காதல் களம் 11

images (12)-f59987da

காதல் களம் 11

காதல்களம் 11

 

பயந்திருந்த கதிரை அம்மாவிடம் இருந்து வாங்கி தோளில் தூக்கிக்கொண்ட வேணி, கண்முன் தெரிந்த வீட்டைப் பார்த்து தயங்கி நின்றாள். 

 

மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருந்த இரண்டு மாடி கட்டிடம், பார்வைக்கு அழகாக அவள் கண்முன்னால் உயர்ந்து நின்றது. வேணி கேள்வியாக பாண்டியைப் பார்த்தாள். 

 

அவன், அங்கு யாரையும் கண்டுகொள்ளாது உள்ளே நடந்தான். இரத்தம் கசிந்த அவன் முழங்கையைப் பார்த்தவளுக்கு, அவன் மேல் கொண்ட வெறுப்பை மீறியும் பயமும் பரிதவிப்பும் உண்டாக, கதிரை இன்னும் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

 

பாண்டி முன் வாசலுக்கு வர, மங்கா அவர்களுக்காக ஆரத்தி கரைத்து எடுத்து வந்து அவன் முன் நின்றாள். 

 

“இது ரொம்ப முக்கியம் பாரு, நகரு.” அவன் கோபத்தில் கிட்டத்தட்ட கத்தினான்.

 

“ஆபத்த தாண்டி வந்திகீற, திருஷ்டி கழியட்டும் கிங்கு.” நைனா சொல்லவும், பற்களைக் கடித்துக்கொண்டு நின்றான். வேணி கதிருடன்‌ அவன் அருகில் வந்து நிற்கவும், மங்கா கிங்கின் அடிப்பட்ட கையைப் கவனித்து கலங்கியவளாக, இருவருக்கும் ஆரத்தி சுற்றிவிட்டு நகர்ந்தாள்.

 

கிங் வேகமாக வீட்டிற்குள் செல்ல, வேணி, கௌரி, தாத்தா மூவரும் சற்று தயக்கத்துடனே உள்ளே வந்தனர்.

 

வீட்டினுள்ளே வந்ததுமே தெரிந்தது, நிச்சயம் அது பெரிய வீடு என்று. உயர்தர சோஃபா, ஹோம் தியேட்டர் உடன் கூடிய ஹால், பெரிதாக இருந்த மாடுலர் கிச்சன், கீழ் தளத்தில் மூன்று அறைகள், அதே போல மேல் தளத்திலும் மூன்று அறைகள் இருக்கும் என்று பார்க்கும்போதே தோன்றியது.

 

“எவ்வளோ பெரிய வீடு!” கோதண்டம் தாத்தா வாய்விட்டு சொல்லியே வியந்தார்.

 

வேணியின் இதழோரம் கசப்பான நெளிப்பு. “ஆமா, பெரிய வீடு தான், எவனை அடிச்சு, எவனை கொன்னு சம்பாதிச்சதோ!” 

 

அவள் இப்படி சொல்லவுமே, பெரியவர்கள் இருவருக்கும் மனம் தளர்ந்து போனது. சற்றுமுன் நடந்தேறிய நிகழ்வு வேறு இன்னும் அவர்களைப் பயத்திலேயே வைத்திருந்தது.

 

“எதுக்கு இங்கேயே நிக்கிறீங்க? கதிர தூக்கினு உள்ள போ…” கிங்கின் அதட்டலில், அவனை முறைத்தபடியே வேணி அவர்களுடன் உள்ளே சென்றாள்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவர் வந்து விட்டார். அவர் வரும் வரைக்கும் கைவலியைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், இறுக்கமான முகத்துடன் தீவிர யோசனையில் அமர்ந்திருந்தான் கிங் பாண்டி.

 

லெஃப்ட், ரைட் அவன் பக்கம் செல்ல கூட தயங்கி, வெளியே வீட்டைச் சுற்றி ஆட்களை பாதுகாப்புக்காக நிறுத்தி வைத்து கொண்டிருந்தனர். 

 

அந்த நாள் வரை அமைதியாக இருந்த அந்த தெரு, இவன் ஒருவன் வரவால் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

 

கைச்சதையில் குத்தியிருந்த கண்ணாடி சில்லுகளைக் கவனமாக நீக்கிவிட்டு, காயத்திற்கு கட்டு போட்டார் மருத்துவர் ராம்சரண்.

 

“இன்னா டாக்டரே இது, இம்மாத்துண்டு காயத்துக்கு இம்மாம் பெருசா கட்டு போட்டு கீற.” பாண்டி அவரிடமும் சிடுசிடுக்க, 

 

“எப்படி, இது உனக்கு சின்ன காயமா? செப்டிக் ஆகி புண்ணாச்சுனா, கையையே எடுத்துட வேண்டியது தான் கிங்கு.” மருத்துவர் சிரித்தபடி சொன்னார்.

