோன வச்சிட்டு தெனாவெட்டா சுத்தறாளோ’ சாதாரண குரலில்,”ஏப்ரல் ஃபோன்” என்று கதவை தட்டிப் பார்த்தான். ம்ஹூம்! அசைவே இல்லை. “இவள!”
 
“ஏய் இந்தாமா ஏப்ரலு” என்று கூப்பிட்டுகொண்டே கதவு குமிழியில் கை வைக்க அது திறந்துக்கொண்டது. 
இன்னொரு முறை தட்டிப்பார்த்தவன் பிறகு “இந்தளவு கூடவா கேக்காது” என்று மெல்ல தலையை அறையினுள் நுழைத்தவாறு கதவை பாதியாய் திறந்தான். 
 
ஒரு தொள தொளா டீஷர்டும் அதற்கு அவளுக்கெனவே அளவெடுத்து தைத்தது போன்ற ஷார்ட்மாய், காதில் பெரிய ப்ளூ டூத் ஹெட்செட் ஒன்றை மாட்டிக்கொண்டு எதிர்புறமாய் திரும்பி நின்று ஆடிக்கொண்டிருந்தவளையே பார்த்தபடி நின்றுவிட்டான் வெற்றி. அந்த ஷார்ட்ஸ் போன வருட பிறப்பிற்கு அதிதி அவளுக்கு பரிசளித்தது. அந்த தொள தொளா சட்டை போன மாசம் வெற்றி வாங்கிய பை ஒன் கெட் ஒன் சலுகையில் வந்தது. அதிலும் அவள் அணிந்திருந்த இரண்டும் சற்றும் சம்பந்தமிராத வெவ்வேறு நிறத்தில் வேறு இருந்து தொலைக்க, தன்னை மறந்து ஆடுபவளையே பார்த்திருந்த வெற்றிக்கு அவன் எப்படி உணர்கிறான் என்றே புரியவில்லை. ஆனால் அவனது பார்வையில் வாஞ்சை மட்டும் வஞ்சகமில்லாமல் கூடியது. அவள் ப்ளூ டூத்தில் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்திருக்க வேண்டும் ஆனால் அவளது லாப்டாப் அவளை பழி வாங்கிவிட்டது. அதையறியாது அவள் சத்தத்தை கூட்டி வைத்து அலறவிட்டுக்கொண்டிருந்தாள். 
 
“ஜும்பாலே.. ஜும்பாலே.. ஜூம்பாலே.. ஹே!
ஜும்பாலே.. ஜும்பாலே.. ஜூம்பாலே..” என்று பாடியபடி ஆடிக்கொண்டே திரும்பியவள் யாரையும் அங்கு எதிர்பார்த்திராத அதிர்ச்சியில் நொடியில் அருகில், மேசையில் இருந்த தண்ணீர் தம்பளரை பறக்கவிட அது அவன் தலையில் லேண்டாகி அருவியாய் நனைத்து தரையில் சொட் சொட்டென சொட்ட “அய்யோ ஆத்தா!” என்று அலறியவனோ தலையை தேய்த்துக்கொண்டே அவளை கொலைவெறி பார்வை பார்த்தான்.
 
அவனை முந்திக்கொண்டவளோ நெஞ்சை நீவியபடி “எரும மாடு எரும மாடு! சொல்ட்டு வரமாட்ட? பிசாசு மாதிரி பின்னால நிக்கற பிசாசே” என்று கடிய வேற செய்ய வெற்றிக்கோ வெறியானது. 
 
“எதே” என்று பார்த்தவன் நாவை மடித்து கடித்தவாறு சுட்டு விரல் நீட்டி எச்சரித்தான்,”உனக்கு அவ்ளோதான் சொல்ட்டேன்! ஃபோனடிக்கினு சொல்ல வந்தவன க்லோஸ் பண்ண பாத்துட்டு பேச்ச பாரு பேரிச்சம்பளம் மாதிரி” 
 
அத்தனை தீவிரமான முகபாவத்துடன் அவன் பேசியதில் முணுக்கென்று சிரிப்பு வந்துவிட அதை வெகு பிரயத்னப்பட்டு அடக்கினாள் அவள். இல்லையென்றால் அவன் இன்னும் பேசுவானே! அதை யார் கேட்பது? 
 
