காதல் களம் 8

IMG-20220517-WA0018-0b1107f7

காதல் களம் 8

காதல்களம் 8

 

“என்ன இடம் இது? எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்க?” என்று பாண்டியை சந்தேகமாக பார்த்து கேட்டு நின்றாள் வேணி.

 

அவன் பதில் சொல்லாமல் ஏதோ வெறி கொண்டவன் போல், அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தான். 

 

வேணி அதிர்ந்து அவன் இழுப்புக்கு ஒத்துழைக்காமல், கையை விடுவித்துக்கொள்ள முயன்றவாறு, “உனக்கென்ன பைத்தியமா? எதுக்கு இப்படியெல்லாம் பண்ற? என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?” கத்திக்கொண்டே அவனிடமிருந்து விலக போராடினாள்.

 

நடையை நிறுத்தியவன் திரும்பி, அவள் கன்னத்தில் ஓரறை விட்டான்.

 

வேணிக்கு அடிப்பட்ட வலியைத் தாண்டியும் ஆத்திரம் அதிகம் வந்தது. “என்ன, நான் திருப்பி அடிக்க மாட்டேன்ற தைரித்துல சும்மா சும்மா என்னை அடிக்கிறியா? கதிர் உன்கிட்ட இருக்கறதால தான் நானும் பொறுத்துட்டு போறேன், இல்லனா…” அவள் கோபமாக பேச,

 

“இல்லினா மட்டும் இன்னா கீச்சிடுவ நீ? சொல்லு…” பாண்டி அவளை அதட்டினான். 

 

அவள் அவன் அதட்டலுக்கு மசியாமல் முறைத்துக்கொண்டு நின்றாள்.

 

“உனுக்கு இர்ந்துகினாலும் அதப்பு தான்டீ, எம்மா தகிரியம் இர்ந்துகினா, என்னாண்டர்ந்து என் புள்ளய பிரிக்க பிளான் பண்ணிக்குவ?” அவன் ஆங்காரமாக கேட்க, அவள் அதிர்ந்து விழிகளை விரித்தாள்.

 

“இன்னா, உன் முட்ட கண்ண முழத்துக்கு நீட்டிகிற? உன் பிளானு இவனுக்கு எப்பிடி தெர்ஞ்சிகிச்சினா…? உன் ஆளு… சோடாபுட்டிய உள்ள தான் லாக் பண்ணி வச்சிகீறேன். வந்து அவன்கிட்டயே கேட்டுக்க.” 

 

பாண்டி ஜீவா பற்றி சொன்னதும் பதறிப் போனவள், ஆத்திரமாக அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். 

 

“டேய்… ஜீவாவ என்னடா பண்ண? அவர் யாருன்னு தெரியுமா உனக்கு? பொறுக்கி நா…” அவள் சொல்லி முடிக்கும்முன், அவனிடம் மறு அறையை வாங்கிக்கொண்டு தரையில் விழுந்து கிடந்தாள். அவள் விழுந்த வேகத்தில் தூசு பரப்பிய மண்தரை அவளை மூச்சடைக்கச் செய்தது. 

 

“நான் உன்னாண்ட சாஃப்டா டீல் பண்ணிக்கிறதால இந்த கிங்க பத்தி முழுசா தெர்ல உனுக்கு… இன்னொரு தபா உன் வாய் நீண்டுகிச்சி, உன் வாயோட சேர்த்து உன்னையும் கீசிடுவேன்.” ஆள்காட்டி விரலை ஆட்டி அவன் மிரட்டியதில் நிஜமாகவே மிரண்டவள், முயன்று எழுந்து அந்த குடோனுக்குள் ஓடினாள். 

 

வழி தெரியாமல் நாலாபுறமும் ஜீவாவை தேடியவள், அங்கே ஓரிடத்தில் ஜீவா நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து, அவனிடம் விரைந்து வந்து மூச்சு வாங்க நின்றாள்.

 

“ஜீவா…!” 

 

வேணியின் குரல் கேட்டு நிமிர்ந்த ஜீவா, மண் படிந்த சேலையில், கன்னத்தில் விரல் தடத்தோடு, உதட்டோரம் இரத்தம் கசிய வந்தவளைப் பார்த்து பதறிப் போனான்.

