காதலில் கூத்து கட்டு 30(2)

IMG-20210202-WA0002-feb84a6e

காதலில் கூத்து கட்டு 30(2)

காதலில் கூத்து கட்டு 30(2)

‘அப்படி போடு போடு போடே

அசத்தி போடு கண்ணால

இப்படி போடு போடு போடே

இழுத்து போடு கையால”

 

வாயில் நுரை தளும்ப டூத்பிரஸ்ஸை வாயில் வைத்தப்படி, நைட்டியை ஏற்றிக் கட்டிக் கொண்டு, தொலைக்காட்சி பாடல் தாளத்திற்கு தப்பி தாறுமாறாக குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் ரம்யா.

 

வசீகரன் பார்வை அவளை எரித்து விடும்படி அனலாக வீசியது.

 

“ஏய் லூசு, காலேஜ்க்கு உனக்கு டைம் ஆகல, நடுவீட்டுல தான் பல்லு விளக்குவியா, ஒழுங்கா பாத்ரூம் போய் பிரஸ் பண்ணி முடிச்சுட்டு குளிச்சிட்டு வா. போ” கிட்டத்தட்ட கத்தினான் அவன்.

 

அவன் கத்தலில் ஒற்றை விரலால் காது துவாரத்தை பொத்தி கொண்டவள், முகத்தை ஒருமுறை முறுக்கி திருப்பிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொள்ள, கையில் பிடித்திருந்த கரண்டியால் வசீகரன் தன் தலையில் அடித்து கொண்டான். 

 

நேற்று மூச்சு திணறி கொஞ்ச நேரத்தில் அவனை செத்து பிழைக்க வைத்து விட்டு, இப்போது காலையில் எழுந்து குத்தாட்டம் போடுபவளை பார்க்க பார்க்க அவனுக்கு கொதி கொதி என்று கொதித்தது. 

 

குக்கர் விசில் சத்தமெடுக்க, அடைத்திருந்த குளியலறை கதவை ஒருமுறை பார்த்துவிட்டு தன் நளபாகத்தை கவனிக்க நகர்ந்தான்.

 

திருமணம் முடிந்த இத்தனை மாதங்களில், மனைவியை கையாள கற்றுக் கொண்டானோ இல்லையோ கரண்டியை லாவகமாக காடாயில் கையாள கற்றுக் கொண்டிருந்தான்.

 

“அவனவனுக்கு வாய்க்கு ருசியா வகைவகையா சமைச்சு போடுற பொண்டாட்டி கிடைப்பா, எனக்கு மட்டும் தான் இதெல்லாம் எனக்கு சமைச்சு கொடுன்னு லிஸ்ட் போட்டு தர பொண்டாட்டி கிடைச்சிருக்கா” வசீகரன் சமையலை கவனித்தவாறு புலம்ப,

 

“அங்க என்ன சத்தம்?” அதிகார குரல் ஒலிக்க திரும்பினான். ஊதாநிற லாங் ஸ்கர்ட், இளம்பச்சை நிற டாப்பில்

இடுப்பில் இரண்டு கைகளை வைத்துக் கொண்டு மிடுக்காக நின்றவளை பார்க்க அவனின் கண்ணோரம் குறுகுறுத்தது.

 

‘குள்ளக்கத்திரிக்காவ ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருந்துட்டு, இவளுக்கு அதட்டல் வேற’ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

 

“என்ன அங்க முணுமுணுப்பு? எதுவா இருந்தாலும் நேரா சொல்லனும், என்னை பார்த்து சொல்லனும், என் கண்ண பார்த்து சொல்லனும்” ரமி அதிகாரத் தோரணையை விடாது அலட்டல் காட்டினாள். 

 

நேற்றிரவு முழுவதும் வசீகரன் காட்டிய அக்கறையில்  அவளிடம் தொற்றிக் கொண்ட கர்வம் அது. அவன் அடிமையாக சேவகம் செய்து அவளை அரசியாய் உணர வைத்திருந்தான்.

