காதலில் கூத்து கட்டு 34(2) final

காதலில் கூத்து கட்டு 34(2) final

காதலில் கூத்து கட்டு 34(2) final 

 

கொரோனா நோய் தாக்கத்தின் இரண்டாவது அலை தொற்று அசுர வேகத்தில் பரவி, நோயின் அடுத்த கோர தாண்டவம் பல உயிர்களை பலி எடுத்து கொண்டிருந்தது. 

 

தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு, தொற்றின் தடுப்பு நடவடிக்கைகள் என உலகம் நோயின் பிடியிலிருந்து விலக முயன்றிருக்க, பாரத நாட்டின் நிலையோ படு மோசமாய். 

 

எதிர்நோக்கு பார்வை இன்மையால் தடுப்பு நடவடிக்கைகளில் தோய்வு. நோய் சூழல் ஏற்படுத்திய ஒருவித அலட்சிய பாவம். நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள், அவசர சிகிச்சை பிரிவில் மூச்சு காற்று தட்டுப்பாட்டில் உயிர் மூச்சை விட்டு கொண்டிருந்தனர் பலர். பிணங்களை எரியூட்டவும் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய துயர நிலை வேறு. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருந்தது. 

 

இரவின் உறக்கத்தில் ரம்யாவின் கைகள் வசீகரனின் சட்டையை அழுந்த பிடித்து இழுக்க, உறக்கம் கலைந்து அவள் நிலையை பார்த்தவனுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. 

 

“மாமு… வலிக்குது” என்றாள் வலியை பொறுக்க முயன்றபடி.

 

வசீகரனுக்கு ஒருநொடி திகைப்பு. பிரசவத்திற்கு இன்னும் முழுதாக மூன்று வாரங்கள் இருக்க, இப்போதே பிரசவவலி ஏற்பட்டதில் அவனுக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

 

அவசரமாய் மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்தான். 

 

‘ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு’ என்றனர். 

 

‘கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை’ என்றனர்.

 

‘டெலிவரி கேஸ் இப்போதெல்லாம் பார்ப்பதில்லை’ என்றனர்.

 

‘மருத்துவமனையில் இடமில்லை’ என்றனர்.

 

அடுத்தடுத்து அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தான். எதிர்முனை பதில்கள் ஒருபுறம் எரிச்சலும் கோபமும் மூட்ட, வலியில் துடித்த ரம்யா நிலை அவனையும் துடிக்க வைத்தது.

 

ரம்யாவிற்கு சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவருக்கு அழைப்பு விடுக்கவும், நான்கு தவறிய அழைப்பிற்கு பிறகே மறுமுனையில் பதில் வந்தது.

 

வசீகரன் அவசரமாய் ரம்யாவின் நிலையை சொல்ல, அவர் பிரத்யேக கிளினிக் பெயரை சொல்லி அழைத்து வரும்படி கூறினார். ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதால் தேவையான அளவு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வர  வேண்டும் என்றும் கூடுதலாக சொன்னார்.

 

ரமியின் நிலையை விட அவனுக்கு வேறெதுவும் பெரிதில்லை. ‘சரி’ என்றவன், தேவாவை அழைத்து விரைவில் கார் எடுத்து வரும்படி சொல்லிவிட்டு வலியில் துவண்டிருந்தவளை தாங்கிக் கொண்டான்.

 

“புஷி, ஒன்னும் ஆகாதுடி, கொஞ்ச நேரத்தில ஹாஸ்பிடல் போயிடலாம்”  

 

“மாமு… டெலிவரிக்கு இன்னும் டேட் இருக்கே, இப்பவே ஏன் வலிக்குது? எனக்கு ரொம்ப பயமாயிருக்கு மாமு” அவன் கைகளை பயத்தில் அழுத்தி பிடித்து கொண்டாள். 

 

“நான் தான் உன் கூடவே இருக்கேன் இல்ல, ஏன் பயப்படுற, தைரியமா இருக்கனும். என் புஷி குட்டி ஸ்ட்ராங் கேர்ள் தானே” வசீகரன் அவள் தலை வருடி தைரியம் கூறியவன்,

 

“ஓய், உன்கூட சேர்ந்து வாலுத்தனம் பண்ண ஒரு குட்டி பேபி வர போறாங்க சீக்கிரமே” அவள் பயத்தை விரட்ட குழந்தையின் வரவை நினைவுப்படுத்தினான். ரம்யாவின் வியர்த்த முகம் இளகியது. புன்னகைக்க முயன்று ஆமென்று தலையாட்டினாள்.