 

“ஹேய் வேணி… என்னாச்சு உனக்கு? யாரடிச்சது உன்ன?” அவன் கைகள் நாற்காலியோடு சேர்த்து பின்புறம் கட்டப்பட்டு இருக்க, “ச்செ” எழுந்துகொள்ள முயன்றும் முடியாமல் அந்த நொடியில் வெறுத்துப்போனான்.

 

“நான்தான் அட்ச்சேன். அதுக்கு இப்ப நீ என்னாங்கிற?” கேட்டபடி பாண்டி அவர்களிடம் வந்து நின்றான்.

 

“ச்சே ஒரு பொண்ண போட்டு இப்படி அடிச்சிருக்கியே, இதான் உன் ரௌடிதனமா?” ஜீவா அவனிடம் கோபமாக கேட்டான்.

 

“எனுக்கு மட்டும் இவள அட்சிக்கணும்னு வேண்டுதலா இன்னா? நான் கூப்பிட்டுகிட்டதும் நீ வம்பு பண்ணிக்காம கம்முனு எங்கூட வந்துக்கினல்ல, இவ பேஜாரு பண்ணிக்கினா, அதான் கைவெச்சிகினே.” பாண்டி சாதாரணமாக சொல்லிவிட்டு, அவர்கள் எதிரில் சேரை இழுத்துப் போட்டு சரிந்து உட்கார்ந்து கொண்டான்.

 

வேணி இப்போதுதான் கவனித்தாள், ஜீவாவின் சட்டை கூட கசங்கி இருக்கவில்லை. அவனுக்கு எதுவுமில்லை என்பதை உணர்ந்து அவளுக்கு சற்று ஆசுவாசமானது. தானும் அமைதியாக வந்திருந்தால் இவனிடம் அடி வாங்காமல் இருந்திருக்கலாமே என்று நேரந்தாழ்ந்து எண்ணம் வந்து போனது.

 

அதை ஓரங்கட்டியவள், “அறிவிருக்கா உனக்கு, முதல்ல அவரோட கைகட்டை கழட்டி விடு.” என்று பாண்டியிடம் சீறினாள்.

 

“அதலாம் அப்பாலிக்கா அவுத்து வுட்டுக்கலாம், இப்ப நீ குந்து. உன்னாண்ட முதல்ல மேட்டர முடிக்கணும்.” பாண்டி அழுத்திச் சொல்லவும், ஒரு அடியாள் வந்து அவளருகில் சேரை எடுத்து போட்டுவிட்டு நகர்ந்து கொண்டான்.

 

ஆனாலும் வேணி அதில் அமரவில்லை. “பிரச்சனை உனக்கும் எனக்கும் தான… நடுவுல ஜீவாவ ஏன் இழுக்குற?” தன்னால் ஜீவா இப்படி சிக்கியிருப்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

 

“நான் எங்க அவன இஸ்துகினே? நீதான் அவனை நம்ம மேட்டர்க்குள்ள இஸ்துகின.” என்ற பாண்டி, 

 

“எம்மா இது இர்ந்துகினா, தம்மாதுன்னு பொண்ணு நீ, என் புள்ளய என்னாண்டர்ந்து புடுங்க கேஸு கோர்ட்டுன்னு பிளான் போட்டுக்குவ? அதுக்கு இவன்… என் வக்கீலாண்டயே போய் விசாரிச்சுக்குவானா? நீயொரு எடுப்புனா இவன் உனுக்கு துடுப்பா?” ஏளனமும் கோபமுமாக பேசினான்.

 

வேணிக்கு நடந்தது புரிந்து போனது. கிங்கிற்கு தெரிந்த வக்கீலிடம் சென்று, ஜீவா வழக்கைப் பற்றி விசாரிக்க, அந்த தகவல் கிங்கிற்கு தெரிய வர, இப்போது இருவரும் அவனிடம் வசமாக சிக்கியிருக்கிறார்கள்.

 

அவர்கள் நிலைமையின் தீவிரம் வேணிக்கு புரிந்ததால், ஓய்ந்து போய் இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

 

அவளது தளர்ந்த தோற்றத்தை ஒருநொடி ஆழ்ந்து நோக்கியவன், பின்னால் கண்காட்டவும், ரைட் வந்து அவளிடம் ஒரு காகிதத்தை நீட்டினான். 