 

இரண்டெட்டு எடுத்து அவளருகில் வந்தவன் அவள் காதை பிடித்து, “குள்ளக்கத்திரிக்கா சைஸ் இருந்துட்டு என்னமா துள்ளறடீ‌ நீ, இதுல அதிகாரம் வேற” என்று வலிக்க அவள் காதை திருக,

 

ரம்யா காதை பிடித்து கொண்டு வலியில் துள்ளிக் கொண்டே, “நீ நெட்ட மரம் மாதிரி வளர்ந்துட்டு என்னை குள்ளக்கத்திரிக்கா சொல்ற போடா” என்று அவன் கையை தட்டி விட்டு காதை தேய்த்து விட்டு கொண்டாள்.

 

“இப்ப எதுக்குடி போடா சொல்ற, நைட் சொல்ல வேண்டியது தான என்னை  போடானு”

 

“ம்ம் நானா என்னை உன் மார்ல படுக்க வச்சு தாலாட்ட சொன்னேன். நீயா தான செஞ்ச, சும்மா சொல்ல கூடாது செமயா தூக்கம் வந்துச்சு, விடிஞ்சது கூட தெரியாம அசந்து தூங்கிட்டேன்”

 

“என் தூக்கத்தை தொலைச்சுட்டு உன்ன தாங்கினேன் இல்ல. ஏன் செமயா இருந்து இருக்காது உனக்கு”

 

“ஆமா மாமு, எப்பவும் நீதான் என்னை தாங்கற, தூங்க வைக்கிற, நான் தான் உனக்கு எதுவுமே செஞ்சதில்ல மாமு” ரமி முகம் சுருக்க,

 

“ஏன் இல்ல, உன்னால எவ்வளோ முடியுமோ அவ்வளோ என்னை படுத்தி எடுக்குறியே போதாதா உனக்கு” வசீ அவளை கடுப்பாக வார, அதற்கு அவள் தன் எல்லா பற்களும் தெரிய ‘ஈ’ என்று இளித்து வைத்தாள். வசீகரன் அவள் வாய் மேலேயே ஓரடி வைத்தான்.

 

“போடா மாமு, நேத்து கீழ தள்ளி விட்ட, கொஞ்சம் முன்ன காதை திருகுன, இப்ப வாய்ல அடிக்கிற… நான் தான் பாவம். நான் தான் உன்கிட்ட படுறேன்” என்று சுணங்கியவளை, கண்களை குறுக்கி பார்த்தவன், இடது கையால் அவளின்‌ இடை வளைத்து, தன்னோடு சேர்த்து அலேக்காக தூக்கி வந்து, ஹால் சேரில் தொப்பென்று‌ விட்டான்.

 

அவள் அவனை முறைக்க, “சொல்லுடி, நேத்து ஏன் உனக்கு அப்படி ஆச்சு, திடீர்னு என்ன டென்ஷன், மண்ணாங்கட்டி உனக்கு?” வசீகரன் தீவிர பாவனையில் கேட்க,

 

“ஓ அதுவா, அது நீதான நேத்து சொல்லிட்டு இருந்த, என்னோட வாழறது உனக்கு ஈஸியா இல்லனு, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல நீ அவசரப்பட்டுட்டேன்னு” அவள் சோக வயலின் வாசித்தவாறு இழுக்க,

 

“ஏய், நான் எப்படீ அப்படி சொன்னேன்?” அவன் திகைத்து விழித்தான்.

 

“பேச்சு மாத்தாத நீதான் சொன்ன, எனக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு, நீ என்னை வெறுத்துட்டியோனு பயம் வந்துடுச்சு! எனக்குனு நீ மட்டும் தான இருக்க, நீயும் என்னை வேணானு சொல்லிட்டா, நான் பாவம் இல்ல, அதை நினச்சதும் மூச்சு திணற ஆரம்பிச்சிடுச்சு” அவள் சொல்ல சொல்ல இவன் பற்களை நறநறத்துக் கொண்டான்.

 

“அரை லூசுடி நீ, சொல்ல வரதை முழுசா கூட கேட்க மாட்டியா, நீயா எதையாவது கற்பனை பண்ணிக்குவியா?” என்று அவளை தலையில் தட்டினான்.

 

“நீ தலையில தட்டி தட்டி என்னை இன்னும் குள்ளம் ஆக்கிடாத, இப்ப சொல்லு நீ அப்படி என்ன சொல்ல வந்த என் பீபி ஏத்துற மாதிரி” அவளும் சிடுசிடுத்தாள். உளறுவதை எல்லாம் இவன் உளறிவிட்டு என்னை குத்தம் சொல்கிறான் என்று கோபமேறியது அவளுக்கு.