அதை கவனித்துவிட்டவன், “என்ன சிரிக்கறியா..” என்று அடுத்த பத்து பக்க வசனத்தை தயார் நிலையில் கொண்டுவர அதற்குள் அவர்கள் இருவரின் கருத்திலும் பதியாமல் போயிருந்த பாட்டுச் சத்தம் விளம்பரங்கள் முடிந்து அடுத்த பாட்டை அலறவிடத் தயாராகியது. அவள் சப்ஸ்க்ரிஷனெல்லாம் வாங்குவதில்லை. அதற்கு பதிலாய் இடையில் வரும் விளம்பரங்களுக்கும் வைப் பண்ணிக்கொண்டே அடுத்த பாடலுக்கு கடந்துவிடும் தீர்க்கதரிசி. 
 
ஒரே எட்டில் கீபோர்டை தட்டி பாடலை நிறுத்தியவன் சிறு நிம்மதி மூச்சுடன் இவள் புறம் திரும்பினான்.
 
“ப்ளூ டூத் டிஸ்கனெக்ட் ஆனதுகூட தெரியாம அலறவிட்டுட்டு இருக்க! இதுல ஃபுல் வால்யூம்ல ஆபாச ரிங்க்டோன் வேற!” என்று கடுப்பாய் மொழிந்தவன் சட்டென குரலை இறக்கி நெஞ்சில் வலக்கையை வைத்துக்கொண்டு, “எனக்கு வர வர ஹௌஸ் ஓனர பாத்தாக்கூட பயமா இல்ல.. ஆனா உன்ன பாத்தாதான் பக்கோனு ஆகுது” என்று ஆஸ்கர் அளவில் நடித்துக்கொண்டிருக்க அவனையே ஒரு நொடி குறுகுறுவென பார்த்துவிட்டு பிடறியில் படீரென ஒன்று வைத்தவளோ, 
 
“கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமாவ ரிங்க்டோனா வச்சிருந்தவன்லாம் என் ரிங்க்டோன கொற சொல்றான்யா!” என்று விழிகளை அகல விரித்து அதீத ஆச்சர்ய பாவத்தை முகத்தில் காட்டியபடி அவனிடமே கேட்க வெற்றி வெகுண்டெழுந்தான்.
 
“ஹே! அதெல்லாம் வேற லெவல் பாட்டு” என்று சண்டைக்கு வர 
 
ஏப்ரலும்,”ஆமால்ல..” என்று சட்டென இறங்கி கனவில் மிதக்கும் விழிகளோடு சொல்ல 
 
வெற்றியும் அதே திசையில் அதே பார்வை பார்த்தபடி,”ஆமா..” என்றான். ஒரு முழு நிமிடம் கனவில் மிதந்தவர்களை மறுபடியும் கழுத்தை பிடித்து நிகழ் காலத்திற்கு இழுத்து வந்தது அவளது ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ 
 
அழகிய கனவு கலைந்ததில் கடுப்பானவன் ஏப்ரலை பார்வையாலே பந்தாடினான். 
 
அதை உணர்ந்தவளோ,”அது வைப்னா இதுவும் வைப்தான்! ரசனையில்லா ராக்கூன்களுக்கு அதெல்லாம் புரியாது” என்று தலையை சிலுப்பிட அங்கொன்றும் இங்கொன்றுமாய் பேண்டில் அடங்கியிராத கூந்தல் துள்ளி விழுந்தது. 
 
கைகளை குறுக்காய் கட்டிக்கொண்டு நின்றுக்கொண்டவனிடம் பழையபடி அந்த நக்கல் தொனி வந்திருந்தது,”ஏன் சொல்லமாட்ட? உன்ன மாதிரி ஒரு சைக்கோபாத்துக்கும் அவள மாதிரி ஒரு சோஷியோபாத்துக்கும் நடுவுல உசுர கைல பிடிச்சிட்டு வாழறேன்ல.. நீ இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ..” என்றவன் சுதாரிப்பதற்குள்
 
“யார பாத்துடா சைக்கோனு சொல்ற?” என்று அவன் காதை பிடித்து அவள் திருக அவனோ நொடிப்பொழுதில் அவள் காதை திருகிக்கொண்டிருந்தான்.
 
வெற்றி,”ஸ்ஆ.. ம்ம் ஆன்சைட் போன உன் ஆத்துகாரனதான்” என்று எகத்தாளமாய் நொடிக்க 
 
அவளோ இன்னும் திருகியபடி,”மங்குனி மங்குனி! மாமானு மரியாத இல்லாம மானாவாரியா பேசற” என்று அவள் பங்கிற்கு இல்லாத மாமனுக்கு வக்காலத்து வாங்கினாள். 
 