 

“பயமுறுத்தி பாக்கிறியா டாக்டரே.” கிங் அசராமல் அவரை கேட்டான்.

 

அவனுக்கு ஊசிவழி மருந்தை செலுத்தியவர், “உன்ன பயமுறுத்த முடியுமா கிங்கு, பட் கை ரொம்ப டேமேஜ் ஆகி இருக்கு. குறைஞ்சது ஒரு மாசமாவது ஆகும் காயம் முழுசா ஆற, அதுவரைக்கும் ஜாக்கிரதையா தான் நீ இருக்கணும் சொல்லிட்டேன்.” என்றார்.

 

“நல்லா சொல்லிக்கின போ டாக்டரே.” என்று அலுத்துக் கொண்டவன், “நைனா, உனுக்கும் மத்தவங்களுக்கும் ஏதாது அடிப்பட்டுக்குனு இருந்தா டாக்டர் கிட்ட காட்டிக்கோங்க போங்க.” என்று அனுப்பி வைக்கவும்,

 

“நான் டாக்டர்பா, நல்லதுக்கு தான் சொல்வேன். ஈவ்னிங் கிளீனிக் வந்திடு, கையில பீஸஸ் ஏதாவது இன்னும் குத்தி இருக்கான்னு பார்த்து ஃபுல்லா ரிமூவ் பண்ணி கட்டு போடணும்.” என்று அவனுக்கு அறிவுரை வழங்கிவிட்டே மற்றவர்களைக் கவனிக்க நகர்ந்தார்.

 

மற்றவர்கள் யாருக்கும் பெரிதாக அடி ஏதும் பட்டிருக்கவில்லை. கார் குலுங்கி திரும்பியதில் பெரியவர்களுக்கு உடம்பு வலி பிடித்திருந்தது. வேணியின் இடப்புற கன்னத்திலும் கையிலும், கண்ணாடி சில்லுகள் லேசாக கீறி இருந்தது. கதிருக்கு காயம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும் குழந்தை பயந்து போயிருந்தான். அனைவருக்கும் உரிய மருந்தை தந்துவிட்டு, கதிரின் தலையை வருடிவிட்டு நகர்ந்தார் மருத்துவர் ராம்சரண்.

 

தன் மேலும் கதிர் மேலும் வாஞ்ஞையாக படிந்த அந்த மருத்துவரின் பார்வையைக் கவனித்த வேணிக்கு சந்தேகமானது. ‘இந்த ரௌடி பயனுங்க கூட்டத்துக்கு இவர் தான் ஆஸ்தான டாக்டர் போல, ஆளு பார்க்க பெரிய மனுசரா இருக்காரு. இப்படி லோக்கல் ரௌடி கூட எல்லாம் பழக்கம் வச்சு இருக்காரு. யாரை தான் நம்புறது முருகா!’ மனதுள் வெதும்பிக் கொண்டாள்.

 

அதையெல்லாம் தாண்டி, அவள் சந்தோஷிக்கும் விதமாக ஒரு விஷயத்தையும் அவர் சொல்லி சென்றிருந்தார். பாண்டிக்கு கைக்காயம் சரியாக குறைந்தது மூன்று வாரங்களாவது ஆகும் என்று. அதுவரை நல்ல மனைவியாக இவள் தான் அவனை கவனித்துக் கொள்ள வேண்டுமாம். 

 

‘கவனிப்பு தானே, கவனிச்சிட்டா போச்சு.’ தனக்குள் சொல்லிக் கொண்டவளுக்கு வில்லித்தனமாக யோசனைகள் வரிசைக்கட்டி வந்தன. 

 

‘இனி நீ செத்தடா கிங்கு!’ தன் அக்காவின் முகம் கண்முன் தெரிய, அவள் அடி நெஞ்சில் திகுதிகுவென‌ அடங்கா நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது.

 

அவளுக்கு மேல் அதிகமான மன கொந்தளிப்பில் கிங் இருந்தான். ‘எம்மாந் தகிரியம் இர்ந்துகினா எனக்கு ஸ்கெட்ச் போடுவானுங்க…’ காயம் பட்ட வலியைக் காட்டிலும் தன்னை குடும்பத்தோடு கொல்ல முயன்ற அவன் மேல் அத்தனை ஆத்திரம் கனன்றது.

 

அவன் கோபத்தை இன்னும் கிளறி விடவே,‌ அவன் செல்பேசி ஒலி எழுப்பியது.