 

நேற்றைய குழப்பத்தில் தலையை அழுத்த கோதிக் கொண்டவன், “நமக்கு பர்சனல் லைஃப்யும், ப்ரஃப்ஷ்னல் லைஃப்யும் பேலன்ஸ் பண்ண தெரியலடி, அதுதான் கஷ்டமாயிருக்குனு சொல்ல வந்தேன்” என்றான்.

 

“ஓ… அதை இப்ப மாதிரி தெளிவா சொல்லி தொலைக்க வேண்டியது தானடா மடையா”

 

“நான் மடையன் இல்ல, நீதான்டி மடச்சி, நான் சொல்ல வரதை முழுசா கேட்டியாடீ நீ” 

 

“க்கும் உன் பேச்சை அரைகுறையா கேட்டே எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு, முழுசா கேட்டுருந்தா மொத்தமா போய் சேர்ந்திருப்பேன்” என்று பேசியவள் வாயிலேயே‌ ஓரடி வைத்தான்.

 

“டேய் சும்மா‌ சும்மா ஏன்டா என் வாயில அடிக்கிற”

 

“நீ இப்படி பேசினா நான் அப்படி‌தான் அடிப்பேன், மறுபடி இதுபோல பேச்சு வரட்டும் உன்ன கொன்னுடுவேன் மவளே” என்று அதட்டல் விட்டவன், “நேத்து நான் எவ்வளோ பயந்துட்டேன் தெரியுமா?” என்று சட்டென தளர்ந்து கேட்டான்.

 

ரம்யா, “எவ்வளோ பயந்த?” கண்கள் மின்ன, அவன் சட்டையை பிடித்து இழுத்து ஆர்வமாக கேட்டாள்.

 

அவள் சேட்டையில் இதமாய் அலுத்துக் கொண்டவன், குனிந்து அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, “நீ இல்லனா நான் இருக்கறதே வேஸ்ட்ன்ற அளவுக்கு பயந்து போயிட்டேன்டி” உயிர் தேயும் குரலில் சொன்னவன் கூர்நாசி அவளின் சப்பை மூக்கோடு உரசிட, ரமி அவன் கழுத்தை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

 

“நான் தான் எனக்கு ஒன்னுல்லன்னு சொன்னேனே மாமு” என்று தேறுதல் சொல்ல,

 

“நீ என்னை என்னென்னவோ செய்றடீ, அப்பப்ப என்னை பதற வைக்கிற, சில்லு சில்லா சிதற வைக்கிற, உன்கிட்ட அடிமையா கிடக்க வைக்கிற… நான் முன்ன இப்படி இருந்ததில்ல, என்னை என்கிட்ட இருந்து மொத்தமா பறிச்சிட்டடீ நீ” அவன் நெஞ்சம் விம்மி தணிந்தது.

 

இந்த சுண்டக்காய் பெண்ணிடம் மொத்தமாக தன்னை தோற்றுவிடுவான் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அவனின் குழப்பங்களுக்கும் தடுமாற்றங்களுக்கும் அவளிடம் அவன் வீழ்ந்து போனது தான் காரணம் என்பது உணர உள்ளுக்குள் சிரித்து கொண்டான்.

 

“மாமு அப்ப நீ என்னை லவ் பண்றீயா?” அவள் ரகசிய குரலில் கேட்க, சிரித்து விட்டவன் அவள் நெற்றியில் வலிக்க முட்டி, “லவ் என்னடி சுண்டக்கா மேட்டர், நான் உன்ன அதுக்கெல்லாம் மேல மேல ஃபீல் பண்றேன்” என்றவன் பிதற்றலில் மேக வெளியில் மிதந்து வந்தாள் ரம்யா.

 

“பட், போயும்‌ போயும் உன்மேல இந்த ஃபீல் எல்லாம் எனக்கு வந்து தொலைச்சிருக்கு பாரு, ப்ச் அதான் கொஞ்சம் சகிக்கல” என்றவன் சலிப்பில் மேக திட்டில் இருந்து பொத்தென கீழே விழுந்தாள்.