 
“பெரிய்ய மாமா! வீடு ஷிஃப்ட் பண்ணக்கூட வராத வோமா” என்று இம்முறை வெளிப்படையாகவே உதட்டை சுளித்துக்கொண்டான் வெற்றி. 
 
அதில் கடுப்பான ஏப்ரல்,”உன்ன!” என்று பற்களை கடித்துக்கொண்டு அவன் காதை இன்னும் திருக 
 
“ஆஆ அம்மா” என்ற அலறலுடன் வெற்றியும் அவள் காதை பலமாய் திருகிட இருவரும் வலி கூடக் கூட மற்றவரின் காதை திருகிக்கொண்டே அலறிக்கொண்டிருந்தார்களே தவிர நிறுத்தியா பாடில்லை.  இவர்கள் அடித்த கூத்தில் படாரென கதவை தள்ளி திறந்துக்கொண்டு  வந்து நின்றாள் அதிதி. 
 
அத்தனை நேர அலப்பறைகளையும் மறந்து கைகளை மார்புக்கு குறுக்காய் கட்டியபடி நின்றவளையே “ஆ” என பார்த்து நின்றனர் இருவரும். 
 
அந்த வருடத்தில் விடப்பட்ட டாப் 10 ஜொள்ளுக்களில் அவர்களதுதான் முதலாவதாய் வரக்கூடும். 
 
கச்சிதமாய் கட்டப்பட்டிருந்த அரக்கு நிற சேலையும், காதுகளில் தொங்கிய பெரிய ஜிமிக்கியுமாய் பாதி மேக்கப்பில் வந்து நின்ற அதிதியையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தனர். அரைகுறை ஒப்பனைதான் ஆனால் அதிலும் அத்தனை அழகு அவள். அதிதி, அதிதியின் அழகு. மெல்லிய நளினமும் சற்றே தூக்கலான மிடுக்குமாய் அவள் ஒருவித தனியழகு. இப்படி ‘பே’ என நிற்பது இவர்களுக்கும் ஒன்றும் புதிதல்ல. பல முறை அவளை அப்பட்டமாகவே சைட்டடிப்பதும் பிறகு ஐந்தே நிமிடங்களில் பழையபடி அவள் காலை வாருவதுமாய் இருப்பவர்கள்தான். 
 
மௌனம் மௌனம் பெருமௌனம். 
 
இரண்டு முழு நிமிடங்களுக்கு அவ்விடத்தில் அப்படி ஒரு அசௌகரிய மௌனம் நிலவியது. 
 
கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு அவர்களையே கூர்மையாய் பார்த்து நின்றாள் அதிதி. அவள் பார்வையில் நின்றிருந்தவர்கள் அசைய மறந்தவர்களாய் அப்படியே உறைந்திருந்தனர். 
 
சுட்டு விரலால் இருவரையும் தனித் தனியாய் சுட்டிக்காட்டிவிட்டு இரு விரலால் அவள் தன் கண்களை சுட்டிக்காட்டிட அதில் எதிர்புறம் நின்ற இருவரும் எச்சில் விழுங்கிக்கொண்டனர். 
 
இன்னொரு முறை இவர்களை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தவள் வெளியேறிவிட்டாள். அவள் சென்று அவள் அறைக்கதவு அடைபடும்வரையுமே இங்கு இவர்களிடம் அசைவு இல்லை. அப்படியொரு பயம்!
 
அங்கு அவள் கதவு அடைபடும் சத்தம் கேட்கவுமே மூச்சு சீரானது.
 
இன்னும் அவள் சென்ற திசையையே வெறித்து நின்றனர். 
 
வெற்றி,”உள்ளங்கால்லாம் வேர்த்துருச்சு” 
 
ஏப்ரல்,”டெல் மீ அபௌட் இட்! பிடீ டீச்சருக்கு கூட இவ்ளோ பயந்துருக்க மாட்டோம்..”
 
அசையாது நின்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு திடீரென ஸ்பார்க் அடிக்க சட்டென திரும்பி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு நொடிப்பொழுதில் பார்வையாலே எதிலோ ஒத்துப்போனவர்கள் அடுத்த கணம் அதிதியின் அறை கதவை தட்டிக்கொண்டு நின்றனர். 
 
இம்முறை கதவை திறந்தவள் அப்பட்டமாய் அலுத்துக்கொண்டாள். 
 
அதிதி,”என்னதாண்டா பிரச்சனை உங்களுக்கு?” 
 
