தொலைந்தேன் 12 💜

eiPDTQ526286-b0f6e14d

தொலைந்தேன் 12 💜

“ஏய் டோரா! நீ கரெக்டா வேலை பார்க்குறியோ, இல்லையோ அழுக்காகிடுற. உன்னை சுத்தம் பண்ணியே எனக்கு வயசாகிடும் போல!” என்று சனா எப்போதும் போல் புலம்பிக்கொண்டே தன் கேமராவை துடைத்துக்கொண்டிருக்க, சரியாக கதவு தட்டப்படும் சத்தம்.

அதிர்ந்தவளுக்கு கதவை திறப்பதற்கு பயம் கலந்த சங்கடம்தான்.

‘ஒருவேள அவனுங்களா இருப்பானுங்களோ? ச்சே ச்சே! வாய்ப்பில்லை. இருந்தாலும் டவுட்தான்.’  உள்ளுக்குள் தனக்குத்தானே பேசியவாறு கதவுக்கருகில் சென்றவள், தைரியத்தை வரவழைத்து “யாரு?” என்று சத்தமாகவே கேட்க, எதிர்முனையில், “அரக்கி…” என்ற பதில் வந்ததும்தான் தாமதம், வேகமாக கதவைத் திறந்தாள் அவள்.

அவள் நினைத்தது போல் எதிரில் ரிஷியேதான். வைத்தியர்கள் அணியும் விழிகள் மட்டும் தெரியக் கூடிய முகமூடியையும் தொப்பியையும் அணிந்து, “ஹாய்…” என்றவாறு ஒரு கரத்தை அசைத்துக்கொண்டு அவன் நின்றிருக்க, சனாவோ சுற்றிமுற்றி கூட பார்க்காது வெடக்கென்று அவன் கரத்தைப் பற்றி உள்ளே இழுத்தாள்.

கதவைத் தாளிட்ட மறுகணம் அவன் கரத்தை விடுத்து இடுப்பில் கைக்குற்றி அவள் மூச்சு வாங்க, தொப்பியையும் முகமூடியையும் கழற்றியவன், முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி இழித்துக்கொண்டு, “சாணி, அது வந்து… நான் அப்படி பேசியிருக்க கூடாது. ஐ அம் ரியலி சோரி. நான்.. அது…” என்று ஏதோ சொல்ல வர, “எடு செருப்ப நாயே!” என்று உச்சஸ்தானியில் கத்திக்கொண்டு மூலையிலிருந்த விளக்குமாற்றை தூக்கினாள் சனா.

அதில் ரிஷிக்கோ தூக்கி வாரிப்போட்டது. இரண்டடி பின்னால் நகர்ந்தவன், “ஹேய், என்னாச்சுடீ? இப்போ எதுக்கு வெபன்ஸ்ஸ கையில எடுக்குற?” என்று பதறியபடிக் கேட்க, “அடிங்க! ஏதோ போனா போகுது ஏரியா வாசலுக்கு வாரன்னு சும்மா விட்டா வீட்டு வாசலுக்குகே வந்து நிப்பியா? அதுவும் நான் அவ்வளவு தூரம் சொல்லியும் உனக்கு ஏதுடா இம்புட்டு தைரியம்?” என்று அவள் காட்டுக்கத்துக் கத்த, திருதிருவென முழித்தான் அவன்.

என்ன பதில் சொல்வான்? அவளைக் காணும் ஆர்வத்தில் வந்தேனென்றால் அவ்வளவுதான்!

மலங்க மலங்க விழித்தவாறு, “அது.. அது வந்து.. ஒரு மேட்டர் அதை உன்கிட்ட சொல்லிட்டு போகலாமேன்னுதான்.” என்று ரிஷி தயக்கமாகச் சொல்ல, “ஏன் அதை ஃபோன்ல சொல்ல முடியாதா? சாரு என் மூஞ்ச பார்த்தேதான் சொல்லணுமா?” என்று சற்று கடுப்பாகவே கேட்டாள் அவள்.

சனாவுக்கு அவள் பயம். ஏற்கனவே இரண்டுதடவை நடுராத்திரி இவனின் காரில் ஏறியதை பார்த்தவர்கள் வாயிற்கு வந்தபடி பேச, இப்போது வீட்டில் ஒரு ஆண்மகன் இருப்பது தெரிந்தால் என்னவெல்லாம் பேசுவார்கள்!