 

“பொறுக்கி பொறுக்கி, எனக்கு என்ன குறைச்சல்டா, நீ பெரிய மன்மதன் மாதிரி ஓவரா தான் பேசுற‌ போடா” என்று தள்ளி விட்டாள்.

 

வசீகரன் சிரிப்புடனே விலகி நேராக நின்று, “ஆமான்டி நான்‌ மன்மதனோட நியூ வர்ஷன்‌ தான். நீ இல்லங்கிறியா” அவன் அலட்டலாய் தன் நீள் கேசத்தை ஒற்றை கையால் கோதிவிட்டுக் கொள்ள, இவள் பார்வை அவன் தோரணையில் ஜொள்ளியது.

 

‘ஏன் இவன்‌ மட்டும் இவ்வளோ அழகா இருந்து தொலைக்கிறான்? அதுக்குமேல கொழுப்பும் இருந்து தொலைக்குது இவன்கிட்ட’ வாய்க்குள் முனங்கிக் கொண்டாள்.

 

“என்னடி முனங்குற?” வசீகரன் ஒற்றை கண் சிமிட்டி கேட்க,

 

“வருச கணக்கா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களே ஒருவருசத்துல பிரிஞ்சு நிக்கிறாங்க, அழகே அழகா இருக்க அக்கா மேலயே மாமாவுக்கு இன்ரஸ்ட் போயிடுச்சுனா… உனக்கு என்மேல இருக்க இன்ரெஸ்ட் எத்தனை நாள் தாங்கும்னு யோசிக்கிறேன்” என்றாள் முகத்தை கோணியபடி.

 

“அடிபாவி, என்மேல உனக்கு எம்புட்டு நம்பிக்கைடீ” என்று வாயிலடித்துக் கொண்டான் வசீகரன்.

 

“நீதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்ன, நீதான் சேர்ந்து வாழலாம்னு சொன்ன, நீயே தான் டிஸ்டர்ப் பண்ணாதனு சொன்ன, இப்ப லவ் பண்றேன்னு சொல்ற, அப்புறம் என்ன சொல்லுவியோ? யாருக்கு தெரியும்?” அவள் விடாமல் இழுக்க,

 

“அப்ப எல்லாத்துக்கும் நான் தான் காரணம், இதுல எதுக்கும் உன் பங்கு இல்ல? நீ சும்மா அப்பாவி, அதான சொல்ல வர” அவளின் கீழே மண்டியிட்டு அமர்ந்து கொண்டவன்,‌ அவள் முகத்தை நேராக பார்த்து, 

 

“உன் குட்டி மூளைக்குள்ள இவ்வளவையும் போட்டு வச்சிருக்கியாடீ?” என்று கேட்டான் பரிவாக. அவள் மேலும் கீழுமாக வேகமாக தலையாட்டி வைத்தாள்.

 

“உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு மாமு, ஆனாலும் இதான் எதார்த்தம், காதல் மட்டுமே காலம் பூரா வாழ போதுமானதா இருக்கிறதில்ல, சூழ்நிலைக்கேற்ப மனசும் எண்ணங்களும் தேவைகளும்‌ மாறுவது தான் மனித இயல்பு” அவள் தீவிரமாக சொல்ல,

 

“நீ புக்ல படிக்கிறதெல்லாம் உன்ன இங்க ஒப்பிக்க சொல்லல, இப்ப என்ன நான் பியூச்சர்ல மாறிடுவேனோனு உனக்கு டவுட்டு அதான”

 

அவள் இல்லையென்று வேகமாக தலையாட்டி பின், ஆமாமென்று மெதுவாக தலையாட்டி வைத்தாள்.

 

அவளை முறைக்க முயன்று‌ முடியாமல் செல்லம் கொஞ்சியது அவன்‌ பார்வை அவளிடம்.

 

அவளின் ஆட்டம் போடும் தலையை இருகைகளால் பற்றியவன் அவளின்‌ அரும்பிதழோடு தன் மீசை இதழை உரசி சொன்னான்.

 

“நாளைக்கு நடக்க போறதெல்லாம் எனக்கு உறுதியா சொல்ல தெரியாது. எனக்கு உன்மேலயும், உனக்கு என்மேலயும் எப்போ இட்ரெஸ்ட் குறையும்னு வாழ்ந்தே பார்த்துட…லாமா?” என்று குறும்பு பேசினான்.