 கதவை தன் முழு உயரத்தால் அடைத்துக்கொண்டு நின்றிருந்த வெற்றியின் கை இடுக்கு வழியாய், பக்கவாட்டில் இருந்து பாதி உடலை சரித்து தன் தலையை அதிதிக்கும் வெற்றிக்கும் நடுவில் நுழைத்த ஏப்ரல் கண்களில் எதிர்பார்ப்பு மின்ன,”என்ன ஸ்பெஷல்?” என்று கேட்டுவிட்டு ஈஈ என்று நிற்க அவள் உச்சந்தலையில் கை வைத்து அவள் வந்த வழியே அழுத்தி வெளியே தள்ளினான் வெற்றி. அவன் சராசரி உயரம் இருப்பவர்களே சற்று அன்னாந்து பார்க்கும் உயரம். இவளானால் சராசரி உயரம் இருந்தும் பார்வைக்கு ஏதோ மினியன் போல் அங்கும் இங்கும் உருளுபவள். அது அவளது நடையா உடுத்தும் விதமா பாவனையா என்பது கடவுளுக்கே வெளிச்சம். 
 
“குட்டி சாத்தான் குறுக்கு வழில வருது பாரு” 
 
ஏப்ரல்,”பப்பரபானு பரப்பிக்கிட்டு நின்னா அப்படிதான் வருவாங்க” என்றவள் அவன் அடுத்து எதுவும் பேசுவதற்குள் தலையை சிலுப்பி அதை தள்ளிவிட்டு அதிதியிடம் கவனத்தை திருப்பினாள். 
 
இவள் இப்போதைக்கு விடப்போவதில்லை என்பதை அறிந்தவள் தரையையும் சுவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு மெல்ல சொன்னாள்.
 
“ஒரு வெட்டிங் ரிஸப்ஷன்..” 
 
என்ன முயன்றும் சிறு படபடப்பு வெளியில் வந்துவிட்டதோ? 
 
ஏப்ரல் “ஹே கங்க்ராட்ஸ்! சொல்லவேயில்ல.. யாரு மாப்பிள்ளை?” அதிதியின் கைகளை பற்றி சேர்த்து குலுக்கியவள் அப்படியே வெற்றியிடம் திரும்பி,”அப்போ இன்னைக்கு உன் சமையல்ல இருந்து விடுதலைடா வீர்பாக்ஸ்!” எனவும் இருவரும் சேர்ந்தாற்போல அவளது இரு கால்களிலும் மிதித்துவிட 
 
“ஆஆ! எருமைங்களா.. ஆ..” என்றபடி காலை பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள் ஏப்ரல். 
 
வெற்றி,”என்ன ரிஸப்ஷன்?”
 
அதிதி,”என் ஸ்கூல்மேட்டோட கல்யாணம்.. அதான் எல்லாருமா ரிஸப்ஷன்ல மீட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிருக்காங்க” என்று இருவரும் ஏப்ரல் என்றொருத்தி அங்கிருப்பதாகவே காட்டிக்கொள்ளாமல் பேசிக்கொண்டே போனதில் முதலில் “த்ரோகீஸ்” என்று கடுப்பானவள் பிறகு அதிதி பேசுவதை கேட்டதும் அத்தனையும் விட்டு எழுந்து நின்றாள். அவளது உடல் மொழியிலேயே அந்த விளையாட்டுத்தனம் போயிருந்தது. வெற்றியிடமும்தான். ஆனால் அவன் அவ்வளவாய் அதை காட்டிக்கொள்ளவுமில்லை. அதிதியின் முகத்தை பார்க்க அவளோ ஒருவித எதிர்பார்ப்பும் துறுதுறுப்பும் மெல்லிய ஆசை வெட்கமுமாய் நிற்க இருவருக்குமே அவளது சந்தோஷத்தை எதை சொல்லியோ கேட்டோ கெடுப்பதற்கு மனம் வரவில்லை. 
 
ஏப்ரல்,”ராத்திரி வர லேட் ஆகுமா?”
 
அதிதி,”கொஞ்சம். டின்னருக்கு வெளில போகலாம்னு சொல்லிருக்காங்க..” என்றாள் சிறு ஆர்வத்துடன்.
 
ஏப்ரல்,”ஓ..”
 
வெற்றி,”இப்போ எப்படி கிளம்பற?எத்தனை மணிக்கு கிளம்பனும்? டிஃபன் சாப்பிட்டுட்டு கிளம்ப டைம் இருக்குமா?” 
 