 

ஈர துண்டில் அவள் முகம் துடைத்தவன் அவளை சாய்வாக அமர வைத்து, தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டான்.

 

சில நிமிடங்களில் மறுபடி வலி எடுக்க, ரம்யா துடித்து போனாள்.

 

“ரொம்ப வலிக்குது மாமு… சீக்கிரம் ஹாஸ்பிடல் போலாம்”  

 

“இதோ போலாம்டி. கொஞ்சம் வலி பொறுத்துக்கோ எல்லாம் சரியாகிடும்” தனக்கும் சேர்த்து தைரியம் சொல்லிக் கொண்டான். அவனால் அவள் வலியை வாங்கிக் கொள்ள முடியவில்லை, ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே தர முடிந்தது.

 

தேவாவும் வந்துவிட, விரைவாக அழைத்து சென்று ரம்யாவை மருத்துவமனையில் சேர்த்தனர். 

 

நேரம் கடந்து கொண்டே இருந்தது. அவள் விட்டு விட்டு வலியில் துடித்துக் கொண்டு இருக்க, வசீகரன் அவளுக்கு அருகே தான் இருந்தான். யாரேனும் பெண்ணை உதவிக்கு விட்டு செல்லும்படி மருத்துவர் சொல்லியும், ”நானே அவளை பார்ப்பேன்” என்றான்.

 

“ஏதோ வேகத்துல பேசுறீங்க வசீகரன், பிரசவத்தை நேர்ல பார்த்தா பயந்துடுவீங்க” அவர் எச்சரித்தும் அவன் நகரவில்லை. 

 

இரவு கடந்து பகலும் வந்து விட்டது. ரம்யா வலியில் துடித்து துவண்டு அரை மயக்கத்தில் கிடந்தாள். அவளை சுற்றி இருந்த சாதனங்கள் குழந்தையின் அசைவு, இதய துடிப்பை திரையில் காட்டியபடி இருந்தன. 

 

டிரிப்ஸ் பொருத்தி இருந்த அவள் கையை இதமாய் பிடித்து வருடியபடி அவளிடம் விடாமல் பேசிக்கொண்டே இருந்தான் வசீகரன். அவளை பற்றி பேசினான், அவர்கள் குழந்தை பற்றி பேசினான், அவளின் சேட்டைகள் பற்றி பேசினான்… அவனுக்கு ‘ம்ம்’ என்று முனங்கல் தந்தவளிடம் இப்போது அந்த முனங்கலும் இல்லை. 

 

***

 

தகவல் அறிந்ததும் பைரவியின் தாய்மனம் பரிதவிக்க தொடங்கியது. மகள் மருத்துவனையில் சேர்த்து இருப்பது தெரிந்தும் அழுத்தமாக அமர்ந்திருக்கும் திவாகரை பார்த்து கோபம் தான் வந்தது அவருக்கு.

 

“என்னங்க கோப படற நேரமா இது? ரமிக்கு என்னாச்சோ என்னவோ, வாங்க போலாம்” பைரவி பதைபதைத்து அழைக்க,

 

“நாம போய் மட்டும் என்னாக போகுது” இப்போதும் திவாகர் விட்டத்தியாக பதில் பேசினார்.

 

“ஏதாவது ஆகி போனா உங்களால நிம்மதியா இருக்க முடியுமா?” அவர் ஆதங்கமாக கேட்க,

 

“என்ன உன் பொண்ணுக்கு சப்போட்டா” என்றார் அசையாமல்.

 

“ஆமா, இத்தனை நாள் உங்களுக்கு சப்போட்டா இருந்தேன் இல்ல. உங்களுக்காக… உங்க மனசு கஷ்டபட கூடாதுன்னு ரமி உண்டாகி இருக்கிறது தெரிஞ்சும் அவளை பார்க்க கூட போகாம புழுங்கி இருந்தேன் இல்ல, இப்ப நம்ம பொண்ணுக்காக தான் பேசறேன்” பைரவி ஒரு முடிவோடு பேசினார்.