அதுவும் தன்னை தவறாக பேசினால் கொஞ்சமும் கண்டுக்கொள்ள மாட்டாள். அவளைப் பொருத்தவரை இறந்த தன் அம்மாவை யாரும் தவறாக பேசிவிடக் கூடாது அவ்வளவே!

“ஃபோன்ல சொல்லியிருக்கலாம். இருந்தாலும் இதை நேர்ல சொல்றது பெட்டர்னு தோனிச்சு.” அவன் எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்தவாறுச் சொல்ல, “ஏன் சாருக்கு காலை, மதியம், சாய்ந்திரம்னு நேரம் இருக்குறது தெரியாதா, ராத்திரியேதான் வருவீங்களோ?” என்று எரிச்சலாகக் கேட்டவள், பின் பெருமூச்சுவிட்டு “ஊஃப்ப்… சரி சொல்லு என்ன விஷயம்?” என்றாள் முறைத்துக்கொண்டே.

“ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்று தொண்டையைச் செறுமி மெல்ல அவள் பக்கத்தில் நெருங்கிய ரிஷி, “உன்னை பத்தி தெரிஞ்சும் நான் அப்படி சொல்லியிருக்க கூடாது. பட், நான் வேற எந்த அர்த்தத்துலேயும் சொல்லல்ல. உனக்கு உதவலாமேன்னுதான். எனிவேய், உனக்கு ஒரு நல்ல ஆப்பசூனிட்டி வந்திருக்கு. இதை உன்னால பெஸ்ட்டா பண்ண முடியும்னு நினைக்கிறேன்.” என்று ஒவ்வொரு வார்த்தைகளாக நிறுத்தி நிதானமாகச் சொல்ல, யோசனையில் அவள் புருவங்களோ சுருங்கின.

“என்னோட நியூ ஆல்பம் சாங். அதோட ஷூட்டிங்தான் இப்போ போயிக்கிட்டு இருக்கு. பட், ஒரு சின்ன பிரச்சினையால இந்த ஆல்பம் பாட்டுக்காக ராகவன் சார் சூஸ் பண்ணியிருந்த ஹீரோயின் ப்ரீத்தா முடியாதுன்னு போயிட்டா. பட், சீக்கிரம் ஷூட்டிங்க முடிக்கணும். ஒரு பெரிய ப்ரோஜெக்ட்ல நான் சைன் பண்ணியிருக்கேன். அது ஆரம்பிக்கிறதுக்குள்ள இதை நான் பண்ணி முடிக்கணும். சோ… எனக்கு என்ன தோனுதுன்னா நீ இதுக்கு பொருத்தமா இருப்பன்னு. ஐ நோ, உனக்கு இதெல்லாம் பிடிக்காது. பட் என்னன்னா, இதுக்காக நீ  உன் முகத்தை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஷூட்டிங் முழுக்க நீ மாஸ்க் போட்டிருப்ப. என்னோட பாட்டோட வரிகளும் அப்படிதான். உன்னை பத்தி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. வாட் யூ சே?” என்று ரிஷி தான் பேச வேண்டியதை பேசி முடித்து இதழை நாவால் ஈரமாக்கியவாறு சனாவை நோக்க, அவளிடத்திலோ எந்த எதிர்வினையும் இல்லை.

கையிலிருந்த விளக்குமாறு தானாக நழுவி தரையில் விழ, ரிஷியையே அதிர்ந்துப்போய் பார்த்திருந்தாள் அவள். ரிஷியும் சிறிதுநேரம் அவளை விழிகள் இடுங்க பார்த்திருந்தவன், அவளை நெருங்கி அவள் தோளை உலுக்க, “ஆங்…” என்று  தூக்கதிலிருந்து விழித்தது போல் விழித்துக்கொண்டு நின்றாள்.

“வாட் யூ சே?” அவள் பார்வை தன் மீது விழுந்ததும் மீண்டும் அவள் தோளைப் பற்றி உலுக்கியவாறு ரிஷி கேட்க, “இது ப்ரேன்க்தானே வேது? நீ என்னை வச்சு சும்மா காமெடி கீமெடி எதுவும் பண்ணல்லையே?” என்று சனா கேட்ட விதத்தில், அவனுக்கோ லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.