அதிதி,”இல்லடா வெட்டு.. லேட்டாச்சு ஏற்கனவே, நான் வழக்கம்போல அலாரத்த ஸ்னூஸ் பண்ணிருக்கேன்போல.. இப்போ ஆட்டோ புக் பண்ணி வந்ததும் கிளம்பிட வேண்டியதுதான்”
 
சில நொடிகள் மௌனமாய் யோசனையில் கழிய ஏப்ரல்,”ஆட்டோலாம் வேணாம் இரு அஞ்சு நிமிஷத்துல வரேன்” என்றுவிட்டு அப்படியே தனது வெய்ஸ்ட் பேகை மட்டும் எடுத்து குறுக்காய் மாட்டிக்கொண்டு வெளியேறினாள். 
 
அவள் செல்வதையே பார்த்து நின்றவனும்,”அவ வரதுக்குள்ள இரண்டு தோசைய உள்ள தள்ளிடலாம் வா” என்றுவிட்டு அகல இருவரையும் பார்த்து நின்றவள்,”சொன்னா கேக்காதுங்க காட்ஸில்லாஸ்” என்று சலிப்பாய் முணுமுணுத்தாலும் இதழோரங்களில் சிறு புன்னகை மலரத்தான் செய்தது. 
 
“எனக்கு நெய் ரோஸ்ட்!” என்று அடுக்களை நோக்கி குரல் கொடுத்துவிட்டு எல்லாவற்றையும் தயார் நிலையில் எடுத்து வைக்க சென்றாள். 
 
 
சொன்னதுபோலவே ஐந்தே நிமிடங்களில் வீட்டினுள் நுழைந்தாள் ஏப்ரல். 
 
அடடே என்ன நெய்வாசம்! மெல்ல அடுக்களையை எட்டிப்பார்த்தவளுக்கு கண்கள் கன்னாபின்னாவென கலங்கியது. அப்படியொரு பாவனை அவளிடம்.
 
“துரோகம்.. துரோகம்.. துரோகம்.. துரோகம்..” என்று அடிக்குரலில் பிஜிஎம் போட்டுக்கொண்டே வந்தவள் தான் வந்ததும் தலையை திருப்பிக்கொண்ட வெற்றியை கண்டும் காணாத பாவனையில்,”என்ன விட்டு சாப்டா வெளங்குமா? இல்ல கேக்கறேன்..” என்க அவனோ அசராமல்,”அதெல்லாம் வெளங்கும்” என்றுவிட்டு மறுபுறம் திரும்பி அவளுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்துகொண்டு மீதி தோசையை முடித்துவிட்டான். 
 
“அக்கா.. ஹெட் ஆஃப் த ஃபேமிலினு ஒரு மரியாதை இருக்கா பாரேன்..” என்று வாய்விட்டே முணுமுணுத்தவள் மெல்ல நகன்று கை கழுவிக்கொண்டு நின்றவன் மேல் தண்ணீரை வாரி தெளித்துவிட்டு அதிதி அறை நோக்கி ஓடிவிட்டாள்,”அத்தி கிளம்பியாச்சா?” என்று
 
திடீரென நீர் இரைக்கப்பட்டதில் திடுக்கிட்டு நின்றவன்,”நீ வாடீ! உனக்கு இன்னைக்கு கள்ளிப்பால் காபிதான்” என்று கறுவிக்கொண்டான். 
 
அதிதி கிளம்பி தயாராய் வர ஏப்ரலும் சென்று ஷார்ட்ஸை மட்டும் மாற்றி ஒரு வைட் லெக் ஃப்ளேர்ட் ஜீன்ஸில் வந்தாள். 
 
சேலை கொசுவத்தை நீவியபடி அதிதி,”ஆட்டோ வந்துடுச்சா?” எனக் கேட்க 
 
ஏப்ரல்,”ஆட்டோலாம் வரல. நானே உன்ன ட்ராப் பண்றேன்” எனவும் அதிதி மட்டுமின்றி வெற்றியுமே அவளை சந்தேகமாய் பார்த்தான். 
 
அதிதி,”என்ன விளையாடறியா? ஸாரி கட்டிட்டு எப்படி சைக்கிள்ள உக்கார முடியும்? அதுவும் வென்யூ எவ்ளோ தூரம்..” என்று பொரிந்துக்கொண்டே போக அவளை கை காட்டி தடுத்தவளோ,”யார் சொன்னா நாம சைக்கிள்ல போறோம்னு?” என்றுவிட்டு வண்டி சாவி ஒன்றை பாக்கெட்டில் இருந்து எடுத்து காட்ட வெற்றியின் புருவங்கள் இன்னுமின்னும் சுருங்கின.
 