 

வேணி அது என்னவென்று புரியாமல், தயக்கமாக வாங்கி படித்துப் பார்த்தாள். படிக்க படிக்க அவள் முகம் இருண்டு போனது.

 

அதே கொதிப்புடன் நிமிர்ந்தவள், “என்ன நினச்சிட்டு இருக்க நீ? எனக்கு கதிர்மேல எந்த உரிமையும் இல்லன்னு நானே எழுதி கொடுக்கணுமா? அது‌ உன் கனவுல கூட நடக்காது.” என்று குரல் உயர்த்தி கேட்டு அந்த காகிதத்தை ஆவேசமாக கசக்கி எறிந்தாள்.

 

பாண்டி அலட்டிக்கொள்ளாமல், “கனவுல எதுவும் நடக்க வாணாம், இப்ப நிஜத்துல அதுல சைன போடு.” என்றான் கீழே கசங்கி கிடந்த காகிதத்தை பார்வையால் சுட்டிக்காட்டி.

 

“முடியாது… என் கதிர உன்ன நம்பி கொடுக்க முடியாது. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ… நான் கோர்ட்ல கேஸ் போடத்தான் போறேன்.” என்றாள் ஆவேசமாக எழுந்து.

 

பாண்டி அலட்சியமாக சுண்டு விரலால் தன் காதை குடைந்து கொண்டே, “இன்னொரு தபா சொல்லிக்கீறேன். போனா போவுது பொண்ணாச்சே… இத்தினி வர்ஷமா என் புள்ளய வளர்த்துவுட்டு கீறியே… அத்தனால மட்டுந்தான், நீ எம்மா துள்ளிக்கினாலும் உன்ன ஒன்னியும் செஞ்சுக்காம இர்ந்துகீறேன். கம்முனு சைன் பண்ணிட்டு கிளம்பிக்க.” என்றான்.

 

“எதுக்கு என் புள்ளய நான் உன்கிட்ட கொடுக்கணும்? என் அக்கா மாதிரி அவனையும் நீ அம்போனு விட்டு போறதுக்கா?” வேணி ஆதங்கமாக கேட்டாள். 

 

முகம் இறுக எழுந்து கொண்டவன், “ஏய் வாணா… வீணா என்னாண்ட உரசிக்கீற.” நாக்கைக் கடித்தபடி மிரட்டினான்.

 

“உன்கிட்ட சண்ட போடணும்னு எனக்கு எண்ணமில்ல. என் கதிரை என்கிட்ட கொடுத்துடு. எனக்கு அதுபோதும்‌. உன் பக்கமே திரும்ப மாட்டேன்.” என்றவளை, தான் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேரை ஒற்றை கையால் தூக்கி அவளை அடிக்க ஓங்கவும், வேணி மிரண்டு போனாள்.

 

“அவன் ஒன்னியும் உன் கதிரு இல்ல. என் புள்ள! சொம்மா என் கதிரு என் கதிருன்னு சொல்லிக்கின…” என்று கத்தியவன், ஓங்கிய சேரை தூர தூக்கிப் போட்டான். அந்த சேர், தரையில் எறியப்பட்ட வேகத்தில் ஒரு பக்க காலும் கைதடுப்பும் உடைந்து சிதறியது.

 

“வேணி… இந்த ரௌடிகிட்ட ஏன் பிரச்சனை பண்ற, சைன் பண்ணிட்டு வா, நாம போகலாம்.” ஜீவாவும் வேறுவழியின்றி வேணியிடம் சொல்லி பார்த்தான்.

 

“அதெப்படி முடியும் ஜீவா? கதிர என்னால விட்டுக்கொடுக்க முடியாது… அதுவும் இந்த ரௌடிய நம்பி… நிச்சயமா விட முடியாது.” என்றவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.

 

“வேணி புரிஞ்சிக்க, கதிர் உன்னோட மகன் இல்ல. இந்த ரௌடியோட பையன். அவனை நீ உரிமை கேக்கறது சரியில்ல. படிச்சவ தான நீ?” ஜீவா அவளுக்கு பொறுமையாக புரியவைக்க முயன்று முடியாமல் அவளை கடிந்து கொண்டான். எத்தனை பெரிய பிரச்சனையில் மாட்டியிருக்கும் வேளையில், அவள் புரிந்துகொள்ளாமல் அடம்பிடிக்கிறாளே என்றிருந்தது அவனுக்கு.