கொடுப்புக்குள் சிரித்வாறு, “ட்ரஸ்ட் மீ, இது இப்போ நீ இருக்குற நிலைமைக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்…” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை, “போடாங்கு! என்னை என்னடா நினைச்சிக்கிட்டு இருக்க? நீ என் கூட பழகுறதுக்கே ஏதோ வயசுப்பொண்ண ராத்திரி வெளியில விட்டு காத்திருக்குற அம்மா மாரிரி தினமும் வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்கேன். நீ என்னடான்னா, என்னையும் உன் கூட சேர்க்குற. இதுவரைக்கும் திட்டுறதோட உன்னை விட்டிருக்கேன்னு சந்தோஷப்படு. இல்லைன்னா, அன்னைக்கு நீ சாக போன மலையில நானே உன்னை கொண்டு போய் தள்ளி விட்டுடுவேன்.”  என்று சனா தாறுமாறாகக் கத்த, அதிர்ந்துவிட்டான் அவன்.

தன்னை சுதாகரித்து, “உனக்கு ஹெல்ப்பா இருக்குமேன்னுதான். கண்டிப்பா நீ யாருன்னு தெரிய போறதில்லை சனா…” என்று ரிஷி புரிய வைக்கப் போக, கதவின் தாள்ப்பாளை திறந்துவிட்டவள், “ஓடிப் போயிரு!” என்றாள் பற்களைக் கடித்துக்கொண்டு.

இதற்குமேல் அவனுக்கும் பேச மனம் வரவில்லை. அவளின் இத்தனை பேச்சுக்களைக் கேட்டு திரும்ப அவளிடம் கெஞ்ச அவனின் தன்மானமும் இடம் கொடுக்கவில்லை.

கீழுதட்டைக் கடித்து சிறிதுநேரம் நின்றவன், ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு முகமூடியையும் தொப்பியையும் அணிந்தவாறு அவளைத் தாண்டிச் செல்லப் போக, சனாவுக்கோ ஒரு அழைப்பு.

கையிலிருந்த அலைப்பேசியின் திரையைப் பார்த்தவளுக்கு மனம் கனத்துப் போனது. சில நாட்களுக்கு முன் அவள் கடன் வாங்கிய நபர்தான் அழைப்பது. ஏற்கனவே வீட்டுக்கு வந்து பணம் கேட்டு எச்சரிக்கை செய்துவிட்டு சென்றிருந்தவர், இப்போது மீண்டும் அழைப்பதில் அவளுக்கு தலைவலியே வந்துவிட்டது.

ஏனோ கிடைத்த வாய்ப்பை பயன்படுத்து என்று மனம் மீண்டும் மீண்டும் சொல்ல, கதவை திறக்கப் போனவனை, “வேது…” என்றழைத்து நிறுத்தினாள் அவள். அவனும் சட்டென்று நின்று திரும்பிப் பார்க்க, எங்கோ பார்ப்பதுபோல் பாவனை செய்தவாறு, “அது வந்து… உன்னை பார்த்தாலும் பாவமாதான் இருக்கு. என்ன பண்ண? என் மனசு ரொம்ப இளகின மனசா போயிட்டு. நான் பண்ணிக் கொடுக்குறேன். ஆனா, நமக்கு ப்ரோஃபிட் முக்கியம்ல, அதனால இதை நடிச்சு கொடுத்தா  நிறைய பணம் கிடைக்குமா?” என்று அவள் ஆர்வமாகக் கேட்டாள்.

அவள் சம்மதித்தலில் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டாலும் வெளியில் அதை காட்டாது நின்றிருந்தவனுக்கு மனதில் ஒரு கேள்வி.

கைகளை பிசைந்தவாறு, “அது வந்து.. பணம் எல்லாம் கிடைக்கும். ஆனா, நீ பணத்துக்காகதான் என்கூட நடிக்க வர்றீயா? ஆசைப்பட்டு இல்லையா?” என்று ஏதோ ஒரு ஏக்கத்தில் தன்னை மீறி கேட்டுவிட, ‘ஙே’ என அவனை மேலிருந்து கீழ் ஒரு மாதிரியாகப் பார்த்தவள், “ஆசைப்பட்டா? அடிங்க! நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாக்கும். போ! போய் இடத்தை அனுப்பு. நாளைக்கு நேரத்துக்கு வந்து சேருறேன்.” என்றாள் அலட்சியமாக.

ஏனோ ரிஷியின் முகம் தொப்பியாலும் முகமூடியாலும் மறைத்திருந்ததால் அவனின் முகச்சிவப்பு அவளுக்கு தெரியாமல் போய்விட்டது. ‘ஓஹோ! என்கூட நடிக்க உனக்கு ஆசையில்லையா? இருடீ நாளைக்கு வருவல்ல, ஷூட்டிங்ல என்ன பண்றேன்னு மட்டும் பாரு!’ உள்ளுக்குள் நினைத்து உதட்டைச் சுழித்தவன், தன்னை மீறி எழுந்த கோபத்தில் அங்கிருந்து விறுவிறுவென சென்றுவிட, அவனின் கோபத்தைக் கூட உணராது தன் அம்மாவின் படத்தை பார்த்தவாறு நின்றிருந்தாள் சனா.