வெற்றி,”மொதல்ல உன்ட்ட லைசென்ஸ் இருக்கா?” 
 
அதிதிக்கு பகீரென்றானது. அவளும் ஏப்ரல் என்ன சொல்லுவாள் என்று பார்த்திருக்க அவளோ இவளை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு,”ஏன்? என் மேல நம்பிக்கை இல்லையா அத்திமா?” என்று வேறு பேச அவள் முடிவே செய்துவிட்டாள் இவளிடம் லைசென்ஸ் இல்லையென. 
 
இத்தனை வருடங்களில் இருவருமே அவள் சைக்கிளை தவிர வேறெதையும் ஓட்டி பார்த்ததில்லை. அப்படியிருக்கையில்.. ஏப்ரலையே சந்தேகமாய் பார்த்திருக்க ஒரு கட்டத்திற்கு மேல் அவளும் அவர்களிடம் வம்பிழுப்பதை நிறுத்திவிட்டு தனது வெய்ஸ்ட் பேகில் இருந்து ஒரு லைசென்ஸை எடுத்து நீட்டினாள். 
 
ஏப்ரல்,”பைக் மட்டுமில்ல. ஃபோர் வீலர்,ட்ரக், லாரி ஹெவி வெஹிக்கல்னு எல்லா வண்டிக்குண்டான லைசன்ஸும் வச்சுருக்கேன்” என்றதில் இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாய் பார்த்துக்கொண்டனர். 
 
வெற்றி,”பைக் ஏது?” என்று மென்று விழுங்கினான். யார் கண்டா? ஒருவேளை இவளே எங்கேனும் ஷெட்டில் இவளது வண்டியை இத்தனை வருடம் வைத்துருப்பாளோ என்னவோ!
 
ஏப்ரல்,”ரென்ட்க்கு எடுக்கலாம்னு தான் போனேன்.. ஆனா அது தூரம் இன்னும் நேரமாகும்னு இங்க பேஸ்மென்ட்ல இருந்தே பாரோ பண்ணிட்டேன்” எனவும் இருவரும் இன்னும் அதிர்ந்தனர். என்ன பேஸ்மென்ட்ல இருந்து பாரோ பண்ணிட்டியா? என்று. 
 
ஏப்ரல்,”ஏ.. அப்படியில்ல! நம்ம மதிப்பிற்குரிய செக்ரட்ரி சிவப்ஸோட பையன்ட்ட இருந்துதான் வாங்கிருக்கேன்..” 
 
அந்த சிவப்ஸ் கேள்வியாய் கேட்டு கொல்லும் சிவபாலன் என்று புரிந்தாலும் வந்த நாளில் இருந்து இவர்கள் கண்ணில்கூட பட்டிராத அவரது பையன் இவளுக்கு பைக் கடன் கொடுக்கமளவுக்கு நட்பாகிவிட்டான் என்றால்.. இவர்களும் இந்த வீட்டில்தான் இருக்கிறார்களா என்றே சந்தேகம் முளைத்தது. 
 
அதிதி ஒரு படி மேலே போய்,”அவருக்கு பையன் இருக்கானா?” என்று அதிர வெற்றிக்கோ சிறு நிம்மதி. அப்போ நாம மோசமில்லை! என்று.
 
ஏப்ரல்,”என்ன இப்படி கேட்டுட்ட அவனுக்கு ஷிஃப்ட் ஆன புதுசுல உன் மேல பெரிய க்ரஷு! அப்பறம் நீ ஸாம்பி மாதிரி வேலைக்கு போயிட்டு வரத பாத்து தெளிஞ்சுட்டான்” என்று அடுத்தடுத்து அதிர்ச்சி மின்னல்களை இறக்க அதற்கு மேல் தாங்காது என வெற்றி,”உனக்கு லேட்டாகல?” என்று திசை திருப்பிவிட்டான். 
 
அதிதியும்,”ஆஹ்! ஆமா லேட்டாச்சு” என்று விழிக்க
 
ஏப்ரல்,”சரி நீ பேஸ்மெண்ட்க்கு வந்துடு” என்றுவிட்டு நகர அவளது கால் தடுக்கிவிட்டது. 
 