 

“இது அவளே தேடிக்கிட்ட வாழ்க்கை, அவ பட்டு தான் திருந்தனும்” திவாகர் எதற்கும் இறங்கி வர மறுத்தார்.

 

“என்ன விளயாடுறீங்களா? பட்டு திருந்த கூட ரமி உயிரோட இருக்கனும் இல்லயா?” பைரவி ஆத்திரமாக கேட்டுவிட

 

“ஏய் என்ன உளற நீ?” மகள் உயிரை பற்றிய வார்த்தை திவாகரை அசைத்து பார்த்தது.

 

“உங்களுக்கு தான் புரியல, ரமி ஹெல்த் கன்டிஷன் என்னைவிட உங்களுக்கு தான நல்லா தெரியும். அவ ஒரு குழந்தைய பெத்தெடுக்கிறது எவ்வளவு பெரிய விசயம்னு உங்களுக்கு இன்னும் விளங்கலையா?”

 

பைரவி சொல்ல சொல்ல, திவாகர் திடுக்கிட்டார்.

 

“நம்ம பேச்சை மீறி போனதால அவ மேல எனக்கும் கோபம் இருக்கு தான். அதுக்காக இந்த நிலைமையில அவளை விட்டுட்டு வேடிக்கை பார்க்கிற அளவுக்கு எனக்கு கல்நெஞ்சு இல்லங்க, இப்ப நீங்க வரீங்களா, இல்ல நான் தனியா போகட்டுமா?” பைரவி இன்னும் பேச்சை வளர்க்க விரும்பாமல் முடிவாக கேட்டுவிட்டு கிளம்ப தயாரானார்.

 

***

 

முன்பே வசீகரன் குடும்பம் அந்த சிறிய மருத்துவமனை வெளியே காத்திருந்தனர். அத்தனை பேரை உள்ளே விட அனுமதி மறுக்கப்பட, அங்கிருந்து செல்லவும் மனமின்றி வெளியே காத்து கிடந்தனர்.

 

“தாயும் பிள்ளையும் நல்லபடியா பிரிச்சு கொடு மாரியாத்தா, உன் கோயிலுக்கு கூழூத்தி பூச எடுக்கிறேன்” வரிசையாக எல்லா கடவுள்களையும் வேண்டுதல்களால் உதவிக்கு அழைத்து கொண்டிருந்தார் சாவித்திரி பாட்டி. அதை தவிர்த்து வேறென்ன செய்வது என்றும் அவருக்கு தெரியவில்லை.

 

மேகவாணி, “எல்லா தப்பும் என்னோடது தான், வசீ விருப்பத்துக்கு நான் ஒத்துட்டு இருந்து இருந்தா, அவன் அன்னிக்கு யாருமில்லாம கல்யாணம் பண்ணிட்டு இருந்திருக்க மாட்டான். இப்ப அநாதை மாதிரி தனியா புள்ளதாச்சி கூட கஷ்டபட்டிருக்க மாட்டான். பெத்தவன்னு நான் இருந்து என்ன புண்ணியம். என் புள்ளய தாங்க வேண்டிய நேரத்தில ஒதுங்கி நின்னுக்கிட்டேனே கடவுளே” மகன், மருமகளோடு தனித்து கஷ்டப்பட, உதவ முடியாத நிலையில் அவரின் தாயுள்ளம் நொந்து நைந்து அரற்றிக் கொண்டிருந்தது.

 

“எனக்கு ரொம்ப பயமாயிருக்கு சசி, ரமிக்கு எதுவும் ஆகாது இல்ல, ரமிக்கு ஒன்னும் ஆக கூடாது” திவ்யா தங்கையின் உடல்நிலையில் கொண்ட அச்சத்தில் கலங்கி தவித்திருக்க, “ரமி கூட வசீ இருக்கான், கண்டிப்பா ரமிக்கு எதுவும் ஆக விட மாட்டான், நீ தைரியமா இரு ஓகே” சசிதரன் நம்பிக்கையாக சொன்னான். 

 

ஆனால் இத்தனை இக்கட்டிலும் வசீகரன் தன்னை அழைக்காமல் தேவாவை அழைத்து உதவி கேட்டிருப்பதை நினைத்து சசிதரனுக்கு மிகுந்த மன உளைச்சலானது. எதற்கெடுத்தாலும் தன்னிடம் ஓடிவரும் தம்பியை, இவன் எங்கோ, எப்போதோ தோலைத்து விட்டது காலம் கடந்து அவனுக்கு உறைத்ததில் சோர்ந்து தான் போனான். இனியாவது தன் தம்பியை தன்னிடம் மீட்கும் வழியை காண வேண்டும் அவன்.