அடுத்தநாள்,

ரிஷி காலையிலேயே வாட்சப்பில் அனுப்பியிருந்த இடத்திற்கு வந்து நின்றவள், அங்கிருந்த காவலாளி உள்ளே விடாததில் கலவரமே செய்துவிட்டாள். ஏதோ விடயம் கேள்விப்பட்டு ரிஷியின் புண்ணியத்தில் சில நிமிடங்களிலேயே அவளிடமிருந்து அவர் தப்பித்துவிட, உள்ளே வந்தவளுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வுதான்.

திருதிருவென விழித்தவாறு அவள் நின்றிருக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமல் சத்தம். “வேது…” என்றழைத்தவாறு வேகமாக திரும்பிய  சனா, எதிரே ரிஷியோடு நின்றிருந்த ராகவனை பார்த்து கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.

அவருக்கோ ரிஷி தன் பேச்சைக் கேட்காது அவன் இஷ்டத்திற்கு சனாவை தெரிவு செய்ததில் உள்ளுக்குள் சற்று கடுப்பாக இருந்தாலும், அதை வெளியீல் காட்டாது, “ஹெலோ மிஸ்.சாணக்கியா” என்று சொல்ல, அவளோ “ஹிஹிஹி… ஹெலோ சார்” என்று முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி அவரைப் பார்த்து இழித்து வைத்தாள்.

அதில் முகத்தைச் சுருக்கியவர், அவளை மேலிருந்து கீழாக அளவிட, அவர் முகமோ அவளிருந்த தோற்றத்தில் மேலும் அஷ்டகோணலாக மாறியது.

முடியை உச்சந்தலையில் கொண்டையிட்டு, ஆண்கள் அணியும் ஷர்ட் மற்றும் பேன்ட்டில் இடது கையில் ரப்பர் வளையல்கள் என எந்தவித ஒப்பனைகளும் இல்லாமல்  அசடுவழிந்தவாறு சனா நின்றிருக்க, ‘இது பொண்ணுதானா?’ என்று ராகவனுக்கே சந்தேகம்தான்.

அவரோ ரிஷியை திரும்பி ‘என்ன இது?’ என்ற ரீதியில் முறைத்துப் பார்க்க, அவனோ கைகளை பிசைந்தவன், சனாவை முறைத்துவிட்டு மெல்ல அவரின் காதருகில் குனிந்து, “அதெல்லாம் மேக்கப் போட்டா சரியாகிடும் சார்.” என்றான் அசடுவழிந்தவாறு.

அதில் இருபக்கமும் சலிப்பாகத் தலையாட்டியவர், “ஏதோ பண்ணு!” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்க, அவர் நகர்ந்ததுமே வேகமாக சனாவை நெருங்கி, “சாணி, இங்க எல்லாருமே எனக்கு சம்மந்தப்பட்ட நெருங்கின ஆளுங்கதான். உன் ஃபோட்டா வெளியில எங்கேயும் போகாது. இன்டோர்ல ஷூட்டிங் நடக்கும் போது ஃப்ரீயா இருக்குற டைம் நீ முகத்தை மறைச்சிருக்கணும்னு அவசியம் இல்லை. அவுட்டோர்ல வெளியில எங்கேயாச்சும் ஷூட்டிங் நடக்கும் போது மட்டும் கேரவன்லயிருந்து வெளியில வந்ததுமே மாஸ்க் போட்டுக்கோ, புரியுதா?” என்றுவிட்டு அவள் பேச வருவதைக் கூட கேட்காது அவளை நேரே நிறுத்தி மேலிருந்து கீழ் விழிகளால் அளவிட்டான்.

ஏனோ அவளின் சிறு இடையில் பதிந்த பார்வையை அவனால் விலக்கவே முடியவில்லை. “வாவ்! சூப்பர் ஃபிகர். உடம்ப ஃபிட்டா வச்சிருக்கியே, வர்க்வுட் பண்ணுவியோ?” அவளிடையை பார்த்துக்கொண்டே கேட்ட்டவனின் பார்வை, “அடிங்க!” என்ற அவளின் குரலிலேயே பட்டென்று நிமிர்ந்து அவளை நோக்கின.