 

“பார்த்துக்க உன் லவ்வரே சொல்லிக்கினா, சைன போட்டு சேதாரம் இல்லாம கிளம்பிக்க.” பாண்டி அலட்டாமல் சொன்னான். அவனை பொறுத்தவரை இத்தனை பொறுமையாக அவன் யாரிடமும் பஞ்சாயத்து பேசியதில்லை. தன் மகனுக்காக மட்டும் தான் இத்தனை பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் அவளோ அவனது பொறுமையை வெகுவாக சோதித்துக் கொண்டிருந்தாள்.

 

“கதிர உன்னால தனியா எப்படி பார்த்துக்க முடியும்? போன வாரம் குழந்தை காய்ச்சல்ல படுத்திட்டு இருந்தப்ப, அவனை தூக்கிட்டு என்கிட்ட தான வந்த? கதிர் சின்ன குழந்தை, அவன ஏனோதானோன்னு உன்கிட்ட விடமுடியாது.” வேணி அவனுக்கு புரிய வைக்க முயன்றாள். 

 

பாண்டி அவளை அழுத்தமாக பார்த்தபடி அமைதியாக இருந்தான்.

 

“நாளைக்கு உனக்குன்னு ஒருத்தி வந்தா, அவளும் கதிர நல்லா பார்த்துக்க மாட்டா, உன்னோட இருந்தா கதிருக்கு எப்பவுமே கஷ்டம் தான். அவனை என்கிட்ட கொடுத்துடு.” இறுதியாக அவனிடம் கெஞ்சி வேண்டினாள். 

 

அவள் கேட்ட விதத்தில் கிங்கின் ஏளனப் பார்வை ஜீவாவிடம் திரும்பியது. “நீ இவன கட்டிக்கினதுக்கு அப்பாலே, நீங்க ரெண்டு பேரும், என் புள்ளய நல்லா பார்த்துக்குவீங்கன்னு இன்னா கேரண்டி?” பாண்டி ஒருமாதிரி தெனாவெட்டான குரலில் வினவினான்.

 

அவன் இறங்கி வருவதை உணர்ந்து, அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்ட வேணி, “கதிர் என்கூட தான் இருப்பான்னு அவர்கிட்ட சொல்லி சம்மதம் வாங்கின அப்புறம் தான் அவர் காதலயே நான் ஏத்துக்கிட்டேன். அதனால நாங்க கதிர நல்லா பார்த்துப்போம்.” அவள் ஜீவாவை பார்த்தபடி உறுதியாகச் சொல்ல, அவனது முகம் கோபத்தை மட்டுமே காட்டியது.

 

“நான் உசுரோட இர்ந்துக்கும்போது என் புள்ள வேற எவனையோ நைனான்னு கூப்பிட்டுக்குவானா? அத்த பார்த்துகினு நான் சொம்மா இர்ந்துக்குவேனா…?” பாண்டியின் வார்த்தைகள் ஆங்காரமாக உதிர்ந்தன.

 

வேணி அதற்கு பதிலின்றி மிரண்டு விழித்தாள்.

 

அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன், “உனுக்காக கட்சியா ஒரேயொரு சான்ஸ் தர்றேன்… உனுக்கு உன் டாவு தான் பெருசுனா, பேப்பர்ல சைன போட்டு இவன்கூட கிளம்பிகினே இரு. இல்லாகாட்டி, உனுக்கு கதிரு மேல வச்சிகீற பாசம் தான் பெருசுனா, என்னாண்ட வந்துடு… என் பொண்டாட்டியா!” பாண்டி வொகு சாதாரணமாக சொல்லி விட்டான். 

 

“ச்சீ… நீயெல்லாம் மனுசனா? என் கிருஷ்ணா வாழ்க்கைய சீரழிச்சிட்டு கொஞ்சங்கூட வெட்கமில்லாம, என்னை போய்…” வேணியின் முகமும் மனதும் ஜீரணிக்க இயலாத அருவருப்பில் கசங்கி போனது. 