 

இந்த நேரத்தில் தான் பைரவி அவர்களை நோக்கி வந்தார், உடன் திவாகரும் வந்திருந்தார். எத்தனை கோபம், பிடிவாதம் இருந்தாலும் மகளுக்கு ஒன்றெனும் போது அவரின் தந்தை மனது தாங்கவில்லை போலும். மகளின் பாசத்தில் அவரின் வறட்டு பிடிவாதம் விரிசல் விட்டிருப்பதாய்.

 

அம்மா, அப்பாவை அங்கே பார்த்ததும் திவ்யாவிற்குள் அத்தனை ஆசுவாசம். பைரவியிடம் விரைந்து சென்று அவரை கட்டிக் கொண்டாள்.

 

***

 

“ரமி… ரமீ… நான் பேசறது கேக்குதா, கண்ண திற ரமீ” வசீகரன் அழைப்பிற்கு அவளிடம் பதிலில்லை.

 

செவிலியும் மருத்துவரும் அவளிடம் வந்து பரிசோதித்தனர். அவளின் கன்னத்தை வலிக்க தட்டி சுயநினைவுக்கு கொண்டு வர முயன்றனர். டிரிப்ஸ் வழி அவளுக்கு ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டது.

 

வசீகரனுக்கு அந்த சூழல் மிரட்சியை தந்தது. அந்த ஆண் மகனுக்கு பயமாய் கூட இருந்தது. வேற்றிடத்தில் தாயை தோலைத்து விட்ட சிறுவனை போல ரம்யா முகம் பார்த்து பரிதவித்து நின்றிருந்தான் அவன்.

 

“சார், ஏன் இப்படி நிக்கிறீங்க, உங்க மனைவிகிட்ட பேசுங்க, அவங்களை சுயநினைவுக்கு கொண்டு வாங்க, இல்லனா பிரச்சினை ஆயிடும்” செவிலி அவனிடம் கத்தவும், 

 

உணர்வு மீண்டவனாக வசீகரன் ரம்யா முகம் நோக்கி குனிந்து, “புஷி… எழுந்துருடி, தூங்குற நேராமா இது! நம்ம பேபிய வெல்கம் பண்ண வேணாமா?” ஈரம் பூத்த கண்களோடு அவளை மிரட்டிலானான்.

 

மருத்துவர் வலிக்க அடித்ததில் அவள் கன்னத்தின் வலி அவளை சற்று நினைவுக்கு திருப்பி இருக்க, “மாமு…” அவளின் உலர்ந்து வெடித்த இதழ்கள் சத்தமின்றி அசைந்தன.

 

“ரம்யா பேபிய புஷ் பண்ண ட்ரை பண்ணுங்க”

 

“வசீகரன் அவங்கள ட்ரை பண்ண சொல்லுங்க குயிக்”

 

மருத்துவர் அவர்களிடம் சொல்லிக்கொண்டே, இந்த பூமியின் புது உயிரை வரவேற்க தயாரானார்.

 

சில நிமிடங்கள் போராட்டத்திற்கு பிறகு, தாயின் கருவறை வாசத்திலிருந்து விடுப்பட்டதை உணர்ந்து வீறிட்டு அழுதது குழந்தை.

 

செவிலி குழந்தையை துடைத்தெடுத்து வந்து வசீகரன் முன் காட்ட, குட்டி இமைகள் மூடிய அவன் பட்டு பிள்ளையை பார்த்தவன் முகம் உருகி மலர, கண்கள் பனித்தன. 

 

அவன் தந்தையாகிய தருணம், அவன் நெஞ்சம் விம்மி புடைத்தது.

 

திரும்பி ரம்யாவை பார்க்க, அவள் ஓய்ந்து போய் கிடந்தாள். அவள் நெற்றி வருடி தந்தவன், “புஷி, நம்ம பேபிய பாரு” அவள் காதில் சொல்ல, ரமி அரை மயக்க நிலையை பாதி கண்கள் திறக்க, செவிலி அவள் முகத்தருகே பிள்ளையின் முகத்தை காட்டினார்.