அவள் முகமோ சிவந்திருக்க, அவளின் முகச்சிவப்புக்கான காரணம் புரிந்து, “ஹிஹிஹி… இல்லை சாணி, அது வந்து… இதுல உன் முகம் தெரியாது. பட், உன் ஷேப் தெரியும்ல. அதான் பொருத்தமா இருக்கான்னு அளந்து பார்த்தேன்.” என்று அசடுவழிந்தவாறு சொன்னவன், அவளைப் பற்றி தெரிந்தே எச்சரிக்கையாக அங்கிருந்து நகர்ந்து, சனாவை தயார் செய்யவென ஏற்பாடு செய்திருந்த பெண்ணை அழைத்தான்.

அந்தப் பெண்ணும் சனாவை  கேரவனிற்குள் அழைத்துச் செல்ல, அடுத்த சில நிமிடங்களிலே அங்கு அந்த பெண்ணோடு ஒரு கலவரம். படப்பிடிப்புக்காக தானும் தயாராகிக்கொண்டிருந்த ரிஷிக்கு விடயம் கேள்விப்பட, மறுகணமே அங்கு வந்து சேர்ந்தவனுக்கு ‘அய்யோ!’ என்றிருந்தது.

“அதான் மூஞ்ச மூடப் போறேன்ல, அப்போ எதுக்கு மேக்கப்பு? அதெல்லாம் தேவையில்லை.” என்று மேக்கப் போட முடியாதென சனா அலுச்சாட்டியம் செய்துக்கொண்டிருக்க, திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்த அந்த பெண்ணை ஓரமாக நிறுத்தியவன், சனாவின் முன்னமர்ந்து “ஏய் அரக்கி, மாஸ்க் போடத்தான் போற. ஆனா, உன் கண்ணு லேசா தெரியுற மாதிரி சில சீன் இருக்கு. அப்போ கண்ணுக்கு மேக்கப் போட்டாதான் இன்னும் அழகா இருக்கும். சில ஹீரோயின்ஸ் எல்லாம் முதுகு காட்டிக்கிட்டு நிக்குற சீனுக்கே முகத்துக்கு மூனு இன்ச் மேக்கப் போடுவாங்க. நீ என்னடான்னா…” என்று சலிப்பாகத் தலையாட்ட, அவளோ அமைதியா அமர்ந்திருந்தாள்.

அதுவே அவனுக்கு ‘அப்பாடா’ என்று தோன்ற, அந்தப் பெண்ணிடம் விழிகளால் சனாவை காட்டிவிட்டு கொடுப்புக்குள் சிரித்தவாறு அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் ரிஷி காட்சிக்காக தயாராகி நிற்க, வெள்ளை கவுனில் கூந்தல் அங்குமிங்கும் அசைந்தாட விழிகள் அங்குமிங்கும் தாவ வந்தவளைப் பார்த்தவனுக்கு தன் விழிகளை நம்பவே முடியவில்லை.

இதுவரை அவளை இப்படி கண்டதேயில்லை. சொல்லப்போனால், சனாவே தன்னை இப்படி அலங்கரித்திருக்க மாட்டாள்.

ராகவன், “ரிஷ்… ரிஷ்…” என்றழைப்பதைக் கூட கண்டுக்கொள்ளாது அவளையே பார்த்திருந்தவன், பக்கத்தில் சனா வந்து நின்றதுமே நடப்புக்கு வந்து, வெட்கப்பட்டுச் சிரித்து வைக்க, “அய்ய! ஒரே கசகசன்னு இருக்கு. ச்சே! எப்படிதான் பொண்ணுங்க போட்டுட்டு அலைறாளுங்களோ?” என்று நானும் ஒரு பெண்ணென்றே மறந்து அவள் பேச, தலையிலடித்துக்கொண்டான் ரிஷி.

அவனுக்கோ அவளின் முகம் போன போக்கில் சிரிப்புதான் வந்தது. “சீன் நியாபகம் இருக்குதானே, பர்ஃபெக்டா இருக்கணும்.” என்று ரிஷி சொல்ல, தனக்கென தயார் செய்யப்பட்ட அலங்கரிக்கப்பட்ட முகமூடியை அணிந்தவாறு, “ம்ம்…” என்றாள் சனா.