 

‘இன்னா மையிலு சிர்ச்சிக்கின…

இங்க வந்து ஒர்ச்சிக்கின…

யாரை பாத்து மொற்ச்சிக்கின…

இன்னா மயிலு…’ 

 

இடது கையைத் தூக்க முயன்றவன் வலியில் முகம் சுருக்கிக் கொண்டான், இதுவரை உணராத வலி இப்போதுதான் அவனுக்கு உறைத்தது போலும். வலது கையால் செல்லை எடுத்து எண்ணை கவனித்தவன், சந்தேக புருவ வளைவோடு காதில் ஒற்றினான்.

 

“இன்னா கிங்கு… உன் செகண்ட் மேரேஜுக்கு இந்த அண்ணனோட கிஃப்ட் எப்பிடி…” மறுமுனையில் காளி குரல் அமர்த்தலாக கேட்டது.

 

“வேணா காளிண்ணே, இத்தோட நிற்த்திக்கோ, இல்லாகாட்டி உன் பொண்டாட்டி புள்ளங்களுக்காண்டியும் கூட உன்ன விட்டு வச்சிக்க மாட்டேன்.” கிங்கின் குரலும் நிறுத்தி நிதானமாக, மிரட்டலாக ஒலித்தது.

 

“டேய்… இன்னாடா கீச்சிட முட்ஞ்சுக்கும் உன்னால, வாடா வாடா முட்ஞ்சா என்ன ஸ்கெட்ச் போட்டு தூக்குடா பாத்துக்கலாம்.” மறுமுனையில் அவன் மார் தட்டி கொள்வது இவனுக்கு கேட்டது.

 

கண்களை அழுத்த மூடி திறந்தவன், “காளிண்ணே, உன்னாண்ட மோத அல்லாம் எனுக்கு மூட் இல்ல. உன் ரூட்ல நான் வந்துக்குல, என்

ரூட்ல கிராஸ் பண்ணிக்காம நீ ஒதிங்க்க…”

 

“ஒதிங்கிக்க பதுங்கிக்க என்ன இன்னா உன்னாட்டம் வெத்துன்னு நென்ச்சிகினியா? காளிடா… உனுக்கு தொழில் கத்து கொடுத்தவனாண்டயே பூச்சி காட்டிக்கிற பார்த்துகினியா… உன்ன போட்றேன்டா, முட்ஞ்சா எஸ்ஸாயிக்க பாரு.” காளி வெளிப்படையாக சவால் விட்டான்.

 

“வேணாண்ணே, முன்னயே இப்பிடி என்னாண்ட மோதி தான் ஜெயில்ல களி துன்னுட்டு வந்துகிற, இப்ப சீண்டிக்கினே… வேணாண்ணே.” முடிக்காமல் இழுத்து மிரட்டலாக நிறுத்தினான்.

 

“இன்னாடா கீசிக்க முடியும் உன்னால, தொக்கா மாட்ன இல்ல இன்னிக்கி… உன் நல்ல நேரம் கொஞ்சம் மிஸ்ஸாகி எஸ் ஆயிக்கின, நெக்ஸ்ட் டைம் மிஸ்ஸாகாது கிங்கு.” 

 

காளி அடங்காத வெறியோடு பேச பேச கிங்கின் முகத்தில் ரௌத்திரம் கூடியது. “நீ சொன்னா கேட்டுக்க மாட்டல்ல ண்ணே…” என்றதோடு தொடர்பை துண்டித்து விட்டான்.

 

இந்த இரண்டு வருடங்களில் காளியைப் பற்றி மறந்தே போயிருந்தான் கிங் பாண்டி. இப்போது திடுதிப்பென்று அவன் சிறையிலிருந்து வெளிவந்து தன்மேல் கொலைவெறியோடு பாய்வான் என்று யோசித்திருக்கவில்லை.

 

இப்போதும் அதிகம் யோசிக்கவில்லை அவன், விருட்டென எழுந்து வெளியே நடந்தான். “லெஃப்டு, நீ இங்க கேர்ஃபுல்லா பாத்துக்கோ, அலார்ட்டா இர்ந்துக்கோ.” வேகநடையோடு கிங் கட்டளையிட,

 

“சரி கிங்கு.” லெஃப்டின் பதிலும் வேகமாக வந்தது.

 

“ரைட்டு, நீ வந்து வண்டிய எடு.” என்றவன் காரில் ஏறி அமரவும், ரைட் தயங்கி வந்தான்.

 

“ண்ணா… இப்ப தனியே கெளம்பறது சேஃப் இல்லணா. அதுவும் உனுக்கு கைல அடி வேற பலமா இருக்குது.” என்று மென்று விழுங்கியவனை முறைத்தவன், “எல்லா எனுக்கு தெரியும், நீ வண்டிய எடு.” கிங்கின் அதட்டலில், அதற்கு மேல் அவனாலும் மறுக்க முடியாமல் காரை எடுத்தான். கார் கேட்டை விட்டு வெளியேறி சாலையில் வேகமெடுத்தது.