“பாத்து!” என்று ஒத்த குரலில் அதிர்ந்தவர்கள் இவள் பேன்ட்டை அப்பொழுதே கவனிக்க அதை கவனித்துவிட்டவளோ,”ஆ.. அதுவா! பைக் ரொம்ப நேரம் வெயில்ல நிறுத்தி வச்சுருந்துருப்பான் போல.. ஷார்ட்ஸோட உக்காந்தது பொத்துருச்சு! அதான் ஜீன்ஸ் மாத்திட்டேன்” எனவும்,”ஒரு நிமிஷம் இரு” என்றுவிட்டு தன்னறைக்குள் நுழைந்த அதிதி திரும்பி ஒரு பெல்டுடன் வந்தாள். அவளுக்கு நன்றாய் ஞாபகம் இருந்தது. இந்த பேண்ட் ஏப்ரலுக்கு இடையில் நிற்காது. ஹை வெய்ஸ்டட் பேண்ட் அது. அவளது அளவுதான், இருந்தும் அது அவள் இடையில் நிற்பதில்லை. பெல்ட்டை அவள் கையில் திணித்தவள்,”இத போடு” எனவும் மெல்லிய முறுவலுடன் அதை வாங்கிக்கொண்டவள் மணியை பார்த்துவிட்டு,”லேட்டாச்சு! சீக்கிரம் வா நான் வெய்ட் பண்றேன்” என்றுவிட்டு ஓடிவிட்டாள். 
 
அவள் செல்வதையே பார்த்து நின்ற அதிதி வெற்றியிடம்,”ஏன் வெற்றி, உனக்கு இந்த லைசென்ஸ் பத்தி ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்க அவள் எதை கேட்க வருகிறாள் என்பதை புரிந்தவனும்
 
“நீ வேற! ஒரு நாள் அவ திடீர்னு வந்து ‘நான் தான் இந்தியாவோட ப்ரஸிடெண்ட்னு’ சொன்னாலும் ஆச்சர்யபடறதுக்கில்ல” என்றுவிட்டு அகல, அதை கற்பனை செய்து பார்த்தவளோ அதே சிரிப்புடன் கீழ்த்தளத்திற்கு சென்றாள்.  
 
 
ஏப்ரல் பக்கத்து வீட்டுப் பையன் பைக் என்றதும் இவள் ஸ்கூட்டரோ அல்ல சாதாரண பைக்கோதான் எதிர்பார்த்திருந்தாள். அதாவது ஒரு சின்னப் பையனின் முதல் பைக் என்ற வகையில். ஆனால் அதுவோ உருவத்தில் அவளைவிட பெரிதாய் தோரணையாய் நிற்க அவள் நடையில் சிறு தயக்கமும் பிறகு ஒருவித துள்ளலும் கூடியது. 
 
ஒரு ஆர்வத்தில் நெருங்கியவளுக்கு மெல்லவே உரைத்தது எப்படி சேலையுடன் இதில் அமர்வதென. அவள் பொதுவாகவே இருசக்கர வாகன பயணங்கள் மேற்கொண்டதில்லை. அதுவே அவளுள் அதன் மீதான ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது என்னவோ உண்மை. ஆனால் இன்று இப்படியொரு வாய்ப்பு கிடைத்தும் அவளிடம் சிறு தயக்கம்.
 
அதிதி,” இதுல எப்படி ஏற?”
 
ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டிருந்தவள்,”ம்ம்.. வேணா வெற்றிட்ட சொல்லி ஸ்டூல் கொண்டு வரியா?” என்று கிண்டலாக கேட்க அதிதியோ அதற்கு வெகு தீவிரமாய்,”சொல்லவா?” என்று ஃபோனை எடுக்கவும் வெளிப்படையாகவே தலையில் அடித்துக்கொண்டாள். 
 
ஏப்ரல்,”அடேய் ஏறு மேன்” என்றவள் அவள் ஏறுவதற்கு வாகாய் நகர்ந்துக்கொண்டு பிறகு அவள் ஏறி அமர்ந்ததும் ஒரு ஹெல்மெட்டை நீட்டினாள். 
 
அதிதி,”ஹெல்மெட் போட்டா முடி கலைஞ்சுருமே..” 
 