ராகவன் அங்கிருந்த ஒரு இருக்கையிலமர்ந்து இறுகிய முகமாக பார்த்திருக்க, சில கணங்களில் கேமராக்களும் தயார் செய்யப்பட்டு காட்சிக்கான படப்பிடிப்பும் ஆரம்பமாகியது.

“கேமரா… ரோலிங்… ஆக்ஷன்…” என்று இயக்குனர் சொன்னதுமே சனாவின் ஒரு கரத்தைப் பற்றி சுழற்றிக்கொண்டு அவளை தன்னை நோக்கி இழுத்தவன், அப்படியே ஒரு கையால் அவளைத் தாங்கியவாறு அப்படியே சரிக்க, “அவுச்!” என்று முதன்முறை உணர்ந்த ஒருவித கூச்சத்தில் நெளிந்தாள் அவள்.

“வாட்?” ரிஷி புரியாமல் கேட்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம் அது… அது வந்து.. ஒன்னுமில்லை.” என்றவளுக்கு ஏனோ தன் உணர்வுகளை அவனிடம் வெளிப்படுத்திக்கொள்ள தோன்றவில்லை.

ஆனால், அந்தக் கள்வனுக்கோ அவளின் உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பே அவளின் கூச்சத்தை தெரியப்படுத்திவிட்டது. கொடுப்புக்குள் குறும்பாகச் சிரித்தவன், மெல்ல அவள் காதருகில் நெருங்கி, “மேடமுக்கு இந்த ஃபீல் புதுசா இருக்குல்ல?” என்று ஹஸ்கி குரலில் கேட்க, அந்த குரலோ மேலும் அவளுக்குள் ஒருவித கூச்சத்தை ஏற்படுத்தியது.

விழிகள் அலைபாய, இதழை நாவால் ஈரமாக்கியவள், ஒருவித தடுமாற்றத்தோடு, “நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாக்கும்!” என்றுவிட்டு ஆழ்ந்த மூச்செடுத்து காட்சிக்கு தயாராக, சிரிப்போடு தலையாட்டி இயக்குனருக்கு விரல்களால் சைகை செய்தான் ரிஷி.

மீண்டும் கேமரா தயார் செய்யப்பட்டு, “கேமரா… ரோலிங்… ஏக்ஷன்…” என்று குரல் கொடுக்கப்பட்டதுமே, அதேபோல் அவளை சுழற்றி அணைத்துக்கொண்டு அப்படியே ஒரு கையால் தாங்கியவாறு அவளை சரித்தவன், இப்போது தடுமாறித்தான் போனான். ஏனோ, அவனுக்கு தன்னை மீறி அவளை முத்தமிடும் ஆசை.

அதுவும் அவளின் பெண்மை ஒரு ஆண்மகனாக அவனை தூண்ட, எழுதப்பட்ட காட்சியையே சற்று மாற்றிவிட்டான் ரிஷி என்றுதான் சொல்ல வேண்டூம்.

அவளை சரித்ததுமே அவளின் நெஞ்சிலிருந்து கழுத்து வழியாக மூக்கால் உரசிக்கொண்டு இதழுக்கு வருவது போன்ற காட்சி அது. ஆனால், சனாவின் உடலில் ஏற்படும் சிலிர்ப்பு அவனின் உணர்ச்சிகளை மேலும் மேலும் கிளர,  கழுத்து வரை மூக்கால் உரசிக்கொண்டு வந்தவன், தன்னை மீறி அவளின் கழுத்தில் ஒரு அழுந்த முத்தமிட்டான்.

கேமராவை பார்த்துக்கொண்டிருந்த அவனின் நண்பனான இயக்குனரோ புருவத்தை சுருக்கி ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!’ என்ற ரீதியில் பார்க்க, சனாவோ ‘ஆத்தாடி ஆத்தா! என்ன கிஸ் பண்ணிட்டான். இது ஸ்க்ரிப்ட்லயே போட்டிருக்கல்லையே!’ என்று உள்ளுக்குள் நினைத்து அசையாது உறைந்துப்போய் நின்றிருந்தாள்.

ஆனால், இதைப் பார்த்துக்கொண்டிருந்த ராகவனுக்குதான் விழிகள் சாரசர் போல் விரிந்தன. ‘இதை நிறுத்தியே ஆகணும்.’ உள்ளுக்குள் எச்சரிக்கை மணி ஒலிக்க, சரியாக அலைப்பேசிக்கு வந்த அழைப்பில் கீழுதட்டை பதட்டமாகக் கடித்துக்கொண்டார் அவர்.

Leave a Reply

error: Content is protected !!