 

அவனுக்கு வாழ வேண்டும், தன்னவளோடு சண்டையிட்டு, மண்டியிட்டு, காதல் தொட்டு, திகட்ட திகட்ட இன்பம் துய்த்து வாழ்ந்து பார்க்க வேண்டும். இடையில் இந்த சங்கடங்கள், சந்தேகங்கள், போன்ற கசடுகளை அவன் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. 

 

“நிஜமாவா மாமு, உனக்கு நான் மட்டும் போதுமா?” அவள் துள்ளல் குரலும் தழைந்து கேட்டது.

 

“ம்ம் இதே கேள்வியை நான் உன்கிட்ட கேட்டா என்னடி சொல்லுவ?” அவன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான்.

 

“இந்த உலகத்துல எதுவுமே வேணாம், யாருமே வேணாம், என் மாமு மட்டும் எனக்கு போதும்னு கத்…தி சொல்லுவேன்” இருகைகளையும் விரித்து உரக்கச் சொன்னவளின் இதழ்களை ஆவேசமாக அடைத்தவன், அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான் வசீகரன்.

 

அவனுக்கு இனி எந்த தயக்கங்களும் குழப்பங்களும் தேவையில்லை என்று தோன்றியது. அப்படி பார்த்து பார்த்து கயிறிழைமேல் நடக்க வேண்டிய அவஸ்தை வேண்டாம் என்று தோன்றியது. இனி எதுவந்தாலும் அவனுக்கும் அவள் மட்டுமே போதும் என்றிருந்தது. 

 

முடிக்க மனமின்றி வெகுநேரம் நீண்ட இதழணைப்பை ஒருநிலையில் முடித்துக் கொண்டனர். ஊடலுக்கு பின்னான இந்த ஒற்றை முத்தம் அத்தனை தித்தித்தது முன்பெல்லாவற்றையும் விட.

 

“குட்டி ராட்சசி, என்னை கொல்றடீ நீ” அவள் கன்னக்குழியில் அழுத்த இதழ் புதைத்தெடுத்து, தன் கைகளில் இருந்தவளை கீழே இறக்கிவிட்டான். தரையில் கால் பதித்தவள் அவன் தோளில் தோய்ந்து சாய்ந்து கொண்டாள்.

 

“உன்னோட சேர்ந்து நான் ரொம்ப கெட்ட பொண்ணா ஆகிட்டேன் மாமு” அவளின் முனகலில், அவளின் பின் கழுத்தோடிய‌ அவனது விரல்கள் அவள் கூந்தலுக்குள் நுழைந்து அவள் பொன்முகம் நிமிர்த்தி, தீராத மையலோடு அவள் கன்னத்தோடு தன் கன்னம் உரசி, “நீதான்டி என்னை கிறுக்கு புடிக்க வைக்கிற” என்றவன் குரல் தேய்ந்தது.

 

தெரிந்தும் தெரியாத அவன் தாடை முரட்டு முடிகள் உரசலில் அவள் மென்கன்னம் எரிச்சலை தத்தெடுக்க, இன்னும் இன்னும் அவனோடு புதைந்துக் கொள்ள முயன்றாள். அவன் கைகளும் அவளை தன்னோடு இறுக்கி கொண்டன.

 

“புஷி”

 

“ம்ம்?”

 

“காலேஜ்க்கு போக நேரமாச்சு டி”

 

“ம்ம்!”

 

இருவருக்கும் விலகும் எண்ணம் இருக்கவில்லை. விலகியாக வேண்டுமா? என்று அவர்களின் ஆசை மனம் அடம்பிடித்து கொண்டிருக்க, காமம் தாண்டிய இந்த நெருக்கமும் அருகாமையும் இன்னும் நீள ஏக்கமானது.

 

“மாமு”

 

“ம்ம்”

 

“இன்னைக்கு காலேஜ் கட் அடிச்சிடவா?” 

 

அவள் கேட்டதும் சட்டென அவள் முகம் நிமிர்த்தியவன், “தில்லாலங்கடி, இதையே சாக்கு வச்சு கிளாஸ் மட்டம் போட பாக்குறியா? பிச்சுடுவேன் பிச்சு. ஒழுங்கா ரெடியாகி கிளம்புடி” என்று விரட்டினான்.