 

இமைகளை விரித்து பார்க்க முயன்றவள் கண்ணோரம் ஆனந்த நீரோட்டம்! குழந்தையை தொட்டு பார்க்க பரபரத்த கைகளை அசைக்கவும் முடியவில்லை அவளால்.

 

வறண்ட நாவை ஈரப்படுத்தி, “என்ன… குழந்தை?” என்றாள். 

 

“நமக்கு பையன் பிறந்திருக்கான் புஷி” வசீகரன் மிளிர்ந்த புன்னகையுடன் சொல்லவும், “பையனா” உதட்டசைத்தவள் நினைவு மெதுமெதுவாய் தப்பிப் போனது.

 

***

 

இரண்டு நாட்கள் கழித்து, சிறு நடுக்கத்துடன் தன் பேர பிள்ளையை கைகளில் வாங்கி கொண்டார் இளங்கோவன். அடித்து பிடித்து அவர் ஊர் வந்து சேரும் போது, பேரப்பிள்ளையின் வரவை அறிந்து பூரித்து போனார் மனிதர்.

 

அவர் கைகளுக்குள் பாந்தமாய் உறங்கிய பேரனை கண்களின் நிறைத்து கொண்டவர், “நேத்துவரைக்கும் மீசைய முறுக்கிட்டு சுத்திட்டு இருந்த என்னை இப்படி நீ வந்ததும் தாத்தா ஆக்கிட்டியேடா படவா” பேரனிடம் குறைப்பட்டுக்கொள்ள,

 

“அட போடா, பேரன்கிட்ட பேசறதை பாரு” சாவித்திரி மகனை கண்டிக்க, “உங்க மகனுக்கு இன்னும் இளம ஊஞ்சலாடுதுன்னு நினப்பு அத்த” மேகவாணியும் கணவனை வாரினாள்.

 

“மேகா, நீயும் தான் பாட்டி ஆகிட்ட இப்போ” இளங்கோ பெருங்குரலெடுத்து சிரிக்க, அங்கே வந்த வசீகரன் முகத்தில் சலிப்பு தெரிந்தது.

 

“இப்படி ஏன் இங்க கூட்டம் போடுறீங்க, நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வரோம்னு சொல்லி இருந்தேன் இல்ல” என்றான் அவர்களை கண்டனமாக பார்த்து.

 

“டேய், அதைப்பத்தி தான் பேச வந்தோம்” இளங்கோ பேச்செடுக்க, “நீங்க முதல்ல பேசாதீங்க ப்பா, ஒரு கால் இல்ல, மெசேஜ் இல்ல, வருசத்துக்கு ஒரு தடவ மட்டும் எங்கேயோ இருந்து குதிக்கிறீங்க” என்று கோபமாக சொன்னவன் தந்தையிடமிருந்து தன் பிள்ளையை அலுங்காமல் வாங்கிக் கொண்டான்.

 

“டேய், என் வேலை, அப்படிடா” 

 

“அப்ப அந்த வேலையயே கட்டிட்டு அழுங்க, குடும்பத்தை பார்க்க வர வேணாம்” வசீ அவரிடம் காய்ந்து விட்டான்.

 

“என்ன மேகா, இவன் இப்படி பேசுறான்” இளங்கோ மனைவியை பார்க்க,

 

“வசீ சொல்றது சரிதான்ங்க, போன்ல கூட பேச முடியாத அளவுக்கு என்ன வேலை, நீங்க செய்யறது கொஞ்சம் கூட சரியில்ல” மேகவாணியும் கோபம் கொண்டாள்.

 

இரு கைகளையும் தூக்கி சமாதானம் என்றவர், “இப்ப என் பேச்சை விடுங்க, வசீ, அம்மா, மேகா, சசி உன்ன ஏத்துக்கிட்டா வீட்டுக்கு வரேன்னு சொன்னல்ல, இப்ப எல்லாரும் உங்கள ஏத்துக்கிட்டாங்க, நாளைக்கு நேரா நம்ம வீட்டுக்கு வரீங்க சரியா?” இளங்கோவன் முடிவாக சொல்ல, வசீகரன் முகம் யோசனை காட்டியது.

