காதல் களம் 12

images (13)-701068af

காதல் களம் 12

காதல்களம் 12

 

மங்காவை பொறுத்தவரை கிங் என்பவன் கடவுள் போல… இல்லை அதற்கும் மேலானவன்!

 

அவனை கலங்கியோ, வருந்தியோ பார்க்க அவளுக்கு எப்போதுமே ஒப்புவது இல்லை. காலையில் அடிபட்டு வந்தவனைப் பார்க்கவே அவளுக்கு மனம் தாங்கவில்லை. இப்போதும் இப்படி வாடி துவண்டிருந்த அவன் தோற்றம் அவள்‌ மனதை பிசைந்தது.

 

பாண்டிக்கு அடிப்பட்ட போது உணராத வலியெல்லாம் இப்போது கொஞ்ச கொஞ்சமாக அதிகமாகி இருந்தது. சற்று நேர ஓய்வுக்கு ஏங்கியது அவன் உடல். ஆனாலும் கொலை செய்யும் அளவுக்கு வந்துவிட்ட காளியை அப்படியே விடவும் முடியாது. இந்த முறை எப்படியோ தானும் தன்னை சேர்ந்தவர்களும் தப்பி ஆயிற்று. அடுத்த வாய்ப்பை எதிரிக்கு வழங்க அவன் தயாராகயில்லை. அதனாலேயே உடனே கிளம்பி இருந்தான். 

 

காளியைப் பற்றி அவனுக்கு இப்போது கிடைத்திருந்த தகவல் எதுவுமே சரியாகப் படவில்லை. இந்த கொலைகளத்தில் அவன் முந்தி கொள்வதற்குள் இவன் முந்தி கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

 

அதற்கு மேல் சென்ற யோசனையை வெட்டிவிட்டு, அமைதியாக வந்து உணவு மேசையில் அமர்ந்தான்.

 

திருமண விருந்து என்பதால், உணவு மேசையில் பல வகை உணவுகள் அடுக்கப்பட்டு இருந்தன. எல்லாமே அவனுக்கு பிடித்த சைவ, அசைவ உணவுகள். 

 

இன்றைக்கு பார்த்து‌ காளி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இந்த உணவை எல்லாம் ஒரு கை பார்த்திருப்பான். மனதின் உளைச்சலில் இப்போது பசிக்கு மட்டும் சாப்பிட்டால் போதும் என்றிருந்தது அவனுக்கு.

 

மங்கா அவனுக்கு பரிமாறவும், இப்போது தான் கவனித்தான், பாத்திரங்களில் நிறைந்த உணவுகள் குறையாமல் அப்படியே இருப்பதை.

 

“எக்காவ், இன்னும் நீங்க யாரும் துன்னலையா?” பாண்டி அதட்டலாகத் தான் கேட்டான்.

 

“பசங்க எல்லாம் துன்ட்டாங்க கிங்கு, மத்தவங்க தான் ரூமுக்குள்ள போனவங்க வெளிய எட்டி கூட பார்த்துக்கல.” மங்கா, வேணியையும், அவள் குடும்பத்தையும் வெளிப்படையாகவே குறையாக சொன்னாள்.

 

“இன்னா சொல்லிகிற… அப்ப கதிர் கூட இன்னும் துன்னலையா?” என்று கேட்டு முகம் கறுத்தவன், வேகமாக எழுந்து வேணி இருந்த அறையை நோக்கி நடந்தான்.

 

“ஏ வாணீ…” 

 

பாண்டியின் ஆத்திரமான விளிப்பில், வேதனை தந்த சோர்வில் அறையின் மூலையில் முடங்கி கிடந்த கௌரி அம்மாவும், தரையில் படுத்துக் கிடந்த கோதண்டம் தாத்தாவும் பதறி எழுந்து வெளிவந்து விட்டனர். 

 

வேணி மட்டும் அவன் கத்தலுக்கு வராமல் இருக்க, அவளிருந்த அறைக்குள் நுழைந்து சத்தமிட வாயெடுத்தவன், வேணி தன் வாய்மேல் விரல் வைத்து கத்தாதே என்பது போல சைகை செய்யவும், அவள் மடியில் உறங்கி போயிருந்த கதிரைப் பார்த்தும், வாய் மூடிக் கொண்டான்.