 

“போ மாமு, அங்க போனாலும் எனக்கு உன் நினைப்பா தான் இருக்கும், அப்பறம் என்னத்த கிளாஸ் கவனிக்கிறது. அதுக்கு பதிலா இன்னிக்கு ஃபுல்லா உன் கூடவே இருந்துறேனே, உன் வேலைய டிஸ்டர்ப் பண்ணாம நல்ல பொண்ணா உன்ன சைட் அடிச்சிட்டு மட்டும் தான் இருப்பேன்” ரம்யா சிணுங்கி கேட்க,

 

அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தவன், “நீ சைட் அடிச்சா, நான் எப்படிடீ என் வேலைய ஒழுங்கா பார்க்கறது?” 

 

தலையை தேய்த்துக் கொண்டவள், “ஏன் முடியாது, அந்த ரூபி, மாயா, மது அப்புறம் ஆனியா? கோணியா? அவங்கெல்லாம் என் முன்னாடியே உன்ன சைட் அடிச்சிட்டு தான இருந்தாங்க, நீயும் அதை கண்டும் காணாம உன் வேலையை கிழிச்சிட்டு தான இருக்க” ரம்யா நீட்டி முழக்கி சொன்ன விதத்தில் வசீகரன் வாய்விட்டு சிரித்தான்.

 

“கேடி, இதையெல்லாம் கவனிச்சு இருக்கியா நீ, அவங்களும் நீயும் எனக்கு ஒன்னா?” என்று அவள் நெற்றி முடியை வாஞ்சையாக ஒதுக்கி விட்டவன், “என் ஃபீல்ட் அழகு, கவர்ச்சியை மையமா வச்சிருக்கிறது புஷி. சோ இந்த ஆர்வமான பார்வைகளை தவிர்க்க முடியாது. நான் மத்தவங்க பார்வைக்கு குளிர்ச்சியா இருக்கேன்னா பார்த்துக்கட்டும், அதால நான் கரைஞ்சு போக மாட்டேனே” என்றவனை இவள் கார பார்வை பார்த்து வைத்தாள்.

 

“என் செல்ல பொண்டாட்டி, இதுக்கெல்லாம் நீ இப்படி கொதிச்சா நம்ம பொழப்பு நாறிடும்டி. சோ புஷி என்மேல நம்பிக்கை வச்சு குட் கேர்ள்ளா இருப்பாளாம்” என்று அவள் கன்னம் வருடி கொஞ்சியவன் கையை தட்டிவிட்டு, “என் செல்ல புருசன் குட்பாயா இருக்க வரைக்கும், நானும் குட் கேர்ள்ளா தான் இருப்பேனாம்” என்று நொடிந்து கொண்டவளை புன்னகை மிளிற பார்த்தவன் பார்வை சுவர் கடிகாரத்தை தொட்டு மீள பரபரப்பானது.

 

இருவரும் அடித்து பிடித்து அவசரமாக அரக்கபறக்க தயாராகி கிளம்பினர். ரம்யாவை கல்லூரியில் இறக்கிவிட்டு, ஸ்டூடியோவிற்கு வந்தவன் முகத்தில் இழைந்திருந்த இனிய மென்னகை அங்கே இருந்தவர்களையும் ஒட்டி கொள்வதாய்.

 

அன்றைக்கு விளப்பரத்தின் எடிட்டிங் வேலைகள் இருக்க, வசீகரனும் தேவாவும் கணினி திரையில் பார்வையோட்டி விரல்நுனிகளில் மாயங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர்.

 

எப்போதும் போலவே சுறுசுறுப்பாகவே அவர்கள் வேலை நடந்து கொண்டிருக்க, அங்கே ஆனந்த அதிர்ச்சி தருபவனாக சசிதரன் வந்து நின்றான்.

 

***

 

வசீகரனும் சசிதரனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகே சிறுமேஜையில் இரு காஃபி கொப்பைகளில் ஆவி பறந்துக் கொண்டிருந்தது. இருவருக்கும் நடுவே ஒருவித சங்கடமான அமைதி! அதை யார் முதலில் கலைப்பது என்ற சிறு தவிப்பு!