ஏப்ரல்,”முடியா? உயிரா?” என்று தயவு தாட்சண்யமின்றி கேட்க,”என்னடா ரொம்ப பயமுறுத்தறீங்க.. நான் பாட்டு அதிக செலவானாலும் ஆட்டோலேயே சேஃபா போயிருப்பேன்..” என்று படக்கென வாங்கி மாட்டிக்கொண்டாள் அதிதி. அதில் பெரிதான சிரிப்புடன் கண்ணாடி வழியாய் பின்னால் இருந்தவளை ஓர் பார்வை பார்த்தாள் ஏப்ரல். அழகு மேன் நீ. 
 
அதிதியின் புலம்பல்கள் எல்லாம் அப்பொழுதுதான். வண்டி கிளம்பிய சற்றைக்கெல்லாம் அவளது அத்தனை வருட ஆசையும் நிறைவேறும் நொடிகளை ரசிக்கத் தொடங்கிவிட்டாள் அவள். உண்மையில் அவள் பயந்ததுபோல எதுவுமே நடக்கவில்லை. அத்தனை லாவகமாய் ஏப்ரல் வண்டியை செலுத்திக்கொண்டிருக்க அவளது இடையில் கையை வளைவாய் போட்டு பிடித்துக்கொண்டாள் அதிதி. லேசாய் கண்ணீர் கூட எட்டிப்பார்த்தது. அவளுக்குதான் தெரியும் அவள் இதற்கு எவ்வளவு ஏங்கியிருக்கிறாள் என. இது மற்றவர்களுக்கு ஒன்றுமே இல்லாத ஒன்றாய் தெரியலாம் ஆனால் அவளுக்கு மட்டும்தான் தெரியும் இது அவளுக்கு எப்படிப்பட்டதென. இந்நொடிகள் அனைத்தையும் அப்படியே மனதுக்குள் பூட்டிக்கொண்டாள் பத்திரமாய். 
 
கண்ணாடியில் விழுந்த பிம்பத்தை ஒரு கணம் ஆசையாய் பார்த்த ஏப்ரலும் மெல்லிய குரலில் பேசினாள்.
 
“திதி.. உனக்கு இவ்ளோ தூரம் போய்ட்டு வரது ஓகே தான?” அதிதியின் கவனமும் இப்பொழுது அவளிடம். அவள் திதி என்றழைத்தாலே அதிலிருக்கும் தீவிரம் இவளுக்கு புரிந்துவிடும். அவள் இப்பொழுது என்ன கேட்கிறாள் என்பதும் புரிந்து போக மெல்லிய முறுவலொன்றுடன் அவளை பார்க்க அதன் அர்த்தம் உணர்ந்த ஏப்ரலும் அதற்கு பிறகு எதுவும் கேட்கவில்லை. 
 
அதிதி,”டேய் இங்கயே லெஃப்ட்ல நிறுத்திக்கோ” என்று இறங்கிக் கொண்டவள் அவள் எதிர்ப்பார்க்காத சமயம் அவளை கழுத்தோடு சேர்த்து அணைத்துக்கொண்டு,”தாங்க் யூ சோ மச் ஏப்ரல்!” என்று சொல்ல மைக்ரோ செக்கண்ட் மௌனம் காத்த ஏப்ரலும் அவளை ஒரு கையால் அணைத்து,”கிளம்பும்போது சொல்லு நான் வரேன்” எனவும் ‘ஈஈ’ என்றொரு பெரிய சிரிப்புடன் மண்டபத்தை நோக்கி ஓடிவிட்டாள் அதிதி. 
 
அவள் உள்ளே செல்லும்வரை நின்று பார்த்தவள் மெல்ல வாகன நெரிசலில் கலந்தாள். இப்போதைக்கு வண்டியை திருப்பி கொடுக்கவேண்டிய அவசரமில்லை என்றெண்ணம் ஓடிக்கொண்டிருக்கையிலேயே வண்டி பெட்ரோல் பங்கை நோக்கி விரைந்தது. 
 
“மொதல்ல உனக்கு சாப்பாடு அப்பறம் எனக்கு சாப்பாடு! ம்ம்.. வெயில் நல்லா சுரீர்னு அடிக்கிதுல..” என்று தன் போக்கில் பேசிக்கொண்டே வந்தவளின் பார்வை அந்த சூப்பர்மார்கெட்டிலேயே சில நொடிகள் நிலைத்து மீண்டன. சம்பந்தமின்றி மஞ்சள் நிறக் குருவி ஒன்றின் நினைவு வந்தோடியது. தலையை சிலுப்பியவள் ஆக்ஸிலேட்டரை திருகினாள். அவன் அவன் வாழ்க்கை அவனவன் பாடு! 
 
 
error: Content is protected !!