 

தன் மடியில் தலை வைத்து உறங்கி இருந்த கதிரை மெல்ல நகர்த்தி தலையணையில் படுக்க வைத்து, பிள்ளைக்கு சரியாக போர்த்திவிட்டு அவனை நோக்கி வந்தவள், “எத்தனை முறை உனக்கு சொல்றது என் பேரு வாணி இல்ல வேணி” கடித்த பற்களுக்கிடையே தன் பேரை அழுத்திச் சொன்னாள்.

 

“உன் உளுத்துப்போன பேரு தான் இப்ப முக்யம் பாரு, புள்ளைக்கு சோறு கூட குடுக்காம எதுக்கு தூங்க வச்சிகீற இப்ப?” அவளை கண்டனமாக கேட்டான் பாண்டி.

 

“அவனுக்கு பசியில்லனு சொன்னான் அதான்…” அவள் சொல்லி முடிக்கும் முன்னே,

 

“அதெப்படி பசி இல்லாம போகும்? கதிரு நல்லா சாப்புடுற புள்ள அவனை பட்டினி போடுற வேலையெல்லாம் வச்சிக்காத, அப்றம் நான் மனுசனா இர்ந்துக்க மாட்டேன்.” அவளை எச்சரித்தான்.

 

“இப்ப மட்டும் நீ மனுசனாவா இருக்க?” வேணி சட்டென அவனிடம் எதிர் கேள்வி கேட்டு விட,

 

“ஏ… இன்னா லந்தா?” அவன் முறைத்துக் கொண்டு வந்தான்.

 

“இந்த லந்து சந்து பொந்து எல்லாம் உனக்கு தான் தெரியும். எனக்கு தெரியாது. நான் படிச்சு படிச்சு சொன்னேன், ஏன் உன்கிட்ட கெஞ்சி கூட கேட்டேன், கதிரை உன் வாழ்க்கைக்குள்ள இழுக்காத அவனை விட்டுடுன்னு. கேட்டியா நீ… 

 

அவனோட சேர்த்து என்னையும் இந்த புதை குழிக்குள்ள இழுத்துட்டு வந்துட்ட. வந்த முதல் நாளே என்னாச்சுன்னு பாரு. நாங்க செத்து பொழச்சு வந்திருக்கோம். இப்ப உனக்கு சந்தோசமா?”

 

வேணியின் ஆவேச கேள்வியை பாண்டி எதிர்பார்க்கவில்லை போல, சற்று அசந்து போய் நின்றான்.

 

“என்னவோ இத்தனை வருஷம் கதிரை நீ பொத்தி பொத்தி வளர்த்த மாதிரி சண்டைக்கு வர, கதிருக்கு எப்ப என்ன வேணும்னு என்னைவிட உனக்கு அதிகமா தெரியுமோ?” அவள் மேலும் பேச,

 

“ஏ அவன் என் புள்ளடீ.” என்றான் பல்லிடுக்கில்.

 

“பெத்துட்டா மட்டும் புள்ள ஆகிடுமா?” அவளும் ஆதங்கமாக கேட்க,

 

“பின்ன வெறெப்படிடீ புள்ள ஆகும்?” அவன் இங்கிதமற்று கேட்டதில், அவள் முகம் கசப்பைக் கக்கியது.

 

அங்கே அவர்கள் பேச்சை அனைவரும் தான் கேட்டிருந்தனர். அவர்களிடையே என்னவென்று சமாதானம் செய்வது என்று யாருக்கும் புரியவில்லை. முக்கியமாக கிங்கை தடுத்தோ எதிர்த்தோ பேச அங்கே யாருக்கும் வார்த்தை வரவில்லை.

 

ஆனால், அவனை எதிர்த்தோ தடுத்தோ பேச வேணி எப்போதும் பின்வாங்கியதில்லை. இப்போதும் பின்வாங்கவில்லை. “ச்சீ முதல்ல நீ ஒழுங்கா பேச கத்துக்க.” கணவனிடம் சீறினாள்.