 

வசீகரன் இயல்பாக தான் இருந்தான். “சொல்லுண்ணா என்ன விசயம்?” என்று தன் காஃபி கோப்பையை எடுத்து மிடறு சுவைத்து உறிஞ்சினான்.

 

சசிதரனும் தன் கோப்பை காஃபியை கொஞ்சம் உறிஞ்சிவிட்டு, “நீ நம்ம வீட்டுக்கு வாடா” என்றான் நேராக.

 

“நானா? என்ன திடீர்னு! ஏதாவது பிரச்சனையா வீட்ல?” வசீகரன் புருவங்கள் சுருங்கின.

 

“நீ வீட்ல இல்லாதது தான் பிரச்சனையே, ஏதோ அப்பத்தி கோபத்துல நாங்க ஏதாவது சொன்னா, நீ எங்களை விட்டு போயிடுவியா? நீ தப்பு செய்யும்போது கண்டிக்கிற உரிமை எங்களுக்கு இல்லையா, அதுக்காக நீ எங்களை பிரிஞ்சு இருப்பியா?” சசிதரனின் ஆதங்கமான கேள்வியில் வசீகரன் முகத்தில் யோசனை விழுந்தது.

 

“என் கல்யாணம் முடிஞ்சு ஆறு, ஏழு மாசம் ஆச்சு ண்ணா, உனக்கு இப்போதான் என்னை வந்து கூப்பிடனும்னு தோனி இருக்கு” என்று நெற்றி சுருக்கியவன், “எந்த போதி மரத்தடியில விழுந்து எழுந்து வந்த, முதல்ல அதை சொல்லு” என்றான்.

 

சசிதரன் முகம் சற்று கூம்பி பின் தெளிவானது. இத்தனை மாதங்கள் தம்பியை கவனிக்காமல் விட்டது அவன் தப்பு தானே. மனதிற்குள் வலிக்கவும் தான் செய்தது.

 

“தப்பு என்னோடது தான் டா, நீ நாங்க இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டன்றதை என்னால ஏத்துக்க முடியல, ஏதோ வலி, ஒரு கோபம் அதான் நானும் உன்ன வந்து பார்க்கல” என்ற சசிதரன், “நானும் திவ்யாவும் சமாதானம் ஆகிட்டோம், இனி சேர்ந்து வாழறதா முடிவு பண்ணி இருக்கோம்” என்றான் தம்பியின் முகம் பார்த்து.

 

வசீகரன் முகம் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை. இதுவே பழைய வசீகரனாக இருந்திருந்தால் சசிதரனை‌ தூக்கி சுற்றி சந்தோசத்தில் குதித்து இருப்பான். இந்த வசீகரன் புதியவன்.

 

“ஹேப்பி ண்ணா, இனிமேலாவது முட்டிக்காம சந்தோசமா லைஃப் என்ஜாய் பண்ணுங்க” என்று புன்னகையுடன் வாழ்த்தினான்.

 

“தேங்க்ஸ் டா, அது… ஒரு சின்ன மிஸ்அன்டர்ஸ்டேட்டிங் தான், திவி தான் புரிஞ்சுக்கல, நானும் அவளுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணல, இப்ப எல்லாம் சரியா போச்சு” சசிதரன் தயங்கி விளக்கம் சொன்னான்.

 

தன் தம்பியிடம் இப்படி தயங்கி பேசுவது அவனுக்கு ஏதோ ஒட்டாதது போல தொன்ற செய்தது. மனது சுணங்கியது. உரிமையுடன் அடித்து பிடித்து கொள்ளும் தன் செல்ல தம்பியை வேண்டி ஏங்கியது அவன் அண்ணன் இதயம்.

 

“சரி, இப்பவாவது உங்க ரெண்டு பேர் ஈகோவையும் விட்டு இறங்கி வந்தீங்களே, பெரிய விசயம் தான்” என்றான் வசீகரன் சற்று குத்தலாக.