 

“உன்ன கட்டிக்க தான கேட்டுகினே, வச்சிக்கவா கேட்டுகினே? நீதான கதிரு கதிருன்னு பினாத்தினு இருந்துகின. எவளோ ஒருத்திய நான் கட்டிக்க தான் போறேன். அது நீயா இர்ந்துக்கனாலும் எனுக்கு அப்ஜக்ஷன் இல்ல.” பாண்டி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் பேசினான்.

 

“வேணி… அதுல சைன் பண்ணு முதல்ல. இனியும் இந்த நான்ஸென்ஸ எல்லாம் என்னால கேட்டுட்டு இருக்க முடியாது…” ஜீவா பொறுமை இழந்து கத்தி விட்டான்.

 

அவனைப் பார்த்தவள், கீழே கிடந்த காகிதத்தைக் குனிந்து எடுத்தாள். பாண்டியின் முகத்தில் ஏளன சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது. கசங்கி இருந்த காகிதத்தை அவள் பிரிக்க,‌ ‘கதிரை எந்த சூழலிலும் உரிமை கொண்டாட மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்’ என்ற கடைசி வரியில், அவள் கண்கள் கரித்துக்கொண்டு வந்தன. 

 

அக்காவின் இழப்பைக் கூட ஓரங்கட்டி விட்டு, ஐந்து மாத குழந்தையை மடியேந்திக் கொண்டவள் அவள். கிருஷ்ணவேணி மீதிருந்த கோபத்தினால், கௌரி பேரனிடம் சற்று ஒதுங்கியே தான் இருந்தார். ஆனால் வேணியால் ஒதுங்கிக் கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் அவனுக்காகவே தன் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிக் கொண்டிருந்தாள். கதிரின் ஒவ்வொரு அசைவும் அவளுக்கு அத்துப்படி. 

 

அவளுக்கான முதல் உலகமாக அவனே மாறியிருந்தான். இளம்வயது பெண்களுக்கு தோன்றும் சாதாரண ஆசை, விருப்பங்களைக் கூட துறந்து, முற்று முதலாக கதிரின் தாயாகவே தன்னை தகவமைத்துக் கொண்டிருந்தாள். இப்போது அவன்மீதான தன் உரிமையை அவளால் எப்படி விட்டுவிட முடியும்?

 

கூடவே அவள் அப்பாவின் வார்த்தைகளும் நினைவில் வந்து மோதின. ‘அந்த ரௌடி எப்படியும் நம்ம கதிரை தூக்கிட்டு போக பார்ப்பான். நாம தான் ஜாக்கிரதையா இருந்துக்கணும் வேணிமா. தப்பித்தவறி குழந்தை அவன் கையில போயிட்டா, அப்புறம் அவனும் ரௌடியா தான் வளருவான்… நாலுபேரை கொல்லுவான்… நாப்பது பேரை கஷ்டப்படுத்துவான்… நம்ம கிருஷ்ணா மாதிரி ஏமாந்த பொண்ணுங்களோட வாழ்க்கைய அழிப்பான்… அப்படி மட்டும் நடக்க விடவே கூடாது வேணிமா. நான் நடக்க விடவும் மாட்டேன்.’ 

 

பாண்டி சிறையிலிருந்து வந்து, கதிரை கேட்டு பிரச்சனை செய்தபோது, அவள் அப்பா சுந்தரம் போராடி அவனை விரட்டி இருந்தார். அப்போது வேணியிடம் சொன்னவை தான் இவையெல்லாம். 

 

‘அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இப்போது கதிரை இவனால் தூக்கிக்கொண்டு போயிருக்க முடியுமா? அல்லது தன்னிடம் வாய் கூசாமல் இந்த கேள்வியைக் கேட்டிருக்க முடியுமா?’ என்று நெஞ்சம் கொதித்தவள், அந்த காகிதத்தைச் சுக்கல் நூறாக கிழித்து வீசினாள்.

 

இரண்டு ஆண்களும் அவளை வித்தியாசமாக பார்க்க, “கதிர்மேல இருக்க உரிமைய என்னால விட்டு கொடுக்க முடியாது. அதுக்காக உன்னபோல ஒரு பொறுக்கிய என்னால கல்யாணம் பண்ணிக்கவும் முடியாது. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்க போ…” என்றாள் எதற்கும் துணிந்தவளாக.