 

“நீதான டீச்சரு எப்டி பேசணும்னு எனுக்கு வந்து கத்து குடு.” என்றான் அவனும் படு நக்கலாக.

 

வெறுப்பில் முகத்தை திருப்பிக் கொண்டவளின் கண்கள் கலங்கி தேங்கின. 

 

அவள் முகத்தில் பார்வை பதித்திருந்த பாண்டிக்கு அவளது கண்ணீர் மேலும் எரிச்சலை கிளப்பியது.

 

“அதான் ஒன்னியும் ஆகல இல்ல, சும்மாகாட்டியும் அயிது இப்ப ஏன் சீனாக்கிற?” பாண்டியின் எரிச்சலான கேள்வியில் அவளுக்கு இன்னும் பற்றிக்கொண்டு வர,

 

“நான் சீன் போடுறன்னா? என்னை பார்த்தா சீன் போடுறவ மாதிரியா தெரியுது உனக்கு?” என்றவளின் தொண்டை அடைத்து குரல் தேம்பி திக்கியது.

 

“கார்ல உன் மடில தான கதிர் இருந்தான்… நீ அவன அம்மாகிட்ட கொடுக்கலனா… இப்ப உன் கைக்கு பட்ட அடி கதிர் தலையில பட்டு இருக்கும்… குழந்த துடிச்சு போயிருப்பான்… அவன் என்ன உன்ன மாதிரி சூடு சொரணை இல்லாத ஜந்துவா வலி கூட தெரியாம சுத்தறதுக்கு. சின்ன குழந்தை, பட்டாசு சத்தத்துக்கு கூட பயப்படுற குழந்தை அவன். இப்ப எவ்வளோ பயந்து இருக்கான் தெரியுமா உனக்கு? பயத்துல அலண்டு போய் இப்ப தான் தூங்கினான்.” 

 

அவள் கலக்கமாக பேச பேச, பாண்டிக்கும் மகனின் நிலையை எண்ணி மனது அடித்துக் கொண்டது.

 

“அடிதடி, கொலை, ரௌடிசம் பண்ணிட்டு சுத்திட்டு இருக்க உனக்கெல்லாம் புள்ள, குடும்பம், ஒன்னுக்கு ரெண்டு பொண்டாட்டி எதுக்கு?” வேணியின் ஆத்திரம் அடங்கவில்லை. அவள் மனது சற்றும் பொறுக்கவில்லை. அவனிடம் கேட்டு விட்டாள்.

 

கௌரி, தாத்தா உட்பட அனைவருமே அவள் கேட்ட விதத்தில் பயந்து போயினர். பாண்டி கோபத்தில் அவளை அடித்து விடுவானோ என்று. 

 

அவர்களின் பயம் சரி என்பது போல, “ஏ ஓவரா பேசிக்கினு போறடீ நீ…” பாண்டி அவளிடம் கையோங்கி விட்டான்.

 

“இந்த அடிக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத சொல்லிட்டேன்.” வேணி சற்றும் அசராமல் விரல் நீட்டி அவனை எச்சரித்து நின்றாள்.

 

“இன்னாடீ செஞ்சிக்க முடியும் உன்னால?” அடங்காத திமிரோடு கிங் நக்கலாக கேட்க,

 

“ம்ம்… ரௌடி பய கிங்கோட பொண்டாட்டி என்ன செய்வாளோ அதை செய்வேன்.” அவளும் அவனுக்கு குறையாத திமிரோடு அழுத்தி பதில் தந்தாள். 

 

அந்த நொடியில் கிங் திகைத்து, நிஜமாகவே வாயடைத்துப் போனான். அவனுக்கிருந்த கோபமும் வீராவேசமும் அப்படியே அடங்கி போனது. 

 

அவளின் இத்தனை தெனாவட்டு பேச்சில் அனைவரும் அவளை திகைத்து பார்க்க, தான் அதிகம் பேசுவது வேணிக்கே புரிந்தது போல, தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

 

கிங்கை அவள் வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து பேசுவதை மங்காவால் பொறுத்துக்கொள்ள முடிவில்லை. கோபம் கோபமாக வந்தது அவளுக்கு.