 

“அதெல்லாம் முடியாதுங்க, ரமியும், குழந்தையும் நாங்க எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறோம், தாயும் பிள்ளையும் அம்மா வீட்டுக்கு வரது தான் முறை” அப்போது தான் அங்கே வந்த பைரவி தன் முடிவை சொல்ல, வசீகரன் நெற்றி சுருங்க, தன் மாமியாரின் பின்னோடு வந்த மாமனாரின் மேல் படிந்தது.

 

“நான் இல்லாம என் பொண்டாட்டி, புள்ளய மட்டும் பிரிச்சு கூட்டிட்டு போவீங்களோ” வசீகரன் கேள்வி நக்கலாக வர,

 

“ஆமா சின்ன மாப்ளே, மூனு மாசம் நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு தான் இருக்கனும். புரிஞ்சிக்கங்க” பைரவி வசீகரனுக்கு இணையாக நக்கலாகவே பதில் தந்தார்.

 

“என்ன மாமியாரே, நீங்க மட்டும் பேசறீங்க, என் மாம…னாரு பேச மாட்டாரா?” இரண்டு நாட்களாக திவாகரும் வந்து போய் கொண்டு தான் இருக்கிறார், ஆனால் ஒற்றை வார்த்தை யாரிடமும் பேசவில்லை.

 

இப்போது வசீகரன் சீண்டலில் அவருக்கும் ரோஷம் வர, “மரியாதையா பேசு, ஏதோ என் பொண்ணை நல்லா பார்த்துக்கிறன்ற காரணத்துக்காக தான் உன்ன மன்னிச்சு விடறேன்” என்று எச்சரித்தார் திவாகர்.

 

வெறும் வார்த்தைக்காக மட்டுமில்லை, இதனை திவாகர் மனதார சொன்னார். ரம்யாவை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல், அவள் சீரற்ற உடல்நிலையில் கவனமெடுத்து தனியே யார் உதவியும் நாடாமல் பார்த்துக் கொள்வது அத்தனை சுலபம் இல்லை என்பது அவருக்கு நன்றாகவே புரிந்து தான் இருந்தது.

 

பிள்ளை பேற்றையும் உடன் இருந்து கவனித்து கொண்டவன் மீதிருந்த தவறான அபிப்பிராங்கள் சரிந்து, வசீகரன் மேல் மரியாதையும் வந்திருந்தது திவாகருக்கு. ஆனால் அவர் எதையும் அவனிடம் காட்டிக் கொள்வதாக இல்லை.

 

மாமனாரின் மனமாற்றத்தை எண்ணி வசீகரன் வாய்க்குள்‌ சிரித்துக் கொண்டான்.

 

“திவ்யா, பச்ச உடம்புகாரிய பார்த்துக்கிறது அம்புட்டு சுலபமில்ல, உன் அம்மாவுக்கு உடம்பு வளையாதுன்னு சொல்லு” சாவித்திரி பாட்டி பைரவியிடம் ஜாடை பேச,

 

“ரமியோட ஹெல்த் கணன்டிஷன் அவங்களைவிட எனக்குத்தான் நல்லா தெரியும். நானும் ரெண்டு பொண்ணுங்களை பெத்தெடுத்து வளர்த்தவ தான்னு நீ சொல்லு திவ்யா” பைரவியும் விடாமல் பாட்டியிடம் மல்லுக்கு நின்றார்.

 

“அச்சோ அத்த, அம்மாவும் பாட்டியும் மறுபடி சண்ட போறாங்க” திவ்யா கவலையுடன் மேகவாணியிடம் சொல்ல, “ப்ச் அவங்க சண்ட போட்டு ஒரு முடிவுக்கு வரட்டும், நர்ஸ் வந்து திட்டறத்துக்குள்ள நாம கிளம்பலாம் வா” என்று மேகவாணி மருமகளுடன் கூட்டு சேர்ந்து அங்கிருந்து நழுவிக் கொண்டார். 

 

இளங்கோவன், திவாகரிடம் தலையசைத்து விடைப்பெற்று கிளம்ப, வசீகரனும் நமட்டு சிரிப்போடு நழுவிக் கொண்டான்.

 

பாட்டியும் பைரவியும் தங்கள் வாக்குவாதத்தை விடுவதாக இல்லை. மற்றவர்களை போல நழுவ முடியாமல் திவாகர் நெற்றியை தேய்த்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டார். பாவம் மனிதர்!