 

“ச்சு ச்சு கட்சியா குட்த்த சான்ஸையும் இப்பிடி நாசம் பண்ணிக்கினியே.” என்று அவளிடம் போலி வருத்தம் காட்டி அவளை நெருங்கியவன், “இனி உனுக்கு ஆப்ஷனே இல்ல, நீ என்னைதான் கட்டிக்கிற.” என்றான் பாண்டி அழுத்தமான குரலில்.

 

“தப்பி தவறி அப்படி ஒன்னு நடந்தா… என் கையால தான் உனக்கு சாவு!” வேணி ஆத்திரமாக சொல்ல,

 

அதைக்கேட்டு கிங்கின் சிரிப்பு சத்தம் அந்த கட்டிடமே அதிரும்படி பெரிதாக எதிரொளித்தது.

 

“கிங்… வேணிய விட்டுடுங்க, இனி அவ கதிர் பக்கம் வராம நான் பார்த்துக்கிறேன்…” ஜீவா பதற்றத்தோடு உரைக்கவும், கிங்கின் சிரிப்பு சத்தம் இன்னும் அதிகமாகியது. ஜீவா இவ்வாறு சொன்னதைக் கேட்டு வேணியின் முகம் கன்றி போனது.

 

“பார்த்துகினியா, உன் ஆளு எப்பிடி கட்சி தாவிக்கினானு, இதுல நீ போயும் போயும் இவன என் புள்ளக்கு‌ அப்பனா சூஸ் பண்ணிகீற.” என்று அவன் சொன்னதும், வேணியின் கார பார்வை ஜீவாவிடம் பாய்ந்தது.

 

“என்ன ஜீவா, இதுதான் நீங்க எனக்காக கதிரை ஏத்துக்கிட்ட லட்சணமா?” ஆதங்கமாக கேட்டாள்.

 

“பிளடி ஃபூல், கொஞ்சமாவது சென்ஸோட யோசி. உன்ன தான் நான் லவ் பண்றேன், கதிரை பத்தி நான் யோசிக்க வேண்டிய அவசியமில்ல. நார்மலா முடிய வேண்டியதை நீதான் எமோஷனல் டிராமா பண்ணி இந்தளவுக்கு கொண்டு வந்துட்ட, இப்ப அவன் உன்ன கட்டிக்க கேக்குறான். தேவையா உனக்கு இதெல்லாம்?” ஜீவாவும் கொதித்து போய் பேசினான்.

 

“என்னோட பொறுமைக்கும் எல்லை இருக்கு. உனக்கு என்னோட காதல் வேணும்னா, என்கூட வா. இல்ல, உன் வளர்ப்பு மகன்தான் முக்கியம்னா போ, போய் அந்த ரௌடியவே கல்யாணம் பண்ணிக்க.” கோபத்தின் வேகத்தில் ஜீவா வார்த்தையை விட்டிருந்தான்.

 

வேணி நெற்றியைப் பிடித்துக் கொண்டாள். அந்த நிமிடம் அவளுக்கிருந்த ஆத்திரத்தில், தன் முன்னால் இருக்கும் இரண்டு பரதேசிகளையும் அடித்துக் கொல்ல வேண்டும் போல் கோபம் மிகுந்தது. இருவருமே அவளின் பலவீனத்தில் சரியாக தாக்கிக்கொண்டு இருந்தனர்.

 

“ரைட்டு, சாரை ரிலீஸ் பண்ணி வுடு.” கிங்கின் உத்தரவில், ஜீவாவின் கைகள் விடுவிக்கப்பட, வேகமாக எழுந்தவன், “வேணி கம் ஆன் லெட்ஸ் கோ.” அவள் கைப்பற்ற முனைய, அவள் அவன் பிடியை உதறி தள்ளி நின்றாள்.

 

“வேணி வாட் ஹேப்பன்ட்?” ஜீவா புரியாமல் கேட்டான்.

 

“நீங்க போங்க ஜீவா, என்னால கதிர விட்டு வர முடியாது.” அவள் சொல்ல,

 

“ஏய் லூசா நீ?” என்று கத்தியவன், “எஸ் உனக்கு கதிர் பைத்தியம் பிடிச்சிருக்கு. அதான் எப்பவும் அவன் பேரை சொல்லி புலம்பிட்டு இருக்க. உனக்கு இப்ப அந்த பைத்தியம் முத்தி போச்சு. அதுக்காக இந்த ரௌடிய மேரேஜ் பண்ணிக்கவும் ஓகே சொல்லுவ இல்ல?” ஜீவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. இத்தகைய ஒரு முட்டாள் பெண்ணை தேடிப்பிடித்து காதலித்து தொலைத்தோமே என்று முதலும் கடைசியுமாக நொந்து போனான்.