 

“இன்னா கிங்கு, அந்த பொண்ணு பாட்டுக்கு எகத்தாளமா உன்ன நிக்க வச்சு வாயிக்கு வந்ததல்லாம் பேசிக்கினு கீது, நீ சொம்மா நிக்கிற?” மங்காவின் கத்தலில் அனைவரது பார்வையும் அவளிடம் திரும்பியது.

 

“எங்க கிங்க பத்தி உனுக்கு இன்னா தெரியுமே, சொம்மா சொம்மா எப்ப பாரு கத்திகினே கீற, நேத்து வரைக்கும் தூசு துரும்பு கூட பட்டுக்காம எம்மா ஜோரா இருந்துகினா, உன்ன கட்டிக்கின நேரம் இப்டி கையொடஞ்சு நிக்கிது. உனுக்கல்லாம் அடுக்குமாமே.”

 

மங்காவின் இந்த பேச்சில் வேணி உட்பட பெரியவர்கள் கூட திகைத்து பார்த்தனர். அவளையும் மீறி வேணியின் பார்வை பாண்டியைப் பார்த்தது.

 

அவன் அவளை கண்டு கொள்வதாக இல்லை. அழுத்தமாக நின்றிருந்தான். 

 

வேணி ஆதங்கமாக மங்காவிடம் திரும்பினாள். “எப்படி எப்படி? உங்க கிங்கு ஊரெல்லாம் போய் வம்பிழுத்துட்டு வருவானாம், இவன போட்டு தள்ள அவனுங்க வருவானுங்களாம். இதுக்கு நடுவுல என்னை கட்டிக்கிட்டதால தான் இப்ப உங்க கிங்குக்கு கை ஒடஞ்சி போச்சுனு சொல்ல உங்களுக்கு நாக்கு கூசல?

 

இதோ இவன கட்டிக்கிட்டதால இந்நேரம் நாங்க குடும்பத்தோட பரலோகம் போயிருப்போம் தெரியுமா? சும்மா இந்த ரௌடிக்கு வக்காலத்து வாங்கிட்டு வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க.”

 

“இப்ப என்னாத்துக்கு இப்டி குச்சிக்கிற? நானும் பாத்துக்கிறேன், புருசனுக்கு கை ஒடஞ்சி போச்சேன்னு கொஞ்சமாவது பேஜார் பட்டுக்கினியா நீ? பஜாரி மாறி கத்திக்கிறீயே கிங்கு சாப்பிச்சா இல்லயானு கூட பாத்துக்காம சவுடாலு பேசுற.” வேணியிடம் உயர்த்திய குரலில் அங்கலாய்த்த மங்கா, கண்ணீர் வழிந்த முகத்துடன் பாண்டி பக்கம் திரும்பினாள்.

 

“நீ தப்பு பண்ணிக்கின கிங்கு, உன் புள்ளக்காண்டி பார்த்துக்குனு, அவன் இவளுக்காக ஏங்கிறான்னு, போயும்‌ போயும் இந்த ராங்கி காரிய கட்டிகினு வந்துகினியே கிங்கு.” என்றவள் இன்னும் பெரிதாக அழுதுவிட்டாள்.

 

‘பெரிய புருசன், இவனுக்கு கையொடிஞ்சா என்ன காலொடஞ்சா என்ன நான் பார்த்துக்கனுமா?’ என்று மனதிற்குள் கரித்து கொண்டிருந்த வேணிக்கு, மங்கா அடுத்து சொன்ன, பிள்ளைக்காகத்தான் அவன் தன்னை மணந்து கொண்டான் என்ற வார்த்தை அவளை என்னவோ செய்தது. அடிமனதில் ஏதோ பிசைவது போன்ற பாரம் கூட்டியது.

 

அவளும் கதிருக்காக மட்டும் தான் அவனை துணிந்து மணந்து கொண்டாள். அதுவேறு. ஆனால், அவனும் அப்படி யோசித்து, வேண்டுமென்றே தன்னை இந்த திருமண பந்தத்திற்குள் திட்டமிட்டு இழுத்தது போன்ற எண்ணம் அவளுக்கு தோன்ற, அவள் முகம் வெளுத்து அவனை பார்த்து நின்றாள்.