 

“என்ன மாமு சத்தம், மறுபடி சண்டையா?” கட்டிலில் இருந்து ரம்யா கவலையாக கேட்க, குழந்தையை அவளருகில் படுக்க வைத்தவன், “ஆமா, பெரிய சண்ட, உன்னையும் பட்டுவையும் யார் வீட்டுக்கு முதல்ல அழைச்சிட்டு போறதுன்னு” என்றவன் அவள் மூக்கை நுனி விரலால் தட்டி விட்டான்.

 

“அப்ப நீ என்கூட வர மாட்டியா மாமு?” அவள் முகம் சுருக்கினாள்.

 

“நான் வரது இருக்கட்டும்டி, உனக்கு யாரு வீட்டுக்கு போக இஷ்டம், அதை முதல்ல சொல்லு” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி.

 

“எங்கனாலும் எனக்கு ஓகே மாமு, நீ என்கூட இருந்தா மட்டும் போதும் எனக்கு” என்றவள் பக்கத்தில் நின்றிருந்தவன் வயிற்றை கட்டிக் கொண்டாள்.

 

சிரிப்புடன் அவள் தலையை வருடி தந்தவன், குனிந்து அவள் காதில், “இது நம்ம வீடு இல்ல புஷி, கிளீனிக்” என்று கிசுகிசுக்க, அவள் அசடு வழிய விலகிக் கொண்டாள்.

 

“உனக்கு ஒன்னு தெரியுமா? இன்னிக்கு என் மாமனாரு என்கிட்ட பேசிட்டாரு” வசீ காலரை தூக்கிவிட்டு தோரணையாக சொல்ல, ரமியின் விழிகள் விரிந்தன.

 

“நிஜமாவா! என்ன சொன்னாரு?” ஆர்வமாக கேட்க,

 

“ம்ம் நான் என் வாலு பொண்டாட்டிய தங்கமா பார்த்துக்கிறேனாம், அதால போனா போகுதுன்னு என்னை மன்னிச்சு விடறாராம்”

 

“எங்க அப்பா, எனக்காக இறங்கி வந்ததையும் எவ்வளோ கெத்தா சொல்லாரு பார்த்தியா?” அவள் பெருமையாக சொல்ல,

 

“ஆமாமா, குப்புற விழுந்தாலும் உன் அப்பன் மீசையில மட்டும் மண்ணு ஒட்டவே ஒட்டாது” வசீகரன் அவள் கன்னங்களை கிள்ளி விட்டு கேலி பேசினான்.

 

குழந்தையின் சின்ன சிணுங்கலில் இருவரின் பார்வையும் அவனிடம் சென்றது. 

 

“புஷி நானும் பார்க்கிறேன், நான் உன் பக்கத்தில வந்தாலே இவன் சிணுங்குறான்டீ” வசீ புகார் வாசிக்க,

 

“அச்சோ அப்படியில்ல மாமு, பட்டுகுட்டிக்கு பசி எடுத்து இருக்கும் அதான் கூப்பிட்டு இருப்பான்” ரமி மகனுக்கு பரிந்து பேசி, மெதுவாய் சின்னவனை தட்டிக் கொடுத்தாள்.

 

“ம்ம் இப்பவே அவனுக்கு சப்போட்டா, இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து என்னை நல்லா வச்சு செய்ய போறீங்க, அது மட்டும் நல்லா தெரியுது எனக்கு” வசீ சுகமாய் அலுத்து கொள்ள, ரமி கிளுக்கி சிரித்தாள்.

 

இனி தினம் தினம் அவர்கள் வாழ்வில் காதல் கூத்து கட்டட்டும்… கொஞ்சம் சுகமாய். கொஞ்சம் இம்சையாய்…

 

***முற்றும்***

 

(தொடர்ந்து படித்து ஆதரவு அளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 கதையில் உங்களுக்கு பிடித்தவை, பிடிக்காதவை, நிறை, குறைகளை இரண்டு வார்த்தைகள் சொல்லிட்டு போனால், நானும் என் எழுத்தை திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும்… கதை முடிந்தது ஃப்ரண்ட்ஸ் எபிலாக் என்கிட்ட இல்ல… கேக்காதீங்க ப்ளீஸ்)

 

❤️❤️❤️நன்றி❤️❤️❤️

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!