 

அவர்கள் திரும்பி வீட்டிற்கு வர மதிய உணவு வேளை கடந்திருந்தது. கிங் வீட்டுக்குள் வரும் வரை லெஃப்ட் உட்பட அவன் சகாக்கள் கவலையுடனும் பரபரப்புடனுமே இருந்தனர். அவன் வந்த பிறகு தான் அவர்கள் முகம் தெளிவாகி பளிச்சிட்டது. 

 

அடிமட்ட வாழ்க்கையில் தினந்தோறும் அடிபட்டு மிதிப்பட்டு வந்தவர்கள் அவர்கள் ஒவ்வொருவரும். கிங்கின் நிழலில் வந்த பிறகு தான் அவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்த குடும்பத்திற்கும் ஓரளவு நிம்மதியான வாழ்நிலை அமைந்து இருக்கிறது. அந்த வகையில் கிங்கின் மீது அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி உணர்ச்சி அதிகமிருந்தது.

 

பாண்டி அங்கே இருந்தவர்களை ஓர் அலசல் பார்வையில் அளந்தவன், நேராக உள்ளே சென்றான். 

 

அந்த வீட்டின் அகன்ற கூடம் வெறிச்சோடி கிடக்க, இன்று திருமணம் முடிந்த வீட்டிற்கான எந்த களையும் இன்றி சொத்தென்று கிடந்தது அவன் வீடு. 

 

இதுநாள் வரை கிடைத்த இடத்தில் முடங்கி கொண்டவன் அவன், இந்த வீட்டைக் கூட கதிருக்காகத் தான் வாங்கி போட்டிருந்தான். தனக்கு கிடைக்காத எல்லாம் தன் மகனுக்கு கிடைக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக யோசித்து ஒவ்வொன்றையும் சேர்த்து வைத்திருந்தான். 

 

பேருக்கு வாங்கி போட்டதோடு சரி இந்த வீட்டில் இது நாள் வரை அவன் தங்கியதில்லை. அவனுக்கு இருக்கவே இருக்கிறது பண்ணை வீடு. அதை தவிர்த்து, கைகளில் பண புழக்கம் அதிகமான பின்னும் கூட அவன் எந்த ஆடம்பரத்தையும் காட்டிக் கொண்டதில்லை. 

 

ஒரு காலத்தில் இந்த பணத்திற்காக தான் அவன் நாயாய் பேயாய் அலைந்திருக்கிறான். ஒரு வேளை உணவுக்காக ஏங்கி வெதும்பி இருக்கிறான். அப்போதெல்லாம் அவன் கைக்கு எட்டாமல் விளையாட்டு காட்டிய பணம், இப்போது அவன் இறைத்து விளையாடும் அளவு அவனிடம் கொட்டிக் கொண்டிருக்கிறது.

 

ஆனாலும் அவனுக்கு இதில் கிஞ்சித்தும் மகிழ்ச்சி இருக்கவில்லை. அவனுக்கு தேவையான நேரத்தில் கிடைக்காமல் அவனை மொத்தமாக ஏய்த்து போன பணத்தால், இப்போது அவன் இழந்த ஏதாவது ஒன்றையாவது பெற்றுத் தர முடியுமா என்றால், முடியவே முடியாதே!

 

பாண்டி வேகமாக தன் தலையை உலுக்கிக் கொண்டான். காளியிடம்‌ பேசியதிலிருந்து அவன் மறந்து போனதாய் நினைத்த, அவன் வாழ்வின் கந்தல் கோலமான கிழிந்த பக்கங்கள் எல்லாம் நினைவில் எழுந்து அவனை பலவீனப் படுத்த முயன்று கொண்டிருந்தது. 

 

அவனுக்கு தன் பழைய வாழ்வை, நினைத்து பார்ப்பதில் கூட சற்றும் விருப்பமில்லை. அந்த நினைவுகளை விட்டு விலகி இருக்கவே முயன்றான்.

 

“வந்து சாப்புடு கிங்கு.” மங்காவின் அழைப்பில், பாண்டி அவளிடம் திரும்பினான்.

 

அவனது வாடிய முகத்தைப் பார்த்த மங்காவின் உள்ளம் பதறியது. எப்போதும் கெத்தை விடாமல் இரும்பாக இறுகி இருப்பவன், சிறு சறுக்கல் கூட நேராமல் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்பவன், எத்தனை பெரிய வேலையானாலும் இலகுவான பேச்சில் கலகலத்து சிரித்தபடி கச்சிதமாக முடிப்பவன்… இதுபோல கிங்கை பற்றிய பல பலமான பிம்பங்கள் மங்காவின்‌ மனதில் வீற்றிருந்தது. 

 

அவளை பொறுத்தவரை கிங் என்பவன் கடவுள் போல… இல்லை அதற்கும் மேலானவன்…

 

 

***

 

காதல் களமாடும்…

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!