 

பாண்டி அவளை கவனிக்கவில்லை. மங்காவின் கண்ணீர் அவனை இரக்கம் கொள்ள செய்திருந்தது. அவளை சமாதானம் செய்ய முயன்றான் அவன்.

 

“ஐய எக்காவ், இப்ப என்னாத்துக்கு நீ இப்டி அயிது வடியற? நீ தான் பார்த்துக்கிற இல்ல, என் கைக்கு ஒன்னியும் இல்ல. நான் நல்லாதான் கீறேன்.” என்றவன் சமாதானம் அவளுக்கு போதவில்லை.

 

“எப்டி கிங்கு, இவளுக்கு உன்ன பத்தி ஒன்னியுமே தெரில. உம்மேல தம்மாதுண்டு அக்கற கூட இருந்துக்கல. நீ எங்களுக்கல்லாம் சாமி கிங்கு. என்ன எல்லாரும் ஒம்போதுன்னு கேலி பண்ணிக்கும் போது நீதான என்ன வாய் நெறைய அக்கா கூப்பிட்டுகின… உனுக்கெல்லாம் எப்டி வாழ்க்க அமஞ்சுக்கணும், போயும் போயும் இந்த தெனாவட்டுகாரி கூட…” மங்கா இன்னும் சொல்லி வாய்பொத்தி அழ, அவள் பேச்சை கேட்டிருந்த வேணிக்கு பெரிய அதிர்ச்சி.

 

அச்சு அசலாக நடுத்தர வயதை எட்டும் பெண் போலவே தெரிந்தாள் மங்கா. எந்த வகையிலும் அவள் தோற்றம் திருநங்கையாக தோன்றவில்லை. இப்போது கூட அவள் வெளிப்படையாக சொல்லாமல் விட்டிருந்தால், யாராலும் கண்டுகொண்டு இருக்கவும் முடியாது.

 

பாண்டி நெற்றியைத் தேய்த்துக் கொண்டான். இதுவரை குடும்பம் என்ற பிணைப்பிற்குள் பொருந்தி போகாதவன் அவன் என்பதைவிட, இதுவரை குடும்ப வாழ்க்கை வாழ அவனுக்கு கொடுப்பனை இருக்கவில்லை.

 

இன்று தான், மனைவி, மகன், மாமியார், தாத்தா, கூடவே அக்கா, நைனா என்று ஒரு குடும்பமாக, அதுவும் சொந்த வீட்டில் இருக்கும் உணர்வு அவனுக்கு ஏதோபோல நிறைவையும், அதேபோல அசௌகரியத்தையும்‌ தந்திருந்தது.

 

இந்த நிலையில் முதல் நாளே, மங்காவும் வேணியும் முட்டிக் கொள்வார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மங்காவும் தன்மீது இத்தனை பாசம் மீறிய பக்தி வைத்திருப்பாள் எனறு அவன் நினைத்திருக்கவில்லை.

 

வேணியின் பார்வை உட்பட, தன் மாமியார், தாத்தாவின் பார்வையும் மங்காவை ஏதோ வேற்று கிரக வாசி போல திகைத்து பார்ப்பதைக் கவனித்த பாண்டிக்கு, தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது.

 

“எக்காவ், பசிக்குதுனு சொல்லி எம்மா நேரோம் ஆச்சு. இப்ப நீ சோத்த போடறீயா இல்ல இப்பிடி சோக வயலின் வாசிச்சிகினு இர்க்க போறீயா?” பாண்டி அதட்டி கேட்டதும், 

 

“அய்யோ, போட்டு வச்ச சோறு ஆறுது பாரு. நான் வேற போட்டு வெக்கிறேன் வா கிங்கு.” மங்கா முந்தானையால் கண்ணை துடைத்துக்கொண்டு வேகமாக சென்றாள்.

 

“உங்களுக்கல்லாம் தனியா சொல்லிக்கனுமா? சாப்பிட கிளம்புங்க.” என்றவன், “நைனா, உனுக்கு கூட இன்னா வந்துகிச்சு இன்னிக்கி?” என்று அவரிடமும் சினந்தான்.