 

ஆனால், அவன் கத்தலுக்கு வேணியிடம் பதில் இல்லை. அவள் அழுத்தமாக நின்றிருந்தாள். 

 

பாண்டி அவர்கள் இருவரையும் சுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டிருந்தான்.

 

தலையிலடித்துக் கொண்ட ஜீவா, “உனக்காக கண்ட கண்ட ரௌடிகிட்ட எல்லாம் அவமானப்பட்டு நிக்கிறேன் பாரு. என்னை சொல்லணும். வெளியே இருட்டாயிடுச்சு வேணி, இங்க சேஃப் இல்ல, வா போகலாம்.” அவன் தழைந்து கேட்டும் அவள் அசையவில்லை.

 

ஜீவா மீது அவளுக்கு அத்தனை கோபம். அவன் மனமார கதிரை ஏற்றுக்கொண்டதாக தன்னிடம் நடித்திருக்கிறான் என்ற கோபம். அவள் மனதில் உயர்வான இடத்தில் பதிந்திருந்த அவன் உருவம் தாழ்ந்து போனதின் வருத்தம், ஏமாற்றம். அவள் இறுகி நின்றிருந்தாள்.

 

பாண்டிக்கும் பொறுமை போனது போல, “ரைட்டு, சாரை இட்டுனு போய் டிராப் பண்ணிட்டு வந்திடு” என்றவன், வேணியின் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தான். 

 

பாண்டியின் இழுப்புக்கு எந்த மறுப்பும் காட்டாமல் உடன் செல்பவளை, ஜீவா அதிர்ச்சியாக பார்த்து நின்றான்.

ஞ என்ன

***

 

“ஐ… வேணி…” என்று ஓடிவந்து கட்டிக்கொண்ட கதிரை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவளுக்கு, அடக்கமுடியாமல் அழுகை வந்தது.

 

“ஏன் அழுவுத, கண்ணுல துன்னூது(திருநீறு) பட்டுச்சா?” என்று கேட்டவனுக்கு தலையசைத்து, இன்னும் அதிகமாக அழுதாள்.

 

அவர்களைப் பார்த்தபடி‌ காரிலிருந்து இறங்கி உள்ள நடந்தவனை, வேணியின் குரல் தடுத்தது. “என்னால இங்க தங்க முடியாது. நான் வீட்டுக்கு போகணும்.” என்றாள்.

 

“நானும் வதேன்…” என்று கதிரும் பின்னோடு சொன்னான்.

 

பாண்டி அவளுக்கு பதில் சொல்லவில்லை. நேராக உள்ளே வந்துவிட்டான். அவனுக்கு சற்று யோசிக்க வேண்டி இருந்தது. வேணியைப் பற்றி, கதிரைப் பற்றி, தன்னைப் பற்றியும்.

 

நேராக ஹாலுக்குள் நுழைந்து சோபாவில் பொத்தென்று விழவும், மங்கா அவனிடம் பதறி ஓடி வரவும் சரியாக இருந்தது.

 

“கிங்கு… கிங்கு…”

 

“ஐய, ஏன்க்கா இப்பிடி ஊளையிட்டுகுனு வர?” பாண்டி அலுத்தபடி கேட்க,

 

“அந்த பொண்ணு… உன் கார எட்த்துக்கினு, உன் புள்ளய ஏத்திக்கினு போயிகிச்சு!” என்றாள் மங்கா பதற்றமாக.

 

“இன்னா உளறிகிற!” என்றவன் எழுந்தோடி வந்து வெளியே பார்க்க, அங்கே அவன் காரையும் காணவில்லை. அவன் பிள்ளையையும் காணவில்லை. கூடவே அவளையும்.

 

தலையை அழுத்திக் கோதிக் கொண்டவன், காரிலேயே சாவியை விட்டு வந்த தன் மடத்தனத்தை நொந்து கொண்டான். கூடவே, “ராங்கி…” அவன் உதடுகள் அவளை முணுமுணுத்தன.

***

காதல் களமாடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!