 

“என்னடா ஏதோ மாதிரி பேசற?” என்று வருத்தமாக பெருமூச்செறிந்தவன், “எனக்கு உன் கோபம் புரியுதுடா, அப்ப நான் சுயநலமா தான் யோசிச்சேன், என் தம்பி எப்பவும் போல சந்தோசம் மட்டும் அனுபவிக்கனும் கஷ்டபடக்கூடாதுன்னு நினச்சு தான் பேசினேன். நீ என் பேச்சை கேக்கலன்னதும் ஒரு வரட்டு கோபம். அதுதான் இத்தனை நாள் உன்ன பார்க்க வராம என்னை தடுத்து வச்சிருந்தது. இப்ப, எனக்கு எந்த வெட்டி கோபமும் வேணா, நீதான் வேணும்டா, நம்ம வீடு முன்ன மாதியே சந்தோசமா இருக்கனும்” என்று ஒரே மூச்சாக பேசி சசிதரன் நிறுத்தினான்.

 

“நான் மட்டும் வந்தா போதுமா?” கண்களை குறுக்கி வசீகரன் கேட்கவும், சசிதரன் முகம் இளகியது.

 

“எப்பாசாமி, உன் தர்மபத்தினியோட சேர்ந்து தான் வரனும்டா, நாங்களும் பார்க்கனுமில்ல நீ எப்படி ரமிய தாங்கற, அவ எப்படி உனக்கு வகை வகையா வக்கணையா சமைச்சு தரான்னு” சசிதரன் இளகுவாக சொல்லி சிரிக்க வசீகரனும் உடன் புன்னகைத்தான்.

 

அதோடு அவனுக்கு அவள் முதல் முறை தன் அப்பாவிற்கு தோசைமாவில் காஃபி கலந்தது நினைவு வர அவன் இதழ் மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

 

“எப்போ வீட்டுக்கு வறீங்க வசீ” சசிதரன் ஆர்வமாக கேட்க, வசீகரன் முகம் மாறியது.

 

“அம்மா, பாட்டி எங்களை ஏத்துக்க தயாரா இருக்காங்களா?” வசீகரன் சந்தேகமாக கேட்க,

 

“அவங்களை பத்தி உனக்கு தெரியாதாடா, உன்மேல அவ்வளோ பாசம் வச்சிருக்காங்க, நீ பேச்ச மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டன்ற கோபம் தான் அவங்களுக்கு. நேர்ல வந்து நீ ஒரு சாரி கேட்டா போதும்… அழுதுடுவாங்கடா” சசிதரன் அம்மா, பாட்டியின் கவலையை சொல்ல, வசீகரன் தலையசைத்துக் கொண்டான். பதில் பேசவில்லை. அமைதியாக ஏதோ யோசனையில் இருந்தான்.

 

“நான், திவி, நீ, ரமி நாலு பேரும் ஒன்னா வீட்டுக்கு போகலாம்டா, என்ன இருந்தாலும் உங்களோட இந்த நிலைமைக்கு நாங்களும் ஒருவகையில காரணம் தான” சசிதரன் சொல்ல,

 

“நீங்க காரணமா இல்லாம இருந்தாலும் கூட நாங்க சேர்ந்திருப்போம், ஏன்னா அவ எனக்காகவே பொறந்தவ, நான் அவளுக்காக” என்று வசீகரன் உணர்ந்து சொல்ல, சசிதரன் புருவங்கள் உயர்ந்தன.

 

“ஏய் ரெண்டு பேருக்கும் லவ் ஒர்க் அவுட் ஆகிடுச்சா, சூப்பர் சூப்பர்டா” என்று மகிழ்ச்சியோடு சொன்னவன், தம்பியை தன்னோடு இழுத்து கட்டிக் கொண்டு உற்சாகமாக வாழ்த்தினான்.

 

“இப்பதான் வசீ எனக்கு நிஜமாவே நிம்மதியா இருக்கு, அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே, உங்க ரெண்டு பேருக்கும் மனசு ஒட்டாம போனா என்னாகுமோனு பயந்துட்டே இருந்தேன்” என்றான்.

 

“நீ வீணா குழப்பிட்டு இருக்கண்ணா” என்றவன் சற்று பொறுத்து, “நானும் ரமியும் நம்ம வீட்டுக்கு வரனும்னா, எனக்கொரு கன்டிஷன் இருக்கு” என்றான். 

 

சசிதரன் பார்வை தம்பியிடம் நிலைத்தது. சின்னவன் கோரிக்கையில் பெரியவன் முகம் வாட்டம் கண்டது.

 

***

காதல் கூத்து கட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!