 

“இல்ல கிங்கு, அந்த டாக்டரு போட்ட ஊசி மருந்துல கண் அசந்துட்டேன்.” என்று காரணம் சொல்லிவிட்டு, மேலும் நின்று அவனிடம் பேச்சு வாங்காமல் சாப்பிட நகர்ந்தார் நைனா. தாத்தா, கௌரி அம்மா கூட ஒரு பெருமூச்சுடன் அவருடன் நடந்தனர். அவர்களை பின்தொடர முனைந்த வேணியை, பாண்டி தடுத்து அவளை நெருங்கி வந்தான்.

 

வேணி அவனது இந்த அலட்டலுக்கு எல்லாம் சற்றும் அசராமல், ‘என்ன?’ என்ற பார்வையோடு அவனை நேராக பார்த்து நின்றாள். அவளது அந்த திமிரில் அவனது உதட்டோரம் சிறிதான நெளிப்பு.

 

“அடியேய், கொஞ்சமாவது அறிவு கீதா உனுக்கு? ஏலியன பாத்துகிற மாறி மங்காக்காவ பாத்து வைக்கிற. எப்டி இர்ந்துக்கனாலும் அது என் அக்கா, மரியாதையா நட்ந்துக்க.” அவன் எச்சரிக்கவும் தான் அவளுக்கும் உறைத்தது. அவர்களும் தங்களை போல மனிதர்கள் தானே, அவர்களை இப்படி வேறாக பார்த்து சங்கடப்படுத்துவது அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை உண்டாக்கும் என்று.

ஆனாலும், அதற்காக எல்லாம் இவனிடம் இறங்கி போக அவளுக்கு விருப்பமிருக்கவில்லை. திமிராகவே நின்றிருந்தாள்.

 

அவளது இந்த அடங்காத திமிரில், இப்போது அவனது உதட்டோரம் சற்று பெரிதான புன்னகை நெளிப்பு.

 

அவனது பார்வையும், அவனது உதட்டோர வளைப்பும், அத்தனை பெரிய இடத்தில் அநியாயத்திற்கு தன்னை ஒட்டி நிற்கும் அவனது நெருக்கமும், அவளுக்கு அசௌகரியம் தர, அவனிடமிருந்து ஓரடி பின் நகர்ந்து கொண்டாள்.

 

“ஏ ராங்கி, இப்ப இன்னாத்துக்கு ஜகா வாங்கீற நீ?” கேலியாக கேட்டான்.

 

“ஜகா வாங்கறதா? நான் எதையும் வாங்கல.” என்றாள் பட்டென்று, அவன் பேச்சு சரியாக விளங்காமல்.

 

அவன் முகத்தில் சட்டென வேறு பாவம் தோன்ற, அவன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்து நெருங்கினான். அவள் சற்றே மிரண்டு பின்வாங்கினாள்.

 

அவளது முகத்தருகே தலை தாழ்ந்தவன், “இதான்… ஜகா வாங்கீறது.” என்றான் தன்னிரு புருவங்களையும் கிண்டலாக வளைத்து காட்டி.

 

அவனது அடாவடியில் அவளுக்குள் பதைபதைக்க, சற்று நேரம் கழித்தே அவளுக்கு அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்தது. அதில் தெளிந்தவள், “நான் ஒன்னும் உன்கிட்ட பின் வாங்கறவ இல்ல.” என்றாள் நிமிர்வாய்.

 

அவளை மேலும் கீழும் அளவெடுப்பது போல பார்த்தவன், “வாய் சவடாலுக்கு குறச்சல் இல்லடி உனுக்கு. டூடே மார்னிங்கு உன் கழுத்துல தாலி கட்டி உனுக்கு புருஷனாயிருக்கேன். இனிமே அவன் இவன்னு ரெஸ்பெக்டு இல்லாம பேசற வேல வச்சிக்காத. மைண்ட்ல பிக்ஸ் பண்ணிக்க.” என்று மிரட்டல் விட்டு நகர்ந்தவனை, பின்தொடர்ந்தாள் வேணி.

 

‘இந்த ரௌடி பயலுக்கு மரியாதை மட்டும் தான் குறைச்சல்.’ என்ற சிடுசிடுப்போடு.

 

***

 

காதல் களமாடும்…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!